சனி, 31 டிசம்பர், 2016

கோதா ஸ்துதி

கோதா ஸ்துதி
ஸ்ரீ அன்பில் கோபாலாசாரியார்
1937ல்
ஸ்ரீவேதாந்த‌ தேசிக‌ ஸ்ரீஸூக்தி ச‌ம்ர‌க்ஷ‌ணீ
இத‌ழில் எழுதிய‌து.
த‌மிழாக்க‌ம்
சென்னை திருவ‌ல்லிக்கேணித் த‌மிழ்ச்ச‌ங்க‌ம்
வெளியீடு 11 (27-7-1941)


சுலோகம் 9
மாதஸ் ஸமுத்திதவதீமதி விஷ்ணுசித்தம்
         விச்வோபஜீவ்ய மம்ருதம் வசஸா துஹாநாம் |
தாபச்சிதம் ஹிமருசேரிவ மூர்த்திமந்யாம்
         ஸந்த: பயோதிதுஹிதுஸ் ஸஹஜாம் விதுஸ்த்வாம் ||   (9)


மன்கலைதேர் விண்டுசித்த மால்பெறவே வந்ததினால்
மன்கலையாற் றாபமெலா மாற்றுவதால் -- மென்கலையார்
மற்றோர் மதிநிகர்நீ வார்கடல்வாய் வந்தவள்பின்
புற்றா ளெனவுரைப்பா மோர்ந்து.               (9)


பதவுரை

         மாத: -- தாயே!; அதிவிஷ்ணுசித்தம்  -- (1) விஷ்ணுசித்தரிடம், (2) விஷ்ணுவின் மனதில், (3) விஷ்ணுவை நடுவில் கொண்ட (கடலில்); ஸமுத்திதவதீம் -- அழகாய் அவதரித்தவளும்; விச்வோபஜீவ்யம் --ஸகல ஜீவர்களும் பருகி உஜ்ஜீவிப்பதற்கு யோக்யமான; அம்ருதம் -- அமுதினை; வசஸா -- வாக்கினாலே, (பாசுரங்களாலே); துஹாநாம் -- சுரக்கிறவளாயும்; தாபச்சிதம் -- தாபத்திரயங்களையும் போக்கிக்கொண்டு, ஹிமருசே -- குளிர்ந்த பனிக்கிரணமுடைய சந்த்ரனுடைய, அந்யாம்  மூர்த்திமிவ -- மற்றோர் (விலக்ஷணமான) மூர்த்தி போன்றவளுமான,; த்வாம் -- உன்னை; ஸந்த: -- பெரியோர் (ப்ரஹ்மவித்துக்கள்); பயோதிதுஹிது -- பாற்கடலின் பெண்ணாகிய பெரியபிராட்டியாரின், ஸஹஜாம் -- உடன்பிறந்தவளாக; விது -- அறிகிறார்கள்.

         அம்மா! விஷ்ணுசித்தரிடம் தோன்றியவளும், அநுபவித்து உய்யத்தக்க அமுதை வாக்கினால் சுரக்கிறவளாயும், ஸாம்ஸாரிக ஸகல தாபங்களையும் நீக்கத்தக்க குளிர்ச்சியையுடைய ஓர் விலக்ஷணமான சந்திரமூர்த்தியென்று சொல்ல வேண்டியவளுமான உன்னைப் பாற்கடலிலவதரித்த பெரியபிராட்டியாருக்கு உடன் பிறந்தாளென்று ப்ரஹ்மவித்துக்களான ஸத்துக்கள் அறிகிறார்கள். (அல்லது பெரியபிராட்டியார் கூடப்பிறந்த உன்னை ஓர் விலக்ஷண சந்திரமூர்த்தியென்று அறிகிறார்கள்)

அவதாரிகை

         (1) "உன்னுடைய தகப்பன்மார்" என்று அநேக பிதாக்கள் சேர்ந்து என்னைப் பெற்றவரென்றீர் முன் சுலோகத்தில். 'ஸ்ரீவிஷ்ணுசித்தகுலக் கற்பகக்கொடி' என்று முதல் சுலோகத்தில் என்னைப் பேசினீர். நிகண்டுகாரரும் என்னை விஷ்ணுசித்தர் பெண் (விஷ்ணுசித்தாத்மஜா) என்பர். "த்வதீயா: குரவ:" என்று பன்மை பேசுகிறீரே? 'பட்டர்பிரான் கோதை' அல்லவோ நான்! மற்ற ஆழ்வார்களும் பட்டர்களோ? 'அஞ்சுகுடிக்கு ஒரு ஸந்ததி' என்ற முறையாக என்னைப் பேசுகிறீரே, இது யுக்தமோ? இதற்கு பதில் கூறுகிறார்.
         பதில்கூற ஆரம்பிக்கையிலேயே 'மாத:'  "தாயே' என்றழைக்கிறார். உண்மையில் நீ ஒருவரும் பெற்ற பெண்ணல்லள். நீ எல்லோருக்கும் தாய் அம்மா! அபிமானத்தால் தங்கள் குடிப்பெண், தங்கள் குல ஸந்ததி என்று நினைப்பும் பேச்சும். உன் அபிமானத்தாலும் அவர்கள் பிதாக்கள். பரஸ்பர அபிமானமே இப்பேச்சிற்குக் காரணம். அவ்வபிமானத்திலும் விஷ்ணுசித்தருக்கு ஸந்நிகர்ஷம் அதிகம். 'பட்டர்பிரான் கோதை' என்று சொல்லுவதும், விஷணு சித்தாத்மஜை என்று சொல்லுவதும் அத்யந்தம் உசிதமே. 'விஷ்ணுசித்தரிடம் தோன்றியவளே' என்றே இங்கே பேசுகிறேன். ஆனால் அப்படிப் பேசுவதிலும் அவரோடு இன்னமிரண்டு சேர்ந்து விடுகிறது. 'பெருமாள் சித்தம்' என்பதும், பெருமாள் தன் நடுவில் வசிக்கப்பெற்ற ஸமுத்திரம்' என்பதும் 'விஷ்ணுசித்த' என்பதில் சிலேடையாகச் சேர்ந்து விடுகிறது. அப்படிச் சிலேஷைப் பொருள்களுக்கும் ஔசித்யம் ரொம்பவும் ஏற்பட்டுவிடுகிறது. விஷ்ணுசித்தரான பட்டர்பிரானொருவரை மட்டுமே நான் பேசப் பார்த்தாலும், பாஷை இன்னமிரண்டைச் சேர்க்கிறது. அப்படிச் சேர்ப்பதும் உன்னுடைய ஏற்றத்திற்கே யாகிறது.
         (2) திருமணப் பெண்ணான கோதையை வர்ணிக்குமிடத்தில் அவளை மதிமுக மடந்தை என்று பேசவேண்டாமோ? அவளுடைய தேன்போன்ற பாட்டுக்களைப் புகழ வேண்டாமோ? ஓர் பிராட்டியைப் பெற, கடலைக் கடைவர் பெருமாளென்பரே, அப்படிப் பேசவேண்டாமோ? பெரியபிராட்டியாரை மனைவியாயுடையவர் மணம் செய்யவேண்டுமானால், அவள் கூடப்பிறந்து அவளுக்கு அத்யந்த ப்ரியஸஹோதரியென்று பேசவேண்டாமோ? இதையெல்லாம் இதோ பேசுகிறேனம்மா! வாக் கர்மிகமென்பர். ஒன்றொன்றாய்த்தானே பேசவேண்டும்!
         (3) "ஸ்த்ரீ ரத்னமான ஊர்வசியைப் படைத்தவர் ப்ரஹ்மாவன்று; காந்தியைப் பரப்பும் சந்திரன் இவளைப்படைத்தானோ? அல்லது, ச்ருங்காரநிதியான மன்மதன் படைத்தானோ? அல்லது, புஷ்பாகரமான வசந்தமாதம் படைத்ததோ?' என்று விக்ரமர் பேசினார். "ப்ரஹ்மா எல்லா ச்ரேஷ்ட ரூபங்களையும் சேர்த்து ஒருமிக்கப் பார்க்கவேண்டுமென்று பொருள்களில் பொறுக்கிச் சேர்த்து மனதினாலேயே ஸ்ருஷ்டித்தாரோ? கைபட்டால் கெட்டுப்போகுமென்று மனதாலேயே அழகைக் கூட்டிக்கூட்டி ஸ்ருஷ்டித்தாரோ?" என்று துஷ்யந்தன் சகுந்தலையை வர்ணித்தான். "ஒரே வடிவில் விச்வத்திலுள்ள முழு அழகுக் கூட்டத்தையும் சேர்த்துப் பார்க்கவேண்டுமென்ற ஆசையினால் பார்வதியை ப்ரயத்தனப்பட்டு ஸ்ருஷ்டித்தார்" என்று காளிதாஸர் குமார ஸம்பவத்தில் வர்ணித்தார். இந்த அபூர்வமான கல்யாணப்பெண்ணைப் பற்றி அந்த வழிகளில் கவிஸிம்ஹமாயிருப்பவர் பாடவேண்டாமோ? அதற்கு மேலே பாடுகிறார். -- நான்முகன் மனதினால் நிர்மிதமானாள் பார்வதியென்றால், நான்முகனைப் படைத்த நாராயணன் மனம் எப்படி எப்படி ஆசைப்பட்டதோ, அப்படியே அவன் திருவுள்ளத்திலிருந்தே தோன்றியவள் கோதை. படைக்கப்பட்டவளல்ல, தானாக ஆவிர்பவித்தவள். 'பெருமாள் உகந்ததெவ்வுருவம் அவ்வுருவம் தானானவள்.' பெருமாள் திருவுள்ளப்படி அங்கே உதித்தவளென்றதால், சந்த்ரன் அவ்விடமிருந்து உதித்ததுபோல் உதித்தவள். சந்திரனெப்படி இவளை ஸ்ருஷ்டிக்கும் ப்ரஜாபதியாகக்கூடும்? கூடப்பிறப்பவன் ஸ்ருஷ்டித்தவனாவானோ? சந்திரன் பிறந்தவன். கோதை பிறவாதவள். நாயகன் மனதிற்கினிதாம்படி ஓர் விலக்ஷணச் சந்திரமூர்த்தியாகத் தோன்றியவள். அவளைப்போலவே அவளவதரித்த திவ்யதேசத்தில் அவள் அர்ச்சாமூர்த்தியும். பெருமாள் மனதிலிருந்தே கிளம்புவதால் அவர் பிள்ளைகளான ப்ரஹ்மாவிற்கும் ப்ரத்யும்னனுக்கும் ஸ்ருஷ்டிக்க அதிகாரம் எப்படிக்கூடும்? அழகுக்கடலும், ரஸ்ஸ்வரூபருமான பெருமாள் ஆசைப்பட்டபடியெல்லாம் உருவம் அடைந்து தோன்றினாளென்றால், அதினிலும் அழகில் உயர்த்தியுண்டோ? பதனாயிரம் பூர்ண சந்திரர்கள் சேர்ந்த காந்தியையுடைய பெருமாளிலும் அழகனோ சந்திரன்? ஸாக்ஷாத் மந்மத மன்மதனிலும் உயர்ந்தவனோ மன்மதன்? 'மாஸானாம் குஸுமாகர' என்றபடி வசந்தமாசம் பெருமாளுடைய ஓர் விபூத்யேகதேசந்தானே?
         மாத: -- தாயே! யாருக்குத் தாய்? விஶ்த்திற்குத் தாய். விச்வோபஜீவ்ய மாத்ருத்வம். முன் சொன்ன ஆழ்வார்களுக்கும் உண்மையில் நீ தாய். பெரியபிராட்டியாருக்கு மட்டும் நீ தங்கை. மற்ற உலகுக்கெல்லாம் நீ தாய். 'தாயே' என்று முதலில் பொதுவில் கூப்பிட்டு, முடிவில் 'லக்ஷ்மிக்குத் தங்கை' என்பதால் அங்கே மட்டும் 'தாய்' என்பதற்கு ஸங்கோசம்.
         ஸமுத்தி தவதீம் -- "அம்ருதம் வெளிக்கிளம்பி மிதக்கும் ஸமயத்தில் கடைந்த பாற்கடலில் பெரியபிராட்டியார் உத்திதையானாள்" என்று ஸ்ரீஸ்துதியில் வர்ணித்ததுபோல. நாயகன் மனதிலிருந்து அவரிச்சையை அநுஸரித்த உன் ஸ்வேச்சையினால் கிளம்பியவள். அவர் மனதிலிருந்து சந்திரபிம்பம்போல உதுத்தவள். 'அழகாக மேலே கிளம்பினாள்' என்பது இதற்குப் பொருள். குழந்தை பிறப்பதானால், பூமியில் கீழே விழுமா? பூமிக்கு மேலே கிளம்புமா? பூமிப்பிராட்டியான நீ கர்ப்பத்திலிருந்து பூபதனமாய் விழுந்த குழந்தையல்லவே? உலகத்தையெல்லாம் உன் கர்ப்பத்திற்கொண்ட விச்வம்பரையல்லவோ நீ!
         அதிவிஷ்ணுசித்தம் -- பட்டர்பிரான் ஸ்ரீவிஷ்ணுசித்தரிடம் நீயாகத் தோன்றினாய். பெருமாள் திருவுள்ளத்தில் அவர் உகந்த மூர்த்தியாய்த் தோன்றினாய். ஜகத்துக்கு ஆஹ்லாதத்தை உண்டு பண்ணும் சந்திரன் பிறந்தவிடத்திலிருந்து நீயும் உதித்தாய். இதனால் சந்திரஸஹஜை என்று சொல்லவேண்டும். சித்தமென்பது நடுவைச் சொல்லுமென்பர். விஷ்ணுவை நடுவில் வஸிக்கப் பெற்ற பாற்கடலில் பெரியபிராட்டியாரோடும், சந்திரனோடும், அம்ருதத்தோடும் கூடப்பிறந்தவளென்பர் பெரியோர். அதினிலும் உயர்த்தி பட்டர்பிரானாகிய விஷ்ணுசித்தரிடம் தோன்றியது. 'விஷ்ணுசித்த' என்பதற்கு அவர்தான் முக்கியமான (ரூடமான) முதற்பொருள்.
         விச்வோபஜீவ்யம் அம்ருதம் -- தாரதம்மியமில்லாமல், அதிகாரி பேதமில்லாமல், எல்லோருக்கும் எளிதான அம்ருதத்தை. தாய் கறக்கும் எந்தப் பாலில் குழந்தைக்குப் பங்கில்லை? பாற்கடலைக் கடைந்தெடுத்த அம்ருதம் தேவஜாதிக்கு மட்டுமேயுண்டு. மானிடருக்குக் கிடையாது. இவ்வம்ருதம் எல்லோர்க்கும் கிடைப்பது. எல்லோரையும் போஷிப்பது, உஜ்ஜீவனம் செய்வது. யஜ்ஞ்சிஷ்டமான அம்ருதமும் எல்லோருக்கும் கிடைக்காது. ஓர் விலக்ஷணமான சந்திரபிம்பமென்று அடுத்த பாதத்தில் ஸாதிக்கிறார். இங்கே ஓர் விலக்ஷணமான அம்ருதத்தைத் தன் பாசுரங்களால் வார்க்கிறாளென்கிறார். விக்ரமோர்வசீயத்தில் விக்ரமனுடைய அழகில் ஈடுபட்ட ஊர்வசீ ராஜாவைச் சந்திரனென்றும், அவருடைய மொழி (வசனம்) அம்ருதமென்றும் மனதிற்குள் புகழ்கிறாள். "அழகாயிருக்கிறதே இவருடைய வசனம்" அல்லது "சந்திரனிடமிருந்து அம்ருதம் பிறக்கிறது என்பது என்ன ஆச்சர்யம்" என்று ஆக்ஷேபாலங்கார ரீதியாகத் தன் மனதிற்குள் பேசுகிறாள். அதை இங்கே ஸ்வாமி நினைத்து முதலில் அம்ருத வசனங்களைப் பொழிவதைப் பேசி, அடுத்த பாதத்தில் சந்த்ரமூர்த்தி என்று வர்ணிக்கிறார்.
         வசஸா துஹாநாம் -- வாக்கினால் அம்ருதத்தைச் சுரக்கிறாள். பாற்கடலை 33 கோடி தேவர்களும், கணக்கில்லாத அஸுரர்களும் சேர்ந்து மந்தரமலையை மத்தாகக்கொண்டு கடைந்து அம்ருதத்தை எடுத்தார்கள். நீ அனாயாஸமாக உயர்ந்து தூயதான அம்ருதத்தைப் பால் கறப்பதுபோல் லகுவாகக் கறக்கிறாய். சந்த்ரன் தன் கரங்களினால் அம்ருதத்தைப் பொழிவான். நீ வாக்கினால் (மொழியினால்) பொழிகிறாய். சுகருடைய முகத்திலிருந்து (வாயிலிருந்து) 'அம்ருதத்ரவஸம்யுத'மாய் வேதகல்ப வ்ருக்ஷத்திலிருந்து பாகவதமென்னும் ரஸப்பழம் (பழரஸம்) விழுகிறதென்பர். உன் முகத்திலிருந்து அம்ருதத்ரவமாய்ப் பெருகுகிறது உன் ப்ரபந்த பாகவதம். எந்தப் பசுக்களைக் கறக்கிறாள்? உபநிஷத்துக்களான பசுக்களை, கண்ணன் கறந்து கீதாம்ருதத்தைத் துக்தமாக்கினதுபோல (பால் ஆக்கினதுபோல). ஆத்மநே பதத்தால் நாம் பருக, நமக்குக் கறந்து கொடுப்பதைத் தன் பேறாக நினைப்பதை வர்ணிக்கிறார்.
         ஹிமருசே: --  குளிர்ந்த பனிக்கிரணமுடையவன் சந்த்ரனென்பர். இனிய காந்திக்காக சந்த்ரமூர்த்தியை ஓர் உவமையாக எடுத்தது. பாற்கடலில் பெரியபிராட்டியாரோடும், அம்ருதத்தோடும் பிறந்தவளென்று சந்த்ரனை எடுத்தது. சந்த்ரன் தாபங்களையெல்லாம் தீர்க்கக் கூடியவன் அல்லன். "ஹிமத்தை (பனியை) கர்ப்பத்திற்கொண்ட கிரணங்களால் அக்கினியைப் பொழிகிறான்." என்றான் துஷ்யந்தன். ஹிமருசி என்று பெயர் மட்டுந்தான். அக்னிருசியென்றால் தகும். "அடே பாபி ! துச்சரித சந்த்ரசாண்டாள" என்று காதம்பரியில் சந்த்ரனைப் பற்றி வாழ்த்து!
         தாபச்சிதம் -- ஸம்ஸார தாபத்திரயங்களையும் போக்குவதான. சந்த்ரமூர்த்தியைக் காட்டிலும், வைலக்ஷண்யம் (வ்யதிரேகம்) சொல்லப்படுகிறது. அம்ருதத்தைக் காட்டிலும் வைலக்ஷண்யம் 'விச்வோபஜீவ்யம்' என்று காட்டப்பட்டதுபோல. 'அந்யாம்' என்று சொல்லப்படும் வேற்றுமையையும், ஏற்றத்தையும் இந்த அடைமொழி விளக்குகிறது. நீ சுரக்கும் வாகம்ருதத்தைப் பருகினால், அம்ருதத்வமென்னும் மோக்ஷம் ஸித்திக்கும். தாபத்திரயங்களும் தொலையும். ஸ்வர்க்கிகளின் அம்ருதம் ம்ருதமென்னும் ஸம்ஸாரத்தைக் கறக்கும்.
         அந்யாம் மூர்த்திமிவ -- வேறு விலக்ஷணமான ஒரு மூர்த்தி
         த்வாம் -- உன்னை; 'தாயே' என்று தொடங்கி 'உன்னை' என்று முடிக்கிறார்.
         பயோதிதுஹிது -- பாற்கடலில் தோன்றிய பெரிய பிராட்டியாருடைய; "யாருக்காக, யாரை அடைய, 'அம்போதி' என்னும் ஸமுதிதரம் கடையப்பட்டதோ, அணையால் கட்டப்பட்டதோ" என்று ஆளவந்தார் பிராட்டி பெருமையை வர்ணித்தார். 'பயோதி' என்றால் பாற்கடலுக்கும் சேரும், உப்பு நீருக்கும் சேரும். 'பய' என்பதற்கு ஜலமென்றும் பொருள், பாலென்றும் பொருள். இங்கே 'பயோதி' என்று பிரயோகித்ததால், இரண்டுக்கும் பொதுவான சப்தமாகுமானாலும், முதலில் திருவணை கட்டத் தடங்கல் செய்த ஸமுத்ரத்தைப் 'பாற்கடல்' என்னுமோர் பொருள்படக்கூடிய சப்தத்தால் பேச ஆளவந்தாருக்குத் திருவுள்ளமில்லை. கல்நெஞ்சனைப் பாற்கடலென்பரோ? அதனால் ஆங்கே 'பாற்கடலையும்' 'அம்போதி' என்று ரூடிப்பெயரால் பேசுகிறார். இங்கே பாற்கடலை மட்டும் பேசுவதால் 'பயோதி' என்று பிரயோகிக்கிறார். 'பாற்கடலில் தோன்றிய பெண்' என்பதால், அங்கே தோன்றியதால் மட்டும் எப்படி 'புத்திரி' என்ற அபிமானமோ, அப்படித்தான் நீ புத்திரி என்ற அபிமானமும் என்பது கருத்து. ஸமஸ்த ஜநநியான லக்ஷ்மியும் துஹிதையென்பது போலத்தான் உன்னையும் மகள் என்பது என்று காட்டப் பெரியபிராட்டியாரைத் துஹிதா என்று குறிக்கிறார். துஹாநா -- துஹிதையின் ஸஹஜை.
         ஸஹஜாம் -- கூடப் பிறந்தவளென்று. 'அம்ருத ஸஹஜை' என்று ஸ்ரீஸ்துதியில் பெரியபிராட்டியாரை வர்ணித்தது தேவஜாதியின் புத்தியைக் கொண்டு. தேவஜாதிக்கு அம்ருதமே ப்ரதானமாய்த் தோன்றியது. 'அம்ருதத்துடன் பிறந்தாள் லக்ஷ்மி' என்றார்கள். முதலில் அம்ருதத்தைப் பார்த்து மகிழ்ந்தார்கள். பிறகு பிராட்டி அவதரித்து விஷ்ணு மார்பிலேறியதும், அவள் காலில் விழுந்தார்கள்.' என்பது ஸ்ரீஸ்துதியின் வர்ணனம். காலில் விழுந்ததற்குக் காரணம் முன் சாபம் வந்ததனால் ஏற்பட்ட பயமென்றும் அங்கே காட்டினார். "ஆலோக்ய த்வாமம்ருதஸஹஜை விஷ்ணுவக்ஷ:ஸ்தலஸ்தாம் ஶாபாக்ராந்தாஶ்ஶரணமகமந்' . பெரியபிராட்டியாருடைய உடன் பிறந்தாள் என்று இங்கே வர்ணனம். அம்ருதத்தை இவள் கறக்கிறாளென்பதால் அம்ருதத்திற்குப் பின் பிறந்தவளன்று என்று ஸூசனம்.
         ஸந்த: -- ப்ரஹ்மத்தை அறிந்த ஸத்துக்கள். ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் சேர்ந்த பெரிய பிராட்டியாருடைய உடன் பிறந்தாளும் அம்சமுமான உன்னை ப்ரஹ்மவித்துக்கள்தானே அறியக்கூடும். விது: -- அறிவர்.
         ஸ்ரீவிஷ்ணுசித்தரிடம் உதித்ததாலும், அம்ருதத்தைப் பொழிவதாலும், பெரிய பிராட்டியாரோடு உடன் பிறந்ததனாலும், தாபத்தைப் போக்குவதாலும், ஓர் விலக்ஷண சந்த்ர பிம்பம், ஓர் விலக்ஷண கௌமுதி, -- ஜ்யோத்ஸ்னை என்று இங்கே ஸாதிப்பதில் நோக்கு. மூன்றாம் பாதத்திலுள்ளதை விதேயமாக வைத்துக்கொள்ளலாம். ஜ்யோத்ஸ்நேவ ஹிமதீதிதே: - சந்த்ரனுடைய சந்த்ரிகை போன்றவள். ஆனால் பெருமாளென்னும் சந்த்ரனுடைய சந்த்ரிகை இவள்

வியாழன், 29 டிசம்பர், 2016

கோதா ஸ்துதி

கோதா ஸ்துதி
ஸ்ரீ அன்பில் கோபாலாசாரியார்
1937ல்
ஸ்ரீவேதாந்த‌ தேசிக‌ ஸ்ரீஸூக்தி ச‌ம்ர‌க்ஷ‌ணீ
இத‌ழில் எழுதிய‌து.
த‌மிழாக்க‌ம்
சென்னை திருவ‌ல்லிக்கேணித் த‌மிழ்ச்ச‌ங்க‌ம்
வெளியீடு 11 (27-7-1941)


சுலோகம் 8
போக்தும் தவ ப்ரியதமம் பவதீவ கோதே
         பக்திம் நிஜாம் ப்ரணயபாவநயா க்ருணந்த: |
உச்சாவசைர் விரஹஸங்கமஜை ருதந்தை:
         ச்ருங்காரயந்தி ஹ்ருதயம் குரவஸ்த்வதீயா:||  (8)

ஆழ்வார்க ணுங்கோ னருளழகிற் பெண்மையவாய்
வாழ்வா ரகங்கனிந்து மால் பெருகி -- நாழோரா
மாலாகிக் கோதாயுன் வாக்குமது வுண்டு நின்மான்
மேலாத லென்னோ வியப்பு.         (8)

பதவுரை
கோதே -- கோதாய்; தவ -- உன்னுடைய; ப்ரியதமம் -- அத்யந்த ப்ரியனான பர்த்தாவை; பவதீவ -- உன்னைப்போலவே; போக்தும் -- அநுபவிப்பதற்காக; நிஜாம் -- தங்களுடைய (சொந்தமான); பக்திம் -- பக்தியை; ப்ரணயபாவநயா -- ப்ரணய மார்க்கமாக; (நாயகீபாவமாக); க்ருணந்த: -- பேசிக்கொண்டு; த்வதீயா -- உன்னுடைய; குரவ: -- பெற்றோர்கள்; உச்சாவசை: -- மிகவும் அதிக்ரமித்த; விரஹஸங்கமஜை: -- பிரிவு கூடல்களால் ஏற்படும்; உதந்தை: -- வ்ருத்தாத்தங்களால்; ஹ்ருதயம் -- தங்கள் மனதை; ச்ருங்காரயந்தி -- ச்ருங்கார பாவமுடையதாக ஆக்கிக் கொள்கிறார்கள்.
         
கோதாதேவியே! உன் குருக்கள் (பெரியோர்கள், ஆழ்வார்கள், உன் பிதா விஷ்ணுசித்தர்) உன்னைப்போலவே உன் பிரியதமரான பெருமாளை அனுபவிக்க ஆசை கொண்டு, தங்கள் பக்தியை ராகம், ஸ்நேஹம் என்னும் காமபாவத்தினால் பேசிக் கொண்டு, கீழும், மேலுமான பற்பல விரஹ ச்ருங்கார ஸம்ச்லேஷ ச்ருங்கார வ்ருத்தாத்தங்களால் தங்கள் மனதை ச்ருங்கார பாவத்தால் நிரப்புகிறார்கள்.
         அவதாரிகை
         (1) வால்மீகி புத்தேறின தபஸ்வி. காமங்களெல்லாம் வற்றி உலர்ந்துபோன நெஞ்சுடைய விரக்தமுனி. அத்புதமான விப்ரலம்பக ச்ருங்கார, ஸம்ச்லேஷ ச்ருங்கார ரஸங்களை எப்படி நெஞ்சில் வாங்கி ப்ரத்யக்ஷம்போல் வர்ணித்தார்?

         (2) நீர் சுஷ்கசுஷ்கமான விரக்தராயிற்றே, "தருணீகுணபம்" என்று பேசுகிறவராயிற்றே! எனக்கும் என் நாயகனுக்கும் உள்ள ப்ரணய ரஸங்களை எப்படி வர்ணிப்பீர்?

         (3) என் புத்திரரான ஆதிகவி வால்மீகியின் மதுரவாக்கைப் புகழ்ந்தீர். என் பெரியோரான அபிநவ தசாவதாரமான ஆழ்வார்கள் வாக்கின் இனிப்பெப்படி? என்னைப்பெற்ற என் தகப்பனார் வாக்கு எப்படி? என் நாயகனுக்கும் எனக்குமுள்ள ப்ரணய ரஸத்தையும், எங்கள் திருக்கல்யாணத்தையும் வர்ணிக்கப் போகிறீரே! ஜாமாதாவான என் நாயகனுடைய மாதுர்யம் எப்படி?

         இதற்கெல்லாம் பதில்:-- வால்மீகி நெஞ்சம் அத்யந்த விரக்தமும், சுஷ்கமுமானதுதான். அவரென்ன பண்ணுவார்? வர்ணிக்கப்படும் ரகுவரனிடத்தில் பக்தி அவரைத் தம்பதிகளுக்குள்ள ச்ருங்கார பாவத்தை வர்ணிக்கச் செய்கிறது. "பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்" என்று தன்னைப் பெண்ணுடையுடுத்தச் செய்யும் ரூபாதிகளில் ஸ்வாநுபவத்தாலே அவர் பேசுகிறார். நான் என்ன விரக்தனானாலென்ன? பரமாத்மாவான உன் நாயகனிடம் ரக்தி (ரதி)யுடையவனே. சாஸ்த்ரீய சுத்த நிருபாதிக நிரதிசய ரஸமான உன் நாயகன் விஷயத்தில் விரக்தி கூடுமோ? "அத்யர்த்தம் ப்ரிய", 'ப்ரியதம ஏவ வாணீயோ பவதி' என்றபடி தனக்கு ப்ரியதமமாக அவனை பஜித்து, அவனுக்குப்  பிரியதமமானால்தானே ஆத்மா பிழைக்கலாம்! உன் பெரியோர்களான, மயர்வற மதிநலமருளப் பெற்றவரும் பெண்ணுடையுடுத்திக் கொள்ளச்செய்யும் மாப்பிள்ளை யம்மா. மற்ற ஆழ்வார்கள் போகட்டும். உன்னைப் பெற்ற ஆழ்வார் பெரிய ஆழ்வாரானாரேயம்மா! ரூபவதியான பார்யை அநேக ஸபத்நர்கள் (விரோதிகள்) ஏற்படுவதற்குக் காரணமாவாரென்பர். 'கந்யா வரயதே ரூபம்'. ஸர்வாதிசாயியான லாவண்யத்தையுடைய அரங்கனைத்தான் நீ தேடினாய். நீ ஈடுபடும் உன் நாயகன் அழகே புமான்களுடைய த்ருஷ்டி சித்தங்களை அபஹரித்து உனக்கு ஸபத்னீக்களாக்குகிறது. உன் தகப்பனார்கூடத் தன் மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்பட ஆசைப்பட்டுப் பெண்ணுக்கே ஸபத்னீயானாரே. அதோடு நிற்காமல் "வந்து மண்ணும் மணமும் கொண்மின்" என்று உலகத்தை முழுவதும் கூப்பிட்டு, என் மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்படுங்கள் என்று கூப்பிடுகிறாரே. ஆண் பெண் விபாகமற உலகத்தாரெல்லோரையும் உனக்கு ஸபத்னீக்களாக வாருங்கள் என்று அழைக்கிறாரே! யாரென்ன செய்வதம்மா! பெற்ற தகப்பனார் பெண்ணின் பதியிடம் ஆழ்வது ஓர் ஆச்சர்யமானதால் அவரைப் பெரிய ஆழ்வாரென்பது. வெறும் ஆண்களாய் ஆழ்வார் ஆழ்வார். மாமனாராயிருந்தும் ஆழ்வார் பெரியாழ்வார். 13வது சுலோகம் வரையில் கோதையின் பிறப்பு முதலிய ஸம்பந்தத்தால் அடையப்படும் பெருமைகளைப் பேசுகிறார். கோதையின் குடிப்பெருமை, அவளுக்கு ஜனகத்வாதி ஸம்பந்தங்களால் அடையப்படும் பெருமையைப் பேசுகிறார். கன்யையின் பிறப்பகத்தின் மஹிமைகள்.

         போக்தும் -- பேரின்பத்துடன் அநுபவிக்க. பெண்ணுக்குப் பதிஸம்யோகஸுலபமான வயது வந்ததைப் பார்த்து, இந்தக் கற்பகக்கொடியை ஓர் கற்பகவ்ருக்ஷத்திலணைத்துவிட வேண்டுமே என்று சிந்தார்ணவமக்னராய், அதன் கரைகாண அநுரூப வரனைத் தேடுவர். வரனைப் பார்க்கவே இவர் ச்ருங்கார சபளிதஹ்ருதயராய், ஸ்வயம்போகத்தில் ஆசையாகிய சிந்தார்ணவத்தில் ஆழ்ந்து மூழ்குகிறார். அந்த ராகக் கடலிற்குக் கரையையே காண்கிறாரில்லை. 'ந ஜாநே போக்தாரம் கமிஹ' என்று காந்தர், காந்தைகளது ரூபதாம்பத்யத்தைக் கோரி வரிக்கப்பட்ட ப்ரியவஸ்துவின் போகத்திலாழ்வார். உன் பெரியோரான ஆழ்வார்களும், உன் பிதாவும் ஜாமாதாவைக் கண்டதும் தாங்களே போகத்தில் ஆழ்ந்தார்கள்.

         தவ ப்ரியதமம் -- பெண்ணாகிய உனக்கு வரன் தேடினாரோ? ஆணாகிய தமக்கு ஓர் பதி தேடினாரோ? பெண்ணுக்கு ப்ரியதமராகப் போக்யராக ஆசைப்படவேண்டியிருக்க, தமக்கே ப்ரியதமராகவும் ஏகபோக்யமாயும் கொண்டார். நீ ச்ருங்கார பாவங்களையும், பக்தி பாவங்களையும், அத்புதமாய்ப் பாடினாய் என்றேன் முன் சுலோகத்தில். உன் தகப்பனாரே அப்படிப் பாடுகையில் நீ பாடுவது அத்புதமா? "கோதே கிமத்புதம் இதம்"

         பவதீவ -- உன்னைப்போல. (அநுபவிக்க) இந்த ப்ரஹ்ம ஜாமாதா விஷயத்தில் 'ஜாமாத்ருபோக்யதாம் புத்ரீ வேத்தி நோ பிதா" என்ற வைஷம்யமில்லை.

         கோதே -- நீ ப்ரணயரஸப் பாசுரம் கொடுப்பவள். உன்னைப் போலவே அவர்கள் ச்ருங்கார ரஸப் பாமாலை தொடுத்து ஸமர்ப்பிக்கிறார்கள்.

         பக்திம் நிஜாம் -- தங்கள் ஸ்வந்த பக்தியை. இதில் எல்லாவற்றிற்கும் பரிஹாரம் ஸூசிதம். வாஸ்தவத்தில் அவர்கள் பாவம் ஸ்வரூபத்திற்குப் பிராப்தமும், அத்யந்தோசிதமுமான விச்வபதி விஷயமான பக்தியம்மா! அந்த பக்தியே நிரதிசய ப்ரீதிரூபமாய் ஸ்நேஹரூபமாய் விட்டது. அடையவேண்டிய அநுபவமான நித்தியவிபூதி போகவிபூதிதானே! இங்கு போகம் நித்யபோகத்திற்கு ஸாதனம். வேறு கதியில்லையே, என்ன செய்வது? விச்வத்திற்கே ஒரு பதிதானேயுள்ளது. 'ப்ரியதமம்' என்பது பரஸ்பர ப்ரியதமத்வத்தைப் பேசும் ஸ்ரீபாஷ்யபாஷணத்தை ஸ்மரிப்பிக்கிறது. அங்கும் வரணப்பேச்சே.

         ப்ரணயபாவநயா -- பக்தி என்பது மஹநீய விஷயத்தில் ப்ரீதி. அதுவே ஓர் சமயத்தில் ச்ருங்காரம் என்னும் வ்ருத்தியாகப் பரிணமிக்கிறது. 'ஸ்நேஹோ மே பரம: பக்திஶஃச நியதா, பாவோ நாந்யத்ர பச்சதி' என்று பேசுவது உசிதம்தானே. ராகமும் முற்றிப் பிச்சேறக்கூடியதுதானே! க்ருணந்தே --பேசுவது பக்திதான். ஆயினும் அதில் 'ஸதீவ ப்ரியபர்த்தாரம்' என்னும் ராகமும் கலக்கிறதம்மா!

         உச்சாவசை: -- உதக்ச அவாக்ச வடக்கும் தெற்குமாய். மேலும் கீழுமாய். வில்லிப்புத்தூரிலிருந்து மனத்தால் வடக்கே கோயிலுக்கு ஓடுகிறார். மனது திரும்பவும் ஊருக்கு உன்னிடம் ஓடிவருகிறது. "யாந்தீமிவ மநோரதை:" என்று வடக்கே ஓடுகிறார்.

         விரஹஸங்கமஜை: -- விரஹத்தில் தவிப்புகள். ஸம்ச்லேஷ மனோரதத்தோடு நிற்காமல் ஸம்ச்லேஷத்தையே அடைந்து அதனால் சித்தித்த ஹர்ஷத்தைப் பாடுவது.

         உதந்தை:-- வ்ருத்தாந்தங்களால். ஸுந்தரகாண்டத்திலுள்ள விரஹ வ்ருத்தாந்தத்திற்கு மேல் இவர் வ்ருத்தாந்தம். உதந்தை: -- அந்தமில்லாத. உத்கதோ அந்தோ யேப்ய: -- "உத்" என்பது ஸர்வ பாப்மோதிதரான அப்ராக்ருத திவ்ய மங்கள வீக்நஹமுடைய ஸூர்யமண்டலாந்தர்வர்த்தியான பெருமாளுக்குத் திருநாமம். அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹமென்று "உத்" என்னும் சப்தத்தாலும், அதில் 'அந்தத்தை நிச்சயத்தை' உடையவர் என்று 'அந்த' சப்தத்தாலும் காட்டி, ப்ராக்ருத திருமேனியல்லாததால் அணைவதில் யாதொரு தோஷமுமில்லை என்று பரிஹாரத்தை ஸூசித்தார்.

         ச்ருங்காரயந்தி ஹ்ருதயம் -- தங்கள் ஹ்ருதயத்திலேயே ச்ருங்காரபாவமுள்ளதுபோல் செய்கிறார்கள். "பும்ஸ: ஸ்த்ரியாம் ஸ்த்ரியா: பும்ஸி ஸம்போகம் ப்ரதி யா ஸ்ப்ருஹா| ஸ ச்ருங்கார இதி க்யாத:க்ரீதாரத்யாதிகாரக:" என்பது ச்ருங்காரத்திற்கு லக்ஷணம். ச்ருங்காரம் போன்ற பாவமுடைய பெரிய ஆழ்வாருக்கு அத்திருநாமம் ஏற்பட்டதற்குக் காரணமும் இங்கே ஸூசிதம். மற்ற ஆழ்வார்கள் பெண்ணைக் கொடுத்தவர்களல்ல. பெருமாளுக்குக் குரு முறைமையான தான், பெருமாளுக்கு ச்வசுரராயிருந்தும், தன் அருமைப் பெண்ணுக்குப் பிதாவாயிருந்தும் அவரும் நாயகீபாவத்தில் ஆழ்ந்தாரே என்று ஆழ்வதில் அவருக்கு மஹத்தரத்வம். பெருமாளுக்கு ஸேவிக்கத்தக்க குருவாயிருந்த ஆழ்வார் என்பதாலும் அத்திருநாமம். இந்த ச்லோகத்தில் முதல் உபபத்தியையும், 10வது ச்லோகத்தில் இரண்டாமுபபத்தியையும் ஸாதிக்கிறார்.

         'ராமஜாமாதரம் ப்ராப்ய ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம்' என்று ஸீதைப்பிராட்டியாரேசல். 'ரங்கஜாமாதரம் ப்ராப்ய' அரங்கனென்னும் ஜாமாதாவை அடந்த ச்வசுரரே, புருஷவிக்ரஹமான தன்னைப் பெண்ணாக நினைத்தாரே, அதனையே வலுவாக ஸமர்ப்பிக்க மனோரதம். 'ஆத்மாதி, ஆத்மக்ரீட, ஆத்மமிதுன' இதுவிஷயத்தை தேவநாயக பஞ்சாசத் வ்யாக்யானத்தில் விஸ்தரித்துள்ளது. 'ப்ரவ்ரஜ்யாதியுதா பரத்ர புருஷேபாதிர்வதீம் பிப்ருதீ பக்தி:ஸா' என்று ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் பக்தியை ஸந்யாஸம் முதலிய துறவி குணங்களோடு கூடியதாய பரபுருஷனிடத்தில் பதிவ்ரதா நிஷ்டையை உடையதாயும் வர்ணித்தார். அதிலுள்ள வேடிக்கைகளும் கவனிக்கத்தக்கன.

புதன், 28 டிசம்பர், 2016

கோதாஸ்துதி


கோதா ஸ்துதி
ஸ்ரீ அன்பில் கோபாலாசாரியார்
1937ல்
ஸ்ரீவேதாந்த‌ தேசிக‌ ஸ்ரீஸூக்தி ச‌ம்ர‌க்ஷ‌ணீ
இத‌ழில் எழுதிய‌து.
த‌மிழாக்க‌ம்
சென்னை திருவ‌ல்லிக்கேணித் த‌மிழ்ச்ச‌ங்க‌ம்
வெளியீடு 11 (27-7-1941)
சுலோகம் 7
வல்மீகத: ச்ரவணதோ வஸுதாத்மநஸ் தே
        
ஜாதோ பபூவ ஸ முநி: கவிஸார்வபௌம: |
கோதே கிமத்புதம் யதமீ ஸ்வதந்தே
        
வக்த்ராரவிந்த மகரந்தநிபா: ப்ரபந்தா: ||   (7)

புவிமகளா நின்செவியிற் போந்தமுனி நுங்கோன்
கவிமகனாய் வாழ்ந்து களித்தான் -- சவிமருவு
நீதா னியற்றுகவி நேசமுற மாலை வைத்தாய்
கோதாய் வியப்பென்னோ கூறு
.        (7)

பதவுரை
         கோதே -- கோதாய்!; வஸுதாத்மந: -- பூமிப்பிராட்டி ரூபமான; தே -- உனது; ச்ரவணத: -- செவியாகிற; வல்மீகத: -- புத்திலிருந்து; ஜாத: -- பிறந்த; - அந்த; முநி -- மஹர்ஷி; கவிஸார்வ பௌம: -- கவிகளுக்குள் சக்கரவர்த்தியாக; பபூவ -- ஆனார்; (ஆகையால்), தே -- உனது; வக்த்ராரவிந்த -- முகமென்னும் கமலத்திலிருந்து (பெருகும்); மகரந்தநிபா: -- தேன்போன்ற; அமீ ப்ரபந்தா: -- இந்த ப்ரபந்தங்கள்; ஸ்வதந்தே -- ருசிக்கின்றன; இதியத் -- என்னும் இது; கிமத்புதம் -- என்ன ஆச்சரியம்?

         கோதாய்! பூமிப்பிராட்டியேயான உன்னுடைய காதென்று சொல்லும் வல்மீகத்திலிருந்து (புற்றினின்று) பிறந்த அந்த முனி (வால்மீகி முனிவர்) கவிச் சக்கரவர்த்தியானார். அப்படியிருக்க, உன்னுடைய திருவாயாகிய தாமரையிலிருந்து பெருகும் தேனுக்கு ஒப்பான இப்பிரபந்தங்கள் இனிமையாயிருக்கின்றன என்பது என்ன ஆச்சர்யம்.

அவதாரிகை

         (1) வால்மீகியையல்லவோ உத்தம கவி என்பர்! அவரையல்லவோ கவிகள் நல்வாக்குகளுக்காகப் பிரார்த்திப்பர்! "இதம் குருப்ய: பூர்வேப்யோ நமோவாகம் ப்ரஸாஸ்மஹே" என்று பவபூதி வால்மீகியை முதலிலேயே பணிந்தார். அவர்தானே கவிகளுக்கு மார்க்கதர்சீ! நீரும் உம்முடைய தேவநாயகன் ஸ்துதியில் "ப்ராச; கவீந் நிகமஸம்மித ஸூந்ருதோக்தீந், ப்ராசேதஸ ப்ரப்ருதிகாந் ப்ரணமாமி நித்யம்" என்று அம்முனிவரைப் பணிந்தீர். பாதுகாஸஹஸ்ரத்திலும், "யஸ்யாஸூதரவிந்த ஸம்பவ வதூ மஞ்ஜீர சிஞ்ஜாரவ ஸ்பர்த்தா துர்த்தர பாதபத்தபணிதி வல்மீகஜந்மா கவி:" என்று அவர் ராமாயணத்தைப் புகழ்ந்தீர். பெரிய பிராட்டியாருடைய அவதாரமாகிய ஸீதாதேவியின் சரித்ரத்தைப் பாடிய கவியிலும் உயர்ந்த கவியுண்டோ? "கவிப்ரதம பத்ததிம்" என்றல்லவோ காளிதாஸர் ராமாயணத்தைப் புகழ்ந்தார். "பரம் கவீநாம் ஆதாரம்" என்றபடி அக்காவ்யந்தானே எல்லாக் கவிகளுக்கும் மூலாதாரம்.!

         (2) பெருமாள் கேட்டு மகிழும்படி பாட நான்தான் வாக்கு அளிக்கவேண்டும் என்று இச்சகம் பேசுகிறீர். ராமாயணம் 24000 சுலோகங்களையும் பெருமாள் "பபூஷயா ச்ரோத்ருமாநா பபூவ" என்றபடி தன் ஸத்தையும் தாரணமும் அதனால்தானென்று "மஹாநுபாவம் சரிதம்" என்றும், "மமாபி பூதிகரம்" என்றும் புகழ்ந்துகொண்டு கேட்கவில்லையே! என் விஷயமாக ஓர் சின்ன ஸ்துதி பண்ணுவதற்கு என்னையே வாக்பிக்ஷை கேட்கிறீரே?

         (3) ஓரிரவில் பாதுகா ஸஹஸ்ரம் பாடி அதைப் பெரியபெருமாளே திருவோலக்கத்தில் தூக்கத்தைத் தள்ளி லக்ஷ்மியோடு கூடத் திருச்செவி சாற்றவில்லையோ! அந்தப் பாதுகா ஸஹஸ்ரத்திற்கு திவ்ய வாக்கை வால்மீகியைப் பிரார்த்தித்து அடையவில்லையோ? அதற்கு என்னைக் கூப்பிடவில்லையே? ஸமயத்திற்குத் தகுந்தபடி பேசுவது அழகோ? நான் கவியா? அவர் கவியாஇதற்கெல்லாம் பதில் கூறுகிறார் இங்கே.

         வால்மீகி ஆதிகவி என்பதும், அவரை மற்றக் கவிகள் பணிந்து வாக்கைப் பெற்றனர் என்பதும் உண்மையே. அடியேனும் அவரைப் பணிந்து யாதவாப்யுதயம் பாடினேன். பாதுகா ஸஹஸ்ரமும் பாடினேன். பெருமாளும் அவர் ஸீதைப் பிராட்டி விஷயமாய்ப் பாடிய ஆதிகாவ்யத்தை இன்புறக் கேட்டருளினார். நான் இப்பொழுது உன்னைப் பிரார்த்திப்பதற்கும் நான் முன் வால்மீகியைப் பிரார்த்தித்தற்கும் ஓர் விரோதமுமில்லையே அம்மா! வால்மீகியைப் பிரார்த்தித்துக் கவிதை பெற்றதைக் கொண்டு கைமுத்யத்தால் உன்னைப் பிரார்த்தித்து வாக்குப் பெறவேண்டியதற்கு ஔசித்யம் ஸித்திக்கிறதே. வாதத்தில் இதுபோன்ற உன் கேள்வியை 'சுங்கத்தில் போது விடிந்ததுபோலும்' என்பாரம்மா! வால்மீகி யாரம்மா? வல்மீகத்தில் பிறந்தவர்தானே? வல்மீகம் என்பது என்ன? "வஸுதாச்ரோத்ரம்"தானே? பூமிதேவியின் காது (ச்ரவணம், ச்ரோத்திரம்). நீதானே பூமிதேவி? உன் செவியிற் பிறந்த மஹிமையாலே அவர் கவிஸார்வ பௌமரானார். உன்னுடைய குழந்தை (அம்சம்) விபூதிதானே அவர்! அவர் கவிதாசக்திக்கு நீதானே மூலம்! ஆதாரம்! உன்னை த்யானித்துக்கொண்டேதான் யாதவாப்யுதயமும் பாதுகாஸஹஸ்ரமும் பாடினேன். "வஸுதா ச்ரோத்ரஜே தஸ்மிந்" என்று உன் ச்ரோத்ரத்தில் பிறந்தவரென்றுதானே அவரை ஆரம்பத்தில் இரண்டாவது ச்லோகத்தில் புகழ்ந்தேன்? அப்படியே பாதுகா ஸஹஸ்ரத்திலும் "வஸுதா ச்ரோத்ர ஜந்மா முநிர்மே" என்று உன் மூலமான புத்ர ஸம்பந்தத்தைப் பேசிக்கொண்டேதானே திவ்யவாக்கின் அநுக்ரஹத்தை யாசித்தேன்? உன் ச்ரோத்ரத்திலிருந்து பிறந்த கவி பாடின க்ரந்தமானதால், ராமாயணம் முழுவதையும் பரிஷத்தில் பெருமாள் இன்புறக் கேட்டார்.

         (4) இப்படிப் பதில் சொல்வது அழகாயிருந்தாலும், ஓர் கேள்வி கேட்கிறேன். அதில் நீர் அகப்பட்டுக்கொண்டே தீரவேணும். ஸீதைப் பிராட்டியார் தன்னுடன் பிறந்தவரான (ஸஹஜரான) கவீச்வரரைக் கொண்டு தன் சரித்ரமான ராமாயணத்தைப் பாடிவைத்தாள் என்று பாதுகாஸஹஸ்ரம் முடிவில் பாடினீரே! இப்பொழுது ராமாயண காவ்யம் என் மூலம் என்கிறீரே? இந்த விரோதத்தை எப்படிப் பரிஹரிப்பீர்? பெரியபிராட்டியார் எனக்கு அம்சி, நான் அம்சம். அம்சத்திற்குள் அம்சி அடங்குமோ?

         அம்மா, இந்தக் கேள்வியும் ஸுபரிஹரம். நீ பெரியபிராட்டியாருடைய அம்சமாயிருந்தபோதிலும், பெரியபிராட்டியார் உன்னிடமுள்ள நிரதிசயப்ரீதியால், உன் பெண்ணாகப் பிறந்து உன்னை பஹுமானித்து உனக்கு சேஷமாயிருக்கும் ரஸத்தை அநுபவிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு பூமிஸுதையாக (உன் பெண்ணாய், ஸீதையாக) அவதரித்தாள். அந்த அவதாரத்தில் பெரியபிராட்டியார் இச்சாவசத்தால் அம்சாம்சி பாவம் மாறிவிட்டது. நீ அம்சியும், ஸீதை உன் அம்சமான புத்திரியுமானாள். தாயும் அம்சியுமான நீ பாடிவைத்ததைத்தானே அங்கே ஸீதை பாடி வைத்ததாக ஔபசாரிகமாகப் பேசினேன். "ஸஹஜோ கவீச்வரேண" என்றதால் இது வ்யஞ்ஜிதம். வால்மீகிக்கும் ஸீதைக்கும் ஸஹஜத்வம் எப்படி? பூமிதேவியே நீ! உன்னிடமிருந்து இருவரும் பிறந்தாரென்பதுதானே! உன்னிடம் பிறந்தவர் ஸஹஜகவி. கவீச்வரியான தாயாருடைய பிள்ளைதானே ஸஹஜகவீச்வரரானார்? "கரிணீ"தானே களபத்தைப் பெறும்? தாய் வேறுஜாதி குட்டி வேறுஜாதியாமோ? நீ கவீச்வரி. உன்னிடம் ஜாதர் கவீச்வரர். "மாதரம் த்விபதா இதி". ஆண் பிள்ளைகள் தாய் ஸ்வபாவத்தை அநுஸரித்திருப்பர். ஆகையால் விரோதம் இல்லை அம்மா!

         வஸுதாத்மந: -- பூமிஸ்வரூபமான (பூமிதேவியான) பூமி வடிவுடைய உன்னுடைய. "ஸாக்ஷாத் க்ஷமாம்" என்று முதல் ச்லோகத்திலேயே இதை ஸாதித்தார். "வல்மீகம்" - புற்று. அதற்கு "வஸுதாச்ரோத்ரம்" என்று பெயர். வல்மீகத்தில் பிறந்தவர். பூமியின் செவியில் பிறந்தவர். "வஸுதாச்ரோத்ர:" என்ற பர்யாயபதத்தைப் புத்திக்கும் கொண்டுவருவதற்காக "வஸுதா" சப்தத்தைப் பிரயோகித்தது.

         தே -- உன்னுடைய; ச்ரவணத -- திருச்செவியிலிருந்து. ஜன்ஹுமஹர்ஷியின் ச்ரவணத்திலிருந்து கங்கை அவதரித்தாள். அதுபோல உன்னுடைய ச்ரவணத்திலிருந்து ராமாயண கங்கா ப்ரவாஹ ஹேதுவான வால்மீகிமுனி பிறந்தார்.

         வல்மீகத: -- கரையான் புற்றிலிருந்து; ஜாத: -- பிறந்த. (ஜாதோ பபூவ) பிறவியாலே ஆனார். பிறந்ததும் ஆனார். ஜாத: கவிஸார்வபௌம: கவீச்வரராகவே பிறந்தார். "ரூபதாக்ஷிண்ய ஸம்பந்த: ப்ரஸூத:" என்ற இடத்தில்போல பிறவிக் கவீச்வரர். உன்னிடத்திலிருந்து பிறந்ததே அவருடைய நிரதிசயமான கவிதைக்கு மூலம்.

         ஸ முனி: -- அந்த முனி. முனீச்வரர் கவீச்வரரானார். 'முனி' என்பது வாய்திறவாத மௌனியைச் சொல்லும். வாய் திறவாதவரும் வாசஸ்பதியாகப் பேசுவர். "மூகையான் பேசலுற்றேன்", "மூகம் கரோதி வாசாலம்", "ரகுவரசரிதம் முனிப்ரணீதம்", "ஸ்ரீமத்பாகவதே மஹாமுனிக்ருதே பராசரம் முநிவரம்".

         கவிஸார்வபௌம: -- கவிச்சக்கரவர்த்தியாய், கவீச்வரராய். முனி என்பவர் யோகி. யோகத்தில் 7 பூமிகள், மேல்மேல் உப்பரிகைகள், மேல்மேல் ஏறவேண்டும் (ஆரோஹம்). 7 பூமிகளையும் ஏறுவர். 7 பூமிகளேறின யோகத்தை ஸார்வபௌமமென்பர். யோகி ஸார்வபௌமர் கவிஸார்வபௌமரானார். யோகத்தில் 7 பூமிகள்போல், ராமாயணம் ஸப்த காண்டம். ராமாயணத்தைப்போல், திவ்யதம்பதிகளிடம் மனம் லயிக்க வேறு ஸாதனமில்லை. ராவண ஜயம் மனோஜயமாகும். ராவணலயம் மனோலயம். அது யோககாஷ்டை.
         பபூவ-- ஆனார்.

         கோதே! -- வாக்கையளிக்கும் தேவியே! உன் புத்திரரான வால்மீகிக்கு நீதான் வாக்கையளித்தாய். ஆகையால்தான் அவருக்கும் கவிதாமூலமான உன்னை பிக்ஷை கேட்கிறேன். "பரம் கவீநாம் ஆதாரம்" என்பதற்கும் மூலாதாரம் நீ.

         (தே) வக்த்ராரவிந்த மகரந்தநிபா: -- உன் திருமுகக் கமலத்திலிருந்து பெருகும் தேனுக்கு ஒப்பான (உன் ப்ரபந்தங்கள்). ஸாமான்யமான தாமரையிலிருந்து பெருகும் தேனுக்கு ஒப்பிடமுடியாது. உன் திருவாயாகிய தாமரையிலிருந்து பெருகும் தேனுக்குத்தான் ஒப்பிடலாம். உன் ப்ரபந்தங்களாகிய தேனுக்கு உனக்கு பாஹ்யமான உபமானமொன்றும் ஒப்பாது. கண்ணன் பாடிய கீதையை "யா:ஸ்வயம் பத்மநாபஸ்ய முகபத்மாத் விநிஸ்ஸ்ருதா:" என்று வர்ணிப்பர். "வால்மீகேர் வதநாரவிந்த கபிதம் ராமாயணாக்யம் மது" என்று தித்திப்பதற்கும் நீதான் மூலமென்பதை ஸூசிப்பிக்கிறார்.

         (தே) ப்ரபந்தா: -- உன்னுடைய தேன் ப்ரபந்தங்கள். ப்ரபந்தமென்பதற்குப் பரம்பரை விஸ்தாரம் என்றும் பொருள். த்வநிபரம்பரை போய்க்கொண்டிருக்கும். கட்டிலடங்காது. திருநாமம் மட்டும் கட்டுப்பட்டது என்ற பொருளைக் கொடுக்கும். பொருள் விஸ்தாரம் கட்டிலடங்காது. பொருள் பரம்பரை எல்லையில்லாமல் மேல்மேலே போய்க்கொண்டிருக்கும். "மங்களாநாம் ப்ரபந்தாந்", "க்ரியாப்ரபந்தா தயமத்வராணா மஜஸ்ர மாஹூத ஸஹஸ்ரநேத்ர:"

         அமீ ப்ரபந்தா: -- இப்பிரபந்தங்கள். இந்த என்று சொல்லலாமேயொழிய, இப்படிக்கொத்தது என்று வரையறுத்துப் பேச முடியாது. இதோ என் மனதுக்கும், காதுக்கும், நாக்குக்கும் சுவைக்கிறதே அந்தப் பிரபந்தங்கள். "க்ருஷ்ணேத்யக்ஷரயோரயம் மதுரிமா" என்று ஜகந்நாத பண்டிதர். "க்ருஷ்ண" என்ற இரண்டு அக்ஷரங்கள் தன் மனதிற்குச் சுவைத்த இனிப்பை "இவ்இனிப்பு" என்று பேசியதுபோல.

         யத் ஸ்வதந்தே -- தித்திப்பது என்னும் இதம் இது, தித்திப்பது.

         கிமத்புதம் -- என்ன ஆச்சரியம்? இது ஓர் ஆச்சரியமா? கைமுத்தியத்தால் கிடைப்பது ஆச்சர்யமாகுமோ? 'அத்புதம்' என்பதை அத்புதம் ஸ்வதந்தே என்று ஒட்டிக்கொள்ள வேண்டும். இங்கே இரண்டு கைமுத்தியங்கள். (1) உன்னிடம் பிறந்தவர் லோகோத்தரகவியாகையால் உன் காவ்யங்கள் லோகோத்தரமென்பதற்கு என்ன தடை? (2) உன் காதில் பிறந்தவர் வாக்கு அத்தனை இனிமையாகையில் உன் திருவாயிலிருந்து வரும் வாக்குகளின் இனிப்புக்குக் கேட்பானேன்?

         வால்மீகி விஷயமான இந்த சுலோகத்தை 7வது சுலோகமாக வைக்கப்பட்டது. உன் "ச்ரவணத்திலிருந்து" என்பதற்கு எதிர்த்தட்டு உன் "வக்த்ராரவிந்தத்திலிருந்து" என்பது.    (7)