அடியேனுக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம். கோவில் விழாக்களில் தேரோட்டம் என்று சொல்வது சரிதானா? அனேகமாக எல்லா ஊர் தேர்களும் எத்தனை பேர் கூடி இழுத்தாலும் அசைந்து அசைந்து, இன்ச் இன்சாகத் தானே நகர்கிறது? பின் எப்படி அதை ஓட்டம் என்று அழைப்பது என்று? அதற்கு இன்று விடை கிடைத்தது. அப்புறம் பெருமாளின் சக்தியை இல்லை இல்லை அவரது கருணையை இரக்கத்தை அனேகமாக இன்று தேர் இழுத்த, தள்ளி நின்று வேடிக்கை பார்த்த அனைவரும் உணர முடிந்ததும் 9ம் நாளாகிய இன்றைய தேர்த் திருநாளின் சிறப்பாகும்.
கடந்த 15 நாட்களாக மிக உக்கிரமான வெய்யிலால் வாடிக் கொண்டிருந்தோம். காலை 6 மணிக்கே ஏதோ 11 மணி ஆனது போல் சூரியன் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தான். தேருக்கு முதல் நாள் மாலை 5மணி அளவில் பெருமாள் வேட்டைக்குக் கிளம்பும்போது தரையில் கால் வைக்க முடியவில்லை. பொழுதெல்லாம் அடித்த வெய்யிலால் கால் தரையில் ஒட்டிக் கொள்கிற அளவு சூடு. மறுநாள் தேர் எப்படி ஜனங்கள் இழுக்கப் போகிறார்களோ என்று எல்லாருக்கும் கவலை. அதிலும் தேரன்று பங்குனி உத்திரம். அருகிலுள்ள இராமநாதபுரம் ஸ்ரீ வழிவிடு முருகன் கோவிலில் விதவிதமாய்க் காவடிகள் ஆயிரக்கணக்கில் கலந்துகொள்ளும் மிகப் பெரிய திருவிழா. வழக்கமாய்த் தேர் இழுக்க வரும் கிராமத்து ஜனங்கள் எல்லாம் அங்கே சென்று விடுவர். அந்தக் கவலை வேறு.
தேரோட்டத்தன்று காலை 5 மணிக்கெல்லாம் பெருமாள் தேரில் எழுந்தருளினார். சூரியோதயம் ஆயிற்றோ என்று தெரியாமல் காலையில் ஒரே மேக மூட்டம். மிக மந்தாரமாய் க்ளைமேட். ஒருவேளை கோடி சூரியப் பிரகாச வண்ணன் தேரில் அமர்ந்ததால் சூரியன் வெட்கி ஒளிந்து கொண்டானோ தெரியவில்லை. காலை 9.55க்கெல்லாம் இராமநாதபுரம் சமஸ்தானம் திவான் வடம் தொட்டு தேர் இழுக்க ஆரம்பித்து வைத்தார். கிராமத்து மக்கள் சில பேர்களே வந்திருந்த நிலையில், திடீரென்று இரண்டு பஸ்களில் டூரிஸ்டுகள் (எல்லாரும் ஆண்கள்) வந்திறங்கி அவர்களும் வடம் பிடிக்க, வழக்கமாக அசைந்து அசைந்து 10 அடிக்கு ஒரு தரம் நின்று நின்று நகரும் தேர் அன்று உண்மையாகவே ஓடியது. வடம் பிடித்ததிலிருந்து நிலை வந்து சேரும் வரை ஓட்டம் ஓட்டம் ஓட்டம்தான். எங்கள் ஊரில் சில மூலைகள் உண்டு. வாடிக்கையாக அந்த இடங்களில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டு இழுக்க முடியாமல் அப்படியே விட்டு விட்டு அப்புறம் மாலையில் ஆட்களை எல்லாம் திரட்டிக் கொண்டு வந்து சிரமப் பட்டு நகர்த்தி இழுத்து வருவது உண்டு. இந்த வருடம் ஒரு சிக்கலும் இல்லை. தேரை ஆங்கிலத்தில் கார் (car) என்போமில்லையா? எப்படி அந்தக் கார் எளிதாக இயங்குமோ அதேபோல் இன்றைய தேரும் ஓடியது.
எங்களூரில், பங்குனி தேர் நிலைக்கு வர சுமார் 4 அல்லது 5 மணி நேரம் ஆகும். சித்திரைத் தேர் இராமனுக்கு! அதே வீதிகள்! அதே தேர்! அதிக மக்கள் இழுப்பதற்கு! ஆனாலும் மாலை 5 மணி அளவில் கூட திலைக்கு வரமாட்டார். பல வருடங்களில் மறுநாள் வந்ததும் உண்டு.
இந்த வருடமோ! ஆந்திர மக்களின் அபார பாட்டு ஆட்டங்களினால் மிக மகிழ்ந்திருந்தோரோ என்னவோ, சரித்திரத்தில் முதல் முறையாக 40 நிமிடங்களில் நிலைக்குப் பெருமாள் வந்து விட்டார். அது மட்டுமில்லை. அதுவரை ஒளிந்து கொண்டிருந்த கதிரவன் அடுத்த ஓரிரு நிமிடங்களில் வெளிப்பட்டு வறுக்கத் தொடங்கினான்.
தேர் இழுக்கும் பக்தர்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாமல் செய்த பெருமாளின் கருணையை ஒவ்வொருவரும் உணர வைத்த சம்பவம் அது.
சரி அப்பா! பெருமாள் கருணை மிக்கவர் என்றால் முந்தைய வருடங்களில் ஏன் கஷ்டப் படுத்தினார் என்று கேட்கிறீர்களா? முந்தைய வருடங்களைப் பற்றியும் பதிவிட்டிருக்கிறேன். அங்கு போய்ப் பார்த்தால், படித்தால் உங்களுக்கே தெரியும். வீதியில் வந்து ரக்ஷிக்க வருகிறவனை எட்டிப் பார்க்கக் கூட உள்ளூர் மக்களுக்கு மனம் இல்லாததை! ஆந்திர மக்கள் வந்து இங்கேயும் ஒரு திருப்பதி போல் ஆக்கி அவனை மகிழ வைத்த காரணம் இந்த வருடம் அவன் கருணை மழை பொழிந்தது.
மறுநாள் தீர்த்தவாரிக்கு சிறிய திருவடி (அனுமன்) மீது இராமன் உடன் வர, பெரிய திருவடி(கருடன்) மீது பெருமாள் ஆரோஹணித்து சேதுக்கரை எழுந்தருளினார். அங்கு ஆந்திர மக்களையே வியக்க வைக்கும் வண்ணம் ஹைதராபாதிலிருந்து வந்த ஒரு மார்வாரி குடும்பம் பெருமாள்,இராமனுக்கு முன் ஆடிய ஆட்டங்கள் வர்ணிக்க இயலாதவை. கையிலே அடியேன் காமரா இல்லை. அதைப் பதிய முடியாத வருத்தம் உண்டு. கடந்த 25 ஆண்டுகளாக தீர்த்தவாரியில் சக்கரத்தாழ்வாரை சேதுவில் எழுந்தருளப் பண்ணுகிற பாக்யம் கிடைப்பதால், கையில் காமரா கொண்டு செல்லவில்லை.
பெருமாள், இராமன் சேதுவைக் கடாக்ஷிக்க சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி புருஷஸுக்த, அஹமர்ஷண கோஷங்களுடன் சேதுவில் நடந்தது. அதன்பின் சேதுக்கரை ஸ்ரீஜெயவீர அனுமான் ஸந்நிதி மண்டபத்தில் பெருமாள், இராமன், சக்கரத்தாழ்வார் மூவருக்கும் ஏக சிம்மாசனத்தில் விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. இம்மாதிரி ஒரே நேரத்தில் ஒரே ஆசனத்தில் இரு பெருமாள்களுக்கு திருமஞ்சனம் வேறு எங்கும் நடைபெறுகிறதா என்று தெரியவில்லை.
மாலையில் திருப்புல்லாணி திரும்பி, இராமன் மட்டும் உள்ளே ஏளிவிட, பெருமாளுக்கு கதவு அடைக்கப்பட்டு, அதன்பின் பிரளய கலகம் வாசித்து, ஆழ்வார் சமரசம் செய்துவைக்க கதவு திறக்க தாயார் அனுமதி கொடுத்து பெருமாள் ஆஸ்தானம் அடைந்தார். இரவிலே சந்திரப்ரபை வாகனம். ஆனால் அன்று ஆலய ஊழியர்களுக்கு அலுப்பு ஏற்பட்டுவிடும். அதனால் கடந்த பல வருடங்களாக அந்த வாகனத்தை நாங்கள் பார்க்கவேயில்லை. அதற்குப் பதில் சப்பரம்தான்.
31ம் தேதி விடாயத்தி உத்ஸவம். பெருமாள், உபயநாச்சிமாருடன், ஸ்ரீ வானமாமலை மடத்துக்கு எழுந்தருளி, திருமஞ்சனம் கண்டருளி, இரவில் சப்பரத்தில் திருவீதிப் புறப்பாடுக்குப் பின் ஆஸ்தானம் அடைந்ததுடன் இந்த பங்குனி திருநாள் நிறைவு பெற்றது.
வீடியோக்களை இணைக்கும்போது ஏதோ சிக்கல் ஏற்படுகிறது. தனியே பதிவிடுகிறேன்.