பல நேரங்களில் அடியேனிடம் தலைதூக்கும் அகந்தையைப் பொருட்படுத்தாமல் மன்னித்து அடியேன்மீது அன்பு காட்டி வரும் சிலரில் திருமதி நளினி பெர்ஸாதும் ஒருவர். தமிழுலகுக்கு, அதிலும் குறிப்பாக யாஹூ வைணவ குழுமங்களுக்கு மிக நன்றாகவே அறிமுகமானவர். உலகப் புகழ் பெற்ற நூலகம் ஒன்றில் முக்கியமான பொறுப்பில் இருப்பவர். இன்று அவர் அனுப்பிய ஒரு அஞ்சலினால் ஹரிவம்சம் நூலின் தமிழாக்கம் ஒன்று இருப்பது தெரிய வந்தது. அந்நூலின் முதல் பகுதி மட்டும் 1993ல் அச்சாகியுள்ளது. இரண்டாம் பகுதி இன்னும் அச்சாகவில்லை. முதல் பகுதியை ப்ரசுரித்த திருவல்லிக்கேணி ஸ்ரீ வேங்கடகிருஷ்ணன் ஸ்வாமியிடம் தற்போது முதல் பாகமே கையிருப்பு இல்லையாம். நூலைத் தமிழாக்கியவருடன் தொடர்புகள் அற்றுப் போன நிலையில், இரண்டாம் பாகத்தைப் பற்றி ஒரு தகவலும் இல்லை என்றும் கூறினார். அந்தப் பழைய நாட்களைப் போலவே, இந்தக் கணிணி யுகத்திலும் அருமையான பல நூல்களை லுப்தமாக்குவதில் நமக்கு நிகர் யாருமில்லை. நல்ல வேளையாக முதல் பாகம் மட்டும் இணையத்தில் இருக்கிறது. அடியேனைப் போலவே தமிழ் மட்டுமே படிக்கத் தெரிந்தவர்கள் சிலருக்காக அதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். மூல நூலை சமஸ்க்ருதத்தில் படித்து ரசித்தவர்களும் தமிழிலும் படித்து இன்புறலாம்.