சனி, 18 டிசம்பர், 2010

தேசிகப்ரபந்தம் --- ஆர். கேசவய்யங்கார் முன்னுரையின் நிறைவு'


ப்ரபந்தவகை


இம்மஹாதேசிகர் அருளிச் செய்த ரஹஸ்ய நூல்கள் பல. அவை முப்பது என்பர் சிலர்.  முப்பத்திரண்டு என்பர் வேறு சிலர்.  பின்னும் அதிகம் என்பர் பின்னும் சிலர்.  மறைந்தன பல.  மிகுந்துள்ளவற்றுள்ளும் சிலபாகங்கள் மறைந்தன.  மும்மணிக்கோவையில் பாக்கள் பத்தே காணப்படுகின்றன.  மிகுந்துள்ளவை மறைந்தன.  வடமொழியிற்போல் மணிப்பவளத்திலும் தமிழிலும்  பல்பெரும்ப்ரபந்தங்கள் மறைந்தன.  பந்துப்பா, கழற்பா, அம்மானைப்பா, ஊசற்பா, ஏசற்பா என்று தெய்வநாயகன் விஷயமாய்ப் பாடியுள்ளதாக இவர்தாமே1(நவமணிமாலை 10) கூறிய பாக்கள்  ஐந்தும் மறைந்தன.  அதுபோற் பாடற்ப்ரபந்தங்களும் ரஹஸ்யப்ரபந்தங்களும் உரைப்ரபந்தங்களும் மறைந்தன பலவே.  மிகுந்துள்ளவற்றை ஆன்றோர்கள் தேசிகப்ரபந்தம் என்று திரட்டித் தொகுத்து ஓதி உணர்ந்து வருகின்றார்கள்.  அதன் வகை:-
   1   அமிர்தரஞ்சனி:- இது, ஸம்ப்ரதாயபரிசுத்தி, தத்த்வ பதவி, ரஹஸ்யபதவி தத்த்வநவநீதம்,     ரஹஸ்யநவநீதம், தத்த்வமாத்ருகை, ரஹஸ்யமாத்ருகை, ரஹஸ்யஸந்தேசம், தத்த்வரத்நாவளி            ரஹஸ்யரத்நாவளி, ரஹஸ்யரத்நாவளிஹ்ருதயம். தத்த்வத்ரயசுளகம், ரஹஸ்யத்ரயசுளகம் என்னும் மணிப்பவள ரஹஸ்யநூல்கள் பதின்மூன்றின் தமிழ்ப் பாடல்களின் திரட்டு.  இதிற் பாடல் 39.
   2   அதிகாரஸங்க்ரஹம்:- இது குருபரம்பராஸாரம் உள்ளிட்ட ரஹஸ்யத்ரயஸாரப் பாடல்களின் திரட்டு.  ரஹஸ்யத்ரய ஸாரநூலின் ஒவ்வோர் அதிகாரப் பொருளின் தமிழ்ச் சுருக்கு ஆதலால் இது அதிகார ஸங்க்ரஹம் என்னப்படும் இதிற் பாடல் 56.
   3   அமிர்தாஸ்வாதினி:- இது ஸாரஸாரம், அபயப்ரதாநஸாரம். ரஹஸ்யசிகாமணி. அஞ்சலி வைபவம் ப்ரதாநசதகம். உபகாரஸங்க்ரஹம், ஸாரஸங்க்ரஹம், விரோதபரிஹாரம், முநிவாஹநபோகம் என்னும் மணிப்பவள ரஹஸ்ய நூல்கள் ஒன்பதின் தமிழ்ப்பாடல் திரட்டு இதிற் பாடல் 21.
   5   பரமதபங்கம்:- இது இப்பெயருடைய மணிப்பவள ரஹஸ்ய நூலின் தமிழ்ப்பாடல் திரட்டு.  இதிற் பாடல் 54.  
   6  அத்திகிரிமான்மியம்:- இது இப்பெயருடைய மணிப்பவள ரஹஸ்யநூலின் தமிழ்ப்பாடல் திரட்டு.  இதைமெய்விரதமான்மியம்என்றும் கூறுவர்.  இதிற் பாடல் 29.
    7   அடைக்கலப்பத்து:- இது தமிழ்ப்பாடற்ப்ரபந்தம் இதிற் பாடல் 11.
    8. அர்த்தபஞ்சகம்:- ‘ஐந்துபொருள்களை’ (அர்த்தபஞ்சகத்தை) உணர்த்தும் தமிழ்ப் பாடற் ப்ரபந்தம.  ஐந்து பொருள்களாவன:- அடையப்பெறும் இறைவன் ஸ்வரூபம், அடையும் உயிர்ப்பொருளின் ஸ்வரூபம், இறைவனை உயிர்ப்பொருள் அடைதற்குத்தடை, அடையும் உபாயம், பேறாகிய அடைவு என்பன.  இதிற்பாடல் 10.
   9   ஸ்ரீவைஷ்ணவதினசரி:- இது ஸ்ரீ வைஷ்ணவர்கள் நாள்தோறும் ஐந்து காலங்களிலும் ஒழுகவேண்டிய முறையை உணர்த்தும் தமிழ்ப்பாடற்ப்ரபந்தம்.  இதிற்பாடல் 10.
   10   திருச்சின்னமாலை:- இது பேரருளானுக்குப் பாடிய திருச்சின்னத் தமிழ்ப்பாடற்ப்ரபந்தம்.  இதிற் பாடல் 11.
     11   பன்னிருநாமம்:- இது கேசவநாமம் முதல் தாமோதர நாமமளவும் ஓதும் பன்னிருநாம விளக்கத் தமிற்பாடற்ப்ரபந்தம்.  இதிற் பாடல் 13.
     12    திருமந்திரச்சுருக்கு:- இது மூலமந்திரப் பொருள் ஒன்பதை உணர்த்தும் தமிழ்ப்பாடற் ப்ரபந்தம் இதிற் பாடல் 10.
    13  த்வயச்சுருக்கு:-  இது த்வயமந்திரத்தின் பத்துப் பொருள்களை விளக்கும் தமிழ்ப்பாடற்ப்ரபந்தம். இதில் பாடல் 12.
   14  சரமச்லோகச்சுருக்கு:- இது சரமச்லோகத்தின் திரண்ட பொருளையும், பதம் சொற்றொடர் இவைகளின் பொருள்களையும் விளக்கும் தமிழ்ப்பாடற்ப்ரபந்தம். இதிற் பாடல் 11.
   15  கீதார்த்தஸங்க்ரஹம்:- இது கீதைப்பொருளைச் சுருங்கச்சொல்லி விளங்கவைக்கும் முறையில் கீதை ஒவ்வொரு அத்தியாயப்பொருளையும் ஒவ்வொரு பாட்டால் சுருங்கக் கூறி, முதற்பாட்டால் கீதைக்குத் திரண்டபொருள் கூறி, இருபதாம் பாட்டால் பயன் கூறி, இருபத்தொன்றாம் பாடல் திருநாமப் பாட்டாகத் தலைக்கட்டும் தமிழ்ப்பாடற்ப்ரபந்தம்.  இதிற்பாடல் 21.
   16   மும்மணிக்கோவை:- இது தெய்வநாயகன் விஷயமாய்ப் பாடப்பெற்றஅவியகத்துறைகள்  தாங்கி நிற்கும் பேரின்பத் தமிழ்ப்பாடற்ப்ரபந்தம்.  இதிற் பாடல் 10. பிற மறைந்தன.
   17   நவமணிமாலை:- இது தெய்வநாயகன் விஷயமாய்ப் பாடப்பெற்ற தமிழ்ப்பாடற்ப்ரபந்தம்.  இதிற் பாடல் 10.
            மும்மணிக்கோவையைசெந்தமிழ் மும்மணிக்கோவை செறியச் சேர்த்துஎன்றும், நவமணி மாலையைபரவுநவ மணிமாலைஎன்றும் அவர் நவமணிமாலையில் கூறியிருத்தல் நோக்குக.
   18  ப்ரபந்தஸாரம்:- இது ஆழ்வார்கள் அவதரித்த நாள்’,‘திங்கள்’,‘அடைவு’,“திருநாமங்கள்அவர்கள் அருளிச்செய்ததிருமொழிகள்” “அவற்றுட் பாட்டின் வகையான தொகை யிலக்கம்” “மற்றுமெல்லாம்விளங்கக்காட்டும் தமிழ்ப்பாடற்ப்ரபந்தம். ‘திருமாறன் கருணைஎன்றதே ப்ரபந்தஸாரம், நாலாயிரதிவ்யப்ரபந்தஸாரம், தேசிகப்ரபந்தஸாரம், கீதாஸாரம்: இந்த ஸாரம் ப்ரபந்தஸார உரையில் விரிக்கப்பெறும்.  இதிற் பாடல்;  18.
   19   ஆஹாரநியமம்:- இது அடியார்களுக்கு உணவு நெறியை விளக்கும் தமிழ்ப்பாடற்ப்ரபந்தம்,  உயிர்க்கு நல்லுணர்வு போல், உடலுக்கு நல்லுணவு. நல்லுணர்வுக்கும் நல்லுணவுக்கும் உற்றுள்ள ஒற்றுமை தோற்ற நல்லுணர்வை உபதேசித்தது போல் நல்லுணவையும் உபதேசித்தார்.  சாரீரக சித்தாந்த நயத்தை இங்கும் காண்க.  இதிற் பாடல் 21.

            ஆகப்ரபந்தங்கள் 19க்குப் பாடல் 405.  தேசிகப்ரபந்தம் என்னும் இம்மாலை ஞானப்பெருந்தகவோர் சம்பிரதாயத்தில் தோன்றி விளங்கும் தூய்மையும், இதன் பொது நூன்மையும், வேதாந்த உள்ளக்கருத்தில் உரைத்துரைத்த முத்தமிழ்சேர்ந்த மொழித்திருச்சிறப்பும், தத்துவம் உபாயம் புருஷார்த்தம் என்பனவற்றின் தன்மையும் நன்மையும் இனிமையும் இதில் விளங்கும் நலமும், இதன் வகை முதலியனவும் இங்குக் கூறப்பட்டன.  மற்றும் கூறவேண்டியவைகள் ப்ரபந்தஸார முன்னுரையில் கூறப்பெறும்.

மாறிலா மகிழின் மாலை மன்னன்வாய் மொழியின் கந்தம்
நாறநான் மறையி னுள்ளக் குருத்தினில் நறவம் வைத்துத்
தேறிமா தவன லத்தா ளிறைநிலை தூப்பு லண்ணல்
ஆறுநீள் சேது பந்தம் அருளினான் சரணவள்ளல்.

அன்னவன் கையின் மெய்யாய் அருளிறைப் பொருளின் மாலை
பொன்னெனப் புனிதர் போற்றிப் புந்தியுட் புனைந்து பேணும்
நன்னர்கண் டிறைஞ்சி நல்லா சிரியர்தா ணலம் தெண்ணி
இன்னுரை நவின்றா னன்பன் கேசவ னீது நன்றே.

ஸர்வம் சுபம்.