சனி, 7 ஜனவரி, 2012

தங்கமோ தங்கம்!

புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று ஒரு நண்பர் இன்று வந்தார். வந்தவர் ஒரு காலண்டரையும் அன்பளித்து விட்டுச் சென்றார். அவர் போன பிறகு அதைப் பிரித்துப் பார்த்தேன்.

பழைய நூல்களைப் படிக்கும்போதும், அந்தக் காலத்தில் வாழ்ந்த அறிஞர்களைப் பற்றி வாசிக்கும்போதும் '”அடடா! 1920களில் பிறக்காமல் போனோமே! பிறந்திருந்தால் அந்த நூல்களையும், அம்மஹான்களையும் அனுபவித்திருக்கலாமே!” என்று தோன்றும்!(இப்போது மட்டும் என்ன படித்து, தெரிந்து அனுபவித்து விட்டாய்! அன்றும் நீ இன்றுபோலத் தான் எதையும் தெரிந்து கொள்ளாமல் வீண் போது போக்கியிருப்பாய்! என்று மனச்சாட்சி கேலி செய்கிறது!) இந்த காலண்டரைப் பார்த்தவுடனேயும் அப்படித்தான் தோன்றியது.

சென்னை உம்மிடி பங்காரு செட்டி நகைக்கடைக்காரர்கள்  வெளியிட்டுள்ள அந்த காலண்டரில்  1940லிருந்து இன்று வரை தங்கம் மற்றும் வெள்ளியின் விலையைக் குறிப்பிட்டுள்ளார்கள். அன்று பிறந்திருந்தால் தங்கமோ தங்கம் என்று வாங்கிக் குவித்திருக்கலாம் இல்லயா?

(இதைப் பார்த்தால் ,படித்தால் அடியேன் யஜமானி அம்மா 1978லிருந்து வாங்கியிருந்தாலும் போதுமே! ஒரு சமர்த்துக் கிடையாத உங்களுக்கு வாக்கப்பட்டு…. என்று ஒரு பிடி பிடித்தாலும் பிடிக்கலாம்!)

(மீண்டும் மனச்சாட்சி! “ஆனால் அன்று இணையம் என்று ஒன்று கிடையாதே! இப்போது அந்த இணையத்தின் வாயிலாகத்தானே கோவை என்ன! சென்னை என்ன! அமெரிக்கா என்ன என்று தங்கத்துக்கும் மேல் பல மடங்கு உயர்ந்த ஸுஹ்ருதயர்களைப் பெற்றிருக்கிறாய்! அதனால் அன்றைக் காட்டிலும் இன்றே மேல் !”)

அந்த நாளில் எம்.ஜி.ஆர் “நான் உயர உயரப் போகிறேன்! நீயும் வா” என்று பாடியதுபோல தங்கம் வெள்ளியையும் சேர்த்து இழுத்துக் கொண்டு விலை உயர்ந்ததைப் பாருங்களேன்.

PTDC0242

திங்கள், 2 ஜனவரி, 2012

Guru Paramparai Vaibhavam dated 02-01-2012

ஸ்ரீ உபநிஷத் பாஷ்யகாரருக்குப் பின் ஸ்ரீ நேசிக தர்சநத்தை வளர்த்த ஆசார்ய பரம்பரையில் ஸ்ரீ ரங்கநாத ஸ்வாமி, ஸ்ரீ வீரராகவாசார்யர் ஸ்வாமி, ஸ்ரீ ரங்கபதி நேசிகர், ஸ்ரீ ரங்கநாத ஸ்வாமி ஆகியோரைப் பற்றி மிக அழகாக ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமியின் இன்றைய (02-01-2012) உபந்யாஸத்தில் விரித்துரைப்பதை ஆன்லைனில் கேட்க

வழக்கம்போல் Media fireலிருந்து டவுண்லோட் செய்ய

http://www.mediafire.com/?imyj6q0dr99cgjh 

To download from Esnips 
http://www.esnips.com/displayimage.php?pid=33154718

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

ஆண்டாள்

அடியேனுக்கு வெகு சமீபத்தில் அறிமுகமானவரே என்றாலும் அடியேன் மீது அபார ப்ரியம் கொண்டு திருப்புல்லாணி ஸ்ரீ தேசிக கைங்கர்யங்களிலும் மிகுந்த உதவிகள் செய்து வருபவர் ஸ்ரீ தேவநாதன் ஸ்வாமி. ஒரு சிறந்த நிறுவனத்தின் மிக முக்கியமான பொறுப்பிலிருந்தாலும் எப்படியாவது ஸம்ப்ரதாயத்துக்காக நாளின் சில மணிகளை ஒதுக்கி அவ்வப்போது அடியேனிடமும், இணையத்திலும் பல ஸம்ப்ரதாய விஷயங்களைப் பகிர்ந்து கொள்பவர். ஸ்ரீமத் அழகியசிங்கர் திருவடி. இன்று வாடிக்கையான சம்பிரதாயமான வாழ்த்தாக இல்லாமல் ஒரு புத்தாண்டுப் பரிசாக அடியேனுக்கு அனுப்பி வைத்த ஒன்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இனி அவர் அனுப்பி வைத்தது:


கோதையின் திருப்பாவை! -
 





வராஹ அவதாரத்தின்போது பூமியை உத்தாரணம் பண்ணிக் கொண்டு வருகிறான் பரமாத்மா. 'உத்ரிதாமிவராஹேணா’ என்று உபநிஷத் கொண்டாடுகிறது. இவ்வாறு பூமியை உத்தாரணம் பண்ணிக்கொண்டு வரும்போது பூமாதா அழுகிறாள்.


யாராவது கிணற்றில் விழுந்து விட்டால் தூக்கிவிட்டவனைக் கொண்டாட வேண்டும். தன் பிராணன் பிழைத்தது என்று சந்தோஷப்பட வேண்டும். ஆனால், பூமாதாவோ அழுகிறாள். வராஹ மூர்த்தி, ''உன்னைத்தான் நான் காப்பாற்றி விட்டேனே? உன் சிரமத்தைத் தீர்த்து விட்டேனே? ஏன் அழுகிறாய்?'' என்று கேட்கிறார்.


அதற்கு பூமாதா சொல்கிறாள்.

ஸ்ரீப்ருத்யுவாச -
அஹம் சிஷ்யாச தாஸீச
பார்யாச த்வயி மாதவ
மத் க்ருதே ஸர்வ பூதாநாம்
லகூபாயம் வத ப்ரபோ


''உன் சிஷ்யை, பார்யை நான். நான் கூக்குரலிட்டு அழைத்தபோது வந்து என்னைக் காப்பாற்றிவிட்டாய். என்னை மாதிரி என் மேலே பல கோடி சராசரங்கள் அவஸ்தைப்படுகிறார்கள். அவர்கள் அழைத்தால் நீ வருவாயா?'' என்று பூமாதா கேட்கிறாள்; 'ஸ¨கரமான மூர்த்தியே, நீ சொல்லு’ என்கிறாள். ஸ¨கரம் என்றால் பன்றி. ஸ¨கரம் என்றால் எளிதில் செய்யக் கூடிய என்றும் ஒரு அர்த்தம்.


'உலகில் உயர்ந்த கர்மா யக்ஞம்’ என்கிறது வேதம். ஆனாலும், அதில் பல சிரமங்கள் உண்டு. அதனால் சுலபமான, எல்லோரும் செய்யும்படியான உபாயத்தை எனக்காகச் சொல்லு, என, ஜகன் மாதாவான பூமாதா பகவானிடம் நமக்காகப் பிரார்த்திக்கிறாள். 'கல்பாதௌ ஹரிணா ஸ்வயம் ஜநஹிதம்’ என்று அனந்தாழ்வான் சதுஸ்லோகியில் அழகாக உறுதிப்படுத்துகிறார். ஆதியில் பூமாதா பகவானைப் பார்த்து எளிதில் செய்யக்கூடிய உபாயத்தைச் சொல்ல வேண்டும் என்று கேட்கிறாள். அப்போது பகவான் 3 விஷயங்கள் சொல்கிறார். பகவானின் திருநாமத்தை வாய்விட்டு உச்சரிக்க வேண்டும். தஸ்மை ப்ரசுரார்ப்பணம் என்று அவன் திருவடியில் புஷ்பங்களை இட்டு அர்ச்சிக்க வேண்டும். ப்ரபதன சுலபன் அவன் - ஆச்ரயிப்பவர்களுக்கு சுலபனாக இருப்பதால், அவனது திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்ய வேண்டும். இம்மூன்றும் எளிதாக செய்யக்கூடியது. இதை எப்போதும் செய்ய வேண்டும் என்கிறார்!



ஆத்ம சமர்ப்பணம் என்பதை முதுமையில் பண்ண வேண்டும் என்றில்லை. 'கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்’ என்கிறார் நம்மாழ்வார் (திவ்ய ப்ரபந்தம் 2886, திருவாய்மொழி 2.10.1). நாடித்துடிப்பு ஒழுங்காக இருக்கும் போதே, புத்தி பிரகாசமாக இருக்கும்போதே, மனது சஞ்சலப்படாத நேரத்திலேயே, இளமையிலேயே செய்ய வேண்டும். 'அவ்வாறு செய்பவன் என் பக்தன். அவனை ஒரு நாளும் கைவிட மாட்டேன்’ என்கிறார் பரமாத்மா.



பூமாதாவுக்கு ரொம்ப சந்தோஷம். மூன்று விஷயங்களையும் முடிச்சு போட்டு வைத்துக்கொண்டாள். எல்லா அவதாரங்களும் வரிசையாக நடந்தது. கிருஷ்ணாவதாரம் முடிந்து வைகுண்டத்தில் பகவான் நித்யசூரிகள் புடை சூழ உள்ளான். ஸதஸ் நடக்கிறது அங்கே. அங்கிருந்தபடி, பகவான் பூலோகத்தைப் பார்க்கிறான். பூலோகத்தில் பல அக்கிரமங்கள் நடக்கின்றன. 'பகவத் கீதையைச் சொன்னோமே! ஆனாலும் ஒன்றும் பிரயோஜனமின்றி போய்விட்டதே!’ என வருந்துகிறான். ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி மூவரும் பகவானைச் சுற்றி அமர்ந்திருக்க... மகாலட்சுமியிடம்... ''நான் கீதையைச் சொன்னது பிரயோஜனப்படவில்லை. என் வாக்கு சரியில்லை போலும்! அதனால் நீ அவதரித்து, கீதார்த்தத்தை பூலோகத்தில் சொல்லி உலகைத் திருத்த வேண்டும்'' என்கிறான்.



மகாலட்சுமிக்கு வந்ததே கோபம். ''ராமாவதாரத்தில், கிருஷ்ணாவ தாரத்தில் உங்களுடன் வந்தேன். அப்போதே பல சிரமங்கள். இப்போது தனியாகப் போகச் சொல்கிறீர்களே! இது சரியா?'' என்று கேட்டு, மறுத்தாள். ஆனால், பூமாதா உடனே ஏற்றுக்கொண்டுவிட்டாள்.



''நீங்கள் என்னைப் போகச் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன்'' என்று முந்தானையிலே போட்ட முடிச்சோடு சொல்கிறாளாம்! எப்போது போட்ட முடிச்சு அது..? வராஹ அவதாரத்திலே, வராஹ மூர்த்தியின் மூக்கின் மேலே உட்கார்ந்திருந்தபோது, தான் கேட்ட மோட்சத்துக்கான வழிக்கு, பகவான் சொன்ன மூன்று விஷயங்களுக்காகப் போட்ட மூன்று முடிச்சுகள்.



அவன் திருவடியிலே புஷ்பத்தை இட்டு அர்ச்சிக்க வேண்டும்; அவன் திருநாமத்தை உரக்கச் சொல்ல வேண்டும்; அவன் திருவடியிலே ஆத்ம சமர்ப்பணம் பண்ண வேண்டும் என 3 கட்டளைகளுக்காகப் போட்ட மூன்று முடிச்சுகள்.



''இப்போதே நீங்கள் போகச் சொன்னாலும் சித்தமாயிருக் கிறேன்'', என்றாள் பூமாதேவி. ''எங்கே போவாய்? யாரிடம் பிறப்பாய்?'' என்றார் பகவான். ''உங்களுடைய அனுக்ரஹம் உதவும்'' என்று புறப்பட்டாள் தேவி. ஆடி மாதத்தின் பூர நட்சத்திரத்தில், ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசிவனத்தில் பெரியாழ்வாரின் திருமகளாய் அவதரித்தாள், கோதா எனும் திருநாமத்துடன்! கோதா என்பதற்கு பல அர்த்தங்கள். அதில் முக்கியமானவை இரண்டு.


காம் ததாதி இதி கோதா
காம் தததே இதி கோதா

காம் என்றால் நல்ல வாக்கு. அவள் நல்ல வாக்கைக் கொடுப்பவள். அவளைத் தியானித்தால், அவளின் திவ்ய மங்கல விக்கிரகத்தை தியானித்தால் நல்ல வாக்கைக் கொடுப்பாள்.


''வாக் வை சரஸ்வதி சரஸ்வதி வை வாக் சரஸ்வதி’ என்கிறது வேதம். வாக்கு என்றால் சரஸ்வதி. அமங்கலமான வார்த்தை களைப் பேசக்கூடாது. அம்ருத வாக்கைக் கொடுக்கிறாள் கோதா. அவளும் நல்ல வாக்கை உடையவள். உத்தமமான வாக்கு உடையவள் ஆகவே, நல்ல வாக்கை நமக்கும் கொடுக்கிறாள். அப்படிப்பட்ட கோதா, திருமாலை கட்ட இரு மாலை கட்டினாள். ஒரு மாலை பாமாலை; மற்றொன்று பூமாலை. பாமாலையைப் பாடி சமர்ப்பித்தாள். பூமாலையைச் சூடி அவன் திருவடியில் சமர்ப்பித்தாள். அதனால் சூடிக்கொடுத்த நாச்சியார் ஆனாள்.



ஆண்டாளை 'பிஞ்சாய் பழுத்தாளை ஆண்டாளை’ என்கிறார் வரவரமுனிகள். சின்னப் பெண்ணான ஆண்டாளுக்கு பகவானை கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று ஆசை. அதை எப்படித் தெரிவிப்பது என்று தெரியவில்லை.



திருமாலை (எம்பெருமானை) தன்னிடத்தில் ஈடுபடச் செய்ய திருமாலைகளை (பூமாலைகளை) தூதாக அனுப்பினாள். ''என் ஆசையை எம்பெருமானிடத்தில் தெரிவித்து, அவன் அனுக்ரஹத்தைப் பெற்றுத் தா’ என்று ஆண்டாள் பிரார்த்தனை செய்த அழகே அழகு! பகவானையும் ஆண்டாள்; நம்மையும் ஆள்கிறாள் என்பதால் ஆண்டாள் என்ற திருநாமம்.



வராஹ அவதாரமே இல்லை என்றால் ஆண்டாள் அவதாரம் இல்லை. அதனால் ஆண்டாள் அவதாரத்துக்கு மூலமான அவதாரம் வராஹ அவதாரம். அதனால்தான் நம்மாழ்வார் 'ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே’ (திவ்ய ப்ரபந்தம் 2576 திருவிருத்தம் 99) என்கிறார். 'அஞ்சுகுடிக்கொரு சந்ததியாய்’ (மணவாள மாமுனிகள் அருளிச் செய்த உபதேச ரத்னமாலை) தோன்றியவள் ஆண்டாள். ஆழ்வார் கோஷ்டிக்கே கல்பலதிகையாக (கொடியாக) இருப்பதாலேயே இவள் அவதாரம் உயர்ந்தது.



சரி... வராஹ மூர்த்தியிடம் பூமாதா கேட்டதை ஆண்டாள் வெளியிட்டாளா?



திருப்பாவையின் முதல் பத்து பாசுரங்கள் 'அவன் பெயர் பாடு’ என வலியுறுத்துகிறது. 2-வது பத்து பாசுரங்கள் 'அவன் திருவடிகளில் புஷ்பங்களை இட்டு அர்ச்சனை செய்’ என்கிறது. 3-வது பத்து பாசுரங்கள் 'அவன் திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்’ என்கிறது. வராஹ மூர்த்தியிடம் கேட்ட மூன்று விஷயங்களை மூன்று, பத்து பாசுரங்களில் வெளியிட்டாள் ஆண்டாள்.



திருப்பாவை என்பது தமிழ்ப் பாசுரம் மட்டுமல்ல. இது ஒரு மஹா யக்ஞம். திருப்பாவை என்ற யக்ஞத்தால் எல்லோரும் கட்டப்பட்டுள்ளோம். இது ஒரு வைஷ்ணவாத்மகமான வேத விகிதமான யக்ஞம். நாராயணனிடத்தில் ஆத்மாவை சமர்ப்பிக்கச் சிறந்தது யக்ஞம்!



அதில், ஹவிஸை நெய்யினால் சுத்தி பண்ணி அக்னியில் சேர்க்கிறோம். ஆண்டாளும், திருப்பாவை எனும் யக்ஞத்தில், தன் உடல், பொருள், ஆவி என்கிற ஹவிஸை ஆச்சார்ய அனுக்ரஹம் (பெரியாழ்வாரின் அனுக்ரஹம்) என்ற நெய் தடவி, எம்பெருமான் வடபத்ரசாயியின் திருவடியில் சமர்ப்பிக்கிறாள்.



நாமும், நம்மை இறைப்பாதத்தில் சமர்ப்பிப்போம். மார்கழியில் திருப்பாவை பாடி, திருவருளைப் பெறுவோம்.