வெள்ளி, 17 மே, 2013

ஸ்ரீ ஆண்டாள் திருமணம்

இரண்டாவது அங்கம்                 இரண்டாவது களம்

இடம் – செண்பகத்தோப்பு            நேரம்  மாலை

       (ஓர் அழகிய தாமரைக்குளம். அலைகள் மெல்ல மெல்ல வீசுகின்றன. அதன்கரையில் கொடியினாலாய வீடொன்றுளது. அதன் நடுவே தாமரையிலைகளும் பூக்களும் விரிக்கப் பட்டுள்ளன. அதில் ஆண்டாள் சயனித்துக் கொண்டிருக்கிறாள். அருகில் சுசீலை உட்கார்ந்திருக்கின்றனள். அநுக்கிரகை குளத்திலிருந்து மலர்களைக் கொய்து ஆண்டாளுக்கு வீசி வருகின்றனள்.)

சுசீலை:—சகி! நந்தோழி ஏன் இவ்விதம் மிரள மிரள விழிக்கின்றனள்?

அநுக்கிரகை:—(உற்றுநோக்கி) சுசீலை! நமது சகி முன்னிலு மபாயநிலைக்கு வந்துவிட்டனள். பரிதியின் பிரிவாற்றாத பங்கயக்கொடி போன்று வாடிவிட்டனள். என்ன செய்வது? உண்மையை உரைக்காமல் மறைக்கின்றனள். பிடிவாதம் செய்கிறாள். ஆகார முட்கொள்ளவேயில்லை. ஆகாரம் கொண்டுவரலாமா என்று கேள்.

சுசீலை:—(அவ்விதம் செய்து பதில் கிடைக்காமல் பெருமூச்செறிந்து) அநுக்கிரகை! நமது சகி மூர்ச்சித்து விட்டனள். காரியம் பெரிதாகி விட்டது. விளையாடுவதாக நாமிதை யேன் மறைத்தோம்?

அநுக்கிரகை:- (சகியின் முகத்தை யுற்று நோக்கிப் பெருமூச்செறிகின்றனள்) இருவரும் ஒன்றும் தோன்றாமல் ஒருவரையொருவர் பார்த்து விழிக்கின்றனர்.

அநுக்கிரகை:--  (சற்று மன உறுதியுடன்) சுசீலா! பயப்படாதே! இவள் முகத்தில் ஒளி மழுங்கவேயில்லை. ஆகையால் இது மன்மதனுடைய திருவிளையாடல்தான். எதற்கும் நமக்கு ஈசுவரன் இருக்கிறான். நமதின்னல் நோய்கட்கு அவனது தீர்த்தமும் துளஸியும்தான் தக்க மருந்தாகும். அவன் தண்ணந்துழாய் இந்நானிலத்தில் என்னதான் செய்யாது? நான் தீர்த்த பாத்திரத்திற் கொணர்ந்த தீர்த்தத்தையும், துளஸியையும் இங்கே கொண்டுவா.

(சுசீலை அவ்வாறே செய்கின்றனள். தீர்த்தத்தைக் கையில் வாங்கி)

      ஏ வடபத்ரசாயின்! ஆபத்பாந்தவ! அமிழ்தினுமினிய வருள் கூரண்ணலே! பேதை யாம் படும்பாட்டை நீர் அறிகிலீரோ! அன்பர் மனம் நொந்திடில் நின் மனம் வெந்திடு மென்கின்றனரே! அத்தகைய தயை யித்தையல் விஷயத்தில் மந்தித்ததோ? இதைவிட நின் தயைக்கேற்ற கலனெங்கே யுளது? நின் பேரன்பிற்குரிய வாண்டாளை யிதோ எழுப்பித் தந்தருள வேண்டும். (தீர்த்தத்தை யாண்டாள் திருமுகத்தில் தெளித்துத் துழாய் வாடை வீசுகிறாள்)

ஆண்டாள் மெல்ல மெல்ல உணர்வுறுகின்றனள்.

சுசீலை:—சகி! அநுக்கிரகை! நம் சகிக்குத் துழாய் மாலை சூட்டு.

அநுக்கிரகை அவ்வாறே செய்கின்றனள்.

சுசீலை:—(ஆண்டாளை நோக்கி) சகி! “உண்ணலுறாமையும் உன் மெலிவும் தண்ணந் துழாய் என்னும் மாலை கொண்டு சூட்டத் தணியும்” என்று நீ அடிக்கடி கூறுபவளாயிற்றே. அநுக்கிரகை துழாய்மாலை சூட்டியும் நீயேன் தெளிந்தெங்கள் மனங் களிப்புறச் செய்யவில்லை? பரோபதேச மாத்திரமோ நின் வார்த்தை?

ஆண்டாள்:—(தளர்ந்த குரலில்) துழாய்மாலை சூட்டியிருக்கிறீர்களா?

அநுக்கிரகை:—அதையே நீ அறியவில்லையே! இந்நிலையிலும் நீ நோயின் காரணம் கூறாவிடில் நாங்கள் என்ன செய்வோம்?

சுசீலை:—அநுக்கிரகை! நீ யரங்கம் சென்றவன்று இவள்:--
பதினாறாமாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மதுவாயிற்கொண்டாற்போல் மாதவன் தன்வாயமுதம்
பொதுவாக வுண்பதனைப் புக்குநீயுண்டக்கால்
சிதையாரோ வுன்னோடு செல்வப்பெருஞ் சங்கே
என்று புலப்பத்தில் சங்கைச் சிதைந்தனள். பின்னர் நான் கேட்டதற்கு மறுமாற்றம் கூறாது மறைத்தனள். இதனால் நான் இவள் மாதவன்தன் வாயமுதம் பருகவே இப்பாடுபடுகிறாள் என்று தீர்மானித்துக் கொண்டேன். இவளநுமதியின்றி நீ திருவரங்கத்திற்குத் தூது சென்றது நல்லதாயிற்று. உனது ஊஹத்திறமை போற்றத் தக்கது.

ஆண்டாள்: (சிறிது தெளிந்த முகத்துடன்) திருவரங்கத்திற்குத் தூது சென்றனளா? ஏன்?

அநுக்கிரகை:--  ஏனோ? நீ யேன் நோயுற்றனை? இதை முதலிற் கூறு பின்னர் யான் கூறுகின்றேன்.

ஆண்டாள்:—(தனக்குள்) இனி நான் வெட்கி மறைப்பதால் பயனில்லை. தோழியரிடம் சொல்லியே தீரவேண்டும். (வெளிப்படையாக) சகிகாள்! நான் உண்மையைக் கூறிவிடுகிறேன். இனியென்னால் தாங்கவியலாது. பெண்ணின் வருத்தமறியாத கொடியகடிய திருமாலால் தளர்ந்து நான் நோவுற்றேன். அவன் தண்ணந்துழாய் கொண்டு என் நெறிமென்குழல்மேல் சூட்டினதால்தான் நான் இப்பொழுது சிறிதாவது பேசுந்திறம் பெற்றேன். நீங்கள் என்னைக் காக்கவேண்டில் அவன் தன் னடியிற் சேர்த்திடுங்கள். அவனிடமுள்ள வென் கோபமெல்லாந்தீர, பயனொன்றில்லாத விக்கொங்கைகளை அள்ளிப்பறித்தவன் மார்பில் எறிந்துவிடுகிறேன்.

                                                                 ….தொடரும்…….

வியாழன், 16 மே, 2013

ஸ்ரீ ஆண்டாள் திருமணம்

இரண்டாவது அங்கம்  ----  முதற்களம்

(அநுக்கிரகை ஓர் கையில் தீர்த்த பாத்திரமும் மற்றுமோர் கையில் துளசி புஷ்பங்களும் ஏந்தி வருகின்றனள்)

அநுக்கிரகை:- எங்கோ காலடி சப்தம் கேட்கின்றதே? யாராக இருக்கக்கூடும்? நமது தந்தையாக விருக்கலாமோ? அவர் என் சகியின் நிலையை அறிந்துகொண்டால் ஆறாத்துயரத்தில் ஆழ்ந்து விடுவாரே? என்ன செய்வது?

(இதற்குள் சுசீலை வருகிறாள்)

சுசீலை:- சகி! எனக்கு ஆண்டாளைப் பார்த்தால் மிகவும் பயமா யிருக்கிறது . இவ்வளவு பயங்கர நிலையிலும் தந்தைக்குத் தெரிவியாமல் இருப்பது பேதமைத்தனமல்லவா? ஆகையால், நான் தந்தையிடம் தெரிவித்து விட்டேன். அவர் ஆராதனம் முடிந்ததும் உத்யானம் வருவதாகக் கூறியிருக்கிறார்.

அநுக்கிரகை:- ஹூம்! இதென்ன காரியம்? இது ஜுரமா? மதனதாபந்தானே? இதற்கேன் பயப்படவேண்டும்? தந்தையிடம் கூறியதை யவளுக்கு நீ தெரிவிக்க வேண்டாம். ஏற்கனவே அவள் உண்மையைக் கூறமாட்டாது மறைக்கின்றனள். தந்தை வருமுன்பே அவளிடமிருந்து உண்மையை யறிந்து, நான் தூது சென்றது முதலியவற்றைக் கூறி அவளை சமாதானப்படுத்தி விடுவோம்.

சுசீலை:- இனியவள் உண்மையைக் கூறாதிருக்க முடியாது. (இருவரும் செல்கின்றனர்)

இரண்டாவது அங்கம் முதற்களம் முற்றிற்று.

திங்கள், 13 மே, 2013

Saranagati Deepikai tele-upanyasam dtd 13-05-2013

Tele-upanyasam on “Saranagati deepikai” by Natteri Sri Rajagopalachariyar swami held on 13-05-2013 is available for download at

http://www.mediafire.com/?m6s2ezq26t6796e

It can be listened to online by playing here also.