அங்கம் 1
களம் 4
(கைகேயி வரம் கேட்கத் தவிக்கும் தசரதன்)
கைகேயி:-- நல்லது. (ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து) ஏ தேவர்களே! திக்குப் பாலகர்களே! சூரிய சந்திரர்களே! நவக்கிரகங்களே! நீங்கள் அனைவரும் இதற்குச் சாக்ஷி. மிக்க உண்மையும் உறுதியும் தருமமுடைய அயோத்தி அரசர் நான் கேட்டதை இப்பொழுதே தருவதாகத் தம் மகன் இராமன்மீது ஆணையிட்டுக் கொடுத்திருக்கிறார். (தசரதரைப் பார்த்து) அயோத்திக்கரசே! முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஒரு யுத்தம் நடந்ததல்லவா? அக்காலத்தில் அசுரர்கள் தங்கள் உயிர் ஒன்றைவிட்டுத் தங்கள் பலமுழுவதும் வாங்கிவிட்டார்களன்றோ? அப்பொழுது நான் தங்கள் அருகிலிருந்து இரவும் பகலும் கண்ணிமையாமல் தங்களைப் பாதுகாத்தேனன்றோ? அந்த உபகாரத்திற்கு ஈடாகத் தாங்கள் இரண்டு வரங்கள் கொடுத்தீர்களல்லவா? அவைகள் இரண்டையும் இப்பொழுதே கொடுங்கள்.
தசரதர்:-- என் இஷ்டநாயகீ! இதுதானா ஒரு பெரிய காரியம். அவ்வரங்களை நீ எப்பொழுது கேட்டபோதிலும் கொடுத்திருப்பேனே. உன் விருப்பப்படியே அவ்வரங்கள் இரண்டையுங்கூறு.
கைகேயி:-- அவ்வரங்களெவை யென்றால், கேட்பீர்களாக: முதலாவது இராமனுடைய பட்டாபி ஷேகத்திற்காக எவ்வெப் பொருள்கள் சித்தமாயிருக்கின்றனவோ, அவைகளைக் கொண்டே குறித்த முகூர்த்தத்தில் பரதனுக்குப் பட்டாபிஷேகமாக வேண்டும். இரண்டாவது, பரதன் முடிசூடுவதற்கு முன்னமேயே, இராமன், மரவுரி உடுத்து, சடைமுடி தரித்து, வனஞ்சென்று முனிவன்போல் பதினான்கு வருஷம் வசித்தல் வேண்டும்.
தசரதர்:-- (கண்ணைமூடித் தலையிற் கைவைத்துச் சிறிது நேரம் சிந்தாக்கிரந்தராயிருந்து, பிறகு தீனஸ்வரத்துடன் தமக்குத்தாமே) இது சித்தப்பிரமையா அல்லது முற்பிறப்பில் அநுபவித்த பொருள்களின் பாவனையா அல்லது உண்மையில் என் மனத்திற்கு வந்திருக்கும் உபத்திரவமா? (கண்விழித்துச் சுற்றிலும் பார்த்துவிட்டுப் பிறகு எதிரேயிருக்கும் கைகேயியைப் பார்த்து) இதோ என் எதிரிலிருக்கும் நீ யார்? பேயா அல்லது பெண்ணா? நான் காணுவது கனவா அல்லது நனவா? நான் இருப்பது எங்கே? அந்தப்புரத்திலா அல்லது யமபுரத்திலா? நான் யார்? அயோத்திக்குக் கர்த்தனா அல்லது அறிவிழந்த பித்தனா? ஏ பெண்ணுருவாய் நிற்கும் கூற்றமே, கூறு.
கைகேயி:-- இவை ஒன்றும் விளங்கவில்லையா? தாங்கள் இருப்பது அந்தப்புரந்தான்; தாங்கள் அயோத்திக்குக் கர்த்தர்தாம்; தங்கள் எதிரில் இருக்கும் நான், தாங்கள் சம்பராசுரனோடு யுத்தஞ்செய்து சோர்ந்த காலத்தில் உடனிருந்து உதவிபுரிந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிய தங்கள் தர்மபத்தினி கைகேயி என்பவள். இப்பொழுது என்னைப் பார்த்தால் பேயாகவும் கூற்றமாகவும் தோன்றுகிறது போலிருக்கிறது. அப்பொழுது செய்த உபகாரம் ஒன்றும் ஞாபகத்திற்கு வரவில்லையோ?
தசரதர்:-- உபகாரம்! எதற்காகவடி நீ செய்த உபகாரம்? உன் முகத்தில் பூசிக்கொள்ளும் மஞ்சளுக்காகவல்லவோ? நீ நெற்றியிலிடுந் திலகத்திற்காக வல்லவோ? நீ கண்டத்தில் தரித்துள்ள மங்கிலியத்திற்காக வல்லவோ? நீ உடுத்தியுள்ள பட்டாடைக்கல்லவோ?
கைகேயி:-- உண்மைதான். காரியம் முடிந்தபிறகு எப்படி வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். உயிரைக் காப்பாற்றியதையும் மறந்து இப்படி உரையாடுவதுதான் இராஜநீதி போலும்.
தசரதர்: --- அடி நீலி! நீயுமா நீதியென்ற வார்த்தையை உச்சரிக்கிறாய்? அன்று நீ என் உயிரைக் காப்பாற்றியது இன்று வாங்கிக் கொள்வதற்கோ?
கைகேயி:-- தங்கள் உயிரை நான் கேட்கவில்லையே! தாங்களே வலிய எனக்குக் கொடுத்த வரங்களைக் கேட்டேன். வேறொன்றும் அடாதது கேட்கவில்லை.
தசரதர்:-- ஆ! (மூர்ச்சித்துக் கீழே விழுகிறார். சற்று நேரம் அசைவற்றிருக்கிறார். பின்பு பெருமூச்சு விடுகிறார். புரளுகிறார். எழுந்திருக்கிறார். தள்ளாடி விழுகிறார். மூச்சின்றி அடங்குகிறார். பிறகு தலையை உயர்த்திக் கைகேயியைப் பார்க்கிறார். பல்லைக் கடிக்கிறார். திரும்பவும் படுத்துத் தலையை உயர்த்திக் கைகேயியைப் பார்த்து) அடி பாவீ! உன்னை இப்பொழுதே வதைப்பேன். பெண்பழியாமே என்றஞ்சுகிறேனடி கொடியவளே! என் நெஞ்சம் கலங்குகிறதடி! என் ஆவி துடிக்கிறதடி! கொடுமையிலுங் கொடியவளே! இராமன் உனக்கென்ன செய்தான்? அவன் உத்தம குணங்களைக் கண்டு உயிருள்ள ஒவ்வொரு பிராணியும் அவனிடத்து அன்பு பாராட்டுகின்றனவே, உனக்கு மட்டும் அவன் பொல்லாதவனாகப் போய்விட்டானா? அடி பாதகி, இராமனை, என் உயிரைக், காட்டுக்கனுப்பென்று சிறிதும் வாய்கூசாமற் சொல்லுகின்றனையே! இதைச்சொல்ல நீ சம்மதித்தாலும் உன் நா சம்மதித்ததா? அடி காதகி! நஞ்சுடைய நாகத்தைப் பாலூட்டிவளர்ப்பதுபோல உன்னை இவ்வரண்மனையில் வைத்து வளர்த்தேனடி! பழியஞ்சாப்பாவி! நான் சொன்ன உறுதியை மறக்கவில்லையடி. வரங்களைப் பெற்றுனக் கென்ன பலன்?
கொள்ளா னின்சே யிவ்வர சன்னான் கொண்டாலும்
நள்ளா திந்த நானிலம் ஞாலந் தனிலென்றும்
உள்ளா ரெல்லா மோதவு வக்கும் புகழ்கொள்ளாய்
எள்ளா நிற்கும் வன்பழி கொண்டு பயனென்ன.
பாவியாகிய உன் வயிற்றிற் பிறந்த போதிலும் பரதன் நீதிநெறி நிற்பவன். நீ அவனுக்கு இந்த இராச்சியத்தைக் கொடுத்தபோதிலும் அவன் இதைப்பெறச் சம்மதியான். ஒருகால் கால வேறுபாட்டால் அவன் கொள்ளச் சம்மதித்தாலும் உலகம் அதை ஒப்பாது. அடி கேகயன் மகளே! உனக்கும் அதில் ஒரு புகழுமில்லை. எல்லோரும் உன்னைப் பழி தூற்றுவார். அவ்விதமான பழிக்காளாவதால் உனக்கென்ன பலன்? மேலும்,
வானோர் கொள்ளார் மண்ணவ ருய்யா ரினிமற்றென்
ஏனோர் செய்கை யாரொடு நீயிவ் வரசாள்வாய்
யானே சொல்லக் கொள்ளவி சைந்தான் முறையாலே
தானே நல்கு முன்மக னுக்குந் தரைதானே.
உன்னுடைய கருத்தைத் தேவரும் ஒப்பார், மனிதரும் ஒப்பார். வேறு யாரோடு நீ இந்த அரசை ஆளப்போகிறாய்? வேண்டாம், இந்த எண்ணத்தை விட்டுவிடு. இராமன் உத்தமன்; இராஜ நீதிகளையெல்லாம் முற்றும் அறிந்தவன்; இளவரசனாயிருந்து நான் அரசு புரியும் முறைகளை நுட்பமாகக் கவனித்து வந்திருக்கிறான்; ஜனங்கள் மனத்தைக் கவர்ந்திருக்கின்றான். அவனுக்குள்ள யோக்கியதைகளையும் பாத்தியதைகளையும் ஆலோசித்து நானே அவனை வலிய அழைத்துப் பட்டாபிஷேகஞ் செய்து கொள்ளும்படி கூறினேன். அதனாலும், தான் மூத்த குமாரனாயிருப்பதை எண்ணியுமே அவன் பட்டாபிஷேகத்துக்கு ஒப்புக் கொண்டான். இல்லாவிட்டால் அவன் ஒருபொழுதும் இவ்விராச்சிய நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்திரான். இப்படி நானே கொடுத்த அரசை நானே வாங்கி விடுவது நன்றல்ல. உன் மகனுக்கு அரசு வேண்டுமென்றால் இராமனே கொடுத்துவிடுவான். அடி, இராமன் எனக்குயிரடி.
கண்ணே வேண்டு மென்னினு மீயக் கடவேனென்
உண்ணே ராவி வேண்டினு மின்றே யுனதன்றோ
பெண்ணே வண்மைக் கைகயன் மானே பெறுவாயேல்
மண்ணே கொண்ணீ மற்றைய தொன்று மறவின்றே
அடி, வண்மை நிறைந்த கேகய மன்னருக்கு மகளெனப் பிறந்த மாபாவீ! என் கண்ணைக் கேளடி தருகிறேன். என் உள்ளே நின்று உலவுகின்ற உயிரைக் கேள், இன்றே தட்டாமல் தருகின்றேன். இந்த உலகத்தை உன் மகனாள வேண்டுமென்பது உன் விருப்பமானால் அங்ஙனமே பெற்றுக்கொள். உன் உள்ளத்தில் கொண்டிருக்கின்றாயே மற்றொரு கருத்து, அதை மட்டும் விட்டுவிடடி. அதை நினைத்தாலும் என் நெஞ்சம் கலங்குகிறது! அடி பாதகி! அடி துஷ்டை! இராமனை யாரென்று நினைத்தாய்? இவ்வுலகிற்கே ஒரு நேத்திரமடி! சற்குணபாத்திரமடி! அவன் வசிக்குமிடமெல்லாம் வைகுண்ட க்ஷேத்திரமடி! பரதன் அவனுக்கு எம்மாத்திரமடி? அவன் சிவதனுசுவை யொடித்த சிங்கனடி! சீதாலிங்கனடி! அவன்மீது உனக்கு வந்த வைரமென்ன? வேண்டாம், அவனைக் காட்டுக்கனுப்பும் எண்ணத்தை விட்டுவிடு.
கைகேயி:- வாங்கின கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது துக்கமுண்டாவது சகஜந்தான். அதற்கென்ன செய்கிறது? நீங்கள் உண்மையே உரைப்பவர்கள் என்றும் உறுதியான விரதத்தையுடையவர்கள் என்றுஞ் சொல்லிக் கொள்ளுகிறீர்கள். கொடுத்த வரத்தைக் கேட்டேன்; தருவதாக வாக்களித்தீர்கள். இப்பொழுது அவ்வாக்கை நிறைவேற்றுவதற்குப் பின்வாங்குவதும் அழகோ?
தசரதர்:- அடி இரக்கமற்றவளே!
வாய்தந் தேனென் றேனினி யானோ வதுமாற்றேன்
நோய்தந் தென்னை நோவன செய்து நுவலாதே
தாய்தந் தென்னத் தன்னையி ரந்தாற் றழல்வெங்கட்
பேய்தந் தீயு நீயிது தந்தாற் பிழையாமோ?
உனக்கு வாக்குக் கொடுத்ததுண்மை, அதை மறுக்கவில்லை. வீணாய் என் மனம் நோவத்தக்க மொழிகளைக் கூறி என் மனத்தைப் புண்படுத்தாதே. ‘தாயே, தந்தையே’ என்று கெஞ்சினால் கொடிய பேயுமிரங்குமே! என் வேண்டுகோளுக்கு நீ சிறிது இரங்கலாகாதா? இராமன்மேல் ஏன் உனக்கிந்த விரோதம்? அவன் உனக்குச் செய்ததென்ன அபராதம்? ஏனடி தேடிக்கொள்ளுகிறாய் வீண் அபவாதம்? அடி கைகேயி! சற்றே மனமிரங்கு. நான் உனக்கு இரண்டு வரங்கள் கொடுத்தேனல்லவா? நீ எனக்கு ஒரே ஒரு வரம் கொடு.
கைகேயி:- வெகு நன்றாயிருக்கிறதே! இரண்டு வரங்கள் கொடுத்தீர்கள் என்பது உண்மை. அவை இன்னும் நிறைவேறவில்லை. அதற்குள் என்னிடம் ஒரு வரங்கேட்டுக் கொடுத்த வரங்களை மாற்றி விடவா? இப்படி ஏய்க்கும் வித்தைகளை எப்பொழுது கற்றீர்கள்? தாங்களே வரங்களைக் கொடுத்து விட்டீர்கள். இனி அவைகளைத் தாங்களே மாற்றுவதென்றால் அப்புறம் சத்தியம் யாரிடம் நிலை பெறும்?
தசரதர்:- அடி கருணையற்றவளே! பாவம் நிறைந்தவளே! பழிக்கஞ்சாதவளே! அற்பமதி படைத்தவளே!
நின்மக னாள்வான் நீயினி தாள்வாய் நிலமெல்லாம்
உன்வய மாமே யாளுதி தந்தேன் உரைகுன்றேன்
என்மக னென்கண் ணென்னுயி ரெல்லா வுயிர்கட்கும்
நன்மக னிந்த நாடிற வாமை நயவாயோ?
(இன்னும் ஐந்தாறு வாரங்களுக்கு ஆறாய்ப் பெருகப் போகும் தசரதன் கதறல்தான்)