3. நம்மாழ்வார் துதி.
விடையனங்கை யிரவமல விழியருளால் அறருளும்
விமலன் வெள்வேற்
படையனங்கை யிரவமலர் பார்வைநடை வாய்ப்பதுமப்
பாவை கேள்வன்
அடையனங்கை யிரவமல னகற்றரங்கன் அடியிணைமே
லறையும் பாடற்(கு)
உடையநங்கை யிரவமல முறவுயிர்க்கும் தனிக்கதிர்எற்(கு)
உதவும் மாதோ
விடையன் – இடப வாகனச் சிவன், அங்கை இரவ – கையிலேற்கும் பிச்சைத் தொழிலை, அமலவிழி அருளால் –குற்றமற்ற கண்ணருளால், அற- நீங்குமாறு, அருளும் –அனுக்கிரகிக்கும், விமலன் – இறைவன், வெள்வேல் படை – ஒளி செய் வேல் ஆயுதம், அனம் – அனப் பறவை, கையிரவமலர் – ஆம்பல் மலர், (முறையே), பார்வை நடை வாய் – விழி நடை வாய், பதுமப்பாவை – தாமரைச் செல்வி (திருமகள்)யின், கேள்வன் – கணவன், அடையனங்கு – மன்மதனால் அடையும், அயிர் – ஐயம், அவம் – துன்பம், மலன் – பாவங்கள், அகற்று – நீக்கும், அரங்கன் – ஸ்ரீரங்கநாதன், அடியிணை மேல் – திருவடிகளின் மீது, அறையும் – சொல்லும், பாடற்கு – பாடலாம் தத்தை விடு தூதுக்கு, உடைய நங்கை – காரி மாறன் மனைவி, இரவு – பிறவி இருள், அமலம் உற – மாசற்ற தன்மை உற, உயிர்க்கும் – ஜனித்த, தனிக் கதிர் – ஒப்பற்ற சோதி, எற்கு – எளியேனுக்கு, உதவும்—உதவி புரியும், மாதோ – அசை.
4. குரு வீரராகவர் துதி.
மானவ னத்தத்தை யாயுதம் ஏந்திய மாயப்பிரான்
தீனவ னத்தத்தை மாற்றரங் கேசன் திருவடிமேற்
கானவ னத்தத்தை சொற்றரு தூதுக்குக் காப்புரைக்கில்
வானவ னத்தத்தை மாசிவந் தான்கழல் மாமலரே.
மானவன் – பெருமைக்கு உரியவன், அத்தத்து – கரத்தில், ஐ ஆயுதம் ஏந்திய – பஞ்சாயுதங்கள் தரித்த, (அழகிய சக்கரம் ஏந்திய எனலும் ஆம்) மாயப் பிரான் – திருமால், தீனவன் – கஜேந்திரனாம் எளியவன், அத்தத்தை – துன்பத்தை, மாற்று – நீக்க, அரங்கேசன் –திருவரங்கநாத இறைவன், திருவடி மேல் – சரணங்களில், கானவன் – இசை சேர் பொழிலில் உள்ள, அத்தத்தை – அக்கினி, சொல் தரு – உரையாகப் பாடும், தூதுக்கு – தூது ப்ரபந்தத்துக்கு, உரைக்கில் –கூறில், வானவன் – சூரியன், தத்து – விரும்பும், அத்தை—அந்த மகர மாதத்தில், மாசி வந்தான் – மக நட்சத்திரத்தில் உதித்தவன், கழல் – திருவடிகளாம், மாமலரே – தாமரை மலர்களே, காப்பு – இரட்சையாகும். (நூலாசிரியரின் குரு கோடி கன்னிகாதானம் வீரராகவ சுவாமி தை மாதம் மக நாளில் தோன்றியவர் போலும்)
தொடரும்…..,,,