வியாழன், 2 பிப்ரவரி, 2023

வால்மீகி ராமாயணம் – உத்தர காண்டம் 28-

நாற்பத்து நாலாவது ஸர்க்கம்.

[அகஸ்த்யர் ராமனிடம், ராவணன் ஸீதையை அபஹரித்ததற்குக் காரணம் கூறுதல்]

        இப்படி வாலி சுக்ரீவர்களின் உத்பத்தியைக் கேட்ட ஸ்ரீராமன் மிகவும் சந்தோஷமடைந்தார். மறுபடியும் அகஸ்திய முனிவர், ஸ்ரீராமளைப் பார்த்து ஶ்ரீராம! மற்றுமொரு முந்தைய விருந்தாத்தந்தைக் கூறுகிறேன். அதன் மூலமாக ஸீதையை ராவணன் என் அபஹரித்துச் சென்றான் என்பது விளங்கும். இதை ஸாவதானத்துடன் கேட்கவும் எனக் கூறி. சொல்ல ஆரம்பித்தார்.— ஸ்ரீராமபத்ர! முன்பு கிருதயுகத்தில் பிரம்மதேவனின் புத்திரரான சநத்குமாரர். சூரியன் போலப் பிரகாசித்துக் கொண்டு வீற்றிருப்பது கண்டு, ராவணன் மிகவும் வினயத்துடன் அவரை வணங்கி வினவலாயினன் "ஹே! தபோதனரே! இவ்வுலகில் உத்தம புருஷன் யாவன்? தேவர்களனைவரிலும் அதிகமான ஆற்றலுடையவன் யாவன்? யாரைத் துணையாகக் கொண்டு, தேவர்கள் போர் செய்து பூமியில் எதிரிகளை வெல்லுகின்றனர்? எவனைக் குறித்து வேள்வி செய்கின்றனர்? யோகிகள் எவனை உள்ளத்திற்கொண்டு நித்யமாகத் தியானம் செய்கின்றனர்? இவற்றை எனக்கு அருள் கூர்ந்து உரைப்பீராக" என்று,

        இதைக்கேட்ட அவர், ராவணனுடைய உள்ளத்திலுள்ளதை யோகத்ருஷ்டியினால் அறிந்தவராகப் பின்வருமாறு கூறினார். “ஹே ராவண எவன் இவ்வுலகமனைத்தையும், படைத்துக் கெடுத்துக் காத்து வருகிறானோ, எவனுடைய உத்பத்தி யாராலுமறியப் படாமலுள்ளதோ. எவனை தேவாஸுர கணங்கள் நித்யமாக வணங்கி வழிபடுகின்றனவோ, அவனே, விஷ்ணு, ஹரி, நாராயணன் எனப்படுபவன். புராணம், வேதம், பாஞ்சராத்ரம் முதலான சாஸ்திரங்கள் அவனையே கூறுகின்றன. அவனுடைய நாபீகமலத்திலிருந்து உண்டான பிரம்மதேவன், சராசரங்களுடன் கூடின இவ்வுலகினைப் படைத்தான். ஸகல சாஸ்திரங்களாலும் புகழப்படும் அந்த நாராயணனையே யோகிகள் எப்பொழுதும் த்யானிக்கின்றனர். தைத்யர்கள் தானவர்கள் இராக்கதர் முதலான தேவ சத்ருக்கள் அனைவரையும் அவனே, போர்க்களத்தில் ஜயங்கொள்பவன்'' என்று.

        இவ்வாறு மஹரிஷி சொல்லக் கேட்ட ராவணன் மறுபடியும் அவரை வணங்கி, "ஸ்வாமின்! போர்க்களத்தில், மரணமடையும் தைத்யர், தானவர்-அரக்கர் முதலியோர் என்ன கதியையடைகின்றனர்? அப்படி விஷ்ணுவினால் வதையுண்டவர் யாவர்?" என வினவினான் அதற்கவர். ராவணனை நோக்கி, 'ராக்ஷஸேச்வர! தேவதைகள் கையினால் வதையுண்டவர்கள் எப்பொழுதும் தேவலோகம் செல்லுகின்றனர். மீண்டுமவர்கள் அவ்வுலகத்தினின்றும் நழுவிப் பூலோகத்தில் வந்து பிறக்கின்றனர். அவர்கள் அனைவரும் பூர்வஜன்மத்தின் புண்ய பாவங்களுக்குக் கேற்றபடி பிறத்தும் இறந்தும், இன்பமும் து்பமும் அனுபவிக்கின்றனர் ஆனால் சக்ரபாணியான விஷ்ணுதேவனால், வதையுண்ட வீரர்களோ, அங்ஙனமில்லாமல், அக்கடவுளது வீடான, அந்தமில் பேரின்பமான மோக்ஷ ஸாம்ராஜ்யத்தை அடைகின்றனர். ஆகவே, அந்தப் பரம புருஷனது கோபமும் அவர்களுக்குக் கருணையேயாகின்றது” என உரைத்தார்.

        இதுகேட்ட அரக்கர் தலைவனான ராவணன் மிக்க மகிழ்ச்சியும் வியப்புமடைந்தவனாக, “யான் போர்க்களத்தில் அந்த நாராயணனை எதிர்த்து நிற்கும் வகை யாது?” என விசாரங் கொள்ளலானான்.

       

நாற்பத்தைந்தாவது ஸர்கம்  

[ஸ்ரீமந் நாராயணனின் கைகளால் வதத்தை விரும்பும் ராவணனுடைய மனோபாவத்தை யறிந்த ஸநத்குமாரர், நாராயணனே ராமனாகப் பூமியில் அவதரிக்கப் போவதைக் கூறுவது ]

        இப்படிச் சிந்தனையிலாழ்ந்த ராவணனைப் பார்த்து ஸநத்குமாரர், “ராவண! உனது எண்ணம் போல், நீ நாராயணனோடு போர் புரிவாய், அதற்கான சந்தர்ப்பம் உண்டாகும்" என்றார். அதைக் கேட்ட ராவணன் “ஸ்வாமின்! அந்த ஸந்தர்ப்பம் எப்பொழுது உண்டாகும்? எத்தனை காலம் அதற்காக தான் காத்திருக்க வேண்டும்! என்றும், அந்த நாராயணனுடைய லக்ஷணத்தையும் கூறவேண்டும். எனவும் வேண்டினன். அதற்கு அம்முனிவர் அந்த நாராயணன் எங்குமுளன், ஸூக்ஷ்மகுபி. கண்களுக்குப் புலப்படாதவன், ஆதி மத்ய அந்த ரஹிதன், அவனால் இவ்வுலகமனைத்தும் வியாபிக்கப்பட்டுள்ளது. அவனே பிரணவ ஸ்வரூபி, இவ்வுலக மனைத்தையும் தரிப்பவன்; அந்தப் பரமபுருஷனே. ஐந்து பூதங்களாய். இரண்டு சுடராய், அருவாகி, நாகத்தணையனாய் நடுக் கடலுள் உறங்குவான் போல் யோகநித்திரை புரிபவன், சகல உலகங்களையும், படைத்துக் கெடுத்துக் காத்துழலும் காரியத்தைத் தனக்கு ஒரு லீலையாக உடையவன். ஹே தசானன! நீலோத்பவத்தின் இதழ் போன்ற நீல நிறமான திருமேனியும் தாமரை மலரினது இதழ் போன்ற சிவந்த பீதக வாடையும் உடையவனாகி, மாரி காலத்து மின்னலோடு கூடின கருமுகிலென விளங்குகின்றனன். தாமரைக் கண்ணனான அவனது திருமார்பில், ஸ்ரீவத்ஸம் என்னும் மறு விளங்க, அவனது கருமுகில் போன்ற திருமேனியில், நீருண்ட மேகத்தினிடையே தோன்றும் மின்னற் கொடியென வெற்றி வடிவமான திருமகள் என்றும் இணை பிரியாது வீற்றிருக்கின்றனள்.

        அம்மஹா புருஷனை. தேவர்களேனும் அஸுரர்களேனும், பன்னகர்களேனும் காணும் திறமுடையவரல்லர். எவர்களிடத்தில் அவன் அருள் புரிகின்றனனோ. அவர்களே அவனைக் காணவல்லவர்கள். தன்னுடையப் பிரயத்தினத்தினால் எவரும் அவனைக் காண முடியாது. ராவண! இத்தகைய பரமபுருஷனை எங்ஙனம் உன்னால் காண முடியும்? ஆயினும் நீ அவனைக் காண விரும்புவாயேயாயின். அதற்கு யானொன்று சொல்லுகிறேன். கிருதயுகம் கழிந்த பின்னர். திரேதா யுகத்தின் துவக்கத்தில், ஸ்ரீமஹாவிஷ்ணு, இக்ஷ்வாகு வம்சத்தில் தசரத குமாரனாக, ராமனாக அவதரிப்பான். அக்காலத்தில், ஸ்ரீமகாலக்ஷ்மியே ஸீதாதேவி என்ற பெயருடன், ஜனக மகாராஜனுக்குப் புத்ரியாகப் பூமியினின்று, உத்பவித்து, அவ்விராமனுக்கு தர்ம பத்னியாவாள். அந்த ராமன் பித்ருவாக்ய பரிபாலனத்தின் பொருட்டுத் தன் மனைவியுடனும் தம்பியுடனும் தண்ட காரண்யத்திற்குச் சென்று அவ்வனம் முழுதும் ஸஞ்சரிக்கப் போகிருன். அச்சமயம் நீ அவனைக் காண்பாய்' என்று கூறினார்.

        “ஸ்ரீராம! இவ்வாறு ஸநத்குமாரர் மொழிந்ததைக் கேட்டு ராவணன், அம்முனிவரிடம், விடைபெற்று, அவர் கூறிய வார்த்தைகளை ஓயாது சிந்தனை செய்து கொண்டு மனம் மகிழ்ந்து, உன்னுடன் பகை கொண்டு போர் புரிய விருப்பமுற்று ஸீதையை அபஹரித்துச் சென்றனன்" என்று அகத்தியர் கூறினார்.

        இந்த விருத்தாந்தத்தைக் கேட்ட ஸ்ரீராமன், ஆச்சரியத்தினால் மலர்ந்த கண்களையுடைய வராகித் தலையை அசைத்து மகிழ்ந்தவராகி, மறுபடியும் அகஸ்த்ய முனிவரைப் பார்த்து, மேலும் பழைய விருத்தாந்தங்களை உரைத்திட வேண்டுமெனப் பிரார்த்தித்தார்.

புதன், 1 பிப்ரவரி, 2023

வால்மீகி ராமாயணம்–உத்தர காண்டம் 27

நாற்பத்து மூன்றாவது ஸர்க்கம்

(அகஸ்த்யர் கூறிய வாலி ஸுக்ரீவ ஜனனம்.]     

                அப்பொழுது அந்த ஸபையில், ஸ்ரீராமச்சந்திரன் அகஸ்திய முனிவரைப் பார்த்து, "ரிஷிபுங்கவ! வாலி ஸுக்ரீவர்களின் பிதா! 'ரிக்ஷரஜஸ்' என்று கூறினீர்கள். இவர்களின் தாய் யார் என்பதைக் கூறவில்லையே. அவளின் பெயரையும்-அறிய விரும்புகிறேன். கிருபையுடன் கூற வேண்டும் என்று பிரார்த்தித்தார்.

        இப்படி ஸ்ரீராமச்சந்திரனால் கேட்கப்பட்ட அகஸ்திய முனிவர் கூறியதாவது:- “ஸ்ரீராம பத்ர! முன்பொரு ஸமயம், திரிலோக ஸஞ்சார சீலரான நாரதர் என்னுடைய ஆச்ரமத்திற்கு வந்தார். அவரை நான் முறைப்படி உபசரித்து வார்த்தையாடிக் கொண்டிருந்தபொழுது, வாலி, சுக்ரீவர்களின் பிறப்பைப் பற்றி நான் கேட்க அவர் கூறியதை நான் உனக்குக் கூறுகிறேன். ஸாவதானத்துடன் கேட்கவும்       ஸுவர்ணமயமானது மஹாமேரு பர்வதம். அதன் மத்யமமான சிகரமானது ஸகல தேவதைகளாலும் விரும்பி வஸிக்கப்படுவது மத்தியில் நூறுயோஜனை விஸ்தீர்ணமுடையது 'பிரம்மஸபா' என்ற இடம். அதில் எப்பொழுதும் பிரம்மா வஸித்து வருகிறார். அவர், ஒரு ஸமயம் ''யோகம்' செய்துகொண்டிருந்தபொழுது அவரது கண்களில் நீர்த்துளி ததும்பியது. அதை அவர் கையினால் எடுத்துக் கீழே எறிந்தார். அந்த நீர்த்துளி ஒரு வானரமாக மாறியது. பெயர் ரிக்ஷரஜஸ். பிரம்மதேவர் அவனைக் கண்டு இனிய மொழிகள் மொழிந்து, "ஹே வானர! இந்த மலையைப் பார். இந்த அழகிய மலையில் தேவர்களும் ரிஷிகளும் வஸிக்கின்றனர். ஆகவே நீயும் இந்த மலையில் கனிகளையும் கிழங்குகளையும் உண்டு, சில காலம் என் அருகிலேயே வஸித்து வா, பிறகு உனக்கு நன்மை உண்டாகும் என்று அருளினார். இதைக் கேட்ட வானரன் அப்படியே ஆகட்டும் எனக் கூறி, மகிழ்ந்து வஸித்து வந்தான். பகலெல்லாம் மலையில் ஸஞ்சரித்து கனிகள், தேன் இவற்றைச் சாப்பிட்டு, அஸ்தமன ஸமயத்தில் புஷ்பங்களையும் கனிவர்க்கங்களையும் எடுத்துக்கொண்டு, பிரம்மதேவனை அணுகி நமஸ்கரித்துப் பூசித்து வந்தான். இப்படியாக வெகுகாலம் சென்றது.

        ஒரு ஸமயம் இந்த ரிக்ஷரஜஸ் என்ற வானரன், நடுப்பகலில் தாகத்தினால் பீடிக்கப்பட்டவனாக ஒரு மடுவின் கரையை அடைந்தான். அதனுள் தனது பிரதிபிம்பத்தைக் கண்ட வானரன், சிறிய அலைகளால் தனது பிம்ப உருவம் சற்றே வளைந்து அசைவதைப் பார்த்து, நீரினுள்ளே வேறொருவன் நின்றுகொண்டு தன்னைப் பரிஹஸிப்பதாக நினைத்தான். அதனால் கோபம் கொண்ட அவன் சடக்கென்று தண்ணீரில் பாய்ந்து அவனை தண்டிக்க நினைத்தான் தண்ணீரில் குதித்தான். அங்கு ஒன்றும் இல்லாமையால் மறுபடி கரையேறினான். அப்பொழுது அவனது ஆண் உருவம் மாறிப் பெண்ணினுடைய தாயிற்று. காண்போர் மனதை மயக்க வல்ல அழகான ரூபமும் ஸௌந்தரியமும் மன்மதனுடைய கணை போன்ற புருவமும், கறுத்த குழலும், புன்னகை வாயமைந்த வதனமும் விம்மி வீங்கிய கொங்கைகளும் அமைந்த புதுமையானதோர் பொற்கொடியென அந்தப் பெண்மணி மடுவின் கரையிலே நின்றாள். மேலும், அவள் தாமரைமலர் மேல் அமர்ந்திராத லக்ஷ்மி போலவும், களங்கமற்ற தெள்ளிய நிலவு போன்றவளுமாக மூவுலகத்தவரையும் மயங்கச் செய்து கொண்டு நின்றாள்.

        அந்த வேளையில், பிரம்மதேவனைப் பூஜித்து வணங்கிய தேவேந்திரன் அவ்வழியாக வந்தவன் இந்த ஸ்த்ரீயைக் கண்டான். அதே ஸமயத்தில் சூரியனும் அங்கு வந்தான். அவனும் இந்த அணங்கைக் கண்டான். இருவரும் இவளுடைய அழகிய உருவத்தைக் கண்டு, காமனின் கணைக்கு இலக்காயினர். உடனே இந்திரனது வீரியம் ஸ்கலிதமாக (வெளிப்பட) அதனை அவன் அவளது தலையில் விழுமாறு செய்தான். அது அவ்வாறு விழாமல் வாலிலே விழுந்தது. தேவர்களுடைய வீரியம் ஒருபொழுதும் வீணாவதில்லை யாதலால், உடனே அஃது, அதிக பலசாலியான ஒரு வானரமாக மாறியது. வாலிலிருந்து உண்டான காரணத்தினால் அந்த வானரனுக்கு. 'வாலி' என்றே பெயர் வழங்கலாகியது. சூரியனும் அவ்வாறே அநங்கனுக்கு வசமாகித் தனது வீரியத்தை அத்தப் பெண்மானின் கழுத்தில் வீழ்த்தினான். க்ரீவை என்கிற கழுத்தில் வீழ்ந்த அந்த வீரியம் ‘ஸுக்ரீவன்' எனப் பெயர் பெற்ற வானரமாயிற்று. பிறகு தேவேந்திரன் ஒரு காஞ்சன (பொன்) மாலையைத் தனது குமாரனான வாலிக்குப் பரிசாக அளித்துவிட்டுத் தேவலோகம் சென்றான். சூரியன் தனது குமாரன், வாயுகுமாரனிடம் சேருவானென உணர்ந்து, தன் காரியத்திலே கண்ணுற்றவனாகி, விண்ணிடையே சென்றான்.

        ஸ்ரீராமசந்திர! அன்றிரவு கழிந்து மறுநாள் காலையில், சூரியன் உதித்தவளவில், அந்த வனிதை மறுபடி வானரமே ஆனாள். ரிக்ஷரஜஸ் என்ற அவ்வானரன்,  தன்னருகே நின்ற காமரூபிகளான இரண்டு குமாரர்களையும், கண்டு களிப்படைந்தவனாகி, அவ்விடத்திலுள்ள அம்ருதத்திற்கொப்பான மதுவை அருந்தச் செய்து, அவர்களுடன் பிரம்மதேவனது இருப்பிடம் சேர்ந்தான்.

        பிரம்மாவும் தனது, (குமாரர்களுடன் கூடின) மகனைக் கண்டு களிப்புற்று, அருகிலிருந்த தேவதூதன் ஒருவனை நோக்கி 'நீ இவ்வானரர்களை அழைத்துக் கொண்டு கிஷ்கிந்தாபுரிக்குச் செல்லவும். அந்த நகரம் ஸகல சிறப்பும் பொருந்தி மிக மேன்மை பெற்று விளங்குகிறது. அங்கு வானர வீரர்கள் திரள்திரளாக வஸிக்கின்றனர். முன்பு எனது கட்டளைப்படி, விச்வகர்மாவினால், நவரத்னங்கள் நிரம்பப் பெற்ற மிகப் பெரிதான கடை வீதிகளுள்ளதாகி அந்நகரம் அநேகவிதமான அரண்களுடனே, நிருமிக்கப் பட்டுள்ளது. காமரூபிகளான வானரர்கள் விசேஷமாக வஸிக்கும் அவ்விடத்திற்கு, நமது குமாரனான ருக்ஷரஜஸ் என்னும் இவ்வானரனை இவனது குமாரர்களுடனே அழைத்துக் கொண்டு போய், அங்குள்ள ஸகல வானரர்களையும் அழைத்துச் சபைக் கூட்டி, நமது உத்திரவு இன்னதென்பதை யறிவித்து, அவர்களுடைய மத்தியில், இவனைச் சிங்காசனம் ஏற்றி, வானர அரசனாக அபிஷேகம் செய்யவும் என்று கூறிக் கட்டளையிட்டார்.-

        தேவதூதனும் அவ்வாறே, அவனைக் கிஷ்கிந்தைக்கு அழைத்துச் சென்று, அவனை அவ்விடத்திற்கு அரசனாக்கினான். இங்ஙனம் ரிக்ஷரஜஸ்ஸு பட்டாபிஷேகம் செய்துகொண்டு இப் புவியிலுள்ள வானரர்களனைவரையும், தனது கட்டளைக்கு உட்படுத்தி ஆட்சி செய்து வரலாயினன். இந்த ரிக்ஷரஜஸ் என்னும் வானரனொருவனே, வாலி சுக்ரிவன் இருவருக்கும், தந்தையும் தாயுமாகின்றனன்.

        அகஸ்த்யர் - “ஸ்ரீராமச்சந்திர! இந்த சரித்திரத்தை எவனொருவன் சொல்லுகிறானோ, எவன் கேட்கிறானோ, அவன் இஷ்ட ஸித்தியைப் பெறுவான். இப்படியாக, ராக்ஷஸர்களின் உத்பத்தியும், வானரர்களின் உத்பத்தியும் என்னால் விஸ்தரமாக உரைக்கப் பட்டது. உனக்கு மங்களம் உண்டாகட்டும்என்றார்.