9. ராம என்ற பதம் பரமாத்மாவைச் சொல்லி அநுஜ என்பது பின்பு அவதரித்த முப்பது சின்னங்கள் (அடையாளங்கள்) என்று கணக்கிடப்பட்டிருக்கிற விபவாவதாரங்களில் விஶேஷித்து ஜ்ஞாநப்ரதாநம் செய்தருளிய ஸ்ரீஹயக்ரீவனைக் குறிக்கிறது என்றபடி. சுருணையிழந்த கணக்கன் நீர்கிடை நிலக்கிடை தெரியாமல் பரிதவிக்குமாப் போலே வேதங்களைப் பறிகொடுத்த ப்ரஹ்மா கலங்கிப் பரமாத்மாவை ஸ்தோத்திரம் செய்ய பகவான் ஹயக்ரீவ ரூபம் எடுத்து, பாதாளத்தில் ஒளிந்திருந்த அஸுரனைக் கொன்று, வேதங்களை மீட்டுக் கொடுத்த உபகாராதிகளை ஸ்ரீஹயக்ரீவ ஸ்தோத்ராதிகளில் நிரூபித்து அருளியபடியினாலும், இவரே ப்ரதிவாதி நிரஸன காலத்தில் ஆசார்யர்களுடைய ஹ்ருதயகமல ஸிம்மாஸநத்திலும், உபதேஶ காலத்தில் அவர்களுடைய ஜிஹ்வாக்ர ஸிம்மாஸநத்திலும் வீற்றிருந்து அநுக்ரஹிப்பதை நிரூபித்திருப்பதினாலும், ஸர்வஶாஸ்த்ரார்த்த ஸங்க்ரஹமாய் அநுக்ரஹிக்கப்பட்ட ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தில் இவருடைய அநுக்ரஹமே அந்த க்ரந்த ரூபமாக வெளிவந்தது என்பதை வெள்ளைப்பரிமுகர் தேசிகராய் விரகாலடியோம் உள்ளத்தெழுதியது ஓலையில் இட்டனம் (ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம்) பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து அருள் செய்வதும் பன்னுகலை நால் வேதப் பொருளையெல்லாம் பரிமுகமாயருளிய எம்பரமன் (பெரிய திருமொழி) என்று இவ்வவதாரத்தைக் குறிக்கிறது.
உபநிஷத்துக்களில் மிகவும் சிறந்தது ஈஶாவாஶ்யோபநிஷத்து. அதன் வ்யாக்யாநத்தில் ஸ்ரீஹயக்ரீவன் விஷயமாக மங்களம் செய்தருளியிருப்பதனால் ஸ்ரீ ஹயக்ரீவனே ஸர்வோபநிஷத் ப்ரதிபாத்யன் என்பதை ஸ்வாமியே எடுத்துக் காட்டி அருளியபடி. ஸர்வேஶ்வரனிடமிருந்தே ஸர்வார்த்த க்ரஹணம் பண்ணிய கலியன் அருளிய அறிவுதரும் பெரிய திருமொழியை முற்றிலும் மறந்து, ஹயக்ரீவனின் அருளால் பெற்ற ஜ்ஞாநம் உபாதேயமன்று என்பவர்கள் அவருடைய தயைக்குப் பாத்திரமாக முடியாதல்லவா என்பது கருத்து.
10. ராமாநுஜ என்கிற பதம் ஸ்ரீவராஹ நயினாரைக் குறிக்கிறது. ஹிரண்யகசிபு பூமியைச் சுருட்டி எடுத்துக் கொண்டு ஸமுத்திரத்தின் கீழ் ஒளிந்துகொண்ட காலத்தில் ஸ்ரீவராஹாவதாரம் செய்து, அஸுரனைக் கொன்று, பூமிப்பிராட்டியைக் கரையேற்றி, அவளைத் திருமணம் செய்துகொண்டு, அவளுடைய ப்ரார்த்தனைக்கு இணங்கி, மிகவும் ஸுலபமானதும், எல்லாரும் அநுஷ்டிக்கக் கூடியதுமான ப்ரபத்தியாகிற உபாயத்தை வராஹ சரம ஶ்லோகம் எனப்படும் இரண்டு ஶ்லோகங்களால் உபதேஶித்த உபாகார விஶேஷத்தை ஸ்ரீரஹஸ்ய ஶிகாமணி என்னும் ஸ்ரீஸூக்தியில் நிரூபித்தருளியபடி.
ஸித்தோபாய பூதராய் ஸர்வஜ்ஞருமான ஸ்ரீவராஹநயினார் தம்முடைய வசீகரணார்த்தமாக ஸாத்யமான ஜ்ஞாநயஜ்ஞ ஸாரத்தை இவ்வளவிலே ப்ரஸந்நனாய் ஜந்ம ஜந்மாந்திரம் காத்து அடியார்களைக் கொண்டுபோய்த்தன்மை பொறுத்தித் தன் தாளிணைக் கீழ்க்கொள்ளும்படியை இரண்டு ஶ்லோகத்தாலே அருளிச் செய்கிறார்.(ரஹஸ்யசிகாமணி)
இதை ப்ரமாண உபபத்திகளுடன் விஸ்தாரமாக உபபாதித்தருளி, ஸம்ஸ்க்ருத பாஷையில் பரிச்சயமில்லாதவர்களும் இந்த ஶ்லோகங்களின் அர்த்த விசேஷங்களை ஸுலபமாய் அநுஸந்திக்கும்படி ஒரு ச, து, இவற்றின் ஸ்வாரஸ்யம்கூட விடாமல் இடம் பெற்றோரெல்லாம் என்றாரம்பித்து ஒரு பாட்டாலே நிரூபித்திருப்பதும் இந்த அவதாரத்தின் பெருமையை ‘ஸ்ரீதஶாவதார ஸ்தோத்திரத்திலும்’ ஸ்ரீ அபீதிஸ்தவத்திலும் அருளிச் செய்திருப்பதும் இங்கு அநுஸந்தேயம்.
11. ராமாநுஜ என்ற பதம் ஸ்ரீசக்ரவர்த்தித் திருமகனைக் குறிக்கிறது என்றபடி. ஶரணாகதி ஶாஸ்த்ரம் என்று கூறப்படும் ஸ்ரீமத்ராமாயணத்தின் பெருமையை ‘ரகுவீரகத்யம்’ என்று சொல்லக்கூடிய மஹாவீர வைபவத்தில் ஸ்தோத்ரமாகச் சொல்லி ‘ஸ்ரீஅபயப்ரதாந ஸார’த்தில் விஸ்தாரமாக உபபாதித்து ஶரண்யனுடைய திருவுள்ளத்தை வெளியிட்டருளியது. ‘ஸ்ரீஹம்ஸ ஸந்தேஶ’த்தில் பகவான் தூது விட்டதின் கருத்தையும், அவதாரத்தின் ப்ரயோஜனம் “ஸக்ருத் ப்ரபந்நஜந ரக்ஷணைகவ்ரத பரிபாலநம்” என்று ஸ்பஷ்டமாக அருளிச் செய்துள்ளார் ஸ்வாமி. பரதாழ்வான் பண்ணின ஶரணாகதி எல்லா பலத்தையும் கொடுக்கவல்லது என்பது பொய் என்று ஆக்ஷேபம் செய்பவர்களுக்கு ஸமாதானமாக,
“பரதனுடைய ஶரணாகதி ஸபலமானதே. முற்பாடரான தேவர்கள் பண்ணின ப்ரபத்திக்காக, ராவண வதத்திற்கு எழுந்தருள்கையும், பிற்பாடரான ஸ்ரீபரதாழ்வான் பண்ணின ப்ரபத்திக்காக மீண்டு, திருவபிஷேகம் பண்ணி ராஜ்யம் பண்ணுகையும் விருத்தமானபடியினாலே ஸ்ரீபரதாழ்வானுக்குப் பண்ணினபோதே பரம பலம் சடக்கெனத் தலைக்கட்டித்தில்லையேயாகிலும், அவருக்குக் கைகேயீ கலஹத்தாலே ப்ரஸக்தமான அவத்யம் தீரும்படி மரவடியைத் தம்பிக்கு வான் பணையம் வைத்துப் போய் வானோர் வாழ” என்கிறபடியே அப்போது ஸாக்ஷாத் பலமான திருவடிகளுக்கு ப்ரதிநிதியான ஸ்ரீசடகோபனாலே ஸபலத்வம் சொல்லி, பின்பு பூர்வ ப்ரதிஜ்ஞாதமான தேவகார்யம் தலைக்கட்டினவாறே ஸ்ரீ புஷ்பக விமானத்தாலே ஸாக்ஷாத் பலமான திருவடிகள் ஸ்வயமாக தங்களாய் அயத்ந லப்தமானபடி சொன்னான் என்றும், ஸ்ரீபரதாழ்வான் பண்ணின ப்ரபத்தியாலே அவருடைய விஷய வாஸமாத்ரமே பற்றாசாக, பின்பு கோஸலதேஸஶ்த ஜந்துஜாத வர்க்கங்களைக் காப்பாற்றினான்” என்று ஶரணாகதி ஸபலமானதை நிரூபித்தருளினார். இதையே ஸ்வாமி திருவுள்ளம் கொண்டு “பாதுகாஸஹஸ்ர”த்தில் भरताय परं नमोस्तु तस्मै பரதாய பரம் நமோஸ்து தஸ்மை என்று பரதாழ்வானுக்கு நமஸ்காரத்தைப் பண்ணியபடி. மேலும் பகவான் ஸமுத்ர ராஜனிடத்தில் பண்ணின ஶரணாகதி பலனில்லாமல் போயிற்றே என்ற ஆக்ஷேபத்திற்கு ஸமாதானமாக, பகவான் அவனிடம் செய்தது ஶரணாகதியல்ல, அதற்கு “ப்ரதிஶயநாதிபரம்” என்று பெயர்.
அநந்யகதித்வம் யாருக்கு இருக்கிறதோ அவர்கள்தான் ஶரணாகதி பண்ணவேண்டும். அவர்கள்தான் ஶரணாகதர்கள். பகவானுக்கு அநந்யகதித்வம் கிடையாது. அவன் ஶரண்யன். ஆகையால் இங்கு சொல்லப் பட்டது ஶரணாகதி விஷயமில்லை.
காகாஸுர ஶரணாகதியில் ஶரணாகதி ஶாஸ்த்ர ப்ரவர்த்தகர்களான மஹர்ஷிகள் ரக்ஷிக்காமல் கைவிட்டார்களே என்கிற ஆக்ஷேபத்திற்கு ஸமாதானமாக ஒரு கண்ணை வாங்கி ரக்ஷித்தபடியால் ஶரணாகதனுடைய எல்லாப் பாபங்களும் க்ஷமிக்கப்படும் என்பது பொருந்தாதே என்பதற்கு ஸமாதானமாக----
ரக்ஷணம் இரண்டு விதம்
தன் ஶக்திக்கு வஞ்சனம் பண்ணாதே ரக்ஷிக்கவேண்டும். அங்ஙனமன்றிக்கே கைக்கொள்ளவுமாம், கைவிடவுமாம் தான் வல்லதொரு விரகால் என்று தாத்பர்யம். ரகு பரப்ருதிகள் ப்ராஹ்மணாதிகளைத் தாங்கள் கைக்கொண்டு ரக்ஷித்தார்கள். தேவர்களும் ரிஷிகளும் காகத்தைப் போக்கற்றதென்று பெருமாள் கைக்கொள்ளுகைக்காக (அபயப்ரதாநஸாரம்) என்று ரக்ஷணத்தின் வேறுபாட்டை ஸ்தாபித்தருளி, காகாஸுரனுக்கு ஒரு கண்ணைப் பறித்து ரக்ஷித்ததற்குக் காரணமாக காவலினி எமக்கு எங்கும் கடன் என்றெண்ணிக் காண நிலை இலச்சினை அன்றிட்ட வள்ளல் (அபயப்ரதாநஸாரம்) என்றருளியபடி. இதன் கருத்து இந்த காகத்தின் ரக்ஷணம் இது முதல் எல்லா இடத்திலும் நமது கடனாகிவிட்டது. துஷ்ட ப்ரக்ருதியான இக்காகத்தை பூர்ணமாக மன்னித்து விடுவோமாகில் இது இதே மாதிரியான அபராதத்தை வேறு யாரிடமாவது செய்தால் அவரால் உதைப்புண்டு ப்ராணனை இழக்கும், அப்படியானால் நம்முடைய ரக்ஷணம் ரக்ஷணமாகாது ஆகையால் அதற்கு நல்ல புத்தி வரவேண்டும் என்பதற்காகவும் அபசாரப்பட்டால் தண்டனை கிடைக்கும் என்று தெரிந்து கொள்வதற்காகவும் ஒரு கண்ணை வாங்கி அருளினான் என்றபடி.
“ப்ராணார்த்தியாய்” விழுந்த காகத்திற்கு ப்ராணனைக் கொடுக்கையாலே அங்கு ப்ரபத்தி பலம் பூர்ணம். துஷ்ப்ரக்ருதியான இக்காகத்திற்கு சிக்ஷையாக ஒரு கண்ணை வாங்கி விட்டதும் நிக்ரஹமன்று அனுக்ரஹ விசேஷம் என்றும் (ஸ்ரீமத்ரஹஸ்ய ப்ராரக்ஷா) कृपे काकस्यैकं हितमिति हिनस्ति स्म नयनम् க்ருபே காகஸ்யைகம் ஹிதமிதி ஹிநஸ்தி ஸ்ம நயனம் (தயா ஶதகம் 63) என்றருளி, இந்த அவதாரத்தில் ஶரண்யன் தானே வெளியிட்ட அபயப்ரதாந ஶ்லோகத்தின் அர்த்தத்தை ‘ஒருக்காலே’ என்ற பாட்டாலே ஆரம்பித்து நிரூபித்தருளியபடி. மேலும், ஶத்ரு, மித்ரன், வேண்டியவன் வேண்டாதவன் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோரையும் ஸந்தோஷப்படுத்தக் கூடியவன் என்ற தன்மையை,
ஶரணாகதனாய் இவர் கைவிடிலும் எங்ஙனம் புகுரிலும் அழியும்படி நிற்கிற விபீஷணாழ்வானையும் இவனை அழிக்க நினைத்த பரிவரையும் ரமிப்பித்தபடியை, விபீஷணாழ்வானுக்கு பஹுமுக பரிபவத்தாலே பிறந்த பரிதாபமெல்லாம் கழியும்படி ரமணீயமாய் நின்ற தயரதன் பெற்ற மரகத மணித்தடமிறே (அபயப்ரதாநஸாரம்) என்றருளியதும் எம்பெருமானுடைய பரத்வம் கழற்றவொண்ணாச் சட்டையாய் அவனுடைய ஸௌலப்யமே விஞ்சியிருக்கும் என்றபடி
12. ராமாநுஜ என்னும் பதம் ஸ்ரீபரதாழ்வானைக் குறிக்கிறது.
भरताय परं तस्मै प्रथमोदाहरणाय भक्तिभाजम्|
यदुपज्ञमशेषत: पृथिव्यां प्रथितो राघवपादुका प्रभाव:||
ப⁴ரதாய பரம் தஸ்மை ப்ரத²மோதா³ஹரணாய ப⁴க்திபா⁴ஜம்|
யது³பஜ்ஞமஶேஷத: ப்ருதி²வ்யாம் ப்ரதி²தோ ராக⁴வபாது³கா ப்ரபா⁴வ:||
(ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம்)
பகவத் கைங்கர்யமே நமக்கு பரம ப்ராப்யம் என்றும் பகவானுடைய ஸ்ரீபாதுகைகளின் பெருமைகளை உலகிற்குக் காட்டினபடியாலும் பாதுகா ஆராதனத்தை அநுஷ்டித்துக் காட்டினபடியாலும் ராமாநுஜ என்பது பரதாழ்வானைக் குறிப்பதாக ஆகிறது.