ஞாயிறு, 11 டிசம்பர், 2022

ராமாயணம் -- உத்தர காண்டம் 6

பதினோராவது ஸர்க்கம்


[பிரம்மாவினிடம் வரம் பெற்ற ராவணாதிகள் இலங்கையிலிருந்து

குபேரனை வெளியேறும்படி செய்து அங்கு இவர்கள் வஸித்தல்]


       இவ்வாறாக, ராவணன் முதலானவர்கள் பிரம்மதேவனிடமிருந்து வரங்கள் பெற்றதைக் கேள்வியுற்ற சுமாலி என்ற அரக்கன் தான் கொண்டிருந்த பயத்தை விடுத்துத் தன்னுடைய மந்திரிகளான மாரீசன் ப்ரஹஸ்தன் விரூபாக்ஷன் மஹோதரன் முதலியவர்களுடனும் தன்னைச் சோ்ந்த மற்றும் பலருடனும் பாதாளத்தை விட்டுப் புறப்பட்டு தசக்ரீவனிடம் சென்றான். அவனை அணுகிக் கட்டித் தழுவிப் பின்வருமாறு கூறினான் - "குழந்தாய்! நீ பிரம்மதேவனிடமிருந்து உயர்ந்த வரங்களை அடைந்துள்ளாய் என்பதை அறிந்து நாங்கள் பயம் தெளிந்துள்ளோம். எவரிடமிருந்து பயந்தவர்களாய் நாங்கள் இலங்கையை விட்டுப் பாதாளலோகம் சென்றோமோ அந்த விஷ்ணுவினால் ஏற்பட்ட பயம் எங்களை விட்டுப் போய்விட்டது. இனி நீயே எங்கள் தலைவன். நான் கூறுவதை ஸாவதானமாகக் கேள் . குபேரன் இப்போது வஸித்து வருகிற லங்காபுரி ஆதியில் நம்முடையதாக இருந்தது. அதை நீ எப்படியாவது ஸாம -தான பேத - தண்டம் என்கிற உபாயங்களால் கைப்பற்றி அங்குள்ள உனது ஸஹோதரனான குபேரனை ஓடிப் போகச் செய்யவும். அப்போதே எங்களது மனோரதம் பூர்த்தியாகும். அப்பனே! இந்த இலங்கைக்கு நீயே இனி அதிபதியாகப் போகிறாய். சிதைந்து போன ராக்ஷஸ  வம்சம் உன்னால் விருத்தியடைய வேண்டியிருக்கிறது. மிகவும் பலசாலியான நீயே எங்கள் அனைவர்க்கும் பிரபுவாய் இருக்கப் போகிறாய்" என்று.

         அதைக் கேட்ட ராவணன் மாதாமஹனான சுமாலியைப் பார்த்து, "தாத! தாங்கள் இவ்விதம் கூறுவது உசிதமன்று. எனது ஜ்யேஷ்ட ப்ராதாவான குபேரன் குருவைப் போன்றவன். அவனை எதிர்ப்பது தகாது" என மறுத்துக் கூறினான். அதற்கு ஏதும் மறுமொழி கூற மாட்டாமல் சுமாலி சென்றுவிட்டான்.
        

          சில காலம் சென்றது. ப்ரஹஸ்தன் என்கிற சுமாலியின் மந்திரியான அரக்கன் ராவணனிடம் வந்தான். சுமாலி சொன்னதைப் போலவே லங்காபுரி விஷயமாகப் பேசினான். சுமாலிக்குக் கிடைத்த பதிலே இவனுக்கும் கிடைத்தது. ராவணனின் பதிலைக் கேட்டதும் ப்ரஹஸ்தன், "ராவண! நீ உனது பாட்டனது பேச்சை மறுப்பது சரியன்று. சூரர்களுக்கு ஸஹோதரன் என்கிற பரிவு ஒரு பொழுதுமில்லை. அதற்கு ஓர் உதாஹரணம் சொல்லுகிறேன் கேள். முன்னொரு காலத்தில் அதிதி என்றும் திதி என்றும் இரண்டு ஸஹோதரிகள் கச்யப ப்ரஜாபதியை மணம் செய்துகொண்டனர். அவர்களுள் அதிதி என்பவள் தேவதைகளையும், திதி என்பவள் அசுரர்களையும் பெற்றனர். முதலில் தர்மஸ்வபாவமுள்ள அசுரர்களே இந்த மூவுலகாட்சியையும் கைக்கொண்டு ஸமர்த்தர்களாய்ச் சிறப்புடன் விளங்கினர். பிறகு மஹாவிஷ்ணுவால் யுத்தத்தில் அசுரர்கள் வெல்லப்பட்டு அழிவற்றதான இம் மூவுலகாட்சி தேவர்கள் வசமாக்கப் பட்டது. நீ இப்போது புதிதாக இதை ஏதும் செய்யப்போவதில்லை. இப்படிப் பல தடவை தேவாசுரர்களால் செய்யப்பட்டுள்ளது. எனவே இவ் விஷயத்தில் எனது வார்த்தையைக் கேட்பாயாக. அண்ணன் என்கிற கௌரவத்தைப் பாராட்டாமல் நான் சொன்ன நல்ல வார்த்தையைக் கேள்" என்றனன்.


       இப்படி ப்ரஹஸ்தனால் போதிக்கப்பட்ட ராவணன், ஸந்தோஷம் அடைந்தவனாய் முஹூர்த்த காலம் ஆலோசித்து அப்படியே என்று ஒப்புக்கொண்டான். அதே நாளில் தசானனன் மிகவும் ஸந்தோஷமடைந்தவனாய் தனது அநுசரர்களான ராக்ஷஸர்களுடன் ச்லேஷ்மாதக வனத்திற்குச் சென்றான். அங்கே சென்று திரிகூடமலையில் இருந்துகொண்டு ப்ரஹஸ்தனைக் குபேரனிடம் தூது அனுப்பிப் பின் வருமாறு கூறும்படி சொன்னான்-' “அரசனே! இந்த லங்காபுரி முன்பு அரக்கர்களுடைய வாஸஸ்தானமாக இருந்தது. இதை நீ அபஹரித்துள்ளாய். பரிசுத்தனானவனே! இது உனக்கு அழகல்ல. ஆகவே தன்னிகரற்ற பராக்கிரமசாலியே! இதை நீ எங்கள் பொருட்டுக் கொடுத்தாயேயாகில், எனக்கு மிகவும் பிரீதி உண்டாகும். தர்மப்படி நடந்தவனாகவும் ஆவாய்'' என்று.


          அந்த ப்ரஹஸ்தனும் குபேரனால் ரக்ஷிக்கப்படும் இலங்கையை அடைந்து, மிகவும் கம்பீரமாக அவனைப் பார்தது, "ஸமஸ்த ஆயுதங்களையும் தரிக்கும் மஹாவீரனே! நன்னடத்தையால் சிறந்து விளங்கும் தர்மிஷ்ட! உமது ஸஹோதரனான தசக்ரீவனால் உம்மிடம் நான் அனுப்பப்பட்டு வந்துள்ளேன். ஸகல சாஸ்திரங்களையும் கற்றறிந்தவரே! அவன் சொன்னதானது- இந்த அழகான லங்கா பட்டினம் முன்பு மஹாவீரா்களான ஸுமாலி முதலான ராக்ஷஸர்களால் ஆளப்பட்டது. ஆகையால் இதை நீ நல்வார்த்தை மூலம் யாசிப்பவனுக்குக் கொடுத்துவிடு'' என்று.


      இப்படி ப்ரஹஸ்தன் சொல்லக் கேட்ட குபேரன் அவனிடம், "ப்ரஹஸ்த! முன்பு இவ்விலங்காநகரம் எவருமின்றிச் சூன்யமாக இருந்தது. அதுபற்றியே இதை எனது தந்தை எனக்கு அளித்தார். நான் எனது பரிவாரங்களுடன் இங்கு வஸிக்கிறேன். நீ எனது ஸஹோதரனிடம் சென்று நான் சொன்னதாகச் சொல். நகரமோ ராஜ்யமோ என்னுடையது என்று யாது உளதோ அவை யாவும் அவனுடையதும் அன்றோ? அவனுக்கும் எனக்குமுள்ள ராஜ்யமும் செல்வமும் பிரிக்கப்படாதனவே அல்லவா? ஆதலால் இவ்விராஜ்யத்தை அவனும் தடையின்றி அநுபவிக்கலாம்" என்று இவ்வாறு கூறி அவனை அனுப்பி வைத்தான்.


    இப்படி ப்ரஹஸ்தனை அனுப்பிவிட்டுக் குபேரன் தனது தந்தையிடம் சென்றான். அவரை வணங்கி, "தந்தையே! ராவணன் இவ் விலங்காபுரி முன்பு ராக்ஷஸர்களுடையதாக இருந்தது. அதை இப்போது நீ திரும்பக் கொடுத்துவிடு என்று தூதர் மூலமாக. வேண்டுகோள் விடுத்துள்ளாள். இதில் நான் செய்ய வேண்டுவது யாது என்பதைத் தேவரீரே அருள வேண்டும்" என்று பிரார்த்தித்தான்.


        இவ்வாறு குபேரன் கூறக் கேட்ட விச்ரவஸ் அவனைப் பார்த்துக் "மகனே! நான் சொல்வதைக் கேட்பாயாக. ராவணனும் என்னிடம் வந்து இவ் விஷயமாக ப்ரஸ்தாபித்தான். நான் அவனை நயமாகவும் பயப்படும்படியாகவும் எச்சரித்தேன். கெட்ட புத்தியுள்ள அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆகவே நீ நன்மை பயக்கக்கூடியதாயும் தர்மத்துடன் கூடியதுமான எனது உபதேசப்படி நடந்துகொள். அதாவது நீ இவ்விலங்காபுரியை விட்டுவிட்டுக் கைலாய பர்வதத்திற்குச் செல்லவும். உனது பரிவாரங்களுடன் அங்கே சென்று வஸிக்கவும். அங்கு நதிகளுள் உயர்ந்ததான மந்தாகினி ஓடுகிறது. அதில் சூரியன் போல ஒளியுள்ள பொற்றாமரைகளும், நீலோத்பலப் பூக்களும், ஆம்பல் புஷ்பங்களும், மற்றும் மணமுள்ள அனேக புஷ்பங்களும் விளங்குகின்றன. மேலும் அங்கு அனேக தேவர்களும் கந்தர்வர்களும கின்னரர்களும் தந்தாம் மனைவியருடன் வந்து கூடிக் களிக்கின்றனர். அதுவே உனக்குத் தகுந்த வாஸஸ்தானமாகும். நீ அரக்கனான ராவணனுடன் பகைமை கொள்ளாதே. இவன் கொடிய தவமியற்றிப் பெற்ற வரபலத்தை நீ அறிவாயன்றோ?" என்று கூறினார்.


         தகப்பனார் கூறியபடியே குபேரன் தனது பரிவாரங்களுடன் கைலையங்கிரியையடைந்து வஸிக்கலாயினன்.


           ப்ரஹஸ்தன் மூலமாக இவ் விஷயத்தை அறிந்த ராவணன் தனது தம்பிமார்களுடன் இலங்கையில் குடிபுகுந்தனன். நீலமேகங்கள் போன்ற அரக்கர்களால் நிறைந்து காணப்பட்ட இலங்கையில் அரசனாக முடி சூடப்பெற்று விளங்கினான் தசக்ரீவன்.
       

              குபேரனும் சந்திரன் போன்று விளங்கிய கைலாஸமலையில் மாட மாளிகைகளுடன் கூடிய அலகாபுரி எனகிற நகரத்தை உண்டு பண்ணி தனது பரிவாரங்களுடன். அதன் தலைவனாக விளங்கினான்


24

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக