திங்கள், 12 டிசம்பர், 2022

ராமாயணம்–உத்தர காண்டம் 9

பதினான்காம் ஸர்கம்
[ராவணன் தனது ஸைன்யத்துடன் குபேர புரம் சென்று அங்கே யுத்தஞ் செய்தல்.]


இலங்கையிலிருத்து புறப்பட்ட ராவணன் மிகவும் பலிஷ்டர்களாயும், சண்டை செய்வதையே விரும்பியுள்ளவர்களுமான, மஹோதரன் ப்ரஹஸ்தன், மாரீசன், சுகன், ஸாரணன், தூம்ராக்ஷன் என்கிற ஆறு மந்த்ரிகளுடனும் பெருஞ்சேனையுடனும் கூடினவனாய், கைலாஸமலையிலுள்ள குபேரபுரியை அடைந்தான். யுத்த ஸந்நாஹத்துடன் வந்துள்ள ராவணனைக் கண்ட குபேர ஸைனிகர்கள் தனது அரசனின் ஸகோதரன் என்கிற கௌரவபுத்தியுடன் உடனடியாக எதிர்க்காமல், குபேரனிடம் சென்று முறையிட்டனர். குபேரனும் இதையறிந்து அவர்களுக்கு ராவணனுடன் யுத்தம் செய்ய அநுமதி அளித்தான். பிறகு இரு ஸைன்யங்களுக்கும் கடுமையான யுத்தம் நடைபெற்றது. குபேர ஸைனியங்களால் அடிக்கப்பட்ட ராவணன் மந்திரிகள் மிகவும் ச்ரமப்பட்டனர். இதைக் கண்ட ராவணன் சிம்மநாதஞ் செய்து கொண்டு யக்ஷஸைன்யத்தினுள் புகுந்தான். யக்ஷர்கள் லக்ஷக்கணக்கில் சேர்ந்துகொண்டு மந்த்ரிகளைச் சூழ்ந்தடித்தனர். ஸைன்யத்தின் நடுவில் புகுந்த ராவணனையும். சக்தி கதை முஸலம் முதலிய ஆயுதங்களால் அடித்தனர். இப்படி அடிபட்ட ராவணன் கொஞ்சமும் வ்யஸனப்படாமல் கதை என்கிற ஆயுதத்தைக் கையிலேந்தியவனாய் யக்ஷர்களை ஆயிரக்கணக்கில் வதம் செய்தான். காற்றுடன் கூடிய அக்னியானது எவ்வாறு உலர்ந்த புல்சுமையை - உலர்ந்த விறகுக் கட்டைகளைச் சீக்கிரமாகக் கொளுத்திவிடுமோ அவ்வாறு இருந்தது. ராவணாதிகளால் இவ்வாறு அழிக்கப்பட்ட யக்ஷ ஸைன்யத்தில் பலர் ஓடி ஒளிந்தனர். பலர் மாண்டனர். சிலர் கைகால்களை இழந்தனர். வெள்ளப் பெருக்கால் நதியின் கரை எவ்வாறு பாதிக்கப்படுமோ அவ்வாறு யக்ஷஸைனிகர்கள் பாதிக்கப்பட்டனர்.
              இதைக் கண்ட குபேரன் ஸம்யோத கண்டகன் என்கிற ஸேனாதிபதியைப் பல யக்ஷர்களுடன் தசக்ரீவனை எதிர்க்க அனுப்பிவைத்தாள். அவனும் மாரீசன் என்கிற ராவணனின் மந்த்ரியைத் சக்ராயுதத்தால் அடித்தான். மாரீசன் மூர்ச்சையடைந்து தரையில் விழுந்தான். சற்றைக்கெல்லாம் மூர்ச்சை தெளிந்தெழுந்து ஸம்யோதகண்டகனைப் புறமுதுகிட்டோடும்படி அடித்து விரட்டினான். இவ்வாறாக யக்ஷஸைந்யம் ஒடியொளிந்ததும், ராவணன் தனது ஸைன்யத்துடன் குபேரப்பட்டிணத்தின் முகத்வாரத்தை அடைந்தான். அதனுள் ப்ரவேசிக்க முற்பட்ட ராவணனை அங்கே காவலாளனாக நின்ற சூர்யபானு என்பவன் அங்குள்ள தோரணதண்டத்தை எடுத்து அடித்தான். அதனால் அடிபட்ட ராவணன் ரத்தத்தைக் கக்கிக்கொண்டு, கைரிக தாது வழிந்கோடும் மலை போலக் காட்சியளித்தான். ஆயினும் சிறிதும் கலங்கினானில்லை பிரம்மதேவனின் வர மகிமையே இதற்குக் காரணம், உடனேயே அவன் அதே தோரண தண்டத்தைக் கொண்டு, அடித்தவனையே திரும்ப அடித்தான். அந்த அடியால் காவலனான யக்ஷன் இருந்த இடம் தெரியாமல் சூர்ணமாக்கப்பட்டு இறந்து போனான். இதைக் கண்ட அங்கு இருந்த ஸைனிகர்களும் நதிகளையும் குகைகளையும் தேடியோடி ஒளிந்தனர்.


பதினைந்தாவது ஸர்க்கம்

[ராவண குபேர யுத்தமும், புஷ்பகவிமான ஹரணமும்]


             பயந்தோடும் யக்ஷர்களைக் கண்ட குபேரன் மணிபத்ரன் என்னும் யக்ஷர்தலைளை விளித்து, “வீரனே! நீ நமது ஸைன்யத்துடன் சென்று கெட்ட நடத்தையை உடையவனும் மஹாபாபியுமான ராவணனை அடக்குவாயாக, நமது வீரர்களைக் காத்திடுவாய்" என்று கட்டளையிட்டு அனுப்பினான், தன்னிகரற்ற பராக்ரமசாலியான அவனும் நாலாயிரம் யக்ஷர்களுடன் சென்று அரக்கர் ஸைன்யத்துடன் மோதினான், அந்த யுத்தத்தைக் கண்டு தேவர்களும் ரிஷிகளும் கந்தர்வர்களும் மிகவும் வியப்படைந்தனர். அப்போது அந்த யுத்தத்தில் ப்ரஹஸ்தனனால் ஆயிரம் யக்ஷர்களும், மஹோதரனால் ஆயிரம் பேரும், கோபமடைந்தவனும் யுத்தத்தையே விரும்புபவனுமான மாரீசனால் நிமிஷ காலத்தில் ஈராயிரம் யக்ஷர்களும் கொல்லப்பட்டனர். நேர்மையுடன் யுத்தம் செய்யும் யக்ஷபலம் மாயாயுத்தம் செய்யும் அரக்கர் பலத்திற்கு ஈடு கொடுக்க முடியுயாமற் போனது விந்தையன்றே?
                தூம்ராக்ஷன் என்பவன் உலக்கையாகிற ஆயுதத்தால் மணிபத்ரனுடைய மார்பில் அடித்தான். அந்த அடியினால் சிறிதும் கலங்காத மணிபத்ரன், தூம்ராக்ஷனை கதாயுதத்தால் அடித்தான். அந்த அடியைத் தாங்கமாட்டாமல் ரத்தத்தைக் கக்கிக்கொண்டு தரையில் விழுந்தான் தூம்ராக்ஷன். இவன் அடிபட்டு வீழ்ந்ததைக் கண்ட தசக்ரீவன் மணிபத்ரனைக் குறித்து ஓடி வந்தான்.
           அவன் ஓடி வருவதைக் கண்ட மணிபத்ரன் மூன்று சக்தி ஆயுதங் கொண்டு தசானனனை அடித்தான். தசக்ரீவனும் மணிபத்ரனைச் சிரஸ்ஸில் அடித்தான். அந்த அடியால் அவனது முகுடமானது பக்க வாட்டில் சாய்ந்து நின்றது. அதுமுதல் அந்த யக்ஷன் 'பார்ச்வ மௌளீ' “எனப் பெயர் பெற்றான். அளன் யுத்தத்தில் தோல்வியுற்றதும் யக்ஷஸைன்யம் மறுபடியும் கலக்கமடைந்தது.
               இதைக் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த குபேரன் கதையைக் கையிலேந்தியவனாய். சுக்ரன். ப்ரோஷ்டபதன் என்கிற மந்த்ரிகளுடனும், சங்கநிதி பத்மநிதி அதிபர்களுடனும் கூடியவனாய் யுத்த களத்திற்கு வந்து. தந்தையின் சாபத்தால் க்ரூரகுணமுடையவனான ராவணனைப் பார்த்து, .”ஹே மூடனே! நான் பல தடவை உனக்கு உணர்த்தியும் நீ உணரவில்லை. இந்தத் துஷ்கர்மாவின் பலனை நீ பின்னால் நரகத்தை அடையும்போது அறிவாய். அறிந்திடாமல் விஷத்தைக் குடித்தாலும் பிறகு அது அவனை அழித்தே தீரும். இப்படிக் கொடிய கர்மாவைச் செய்திடும் உன்னை எந்தத் தெய்வமும் ஸஹித்துக்கொள்ளாது. எவனொருவன் தாய் தந்தை ஆசார்யன் இவர்களை அவமதிக்கிறானோ அவன் அதன் பலனை யமபட்டணத்தை அடைந்து அநுபவித்தே தீருவான். எவனொருவன் அநித்யமான இந்தச் சரீரம் இருக்கும்போது நன்மையைச் செய்யாமல் தீமையைச் செய்கிறானோ அவன் இறந்தபிறகு தானடையும் கதியைக் கண்டு கலங்குகிறான். தர்மத்தைச் செய்வதால் ராஜ்யமும் சுகமும் கிடைக்கும். அதர்மம் செய்வதால் துக்கமே உண்டாகும். ஆகையால் சுகமடையும்பொருட்டு தர்மம் செய்ய வேண்டும். அதர்மத்தைச் செய்யக் கூடாது.


"மாதரம் பிதரம் யோ ஹி ஆசார்யஞ்சாவ மந்யதே |
ஸ பச்யதி பலம் கஸ்ய ப்ரேத ராஜ வசம் கத: !
அத்ருவேஹிரீரே யோ ந கரோதி த போர்ஜநம் |
ஸ பச்சாத் தப்யதே மூட : ம்ருதோ திருஷ்ட்வாத்மநோட கதிம் ||
தர்மாத் ராஜ்யம் தநம் ஸௌக்யம் - அதர்மாத்துக்க மேவச | 
தஸ்மாத் தர்மம் ஸுகார்த்தாய குர்யாத் பாபம்-விஸர் ஜயேத் ||


பாபம் செய்வதன் பலம் துக்கமே. மூடன் தன்னைத் தானே கெடுத்துக் கொள்வதற்காகப் பாபத்தையே செய்கிறான்.
                       செய்த பாபம் மற்றொரு பாபத்தைச் செய்யக் காரணமாகிறது. அதேபோல் புண்யம் செய்தால் அதுவே மற்றொரு புண்ணியத்தைச் செய்யத் தூண்டுகிறது. எனவே மஹான்களின் கருத்துப்படி நீ ஸம்பாஷணைக்குக் கூட அநர்ஹன்" என்று கூறி, ராவணனது மந்த்ரிகளை அடித்து விரட்டினான். அவர்களும் பயந்து ஓடினர். 

                     இதைக் கண்ட ராவணன் மிகுந்தசினத்துடன் குபேரனை  எதிர்த்தான். குபேரன் ராவணனைத் தனது கதையினால் தலையில் அடித்தான். இருவருமாக வெகு நேரம் யுத்தம் செய்தனர். குபேரன் ராவணன் மீது ஆக்நேயாஸ்த்ரத்தை ப்ரயோகித்தான். அவனும் அதை வாருணாஸ்த்ரத்தால் தடுத்தான். பிறகு ராவணன் அரக்கர்களுக்கே உரியதான மாயையினால், புலியாகவும், பன்றியாகவும், யக்ஷனாகவும், ராக்ஷஸனாகவும் பற்பல உருக் கொண்டு ஒரே ஸமயத்தில் அநேக யக்ஷர்களை அழித்துத் தான் பிறர் கண்களுக்குக் காணப் படாதவனாகவே இருந்தான். பிறகு மிகப் பெரிய கதாயுதத்தைத் கையிலேந்திக் குபேரனின் தலையிலடித்தான். அந்த அடியால் குபேரன் மயக்கம் கொண்டு ரத்தம் வழிந்தோடத் தரையில் வீழ்ந்தான். வேறு பட்ட மரம் போலக் கீழே சாய்ந்த குபேரனை அவனது அமைச்சர்கள் அப்படியே தூக்கி எடுத்துக்கொண்டு நந்தனவனத்தை அடைந்து ஆச்வாஸப்படுத்தினர்.
               தசக்ரீவன் தனதனை வென்ற மகிழ்ச்சியுடன், அதற்கடையாளமாக அவனது 'புஷ்பகம்' என்கிற விமானத்தைக் கவர்ந்துகொண்டான். ஸுவர்ணமயங்களும் வைடூர்ய மயங்களுமான ஸ்தம்பங்களை யுடையதும், நினைத்தபடி நினைத்த இடங்களுக்குச் செல்லக்கூடிய சக்தியை உடையதுமான அந்த விமானத்தின் மீதமர்ந்துகொண்டு, மூவுலகத்தையுமே வெற்றி கண்டது போன்ற கர்வம் கொண்டவனாய் கைலாஸமலையிலிருந்து கீழே வர விரும்பினான்.

(நந்திதேவனின் சாபம், கைலாசமலையை அசைத்த ராவணன் கைகள் அதனடியில் சிக்கிக் கொள்வது, சிவனைத்துதித்து ராவணன் என்ற பெயர் பெறுதல் அடங்கிய பதினாறாவது சர்க்கம் தொடரும்)


31


30

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக