பத்தாவது ஸர்க்கம்
[ராவணாதியர் தவமியற்றி, பிரம்மதேவனிடமிருந்து
வரம் பெறுதல்]
இப்படி அகஸ்தியர் கூறக் கேட்ட ஸ்ரீராமச்சந்திரன் அவரைப் பார்த்து, 'முனிச்ரேஷ்டரே! மஹாபலிஷ்டர்களான அவ்வரக்கர்கள் எப்படிப்பட்ட தவத்தைச் செய்தனர்?' என்று கேட்க அகஸ்தியர் கூறலாயினர் - குதூகலமுள்ள ராகவ! அம் மூவரில் கும்பகர்ணன். எப்போதும் அறநெறி தவறாமல் கோடைக் காலத்தில் ஐந்து அக்னியின் மத்தியில் (நான்கு புறங்களிலும் தீயை வளர்த்தி மேலே சூரியன் எரிய) நின்று தவம் புரிந்தான். மழைக் காலத்தில் இருந்த இடம் விட்டு அசையாமல் வீராஸனமிட்டும் (வலது காலை இடது துடைமீது போட்டுக்கொண்டு உட்காருதல்) வீற்றிருந்தனன். பனிக் காலத்தில் ஜலத்தினிடையே நின்று கொண்டு தவம் புரிந்தனன் இப்படியாகப் பத்தாயிரம் வருஷங்கள் கழிந்தன.
தர்மமூர்த்தியான விபீஷணன் மிகவும் பரிசுத்தனாய் ஒரே காலை ஊன்றி நின்று ஐயாயிரம் வருஷங்கள் தவம் புரிந்தான். அப்போது (ஐயாயிரமாண்டு முடிவில்) அப்ஸரஸ்திரீகள் நர்த்தனமாடினர். பூமாரி பொழிந்தது. தேவதைகள் தோத்திரம் செய்தனர். மறுபடியும் ஐயாயிரம் ஆண்டுகள், முன்போலவே ஒரு காலில் நின்றுகொண்டு. சூரியனை நோக்கியவனாய், தலைக்கு மேல் இரு கைகளையும் தூக்கிக்கொண்டு, வேதமோதிக்கொண்டு ஸ்வர்க்கலோகத்தில் நந்தவனத்தில் நின்றுகொண்டு அவனும் பத்தாயிரம் வருஷங்கள் தவமியற்றினான்.
தசானனன் பதினாயிரம் வருஷங்கள் ஆஹாரமின்றிக் கடுந்தவம் புரிததான். அவன் ஒவ்வோர் ஆண்டின் முடிவிலும் தனது தலைகளில் ஒன்றை அக்கினியில் ஹோமம் செயது வந்தான். இப்படியாக ஒன்பதாயிரம் ஆண்டுகள் முடிய அவனது ஒன்பது தலைகள் ஹோமம் செய்யப்பட்டன. பிறகு பத்தாவது ஆயிரம் முடிந்ததும் பத்தாவது தலையையும் வெட்டி ஹோமம் செய்ய விரும்பியபோது பிரம்மதேவன் தேவர்களுடன் அவர் முன் அவனைப் பாரத்து, 'தசக்ரீவ! உனது தவத்தால் மிகவும் மகிழ்ந்தோம். சீக்கிரமாக உனக்கு வேண்டிய வரத்தைக் கேள். நீ கஷ்டப்பட்டுத் தவஞ் செய்தது போதும்” என்றார்.
அதைக் கேட்ட தசானனன் அகங்குளிர்ந்து பிரம்மதேவனை வணங்கி ஸந்தோஷத்தால் தழுதழுத்த குரலுடன், 'பிரபோ! எல்லாப் பிராணிகளுமே மரணத்தைக் கண்டு அஞ்சுகிறாகள். மிருத்யுவைப் போல சத்ரு வேறொருவரும் இலா். எனவே நான் மரணமடையாமல், அமரனாக இருக்க வரமருள்வீராக' என வேண்டினான். அதற்குப் பிரம்மா, 'அது இயலாத கார்யம். அதைத் தவிர வேறு
வரத்தைக் கேள்' என்றர். உலகத்தைப் படைக்கும் பிரம்மன் இப்படிச் சொல்ல ராவணன் மறுபடி அவரை வணங்கிக் கை கூப்பியவனாய் முன் நின்றுகொண்டு, 'தேவனே! கருடன், நாகங்கள், யக்ஷர்கள், அசுரர்கள், ராக்ஷஸர்கள், தேவதைகள் இவர்களால் எனக்கு மரணம் உண்டாகக்கூடாது. தேவர்களால் பூஜிக்கப்படும் பிரமனே! இதரப் பிராணிகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை. மனிதர்களை நான் அற்பப் புல்லுக்குச் சமானமாக எண்ணுகிறேன் என்றான். இப்படி ராவணன் வேண்ட, பிதாமஹன் அவ்வாறே ஆகுக என்று அருளினான். மேலும் அவனைப் பார்தது, 'தசக்ரீவனே! செய்த தவத்தால் மிகவும் ப்ரீதனான நான் உனக்கு மேலும் சில வரங்களைக் கொடுக்கிறேன். அதாவது உன்னால் அறுப்புண்டு ஹோமம் செய்யப்பட்ட உனது தலைகள் மறுபடி உனக்கு உண்டாகக் கடவன. அதே போல் நீ எப்போது எந்த விதமான உருவத்தை அடைய விரும்புகிருயோ அப்போது அவ்விதமான உருவமும் உனக்கு உண்டாகும். என மொழிந்தனன். உடனே அவனது தலைகள் உண்டாயின
பிறகு விபீஷணனைப் பார்த்து, 'குழந்தாய்! தர்மத்திலேயே நிலைகொண்ட நீ உனக்கு வேண்டிய வரத்தைக் கேட்பாயாக, உனது தவம் என்னை மகிழச் செய்துள்ளது' என்றான் பிதாமஹன். குளிர்ந்த கிரணங்களால் நிரம்பப்பெற்ற பூர்ணசந்த்ரன் போல் நற்குணங்கள் நிறைந்த விபீஷணன், கைகூப்பியவனாய் பிரம்மாவை வணங்கி, 'ஸ்வாமி! உனது தவத்தால் ஸந்தோஷமடைந்தேன் என்று திருவாய் மலர்ந்தருளியதாலேயே தன்யனானேன். மேலும் அடியேனை அநுக்ரஹித்து வரமளிக்க விரும்புவீரேயாகில் -
परमापद्गतस्यापि धर्मे मम मतिर्भवेत् ।
अशिक्षितं च ब्रह्मास्त्रं भगवन् प्रतिभातु मे ॥
பரமாபத்கதஸ்யாபி தர்மே மம மதிர் பவேத்|
அசிக்ஷிதஞ்ச ப்ரஹ்மாஸ்த்ரம் பகவந! ப்ரதிபாதுமே |
ஹே பகவானான தேவனே! நான் எந்த விதமான ஆபத்தை அடைந்தபோதிலும் எனது மனம் தர்மத்திலேயே நிலைபெற்றிருக்குமாறு அருள்புரிய வேண்டும். தவிரவும் அப்யாஸம் இல்லாமலேயே பிரம்மாஸ்திரம் எனக்கு விளங்க வேண்டும். அத்துடன் நான் எந்த எந்த (ப்ரம்மசர்யம் முதலிய) ஆச்ரமத்தை அடைந்தாலும் அந்த அந்த ஆச்ரமத்திற்கான தர்மங்களை அநுஷ்டிப்பதிலும் நிலையான புத்தியை உடையவனாகவும் இருக்க வேண்டும். இவையே எனது உயர்ந்த வரங்கள்; எனக்குப் பிடித்தமானவை; அருள்புரியவும்' என்றான். (இங்கு 'தர்மே, மம' என்கிற இடத்தில் தர்மே- நாராயணே. நாராயணனிடத்திலேயே என்று வ்யாக்யானித்துள்ளார்கள். 'ராமோ விக்ரஹவாள் தர்ம:' என்று தர்மசப்தத்தினால் ராமன் கூறப்படுகிறன் அல்லவா? தர்மத்தை அநுஷ்டிப்பவர்களுக்கு அடைய முடியாதது ஒன்று உண்டா?
பிரம்மதேவன் அவன் விரும்பிய வரங்களை அளித்ததுடன், அரக்கயோனியில் பிறந்திருந்தும் நீ தர்மாத்மாவாக விளங்குகிறபடியால் 'சிரஞ்சீவி'யாக இருக்கும் படியான வரத்தையும் கொடுத்தோம் என்றார்.
பிறகு பிரம்மா, கும்பகர்ணனுக்கு வரமளிக்க விரும்பியபோது, தேவர் அவரைப் பார்தது அஞ்ஜலி ஹஸ்தர்களாய், 'பிரம்மதேவரே! கும்பகர்ணனுக்குத தாங்கள் வரமளிக்காதீர்கள். ஏனெனில் மூர்க்கனான அவன் மூவுலகங்களையும் நடுங்கும்படி செய்துகொண்டிருப்பதைத் தாங்களே அறிந்துள்ளீர். இவன் வரமேதும் பெறாமலிருக்கும் போதே நந்தனவனத்தில் ஏழு அப்ஸரஸ்தரீகளையும், தேவலோகாதி பதியான இந்த்ரனின் வேலைக்காரர் பததுப் பேரையும், அநேக ரிஷிகளையும் மானிடர்களையும் கொன்று தின்றுள்ளான். வரங்களையும் பெற்றுவிட்டானானால் மூவுலகங்களையுமே பக்ஷித்துவிடுவான். ஆகவே, இவனுக்கு வரமென்கிற வ்யாஜத்தால் மோஹத்தை (மயக்கத்தை)க் கொடுக்கவும். இப்படிச் செய்தீரேயாகில் உலகிற்கு நன்மை செய்ததாகவும் ஆகும். இவனுக்கு வரங்கொடுத்து ஸம்மானம் செய்ததாகவும் இருக்கும். (லோகோநாம ஸ்வஸ்தி சைவம் ஸ்யாத் பவேதஸ்ய ச ஸம்மதி:) என்றனர்.
தேவர்களால் இவ்வாறு பிரார்த்திக்கப்பட்ட பிரம்மா ஸரஸ்வதியை மனத்தால் நினைத்தார். அந்தத் தேவியும் உடன் பிரமன் பக்கல் வந்தாள். அவளைப் பார்த்துப் பிரமன் பின்வருமாறு கூறினார்- •தேவி! நீ கும்பகர்ணனுடைய வாயில் தங்கி தேவர்களுக்கு விருப்பமான வாக்காக (மொழியாக) அவனது நாவினின்றும் வெளி வருவாயாக' என்று. அவ்வாறே என்ற ஸரஸ்வதி கும்பகர்ணன் நாவில் உறைந்தான்.
பிறகு சதுர்முகன் கும்பகர்ணனைப் பார்த்து, 'பெரிய கைகளை உடைய கும்பகர்ண ! தீ விரும்பும் வரம் யாது? கேள், கொடுக்கிறேன்'' என்று சொல்ல, அவனும், 'தேவதேவனே! யான் அநேகம் ஆண்டுகள் துயில் கொள்ள விரும்புகிறேன்' என்றான். பிரம்மாவும் அவ்வாறே ஆகுக என உரைத்து, தேவர்களுடன் தமதிருப்பிடம் சென்றார்.
ஸரஸ்வதி தேவியும் கும்பகர்ணனை விட்டகன்றாள். ஸரஸ்வதி அவனது வாக்கை விட்டகன்றதும் தன் தினைவைப் பெற்றான். மிகவும் துக்கத்தை அடைந்து, “நான் உயர்ந்த வரங்களையன்றோ கேட்கவிருந்தேன்? எனது நாவு ஏன் இப்படிப் பகன்றது? இதெல்லாம் தேவர்களின் சூழ்ச்சி என எண்ணுகிறேன்” எனச் சிந்தித்து முடிவு செய்தான்.
பிறகு அந்த மூன்று ஸஹோதரர்களும் மிகுந்த தேஜஸ்ஸை உடையவர்களாய் பிரம்மாவின் அனுக்கிரஹத்தைப் பெற்றவர்களாய்க்கொண்டு, தங்களது பிதா தவம் செய்யும் ச்லேஷ்மாதக வனத்தை அடைந்து சுகமாக வசிக்கலாயினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக