ஞாயிறு, 11 டிசம்பர், 2022

ராமாயணம்–உத்தர காண்டம் 7

பன்னிரண்டாவது ஸர்க்கம்


[ராவணன் முதலியவர்களின் விவாகம்,
ராவணனுக்கு மகன் பிறப்பு. அவனுக்குப் பெயரிடல்]


     இவ்வாறு லங்காதிபதியாக அபிஷேகம் செய்யப்பட்ட ராவணன் தனது ஸஹோதரியான சூர்ப்பணகையை, அரக்கா்குல சிரேஷ்டனும், காலகன் என்பவனின் புத்திரனுமான விதயுஜ்ஜிஹ்வன் என்பவனுக்கு மணம் செய்து கொடுத்தான்.
      பிறகு ஒரு ஸமயம் ராவணன் தனிமையில் வேட்டையாட நினைத்துக் கானகம் சென்றான்.. அங்கே திதியின் மைந்தனான மயன் என்பவன் புத்திரியுடன் ஸஞ்சரிப்பதைக் கண்டாள். அவனருகிற் சென்ற ராவணன் அவனைப் பார்த்து, ''தாங்கள் யார்? ஏன் இந்தக் கானகத்தில் கன்யகையுடன் ஸஞ்சரிக்கின்றீர்?'' என்று கேட்டான். அதற்கு மயன், “எனது வரலாற்றைக் கூறுகிறேன்' என்று பின்வருமாறு கூறினான்- 

         எனது பெயர் மயன் என்பதாம். ஹேமா என்கிற அப்ஸரஸ் ஸ்திரீயைப்பற்றி நீர் அறிந்திருப்பீர். அவள் மிக்க அழகுள்ளவள். தேவதைகள் அவளை எனக்கு மணம் . செய்து கொடுத்தனர், அந்த அழகியுடன் நான் ஐந்நூறு வருஷங்கள் கூடிக் களித்திருந்தேன். அவள் தேவகார்யார்த்தமாக என்னிடமிருந்து பிரிந்து சென்று பதின்மூன்று வருஷங்கள் ஆகின்றன. பதினான்காவது வருஷமும் வந்துவிட்டது. அவள் இன்னமும் திரும்பி வரவில்லை. நான் அவளுடைய ஞாபகார்த்தமாக ஸ்வர்ண மயமான ஒரு நகரத்தை உண்டுபண்ணினேன். அந்த நகரம் வஜ்ர வைடூர்ய ரத்தினங்களால் பளபளக்கும்படியாக எனது மாயசக்தியால் செய்துள்ளேன். எனது மனைவியின்றி, அதில் நான் மிகவும் வருத்தத்துடன் வஸித்து வருகிறேன். இவள் எனது மனைவியின் வயிற்றில் பிறந்தவள். எனது மகள். இவளுக்குத் தகுந்த கணவனைத் தேடும்பொருட்டு இவளுடன் இங்கெல்லாம் ஸஞ்சரிக்கின்றேன். பெண்ணிற்குத் தந்தையாக இருப்பதன் கஷ்டத்தை அறிந்தவன் நான். பெண்ணானவள் பிறந்த - புகுந்த இடங்களை ஸங்கடத்தில் ஆழ்த்தவும் கூடுமன்றோ ? எனவே இவளுடன் வரனைத் தேடுகின்றேன். இவளைத் தவிர்த்து எனக்கு மாயாவி என்றும், துந்துபி என்றும் இரண்டு குமாரர்களும் உள்ளனர். இதுதான் எனது லரலாறு' என்று. பிறகு ராவணணைப் பார்த்து  "நீர் யாரென்று நான் அறியலாமா?" எனக் .  கேட்டான். அதற்கு ராவணன். "புலஸ்த்ய வம்சஸ்தரான விச்ரவஸ் என்ற மஹரிஷியின் புதல்வனான தசக்ரீவன் எனப்படுபவன்" என்று கூறினான்.
       இப்படிக் கூறக் கேட்ட மயன். ராவணனை ரிஷிபுத்ரன் என அறிந்து மிகவும் ஸந்தோஷமடைந்தான்  அவனது வலிமையை முன்னமே கேட்டறிந்திருந்தபடியால் தனது மகளை அவனுக்கு மணம் செய்து கொடுக்க முடிவு செய்தான். பிறகு அவனைப் பார்த்து. புன்னகை செய்து, 'இவள் எனது புதல்வி; மந்தோதரீ என்பது இவளது பெயர். இவளை உமக்குக் கன்யகாதானம் செய்து கொடுக்கிறேன்' என்று கூறி. அங்கேயே தீ வளர்த்து விவாகமும் செய்து கொடுத்தான். ராவணனும் மிகுந்த ஸந்தோஷத்துடன் அவளை மணந்து கொண்டான். மயன் தான் கடுந்தவம் புரிந்து பெற்றதாயும், அமோகமும் (வ்யர்த்தமாகாததும்) ஆன சக்தி என்கிற ஓர் ஆயுதத்தையும் ராவணனுக்குக் கொடுத்தான். அந்தச் சக்தி ஆயுதத்தால் தான் ராவணன் லஷ்மணனை யுத்தத்தில் அடித்து மூர்ச்சையடையும்படி செய்தான். ராவணன் தான் மணம் செய்துகொண்டு இலங்கை திரும்பியதும், தம்பியான கும்பகர்ணனுக்கு வைரோசனனின் பெண் வயிற்றுப் பேத்தியான வஜ்ரஜ்வாலை என்பவளையும், விபீஷணனுக்கு கந்தர்வராஜனான சைலூஷனுடைய குமாரியான ஸரமா என்பவளையும் மணம் புரிவித்தான். மானஸஸரஸ்ஸின் கரையில் இந்தக் குழந்தை பிறந்திருக்கும்போது மழைப் பெருக்கால், அந்த ஸரஸ் நிரம்பி வழிந்து குழந்தை இருக்குமிடம் வரையில் ப்ரவாஹம் வந்ததாம். அப்போது அவள் தாய் ஸர:-ஹே தடாகமே, மா-வேண்டாம். (பெருக்கெடுக்காதே) என்றாளாம். ப்ரவாஹம் நின்றுவிட்டதாம். அதனாலே இவளுக்கு ஸரமா என்ற பெயர் பிரஸித்தியாயிற்றாம்.
          இப்படியாக இம் மூவரும் மணந்துகொண்டு சுகமாக வாழ்ந்து வந்தனர்.
          பிறகு மந்தோதரீ மேகநாதன் என்கிற மகளைப் பெற்றாள். அவனே இந்த்ரஜித் என்று உங்களால் கூறப்பட்டவன். அவன் குழந்தையாகப் பிறந்தவுடனேயே அழுதான். அது மேகங்களின் இடிமுழக்கம் போலிருந்ததாம். ஆகையாலேயே அவனுக்கு மேகநாதன் எனப் பெயரிட்டனன் அவன் தந்தை. அந்தக் குழந்தை அந்தப்புர ஸ்த்ரீகளாலே வளர்க்கப்பட்டு வந்தான். எப்படிப் போலெனில் நெருப்பானது சுள்ளி (சிறிய விறகு)களால் வளர்க்கப் படுவது போல் அது கண்டு அவன் தாய்தந்தையர் மிக மகிழ்ந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக