வியாழன், 15 டிசம்பர், 2022

ராமாயணம்–உத்தர காண்டம் 12

பத்தொன்பதாவது ஸர்க்கம்


[ராவணன் பல அரசர்களை வெல்வதும்,
அயோத்யாதிபதியான அநாணியனிடமிருந்து சாபம் பெறுவதும்]


மருத்தனை ஜயித்த ராவணன் பூவுலகில் பல அரசர்களை வென்றும், பலரால் "ஜிதோஸ்மி' என்று ஒப்புக்கொள்ளப்பட்டவராகவும் உலாவி வந்தான். அவர்களில் துஷ்யந்தன் ஸுரதன். காதி, புரூரவஸ் முதலியவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
பிறகு அநரண்யன் என்பவரால் பரிபாலிக்கப்பட்டும், அமராவதிக்கு ஒப்பானதுமான இந்த அயோத்யா நகரத்திற்கு வந்தான். அரசனிடம் சென்ற ராவணன் அவனைப் பார்த்து, "என்னுடன் சமர் புரிகிறயா? அல்லது தோற்றேன் என்று ஒப்புக்கொள்கிறாயா?" என்று கேட்டான்..
மஹாபாபியான ராவணனுடைய இந்த வார்த்தையைக் கேட்ட அநரண்யன் மிகுந்த கோபத்துடன், ''துஷ்டனே! உன்னுடன் நான்  யுத்தமே செய்கிறேன்" என்று கூறினார். பத்தாயிரம் யானைகளுடனும் இருபதாயிரம் குதிரைகளுடனும் அநேகமாயிரம் வீரர்களுடனும் கூடியவராய் ராணைனுடன் யுத்தம் செய்ய ஆரம்பித்தார். மிகவும் உக்ரமாகப் போர் நடைபெற்றது. ராவண ஸைன்யத்துடன் மோதிய அரசர் படைகள் வெகு சீக்கிரமாகவே அக்னியில் ஹோமம் செய்யப்பட்ட ஹவிஸ்ஸைப் போலவும் ஸமுத்திரத்தை அடைந்த நதிகள் போலவும் நாசத்தை அடைந்தன. இப்படித் தமது படைகள் அழிவதைக் கண்ட அரசர் மிகவும் கோபம் கொண்டவராய் இந்திரனுடைய தநுஸ்ஸிற்கு ஒப்பான தமது வில்லில் நாணேற்றி மிகக் கடுமையான பாணங்களால் ராவணனது அமாத்யர்களான மாரீசன் முதலானவர்களை அடித்தார். அவரது பாணவர்ஷத்தின் முன் நிற்க மாட்டாதவர்களான அவர்கள் பயந்து ஓடினர். பிறகு அநரண்யன், நூற்றெட்டுப் பாணங்களால் ராவணனுடைய சிரஸ்ஸின் மீது அடிததார். ஆனால் அந்த பாணங்கள் ராவணனது தலையில் சிறு கீரல்களைக்கூட உண்டாக்கவில்லை.
அது எப்படி இருந்ததெனில் மேகத்திலிருந்து வெளிப்படும் மழைத் தாரைகள் மலைமுகட்டில் விழுந்து எப்படிச் சிதறிப்போமோ அவ்வாறு இருந்தது. இப்படியாகத் தனது அமாத்யர்கள் ஓடுவதையும் தனது தலை மீது பாணங்கள் விழுவதையும் கண்ட ராவணன் மிகுந்த கோபத்துடன், அநரண்யனது சிரஸ்ஸின் மீது ஓங்கி (கையால்) அடித்தான். வஜ்ராயுதத்தின் தாக்குதல் போன்ற அந்த அடியினால் பீடிக்கப் பட்ட அரசர் ரதத்திலிருந்து கீழே விழுந்தார். இடியினால் தாக்குண்ட பனை மரம் போல் கீழே விழுந்த அநரண்யனைப் பார்த்து ராவணன். 'அரசனே! என்னை எதிர்த்து நின்றாயே, இப்போது நீ அடைந்ததென்ன? அரச சுகத்தில் ஈடுபட்டிருந்த நீ என்னைப்பற்றியும், எனது பராக்ரமத்தைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்க மாட்டாய் என நினைக்கிறேன். என்னை எதிர்த்து நிற்பவன் இவ்வுலகினில் எவருமில்லை’ என்று கூறினான்.
இப்படி ராவணன் கூறக்கேட்ட அநரண்யன். ''ராவண! காலத்தின் கோலத்தை யாராலும் மாற்ற முடியாது. தற்பெருமை கூறிக் கொள்ளும் உன்னால்  நான் கொல்லப்பட்டதாக கர்வம் கொள்ளாதே. காலதேவனாலேயே நான் ஜயிக்கப்பட்டேன். நீ அதற்குக் காரணபூதனாக மட்டுமேயாகிறாய் என்பதை உணரவும். உன்னுடன் யுத்தம் செய்த நான் தோற்று ஓடினேனா? இக்ஷ்வாகு வம்சத்தையே நீ அவமதித்துவிட்டாய். ஒன்று மட்டும் கூறுகிறேன் கேட்டுக் கொள். நான் , செய்த தான தர்மங்கள், தவங்கள், ப்ரஜைகளின் பரிபாலனம் இவை நேர்மையுடன் செய்யப் பட்ட தாயிருப்பின் இதே எனது வம்சத்தில் பிறக்க இருக்கும் தசரதகுமாரனால் உனது உயிர் பறிக்கப்படும். இது ஸத்யம்'' என்று கூறிப் ப்ராணனை விட்டார்.
இப்படி அநரண்யன் கூறி முடித்தபோது வானில் தேவ துந்துபிகள் முழங்கின. ஆகாயத்திலிருந்து பூமாரி பொழிந்தது, இப்படிச் சாபத்தைப் பெற்றான் ராவணன்.


இருபதாவது ஸர்க்கம்
[நாரத ராவண ஸம்வாதம். ராவணன் யமனை ஜயிக்க யமபுரம்
செல்லுதல்.]


இப்படியாக ராவணன் பூவுலகில் உள்ளவர்களைப் பயமுறுத்திக் கொண்டு ஆகாசமார்க்கமாக ஸஞ்சரித்தான். அப்போது ப்ரம்ம புத்திரரான நாரத மகரிஷி அவனை அணுகினார். ராவணனும் அவரை வணங்கி உபசரித்து அவருடைய வருகையின் காரணத்தைக் கேட்டான். அதற்கு அவர், "ராவண! மஹாவிஷ்ணு அரக்கர்களை வதம் செய்வது போல் நீயும் கந்தர்வர், நாகர் முதலானவர்களை வென்று வருவதைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியம் அடைந்துள்ளேள். ஆயினும் ஒன்று சொல்ல விரும்புகிறேன். அதைக் கேட்ட பிறகு உன் மனத்திற்குத் தோன்றியதைச் செய்வாயாக. அதாவது இந்த நிலவுலகத்தில் உள்ளவர்கள் உன்னால் வதைக்கப்படுவதை நான் விரும்பவில்லை. ஏனெனில் இவர்கள் எப்போதுமே ம்ருத்யுவுக்கு வசப்பட்டவர்கள். தானே அழிவுறும் இயல்பினர்கள். தெய்வத்தால் வெல்லப்பட்டவர்கள், பசி வியாதி துன்பம் இவைகளுக்கு உட்பட்டவர்கள். ஆதலால், இலங்கேச்வர! இவ்வுலகத்துப் பிராணிகளைக் கொண்டு செல்லும் யமதர்மனை ஜயிப்பாயாகில் ஸர்வத்தையும் ஜயித்ததாக ஆகும்” என்று கூறினார்.
இதைக் கேட்ட ராவணன் மந்தஹாஸத்துடன் நாரதரைப் பார்த்து, ''தேவகந்தர்வ பாடகர்களுக்கு விருப்பமானவரே! சண்டையைக் காண விரும்புமவரே! நாரத! நான் இப்போது ரஸாதலத்தை வெல்வதற்காகப் புறப்பட்டுள்ளேன். பிறகு மூவுலகங்களையும் ஜயித்து என் வசமாக்கிக்கொள்வேன். பிறகு ஸமுத்திரத்தைக் கடைந்து அமுதத்தையும் எடுக்க முயற்சி செய்வேன்' என்றான்.
இப்படிக் கூறக் கேட்ட நாரதர் ராவணனிடம், "இதோ இந்த மார்க்கமாகச் செல். மிக்க கஷ்டமான இந்த வழிதான் யமபட்டணத்திற்குச் செல்வது” என்றார். இதைச் செவியுற்ற ராவணன், “நாரதரே, இதோ இப்போதே செல்கிறேன். வெல்கிறேன் யமதர்மனை. பிறகு லோகபாலகர்களையும் முன்பு ப்ரதிஜ்ஞை செய்தபடி வதைக்கிறேன்'' என்று கூறி வணங்கித் தென்திசை நோக்கிப் புறப்பட்டுச் சென்றான் மந்திரிகளுடன்.
மஹாதேஜஸ்வியான நாரதமகரிஷி, ஒரு முஹூர்த்த காலம் பின்வறுமாறு   ஆலோசித்தார்—"இந்த மூவுலகங்களும் ஆயுஸ்ஸின் முடிவின் தர்மப்படி எந்தக் காலனால் தண்டிக்கப் படுகின்றனவோ அந்தக் காலன் இந்த ராவணனால் எவ்வாறு தண்டிக்கப்படப் போகிருன்? அவரவர் கொடுத்த - செய்த கார்யங்களுக்கு அநுகுணமான பலாபலன்களைக் கொடுக்கும் கடமை வீரனான காலனை எவ்வாறு வெல்வான்? ஸகலத்திற்குமே ஸாதனமான அக்காலனையும் வெல்வதற்குரிய சக்தி இந்த ராவணனிடம் இருக்கிறதா? இதனைக் காண எனக்கு மிக்க ஆசையாக இருக்கிறது. எனவே அவர்களது யுத்தத்தைக் கண்டு களிப்புறுவேன்'' எனத் தீர்மானித்து ராவணன் அங்கு செல்வதற்கு முன்பாகவே அங்கே சென்று விஷயத்தைக் கால தேவனிடம் தெரிவிக்கக் கருதிச் சம்யமபுரம் போய்ச் சேர்ந்தார்.



38


37

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக