செவ்வாய், 13 டிசம்பர், 2022

ராமாயணம்–உத்தர காண்டம் 10

பதினாறாவது ஸர்க்கம்


[நந்திதேவனின் சாபம், கைலாஸமலையை ராவணன் அசைத்தல்,

அதன்கீழ் அவனது கைகள் சிக்கிக் கொள்வது, சிவனைத் துதித்தல்,

'ராவணன்' என்று பெயர் பெறுதல் முதலியன.]

  
         கைலாஸ பர்வதத்தின் ப்ரதேசமாயும், ஸ்கந்தன் பிறந்த இடமுமான சரவணம் என்கிற ஸ்தானத்திற்குச் சென்றான் தசக்ரீவன் புஷ்பக விமானத்துடன்.  அந்த வனமானது ஸ்வர்ண மயமாகக் காட்சியளித்தது. ஒளிமயமான அந்தப் பிரதேசம் இரண்டாவது சூர்ய மண்டலம் போல் விளங்கியது. அவன் அந்த வனம் அமைந்த மலை மீது புஷ்பகத்துடன் செல்ல விரும்பினான். ஆனால் அந்த விமானம் மேலே செல்லவில்லை. தடைப்பட்டு நின்றுவிட்டது. இதைக் கண்ட தசக்ரீவன், மந்திரிகளைப் பார்த்து, "நமது விருப்பப்படி செல்லக் கூடிய இந்த விமானம், ஏன் மேலே செல்லாமல் நின்றுவிட்டது? இந்த மலை மீதுள்ள யாரோ ஒருவன் இதைச் செல்லவொட்டாமல் தடுத்திருப்பானா?" என்று கேட்டான். 

          இதைக் கேட்டு மந்திரிகளுள் ஒருவனும் புத்திசாலியுமான மாரீசன் என்பவன், "ராஜாவே! இந்த விமானம் காரணமேதுமின்றித் தடைப்பட்டு நிற்காது. ராஜராஜனான குபேரனாலாவது தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்படியின்றேல், குபேரனுக்குச் சொந்தமான இது தலைவன் இல்லாமையால்,    தானேயாவது செல்லாமல்  இருக்க வேண்டும்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே-அங்கு கருப்பு கலந்த மஞ்சள் நிறத்தவனாயும் மொட்டைத் தலையனும், மஹாபலிஷ்டனுமான நந்திதேவன் அவர்கள் பக்கம் தோன்றி, சிறிதும் பயமின்றி தசக்ரீவனைப் பார்த்து. "நான் மஹாதேவனான சங்கர பகவானின் வேலைக்காரன். இந்த மலை மீது சங்கரன் க்ரீடை செய் (விளையாடு)கிறார். தேவர்களோ யக்ஷர்களோ மனுஷ்யர்களோ கந்தவர்களோ பக்ஷிகளோ ஸர்ப்பங்களோ மற்றவர்களோ இதன் மீது செல்லக் கூடாது. ஆகவே புத்தி கெட்டவனே! நீ இதன் மீது செல்ல விரும்பாதே. திரும்பிச் சென்றுவிடு. மீறினால் நாசத்தையடைவாய்" என்றனன்.
         இப்படி நந்திதேவன் கூறக் கேட்ட தசானனன் - புஷ்பக விமானத்திலிருந்து கீழே இறங்கி கோபத்தால் சிவந்த கண்களை உடையவனாயும், அசைகின்ற கர்ண குண்டலங்களை உடையவனுமாகி "யாரவன் சங்கரன்?'' என்று கூறிக்கொண்டே மலையடிவாரத்தை யடைந்தான். அதே ஸமயம் அங்கு மலையடிவாரத்தில் தசானனன் முன்பாக, பளபளக்கும் கூர்மையையுடைய சூலத்தைக் கையிலேந்திய வனாக நந்திதேவன் இரண்டாவதான பரமசிவனைப் போல் நின்று கொண்டிருந்தான்.
      அப்படி நின்ற நந்தியைக் கண்ட தசானனன், "குரங்குமுகமுடையவனே!" என்று உரக்கச் சொல்லிச் சிரித்தான். இவ்வாறு கூறிச் சிரித்ததைக் கண்ட நந்திதேவன் மிகவும் கோபமடைந்து அவனருகில் சென்று, "கெட்ட புத்தியுடையவனே! 'குரங்கு முகமுடையவன்' என்று என்னை நீ பரிஹஸித்தபடியால், என் போன்ற உருவமுடையவர்களும், எனக்கு நிகரான பராக்ரமத்தை உடையவர்களுமான பலர் உண்டாகப்போகிறார்கள். குரங்குகளான அவர்கள் நகங்கள் பற்கள் இவற்றினை ஆயுதங்களாக உடையவர்களாகவும், மிகவும் கொடியவர்களாயும், மனத்தைப் போல் வேகமாகச் செல்பவர்களாயும், சண்டை செய்வதையே நோக்கமாகக் கொண்டவர்களாகவும், மலைகள் போன்றவர்களாயும் இருக்கப்போகுமவர் களால் உனக்கும் உனது குலத்திற்கும்  உனது ராஜ்யத்திற்கும் அழிவு  உண்டாகப்போகிறது.  இப்போதேகூட நான் உன்னை அழித்திடுவேன். ஆனால் நீயே கெட்ட நடத்தைகளால் அழிந்து போயுள்ளாய்" என்று எச்சரித்தான். இப்படி நந்திதேவன் கூறியதும் ஆகாயத்திலிருந்து பூமாரி பொழிந்தது. தேவதுந்துபி வாத்யங்கள் முழங்கின.
   இவற்றினை லக்ஷ்யம் செய்யாத தசானனன் அந்த மலையருகில் சென்று, "ஹே பசுபதியே! இந்த மலைதானே எனது புஷ்பக விமானத்தை மேலே செல்லவிடாமல் தடுத்தது. இதன் மீதுதானே சங்கரன் க்ரீடை செய்கிறான். இந்த மலையையே இல்லாமற் செய்துவிடுகிறேன். அரசன் போல் இதன் மீது அமர்ந்துள்ளவனின் ப்ரபாவம் எப்படிப் பட்டதென்று காண்கிறேன். தனக்கு ஏற்பட்டுள்ள இந்த ஆபத்தை அவன் உணரட்டும்" என்று சொல்லிக்கொண்டு தனது கைகளை மலையினடியிற் செலுத்தியவனாய் அதை அசைத்தான். அப்போது அந்த மலை அசைந்தாடியதால் அதிலுள்ள சிவ கணங்கள் அசைந்து ஆடின. சிறிதே ஆட்டம் கண்ட பார்வதிதேவியும் மஹேச்வரனை அணைத்துக்கொண்டாள்.
       ஹே ராம சந்த்ர ! அப்போது தேவச்ரேஷ்டரான ஹரன் விளையாட்டாக, தனது காலின் பெருவிரலினால் அந்த மலையை அழுத்தினான். சிறிது சலனமற்று ஸ்திரமாக நின்ற மலையின் கீழே அகப்பட்டுக்கொண்ட ராவணனது கைகள் சக்தியற்றுப் போயின இதைக் கண்ட தசானனது மந்த்ரிகள் ஸ்தம்பித்துப் போயினர். அப்போது அவன் கைகளை விடுவிக்க முடியவில்லையே என்கிற கோபத்தாலும், அவற்றில் உண்டான வலியினாலும் பீடிக்கப்பட்டவனாய்ப் பெருங்கூச்சலிட்டான். அந்தப் பெருங்கூச்சலினால் (சப்தத்தால்) மூவுலகங்களும் பயந்து நடுங்கின. மனிதர்களனைவரும் உலகுக்கே நாசமுண்டாயிற்று என்று நடுங்கினர். நடுவானில் ஸஞ்சரித்துக்கொண்டிருந்த தேவர்கள் தமது மார்க்கத்தை விட்டு வழுவிச் சென்றனர். மலைகள் வெடித்துச் சிதறின. யானைகள் பிளிறின. பிராணிகள் அனைத்தும் பயந்து நின்றன. ஸமுத்திரம் கொந்தளித்தது. பூமியும் அசைந்தது. ஹே ராம! நாகங்கள் கந்தவர்கள் இப்படி அனைவருமே பயந்தனர். இப்படியாக அனைவருமே எதனால் இப்படியாச்சுது என்று அறியாவண்ணம் இருந்தனர். 

          இப்படி ரோஷத்துடனும் வலியுடனும் சத்தமிடும் தசானனனைக் கண்ட அவனது மந்த்ரிகள். ''ஹே தசானன! இப்போது நீ செய்ய வேண்டியது யாதெனில் உமையின் கணவனும், நீலகண்டனுமான அந்தச் சங்கரனை திருப்தி செய்விப்பதொன்றே. அந்தச் சங்கரனைத் தவிர்த்து வேறு யாரும் உன்னை ரக்ஷிக்க சக்தரல்லர், நீ வணக்கத்துடன் அவனை ஸ்தோத்ரம் செய்யவும். கருணாமூர்த்தியான அவன் உன்னை நிச்சயாக ரக்ஷிப்பான்" என்றனர்.
       மந்திரிகளால் உணர்த்தப்பட்ட தசக்ரீவன், மஹேச்வரனை அநேக விதமான **ஸாமாக்களால் ஸ்தோத்ரம் செய்தனன். இப்படியாக ராவணன் ஆயிரம் வருஷங்கள் ஸ்தோத்ரம் செய்தான்.
ஸந்தோஷமடைந்த சங்கரன் அந்த மலையின் சிகரத்தில் தோன்றியவராய் தசானனனைப் பார்த்து 'உனது கைகளை விடுவித்தேன் உனது துதியால் மனமகிழ்ச்சி யடைந்தேன். மலை அழுத்தியபோது நீ இட்ட சப்தத்தினால் மூவுலகங்களுமே பயந்து நடுங்கின. அந்த நடுக்கத்திற்குக் காரணம் உனது கத்தலே. 'சத்தமிட்டு உலகத்தை நீ நடுங்கி வைத்தபடியால் உனக்கு இது முதல் 'ராவணன்' என்கிற பெயர் உண்டாகட்டும். நீ உன் இஷ்டப்படிச் செல்லலாம். தேவர்களோ மனிதர்களோ யக்ஷர்களோ மற்றும் இவ்வுலகிலுள்ள அனைவருமே உன்னை ராவணன் என்றே அழைக்கக்கடவர். நான் உனக்கு அனுமதியளித்துவிட்டேன். இனி நீ உன் இஷ்டப்படிச் செல்லலாம்” என்று அருளிச்செய்தார்.
           இவ்வாறு சம்புவினால் அநுக்ரஹிக்கப்பட்ட ராவணன், அவரைப் பார்த்து,"மஹாதேவனே! உமக்கு என்னிடம் ப்ரீதி இருக்குமேயாகில் யான் வேண்டும் வரத்தை அளித்திட வேண்டும். அதாவது தேவர்கள், கந்தர்வர்கள் நாகர்கள் ராக்ஷஸர்கள் இவர்களால் எனக்கு மரணம் உண்டாகக்கூடாது என்கிற வரத்தைப் பிரம்மதேவனிடமிருந்து பெற்றுள்ளேன். மனிதர்களை நான் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. எனக்கு நீண்ட ஆயுளையும் உயர்ந்ததான "சஸ்த்ரத்தையும் அளித்திடவும்" என்று பிரார்த்தித்தான். சங்கரனும் உனது மிகுதியுள்ள ஆயுளை உன் இஷ்டப்படி கழித்திடுவாய் என்று ஆசி கூறி, உயர்ந்த சந்த்ரஹாஸம் என்கிற கத்தியை அவனுக்கு அளித்துப் பின்வருமாறு கூறினார் "ராவணா இதை நீ அநுதினமும் பூஜித்து வரவேண்டும். இதை அவஜ்ஞை செய்யக்கூடாது. அப்படி ஏதாவது நேர்ந்தால் இது மறுபடி என்னிடமே திரும்ப வந்துவிடும்''
        இப்படி மஹேச்வரனால் பெயரிடப்பட்ட ராவணன் அவரை வணங்கி விடைபெற்றுப் புஷ்பக விமானத்தில் அமர்ந்து உலகத்தில் ஸஞ்சாரம் செய்தான்,   அவனது பராக்ரமத்தை அறியாத பலர் . அவனுடன் சண்டையிட்டுத் தோற்றுப் போயினர்.  அவனது வலிமையை அறிந்த பலர் அவனிடம் தோழமை கொண்டு வாழ விழைந்தனர்.
                   இவ்வாறாகக் கர்வம் கொண்ட ராவணன் உலகங்களைப் பயமுறச் செய்து வாழ்ந்து வந்தான்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக