செவ்வாய், 13 டிசம்பர், 2022

ராமாயணம்–உத்தர காண்டம் 11

பதினேழாவது ஸர்க்கம்


(வேதவதியின் கதை, அவளால் ராவணன் பெற்ற சாபம் முதலியன ]


            ஹே ராமசந்திர ! பிறகு ஒரு ஸமயம் ராவணன் தனது விமானத்தில் அமர்ந்து கொண்டு ஹிமயமலையடிவாரத்தில் ஸஞ்சரித்துக் கொண்டிருந்தான். அங்கு மிகவும் அழகுள்ளவளும், மான்தோலைத் தரித்தவளாயும், சடை முடியையுடையவளும், தேவகன்யகை போல்  விளங்குகிறவளும் தவம் செய்து வருபவளுமான ஒரு கன்யையைக் கண்டான். அவளைக் கண்டதும் காமவயப்பட்டவனாய் அவளருகிற் சென்று, புன்சிரிப்புடன் "பெண்ணே! மங்களமானவளே! உனது யெவளனப் பருவத்திற்குத் தக்க கார்யமல்லவே நீ செய்வது ! உனது அழகிற்கு உற்றதல்ல உனது செயல். கண்டவரனைவரும் மயங்கும் விதமானது உனது ரூபம். மங்களகரியானவளே! இந்த நியமம் பிரயோஜனமற்றது. நீ யார் ? நீ செய்வது யாது? உன்னை வளர்ப்பவா் யார்? உன்ளைப் புணர்பவர் மிகவும் புண்யம் செய்தவரேயாவர். இந்த எனது கேள்விகளுக்கு பதில் கூறவும், எதற்காக இந்தக் கடினமான தவக்கோலம்?'' எனக் கேட்டான்.
         இவ்வாறு ராவணனால் கேட்கப்பட்ட அந்தப் பெண், அவனை முறைப்படி உபசரித்து. "நான் ப்ருஹஸ்பதியின் புதல்வரும், அவரைப் போலவே புத்திசாலியுமான குசத்வஜர் என்பவரின் புதல்வி. இடையறாது அவர் செய்த வேதாப்யாஸத்தின் பயனாகப் பிறந்து வளர்ந்தவள் நான். எனவே எனது பெயரே "வேதவதீ" என்பதாம். மிக்க ரூபவதியான என்னை மணந்துகொள்ளத் தேவர்களும், கந்தர்வர்களும், யக்ஷர்-ராக்ஷஸர், நாகர்கள் என்றெல்லோரும் விரும்பிக் கேட்டனர். ஆனால் எனது பிதா அவர்களில் யாருக்கும் என்னைக் கன்யகாதானம் செய்து கொடுக்க விரும்பவில்லை. ஹே நிசாசரனான ராவணனே! ஏன் மறுத்து விட்டார் என்பதையும் கூறுகிறேன், கேட்டுக் 'கொள்! மூவுலகங்களுக்கும் அதிபதியான ஸ்ரீமந் நாராயணனையே அவரது ஜாமாதாவாக ஆக்கிக் கொள்ள விரும்பினார். ஆகவேதான் மற்றவரை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

          'இப்படி அவர் மறுத்துவிட்டதனால் கோபம் கொண்ட தம்பன் என்னும் அரக்கன், இரவில் அவர் உறங்கும்போது அவரைக் கொன்று விட்டான். மஹாபதிவ்ரதையான எனது தாயார் இறந்த கணவரின் உடலைத் தழுவியவாறே தீக்குளித்துவிட்டாள். இறந்த எனது தந்தையின் இஷ்டத்தைப் பூர்த்தி செய்விக்கக் கருதி, நாராயணனையே பதியாக்கிக்கொள்ள விரும்பி, ப்ரதிஜ்ஞை செய்துகொண்டு, கடுந் தவம் புரிந்து வருகிறேன். ஹே ராக்ஷஸச்ரேஷ்டனே! இதுதான் எனது சரிதம். நீ கேட்டபடி அனைத்தையும் கூறிவிட்டேன். ஸ்ரீமந் நாராயணனே எனது பர்த்தா. புருஷோத்தமனான மற்றெவரும் எனக்கு பர்த்தாவல்ல. அந்த மஹாநுபாவனை அடைவதற்காகவே கடுந்தவத்தை மேற்கொண்டுள்ளேன்.' ஹே ராஜன்! பௌலஸ்த்ய நந்தனனான உன்னையும் நான் அறிவேன். ஏன், எனது தவ வலிமையால் இவ்வுலகிலுள்ள அனைத்தையுமே நான் அறிவேன், சென்று வா' என்றாள்.
           கடுமையான தவ வலிமையுள்ள வேதவதி இவ்வாறு கூறியதும் ராவணன் விமானத்திலிருந்து கீழே இறங்கி வந்து, காமவயப்பட்டவனாக அவளைப் பார்த்து, “ஹே அழகிய இடையையுடையவளே! நீ மிகவும் கர்வமுள்ளவளாக இருக்கிறாய். ஆகையால் தான் உன்னுடைய புத்தியும் இப்படியாயிற்று, மான்போன்ற கண்களை யுடையவளே! நற்குண ஸம்பந்தையான நீ இவ்வாறு கூறுவது தகாது. மூவுலகிலும் சிறந்த வடிவழகுள்ள நீ இவ்வாறு ப்ரதிஜ்ஞை பூண்டு கடுந்தவம் புரிந்து வந்தால் உனது யௌவனந்தான் பாழாகும். நான் சொல்வதைக் கேள். நான் இலங்காபுரிக்கு அதிபதி. என் பெயர் தசக்ரீவன் என்பதாம். என்னைப் பர்த்தாவாக அடைந்து நீ ஸகல போகங்களையும் அநுபவிப்பாயாக. ஹே அழகியவளே! நீ "விஷ்ணு" என்று கூறுகிறாயே; அவன் யார்? அவன் தவத்தாலோ பலத்தாலோ ஐச்வர்யத்தாலோ எனக்கு ஸமானமாகமாட்டான். அவனை நீ விரும்பாதே" என்றான்.
     இதைக் கேட்டுக் கடுங்கோபமடைந்த வேதவதியானவள் ராவணனைப் பார்த்து, "ஹே அரக்கர் தலைவனே! எல்லோராலும் வணங்கத்தக்கவனும். மூவுலகங்களுக்கும் அதிபதியாகவுமுள்ள மஹாவிஷ்ணுவைக் குறித்து இவ்வாறு பேசாதே. உன்னைத் தவிர்த்து வேறு யாரும் அவரை அவமதிக்க மாட்டார்கள். புத்திமான்களுக்கு இது அழகல்ல" என்று உரைத்தாள்.
                  இப்படிக் கூறிய வேதவதியை ராவணன் கடுங்கோபம் கொண்டவனாய்த் தனது கையினால் அவளது தலைமயிரைப் பற்றினான்.

            அவனது கைவிரல்கள் தன் தலைமயிரில் பட்டதும் கோபமடைந்த வேதவதி தனது கையைக் கத்தியாகச் செய்து அந்தக் கூந்தலை வெட்டிவிட்டாள். பிறகு அவனைப் பார்த்து. ஜ்வலிக்கும் அக்னி போன்றவளாய் நின்றுகொண்டு, "துஷ்டனே! உன்னால் தீண்டப்பட்ட நான் உயிர்வாழ விரும்பவில்லை. உன் எதிரிலேயே அக்னியில் பிரவேசிக்கப் போகிறேன். ஆயினும் உனது மரணத்தின் பொருட்டு நான் மறுபடியும் உண்டாகப்போகிறேன் நான் ஸ்திரீயானபடியால் புருஷனான உன்னைக் கொல்வது தகாதது. உனக்குச் சாபம் கொடுப்பதும் நல்லதல்ல. அதனால் எனது தபஸ்ஸிற்கு ஹானி ஏற்பட்டுவிடும். நான் செய்த தபஸ் ஸத்யமானதாக இருந்தால் நான் அயோநிஜையாகப் பிறந்து தர்மாத்மாவால் வளர்க்கப்பட வேண்டும்" என்று கூறி அக்கினியில் பிரவேசித்து விட்டாள். அந்தச்சமயத்தில் தேவதைகள் பூமாரி பொழிந்தனர்.
       அவளே பிறிதொரு ஸமயம் தாமரைமலரில் பெண்குழந்தையாக உண்டானாள். அந்தக் குழந்தையை ராவணன் கண்டெடுத்துத் தனது அரண்மனைக்குச் சென்றான், மந்திரிகளிடம் இந்தக் குழந்தையைக் காண்பித்தான். ஸாமுத்ரிகா லக்ஷணமறிந்த மந்திரி இக்குழந்தையைக் கண்டதும் ராவணனைப் பார்த்து, "அரசே! இந்தக் குழந்தை இங்கிருந்தால் உனக்கும் இலங்கைக்குமே நாசம் ஏற்படும். எனவே இதை ஸமுத்திரத்தில் விட்டுவிடவும்" என்று சொன்னான். அதன்படியே ராவணன் அந்தக் குழந்தையைப் பெட்டியில் வைத்து ஸமுத்ரத்தில் விட்டான். அந்தக் குழந்தைதான் ஜனக மஹாராஜன் யாகார்த்தமாகப் பூமியைக் கலப்பையால் கர்ஷணம் (உழும்பொழுது) செய்யும் போது கண்டெடுக்கப்பட்டவள். ஆகையாலேயே ஸீதை என்றும் பெயர் பெற்றாள். உனக்கு மனைவியாகவுமானாள். நீ மஹாவிஷ்ணுவன்றோ? முன்பே அவளுடைய கோபாக்னியால் தஹிக்கப்பட்ட தசானனன் உனது பராக்கிரமத்தால் அழிவை அடைந்தான்.
     முன்பு க்ருதயுகத்தில் வேதவதி என்ற பெயருடன் இருந்தவளே. இந்தத் த்ரேதாயுகத்தில் ராவணனின் அழிவிற்காக ஜனக மஹாராஜனின் இல்லத்தில் உண்டாகி வளர்ந்தாள். மேலும் இவள் உனக்காக மனுஷ்ய லோகத்தில் உண்டாகப்போகிறாள் என்றார்.

பதினெட்டாவது ஸர்க்கம்


[ராவணன் மருத்தன் என்ற அரசன் செய்த வேள்வியை அழிக்கச் செல்லுதல்,
அங்குகூடியிருந்த தேவர்கள் பயந்து ஓடுதல் முதலியன,]


      இப்படி வேதவதி அக்கினியில் புகுந்தவளவில் ராவணன் தனது விமானத்திலேறிச் சென்றான். உசீரபீஜம் என்கிற தேசத்தின் வழியாகச் செல்லும்போது, அந்தத் தேசத்தரசனான மருத்தன் என்பவன் அங்கு யாகம் செய்வதைக் கண்டான். அந்த யாகத்தை ப்ருஹஸ்பதியின் ஸஹோதரரும் ப்ரஹ்மரிஷியுமான ஸம்வர்த்தர் என்பவர் முன்னின்று நடத்தினார். அதில் ஹவிர்பாகத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இந்திரன் முதலான தேவர்களே நேரில் வந்திருந்தனர்.
        அந்த யாகபூமியை அடைந்த ராவணனைக் கண்ட தேவர்கள், மிகவும் பயந்தவர்களாய், விலங்குகளாகவும், பறவைகளாகவும், உருப் பெற்றவர்களாக ஓடி ஒளிந்தனர்.
           இந்த்ரன் மயிலாகவும், யமன் காக்கையாகவும், குபேரன் ஓணானாகவும், வருணன் ஹம்ஸமாகவும் வடிவெடுத்தனர். மற்றத் தேவர்களும் ஓடி மறைந்தனர்.
        சத்ருக்களை வெல்லும் ஆற்றல் பெற்ற ராவணன் நேராக யஜமானனான மருத்தனிடம் சென்றான். இது எப்படி இருந்ததெனில் நாயானது யாகசாலையில் புகுந்தால் எப்படி இருக்குமோ அவ்வாறு இருந்தது.
     அப்போது ராவணன் அவ்வரசனைப் பார்த்து, ' நீ என்னுடன் சமர் புரிய வா அல்லது தோற்றேன் என்று ஒப்புக் கொள். எதைச் செய்யப் போகிறாய்? என்றான்.
        இப்படிப் பேசக் கேட்ட மருத்தராஜா. 'யார் நீ?" எனக் கேட்டான். அதற்கு ராவணன் பெரிதாகச் சிரித்துக்கொண்டு பின் வருமாறு கூறினான்-
     "ஏ அரசனே! உன்னுடைய இந்த வார்த்தை என்னைப் பிரீதி யடையச் செய்கிறது. என்னைப் பற்றிக் கூறுகிறேன் கேட்கவும்- நான் குபேரனின் தம்பி ராவணன் என்னை நீ தெரிந்து கொள்ளவில்லை. இம்மூவுலகிலும் என்னை அறிந்திராதவன் நீ ஒருவனே யாகிறாய். உடன்பிறந்தவனை ஜயித்து அவனிடமிருந்து பறித்துக் கொள்ளப்பட்டதே இந்தப் புஷ்பக விமானம்'' என்றான்,

      இதைக் கேட்ட மருத்தன் ராவணனைப் பார்த்துப் பரிஹாஸத்துடன் “அப்படியா? நீ மிகவும் தன்யனாகிறாய். ஏனெனில் ஜ்யேஷ்டனான உடன்பிறந்தோனை யுத்தத்தில் ஜயித்தாயல்லவா? செய்யக் கூடாததைச் செய்து அதையே பெருமையாகவும் கூறிக்கொள்வது மிக மிக மெச்சத்தக்கது! எப்படிப்பட்ட தனத்தைச் செய்து இப்படியான வரத்தைப் பெற்றனையோ? இந்த உனது பௌருஷம் கேட்கக் கூட அஸஹ்யமாக உள்ளது. “என்று கூறியதுடன், 'நில் நில்!  இங்கிருந்து நீ உயிருடன் திரும்பமாட்டாய்” என்றும் கூறிக்கொண்டு ராவணனுடன் யுத்தம் செய்ய விரும்பினான்.
    அப்போது அங்கு ஆசாரியராக இருந்த ஸம்வர்த்த முனிவர். அரசனைப் பார்த்து ஸ்நேஹபாவத்துடன், "ராஜன்! நான் சொல்வதைக் கேட்கவும். இப்போது யுத்தம் செய்வது தகாது. ஏனெனில் இது மாஹேச்வர யாகம். (மஹேச்வானை உத்தேசித்துச் செய்யப் படும் யாகமாகும்.) இது பூர்த்தியாகாமற் போனால் குலத்திற்கே நாசம் உண்டாகும். யாகத்தில் தீக்ஷை பெற்றவன் கோபப்படுவதோ யுத்தம் செய்வதோ கூடாது. மேலும் யுத்தத்தில் ஜயிப்பது என்பது நிச்சயமற்றது. ராவணனே வரத்தினால் மேம்பட்டவனாக உள்ளான்" என்று கூறினார்.
            ஆசார்யருடைய வார்த்தையைக் கேட்ட அரசனும் யுத்தம் செய்வதிலிருந்து நிவ்ருத்தனானான்.

           இதைக் கண்ட ராவணன் மிகவும் களிப்புற்று 'ஜயித்தேன்' எனக் கூறிக்கொண்டே,. அங்கு யாகத்தைக் காண வந்திருந்த முனிவர்களை வதம் செய்து அவர்களுடைய ரத்தத்தால் யாகசாலையை அசுத்தம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.
         இப்படியாக ராவணன் அவ்விடத்தை விட்டகன்றதும், ஓடி ஒளிந்த தேவர்கள் மறுபடி தங்கள் ஸ்வயரூபத்துடன் அங்கு வந்து சேர்ந்தனர். மயிலுருவெடுத்த இந்த்ரன் நீலவர்ணமுள்ள மயிலைப் பார்த்து, "உனக்கு இனி ஸர்ப்பங்களிடமிருந்து பயம் வேண்டாம். அவை உன்னைத் தீண்டா. மேலும் நீலமான உனது தோகைகளில் பல வர்ணங்களுடன் கூடிய கண்கள் பல விளங்கும். மழை பொழியும் போது நீ நர்த்தனம் செய்து களிப்பாயாக" என்று வரத்தை அளித்தான். அதற்கு முன்பெல்லாம் மயில்கள் நீலவர்ணங்களாக மட்டுமே இருந்தன இந்திரனுடைய வரபலத்தாலேயே இப்போது அவ்வினங்கள் அனைத்துமே பல வர்ணத் தோகைகளை உடையவையாக விளங்குகின்றன.

           அதே போல் தர்மராஜனும் தான் உருக் கொண்ட காக்கையினிடம் அன்புடையவனாக, 'ஹே காக்கையே! உன்னிடத்தில் எனக்கு மிகவும் அன்பு ஏற்பட்டுள்ளது. நான் உனக்கு ஒரு வரம் தருகிறேன். அதாவது என்னால் ஸகல பிராணிகளும் அநேகவிதமான நோய்களால் பீடிக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட நோய் ஏதும் உனது குலத்தாருக்கு உண்டாகாது மேலும் உங்களுக்கு மரண பயமும் வேண்டாம். மனிதர்கள் உங்களைக் கொல்லாத வரையில் நீங்கள் உயிர் வாழலாம். மேலும் என் வசத்திலுள்ள (யமலோகத்திலுள்ள) மனிதர்கள், பூலோகத்திலுள்ளவர்கள் கொடுக்கும் பலிப்ரஸாதத்தை நீங்கள் புஜித்ததும் தாங்கள் பசி தீர்ந்தவர்களாவார்கள்” என்றும்
            ஹம்ஸ உருவெடுத்த வருணன் ஹம்ஸத்தைப் பார்த்து “கங்கா ஜலத்தில் ஸஞ்சரிக்கும் ஹம்ஸமே! உனது நிறம் சந்திரமண்டலம்போல் வெளுப்பாக இருக்கும். எனக்கு இருப்பிடமான தடாகம், நீர் நிலைகளை அடைந்து சுகமாக ஸஞ்சரித்து மகிழ்வாயாக” என்று வரம் அளித்தான்.  அதற்கு முன் ஹம்ஸங்கள் வெளுத்த நீலவர்ணங்களாகவும், இறக்கைகளின் நுனிப் பாகம் நீலவர்ணங்களாகவும், நடு வயிறு சிறுபசுமையுடையதாகவும் இருந்தனவாம்.
           பிறகு வருணன் ஓணானைப் பார்த்து, (தான் உருக் கொண்டது) 'ஓணானே! உனக்கு ஸ்வர்ணவர்ணமான உரு உண்டாக வரம் அளிக்கிறேன். உனது தலை எப்போதுமே அவ்வாறாகவே விளங்கும்'' என வரமளித்தான்.
       இவ்வாறாகத் தாங்கள் தாங்கள் அபிமானித்தவைகளுக்கு வரமளித்து தேவர்கள் மருத்தனுடைய யாகம் முடிவுற்றதும் தந்தாம் உலகம் அடைந்தனர்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக