ஞாயிறு, 11 டிசம்பர், 2022

ராமாயணம்–உத்தர காண்டம் 8

பதின்மூன்றாவது ஸர்க்கம்
[கும்பகர்ணனின் தூக்க மாளிகை நிர்மாணம்,
ராவணன் வெறிச் செயல் முதலியன.)


     சில காலம் சென்றபிறகு, பிரம்மதேவனது சாபத்தின்படி கும்பகர்ணனுக்குத் தூக்கம் (நித்திரை) வர ஆரம்பித்தது. அது கண்ட அவன் ராவணனிடம் சென்று, 'அண்ணா! நான் தூக்கத்தின் வசமாக இருக்கிறேன். எனவே அதற்காக எனக்கு ஒரு தனி மாளிகையை நிர்மாணம் செய்து கொடுக்கவும். அங்கு நான் யாதொரு தடையுமின்றி நித்திரை செய்ய விரும்புகிறேன்' என்றான். ராவணனும் அவன் விருப்பப்படி சிறந்த கட்டட நிபுணர்களைக் கொண்டு, கைலையங்கிரிக் கொப்பானதும், ஒரு யோஜனை அகலம் கொண்டதும், இரண்டு யோஜனை நீளமுள்ளதும், வெளுப்பானதுமான மாளிகையைக் கட்டுவித்தான். அது ஸ்படிக மணிகளால் இழைக்கப்பட்டதும், வைடூர்ய மயமான ஸ்தம்பங்களை உடையதும். தங்கத்தால் இழைக்கப்பட்டதுமாயும், மிகவும் அழகுள்ளதாகவும், காண்போருள்ளம் கொள்ளை கொள்வதுமாக விளங்கியது. அந்த மாளிகையில் தூங்க ஆரம்பித்து கும்பகர்ணன் அநேகமாயிரம் ஆண்டுகள் விழிக்காமல் தூங்கினான்.
       ராவணன் மிகவும் மதோந்மத்தனாகி, தேவர்கள் யக்ஷர்கள் கந்தர்வர் கின்னரர் ரிஷிகள் முதலானவர்களை ஹிம்ஸித்தும் கொன்று குவித்தும் வந்தான். அழகிய உதியானவனங்களையும் அழித்தொழித்து வந்தான். இவை அனைத்தையுமறிந்த குபேரன் தனது தம்பி மீதுள்ள அன்பினால் மிகவும் மனம் வருந்தியவனாய் அவனுக்கு நன்மை செய்யக் கருதித் தூதுவளை அனுப்பினான். அவனும் இலங்காபுரியை அடைந்து விபீஷணனிடம் சென்றான். விபீஷணனும் அவனை நன்கு உபசரித்துக் குபேரனின் நலனை விசாரிதது அறிந்துகொண்டு ராவணனிடம் அழைத்துச் சென்றான்.
       அப்போது ராவணன் ஸபா மண்டபத்தில் உயர்ந்த சிம்மாஸனத்தில் அமர்ந்திருந்தான். தபோமஹிமையால் ப்ரகாசிக்கும் ராவணனைக் கண்ட  தூதன் அவனை வணங்கி 'ஜய ஐய மஹாராஜன்' என்று போற்றிச் சிறிது நேரம்  மௌனமாக இருந்தான். பிறகு, 'அரசே! உமது ஸஹோதரரான குபேரன் தங்களுக்கு அனுப்பிய செய்தியைக் கூறுகிறேன், கேட்பீராக. நமது தாய் தந்தையருடைய குலத்திற்கும், அவர்களது நடத்தைக்கும் அநுகுணமாகவே நமது நடத்தையும் இருக்க வேண்டும். நீ இதுவரை செய்த அக்ரமங்கள் போதும், இனி நல்லதையே செய்யவும். நீ ரிஷிகளை வதைத்ததையும், நந்தவனங்களை அழித்ததையும் நான் கேள்விப்பட்டேன். உன்னை அழிக்கும் உபாயத்தைத் தேவர்கள் ஆலோசித்து வருவதையும் கேள்விப்படுகிறேன். ராக்ஷஸாதிபனே! உன்னால் பலவாறு அவமதிக்கப்பட்டுள்ளேன். ஆயினும் உடன்பிறந்த பாசத்தினால் அவற்றை மறந்து கடமை உணர்வினால் உனக்கு நன்மையை உணர்த்துகிறேன். நீ சிறுவன்; ரக்ஷணைக்கு அர்ஹன். இதுவரை நீ எங்கே சென்றிருந்தாய்? எனக் கேட்கலாம். நான் ஹிமயமலைச் சாரலையடைந்து ருத்ரனைக் குறித்துக் கடுந்தவம் புரிந்தேன். அங்கு மஹாதேவனைக் குறித்துக் கடுந்தவம் புரிந்தேன். அங்கு மஹாதேவனை உமாதேவி ஸஹிதனாகக் கண்டேன். மிக்க காந்தியுடன் கூடியவளான உமையின் மீது எனது இடது கண் பார்வை யானது யத்ருச்சையாக விழுந்தது. அதுவும் 'யார் இந்த ஸ்த்ரீ?' என்ற எண்ணத்துடன்தான். எனது பார்வை சென்றதேயன்றி வேறு காரணத்தால் இல்லை. அப்படியிருக்கும்போதே தேவியின் மஹிமையால் - தேஜஸ்ஸால் எனது இடது கண் எரிக்கப்பட்டது. புழுதிகளால் மறைக்கப்பட்ட நெருப்புத் துண்டம் போல ஆனது. மஞ்சளாகவும் ஆனது. பிறகு நான் அங்கிருந்து வேறிடம் சென்று, மௌன வ்ரதத்துடன் எண்ணூறு வருஷம் முன்பு போலவே மிகக் கடுமையான தவத்தைச் செயது முடித்தேன். அதைத்தான் கேதார வ்ரதம் என்பார்கள். அந்த வரத்தை நான் அநுஷ்டித்து முடித்ததும் பகவான் சங்கரர் மிகவும் ஸந்தோஷமடைந்து எனக்குக் காட்சி கொடுத்தார். என்னைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார் - 'தர்மஜ்ஞனான குபேரனே! நீ செய்த தவத்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இந்த வ்ரதம் என்னால் முன்பொருகால் அநுஷ்டிக்கப்பட்டது. அதன் பிறகு இப்போது நீதான் இதை அநுஷ்டித்தாய். மற்றவர் யாரும் இதை அநுஷ்டிக்கவில்லை. நானேதான் இப்படி ஒரு விரதம் உண்டு என்பதை உலகிற்குக் காண்பித்தேன். எனவே நீ எனது நண்பனாகிறாய். தேவியின் தேஜஸ்ஸால் எரிக்கப்பட்டு மஞ்சள் நிறமான ஒரு கண்ணையுடைய உனக்கு இனி ஏகாக்ஷி பிங்களன்' என்கிற சிறப்புப் பெயரும் உண்டாகட்டும்" என்று.
     அவருடைய கருணைக்குப் பாத்திரனாகி அநுக்ரஹம் பெற்று என் இருப்பிடத்திற்கு வந்தேன். அங்கு உனது கெட்ட நடத்தையைக் கேள்விப்பட்டேன். மிகவும மனம் வருந்தினேன். குடியின் பெயரைக் கெடுக்கக் கூடிய செய்கையை விட்டொழித்திடவும். ரிஷிகளும் தேவர்களும் உன்னை அழிப்பதற்கான உபாயங்களைத தேடியலைகின்றனர். இதை அறிந்து இனி நலமுடன் வாழ வழி தேடவும் என்று கூறி முடித்தனன்.
         இவ்வாறு தூதன் கூறக் கேட்ட ராவணன் மிகவும் கோபமடைந்தான். கண்கள் சிவப்பேறின. பற்களை நறநறவென்று கடித்து, கைகளைப் பிசைந்துகொண்டு தூதனைப் பார்த்து, 'தூதனே! நீ கூறியதை அறிந்தேன். நீயாக இதைச் சொல்லவில்லை. அந்த உடன் பிறந்தவனால் ஏவப்பட்டு இவ்வாறு கூறுகிறாய். எனக்கு நன்மை செய்யக் கருதிக் குபேரன் இதைக் கூறியனுப்பவில்லை. தனக்குச் சங்கரனுடைய நட்புக் கிடைத்துள்ளது என்கிற பெருமையை எனக்கு அறிவிக்கவே இவ்வாறு கூறியுள்ளான். இதை நான் ஸஹித்துக்கொள்ள மாட்டேன். எனக்கு முனபிறந்தவன் என்கிற ஒரே காரணத்தைக் கொண்டு இதுவரை அவனை நான் வதம் செய்யாமல் விட்டு வைத்தேன். இப்போது அவனுடைய இந்த வார்த்தையைக் கேட்டது முதல் எனது மனத்தில் இந்த மூவுலகத்தையுமே வெல்ல வேண்டும் என்ற எண்ணம் உண்டாகிவிட்டது. அவனொருவனின் நிமித்தமாகவே நான்கு லோகபாலர்களையுமே யமலோகத்திற்கு அனுப்பி வைக்கிறேன" என்று கூறியவாறே தூதனைக் கத்தியால் வெட்டிக் கொன்று அவனது மாம்ஸத்தை அரக்கர்களுக்கு உணவாக அளித்து விட்டு, ரதத்தில் ஏறி அமர்ந்துகொண்டு, மூவுலகங்களையும் ஜயித்திடக் கருதி முந்துறமுன்னம் குபேரப் பட்டணத்தை நோக்கிச் சென்றான்.
28
(தொடரும்]


27

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக