வெள்ளி, 11 செப்டம்பர், 2009

பாரதி போற்றுவோம்

Barathi செப்டம்பர் 11  நம் பாரதி நாள். அவரை நினைத்து ஒரு பதிவு. அடியேனின் வழக்கம் போல் அவருடன் வாழ்ந்தவர்களில் ஒருவர் எழுதிய நூலிலிருந்து ஒரு பகுதி இந்தப் பதிவு. நூலை எழுதியவர் யார்  என்பது கடைசியில்.
பாரதி விளக்கம்.
1.காலநிலை
பொதிகைத்தென்றலில்சங்கக்கொடிஆடுகிறது;
 
கம்பக் கற்பகம் கலைமணம் வீசுகிறது;மாணிக்க வீணை தேனிசை பொழிகிறது; உள்ளப் பெருமானைப் பள்ளி எழுப்புகிறது.“தேசமுடையாய் திறவேலோரெம் பாவாய்!” என்று கோதைக்கிளி கொஞ்சுகிறது. “நாமார்க்கும் குடியல்லோம்! நமனை யஞ்சோம்! நரகத்தில் இடர்ப்படோம்!” என்று திருத்தொண்டர் முழங்குகின்றனர். இங்குமங்கும் பண்டிதர் செவி மடுக்கின்றனர்.
  மற்றெங்கும் இருட் போர்வை; பாழ்பட்ட பழங்கோட்டையில் சவ உறக்கம்; அடிமை, மடமை, வறுமை, வேற்றுமைப் பேய்களின் அழி நடனம்; இப் பேய்களுக்குத் தலைப்பேய் அச்சப்பேய்!



“அஞ்சி யஞ்சிச் சாவார் – இவர்
    அஞ்சாத பொருளில்லை அவனியிலே!’
இதுதான் மாந்தர் நிலைமை; அன்னியக்கல்வி, அன்னிய மோகம், அன்னியர் ஆட்சி --  மாந்தர் மனம் அன்னிய மாயத்தின் கைப்பாவை!
“கண்ணில்லாக் குழந்தையைப் போல் – பிறர்
   காட்டிய வழியிற் சென்று மாட்டிக்கொள்வார்”
        என்ன பரிதாபம்! என்ன வீழ்ச்சி! ஆஹா….! வெல்லம் தித்திப்பை இழந்தால் என்ன செய்வது! ஆண்மை ஆண்மையிழந்து நெஞ்சுலர்ந்து பரதர்மத்திற்கு ஆளானது. பெண்மையோ புகைமூண்டு மட இருளில் அடைபட்டது. பழம்பொய் புது முன்னேற்றத்தைத் தடுத்தது; புதிய தீமைகள் பழைய நன்மைகளைச் செல்லரித்தன. பொய்க்கதைகள் “தத்வமஸி – அது நீ “ என்னும் வேத உண்மையை மறைத்தன. எல்லாருள்ளும் கோயில்கொண்ட ஆன்மாவான அறிவுத் தெய்வத்தை மறந்தனர். சாதி மத கோத்திர வகுப்புச் சண்டைகள் வலுத்தன. அந்தர்யாமியின் யாழொலி கேட்கவில்லை. இராமலிங்க சுவாமிகளின் அருட்பா வெள்ளம் பெருகியும் இன்னும் இச்சாதி மத வேறுபாடுகள் ஒழிந்தபாடில்லை; ஒற்றுமை வரவில்லை. அடிமை, மடமை என்னும் ராகு கேதுக்கள் வாழ்வின்பத்தைக் கௌவின. தமிழர் தமிழை மறந்தனர். சுளையுரித்துத் தந்தாலும் சுவைப்பாரில்லை ! என்ன சங்கடம்!
2. வரகவி வருகை
       வந்தாள் புதுயுக சக்தி – வீரக்கனல் விழி; மோகன முறுவல்; இளந்திரு; ஆயிரங் கலை யழகி; அறிவு, ஆற்றல், அஞ்சாமை, ஒற்றுமை, விடுதலை என்னும் பஞ்ச ப்ராணனைக் கொடுத்து மாந்தரைப் புதுப்பிக்க வந்தாள்! “வா” என்பார் இல்லை;அறிவார் இல்லை. “இப்படியும் மனிதர் உண்டா?” என்று கன்னத்தில் கை வைத்துத் திகைத்து நின்றாள் சக்தி. அவளது திருவுள்ளத்தை விளக்க வேண்டும்; உறங்கும் நாட்டை எழுப்ப வேண்டும்; உயிர்க்கனல் மூட்ட வேண்டும்; மன வேறுபாடுகளை ஒழித்து ஒற்றுமைப் படுத்த வேண்டும்; கலியைப் பிளக்க வேண்டும்; ஸத்ய யுகம் மலர வேண்டும். எல்லாம் தமிழ்ச் சொல்லால் நடக்க வேண்டும். அத்தகைய கலிப்ரஹ்மா யார்? நவசக்தி எதிர்பார்த்திருந்தாள்.
“போற்றி போற்றி ஜய ஜய போற்றியிப்
    புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே”
என்று ஒரு குயில் அகவியது! ஆ, யாரது? “வந்தாயா! மகனே! கவிக்குயிலே, வா! இளைய பாரதத்தினாய்! தெளிவு மிக்க மதியினாய்! ஒளி இழந்த நாட்டிலே உதய ஞாயிறொப்பவே – வா, வா, வா! வசந்தம் மலர்ந்தது; இனி அச்சமில்லை, இடரில்லை, இருளில்லை, கட்டில்லை, கவலைஇல்லை, எனக் கூவி நாட்டை எழுப்பு. உன் சொல் என் ஜயபேரிகை! ஓம் சக்தி, வந்தேமாதரம் என்னும் இரண்டு மந்திரங்களால் எடுத்த காரியம் வெல்லும்! உன் சொல் சாகாவரம் பெற்று வாழ்க!” என்று நலங்கூறி, முத்தமிட்டு, ஆசீர்வதித்தாள் நவசக்தி.
3. சொல் வெற்றி.
      தமிழ் மந்திரச் சொல்லால் முப்பத்தைந்து கோடி மாந்தரையும் தனது திருவுடலாகக் கொண்ட நாட்டன்னையை எழுப்பினான் வரகவி.
     “ஈன்றவளே பள்ளி யெழுந்தருளாயே!”
       எழுந்தாள் அன்னை. பொழுது புலர்ந்தது. பொய்யிருள் அகன்றது; சுருதிகள் முழங்கின; தொண்டர்கள் பல்லாண்டு கூறினர்.
     “வந்தே மாதரம் என்போம் – எங்கள்
       மாநிலத் தாயை வணங்குது மென்போம்!”
அத்தனை தலைகளும் அன்னையைப் பணிகின்றன!.
“சுற்றி நில்லாதே போ – பகையே
         துள்ளி வருகுது வேல்!
   ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – பராசக்தி
         ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!”
பகையரக்கர் நடுங்குகின்றனர்! “நம் ஆவி வேகச் சூழுதே தீ” என்று ஓடுகின்றனர்.
  “உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
    அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!”
மாந்தர் மனந் துணிந்தனர்! தடைகள் நொறுங்கித் தவிடுபொடி யாயின.
”நாமிருக்கும் நாடு நம தென்ப தறிந்தோம் – இது
நமக்கே உரிமையா மென்ப தறிந்தோம் – இந்தப்
பூமியி லெவர்க்குமினி யடிமை செய்யோம் –பரி
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம்!”
நாடு தலை தூக்கி நடக்கத் தொடங்கிற்று!
“என்றெம தன்னைகை விலங்குகள் போகும்?”
என்று கட்டுகள் நீக்கி விடுதலை தரும் கண்ணனுக்கு முறையிட்டது! “ஜயமுண்டு, பயமில்லை!” என்று முன்சென்றது. ஏழை பணக்காரன் என்ற வேறுபாடுகள் ஒழிந்தன.
”ஏழையென்றும் அடிமையென்றும்
        எவனுமில்லை; ஜாதியில்
இழிவு கொண்ட மனிதரென்போர்
       இந்தியாவி லில்லையே!”
விடுதலைக்கு ஓர் ஆவேசக்கனல் எழுந்தது!
“மாதர் தம்மை இழிவு செய்யும்
   மடமையைக் கொளுத்துவோம்!’
ஆ, பெண் சக்தி விழித்தெழுந்தது!
   “பெண்மை வாழ்கெனக் கூத்திடு வோமடா!
    பெண்மை வெல்கெனக் கூத்திடு வோமடா!”
என்று பெண்ணின் பெருமை முழங்கியது! இனி ஒற்றுமை!
”ஒன்று பட்டாலுண்டு வாழ்வே”
ஆம், எத்தகைய ஒற்றுமை! உள்ளொற்றுமை; ஆன்மநேய ஒருமைப்பாடு வேண்டும்.
”எல்லாரும் ஓர் குலம்! எல்லாரும் ஓரினம்!
           எல்லாரும் இந்தியா மக்கள்!
எல்லாரும் ஓர் நிறை! எல்லாருமோர் விலை;
           எல்லாரு மிந்நாட்டு மன்னர்!”
இம்மந்திரங் கேட்டு, பேத புத்தி நடுங்குகிறது. ஒற்றுமை வெற்றி பெறுகிறது. இந்த ஒற்றுமை “ஸர்வ ஆத்ம மயம்” என்னும் விசுவாத்ம சேதனத்தை (Cosmic Consciousness) எட்டுகிறது :-- 
“ காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள்
        கடலு மலையு மெங்கள் கூட்டம்;
  நோக்குந் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை;
         நோக்க நோக்கக் களியாட்டம்!
          ஜயபேரிகை கொட்டடா!”
இவ்வாறு ஒற்றுமை பெற்றபின், சாதி மதச் செருக்கு புறங்காட்டி ஓடியது. உள்ளத்தில் அன்புக்கனல் எழுந்தது.
'”ஒரு தாயின் வயிற்றிற் பிறந்தோம்; ஜாதி மதங்களைப் பாரோம்; முப்பது கோடியும் வாழ்வோம்!” என்று நாடு உணர்ந்தெழுந்தது;
”ஏழைய ராகி இனி மண்ணில் துஞ்சோம்!
தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்;
தாய்த்திரு நாடெனில் இனிக் கையை விரியோம்!
உன்னத ஆரிய நாடெங்கள் நாடே!”
என்ற உறுதி பூண்டது.
“மண்ணி லின்பங்களை விரும்பிச் சுதந்தரத்தின்
          மாண்பினை இழப்பரோ?
   கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினாற்
           கைகொட்டிச் சிரியாரோ?”
அடிமைச் சங்கிலி நொறுங்குகிறது! பட்!
”சொந்த நாட்டிற் பிறர்க்கடிமை செய்தே
துஞ்சிடோம் – இனி – அஞ்சிடோம்!”
படக்! படார்! சங்கிலி சுக்குநூறாக அறுந்தது! பாரதர் தலைநிமிர்ந்து கைவீசி நடந்து, சுதந்தர வேள்விச்சாலைக்குச் சென்றனர். தாயின் மணிக்கொடியை உயர்த்தி வணங்கினர். ஓம் சக்தி; வந்தே மாதரம்! அகண்டமான தியாக வேள்வி நடக்கிறது!
  “எங்கள் வேள்விக் கூடமீதில்
          ஏறுதே தீ தீ!”
இந்தச் சுதந்தராக்னி குண்டத்தில் நாட்டன்பர் நாள்தோறும், விடுதலை! விடுதலை! விடுதலை! ஓம் சக்தி! வந்தே மாதரம்!” என்று ஆகுதி வழங்குகின்றனர். முப்பத்தைந்து கோடி பாரத தேவர்களும் பாரத சக்திகளுடன் பரிபூரண சுதந்தரமாகிய அவியுண்ணக் காத்திருக்கின்றனர்.
4. மந்திரக் கவி.
    இவ் வீரவேள்விக் கனலைத் தமிழகக் குண்டத்தில் மூட்டியதே கவிக்குயிலின் பெருமை. வேள்வியை வளர்த்தது சொல்; அச்சொல் வற்றாக் கனலருவி! அதன் வீராவேசம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. அக் கனல்மொழி கேட்டு அச்சப்பேய் அலறி ஓடுகிறது. அக் கனல் பட்டதும் அடிமைத்தளை சடசடவென்று முறிந்து விழுகிறது.
”தெய்வக்கனல் விளைந்து காக்குமே – நம்மைச்
        சேரு மிருளழியத் தாக்குமே
கைவைத்தது பசும்பொன் னாகுமே – பின்பு
        காலன் பயமொழிந்து போகுமே.”
இதுவே சொல்லின் ஆற்றல். கலியைப் பிளந்து, இருளைத் துரத்தி, நஞ்சை மாற்றி அமுதமளித்தது சொல்.
”மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம்’
அத்தகைய மந்திரச் சொல்லின் இன்பக் கனலூற்றே பாரதி. கவிகளிற் சிறந்தது மந்திரக் கவிதை. பாரத சக்தி யாகத்தின் மந்திரங்களைத் தமிழில் பாடிய நவயுக வேதக்கவியே பாரதி. பராசக்தியை நெஞ்சில் நினைந்து நினைந்து உருகிக் கசிந்த அக் கவியூற்று மந்திர அமுதம். அது இறந்த ஜாதியை எழுப்பி உயிர்வளம் ஈந்தது; தீரமீந்தது.
   “தோளை வலியுடைய தாக்கி – உடற்
         சோர்வும் பிணிபலவும் போக்கி – அரி  
   வாளைக் கொண்டு பிளந்தாலும் – கட்டு
        மாறா வுடலுறுதி தந்து – சுடர்
   நாளைக் கண்டதோர் மலர் போல் – ஒளி
         நண்ணித் திகழுமுகந் தந்து –மத
  வேளை வெல்லு முறை கூறி – தவ
        மேன்மை கொடுத்தருளல் வேண்டும்!
  ஓம் காளீ, வலிய சாமுண்டீ !”
விவேகானந்த ஜயந்தியன்று பாடிய இந்த யோகசித்திப் பாட்டில் எவ்வளவு வீரக்கனல் கொட்டுகிறது! இதைக் கேட்ட பேடிக்கும் ஆண்மை பிறக்கும்!
”அச்சமில்லை! எல்லாரும் ஓர் நிகர்! வீர சுதந்தரம்! விடுதலை! ஜயமுண்டு, பயமில்லை! ஓம் சக்தி! வந்தே மாதரம்!” இவையே விடுதலை வேள்விக்கு வீரக் குயில் அகவிய மந்திர நாதம்!
5. பாரதியார் திருவுரு
     தமிழ் நாட்டின் மறுமலர்ச்சிக்கு அரும்பணி புரிந்த வீரருள் பாரதியார் முன்னணியில் நிற்கிறார். தமிழ்நாட்டில் வீர தியாகிகள் கட்டிய விடுதலைக் கோயிலின் பொன்மணிக் கோபுரமாக விளங்குகிறது பாரதி வாக்கு. பாரதியார் சிரஞ்சீவி; சாகாவரம் பெற்றவர்; வாழ்வென்னும் வீணையில் அமுதப் பண்களை ஒலித்தார்; மண்ணுடலல்ல; அந்தப் பண்ணுடலே பாரதியார். உயிர்க்குழலில் சக்தி நாதம் புரிந்தார்; அந்த நாத சரீரமே பாரதியார். அவர், “பல வேடிக்கை மனிதரைப்போல” வாழவந்தவரல்ல.
”நல்லதோர் வீணை செய்தே – அதை
    நலங்கெடப் புழுதியி லெறிவதுண்டோ?
வல்லமை தாராயோ –இந்த
    மாநிலம் பயனுற வாழ்வதற்கே?”
பாரதியாரின் பிறப்பு, வடிவு, வளர்ச்சி, உயிர்ப்பு, பயிற்சி, முயற்சி, உணர்ச்சி – எல்லாம் கவி வீணை கொண்டு மாந்தர் உய்யும் நித்தியப் பண்களை முழக்கிய பெருமையே. தமிழ்த் தெய்வமே இந்த அன்பனைக் கருவியாகக்கொண்டு தன் அருமை மக்களை விழிப்புறுத்தியது. உடல் நிமித்த மாத்திரமே. கவியின் தங்கப் பேனாவை வீர சக்தியே பிடித்து எழுதினாள். காலச் சிலையில் பதிந்து விளங்கும் அந்தப் பொன் மணியெழுத்தே பாரதியார். தெள்ளமுதத் தமிழூற்று, சக்திக் கனலன்பு, வீர விடுதலைக் காதல், தேசாவேசப் புயல் – இவையே பாரதியார். பிணி வறுமையால் உலர்ந்த அவ்வுடல் அல்ல. கோபுரம்போல நிமிர்ந்து “அச்சமில்லை, தலை குனியாதே, தமிழா” என்று பேசும் அந்த வீரத் திருமுகம் நம் கண்முன் நிற்கிறது; காலன் இழுத்துச் சென்ற காயமல்ல; அறிவும் வீரமும் பொழியும் அந்தக் கனல் விழிகளே நம்முன் நிற்கின்றன.கருந்தீக் கொழுந்து போல் திருகிவிட்டு நிவந்த அந்த கெய்சர் மீசையல்ல; அடிமையைக் குமுறத் துடிக்கும் அந்த ஆவேசமே நம்முன் நிற்கிறது! ‘பட பட பட’ வென்று காரிடிப் புயல் போலச் சினக்கும் அத்தன்மையல்ல! அந்தப் புயல் பொழியும் கவி மழையே நாம் உள்ளங்குளிரும் வெள்ளம். “ஜயபேரிகை கொட்டடா, கரும்புத் தோட்டத்திலே, முருகா முருகா, எங்கள் முத்துமாரி, யோகசக்தி” இப்பாடல்களை அவர் பாடும்போது பார்க்க வேண்டும்! நமது நெஞ்சம் ஜயபேரிகை கொட்டி எழும்! ஆ! அந்த வீர மணிக்குரலைக் கிராமபோனிலாயினும் பிடித்தார்களா! பட படவென்று கோபம் வரும்; ஒரு குழந்தையை மடிமேல் வைத்து விட்டால் எல்லாம் அன்பாக மாறும்; பிறகு பாட்டு, இடி நகை! ஆ, அந்தக் குழந்தை போன்ற ஸரள சுபாவமே நம்மை உருக்குகிறது. வெள்ளை மனம்; கபடு சூது தெரியது; வெளிப்படை; அழகைக் கண்டால் ஆனந்தம்; நல்ல கவிதை கட்டுரைகளைக் கண்டால் பரவசம்; உள்ளுணர்வை வெளியிடாவிட்டால் உறக்கம் வராது. அந்த ரசிகத் தன்மையே பாரதியார்.  ‘உடலைப் பந்துபோல் ஆக்க வேண்டும்; வைரம்போல் ஆக்கவேண்டும்; சிங்கம் போல் இருக்க வேண்டும்; புகையிலைப் பழக்கம் விட்டு, கஸரத் பழக்கம் செய்யவேண்டும்” என்றெல்லாம் ஆயிரம் தரம் சங்கற்பம் செய்வார்; நடக்காது! வ.வே.சு ஐயர், கர்லா, பஸ்கி எல்லாம் நித்ய கர்மானுஷ்டானமாகச் செய்வார். அதைப் பார்த்துக் கொண்டு தம் கனவுலகிலேயேஇருப்பார்பாரதியார்.நாலேபேர்  பின்தொடர்ந்து கிரியை முடித்துச் சுட்டெரித்து மூடிய – அந்த உடலல்ல; அதில் கோயில் கொண்ட “சக்தித் தமிழே” பாரதியார். பரமஹம்ஸர் “தாய் தாய்” என்று உருகினார். பாரதியார் “தாய்நாடு, தாய்நாடு” என்று உருகினார். அந்த உருக்கமே பாரதியார் திருவுரு. அவர் வருந்தியதெல்லாம் தமிழர் உய்விற்காகச் செய்த அருந்தவம். அத்தவப் பயனை இன்று காண்கிறோம். “ இனி நலம்; தமிழகத்தில் பல பெரியோரும், வரகவிகளும் வருவர். இங்கே தேவர் சங்கம் தோன்றும்” என்று அவர் சொன்னதெல்லாம் பலித்து வருகின்றது. தமது மணிவாக்கைக் கொண்டு ஒரு ஸமுதாயத்திற்கே புத்துயிரளித்து எழுப்பிய மஹாகவியே பாரதியார்.ஜர்மன் கவியரசரான கெதே (Goethe)யின் தெளிவு, ஹோமரின் வீர நடை, ஷெல்லியின் கனவு, பைரனின் இயலாவேசம் – எல்லாம் நமது கவியரசினிடம் காணலாம். ஆனால் இந்த மந்திர சக்தி, சிருஷ்டி வன்மை (creative power) ஒரு நாட்டையே விழிப்பூட்டிய வீரக் கனலைக் காண்பதரிது. ஷேக்ஸ்பியர், கம்பன், வர்கிலியன், காளிதாஸன் எல்லாரும் கவி மன்னர்களே. எனினும் கலையுலகை அவர்கள் சிறப்பித்தனர். பாரதியாரின் கவி புதிய தமிழ் சகாப்தத்தை, புதிய ஜாதியை, புதிய நாட்டை அமைத்தது. தமிழில் புது மறைகள் பாடியது. வால்மீகி, துளசிதாஸ், நம்மாழ்வார், சேக்கிழார் போன்ற அருட்கவிகளுக்கே இத்தகைய சக்தி உண்டு.
    அகவல், வெண்பா, கலிப்பா, விருத்தம் இத்துறைகளில் முழு வெற்றி பெற்றதுடன், சாதாரண நாடோடி மெட்டுக்களையும் தமது கவிக் குழலில் இணைத்துச் சிறப்பித்தார் பாரதியார். புதுச்சேரி பாண்டு வாத்தியம், தெருப்பாட்டு, கும்மி, சிந்து, சில்லறை மெட்டுக்களில் தமது உயர்ந்த உள்ளத்தை அமைத்து, பண்டிதர் பாமரர் யாருக்கும் கவியமுதளித்த பெருமை பாரதியாரின் தனிப் பெருமை.
” விருத்தராதி தானவர்க்கு மெலிவ தின்றியே
  விண்ணு மண்ணும் வந்துபணிய மேன்மை துன்றியே
  பொருத்த முறநல் வேத மோர்ந்து
  பொய்மைதீர மெய்மை நேர
  வருத்தமொழிய வறுமை ஒழிய
  வைய முழுதும் வண்மை பொழிய
  வேண்டுமடி எப்போதும் விடுதலை
  அம்மா ! அம்மா! அம்மா!”
என்று முறையிட்ட அவரது சக்திவாக்கு உலகின் அற்புதங்களில் ஒன்று. அந்த வீரக் கனலருவியின் மின்சாரத்தில் ஸமுதாய யந்திரம் சுழல்கிறது! வேத முனிவரின் பிறப்பும் வளர்ப்பும் அறியோம்; நாத மறை வடிவாகவே அவர்களை அறிகிறோம். கம்பனும் காளிதாஸனும் கவிவடிவு; அவ்வாறே பாட்டினில் நெஞ்சைப் பறி கொடுத்த பாரதியாரை வீரக்கவிக் குயிலாகக் காண்போம்.
     “மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாராதோ?” என்று பாடினார். அந்தப் பொன் மணிக் குயிலாகவே நம் கவி ப்ரஹ்மாவைப் போற்றுவோம். குயில் வசந்த வனப்பைப் பாடும்; நம் கவிக்குயில் புதிய உயிர், புத்துணர்வு, இளமை பெற்ற புதிய தமிழ்நாட்டைப் பாடினார். பாரதியார் மறைந்து போகவில்லை. இதோ நம்முள், நம்முன், நம்முயிரில் நமது நெஞ்சத்தை அள்ளிக் கலந்த வீரக் காதலில் விளங்குகிறார். தமிழ் உள்ள மட்டும், தமிழர் உள்ள மட்டும், தமிழகம் உள்ள மட்டும் பாரதியார் உள்ளார். முன்னே லெமோரியாவை உண்ட கடல் இத்தமிழ் நாட்டையும் உண்டாலும், “வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ்மொழி!” என்றே கர்ஜிக்கும்! தமிழர் உள்ளத்தில் ஆவேச வெள்ளமாகப் பொங்கும். 
     இது கவியோகி சுத்தானந்த பாரதி எழுதியது.  “பாரதி விளக்கம்” என்ற இந்தப் பழைய நூல் இன்று (10-9-09) வேறு ஒரு நூலைத் தேடி நூலகத்துக்குச் சென்றபோது கண்ணில்பட்டு அங்கேயே ஒரே முச்சில் படிக்க வைத்த அருமையான ஒன்று. மேலே இட்டதற்குப் பிறகு பாரதியின் வாழ்வை அற்புதமாக வர்ணித்திருக்கிறார் திரு சுத்தானந்த பாரதி. ஓரிரு நாட்களில் மின் நூலாக்கி வலையேற்றுவேன்.   

6 கருத்துகள்:

  1. சில வலைக் குழுமங்களில்,மிகச் சிறிய காலமே உறுப்பினராக, விவாத இழைகளில் பங்கு கொள்பவனாக இருந்தபோதிலும், கவியோகியாரது தமிழ் இணையத்தில் உலா வரவேண்டும் என்ற ஆசை கொண்டிருந்தேன். எழுதியும் வந்தேன். தற்சமயம், மின்தமிழ் கூகிள் வலைக் குழுமம் இநதப்பணியைக் கையில் எடுத்துக் கொண்டு செய்து வருகிறது. சுத்தானந்த பாரதியின் படைப்புக்களை, நல்ல முறையில், இன்றைய தலை முறைக்கு அறிமுகம் செய்ய வேண்டும், அவருடைய படைப்புக்களைக் குறித்தான, கருத்துக்கள், நூல் விமரிசனங்கள், ஆய்வுகள் என விரிவடைய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

    உங்களுடைய முயற்சிக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. நன்றி! இன்னும் சில புத்தகங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றாய் வலையேற்ற முயற்சிக்கிறேன். எங்கள் தாயார் துணை நிற்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  3. கிருஷ்ணமூர்த்தி சார்,

    இந்த லிங்க்கில் போய்ப் பாருங்கள்

    http://www.hindu.com/2001/10/16/stories/1316017c.htm

    பதிலளிநீக்கு
  4. உங்களுக்கு இடைக்காட்டூர் சம்பந்தம் உண்டோ?

    பதிலளிநீக்கு
  5. இல்லை,உங்களுக்கு ரொம்பப் பக்கத்தில், சக்கரவாள நல்லூர் என்று முன்னமேயே ஒரு யாஹூ வலைக் குழுமத்தில், உங்களுக்குத் தனிப்பட அனுப்பிய அஞ்சலில் சொல்லியிருக்கிறேன்!இதை மட்டுறுத்த வேண்டாம்!

    வேர்ட் வெரிபிகேஷனை எடுத்து விடுங்கள். கூகிள் அடையாளமே போதுமானது.

    பதிலளிநீக்கு