ஞாயிறு, 18 டிசம்பர், 2022

ராமாயணம்–உத்தர காண்டம் 13


21வது ஸர்க்கம்


[ராவணன் யமலோகம் செல்வது, அங்கு ராவணன் யம ஸைன் யத்துடன் யுத்தம் செய்வது]


       இப்படி எண்ணிய நாரதர் வேகமாக யமனின் பட்டிணத்தை அடைந்தார். அங்கு அக்னிக்கொப்பானவனும், எந்த எந்த ப்ராணிகள் எந்தெந்த கர்மாக்களைச் செய்தனரோ, அவரவர்க்கு, அததற்கனுகுணமான தண்டனைகளை விதித்துக் கொண்டிருப்பவனுமான தர்மராஜனைக் கண்டார். நாரதரின் வருகையை அறிந்து அவனும் முறைப்படி அவரை வரவேற்று உபசரித்து ஆஸனத்தில் அமரச் செய்து, “மஹர்ஷே! தாங்கள் க்ஷேமமாக உள்ளீர்களா? இங்கு தாங்கள் எழுந்தருளியதன் காரணமெதுவோ? தயை கூர்ந்து அருள வேண்டும்” என்று விண்ணப்பித்தான்.
       அதற்கு நாரதர்- “பித்ருராஜனான யமதர்மனே! நான் வந்த காரணத்தைக் கூறுகிறேன். செவிமடுத்து, அதற்கானதைச் செய்யவும். தசக்ரீவன் என்கிற அசுரன் உன்னை ஜயித்து அவனுக்கு அடங்கியவனாக உன்னைச் செய்து கொள்ள விரும்பி வருகிறான். இதை முன் கூட் டியே உனக்கு தெரிவிக்க ஓடோடி வந்தேன்” என்று கூறினார்.
      இப்படி இவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே வெகு தூரத்தில் ராவணனது வருகை தெரிந்தது. அவனது விமானமான புஷ்பகத்தின் ஒளியால் அங்கிருந்த இருள் அகன்றது. அந்த விமானத்தின் மீதமர்ந்தவாறே ராவணன் - யமதர்மராஜனையும் அவனது பரிவாரங்களையும் ஸைன்யங்களையும் கண்டான். மற்றும் அங்கு ஸுக துக்கங்களையும் கண்டான் யம படர்களால் கடுமையாக தண்டிக்கப் படுபவர்களையும். அந்த தண்டனைகளை ஸஹிக்க முடியாமல் ஓலமிடுபவர்களையும், பாம்பு-முதலை - செந்நாய்கள் இவைகளால் கடித்துக் குதறப்படுகிறவர்களையும், வைதரிணீ நதியைக் கடந்து செல்லக் கடப்பவர்களையும், மிகவும் காய்ந்து சூடேறிய மணல்களின்மீது படுக்க வைத்துப் புரள்பவர்களையும் அபத்ரவனம் என்கிற தீட்டப்பட்ட கத்திகளையே இலைகளாக உடைய  மரங்கள் இழுத்துச் செல்லப்பட்டு ரத்தம் பெருகும் உடல்களை  உடையவர்களையும். ரெளரவம் எனப்படும் கொடிய நரகத்தில் ஓலமிடுபவர்களையும், உப்பங்கழிகளில் தள்ளப்பட்டு "குடிக்கத் தண்ணீர் - தண்ணீர் தண்ணீர்" என்று பரிதாபக் குரலிடுபவர்களையும். பசித்தவர்களையும் மெலிந்தவர்களையும், அலை குலைந்த கேசங்களை . உடையவர்களையும், பயந்து அங்குமிங்குமாக ஓடுபவர்களையும். இப்படி அநேகவிதமாக கஷ்டப்படுபவர்களையும் கண்டான். மற்றோரிடத்தில் உயர்ந்த மாளிகைகளில் பாட்டையும் பரதத்தையும் கேட்டும் கண்டும் ஆனந்தமடைந்தவர்களையும கண்டான். கோதானம் செய்தவர்கள் பாலைப் பருகி மகிழ்வதையும் அந்நதானம் செய்தவர்கள் உயர்ந்த அந்நத்தை புஜித்து மகிழ்வதையும், க்ருஹதானம் செய்தவர்கள் அழகிய க்ருஹத்தில் உள்ளதையும், இப்படியாக அவரவர் செய்த நல்ல காரியங்களுக்கொப்ப நல்ல பலன்களை அனுபவிப்பதையும் கண்டான்.
           இப்படியாகக் கண்ட ராவணன் கஷ்டப்படுபவர்களை அவர்கள வாட்டியெடுக்கும் யம படர்களிடமிருந்து தனது பலத்தினாலே விடுவித்தான். அப்போது ஒரு முஹூர்த்த காலம் அங்கு யமயாதனையே இல்லாமல் போயிற்று.
         இதைக் கண்டு வெகுண்டனர் யம படர்கள். அவர்கள் ஆயிரக் கணக்காக ஒன்று சேர்ந்து, அநேக ஆயுதங்களால் ராவணனை அடித்தனர். புஷ்பக விமானத்தையும் சேதப் படுத்தினர். அவர்களால் அநேக விதமாக சேதப்படுத்தப்பட்டாலும் அவ்விமானம் மறுபடி மறுபடி பழையது போலவே பொலிந்து விளங்கியது.
        யம படர்கள் சூழ்ந்து கொண்டு ராவணனை எதிர்த்தனர். பாறைகளாலும், மரங்களாலும் மற்றும் பற்பல அஸ்த்ரங்களாலும் ராவணனைத் துன்புறுத்தினர். அவனது கவசத்தைப் பிளந்தனர். சற்றே களைப்புற்று, உணர்ச்சி பெற்ற ராவணன். புஷ்பகத்திலிருந்து கீழே குதித்தான். மிகப் பெரியதான வில்லைக் கையிலெடுத்துக் கொண்டு எதிர்த்து நிற்கும் படர்களைப் பார்த்து-"நில்லுங்கள், இந்த அடியைப் பெற்றுக் கொள்ளுங்கள்'” என்று கூறி "பாசுபதாஸ்த்ரத்தை" அபிமந்த்ரணம் செய்து பிரயோகித்தான். அதானது த்ரிபுராஸுர ஸம்ஹாரத்தின்போது ருத்ரனால் விடப்பட்ட அஸ்த்ரம் போன்று விளங்கியதாம்.. அந்த க்ரூரமான அஸ்த்ரமானது வனங்களையும், செடி கொடிகளையும் தஹித்தது. அதனின்றும் அநேகமாயிரம் கொடியவர்கள் தோன்றி யமனது ஸைன்யங்களை அழித்தனர். அதைக் கண்டு தசானனனும் அவனது மந்திரி முதலானோரும் களிப்படைந்து ஸிம்மநாதம் செய்தனர். அதைக் கேட்டு பூமியே அதிர்ந்தது.

22 ஆவது ஸர்க்கம்


[யமனுக்கும் ராவணனுக்கும் யுத்தம்,

ராவணனைக் கொல்வதற் காக யமன் காலதண்டத்தை ப்ரயோகம் செய்ய முற்படுதல்,

ப்ரம்ஹ தேவன் அதைத் தடுத்தல், ராவணனது வெற்றி முழக்கம்.]


        ராவணனது ஸிம்ஹநாதத்தைச் செவியுற்றான் யமன். தனது சைன்யம் அழிவுற்றது- ராவணன் வெற்றி பெற்றானெனவறிந்து மிகுந்த கோபம் அடைந்தான். உடனே ஸாரதியை விளித்து யுத்தத்திற்காக தனது ரதத்தை ஸந்நத்தம் செய்ய உத்திரவிட்டாள். ரதம் ஸஜ்ஜமானதும் ஸமஸ்த ஆயுதங்களுடன் அதன் மீது அமர்ந்து கொண்டான். அவனது முன்பாக பிராஸாதம், தோமரம் என்கிற ஆயுதங்களையேந்திய ம்ருத்யு நின்றான். மூவுலகங்களையும் அழித்திடும் சக்திமானன்றோ இவன் ! யமனது பார்ச்வ பாகத்தில் உருவமுள்ள காலதாண்டமானது விளங்கியது. அதன் பக்கலில் யமபாசங்கள் சூழ்ந்து நின்றன. இவையெல்லாம் நெருப்பைக் கக்கிக் கொண்டவைகளாய் விளங்கின. அதன் ஸமீபத்தில் முள்மயமான உலக்கை (ஆயுதம்) விளங்கியது.
    இப்படி ஆயுததரனாகவும் மிகுந்த கோபமுடையவனுமான யம தர்மராஜனைக் கண்ட தேவர்களனைவரும் பயமடைந்தனர். ஸாரதி ரதத்தை ராவணனின் முன் செலுத்துகின்றான்.
    தனது பரிவாரத்துடன் கோபிஷ்டனாக வந்து நின்ற யமதர்மனைக் கண்ட ராவணனது மந்த்ரிகள் மிகவும் பயம் கொண்டவர்களாய் மூலைக்கொருவராய் ஓடி ஒளிந்தனர். ஆனால் ராவணன் மட்டும் கொஞ்சமும் பயமடையவில்லை - மனக்கலக்கமுமடையவில்லை. இருவருமாகக் கடும் போர் புரிந்தனர். ஏழு தினங்கள் இவர்களுடைய யுத்தம் நடைபெற்றது. இந்த மஹாயுத்தத்தைக் காண பிரம்ஹதேவனுடன் தேவர்கள் அனைவரும் திரண்டு வந்தனர்.
      ராவணன் மிகவும் கோபமடைந்தவனாய், மிருத்யுவை நான்கு பாணங்களாலும், ஸாரதியை ஏழு பாணங்களாலும் அடித்துத் துன்புறுத்தினான் யமனையும் அநேகமாயிரம் பாணங்களால் மர்மஸ்தானங்களில் அடித்துப் பீடித்தான்.

      இப்படி அடிபட்ட யமனில் வாயிலிருந்து புகையுடன் கூடிய கோபாக்னியானது வெளிக்கிளம்பியது. அதைக்கண்ட அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.  "ம்ருத்யுவும் காலனும் யமனது கோபத்தைக் ண்டு குதூஹலித்தனர். அப்போது மிருத்யு மிகுந்த  கோபத்துடன் யமனைப் பார்த்து தலைவ! என்னை ஏவி விடுங்கள். மஹா பாபியான இந்த அரக்கனை நான் ஸம்ஹாரம் செய்கிறேன். என்னால் முடியுமா? என்று சங்கை வேண்டாம் – ஹிரண்யகசிபு - ஸம்பரன் -- நமுசி -- நிஸந்தி - தூமகேது-(மஹா) பலி – விரோசனன் - - சம்புவரக்கன் -- வ்ருத்ரன்-பாணாஸுரன் - அநேக ராஜரிஷிகள்-மதம் கொண்ட கந்தர்வர்கள் - இன்னும் எத்தனையோ பலசாலிகளை நான் என் வசமாக்கி யுள்ளேன். இறக்கச் செய்வது எனது தொழில் சங்கைப்படாமல் என்னை பிரயோகியுங்கள்.  இவனது உயிரை நான் அபஹரிக்கிறேன்'' என்று உறுதி கூறினான்.
     இப்படி ம்ருத்யு கூறக் கேட்ட யமன் – “ம்ருத்யுவே! சற்று நீ இருப்பாயாக, இந்த துஷ்டனை யுத்தத்தில் நானே வதம் செய்கிறேன்”. என்று கூறி மிகுந்த கோபத்துடன் - பக்கத்தில் இருந்த கால தண்டத்தை பிரயோகம் செய்யக் கையில் எடுத்தான். அந்த தண்டத்தைச் சூழ்ந்து கால பாசங்கள் பிரகாசித்தன. அதன் பக்கலில் வஜ்ராயுதத்திற் கொப்பான முத்கரம் என்கிற ஆயுதம் பிரகாசித்தது.  கண்டமாத்ரத்தாலேயே உயிர்களைப்  பறித்திடும்  சக்தி பெற்றது அவ்வாயுதம்.
        இப்படிப்பட்ட காலதண்டத்தை, யமதர்மன் ராவணன் மீது பிரயோகிக்க நினைத்தமாத்ரத்தில் ஸகல பிராணிகளும் - தேவர்களும் பயந்தனர். என்ன நேரிடுமோ என்று அஞ்சி ஓடினர்.
         அது ஸமயம் ப்ரம்ஹதேவன் யமனிடம் வந்தார்.
        அவனைப் பார்த்து-"அளவிடற்கரிய பராக்ரமமுடையவனே! கால தண்டத்தை பிரயோகித்து நீ ராவணனைக் கொல்ல நினைக்காதே இவனை நீ கொன்றால் நான் இவனுக்குக் கொடுத்த வரம் பொய்த்து விடும். அதாவது "தேவர்களால் நீ கொல்லத்தகாதவன் என்பது எனது (நான் கொடுத்த) வரம். அந்த எனது வார்த்தையை நீ பொய்யாக்குவது உனக்குத் தகாது இந்த கால தண்டமும் என்னால் உண்டாக்கப்பட்டதேயாகும். இதை யார் மீது பிரயோகித்தாலும் அவனைக் கொன்றே தீரும், வ்யர்த்தமாகாது. இதன் பிரயோகத்தால் ராவணன் அழிந்தாலும் எனது வார்த்தை பொய்த்துப் போகும். அப்படி ராவணன் அழிவிலிருந்து தப்பிப் பிழைத்தால், இந்தக் கால தண்டத்திற்கு நான் கொடுத்த சக்தி பொய்த்துப் போம். இரண்டு விதத்திலும் எனக்கு அபகீர்த்தியே உண்டாகும். எனவே நீ இம் முயற்சியைக் கைவிடவும்" என்றார்.  

        இப்படிக் கூறிய பிரம்மதேவனை வணங்கிய யமன், "ஸ்வாமி! தேவரீரே எங்கள் தலைவர். உமதிஷ்டப்படியே ஆகட்டும். நான் இனி என் செய்வது. தண்டப்பிரயோகம் செய்வதிலிருந்து  நிருத்தனாகிறேன். இனி இவன் முன் நில்லாமல் மறைவதைத் தவிர நான் வேறொன்றும் செய்வதற்கில்லை" என்று சொல்லி ரதத்துடன் அவ்விடத்திலிருந்து மறைந்துவிட்டான்.
       யமன் மறைந்ததும் ராவணன், தான் ஜயம் அடைந்ததாகக் கோஷித்துக்கொண்டு புஷ்பக விமானத்தில் ஏறிக்கொண்டு யம லோகத்திலிருந்து திரும்பச் சென்றான்.
         யமதர்மராஜனும் பிரம்மா முதலிய தேவர்களுடன் தன் இருப் பிடம் அடைந்தான். நாரதரும் கண்டு களித்து ஸ்வர்க்கலோகம் சென்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக