வியாழன், 22 ஏப்ரல், 2010

சித்திரையில் புனர்பூசம் சிறக்க வந்தோன் வாழியே! மின்தமிழில்

"மின்தமிழில்" திரு குமரன் மல்லி எழுதியது.

சித்திரையில் புனர்பூசம் சிறக்கவந்தோன்
வாழியே!<http://koodal1.blogspot.com/2010/04/blog-post_21.html>
<http://4.bp.blogspot.com/_h7qhuHzSykY/S88YksSsE0I/AAAAAAAACTw/XRGop5W...>
"எம்பெருமானாரே. தண்டமும் பவித்ரமும் அல்லவோ ஒரு முக்கோல் பகவரான துறவியின்
அடையாளங்கள். அவற்றை எங்கும் எப்போதும் தரித்துக் கொள்வது தானே துறவியரின்
கடமை. தங்களின் தண்டமும் பவித்திரமும் என்று தேவரீரால் சொல்லப்பட்டவர்கள்
தங்களின் முதன்மைச் சீடர்களான முதலியாண்டானும் கூரத்தாழ்வானும். அடியோங்கள்
கூரத்தாழ்வானின் வைபவத்தைக் கொஞ்சமேனும் பேசியிருக்கிறோம். முதலியாண்டானின்
வைபவங்களையும் பேசும் பாக்கியத்தை அடியோங்களுக்கு தேவரீர் அருள வேண்டும்!"
"சித்திரையில் புனர்பூசம் சிறக்க வந்த முதலியாண்டானின் வைபவத்தை நீர்
பேசுவதற்கு எம்பெருமானின் திருவருள் கூடி வந்திருக்கிறது. இன்றே சித்திரை
புனர்பூசம்! முதலியாண்டானின் பெருமைகளைப் பரக்க பேசும்!"
"ஆகா. தேவரீர் கருணையே கருணை.
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே!
காரேய் கருணை இராமானுச இக்கடலிடத்தில் யாரே அறிபவர் நின் அருளாம் தன்மை?!"
***
இறைவனுடன் கூடவே இருந்து எப்போதும் தொண்டு செய்து கொண்டிருப்பது ஒரு வகை. அதனை
இராமவதாரத்தில் இலக்குவனிடம் கண்டோம். அதுவே இராமானுச முனியின் வாழ்க்கையில்
கூரத்தாழ்வானிடம் கண்டோம்.
இறைவனின் திருவுள்ள உகப்பை முன்னிட்டு இறைவனின் அருகாமையைக் கூடத் துறந்து இறை
பணி செய்வது இன்னொரு வகை. அதனை இராமாவதாரத்தில் பரதனிடம் கண்டோம். இராமானுச
முனியின் வாழ்க்கையில் அதனை முதலியாண்டானிடம் கண்டோம். ஆசாரியனின் திருவுள்ள
உகப்பிற்காக தன்னுடைய கல்விப்பெருமைகளை எல்லாம் மறைத்துக் கொண்டு இராமானுசரின்
ஆசாரியர் பெரிய நம்பிகளின் திருமகளார் அத்துழாயின் புகுந்த வீட்டிற்கு
முதலியாண்டான் வேலைக்காரனாக சென்று வேலை செய்ததை நமது கண்ணபிரான் இரவிசங்கர்
முன்பே இங்கு <http://madhavipanthal.blogspot.com/2008/09/1.html>பேசியிருக்கிறார்.
அதனை முதலியாண்டானின் பிறந்த நாளான இன்று மீண்டும் ஒரு முறை
படிப்போம்!
***
*அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே!
அருட்பச்சை வாரணத்தில் அவதரித்தோன் வாழியே!
சித்திரையில் புனர்பூசம் சிறக்கவந்தோன் வாழியே!
சீபாடியம் ஈடு முதல் சீர் பெறுவோன் வாழியே!
உத்தமமாம் வாதூலம் உயரவந்தோன் வாழியே!
ஊர்திருந்தச் சீர்பாதம் ஊன்றினான் வாழியே!
முத்திரையும் செங்கோலும் முடிபெறுவோன் வாழியே!
முதலியாண்டான் பொற்பதங்கள் ஊழிதோறும் வாழியே!*
திருவத்திகிரி எனப்படும் காஞ்சிபுரத்தில் அருளும் பேரருளாளன் வரதராசப்
பெருமாளின் திருவடிகளைப் பணிந்தவன் வாழ்க! திருவருள் கூடிய பச்சைவாரணம் என்ற
ஊரில் அவதரித்தவன் வாழ்க! சித்திரை மாதம் புனர்பூச நட்சத்திரம் சிறப்பு பெறும்
படி அதில் பிறந்தவன் வாழ்க! ஸ்ரீபாஷ்யம் நூலை உடையவரிடமிருந்து முதல் ஆளாக
சிறப்புடன் பெற்றவன் வாழ்க! உத்தமமான வாதூல குலம் உயர வந்தவன் வாழ்க!
திருவரங்கத் திருநகரில் வாழ்பவர்கள் எல்லோரும் கைங்கர்யம் என்னும் நல்வழியில்
திரும்பும்படி அழகிய மணவாளனை ஊரெல்லாம் தாங்கிச் செல்லும் சீர்பாதம் என்னும்
கொத்தினை எம்பெருமானாரின் கட்டளைப்படி நிலைநாட்டியவன் வாழ்க! முதலியாண்டான்
பொற்பதங்கள் எக்காலத்திலும் வாழ்க!
***
எம்பெருமானார் இராமானுசர் அவதரித்து பத்து வருடங்களுக்குப் பின்னர் பிரபவ
வருடத்தில் பூவிருந்தவல்லிக்கும் திருமழிசைக்கும் இடையில் இருக்கும்
'பச்சைபெருமாள் கோயில்' என்னும் ஊரில் பிறந்தவர் தாசரதி என்ற இயற்பெயர் கொண்ட
முதலியாண்டான். இவர் பிறந்த ஊருக்கு 'புருஷமங்கலம்', 'வரதராஜபுரம்',
'பச்சைமங்கலம்' என்ற பெயர்களும் உண்டு. இவருடைய திருத்தகப்பனார் பெயர் அனந்தராம
தீட்சிதர். இவருடைய திருத்தாயார் பெயர் நாச்சியார் அம்மன் என்னும் கோதாம்பிகை.
இவருடைய தாய்மாமன் எம்பெருமானார். இவருடைய கோத்திரம் வாதூல கோத்ரம்.
எம்பெருமானாருடைய சீடர்கள் அனைவருக்கும் தலைவராக இருந்ததால் இவருக்கு
முதலியாண்டான் என்ற திருப்பெயர் அமைந்தது.
நம்மாழ்வாரான சடகோபன்/சடாரி எம்பெருமானின் திருவடிநிலைகளாக இருந்து
அருள்பாலிக்கிறார். அதே போல் எம்பெருமானாரின் திருவடிநிலைகளாக அவரது அந்தரங்க
அடியாராக இருந்த முதலியாண்டான் கருதப்படுகிறார். இனி மேல் இதனை நினைவில்
நிறுத்தி இராமானுசரின் சன்னிதிக்குச் செல்லும் போது 'சடாரி சாதிக்க வேண்டும்'
என்று கேட்காமல் 'முதலியாண்டான் சாதிக்க வேண்டும்' என்று வேண்டுவோம்!
***
*பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா
தஸ்ய தாசரதே: பாதௌ சிரஸா தாரயாம்யஹம்*
யாருடைய திருப்பெயரால் எதிராசரான இராமானுசரின் திருவடிநிலைகள்
அழைக்கப்படுகின்றனவோ அந்த தாசரதியின் திருவடிகளை நான் என் தலையில் அணிகிறேன்.
*ஸ்ரீமத் தாசரதிம் வந்தே ராமானுஜ பதாஹ்வயம்
வாதூலாநாம் அலங்காரம் த்ரிதண்டாஹ்வய தேசிகம்*
ஸ்ரீ ராமானுசரின் திருவடிகள் என்ற திருப்பெயரை உடையவரும், வாதூல
கோத்திரத்தவர்களுக்கு அணிகலனைப் போன்றவரும், ஸ்ரீ ராமானுசரின் முக்கோலாகச்
சொல்லப்படுபவரும் ஆன ஸ்ரீமத் தாசரதி என்னும் குருவை வணங்குகிறேன்.
*அநந்த நாராயண கோதாம்பிகா கர்ப்ப ஸம்பவம்
பாகிநேயம் யதீந்த்ரஸ்ய பஜே தாசரதிம் குரும்*
அநந்த நாராயண தீட்சிதருக்கும் கோதாம்பிகைக்கும் திருமகனாகப் பிறந்தவரும்,
எதிராசருக்கு மருமகனும் ஆன தாசரதி எனும் குருவை வணங்குகிறேன்!
*மேஷே புநர்வஸு திநே தாசரத்யம்ஸ ஸம்பவம்
யதீந்த்ர பாதுகாபிக்யம் வந்தே தாசரதிம் குரும்*
மேஷ மாதமான சித்திரையில் புனர்பூச நாளில் தசரத குமாரனின் அம்சமாகப்
பிறந்தவரும், எதிராசருடைய திருப்பாதுகைகள் எனப்படுபவரும் ஆன தாசரதி எனும்
குருவை வணங்குகிறேன்!
*ய: பூர்வம் பரதார்த்தித: ப்ரதிநிதிம் ஸ்ரீபாதுகாம் ஆத்மந:
ராஜ்யாய ப்ரததௌ ஸ ஏவ ஹி குரு: ஸ்ரீ தாசரத்யாஹ்வய:
பூத்வா லக்ஷ்மண பாதுகாந்திமயுகே ஸர்வாத்மநாம் ச்ரேயஸே
ஸாம்ராஜ்யம் ஸ்வயமத்ர நிர்வஹதி நோ தைவம் குலஸ்யோத்தமம்*
யார் முற்காலத்தில் பரதனால் வேண்டிக்கொள்ளப்பட்டு அரசாளுவதற்கு தன்
பிரதிநிதியாகத் தன் திருப்பாதுகைகளைத் தந்து அருளினானோ, அந்த ராமனே தாசரதி
என்னும் பெயருள்ள ஆசாரியனாய் மீண்டும் வந்து நம்முடைய குலத்திற்கு மிகவும்
உயர்ந்த தெய்வமான ச்ரி ராமானுச பாதுகைகளாக ஆகி எல்லா உயிர்களும் உய்யும்படி
திருவருட் பேரரசை இங்கே தானே ஆண்டு கொண்டிருக்கிறான்!
தனது பாதுகைகள் கோசல சாம்ராஜ்யத்தை ஆண்டது போல் தானே இராமானுச பாதுகைகளாகி
பக்தி சாம்ராஜ்யத்தை ஆளுகிறான் தாசரதி!
*ஸ்ரீவைஷ்ணவ சிரோபூஷா ஸ்ரீராமானுஜ பாதுகா
ஸ்ரீவாதூல குலோத்தம்ஸ: ஸ்ரீதாசரதிரேததாம்*
ஸ்ரீவைஷ்ணவர்களின் திருமுடிகளுக்கு அணிகலனாக இருக்கும் ஸ்ரீ ராமானுச
திருவடிநிலைகளாக ஆகி, ஸ்ரீவாதூல குலத்திற்கு அணிகலனாக விளங்கும் ஸ்ரீதாசரதி
என்னும் முதலியாண்டான் எங்கும் வெற்றி பெறுவாராக!
முதலியாண்டான் திருவடிகளே சரணம்!
எம்பெருமானார் திருவடி நிலைகளே சரணம்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக