புதன், 24 ஜூன், 2009

ந்யாஸதசகம்

ந்யாஸதசகம் 3.

ஸ்வாமிந் ஸ்வசேஷம் ஸ்வவசம்
ஸ்வபரத்வேந நிர்ப்பரம்
ஸ்வதத்த ஸ்வதியா ஸ்வார்த்தம்
ஸ்வஸ்திந் நிஸ்யஸிமாம் ஸ்வயம். (3)

[ ஸ்வாமிந் -- ஸ்வத்வத்தை உடையவரே! ஸர்வசேஷியான ஸ்ரீமந்நாராயணனே ! ஸ்வசேஷம் -- தேவரீருடைய ஸொத்தாகவும் தேவரீருக்குச் சேஷபூதனாயும்; ஸ்வவசம் -- தேவரீருக்கு அதீநனாயும் இருக்கிற, தேவரீருக்கு உட்பட்டவனும் ஆன; மாம் -அடியேனை; ஸ்வதத்த ஸ்வதியா -- தேவரீரால் கொடுக்கப் பெற்றதான தேவரீரைக் குறித்ததான புத்தியினால், தேவரீரால் அளிக்கப்பெற்ற தேவரீருடைய புத்தியால், இச்சரீரப்ரதாநம் முதல் ஸதாசார்ய ஸம்ச்ரயணம் பண்ணிவைத்து த்வயோச்சாரணம் வரையில் உள்ள ஜ்ஞாநத்தினால்; ஸ்வார்த்தம் -- தேவரீருக்காகவே, தேவரீருடைய லாபத்துக்காகவே; நிர்ப்பரம் -- அடியேனுக்குச் சுமையில்லாதபடி, அடியேனுக்கு ஒரு பொறுப்பும் இல்லாதபடி; ஸ்வபரத்வேந -- செய்யவேண்டிய கார்யங்கள் தேவரீருடைய பரமாக, தேவரீருடைய பொறுப்பாகவே; ஸ்வஸ்மிந் -- தேவரீரிடத்தில்; ஸ்வயம் -- தேவரீரே; ந்யஸ்யஸி -- வைத்துக் கொள்ளுகின்றீர்.]

அடியேனை ஸொத்தாகவுடைய பெருமாள், தனக்கு அடிமையானவனும், தன்வசமாயிருப்பவனும், தன்னிடம் பரத்தை வைத்துவிட்டபடி யாலே எல்லாவித பரமும் நீங்கினவனுமான அடியேனுக்குத் தன்னைப்பற்றிய ஞானத்தைத் தானே கொடுத்து, தான் அளித்த தன்னறிவாலே தனக்காகவே தன்னிடத்தில்தானே அடியேனை வைத்துக் கொள்ளுகிறார்.

முன் சுலோகத்திற் சொன்ன ஸாங்கமான பரஸமர்ப்பணமும் நிவ்ருத்திதர்மத்திற்கு உரியதான ஸாத்விகத்யாகம் என்கிற அங்கத்துடன் அநுஷ்டிப்பது என்று அருளிச் செய்கிறார் இதில்.

ஸர்வநியந்தாவாயாகிய திருநாராயணனே ! தேவரீருக்கு ஒரு மேன்மையைத் தருவதற்காகவே ஏற்பட்டவனாயும், தேவரீர் இட்ட வழக்காய் இருந்து அதீநனாயும் அடியேன் இருக்கின்றேன். இவ்வாறுள்ள அடியேனை தேவரீர் கொடுத்த தேவரீருக்குச் சேஷமான புத்தியாலே வேறொருவரின் பிரார்த்தனையின்றி தேவரீர் பிரயோஜநத்துக்காகவே அடியேனுக்கு ஒரு பரம் இல்லாமல் இருக்கும்படி தேவரீர் திருவடிகளில் வைத்துக் கொள்ளுகிறீர்.

தன்னதிகாராநுரூபமாக தவிர வேண்டுமவைதவிர்த்து, செய்யவேண்டுமவை செய்யுமிடத்தில் அடியேன் ஸ்வதந்த்ரனாய்ச் செய்கிறேன் அல்லேன். அடியேனுக்கு இக்கர்மம் சேஷபூதம் என்றும், அடியேனுக்கு இன்னபலத்துக்கு இதுவே ஸாதனம் என்றும் பிறக்கும் நினைவை மாற்றி ஸர்வேச்வரன் செய்விக்க அவனுக்குச் சேஷமான கைங்கரியத்தை அவன் உகப்பே பிரயோஜநமாக அநுஸந்தித்து அநுஷ்டிக்கை ஸாத்விகத்யாகம். இவ்வாறு அநுஷ்டிப்பது.

நிவ்ருத்தி தர்மங்களை அநுஷ்டிக்கும் ஜீவன் கர்த்ருத்வத்தையும், மமதையையும், பயனில் ஸம்பந்தத்தையும் விட்டுவிடவேண்டும். இதுவே ஸாத்விகத்யாகம். கர்த்ருத்வத்தை விடுகையாவது :-- இந்தக் காரியத்தை யான் செய்யவில்லை, எம்பெருமான்தான் என்னைக்கொண்டு செய்கிறான் என்று எண்ணுவது. மமதையை விடுகையாவது:-- எனக்குப் பிரயோஜநத்தைக் கொடுப்பதால் இந்தக் கர்மம் என்னுடையது என்கிற நினைவை விடுவது. பயனில் ஸம்பந்தத்தை விடுகையாவது:- இந்தக் கர்மத்தினால் வரும் பயனை வேண்டாமல் தன் ஸம்பந்தத்தை ஒழித்தல்.

ஸ்வவசம் -- என்பதால் தனக்கு ஸ்வதந்த்ரத்தன்மையின்மை சொல்லிற்று.

நிர்ப்பரம் -- என்பதால் ரக்ஷணப் பொறுப்பில் தனக்குச் சம்பந்தம் இல்லாமை அறிவிக்கப் பெற்றது.

ஸ்வதத்த -- என்கையால் அளிக்கப்பெற்ற புத்தி நான் ஸம்பாதித்தது அன்று; அவன்தந்து அருளியதே என்று அஹங்கார நிவ்ருத்தி கூறப் பெற்றது.

ஸ்வதியா -- என்பதால் எம்பெருமான் அநுக்ரஹித்த ஜ்ஞாநம் என்னுடையதன்று, அவனுடையதே என்று மமதாத்யாகம் பேசப் பெற்றது.

ஸ்வார்த்தம் --என்பதால் பலத்யாகம் உரைக்கப் பெற்றது.

ஸ்வயம் ஸ்வஸ்மின் ந்யஸ்யஸி -- என்பதால் கர்த்ருத்வத்யாகம் கூறியபடி.

"" கீழில் திருவாய்மொழியிலே " நலமந்தமில்லதோர் நாடு புகுவீர்" என்று இவர் தாமும் அருளிச்செய்து, ஸர்வேச்வரனும் இவர்க்கும் இவர் பரிகரத்துக்கும் மோக்ஷங் கொடுப்பானாகப் பாரிக்க, அத்தைக்கண்டு; தேவரீர் எனக்கு மோக்ஷம் தந்தருளப் பார்த்ததாகில் இங்ஙனே தரப் பார்ப்பது; அதாகிறது "உனக்கு மோக்ஷங்கொள்" என்று எனக்காகத் தருகை யன்றிக்கே, 'நமக்காகக்கொள்' என்று தேவர்க்கே யாம் படியாகத் தரவேணுமென்று தாம் நினைத்திருந்த படியை அவன் திரு முன்னே பிரார்த்திக்கிறார். **** எம்பார் இத்திருவாய்மொழி யருளிச் செய்யப்புக்கால், இருந்தவர்களை "யார்" என்று கேட்டுக் கதவுகளையும் அடைப்பித்து, குஹ்யமாகவாம் அருளிச் செய்வது.' [ஈடு. ஒன்பதாந் திருவாய்மொழி -- எம்மாவீடு -- ப்ரவேசம்]

எனக்கே யாட்செய் எக்காலத்துமென்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னித்
தனக்கே யாக எனைக்கொள்ளு மீதே
எனக்கே கண்ணனை யான் கொள்சிறப்பே.
(திருவாய்மொழி 2-9-4)

(ஈடு. நாலாம் பாட்டு. இத்திருவாய் மொழியிலே இவர் நிஷ்கர்ஷித்த ப்ராப்யமாவது :-- ஸ்ரக்சந்தனாதிகளோபாதி தனக்கே எனைக்கொள்ளு மீதே என்றிறே; இவ்விடத்திலே எம்பார் அருளிச் செய்யும்படி :-- "ஸர்வேச்வரன் திரிவிதசேதநரையும் ஸ்வரூபாநு ரூபமாக அடிமைகொள்ளா நின்றான்; நாமும் இப்படிப் பெறுவோமேயென்று." முக்தரும், நித்யரும், தாங்களும் ஆநந்தித்து அவனையும் ஆநந்திப்பிப்ப வர்கள்; பத்தர் தாங்கள் ஆநந்தியாதே அவனை ஆநந்திப்பிப்பர்கள்; இன்புறும் இவ் விளையாட்டுடையானிறே;" மயர்வற மதிநலமருளப் பெற்றவர், 'தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே' என்று ப்ரார்த்திப்பானேன்? 'திருவுள்ளமானபடி செய்கிறான் என்றிராதே' என்று பிள்ளை திருநறையூரரையர் எம்பாரைக் கேட்க "அது கேளீர் ! முன்பு பிரிந்தன்று, பின்பு பிரிவுக்கு ப்ரஸங்கமுண்டாயன்று, இரண்டுமின்றியிருக்கச் செய்தே, 'அகலகில்லேன் அகலகில்லேன்' என்னப் பண்ணுகிறது விஷயஸ்வ பாவமிறே; அப்படியே ப்ராப்யருசி ப்ரார்த்திக்கப் பண்ணுகிறது" என்று அருளிச் செய்தார். எம்மாவீட்டிலெம்மாவீடாய், வைஷ்ணவஸர்வஸ்வமுமாய், உபநிஷத்குஹ்யமுமாய், ஸர்வேச்வரன் பக்கலிலே அபேக்ஷித்துப் பெறுமதாய், இவ்வாத்மாவுக்கு வகுத்ததுமான பாரதந்த்ர்யத்தை அவன் பக்கலிலே அபேக்ஷிக்கிறார். முதலிலேயே "ஆட்செய்" என்னவேணும்; ஆட்செய்யென்று -- ஸ்வாதந்த்ர்யத்தே வ்யாவர்த்திக்கிறது. அதில் "எனக்காட்செய்" என்னவேணும்; எனக்காட்செய் என்று -- அப்ராப்ம விஷயங்களை வ்யாவர்த்திக்கிறது. எனக்கேயாட்செய் என்று -- தனக்குமெனக்கும் பொதுவான நிலையைத் தவிர்த்து, "எனக்கேயாட்செய்" என்னவேணும். இதுதான் "ஒழிவில் காலமெல்லா முடனாய் மன்னி" நிற்கவேணும்; "க்ரியதாமிதி மாம்வத" என்கிறபடியே, "இன்னத்தைச் செய்" என்று ஏவிக்கொள்ள வேணும்; இப்படி ஒரு வார்த்தை அருளிச் செய்து நெடுங்கை நீட்டாக இருக்கவொண்ணாது, என்னுடைய ஹ்ருதயத்திலே வந்து புகுரவேணும்; புகுந்தாலும் போக்குவரத்துண்டாக வொண்ணாது, ஸ்த்தாவர ப்ரதிஷ்டையாக எழுந்தருளியிருக்கவேணும். இருந்து கொள்ளும் கார்யமென்? என்றால்,

[தனக்கேயாக வெனைக் கொள்ளுமீதே] -- ஸ்ரக்சந்தநாதிகளோபாதியாகக் கொள்ள வேணும். அது சூடுமவனுக்கும் பூசுமவனுக்கு முறுப்பாய் மிகுதி கழித்துப்போகடு மித்தனை யிறே. ஒரு மிதுநமாய்ப் பரிமாறா நின்றால் பிறக்கும் இனிமையும் இரண்டு தலைக்கும் ஒத்திருக்குமிறே, அங்ஙன் என்னுடைய ப்ரீதிக்கு நான் அந்வயித்தவனாக வொண்ணாது, "நின்" என்றும், "அம்மா" என்றும் -- முன்னிலையாக ஸம்போதித்துக் கொண்டு போரா நிற்கச் செய்தே, இங்குப் படர்க்கையாகச் சொல்லுவானேன்? என்னில்; "ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிற ஸமயத்திலே, திருமுகத்தைப் பார்க்கில் வ்யவஸாயங்குலையும்" என்று , கவிழ்ந்திருந்து கையோலை செய்து கொடுக்கிறார்.

[எனக்கே கண்ணனை] -- "தனக்கேயாக" என்ற பின்புத்தை, எனக்கேயிறே. புருஷார்த்தமாகைக்காகச் சொல்லுகிறார். ஒரு சேத நனிறே அபேக்ஷிப்பான். நீர் அபேக்ஷிக்கிற இது செய்வோமாகப் பார்த்தால் எல்லார்க்கும் செய்யவேணுங்காணுமென்ன, [யான்கொள்] --ஸ்வரூப ஜ்ஞாநத்தை நீ பிறப்பிக்க, அத்தாலே ஸ்வரூபஜ்ஞாநமுடைய நான் ஒருவனும் பெறும்படி பண்ணவேணும். உமக்கும் எப்போதும் நம்மாற் செய்யப்போகாதென்ன, [சிறப்பே]-- பலகால் வேண்டா, ஒருகால் அமையும்; அதுதன்னிலும், திருவாசலைத் திருக்காப்புக் கொண்டு ஒருவர் அறியாதபடி சிறப்பாகச் செய்யவும் அமையும். சிறப்பாகிறது -- ஏற்றம். அதாவது புருஷார்த்தம். ஸ்வரூபாநுரூபமான புருஷார்த்தத்தைக் கொண்டருளவேணுமென்ற படி. சிறப்பாவது -- முக்தியும் ஸம்பத்தும், நன்றியும். இவற்றில், நான் உன்பக்கல் கொள்ளும் மோக்ஷம் உனக்கேயாக எனைக்கொள்ளுமதுவே. உன்பக்கல் நான் கொள்ளும் ஸம்பத்தென்னவுமாம். நன்றியென்னவுமாம். என்பன இவண் அநுஸந்தேயம்.

["தமக்கேயா யெமைக் கொள்வார் வந்தார்தாமே" என்பது இம் மஹாதேசிகன் அருளிச் செய்த திருச்சின்னமாலை (4)ப்பாசுர ஈற்றடி]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக