செவ்வாய், 30 ஜூன், 2009

டெல்லி அன்பில் ஸ்வாமி

டெல்லி அன்பில் ஸ்வாமி தனது இளமையில் சில சித்திர பத்ததிகளும் செய்து பார்த்திருக்கிறார். மாதிரிக்கு இரண்டு எனக்கு அனுப்பியிருந்தார். அவைகளை இங்கு அளித்துள்ளேன்.

அன்பில் எஸ். ஸ்ரீனிவாஸன் (புதுதில்லி) பள்ளி, கல்லூரி மாணவராக இருந்த காலத்தில் “பத்மம்” என்னும் புனைப்பெயரில் எழுதிய கவிதைகள் -- 2

---

ஸ்ரீ வைணவ ஆசாரியர் ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகன் அருளிய ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரத்தில் ‘சித்ரபத்ததி’யில் உள்ள ஸ்லோகங்கள் ஒவ்வொன்றும் ஒரு சித்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. அதைக் கண்டு வியந்த அடியேனின் இளம் உள்ளத் துடிப்பின் விளைவாக பின்வரும் கவிதைகள் எழுந்தன:

மண்ணுள்ளே பிறந்தாய் மறையாத புகழுற்றாய்

பண்ணுள்ளே பிணைந்தாய் குறையாத சுகமுற்றாய்

கண்ணுள்ளே புகுந்தாய் கற்றோத நிகரற்றோய்

எண்ணுள்ளே புரந்தாய் ஏற்றாத சகமற்றோய்

நடந்தாய் தாளற நங்கையின் கைபிடித்து

மடந்தாள் தானுற லங்கையின் கையொடித்து

கிடந்தாய் யாதுற காவிரியில் கைமடித்து

இடர்தான் யானறவே விழையின் கைநெடித்து

(மேலுள்ள இரு கவிதைகளில் இரு அடிகளுக்கு நடுவே “/\” என்ற கோடுகளைப் போட்டால் அதே அடிகள் வருவதைக் காணலாம்.) { ரகு : இது சற்று எளிதாகப் புரிந்துகொள்ள அடியேன் வரைந்து காட்டியுள்ளேன். படத்தை க்ளிக் செய்து பார்க்கலாம். }

பின் வரும் கவிதையில் ஒவ்வொரு அடியிலும் இரண்டாவது சீரின் இறுதி எழுத்தை மையமாக வைத்து அதைச் சுற்றி எட்டு வட்டங்களை வரைந்து எட்டு திசைகளிலும் வரிசையாக சீர்களிலுள்ள எழுத்துக்களை வெளிப்புறத்திலிருந்து உட்புறமாக எழுதினால் எண் வரிசை சக்கரம் ஒன்று அமையும். )

கமலத்து வதிந்து காத்தருள் புரிந்து

அமரரும் துதித்து ஆழ்கடல் படுத்து

அமுதனின் மனத்து அமர்ந்த அழகிது

எமதுளம் இசைத்து எழுமுனைப் பணிந்து

{ரகு -- இது எளிதுதானே. ஒன்றுக்குள் ஒன்றாய் எட்டு வட்டங்கள். அந்த எட்டையும் எட்டாகப் பிரித்து உள்வட்டத்தில் "து" எழுதி, எட்டில் முதலாவதில் வெளியிலிருந்து க ம ல த் து வ ந் என எழுதி, இரண்டாவதில் கா த் த ரு ள் பு ரி ந் என எழுதி பூர்த்தி செய்யலாம்}

---- (தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக