செவ்வாய், 30 ஜூன், 2009

அன்பில் ஸ்வாமி கவிதைகள்

யாஹூ குழுமத்தில் வைணவம் சம்பந்தமான அனைத்துக் குழு உறுப்பினர்களுக்கும் நன்கு அறிமுகமான பெரியவர் டெல்லி அன்பில் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி. அவரது வைணவ சித்தாந்த நூல்கள் சில ஸ்ரீ Dr. சடகோபன் ஸ்வாமியால் மின்புத்தகங்களாகவும் வந்துள்ளன. ஆனால் பலருக்குத் தெரியாதது அவர் ஒரு பெரிய கவிஞர் என்பது. அவருடைய "தயா சதகம்' ஒரு தேன் சொட்டும் அருமையான தமிழாக்கம். அதை சில ஆண்டுகளுக்கு முன் மின்புத்தகமாக இணையத்தில் வெளியிடும் பாக்யம் அடியேனுக்குக் கிடைத்தது. எனக்காக அவரிடம் உள்ள பழைய புத்தகங்களை அனுப்பும்போது அவரது இளவயதில் அவர் எழுதிய கவிதைகளிலிருந்து சிலவற்றைத் தொலைபேசியில் படித்துப் பரவசப் படுத்தினார். அவற்றுள் ஓரிரண்டை இங்கே மற்றவர்களும் படித்து மகிழ இட்டுள்ளேன். "சரணாகதி" மேன்மை பற்றிப் படித்துக் கொண்டு வருகையில் அவன் பெருமை போற்றும் கவிதைகள் நமக்குக் கிடைத்ததும் பொருத்தம்தானே!

(அன்பில் எஸ். ஸ்ரீனிவாஸன் (புதுதில்லி) பள்ளி, கல்லூரி மாணவராக இருந்த காலத்தில் “பத்மம்” என்னும் புனைப்பெயரில் எழுதிய கவிதைகள்)
---
கடவுள் வாழ்த்து
---
நிலையிலா உலகில் நீயெனைப் படைத்தாய்!
கலையிலே என்னுளம் கலந்திட வைத்தாய்!
அலையலை யாய்க்கவி ஆயிரம் பாடியுன்
அலகிலாப் புகழ்புவி அனைத்தும் பரப்புவேன்!
-------
தேனுறு கமலத் திருவடி போற்றி!
கானுற நடந்த திருவடி போற்றி!
வானுற உயர்ந்தோன் இணயடி போற்றி!
யானுற அருள்வோன் இணயடி போற்றி!

வையம் ஏத்தும் எழிலடி போற்றி!
தையாள் ஏந்தும் எழிலடி போற்றி!
ஐயன் அழகன் மலரடி போற்றி!
உய்ய உலகெலாம் மலரடி போற்றி!

குணத்துப் பெரியோன் தாளே போற்றி!
மனத்தே இனியான் தாளே போற்றி!
கணத்தும் நீங்கான் தாளே போற்றி!
வணத்துள் வண்ணோன் தாளே போற்றி!


திருவுடை நெஞ்சோன் தாளே போற்றி!
அருளுடைக் கடலோன் அடியே போற்றி!
இருளுடைத் தகற்றும் இணயடி போற்றி!
கருநிறக் கண்ணன் கழலடி போற்றி!
----
உலகெல்லாம் உன்கண்ணுள்!
உய்யவழியும் உன்னொளியில்!
நிலையில்லா உளத்தோரோ
நினதருளிலா மானிடர்கள்!
கலையேஎன் கருத்தெலாமுன்
கருணையேஎன் வேண்டுதலாம்!
அலைபாயா துளமுன்றன்
அடியிணையில் வைப்பேனே!
----
வாடாமலர் தேனார்குழல் மங்கைதனை உடையோனே!
வரையாம்திரு மலையில்திகழ் மாலே!பரம் பொருளோனே!
சேடாதிபன் மேலேயுறை சீரார்கடல் நிறத்தோனே!
சேணாய்முகில் துதித்தேகும் திருவேங்கடப் பெருமானே!
வீடாம்நின தடியேநினை அடியார்மனம் களிப்போனே!
விந்தைபெரும் விந்தையென வியப்பாருனைப் பணிவாரே!
கூடாதெது உள்ளம்தனைக் கூடச்செயும் பெரியோர்க்கே?
கோலம்புரி கோலமுடை எழிலே!எமக் கருள்வாயே!
----
மலராய் கனியாய் மணமாய் தருவாய் பரந்தோனே!
இலனாய் உளனாய் இருளாய் ஒளியாய் இருப்போனே!
நலமாம் பொருளாய் நினைவாய் உளமாய் நிறைந்தோனே!
உலகாய் அணுவாய் உணர்ந்தாய் எமக்கே அருள்வாயே!
----

எழில்தவழ உலகமைத்து எல்லையிலே கவிஞனையும்
கழியெண்ண உளமளித்துக் கனியெனவே கற்பனையும்
பொழிந்திடவே அமைத்தனையுன் பொன்னான அருளுடனே!
அழிந்திடாத படைப்பெலாமுன் அழகினையே பறைசாற்றும்!

(தொடரலாம் ! ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி அனுமதித்தால்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக