இது ஆண்டாள் மாதம். திரும்பும் இடங்களிலெல்லாம் திருப்பாவை உபந்யாஸங்கள். இணையத்திலெல்லாம் திருப்பாவை வ்யாக்யானங்கள். சமீபத்திய வர்தா புயல் சென்னையைப் புரட்டிப் போட்டபோதும் சென்னை மக்கள் ஆண்டாளை அனுபவிப்பதைப் பார்க்க முடிந்தது. அந்தப் புயல் பாதிப்பிலும் அடியேனுக்கு ஒரு அருமையான நூல் கிடைத்தது. அது திருப்பாவையை அருளிய ஆண்டாளைப் போற்றி ஆசார்ய ஸார்வபௌமன் ஸ்ரீ தேசிகன் இயற்றிய ஸ்ரீ கோதா ஸ்துதிக்கு, ஸ்வாமி தேசிகனின் பரம ரசிகரான அன்பில் கோபாலாசாரியார் ஸ்வாமி 1937ல் எழுதிய ஒரு அற்புதமான உரை. கிடைத்த இரண்டு மணி நேரத்துக்குள் அந்நூல் முழுவதையும் ஸ்கான் செய்ய முடிந்தது. அதில் கிரந்த எழுத்துக்கள் பரவி வருவதால் அவற்றைத் தமிழ்ப்படுத்தி இங்கு பகிர ஆரம்பிக்கிறேன். தினம் ஒரு சுலோகமாவது பகிர்ந்து ஆண்டாள் தன் திருக்கல்யாண தினமான தை முதல் நாளுக்குள் பூர்த்தி பண்ண அனுக்ரஹிக்க வேண்டுமென்ற ப்ரார்த்தனையுடன் இந்த முதல் சுலோக விரிவுரை இங்கே.
||ஸ்ரீ:||
ஸ்ரீ கோதா ஸ்துதி
ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேஸரீ |
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||
ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தன கல்ப வல்லீம்
ஸ்ரீரங்கராஜஹரிசந்தன யோகத்ருச்யாம்|
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாமநந்ய சரண: சரணம் ப்ரபத்யே || (1)
ஸ்ரீரங்கராஜஹரிசந்தன யோகத்ருச்யாம்|
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாமநந்ய சரண: சரணம் ப்ரபத்யே || (1)
ஸ்ரீவிஷ்ணுசித்தருடைய
குலமென்னும் நந்தனத் தோட்டத்தில் (தோன்றிய) கற்பகக்கொடியும், ஸ்ரீரங்கராஜனென்னும்
ஹரிசந்தன கற்பகவிருக்ஷத்தை அணைவதால் (மணம் புரிவதால்) பார்க்கத் தக்கவளாயும்,
க்ஷமையின் வடிவேயானவளாயும், (ஸாக்ஷாத் பூமிதேவியாயும்), கருணையினால் மற்றோர்
லக்ஷ்மிதேவி போன்றவளாயுமான கோதையை (வாக்கையளிக்கும் தேவியை) புகலொன்றில்லாவடியேன்
சரணம் பணிகிறேன்.
தாத்பர்யம்
முன்பு
தேவப்பெருமாளும் பெருந்தேவித் தாயாருமாகிய திவ்ய தம்பதிகளிடம் இவர் (நிஜ)
பரத்தை ஸமர்ப்பித்து நிர்ப்பரரானவரே -- இங்கு கோதையைச் சரணம் புகுவது
எதற்காக? கோதையை அம்ருதவாக்கால் துதிக்க வேண்டியதற்கு ஸாமக்ரியான ஓர்
அத்புத கவிதாசக்திக்காக கவிப்பெண்ணான கோதையை இங்கே சரணம் புகுகிறார்.
"கோதா" என்கிற திருநாமத்தைச் சொல்லி சரணவரணம் செய்வதாலே இது
ஸூசிதம். "கோ" என்பது "வாக்கை, ஸரஸ்வதியை"ச் சொல்லும்.
கோதா என்பதற்கு "வாக்கைக் கொடுப்பவள்" என்று அர்த்தம். வேதங்களால்
கவி என்று புகழப்படுபவரும், கீதை பாடியவருமான
பெருமாளுக்கு அத்புதமான பாமாலை கொடுப்பவள். என்ன கவிஸிம்ஹமானாலும்,
ஸ்வயம் அத்புத கவியான கோதைக்கு ஸ்தோத்ரமாலை கொடுக்கத் தமக்குச் சக்தி
போதாதென்று பயந்து, அவளே அவளைப்பாட ப்ரஸூமதுரமான, பஹுகுணரமணீயமான,
ஸரஸ்வத்யாதி புனிதமான மஹாநதிகள் போன்ற கவிதா ப்ரவாஹத்தை அளிக்க வேண்டும் என்று இங்கே சரணமடைகின்றார். இதை மூன்றாவது சுலோகத்தில்
"தாயே! நீயே உன்னைத் துதிக்க யோக்யமாக ப்ரஸந்நமதுரமான வாக்கு எனக்கமைய
க்ருபை புரியவேணும்" என்று ப்ரார்த்திப்பதாலும், கடைசி
சுலோகத்தில், "மலர்ந்த பக்தியால் பஹுகுணரமணீயமான
இந்த கோதா ஸ்துதி வெளிப்பட்டது" என்று தாம் கோரிய பலம் ஸித்தித்ததைப் பணிப்பதாலும்
விளக்குகிறார். ஸீதாதேவி தன் தாய் பூமிதேவியின் ச்ரோத்ரமென்னும் வல்மீகத்தில்
தோன்றியவரும், தன்னுடன் பிறந்தவருமான வால்மீகிகவியைக் கொண்டு ராமாயணத்தைப்
பாடுவித்தாளேயொழிய, தானே கவி பாடவில்லை. ருக்மணீதேவி விவாஹத்திற்கு முன் ஸப்தபதியென்னும்
விவாஹப்ரார்த்தனைக்காக ஏழே சுலோகம் பாடினாள். தேவிமாரில் ஒருவரும்
ஆண்டாளைப்போலக் கவி பாடவில்லை. ஆண்டாளுடைய ஸரஸ்வதி குளிர்ந்த ப்ரஹ்மகுண
வெள்ளத்தில் நீராடி மகிழச் செய்யும் நீராட்ட ஸரஸ்வதி. அது ஒரு அத்புதமான
பக்தி வெள்ளம். பக்தி ப்ரவாஹத்தில் நீராட ஒரு அழகிய துறை. "ஸம்ஸார
மருகாந்தரத்தில் பரிச்ராந்தரான தேஹிகளுக்குப் பெருமாள் விஷயமான பக்தியென்னும்
அம்ருதவாஹினியில் அவகாஹநம் உபதேசிக்கப்படுகிறது" என்று ஸாதிக்கப் பட்டுள்ளது.
அப்படி அவகாஹிக்க ஆண்டாளுடைய நீராட்ட ஸரஸ்வதியாகிய ப்ரஹ்ம நதி சிறந்த
ஸாதனம், மார்க்கதர்சி. ஆண்டாளுடைய ஸரஸ்வதியை யமுனாமஹாநதியாக வர்ணிக்கப்
போகிறார். ஸ்ரீ எனற பெரிய பிராட்டியார் திருநாமத்தோடு மங்களமாகத் துதியை
ஆரம்பிக்கிறார். இங்கே கோதைக்கு ஸ்ரீரங்கராஜனுடைய யோகம் ஏற்படுவதை இரண்டாம்
அடியில் ஸாதிக்கிறார். யோகம் என்பது முன்பு அடையப்படாத பொருள் புதிதாக அடையப்படுவதைச்
சொல்லும். இங்கே இருவருக்கும் அலப்யலாபமான விவாஹமங்கள யோகத்தைச்
சொல்லும். கற்பகக்கொடி புதிதாக ஹரிச்சந்தன வ்ருக்ஷத்தைச்
சுற்றி அணைவதை இங்கே ஸாதிக்கிறார். "சூதேன
ஸங்கதவதீ நவமாலிகேயம்" என்று சாகுந்தலத்தில் , கண்வர், தனக்கு இரண்டு
கவலையிருந்தது, -- அதாவது ஆச்ரமத்திலுள்ள நவமாலிகைக்கொடி சூதமென்னும் மாமரத்தில்
ஏறிச்சுற்றி அணையவேண்டும், சகுந்தலை என்னும்
பெண்கொடி அழகிய மணாளனை அணையவேண்டும், -- இவ்விரண்டு ஆசைகளும் நிறைவேறிற்று
என்ற பேசுகிறார். இய்த விவாஹம் பெரியபிராட்டியாரால் கோடிக்கப்பட்டு நடப்பதாக
இரண்டாமடியில் ரங்கராஜனுக்குமுன் ஸ்ரீயை நிவேசிப்பதால் காட்டுகிறார். ஒருதரம்
முதல் பாதத்தில் ஸ்ரீயைச் சொன்னதோடு த்ருப்தியில்லை. திரும்பவும் திருவின்
திருநாமத்தை நிர்தேசிப்பதால், இந்த விவாஹ மங்களத்தை நிறைவேற்றுவதில்
ஸ்ரீக்கு அத்தனை த்வரையும், பாரிப்புமிருக்கின்றதென்று அழகாக ஸூசிக்கிறார்.
இந்த யோகத்தை அத்யந்த மங்களமாக க(घ)டனை செய்யவேண்டுமென்று மங்களதேவதையானதால் தானே எல்லாத்துக்கும் முன்வந்து கோடித்து மகிழ்ந்து நிற்கிறாள். யாரோடு
யோகம் (சேர்த்தி)? பெரியபிராட்டியாரோடும் ரங்கராஜனோடும் சேர்த்தி. அதிலும் முன்பு திருவோடு சேர்ததி. பின்புதான் பெருமாளோடு.
கோதையைத் தன் ஸ்தனம் முதலிய போகஸாதனாவயமாகப் பாவிப்பதால், கோதையோடு யோகம்
தன் (ஸ்ரீயின்) ஸ்தனத்தோடு யோகமாகிறதெனறு ஸ்ரீபட்டருடைய அழகான ப்ரதர்சனம்.
தன்னோடு யோகத்திலும் தன் தனத்தோடு யோகம் ப்ரியதரமே. கோதை ஓர் கற்பகக்
கொடி. பூந்தோட்டத்தில் ஆவிர்பவித்த கோதை ஓர் தைவக்கொடியே. இந்தக் கொடி அணைவதற்கு
ஹரி என்னும் ஹரிசந்தனமான தேவ வ்ருக்ஷம் அநுரூபமாகும். இரண்டும் தேவஜாதி.
இரண்டும் வேண்டிற்றெல்லாம் தரும்.
"ராமனென்று பேருடைய ஹரி" என்று ராமனைக் காளிதாஸர் வர்ணித்தார்.
ஸ்ரீரங்கராஜனெனனும் ஹரி என்றும் பிரிக்கலாம். அப்பொழுது "சந்தன" என்று சந்தனமரத்தைச்
சொல்லலாம். முன் பாதத்தில் ஸ்ரீவிஷ்ணு என்றது ஸ்ரீரங்கராஜன் என்று இரண்டாம்
பாதத்தில் சொல்லப்படுவதோடொன்றாகும் என்று அந்த யோஜனையில் பலம். ஸ்ரீயென்ன,
விஷ்ணுவென்ன, இவர்களுடைய சித்தமான குலத்தில் (நந்தனத்தோட்டத்தில்) அவர்கள்
மகிழத் தோன்றிய கற்பகக்கொடியாவாள் கோதை. மனத்தை ஆராமம், தோட்டம் என்று
பேசுவர் வேதாந்திகள். திவ்ய தம்பதிகள் இருவரும் தம்முடைய சுபமான மனதில்
த்யானமும் மனோரதமும் செய்து அவர்களுடைய மனதான ஆராமத்தில் (நந்தவனத்தில்)
தோன்றிய கற்பகக்கொடியாவாள் கோதை. 9வது சுலோகத்தில், "விஷ்ணுவின்
சித்தத்தில் சந்திரமண்டலம் உதித்ததுபோல் நீ உதித்தவள். நீயும் சந்திரனுடைய
ஓர் மூர்த்தி விசேஷமாவாய். திருப்பாற்கடலில் சந்திரனோடுகூட உதித்த பெரியபிராட்டியாருக்கு நீ உடன்பிறந்தவளுமாவாய்"
என்று ஸாதிப்பதால் இங்கே "ஸ்ரீவிஷ்ணு சித்தத்தில உதித்தவள்" என்றும்
பொருள் கொள்ளுவது உசிதமே. கவியின் கருத்தே. ஸ்ரீவிஷ்ணுசித்தருடைய குலமென்னும்
நந்தனோத்யானத்தில் தோன்றிய கற்பகக்கொடி என்னும் பொருளுள்ளவே உள்ளது.
"விஷ்ணுவை நினையாதவர் பூமிபாரம் என்றும், அவர்கள் தின்னும் சோற்றைப்
பிடுங்கி நாய்க்கிடுமின்" எனறும் பேசுபவர் விஷ்ணுசித்தர். திருவையும்
பெருமாளையும் ஸர்வகாலமும் த்யானித்துக்கொண்டே இருக்கையில் திருவின் அம்சமான
கோதையெனும் தூய கற்பகக்கொடி அவர் தூய
சித்தமாகிய பூந்தோட்டத்தில் அவதரித்தாள். க்ருத யுகத்தில் மனதாலே மாத்ரம்
ச்ருஷ்டி, உடம்பாலல்ல. கலியிலும் இந்த க்ருதயுகப் பெண் பெரியாழ்வார்
சித்தத்தில் ஆவிர்பவித்தாள். சீதை கர்மடரும் ஜ்ஞானியுமாகிய ஜனகராஜனுடைய யாகபூமியில் அவதரித்தாள். ஜனகரைப்போல
பெரியாழ்வாரும் சிறந்த கர்மடர். ச்ரௌதவிஷயமான கல்பஸூத்ர வ்யாக்யான
மியற்றியவர். இரண்டாமடியில் ஆண்டாளோடு யோகத்தைச் சொல்லுகையில் சந்தன யோகத்தைப்
பேசுவது விவாஹத்திற்கேற்றதாகும். ஆண்டாளை ஸ்மரிப்பதிலும் பேசுவதிலும் பரிமளத்தையும்
புஷ்பத்தையும் பேசாமலிருக்கக் கூடுமோ? தேவோத்யானமான பூந்தோட்டத்தையும், கற்பகக்கொடியையும்,
ஹரிச்சந்தன வ்ருக்ஷத்தையும், சந்தனத்தையும், "கந்தத்வாராம் துராதர்ஷம்"
என்று வேதம் கொண்டாடிய கந்தங்கமழும் ஸ்ரீயை இருதரமும் இங்கே குறிப்பது பரிமளங்களின்
சேர்த்தியைக் காட்டுகிறது. மற்ற தேவிமாரும் கோதையும் ஒரு மனதே என்பதைக்
காட்ட பூதேவியே கோதை என்பதை "இவள் ஸாக்ஷாத் க்ஷமாதேவியே" என்று
மூன்றாமடியில் காட்டுகிறார். "இவள் பொறுமையின் அவதாரமே" என்பது அதற்குப்
பொருள். "கருணாமிவ ரூபிணீம்" என்றபடி கருணைக் கடலாகிய லக்ஷ்மீதேவி
தயையின் மூர்த்தியாவாள். கோதையும் கருணைக் கடலாகையால், தன்னுடைய
எல்லையில்லாத கருணையால் அபரலக்ஷ்மீயாவாள் என்கிறார். இப்படி பொறுமைக்கும், கருணைக்கும்
நிதியானவளைச் சரண் புகுந்தால் பலம் கிடைப்பது நிச்சயம் என்று விளக்குகிறார்.
இங்கே "நப்பின்னை" என்றும் நீளாதேவியைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
"நப்பின்னாய் கந்தம் கமழும் குழலீ", "மைத்தடங்கண்ணினாய்"
என்றும் ஆண்டாளால் துதிக்கப்படுபவளும், "நப்பின்னை நங்காய்த் திருவே
துயிலெழாய்" என்று திருவோடு
பிரியாதவளென்று பேசப்படுபவளும், கூடாரை வெல்லுஞ்சீரில் பெருமாளோடுகூடச்
சேர்ந்து ஆண்டாளுக்குப் "பல்கலனுமணிவது" முதலிய சம்மானமளிப்பதாகப்
பாடும் விஷயமுமான நப்பின்னையும் கூடித்தான் ஆண்டாள் திருக்கல்யாணம் முதலிய
மங்களங்கள் நடக்குமென்பது திண்ணமாகையால் இங்கே தனித்துப்பேச வேண்டிய அவச்யமில்லை.
முடிவில் 28வது சுலோகத்தில் "சதகமணிநீலா" என்று ஒருவாறாக நீளாநாமத்தையும்
நிர்த்தேசிக்கிறார். "வலந்திகழும் திருமகளுமற்றிடத்தே மன்னிய மண்மகளோடு
நீளையாரும் நலந்திகழ் வீற்றிருந்த நாதன் பாதம் நமக்கிதுவே முடியென்றெண்ணினோமே"
என்பதையும் நினைக்கவேணும்.
ஸ்ரீரங்கராஜனோடு சேர்த்தியில் ஸ்ரீபூதேவிகளான உபயநாய்ச்சிமாரே த்ருச்யராய்
ஸேவை ஸாதிப்பதால், இரண்டு தேவிமாரை மட்டும் குறிப்பாக இங்கே நிர்த்தேசிக்கப்
பட்டது. இந்தத் துதியில் ச்லோகங்களின் எண்ணிக்கை 29. தத்துவங்கள், ஜடம்
24, ஜீவாத்மா 1, 26வது தத்துவமாகிய பெருமாள் 1, அவருடைய தேவிமார் 3, ஆக
தத்துவக் கணக்கு மொத்தம் 29ஐ அநுஸரித்ததாயிருக்கலாம். கோதை பாடின
திருப்பாவையின் கணக்கு 30ல், "பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ்மாலை
முப்பதும்" என்று
திருப்பாவையின் வர்ணனம் மட்டுமான கடைசிப் பாட்டைச் சேர்க்காமல் "சிற்றஞ்சிறு காலை"யோடு பூர்த்தி
செய்து 29 கணக்காகத் திருவுள்ளமாயிருக்கலாம். இங்கே 29வது சுலோகத்தில் "சரண
கமல ஸேவாம் ஶாஶ்வதீ மப்யுபைஷ்யந்" என்று இருப்பது "உன்னைச்
சேவித்து உன் பொற்றாமரையடியே போற்றும் பொருள்" "நீ குற்றேவல் எங்களைக்கொள்ளாமல்
போகாது இற்றைப்பறை கொள்வான் அன்றுகாண் கோவிந்தா எற்றைக்கு மேழேழ் பிறவிக்கும்
உன்தன்னோடுற்றோமே யாவோமுனக்கே நாமாட்செய்வோம்" என்று 29ம் பாட்டிலுள்ளதையே
அநுஸரிப்பது ஸ்பஷ்டம். "இதி பஹுகுணரமணீயாம் வக்தி கோதாஸ்துதிம் ய"
என்று 29ம் சுலோகத்திலுள்ளது. 30ம் பாட்டில் "கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை
முப்பதுந் தப்பாமே இங்கிப்பரிசுரைப்பார்" என்பதை முழுவதும் அநுஸரிப்பதும்
ஸ்பஷ்டம். "இதி வக்தி" என்பதற்கு "மலர்ந்த பக்தியோடு
தேசிகன் (வேங்கடேசன்) மனதிலிருந்து உருகி (வாக்காக) வெளிவரும் ப்ரகாரமாக
இப்படியே யார் தப்பாமே உச்சரிக்கிறாரோ" என்பது பொருள். "இப்பரிசுரைப்பார்"
என்பதற்கும், "கோதை எப்படி பக்திவெள்ளமாக மனமகிழ்ந்து உரைத்தாளோ
அப்படியே ஓதுபவர்" என்பது பொருள். ரங்கராஜனிடம் கோதையின் பக்தியையொக்கும்,
கோதையிடம் ஸ்ரீதேசிகன் பக்தி. "சங்கத்தமிழ்மாலை" என்பதற்குச்
சிறந்த தமிழாகிய சங்கத் தமிழாலியற்றிய பாமாலை என்றும் சொல்லலாம். "பஹுகுணரமணீயாம்"
என்பது சங்கத் தமிழ்போல உயர்ந்த ஸம்ஸ்க்ருதமான வைதர்ப்பீ பாஞ்சாலி
ரீதிகளிலமைந்தது. கோதையினின்னருளால் இத்துதி என்று பேசுவதாகச் சொல்லலாம்.
இத்துதியை ஓதுமவன் ஸ்ரீமானான ரங்கபர்த்தாவுக்கு பஹுமாந்யனாவான்.
திருப்பாவை முப்பதுந் தப்பாமே உரைப்பவர் "ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கட்திருமுகத்துச்
செல்வத் திருமாலால் எங்குந் திருவருள் பெற்று இன்புறுவர்" கோதைக்கு
"செங்கட்திருமுகத்துச் செல்வத் திருமால்" ஸ்ரீரங்கராஜன்.
"ஆண்டாளரங்கர்க்குப் பன்னு திருப்பாவை" என்றபடி ஸ்ரீரங்கராஜனே
திருப்பாவைக்கு விஷயம். இம்முப்பதுந்தப்பாமே உரைப்பதனால் திருமாலால் வையத்து
வாழ்வோர்கள் அருள் பெற்றின்புறச் செய்வதே "தனக்குப் பாவை, வ்ரதம்"
என்பதை "என் பாவாய்" என்றடுத்த பேச்சால் காட்டப் படுகிறது.
"இதுவே எனக்கு வ்ரதம்" என்று இவள் பதி இராமன் சப்தம் செயததுபோல்
கோதைக்கு இப்படி வ்ரதம். வாக்கைக் கொடுத்த கோதைவிஷயமான இந்த ஸ்துதி 29ம்
கோதை சொல்லுவித்ததாகையால் இதற்கும் திருப்பாவையை ஓதுவதுபோல பலமுண்டு என்பது
திருவுள்ளம். "திங்கட்திருமுகத்துச் சேயிழையார்" என்று கண்ணனைக்
குறித்து விரதம் அநுஷ்டிக்கும் ஆய்ச்சியரைச் சந்த்ரபிம்பம்போன்ற முகமுடையார்
என்று புகழ்ந்தாள்.
ஒரு பெண்மணி மற்றப் பெண்களின் அழகை ஒப்புவளோ? புகழ்வளோ? கோதையின் கோதிலாக்
குணங்கள் இதனால் வெளியாகும். திருப்பாவை முடிவில் ஆண்டாள் பேசிய "திங்கட்
திருமுகத்தை", முதல் பாட்டிலேயே "திங்கள், மதி, நிறைந்த மதி, மதியம்போல்
முகத்தான்" என்று த்வநிப்பதை ரஸிகர் கவனிக்க வேண்டும்.
திருப்பாவைக்கு நாம் கோதை அருளை முன்னிட்டுச் செயயும் வ்யாக்யானத்தில் விஸ்தரிப்போம்.
இப்படி முதலிலும் முடிவிலும் பேசுவதால் திங்கள் (மதி) மதி நிறைந்திருந்தது
ஆண்டாள் நெஞ்சில் என்பதை ஸ்ரீதேசிகன் அநுபவித்து இங்கே முதல் சுலோகத்தில்
"சந்திரன் (புருஷனுடைய) மனதிலிருந்து ஜாதன்" எனற புருஷஸூக்த
ச்ருதியை அநுஸரித்து "விஷ்ணுசித்தத்தை நந்தனம் செய்து அதில் தோன்றியவள்"
என்பதையும், இரண்டாமடியில் சந்த்ரபர்யாயமான ராஜசப்தத்தை ப்ரயோகிப்பதால்,
ஸ்ரீரங்கசந்த்ரன் என்றும் பேசுகிறார் என்பதையும் ரஸிகர் அறியவேணும்.
"ஸ்ரீரங்கசந்த்ரமஸம் இந்திரயா விஹர்த்தும்" முதலிய ஸ்ரீபட்டர்
அநுபவங்களையும் நினைக்கவேண்டும். இங்கே "கோதாம்" என்பது விசேஷ்யம்.
இது ஸாபிப்பிராயம். "வாக்கைக் கொடுப்பவளைச் சரணமடைகிறேன்" என்றதால்
பரிகராங்குரம் என்னும் அணிமுறையாக வாக்கின் அபேக்ஷையை ஸூசிக்கும் ஸ்வாரஸ்யமும்
கவனிக்கத் தக்கது. இங்கே ஆண்டாளுக்கும் ஸ்ரீரங்கராஜனோடு யோகம், அவள்
திருநாமமாகிய "கோதா" சப்தத்திற்கும் யோகம் என்னும் அவயவப் பொருள்.
இங்கே "விஷ்ணுசித்தகுலநந்தன" என்பதால் "ஜனகவம்சத்தரசர்கள்
குலத்திற்கு என் பெண் கீர்த்தியைக் கொணர்வாள்" என்ற ஜனகர் வார்த்தையை
நினைக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக