சனி, 3 டிசம்பர், 2016

இராம‌ நாட‌க‌ம் பாதுகா ப‌ட்டாபிஷேக‌ம்

ஒன்பதாங் களம்
இடம்: --      சீதையின் அந்தப்புரத்தினின்று வரும் வழி
காலம்:--      நண்பகல்
பாத்திரங்கள்:-  இராமர், இலக்ஷ்மணர், சீதை
       (இலக்ஷ்மணர், இராமர் வரவை எதிர்பார்த்து நிற்கிறார். சீதை பின்தொடர இராமர் வருகிறார்)
இராமர்: -- தம்பீ! இலக்ஷ்மணா! சீதையும் என்னுடன் வருவதாகக் கூறுகின்றாள். காட்டிலுள்ள துன்பங்களை அவளுக்கு எடுத்துச் சொல்லியும் கேளேனென்கிறாள். ஆதலால் நான் அவளை அழைத்துச் செல்லச் சம்மதித்தேன். இனி நானும் சீதையும் தந்தையிடம் விடை பெற்றுச் செல்ல வேண்டுவதொன்றே யுள்ளது. நாங்கள் சென்று வரும்வரை, தந்தை தாயர்களைப் பாதுகாத்து, பரதனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துகொண்டு, உன் சௌக்கியத்திற்கும் குறை நேராது கவனித்து வா.
இலக்ஷ்மணர்:-- அண்ணா! தங்களுக்கு அடியேன் செய்த பிழை என்ன? என்னை இங்குவிட்டுத் தாங்கள் கானகஞ் செல்வது தர்மமாகுமா? தங்களுக்கு முறைப்படி கிடைக்கவேண்டியது இவ்வரசு. அதைத் தங்களுக்குக் கொடுக்க ஆற்றலில்லாது, ‘குங்குமம் சுமந்த கழுதைபோல் வில்லும், அம்பறாத்துணியும், தங்களுக்குத் தம்பியென்ற பெயருஞ் சுமந்து கொண்டிருக்கிறேன். தங்களுக்கு வனத்திலும் நான் கைங்கரியம் செய்ய ஏலாவிட்டால் இவைகளால் பயனென்ன? பிறகு இந்த வில்தான் எதற்கு? இவ்வம்பறாத் துணிதானெதற்கு? தங்கள் பின்பிறந்தவன் என்ற பெயரோடு திரியும் இச்சடலந்தானெதற்கு?
இராமர்:-- தம்பீ! தந்தையிருக்கும் நிலையில் நீ என்னைப் பின்தொடரல் நியாயமாகுமா?

அன்னைய ரனைவரு மாழி வேந்தனும்
முன்னைய ரல்லர்வெந் துயரின் மூழ்கினார்
என்னையும் பிரிந்தன ரிடரு றாவகை
உன்னைநீ யென்பொருட் டுதவுவா யையா.
நம்முடைய தாய்மாரும் தந்தையரும் முன் இருந்ததுபோல் இல்லை. எனக்குப் பட்டமாகாததை எண்ணி மிகவும் வருந்துவார்கள். அன்றியும் என்னைப் பிரிவதால் மிகவும் துயர முறுவார்கள். எனக்குப் பிரதிநிதியாக நீ இவ்விடமிருந்து அவர்கள் துயரத்தை ஆற்றித் தைரியம் சொல்லி அவர்களைத் தேற்றிக் கொண்டிரு. இதுவே தர்மநெறி. இதைவிட்டு என்னைத் தொடர்ந்து வருவது உனக்கும் அழகல்ல, உன்னை அழைத்துச் செல்வது எனக்கும் முறையல்ல.
இலக்ஷ்மணர்:-- அண்ணா! தந்தைதாயர் துயரை ஆற்றுவதற்குப் பரதன் இருக்கின்றான். சத்துருக்நன் இருக்கின்றான். என்னுடைய உதவி அவர்களுக்குத் தேவையில்லை. காட்டில் உறையும் தாங்களே உதவியை வேண்டுவீர்கள். காட்டிலாயினும் தங்களுக்குத் துணையாயிருப்பேன் என்ற நம்பிக்கையால்தான் தாங்கள் வனஞ் செல்வதைத் தடுக்காமலிருக்கின்றேன். தாங்கள் துணையின்றி கானகஞ் செல்லச் சம்மதியேன். மேலும், தங்களைப் பிரிந்து நான் உயிர் தரித்திருக்க எவ்வாறு இயலும்?

நீருள வெனினுள மீனு நீலமும்
பாருள வெனினுள யாவும் பார்ப்புறின்
நாருள தனுவுளாய் நானுஞ் சீதையும்
ஆருள ரெனினுளம் அருளு வாயண்ணா.
அண்ணா! நீருள்ளவரையிற்றானே நீலோற்பல மலரும், மீனினமும், தடாகத்தில் வாழும்! உலகமுள்ள வரையிற்றானே அதில் காணப்படும் சராசரப் பொருள்களும் இருக்கும்! அங்ஙனமே தாங்கள் இருக்குமிடத்தில்தானே சீதையும் நானும் இருக்கக் கூடும்? தங்களை நீங்கி அரை க்ஷணமேனும் நான் வாழ்வேனா? என்னை வரவேண்டாம் என்று சொல்லத் தங்களுக்கு எப்படி மனம் வந்தது? தாய் தேடிவைத்த இந்தப் பாரையாள பரதன் வருவான். அந்தப் பாவி முகத்தில் விழிப்பதற்கு முன் தங்கள் திருவடிக்குத் தொண்டு செய்யக் காட்டிற்குச் சென்றுவிடலாமென்றிருக்கும் என்னைத் தாங்கள் தடுப்பது எதுபற்றி?

பைந்தொடி யொருத்திசொற் கொண்டு பார்மகள்
நைந்துயிர் நடுங்கவு நடத்தி நானெனா
உய்ந்தன னிருந்தன னுண்மை காவலன்
மைந்தனென் றினையசொல் வழங்கி னாயலோ.
பெண் சொற்கேட்டுத் தங்களைக் கானேகுமா றுரைத்து இன்னமும் உயிர் தரித்திருக்கும் ஓர் அரசர் மகன் இவன். ஆதலால் இவனும் வன்னெஞ்சனா யிருப்பா னென்றோ தாங்கள் என்னை வரவேண்டாம் என்று கூறத் துணிந்தீர்கள்? கருணைக்கோர் இருப்பிடமாகிய தங்கள் நாவினின்று இவ்வளவு கொடிய மொழி வந்தபோது, அரசர் நாவினின்று அவ்வளவு கொடிய மொழி வந்தது ஆச்சரியமல்ல. அண்ணா! நமது சூரியகுலத்தின் குணம் ஏன் இவ்வாறு மாறியது? இயல்பாகவே மிருதுவசனிகளெனப் படுபவர் பெண்பாலர். அவர்களுள்ளும் அரச வம்சத்தில் பிறந்த மாதர் அதிமிருது வசனிகளாகவும், மெல்லென்ற நெஞ்சினராகவும் இருப்பது இயல்பு. அந்த இயல்பு மாறி, உரிமை மைந்தர்க்கு அரசை மறுத்து அவரை வனம்போக்குமாறு கூறிய கொடுமொழியாளும், வன்னெஞ்சினளுமாகிய ஒருத்தி பட்டத்தரசியென்று நம் குலத்திலன்றோ வந்து புகுந்தாள்! மனைவி சொற்படி மைந்தனை வனம் போகும்படி உரைத்த கொடியனும், அரசனென நம் குலத்திலன்றோ தோன்றினான்? தமையனுக்குரிய அரசைத் தனக்குரிமைப் படுத்திக்கொள்ளும் பாதகன் ஒருவனும் அரசகுமாரனென்று நம் குலத்திலன்றோ வந்துதித்தான்? இவ்வளவு அக்கிரமங்களைக் கண்டும் அழகுக்கு வில்லுங் கணையுஞ் சுமந்து பேடிபோற் பேசாதிருக்கும் நானும் இக்குலத்திலன்றோ வந்து பிறந்தேன்? இவ்வளவு கொடியவர்கள் சூழ்ந்த குடும்பத்தில் தங்கள் கருணை எவ்வாறு தலைகாட்டும்? ஆதலால் தாங்கள் என்னை வரவேண்டாம் என்று தடுப்பது தங்கள் குணமல்ல, தங்கள் குலத்தின் குணம் போலும்!
இராமர்:-- தம்பீ! தந்தைதாயர் நிலையைக் கருதி உன்னை நான் இங்கு இருக்குமாறு உரைத்தேன். உனக்கு இங்கிருக்க விருப்பமின்றாயின், உன் இஷ்டம்போல் என்னுடன் வரலாம். நீ என் உயிருக்குயிரானவன். உன் மனம் வருந்த நான் ஏதுஞ் செய்யேன். ஆதலால், இலக்ஷ்மணா! ஜனகமகராஜர் யாகத்தில் வருணபகவான், திவ்ய விற்களிரண்டு, வலிய கவசங்கள் இரண்டு, ஒளிபொருந்திய தங்க வாட்கள் இரண்டு இவைகளை எனக்குக் கொடுத்தாரல்லவா? அவைகள் பூஜாகிரகத்தில் இருக்கின்றன. அவைகளை எடுத்துக்கொண்டு, உன் நண்பர்களிடம் விடை பெற்று விரைவில் வா. நான் தந்தையாரைக் காணச் செல்கிறேன்.
இலக்ஷ்மணர்:-- அண்ணா! அகமகிழ்ந்தேன். நான் பிறந்ததாலடையக் கூடிய பேற்றைப் பெற்றேன். இதோ சென்று தங்கள் கட்டளைகளை நிறைவேற்றி நொடியில் வருகின்றேன். (நமஸ்கரித்துச் செல்ல யத்தனிக்கிறார்)
இராமர்:-- இலக்ஷ்மணா! மற்றொன்று கூற மறந்துவிட்டேன். நான் எனது பொருள்களை யெல்லாம் பிராமணர்களுக்கு தானஞ் செய்யக் கருதியுள்ளேன். சீதையும் தன் பட்டாடைகளையும், பெருமிதமான பூஷணங்களையும் சுமங்கலிகளுக்குத் தானஞ் செய்துவிடுவாள். ஆதலால் நீ முன்னதாகச் சென்று நமது குரு வசிஷ்டரின் புத்திரர், சுயஜ்ஞரையும், மற்ற பிராமணர்களையும் தவசிகளையும் அழைத்துக்கொண்டு வா. பிறகு மற்றக் காரியங்களைச் செய்யலாம்.
இலக்ஷ்மணர்:-- அப்படியே! (வணங்கிப் போகிறார்).  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக