வியாழன், 22 டிசம்பர், 2016

கோதா ஸ்துதி

கோதா ஸ்துதி

(அன்பில் கோபாலாசாரியார் உரை)

தமிழாக்கம் திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்க வெளியீடு 11

 

சுலோகம் 4

க்ருஷ்ணாந்வயேந ததீம் யமுகாநுபாவம்
தீர்த்தைர் யதாவதகாஹ்ய ஸரஸ்வதீம் தே |
கோதே விகஸ்வரதியாம் பவதீகடாக்ஷாத்
வாசஸ் ஸ்புரந்தி மகரந்தமுச: கவீயாம் || (4)

யாதவர்கோ னாடலினான் யாமுனையை நேருனது
நாதவிசை வாணிதனை நன்முறையா -- யோதியளைந்
தாடுவோர் கோதா யதிமதுர நாற்கவிகள்
பாடுவா ராவர்சுயம் பா. (4)

பதவுரை

கோதே -- கோதாய், க்ருஷ்ணாந்வயேந -- கிருஷ்ண ஸம்பந்தத்தால்; யமுனானுபாவம் -- யமுனையின் பெருமையை; தததீம் -- தரிப்பவளான; தே -- உன்னுடைய; ஸரஸ்வதி -- ஸரஸ்வதியை (வாக்கை, நதியை); தீர்த்தை -- குருக்களின் முகமாக; (இறங்கும் துறைகள் வழியாக); ததாவத் -- உள்ளபடி (சாஸ்திரமுறைப்படி); அவகாஹ்ய -- இறங்கி ஸ்நானம் செய்து; பவதீகடாக்ஷாத் -- உன் கடாக்ஷத்தால்; விகஸ்வரதியாம் -- மலர்ச்சி அடைந்த புத்திகளையுடைய; கவீநாம் -- கவிகளுடைய; வாச: -- வாக்குகள்; மகரந்தமுச: -- தேனைப் பொழிந்துகொண்டு; ஸ்புரந்தி -- விளங்குகின்றன.

கோதாய்! க்ருஷ்ணஸம்யோகத்தால் யமுனையின் பெருமையை உடையதான உன்னுடைய ஸரஸ்வதியை (வாக்கை, நதியை), குருக்களின் முகமாக (இறங்கும் துறைகள் வழியாக) உள்ளபடி (சாஸ்த்ரமுறைப்படி) இறங்கி ஸ்நானம் செய்து உன் கடாக்ஷத்தால் மலர்ச்சியடைந்த புத்திகளையுடைய கவிகளுடைய வாக்குகள் தேனைப் பொழிந்துகொண்டு விளங்குகின்றன.

அவதாரிகைகள்

(1) என் நாயகனுடைய ஓர் அவதாரமான ஹயக்ரீவமூர்த்தியை நீர் துதிக்கையில் ம‌ஞ்சுப்ர‌ணாத‌ம் ம‌ணிநூபுரம் தே ம‌ஞ்சூஷிகாம் வேத‌கிராம் ப்ர‌தீம‌: என்று பேசினீர். அவ‌ர் ர‌த்ன‌ச் சில‌ம்பின் இனிய‌ ஓசையில் வேத‌ ஸ‌ர‌ஸ்வ‌திக‌ள் பெட்டியில்போல் அட‌ங்கியிருக்கின்ற‌ன‌ என்று பாடினீர். இங்கே பெண்பிள்ளையாகிய‌ என் சில‌ம்பின் ஓசையைப்போல் இனிய‌ வாக்கென்கிறீர். இர‌ண்டிட‌த்திலும் "ம‌ணிநூபுர‌ம்" என்று ஒரேவித‌ப் பேச்சு. அங்கே 27ம் சுலோக‌த்தில் க‌டாக்ஷா: ஶ்ரோத்ரேஷு பும்ஸாமம்ருத‌ம் க்ஷ‌ர‌ந்தீம் ஸ‌ர‌ஸ்வ‌தீம் திஸ‌ந்து என்று பாடினீர். உம்முடைய‌ க‌டாக்ஷ‌ங்க‌ள் ம‌நுஷ்ய‌ர்க‌ள் காதுக‌ளில் அம்ருதத்தை வார்க்கும் ஸ‌ர‌ஸ்வ‌தியை என‌க்க‌ருள‌ வேணும் என்று ஹ‌ய‌க்ரீவ‌தேவ‌னைப் பிரார்த்தித்தீர். அம்ருத‌ வாக்கை அவ‌ரிட‌மே ப்ரார்த்திக்க‌லாமே! அவ‌ரிட‌ம் ப்ரார்த்தித்ததை அவ‌ர் முன்பே உம‌க்கு அருளியிருக்கிறார். இப்பொழுது வெறும் பேச்சாக‌ முக‌ஸ்துதியாக‌ நீர் அதே வார்த்தைக‌ளைக்கொண்டு யாசிக்கிறீர். ஹ‌ய‌க்ரீவ‌னிட‌மிருந்து அடையாம‌ல் என்னிட‌மிருந்து பெற‌வேண்டிய‌து மீதியுண்டோ?

இத‌ற்கு ப‌தில் கூறுகிறார்:-- அம்மா! நீ ந‌ன்றாய்க் க‌வ‌னிக்க‌வேண்டும். ப‌ர‌மபுருஷ‌னாகிய‌ உன்னுடைய‌ நாய‌க‌ன் காதுக‌ளில் அம்ருதத்தை வார்ப்ப‌துபோல் இனிமையான‌ வாக்கைய‌ல்ல‌வா நான் முன் சுலோக‌த்தில் ப்ரார்த்தித்தது! என் இஷ்ட‌ தெய்வ‌மான‌ ஹ‌ய‌க்ரீவ‌ரை "பும்ஸாம்" என்று பொதுவாக‌ ம‌நுஷ்ய‌ர்க‌ள் செவிக‌ளுக்கு இனிய‌ ஸ‌ர‌ஸ்வ‌தியைத்தானே ப்ரார்த்தித்தேன்! இங்கே உன்னை யாசிப்ப‌து ப‌ர‌மபுமானுடைய‌ செவிக‌ளுக்கு அம்ருத‌மான‌ சொற்க‌ள். உன் நாய‌க‌ன் ர‌ங்க‌ந‌ட‌ர‌ல்ல‌வோ? சில‌ம்பில்லாம‌லும், சில‌ம்போசையில்லாம‌லும் ந‌ர்த்த‌ன‌ம் செய்வ‌ரோ! நான் ம‌ன‌ப்பூர்வ‌மாக‌ உண்மையாக‌த்தான் துதிக்கிறேன். ஹ‌ய‌க்ரீவ‌ ஸ்தோத்ர‌த்தில் "க‌டாக்ஷா: திஶ‌ந்து" என்று அனேக‌ க‌டாக்ஷ‌ங்க‌ள் நேர்ந்து வாக்கை அனுக்ர‌ஹிக்க‌ட்டும் என்று ப்ரார்த்தித்தேன். உன்னுடைய‌ ஒரு க‌டாக்ஷ‌த்தைப் பெற்றுத் தேன் பொழியும் ப‌ல‌ வாக்குக‌ள் ப்ர‌வ‌ஹிக்கும் என்று இந்த‌ சுலோக‌த்தில் "ப‌வ‌தி க‌டாக்ஷாத் வாச‌: ஸ்புர‌ந்தி" என்று பேச‌ப் போகிறேன் அம்மா!

(2) என் க‌விக‌ளைக் க‌ற்று யாரேனும் க‌விஞ‌ர்க‌ளானார்க‌ளா? அம்ருத‌வாக்கைப் பெற்றிருக்கிறார்க‌ளா? வாக்தேவியான‌ ஸ‌ர‌ஸ்வ‌தியை உபாஸித்துக் க‌விக‌ள் அம்ருத‌ வாக்கைப் பெறுவ‌ரென்ப‌ரே! "தேவீம் வாச‌முபாஸ‌தே ஹி ப‌ஹ‌வ‌: என்ப‌ர். இத‌ன் ப‌தில்:-- உன்னுடைய‌ வாக்குத்தான் ப‌ரிசுத்த‌மான‌ ஸ‌ர‌ஸ்வ‌தி ர‌ஸ‌ம் ஓர் அவிச்சிந்ந‌ ப்ர‌வாஹ‌மாக‌ப் புண்ய‌நதியைப்போல் பெருக்கு உடைய‌து. உன் ஸ‌ர‌ஸ்வ‌தியை குருக்க‌ள் முக‌மாகக் க‌ற்றுத் தேன் மொழியைப் பெற்று ப்ர‌காசித்த‌வ‌ர் ஆள‌வ‌ந்தார், ஆழ்வான், ப‌ட்ட‌ர் முத‌லிய‌வ‌ர். ஸ‌ர‌ஸ்வ‌தி தேவி க‌டாக்ஷ‌ம் பெற்ற‌ க‌விக‌ளிலும் ந‌ம் பூர்வாசார்ய‌ரான‌ க‌விக‌ள் சிற‌ந்த‌வ‌ர்க‌ள். இவ‌ர்க‌ள் க‌விக‌ள் இனிப்போடு நிக‌ர‌ற்ற‌ ப‌ரிசுத்தியையுமுடைய‌ன‌. உன் ப்ர‌ப‌ந்த‌ங்க‌ள் ப‌ரிசுத்த‌மான‌ இனிய‌ ஸ‌ர‌ஸ்வ‌தி, அவ‌ர்க‌ள் வாக்ஸ‌ர‌ஸ்வ‌தியும் அப்ப‌டியே. "த‌ச்சாவ்யாஜ‌வித‌ப்த‌முப்த‌ம‌துராம் ஸார‌ஸ்வ‌த‌ம் ஶாஶ்வ‌த‌ம்" என்று அவ‌ர்க‌ள் வாக்கை வ‌ர்ணித்துள்ள‌து. அவ‌ர்க‌ள் ம‌தியும் வாக்கும் ஆஜாந‌சுத்த‌ம். "செஞ்சொற்க‌விக‌ள்"

க்ருஷ்ணாந்வ‌யேந‌ -- க்ருஷ்ண‌ன் ஸ‌ம்ப‌ந்தத்தால். க்ருஷ்ண‌ த்ருஷ்ணாம‌ய‌ம் உன்னுடைய‌ ஸ‌ர‌ஸ்வ‌தி. க்ருஷ்ண‌னிட‌ம் சுத்த‌மான‌ பாவ‌ம் ஓர் ஸ‌ர‌ஸ்வ‌திவெள்ள‌மாக‌ப் பெருகியுள‌து. க்ருஷ்ண‌ர‌ஸ‌ நதியாகுமுன்னுடைய‌ ஸ‌ர‌ஸ்வ‌தீ. க்ருஷ்ண‌னிட‌ம் ஸ‌ம‌ந்வ‌ய‌முடைய‌ன‌ உன் காவ்ய‌ங்க‌ள். ப்ர‌ஹ்ம‌த்தினிட‌த்தில் வேதாந்த‌ ஸ‌ர‌ஸ்வ‌திக‌ளுக்கு ஸ‌ம‌ந்வ‌ய‌த்தை நிரூபிக்கும் ப்ர‌ஹ்ம‌ஸூத்ர‌ங்க‌ள் க்ருஷ்ண‌னென்னும் அம்ருத‌ ஸ‌முத்ர‌த்தில் த்ருஷ்ணையைப் பெருக்குகின்ற‌ன‌ என்று ஸாராவ‌ளியில் பேசியுள‌து. ம‌ஹ‌ர்ஷியின் ஸூத்ர‌ங்க‌ளே அப்ப‌டி க்ருஷ்ண‌ த்ருஷ்ணையைப் பெருக்கும்பொழுது, ப்ரிய‌த‌மையான‌ பெண்க‌ளின் ப்ர‌ப‌ந்த‌ங்க‌ள் க்ருஷ்ண‌த்ருஷ்ணையைச் சூழ்ந்தத‌னிற் பெரிய‌தாக‌ப் பெருக்குவ‌தில் என்ன‌ ஸ‌ந்தேக‌ம்? க்ருஷ்ண‌ன் ஒருவ‌னிட‌த்திலேயே உன் ஸ‌ர‌ஸ்வ‌தி அவ்வித‌ம். பூமிப்பிராட்டி கோதை. "ய‌த் க்ருஷ்ண‌ம் தத் வ்ருத்திவ்யா:" என்ப‌து வேத‌ம். பூமியின் வ‌ர்ண‌ம் க‌ருப்பு (க்ருஷ்ண‌ம்) ய‌முனை நீரும் க்ருஷ்ண‌ வ‌ர்ண‌ம். க்ருஷ்ண‌வ‌ர்ண‌ தத்வ‌ம் கோதைக்கே.

ய‌முனாநுபாவ‌ம்:-- க்ருஷ்ண‌ ஸ‌ம்ப‌ந்தத்தால் "தூய‌பெருநீர் " ய‌முனையின் பெருமையுள‌து உன்னுடைய‌ ஸ‌ர‌ஸ்வ‌தீ. க்ருஷ்ண‌னுடைய‌ யௌவ‌ன‌ லீலைக‌ள் க்ருஷ்ணா நதியிலும், அந்நதிக்க‌ரையிலும் நிக‌ழ்ந்த‌ன‌. "ய‌முனாஸாக்ஷிக‌யௌவ‌ன‌ம் யுவாந‌ம்" யௌவ‌ன‌ கேளிக்கைக‌ளுக்கெல்லாம் ய‌முனை ஸாக்ஷி. அநுபாவ‌ம் என்ப‌து ம‌ன‌தில‌ழுந்தியிருக்கும் ச்ருங்கார‌பாவ‌த்தை ஸூசிக்கும் விகார‌சேஷ்டைக‌ளையும் சொல்லும். முகுந்த‌ன் வேணுகான‌த்தைக் கேட்ட‌ நதிக‌ள் ம‌ன்ம‌த‌விகார‌ம் நிர‌ம்பி "நெஞ்ச‌ழியும், க‌ண்க‌ழ‌லும்" என்ப‌துபோல், ம‌னோவிகார‌ங்க‌ளைச் சுழ‌ல்க‌ளாலும், குமிழிக‌ளாலும் காட்டிக்கொண்டு, க‌ண்ண‌னை ஆலிங்க‌ன‌ம் செய்ய‌ ஆசையைக் காட்டுவ‌துபோல், அலைக‌ளாகிய‌ கைக‌ளை உய‌ர்த்திக்கொண்டு, ஆவ‌லுட‌ன் க‌ரையிலிருக்கும் க்ருஷ்ண‌னிட‌ம் ஓடிவ‌ந்து தாம‌ரைம‌ல‌ர்க‌ளை அவ‌ன் திருவ‌டிக‌ளில் ஸ‌ம‌ர்ப்பித்துத் திருவ‌டிக‌ளைத் த‌ழுவுகின்ற‌ன‌போலும்" என்று சுக‌ர் வ‌ர்ணித்தது ய‌முனா நதி விஷ‌ய‌ம். பின்பு ய‌முனை (காளிந்தீ) க‌ண்ண‌னுக்கு அஷ்ட‌ம‌ஹிஷிக‌ளில் ஓர் ம‌ஹிஷியானாள்.

அநு+அயம் அந்வயம் , அநு+பாவம் அநுபாவம் -- காரண கார்யங்களுக்கு ஆநுரூப்யம்

தததீம் -- உன் ஸரஸ்வதிநதி யமுனையின் பெருமையை உடையது (வஹிக்கிறது). தூயபெருநீர் யமுனை என்று யமுனைத்துறைவன் ஸம்பந்தமுடையதாக (அந்வயமுடையதாக) யமுனை நீரை வர்ணித்தாய். அப்படி வர்ணிக்கும் உன் ஸரஸ்வதிக்கும் அந்த வர்ணனம் தகும். இங்கே ததாநாம் என்று ஆத்மநேபதமாக ப்ரயோகிக்காமல் தததீம் என்று பரஸ்மைபதமாக ப்ரயோகித்தது ரஸம். க்ருஷ்ணரஸவெள்ளத்தில் நீ நீராடி மகிழ்வதைப்போல், உன் ஸரஸ்வதியில் நீராடுகிறவர்களும் அதில் ஆழ்வதால், அந்த ரஸமுள்ள கவிதையை அவர்களும் பெற்று உத்தம கவிகளாகும்படிக்கும் செய்கிறாய்.

தே ஸரஸ்வதீம்:-- உன் ஸரஸ்வதியை. உன் க்ருஷ்ணபக்திரஸ கவிதா நதியில். ஸரஸ்வதீம் என்பதால் நுட்பமான பொருள் உள்ளே மறைந்திருப்பதனையும் கொள்ளவேணும். வ்யங்கியமே மிகுதி.

தீர்த்தை:-- வெள்ளமிட்டோடும் ரஸப்ரவாஹ நதியில் இறங்கும் துறைகளைக் காட்டும் பல ஆசிரியர்கள் முகமாக. 'அனேக குருக்களிடம் அனேகம்தரம் கேட்கவேண்டும்' என்பதைக் காட்டுகிறது பன்மை. 'தீர்த்தம்' என்பதற்குள்ள அனேகம் பொருள்களையும் கொள்ளவேணும். சாஸ்த்ரங்களை எல்லாம் கற்று உன் ஸரஸ்வதியில் நீராடவேணும். யஜ்ஞங்களை அநுஷ்டித்து சித்த சுத்தியை ஸம்பாதித்துக் கொண்டு உன் பரிசுத்த ஸரஸ்வதியில் இறங்கவேணும். 'விவிதிஷந்தி யஜ்ஞேந'

யதாவத்:-- உள்ளபடி உன் ஸரஸ்வதியின் ஹ்ருதயத்தை குருமுகமாக அறியவேணும். சாஸ்த்ரவிதிப்படி நீராடவேணும். சுத்த சுபஸங்கல்பம் செய்துகொண்டு மனச்சுத்தியோடு நீராட வேணும். அந்தர்வாஹினியானதால் (பொருள்கள் உள்ளே மறைந்து கிடப்பதால்) உள்ளபடி உன் கருத்தை அறிய ஆசிரியர்கள் வழிகாட்ட வேணும். படிப்படியாய் உன் பா4வங்களிலாழ வேண்டும்.

அவகாஹ்ய:-- இறங்கி நீராடி. ராமாயணகவி "இதமேவா வகாஹிஷ்யே தமஸாதீர்த்தமுத்தமம்" என்று புண்ய நதியிலே நீராடி அந்நதிக்கரையில் ராமாயணம் பாடினார். அதுபோல, உன் ஸரஸ்வதியில் எங்கள் பெரியோர் நீராடி மஹாகவிகளானார்கள்.

கோதே -- நீ இன்பத்துடன் கவி பாடினதால் உன் காவ்யத்தில் இனிய ரஸமுடையவருக்கு உன் கடாக்ஷத்தால் உன் போன்ற வாக்கைக் கொடுக்கக் கவிதானம் செய்பவளே

பவதீகடாக்ஷாத்:-- உன் க்ருஷ்ணரஸ நதியான ப்ரபந்தங்களில் ரஸிப்பவரை நீ கடாக்ஷிக்கிறாய். உன் ஒரு கடாக்ஷம் போதும் அவர்களுக்கு அனேக உயர்ந்த புத்திவ்ருத்திகள் கொழுந்துவிட்டு மலரும்படி செய்ய. கடாக்ஷத்தில் ஒருமை, அதனால் மலர்ந்து வளரும் புத்திகளில் பன்மை. 'விகஸ்வரதியாம்" என்பது பன்மை. 'பவதீ கடாக்ஷாத்' என்னுமிடத்தில் பவதீ என்பது ஸர்வநாம சப்தமன்று. அப்படியிருந்தால் 'பும்வத்பாவம்' வரும். கோதை கல்யாணம் வர்ணிக்கப்படுகிறது. அதற்கும் அது அநுசிதம். எல்லோரையும் சொல்லக்கூடிய ஓர் ஸர்வநாமசப்தத்தால் 'நாரீணாம் உத்தமவது'வான கோதையைச் சொல்லுவது அழகல்ல. வேறு உணாதிவிகுதியை உடைய சப்தம் இது. இங்கே வர்ணிக்கப்படும் கவிகள் பட்டர் முதலியவர். "பவதீ ஸம்பந்தத்ருஷ்ட்யா ஹரிம்" என்று ப்ரயோகிப்பவர் அப்பெரியோர். அவர்கள் வாக்குகளை வர்ணிக்கையில் அவர்கள் ப்ரயோகத்தை அநுஸரிப்பது அழகு.

விகஸ்வரதியாம்:-- புத்தியும் புஷ்பமாயிற்று. அதற்கு மலர்ச்சியும், மலருகையில் வீசும் மணமுமுண்டு. பூமாலை கோதை அனுக்ரஹிக்கும் வாக்கும் கவிபுத்தியும் புஷ்பமாக வர்ணிக்கப்படுவது உசிதமே.

கவீநாம்:-- ஆளவந்தார், ஆழ்வான், பட்டர், அம்மாள் முதலிய கவிகளுக்கு.

மகரந்தமுச:-- தேன் பொழிவதான

வாச: -- வாக்குகள், ஸ்புரந்தி -- ப்ரகாசிக்கின்றன. இத்தேனைக் காதாலும் பருகலாம், கண்ணாலும் காணலாம் போல் இருக்கிறது. "முடியானே"யிற்போல் அநுபவம். (4)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக