சனி, 8 ஆகஸ்ட், 2009

சரணாகதி மாலை

சரணாகதி மாலை 8ம் பாடல்

த்வதேக ரக்ஷ்யஸ்ய மம
த்வமேவ கருணாகர,
ந ப்ரவர்த்தய பாபாநி
ப்ரவ்ருத்தாநி நிவ்ருத்தய: (8)
(ஹே கருணாகர! அருள்மாகடலே! கருணைக்கடலே! த்வத் ஏக ரக்ஷ்யஸ்ய தேவரீர் ஒருவராலேயே காக்கப்பட வேண்டிய : மம அடியேனுக்கு: த்வம் ஏவ தேவரீரே: பாபாநி பாபங்களை : ந ப்ரவர்த்தய நேராமலிருக்கும்படி செய்தருள வேண்டும்: ப்ரவ்ருத்தாநி நேர்ந்தவைகளை : நிவர்த்தய நீக்கி விட வேண்டும்.
பேரருளாளனே! தேவரீராலேயே ரக்ஷிக்கப்பட வேண்டிய அடியேனுக்கு தேவரீரே பாபங்களைச் சேரவிடக்கூடாது: முன்பே சேர்ந்திருப்பவைகளை விலக்கி விட வேண்டும்.
கருணை வள்ளலாகிய வரதனே! தேவரீரை அன்றி வேறு ரக்ஷகன் இல்லாத அடியேனுக்குச் சரணாகதி செய்வதற்கு முன்பு செய்த பாபங்களை ஒழித்து விடும்படியும் சரணாகதிக்குப் பிறகு பாபங்களைச் செய்யாமலிருக்கும்படிக்கும் செய்தருள வேண்டும்.
த்வம் ஏவ தேவரீரே அடியேன் தலையில் வேறொரு சுமையைச் சுமத்தாமலும் தேவரீருக்கு அதீநமல்லாத வேறொரு ஸஹகாரியைத் தேடாமலும் செய்தருள வேண்டும்.
"இப்படி ஸபரிகரமான பக்தி யோகத்தில் அதிகரிக்கைக் கீடான விளம்பக்ஷமத்வ ஜ்ஞாந சக்த்யாதிகளின்றிக்கே 'நின்னருளே புரிந்திருந்தேன்',. 'துணியேன் இனி நின்னருளல்லது எனக்கு', 'உன் திருவருளன்றிக் காப்பரிதால்' என்றிருக்கும் அதிகாரிக்கு அநுஷ்டேயமான சரணவரணம் ஆநுகூல்ய ஸங்கல் பாதிபரிகரயுக்தமாய் 'அநந்ய ஸாத்யே ஸ்வாபீஷ்டே' இத்யாதிகள் படியே ப்ரார்த்த நாந்வித ஸக்ருத் பரந்யாஸ ரூபமாய் இருக்கும். அத்யந்தாகிஞ்சநனுடைய பரந்யாஸத்திற்கு அவ்விஷயத்தில் கர்த்தவ்ய சேஷம் இல்லை. ஸர்வ சக்தியினுடைய ஸங்கல்பத்திற்கு அவாந்தர வ்யாபரராபேக்ஷா நியமம் இல்லை: இரண்டும் இப்படி ஸக்ருத்தாயிருக்கும். ஆசார்யனாலே தன்னை ந்யஸ்த பரனாக அறிந்த சிஷ்யன்தான் பரந்யாஸம் பண்ணான். இவனுக்குப் பலத்தில் சங்காதிகள் வந்தாலும் ஆசார்யனுடைய பரந்யாஸம் பலாவிநா பூதம். அவன் தனக்காகப் பண்ணின பரந்யாஸம் தனக்குப் ப்ரமிதம் அல்லாத போது பரந்யாஸம் பண்ணினால் பூர்வ பரந்யாஸம் பலித்தே விடும். பின்பிலது மிகுதியான ஸுக்ருதத்தின்படியாம்.
உயர்ந்த திடர்க்கு அடைத்து ஏற்றலாம்படி,தாழ்ச்சியுடைய விஷயத்தில்தானே ப்ரவஹிக்கும்படியான க்ருபாகுணத்தாலே ஸ்வதந்த்ர சேஷிதன் கூறாகவும் பேறாகவும் மேலுள்ள நன்மைகளை எல்லாம் விளைக்கும். இந்தப்ரபத்தி 'தாவதார்த்தி' இத்யாதிகள் படியே அங்கமாயும் ஸ்வதந்த்ரமாயும் நின்று ஸகல பல ஸாதந மாகையாலும், அபேக்ஷித ஸித்திக்குக் கைமுதல் அற்று சரண்ய ஸ்வபாவாதி பரிஜ்ஞாநம் உடையார் எல்லார்க்கும் அதிகரிக்கலாம். ஆகையாலும், தன்பலம் போலே தேசகாலாதி நியமமில்லாமையாலும், ஸபரிகரமாக ஸக்ருத் கர்த்தவ்யம் ஆகையாலும், ஸுகரமாகையாலும், 'உபாயஸ்ஸுக்ரச்சாயம் துஷ்கரச்ச மதோ மம' என்னும்படியான வ்யவஸாய கௌரவத்தை உடைத்தாகையாலும், ப்ரஹ்மாஸ்த்ர துல்யை யாகையாலும், யஜ்ஞாதி ஸுக்ருதங்களைப் போலே நச ப்ரதிபந்தார் ஹ மல்லாமையாலும், சரண்யோபநிஷத்துக்களுக்கெல்லாம் சிரோ பூஷணம் என்னும்படி மேலாய் நிற்கையாலும், இதன் ப்ரபாவம் 'ஸத்கர்மநிரதா' இத்யாதிகளாலே பரக்கப் பேசப்பட்டது.
மற்றுள்ள சாஸ்தரார்த்தங்கள் போலே அதிகாரிக்ருத்யமான ப்ரபதநத்தில் சிலருடைய அதிகாரி விசேஷணத்வாதி வ்யபிதேசம் ஸித்தோபாய ப்ராதாந்ய பரம். ஸுதியில் ந்யாஸ ப்ரஹ்ம சப்த ஸாமாநா தி கரண்யம் அந்யபரம். 'பகவதந் யார்ஹ சேஷ பூதனுக்கு பகவதபி மதமில்லாத விஷயத்தில் பக்தியும் ப்ரபத்தியும் கைங்கர்யமும் ஸ்வரூப விருத்தம்' என்னலாயிருக்க பத்தி யோகத்தை விசேஷித்து ஸ்வரூப விருத்தம் என்றவர்களுக்கு அதிகாரி விசேஷ ஸ்வரூப விரோதத்திலே தாத்பர்யம். தேசகால, அதிகார்யாதி பேதத்தாலே குருலகுவிகல்பம் ப்ராயச்சித்தாதிகள் எல்லாவற்றிலும் ப்ரஸித்தம்.
இப்படி யதாதிகாரம் ஸர்வ கர்ம ப்ராயச்சித்தமாக விதித்த பக்தி ப்ரபத்திகளில் ஒரு வழியிலே இழிந்தவனுக்கு அப்போதே உத்தரபூர்வா காச்லேஷம் ப்ராமாதிக விஷயம். விவேகாதி பூர்த்தியுடையாருக்கு புத்தி பூர்வோத்தராகம் அநாபத்தில் புகாது. மந்த விவேகருக்கு மின்னொளி போலே தோற்றிப் ப்ராயச்சித்தாந்தமாய் மறையும். ராகாதி காடிந்யம் உடையாருக்கு சிக்ஷா விசேஷங்களாலே பிரிதலுண்டாம். பூர்வாக விநாசம் ப்ராரப்த வ்யதிரிக்த விஷயம். ஸ்வதந்த்ர ப்ரபத்தி நிஷ்டனான செய்த வேள்வியனுக்குப் ப்ராரப்தகார்யமான கர்ம வர்க்கத்தியிலும் ஆர்த்தியின் அளவுக்கீடாக தேஹாந்தராதி ஹேதுவான அம்சம் கழியும். 'யஸ்ய ப்ரஸாதே ஸகலா:' 'ப்ரஸந்நமபவத் தஸ்மை' இத்யாதிகளின் படியே இவனளவில் ஸத்வஸ்த்தரானவர்கள் எல்லாரும் ஸுப்ரஸந்நராவார்கள். 'பகவத் பரிக்ரு ஹீதனுக்கு யமவச்யத்வாதிகள் இல்லை' என்னுமிடம், 'பரிஹர மதுஸுதந ப்ரபந்நாந்', 'தேவம் சார்ங்கதரம் விஷ்ணும்', 'நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங்கு யாதொன்றுமில்லை'. 'நமன் கூறு செய்து கொண்டிறந்த குற்றமெண்ணவல்லனே', 'நாவலிட்டுழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே', 'நரகமே சுவர்க்கமாகும் நாமங்களுடைய நம்பி' இத்யாதிகளாலே அறியலாம். ஆகையால் இப்படி நிஸ்ஸம்சயனான இவன் 'ஆள்கின்றான். ஆழியான் ஆரால் குறைவுடையம்', 'எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே', 'திருமால் தலைக்கொண்ட நங்கட் கெங்கே வரும் தீவினையே' இத்யாதிகளின் படியே நிரபேக்ஷனாய், நிர்பரனாய், நிர்பயனாம். மங்கும் அவஸ்தையில்லாத போது மடலூரும் அவஸ்தையாய் மாக வைகுந்தம் காண்பதற்கு மனம் ஏகம் எண்ணியிருக்கும்.
முன்செய்த வினைத்திரளின் முளைத்த தன்றி
முற்றுள்ள முதலரிந்து முளைத்த கூற்றிற்
றன்செய்ய திருவருளா லிசைவு பார்த்துத்
தழல் சேர்ந்த துலமெனத் தானே தீர்த்துப்
பின் செய்த வினையினினை வொன்றா தொன்றும்
பிழை பொறுத்து வேறுளது விரகான் மாற்று
மென்செய்ய தாமரைகட் பெருமா னெண்ண
மெண்ணாதா ரெட்டிரண்டு மெண்ணா தாரே
- (ஸ்ரீபரம பதஸோபாநம். 5. ப்ரஸாதநபர்வம்)
(முன்பு செய்த பாபக்கூட்டத்தில் பலன் கொடுக்கத் தொடங்கிய பாபம் தவிர கைம்முதலாக உள்ள பாபங்களை முழுதும் போக்கி, பயன்கொடுக்கத் தொடங்கிய பாகத்தில் ப்ரபந்தனுடைய அங்கீகாரத்தை எதிர்பார்த்து அவன் விரும்பிய காலத்தில் தன்னுடைய ருஜுவான கிருபையால் அக்நியில் சேர்ந்த பஞ்சு என்னும்படி தானே போக்கி ப்ரபத்திக்குப் பிறகு செய்யும் பாபங்களில் அறிவு இல்லாமல், தெரியாமல் நேர்கின்ற பாபங்களைப் பொறுத்து, தெரிந்து செய்ய வேண்டியதாய்த் தீர்ந்த குற்றத்தை பிராயச்சித்தம் முதலியவற்றில் மூட்டிப் போக்குபவனான சிவந்த தாமரை போன்ற கண்களையுடைய எனக்கு நாதனான ஸர்வேசுவரனுடைய திருவுள்ளத்தின் போக்கை அறியாத மானிடர் திருமந்திரம், துவயம், சரமசுலோகம் என்னும் இரகஸியத்திரயத்தை அறியாதவர்களே) என்பன இங்கு அநுஸந்திக்கத்தக்கன.
ப்ராரப்தேதர பூர்வபாபமகிலம்
ப்ராமாதிகம் சோத்தரம்
ந்யாஸேந க்ஷபயந்நநப்யுபகந
ப்ராரப்த கண்டஞ்சந:
தீபூர்வோத்தர பாப்மநா மஜநநா
ஜ்ஞாதேபிதந்நிஷ்க்ருதே:
கௌடில்யேஸதி சிக்ஷயாப்நகயத்
க்ரோடீகரோதி ப்ரபு :
(ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம். அபராத பரிஹாராதிகாரம்)
(சேதநனுடைய கர்மங்கள் ப்ராரப்தம், ஸஞ்சிதம் என இரு வகைப்படும். பலன் கொடுக்கத் தொடங்கிய கர்மம் ப்ராரப்தம் எனப்பெறும். பின் ஒரு காலத்தில் பலன் அளிப்பதற்காகத் தனியாய்க் குவிந்து மூட்டையாய் இருப்பது ஸஞ்சிதம் எனப்படும். பக்தியோகம் ஸஞ்சித கர்மங்களை மாத்திரம் போக்கும். ப்ரபத்தி ஸஞ்சித கர்மங்களைப் போக்கி ப்ராரப்தத்தில் நாம் இந்தச்சரீரம் உள்ளவரை பலனை அனுபவிக்க வேண்டிய கர்மங்களைத் தவிர மீதியுள்ளவற்றையும் போக்கி விடுகின்றது. ப்ரபத்திக்குப் பிறகு அறியாமல் செய்யும் பாபங்களை இவனிடம் சேராதபடி நீக்கி விடுகின்றது. கால தேசங்களைக் கொண்டு மனப்பூர்வமாகச் செய்யும்படி நேர்ந்த பாபங்களையும் ப்ராயச் சித்தாந்திகளைக் கொண்டு ஒழித்து விடுகின்றது. மனப்பூர்வமாய்ச் செய்யும் பாபங்கள் நீங்கும் வகை பின்வருமாறு:-. பாபம் செய்ய நேரிட்டதற்கு வருந்திப் பச்சாத்தாபம் அடைவதால் கால்பங்கும், பிறகு பாபம் செய்யாது நிறுத்தி விடுவதால் கால்பங்கும், ப்ராயச்சித்தம் செய்ய முயல்வதால் கால்பங்கும், ப்ராயச்சித்தம் செய்து முடிப்பதால் கால்பங்கும் ஆக, பாபம் முழுவதும் தீர்கிறது. ப்ராயச்சித்தங்களில் சிறந்தது மறுபடியும் ப்ரபத்தி செய்வதே. இதுவே ப்ராயச்சித்த ப்ரபத்தி யெனப்படும். ப்ராயச்சித்தம் செய்யாத புருடர் இவ்வுலகிலேயே சில தண்டனையைப் பெறுவர். ஆக எவ்வகையிலும் ப்ரபந்நனுக்கு நரகமோ மறுபிறவியோ கிடையாது. இச்சரீரம் உள்ள வரையிலும் உள்ள விளம்பத்தைக் கூடப் பொறுக்காது உடனே முக்தி வேண்டும் என்பவனுக்கு உடனேயே ஸகல கர்மங்களையும் போக்கிப் பலனை நல்குகின்றது. இத்தகைய பெருமை பக்தி யோகத்திற்கு இல்லை என்பதுங் காண்க)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக