அடியேன் ரசிக்கும் பல வலைத் தளங்களில் கூகுள் குழுமத்தில் உள்ள "சந்தவசந்தம்" மனம் கவர்ந்த ஒன்று. தமிழுக்கு அதிலும் இன்று அநேகமாக நம் இளைஞர்களுக்கு அந்நியப் பட்டுப் போன மரபுக் கவிதைகளுக்கு அங்கு முக்கியத்துவம் உண்டு. மரபில் நகைச்சுவை என ஒரு திரி அங்கு சிறப்பிடம் பெறுவது. அதில் வந்த ஒரு கற்பனை இங்கே.
பிறப்பு-இறப்பு என்ற நியதி இறப்பு-பிறப்பு என்று தலைகீழானால் வாழ்க்கை
எப்படியிருக்கும்? ஹப் மகசீன் ஆகஸ்ட் இதழில் வெளியான கவிதையைப் படித்தால்
விளங்கும்: http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/aug09/?t=13280
அனந்த் 4-8-2009
----------------------------------------------
மரபில் நகைச்சுவை - 33
- அனந்த்
இம்மாதத்திய ’மரபில் நகைச்சுவை’க் கவிதை Woody Allen என்னும் பிரபல
ஆங்கிலக் காமெடி நடிகர் எழுதிய My Next Life என்னும் ஒரு கட்டுரையை
அடிப்படையாகக் கொண்டது. கரு, குழந்தை, இளமை, நடு வயது, முதுமை, இறப்பு
என்று வாழ்வில் ஒரே மாதிரியாக அன்றுமுதல் இன்று வரை நடக்கும்
நிகழ்ச்சிகள், மாற்றத்துக்காக ஒருமுறையேனும், தலைகீழான வரிசையில்
நடந்தால் தன் வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்று Woody Allen செய்த
கற்பனையின் விளைவே அவரது கட்டுரையும் இக்கவிதையும்.
<> என் அடுத்த பிறவி <>
அடுத்து வந்தெனைப் படுத்திய பிறவிகள்
கொடுத்த துயரம் போதும் இனிநீ
தருமோர் பிறப்பில் வருவன என்றன்
விருப்பப் படியே பொருந்திட அருள்வாய்!
முடிவே அடியாய்த் தொடங்கி முதலில்
அடியேன் பிணமாய்க் கிடந்துயிர் பெற்று
முதியோர் இல்லில் வதிந்தாங் கிருந்து
அதிக நலமுளேன் எனுங்கா ரணத்தால்
துரத்தப் பட்டபின் அரசோ பிறரோ
தரும்வரு மானம் பெறுவேன் அங்ஙன்
வாழ்ந்த பின்னர் பலரும் என்னைச்
சூழ்ந்து பரிசுகள் வழங்கிடு மாறு
தொடங்குவேன் என்றன் முதல்நாள் அலுவலை;
அடுத்த நாற்பது ஆண்டுகள் உடலில்
படிப்படி யாகத் துடிப்புள இளமை
பெருகிட உழைத்தபின் வருகிற ஓய்வில்
மெருகே றியஎன் இளமைப் பருவம்
தருமின் பங்கள் பருகிநான் வாழ்வேன்
பல்கலைக் கழகமோ இல்லைவே றெதுவோ
பட்டம் தருவதை இட்டத் துடன்பெற்(று)
உயர்நிலைப் பள்ளியில் நுழைந்(து)அது முடிந்து
வயதில் சிறியோர்க் கெனஉள வகுப்பில்
ஒருசில ஆண்டுகள் ஆனபின் குழந்தை
உருவம் கொண்டுநான் ஒன்பது திங்கள்
பாற்கடல் போன்ற நீர்க்குடம் தன்னில்
நாற்புறத் திலுமாய் நீந்துவேன் உண்டியும்
எனைத்தே டிவரும் தினமும் இதன்பின்..
தினைத்துணைத் தான சினையென மாறி
அனைத்தும் மறைந்தபின் இறைவா
உனைநான் கேட்பேன் உடல்தா எனவே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக