ஞாயிறு, 31 டிசம்பர், 2006
"தத: ச த்வாதஸே மாஸே"
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச் ரமத்தின் ஒன்பதாவது பீடாதிபதி ஸ்ரீமத் திருக்குடந்தை ஆண்டவன் அருளிய காரணம் காண்போமா! (ஸ்ரீ ரங்கநாத பாதுகா அவ்யய மார்கழி மாத இதழிலிருந்து)
"தத: ச த்வாதஸே மாஸே" பனிரெண்டு மாஸம் கர்ப்பத்தில இருந்தாராம்.
பனிரெண்டு மாஸம் கழிச்சு கௌஸல்யை திவ்ய லக்ஷணத்தோடு கூடிய பகவானைப் பெற்றெடுத்தான்னார். பனிரெண்டு மாஸம் என்ன தனியா கணக்கு? அப்படீன்னா, அதுல ஒரு ஸாஸ்த்ரார்த்தம் சொல்றா. பத்து மாஸம் இருந்தா போறாதா? ஸாவகாஸமா பொறக்கலாம்னு பனிரெண்டு மாஸம் கழிச்சு அவதரித்தாரா?
ஸ்வேதகேதுன்னு ஒருத்தன். ஸாஸ்த்ரம் எல்லாம் வாசிச்சுட்டு ப்ரவாஹணன்ன்ற பாஞ்சால ராஜாகிட்ட போனானாம்.
அந்த ராஜா அஞ்சு கேள்வி கேட்டான். "எல்லாம் வாசிச்சிருக்கேன்னு சொன்னாயே, இந்த ஜீவன் மரணத்தை அடைஞ்சா அது மேல் போகிற இடம் எதுன்னு தெரியுமா? 'அது தெரியாது'ன்னுட்டான். போறவா திரும்பி வராளே அது எந்த ப்ரகாரத்துலே?அது தெரியுமா? "அது தெரியாது"ன்னுட்டான். போறவாளுக்கு தேவயாநம்னும், பித்ருயாநம்னும் ரெண்டு வழி இருக்காமே -- அது வித்யாஸம் கேள்விப்பட்டிருக்கியா?ன்னான்."அது தெரியாது"ன்னான். மேல் லோகத்துக்குப் போகாதவாளைப் பத்தித் தெரியுமா?ன்னான்.---அது தெரியாது'ன்னான். மேல் லோகத்துக்குப் போய் திரும்பி வரானே திரும்பி வரச்சே அஞ்சு எடத்திலே ஆஹூதி பண்ணப்பட்டு வரானே? அது தெரியுமா? வேத்த யதா பஞ்சம்யாம் ஆஹூதாவாப: புருஷவசஸோ பவந்தீதி (சாந்தோக்யம் 5-3-3) ந்ருஸிம்ஹப்ரியாலவந்ததோல்லியோ நாலுமாஸத்துக்கு முன்னாலே.
இங்கேர்ந்து போறவன் இருக்கானே திரும்பி வரச்சே என்னன்னு தேசிகன் எழுதியிருக்கார். தூமாதி மார்க்கம்னு பேர்.புண்யமும் பாபமும் கலந்து வரான். தூமாதிமார்க்கம்னா தூமத்தை முதலாகக்கொண்ட மார்க்கம்.
தூமம் ராத்ரிம் ச பக்ஷம் திமிர கலுஷிதம் தக்ஷிணாவ்ருத்தி மாஸாந்
பஸ்சாத் லோகம் பித்ரூணாம் ககநமபி ம்ருத: சந்த்ரம் அப்யேதி கர்மீ!
ஜல தரபதிம் தேவாதீஸம் ப்ரஜாபதிம் ஆகத:
தரதி விரஜாம் தூரே வாச: தத: பரம் அத்புதம் !!
(கதிசிந்தநாதிகார: ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸார:)
அர்ச்சிராதி மார்க்கத்தாலே வைகுண்டத்துக்குப் போறதுக்கும் சொல்லியிருக்கார். தமிழ்லையும் அதையே பாசுரம் பண்ணியிருக்கார்.
இது வந்து தூமாதி மார்க்கம் "ப்ரத்யாவ்ருத்தௌது சந்த்ராத்", முதல்ல த்யுலோகமான அக்னியிலே ஹோமம் பண்ணப்பட்டு ஸோமன் ஆகிறான். சந்த்ரன்ல இருக்கான். இரண்டாவது அக்நி பர்ஜன்யம். மேகம். அதிலே ஹோமம் பண்ணப்பட்டு வர்ஷம் ஆறான். மழை ஆறான். மூணாவது அக்நி ப்ருதிவி. இதிலே ஹோமம் செய்யப்பட்டு வ்ரீஹியாகிறான். அதாவது தான்யாதிகள் ஆகிறான். நாலாவது அக்நி புருஷன். புருஷனுடைய வயித்திலேர்ந்து ஸ்த்ரீகளுக்குப் போறான். ஸ்த்ரீ அஞ்சாவது அக்நி. அவளிடமிருந்து பொறக்கறான். நாமெல்லாம் பிறக்கிறது இப்படித்தான். நமக்கு வேணாத் தெரியாதே ஒழிய எல்லாரும் பிறக்கிறது இப்படித்தான்னு சொல்றா. அஞ்சு இடத்திலே கீழே தள்ளப்பட்டு வரான். த்யுலோகம் ஒரு அக்நி.பர்ஜந்யம் ஒரு அக்நி. பர்ஜந்யம்னா மேகம். அங்கிருந்து ஜலதாரையா விழுந்து தான்யத்தில் வரான்.தான்யத்தின் வழியா போய் புருஷனுடைய வயத்துக்குப் போறான். புருஷனுடைய வயத்துலேர்ந்து ஸ்த்ரீ வயத்துக்குப் போறான். இப்படி அஞ்சு அக்நியா நிரூபிச்சு இப்படி அஞ்சு இடத்துல இருக்கான்னு சொன்னா. புரியறதா?
இப்படி ஒவ்வொரு இடத்துலேயும் எத்தனை நாள் இருக்கான்னு கேட்டா "அதோ வை கலு துர்நிஷ்ப்ரபததரம்" (சாந்தோக்யம்5-10-6) இந்த வ்ரீஹி-- தான்யத்திலேர்ந்து போறதுக்குத்தான் கொஞ்ச நாளாறது. மத்ததெல்லாம் சீக்ரம். உடனே உடனே வந்துடுவான். மழையிலே வரான். அது தான்யத்துலே போய்ச் சேரது. வ்ரீஹின்னா நம்ம பக்கத்திலே அரிசி, வடக்கே கோதுமை. இப்படி தான்யத்தைச் சாப்பிடறானோல்லியோ. கேழ்வரகு கஞ்சி சாப்டா கேழ்வரகு. அதிலேர்ந்து புருஷன் வயத்துக்குப் போறான். அதுதான் கஷ்டம். ஏன்னு கேட்டா, அந்த தான்யம், நெல் விளையறதுன்னு வெச்சுக்கோ. அந்த நெல்லுலே வர ஜீவன் இருந்தா நம்மாத்துக்கு வர நெல்லுலே வரணும். வழியில் வண்டிலே சிந்தாத இருக்கற நெல்லுக்கு வரணும். இந்த நெல்லு அரிசியாகச்சே அதிலே போயிடாத நம்மாத்துல பானைக்குள்ள வர அரிசிலே வரணும். இந்த அரிசியைக் களையறச்சே ஜலத்துலே அரிசி போறது பார்க்கா; களையச்சே பாதி போறது பார்க்கா அதிலே போகாத இருக்கணும். அதுவும் தளிகை பண்ணின சாதத்துலே வரணும். அதுவும் இவன் பாகத்துலே வரணும். தளிகை பண்ணின சாதத்தை எடுத்து அதிலேயும் மேல் பருக்கை எடுத்துட்டு அப்புறம் ஸம்பந்திகளுக்குப் போடறா. சில இடத்துலே மேல் பருக்கை எடுக்காம....... ப்ருஷனுடைய வயத்துக்கு அப்புறம் புருஷனுடைய வயத்திலேர்ந்து ஸ்த்ரீவயத்துக்கு. அதுதான் உங்களுக்குத் தெரியும்.இந்த புருஷன் வயத்திலே மூணு மாஸம் இருக்கறதா சொல்லியிருக்கு. ஸ்த்ரீகள் வயத்துலே ஒன்பது மாஸம் இருக்கறதா சொல்லியிருக்கு. ஆகப் பனிரெண்டு மாஸம் வயத்துல இருந்தாத்தான் புருஷனா பொறக்கறான். ஸ்த்ரீகள் வயத்துல ஒன்பது மாசம்னு சொல்லியிருக்கு. இதெல்லாம் புண்ய பாபம் பண்ணின கர்மிகள் நமக்குத்தான். பெருமாள் வந்து அவதரிச்சாரானா அவருக்கு அதெல்லாம் கிடையாது.
ராவணன் கேட்டிருக்கான். மத்தவாளாலே அவனுக்கு சாவு இல்லை. அதனால அவனுக்கு மனுஷ்யனாலத்தான் சாவு. மனுஷ்யன்னா கர்பத்துலேர்ந்து வரணும். இங்க மூணு மாசம், அங்க ஒன்பது மாசம் இருந்து வரணும். வந்தாத்தான் அவனைக் கொல்லலாம். இல்லாமல் போன அவனைக் கொல்ல முடியாது. அதுக்காகப் பார்த்தாராம். புருஷாளா இருந்தா என்ன ஸ்த்ரீயா இருந்தா என்ன ? ஒரேயடியா பனிரெண்டு மாசம் இருந்துடுவோம்னு இருந்துட்டாராம். தத: ச த்வாதஸே மாஸே -- ராவணனைக் கொல்றதுக்காக மநுஷ்யாளா பன்னிரண்டு மாசம் கர்ப்ப வாஸம் பண்ணிப் பொறக்கலன்னா ராவணனைக் கொல்ல முடியாது. அதனால் தத: ச த்வாதஸே மாஸே சைத்ர நாவமிகே திதௌன்னு ராமனுடைய அவதாரத்தைச் சொல்றார்.
க்ருஷ்ணனுக்கு ஏன் பன்னிரண்டு மாதம்? ஆசார்யன் திருவாக்கினை நாளை காண்போம்
வியாழன், 28 டிசம்பர், 2006
இயற்கை எனும் ஆசான்
“இயற்கையெனும் இணையிலா ஆசான்”
ஒரு சமயம் ஒரு அவதூதர் யது மஹராஜனிடம் வந்தார். அந்த ப்ரும்மஞானியைப் பார்த்து யது கேட்டார்:"ப்ராமணோத்தமரே! புலன்களின் திருப்திக்கு இடங்கொடாத நீங்கள் மிக நுட்பமான தெளிவை எப்படிப் பெற்றீர்கள்? உலகை நன்கு அறிந்தும் ஒன்றும் உணராதவர் போல் நடந்து கொள்கிறீர்?'
அவதூதர்:-- இந்தத் தெளிவை அடைய எனக்கு 24 ஆசார்யர்கள். அதில் பெரும்பான்மை இயற்கையே. பூமி, வாயு, ஆகாசம், நீர், அக்னி, சந்திரன்,சூரியன், மாடப்புறா, மலைப் பாம்பு, ஸமுத்ரம், விளக்கு, வெட்டுப் பூச்சி, தேனி, யானை இவை 13ன் மூலம் கற்றுக் கொண்டவற்றைச் சொல்வேன்.
1) பூமியில் வாழும் மக்கள் அவரவர் புண்ய பாவங்களுக்கேற்ப வாழ்கின்றனர். இதை உணர்ந்து வாழ்வின் சுக துக்கங்கள் கர்மாவின் அடிப்படையில் என்று தெளிந்து, எதைப்பற்றியும் மனபாதிப்பு பெறாமல் வாழ பூமியிடம் கற்றேன். இரவு, பகல் பருவ காலங்கள் இவைகளுக்குக் காரணம் இயற்கையின் நியதி. பூமி அதைப் பற்றிக் கவலைப்படாமல் அன்று முதல் இன்று வரை தன் சுழற்சியில் மாற வில்லை. இதுதான் வாழ்வின் உண்மை என்று தெளிந்தேன்.
2) நிலையின் திரியாது அடங்கி, மற்றவர் பயனடையவே தான் என்று இருக்கும் மலை, மற்றவர் அனுபவிக்கவே இலை, பூ, காய், கனி இவை நல்கும் மரங்கள் இவைகள் எனக்கு பரோபகாரார்த்தம் இதம் சரீரம் என்று அறிவுறித்தின
.3) காற்று --- நல்ல மலர்ச்சோலை, துர்நாற்றம் மிகுந்த பகுதி இவைகளின் ஊடே திரிந்து, அவ்வாஸனையால் மற்றவர் வேண்டுமானால் விருப்பு, வெறுப்புக் காட்டினாலும் தான் அதைப் பற்றிக் கவலைப்படாமல் அன்று முதல் இன்று வரை வீசிக் கொண்டிருப்பதுபோல வாழ்வின் ஊடே நிகழும் இன்பதுன்பங்களால் பாதிக்கப்படாமல் இருக்கக் கற்றுக் கொண்டேன்.
4) நம் சரீரத்துக்குள் ஆத்மா இருந்தாலும், உலகின் அசையும் மற்றும் அசையாப் பொருட்கள் இவற்றால் ஏற்படும் அசைவுகளால் ப்ரம்மத்தைப் பற்றிய எண்ணம் கலையாமல் ஆகாயம் போல் இருக்க வேண்டும். மேகம் வரும். மறையும். இயற்கை மாற்றங்கள் நிகழும்.. ஆனால் வெளியோ பாதிக்கப் படுவதில்லை. இந்த உண்மையை ஆகாயத்திடமிருந்து தெரிந்து கொண்டேன்.
5)நீர் நிர்மலமாய், இயற்கையிலேயே உயிர்களிடம் அன்பு உள்ளதாய் இனிமையாய்வேடகை தணிவிப்பதாய் உள்ளதோ அப்படி மனிதன் தன் பார்வை தன் தொடர்பு இவைகளால் பிறர் வேட்கை தீர உதவுவதுபோல அதேசமயம் மிகத் தெளிவாக இருக்கவேண்டும். முடியுமானால் தன்னைச் சேர்ந்தவர்களையும் தூய்மையும், மென்மையும் உடையவர்களாகச் செய்யவேண்டும் என்று உணர்ந்தேன்.
6)எப்படி அக்னியானது ஒளி, அணுக முடியாமை எல்லாவற்றையும் சாம்பலாக்கும் இயல்பு இவைகளோடு கூடியதாய் உள்ளதோ அப்படி இறையுணர்வெனும் தேஜஸ் துறவு என்னும் அணுகமுடியாமை உணவின் சுவை பாராமல் அருந்துதல் இவைகளை உடையவனாய் வாழக்கற்றுக்கொள்ளவேண்டும் என்று புரிந்தேன்.
7) வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் (அதாவது பிறப்பு முதல் இறப்பு வரை) பற்றிக் கவலைப் படாமல், மாறி மாறி வரும் தேய்பிறை, வளர்பிறை இவைகளோடு விளங்கியும் தன்னால் இயன்றவரையில் ஒளியூட்டும் சந்திரனைப் போல வாழவேண்டும் என்று தெளிந்தேன்.
8) நீர்நிலைகளில் உள்ள நீரை தன் கிரணங்களால் சூரியன் கோடையில் ஏற்றுக்கொண்டாலும், மழைக்காலத்தில் மீண்டும் அந்நீரை விட்டுவிடுவது போல உயர்ந்த யோகி விஷயங்களை க்ரஹித்து, தான் பாதிக்கப் படாமல் அவற்றை விட்டுவிடவும் வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.
9) அளவுக்கு அதிகமான பாசமோ, அப்பாசத்தால் ஏற்படும் பற்றையோ வளர்த்துக்கொள்ளக் கூடாது. அப்படி வளர்த்துக் கொண்டால் விவேகமற்ற மாடப் புறாவின் கதிதான் ஏற்படும்.
அது என்ன மாடப் புறா கதி?
கட்டுரை ஆசிரியர் ஸ்ரீ வீராபுரம் சம்பத் தீக்ஷிதர் ஜனவரி வரை காத்திருக்கச் சொல்லிவிட்டார்.
இன்னும் ஓர் சில நாள் காத்திருப்போம்.
திங்கள், 25 டிசம்பர், 2006
சனி, 23 டிசம்பர், 2006
திருப்பாவை
இன்னும் எனது கணிணி சரியாகவில்லை. ஒருவழியாக அலுவலகத்தில் தமிழ் உபயோகிக்க வழி செய்தாகிவிட்டது. இது மார்கழி. திருப்பாவை ஊரெல்லாம் ஒலிக்கும் நேரம். அங்கங்கே பாவை உபந்யாஸங்கள் கேட்டு மகிழும் நேரம். எல்லா இடங்களிலும் அந்த வாய்ப்பு கிட்டாது ஏங்குவோருக்காக பெங்களூர் ஸ்ரீ தேசிகன் திருப்பாவையை அனைவரும் ரசிக்கும் வண்ணம் மிக அருமையாக வழங்குகிறார். போய்ப் பாருங்கள் ரசியுங்கள்
www.desikan.com/blogcms
திங்கள், 20 நவம்பர், 2006
தரு-இராகம்-மோகனம்-தாளம்-ஆதி
பல்லவி
வாயே நம்மாழ்வாரைச்சொல்வாயே
அனுபல்லவி
வாயேநீயேவேதந்தமிழ்செய்த
மாறன்சடகோப னேயென்றேயிரு. (வாயே)
சரணங்கள்
அம்போதிநீரை மேகம்வாங்கி
கம்பீரமாகவே யுமிழவேதாங்கி
அம்புவியெங்கும் விளைவுகளோங்கி
யதுபோலவேயிவர் வேதங்கணான்கி
ணுண்பொருள்கண்டு சொரிந்தாரே
நுவலடியார்கள் வலிந்தாரே
நம்புவாய்நம்புவாய் குருகூர்வள்ளலை
நாதமுனிகளே யோதுங்குருவென்று (வாயே)
கலியுகமாதியிற் பிரவர்த்திநாடினார்
கண்ணனடியிணை கண்டுகூடினார்
நலிவதில்லாமலே யன்புசூடினார்
ஞானானந்த மடுவினிலாடினார்
நலமதுரகவியில் வல்லோரே
ஞாலம்புகழு நல்லோரே
சொலுவாய்சொலுவா யவர்சீரடியினைத்
துதித்துநெஞ்சினிற் பதித்துஅனுதினம் (வாயே)
சகலர்க்குமதி காரமதான
தமிழதினாலே வேதநிதான
மிகவேசொல்லு முறுதிமெய்ஞ்ஞான
விளைவாய்வந்து தரிசனரான
தகைமைபொருந்திய ஆழ்வாரே
தண்குருகூரினில் வாழ்வாரே
மிகவேமிகவே பரவுகபரவுக
வீடுபெறும்படி கூடிவந்திரு (வாயே)
விருத்தம்
நம்மாழ்வார் தமக்குப்பின்ப்ரவர்த்தரானார்
நாதமுனியுயக்கொண்டார்மணக்கானம்பி
இம்மாநிலம்புகழவந்தாரான
யாமுனரோடெதிபதியும்ப்ரவர்த்தரானார்
எம்மான் வியாஸபோதாயனாதி
யிடம்விரையாழ்வார்களிடமங்குரிக்க
உம்மாங்குயாமுனாதிகளிடத்தி
லோங்குதரிசனந்தளிராய்ச் செழித்ததன்றே.
விருத்தம்
வணிதமாந்தரிசனந்தான் பாஷ்யகாரர்
மகிமையான்மரமாகிகனைகண்மீற
அணிபெரும்பூதூரில்வந்தேயவதரித்தார்
யாதவப்பிரகாசரிட நூல்கள்கற்றார்
அணிபெரியநம்பி திருவடியைச் சார்ந்தங்
காளவந்தாரவர்க்கருளுஞ்சம்ப்ரதாயம்
பணிவிடையாலவர்பக்கலெல்லாங்கேட்ட
பாங்கினார் வரவரவு மோங்கினாரே.
ஞாயிறு, 12 நவம்பர், 2006
ஸ்ரீவேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகைக் கீர்த்தனைகள்
தரு--இராகம்--அசாவேரி--தாளம்--ஆதி
பல்லவி
நாராயணனெங்க ளாராவமுதனை
நாவேதுதிருண மேலே
அனுபல்லவி
சீரார்குடந்தையிற் செழிக்கும்கோமளவல்லி
சீரங்கர்தழுவிய காரங்கமேனி சாரங்கபாணி (நாரா)
சரணங்கள்நலமிகுந்ததன்மார்பிற் கவுத்துபமணிபோலே நாடுஞ்சகலஜீவ கோடிகளொருகாலே
கலுஷமதியார்கிங்க ராதிராச்சியமேலே
கடந்ததன்றிருவடி காணவேபரிவாலே
சொலுங்கரணகளேப ராதிகளைத்தொடுத்துத்
தொடர்ந்ததினாலன்னிய பரஞ்சேராமற்றடுத்து
உலகம் பிழைக்கவேண்டி வேதங்களைக்கொடுத்து
உரையறிந்திடவேநற் சாத்திரங்களுமடுத்து
நலவிதிகாசப்பிர மாணங்கள்செய் புராணங்கள்தந்த (நாரா) சநற்குமாராதிகளால் மோட்சசாத்திரங்களோதித்
தானேநாரதபரா சரசுகசவுகனாதி
கனத்தரிஷிகளிட்டாத் துமசம்பிரதாயரீதிகண்டு
நடத்தியின்னம் வியாஸமுனிவராதி
கனித்தமுனிவர்களுந் தாமாகவேபிறந்து
சாரீரகாதிகளைபிர வர்த்திசெய்தேதிறந்து
அனைத்துலகங்களிலும் யாவைகளுநிறைந்து
அணுவுக்கணுமலைக்கு மலையாகவேசிறந்து
மனத்திலெண்ணியதருள் வாசுதேவநங்கேசவதிரு (நாரா)
ஆளிட்டுப்பிரவர்த்திக்கை செயவும்வேண்டுமென்றன்றே
அன்னமச்சவயக்கிரீவ நரநாராயணரென்றே
நாளிட்டுவராகராம கீதாசாரியரென்றே
நல்லவவதாரங்க ளாலேதான்வெளிநின்றே
ஆளுந்திறமைசொல்லிப் புருஷார்த்தங்கள்விண்டு
அறிவிக்கச்சீவன்கள் தன்னையறிந்துகொண்டு
தாளுந்தடக்கைகளுங் கூப்பிப்பணிதல்கண்டு
தானேதரிசனத்தை வளர்த்திநின்றானே
பண்டுவாளுஞ்சங்கமுந்திரு வாழியாருயராழியாரரி. (நாரா)
விருத்தம்
கோதிலாத்தமிழாசாரியர்களின்னங்
குகதேவர்பாவருசிகபர்த்திமூவர்
மாதிரமேற்ப்ரவர்த்தகராம்டீகாசார்யர்
வாக்கியகாரருமெனவேபிரமநந்தி
ஓதுமிவர்களுக்குப்பின் யுகாரம்பத்தி
லுற்றநம்மாழ்வாரெனவேதூப்பிற்பிள்ளை
யாதிசம்ப்ரதாய பரிசுத்திதன்னி
லருள்செய்தார் வேதாந்தப்பொருள்செய்தாரே.
ஸ்ரீவேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகைக் கீர்த்தனைகள்
தரு--இராகம்--அசாவேரி--தாளம்--ஆதி
பல்லவி
நாராயணனெங்க ளாராவமுதனை
நாவேதுதிருண மேலே
அனுபல்லவி
சீரார்குடந்தையிற் செழிக்கும்கோமளவல்லி
சீரங்கர்தழுவிய காரங்கமேனி சாரங்கபாணி (நாரா)
சரணங்கள்நலமிகுந்ததன்மார்பிற் கவுத்துபமணிபோலே நாடுஞ்சகலஜீவ கோடிகளொருகாலே
கலுஷமதியார்கிங்க ராதிராச்சியமேலே
கடந்ததன்றிருவடி காணவேபரிவாலே
சொலுங்கரணகளேப ராதிகளைத்தொடுத்துத்
தொடர்ந்ததினாலன்னிய பரஞ்சேராமற்றடுத்து
உலகம் பிழைக்கவேண்டி வேதங்களைக்கொடுத்து
உரையறிந்திடவேநற் சாத்திரங்களுமடுத்து
நலவிதிகாசப்பிர மாணங்கள்செய் புராணங்கள்தந்த (நாரா) சநற்குமாராதிகளால் மோட்சசாத்திரங்களோதித்
தானேநாரதபரா சரசுகசவுகனாதி
கனத்தரிஷிகளிட்டாத் துமசம்பிரதாயரீதிகண்டு
நடத்தியின்னம் வியாஸமுனிவராதி
கனித்தமுனிவர்களுந் தாமாகவேபிறந்து
சாரீரகாதிகளைபிர வர்த்திசெய்தேதிறந்து
அனைத்துலகங்களிலும் யாவைகளுநிறைந்து
அணுவுக்கணுமலைக்கு மலையாகவேசிறந்து
மனத்திலெண்ணியதருள் வாசுதேவநங்கேசவதிரு (நாரா)
ஆளிட்டுப்பிரவர்த்திக்கை செயவும்வேண்டுமென்றன்றே
அன்னமச்சவயக்கிரீவ நரநாராயணரென்றே
நாளிட்டுவராகராம கீதாசாரியரென்றே
நல்லவவதாரங்க ளாலேதான்வெளிநின்றே
ஆளுந்திறமைசொல்லிப் புருஷார்த்தங்கள்விண்டு
அறிவிக்கச்சீவன்கள் தன்னையறிந்துகொண்டு
தாளுந்தடக்கைகளுங் கூப்பிப்பணிதல்கண்டு
தானேதரிசனத்தை வளர்த்திநின்றானே
பண்டுவாளுஞ்சங்கமுந்திரு வாழியாருயராழியாரரி. (நாரா)
விருத்தம்
கோதிலாத்தமிழாசாரியர்களின்னங்
குகதேவர்பாவருசிகபர்த்திமூவர்
மாதிரமேற்ப்ரவர்த்தகராம்டீகாசார்யர்
வாக்கியகாரருமெனவேபிரமநந்தி
ஓதுமிவர்களுக்குப்பின் யுகாரம்பத்தி
லுற்றநம்மாழ்வாரெனவேதூப்பிற்பிள்ளை
யாதிசம்ப்ரதாய பரிசுத்திதன்னி
லருள்செய்தார் வேதாந்தப்பொருள்செய்தாரே.
சனி, 11 நவம்பர், 2006
ஸ்ரீவேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகைக் கீர்த்தனைகள்
ஸ்ரீமதே ராமானுஜாய நம:ஸ்ரீமதே நிகமாந்த மஹாகுரவே நம:
ஸ்ரீ வேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகைக் கீர்த்தனை ********************************
காப்பு - ஆசிரிய விருத்தம்
பொன்னுறையுமணிமார்பனீலவண்ணன் பூங்கமலங்கண்கைமுகப்பாதன்வேதமென்னுமுயர் வேங்கடவெற்பினில்விளங்கு மெம்பெருமான் கண்டாவதாரமானபன்னுபுகழ்வேதாந்தகுருவிலாசம் பைந்தமிழாற்கூறுதற்கே சேனைநாதன்முன்னின்றுசுபந்தருவானவன் சீர்பாத மூப்பதாமிங்குவந்துகாப்பதாமே.
இதுவுமது.
வேங்கடநாதார்யகவிவாதிசிங்கர் வேதாந்தாசார்யரெனவிளங்கிநாளும்பாங்குபெறுதூப்பினகரநந்தசூரி பாலராய்வந்துதித்துப்பாரின்மீதுஓங்கியராமானுஜஸித்தாந்தஞ்செய்து முபநிஷதப்பொருளெல்லாம்வெளியாக்கண்டாரீங்கிவரையாமெல்லாமனத்துளாக்கி யெண்ணுவோம்வந்தநந்தான்பண்ணுவோமே. விருத்தம்
ராமா னுஜதயாபாத்திரரேயாகி ஞானவைராக்கியபூஷணஸம்பன்னர்தாமனார்வைபவப்பிரகாசிதன்னை தமிழினாற்கீர்த்தனையின்வரிசைபாடப்பூமாதுமணவாளனாதியாகப் புகழ்நாதயாமுநரேநடுவாய்நின்றுஹேமாசனாதிகுருபரம்பரைக்கே யென்செய்வோம்வணங்குதலையுஞ்செய்வோமே.
எம்பெருமான்றிருவடியேசொர்ணமாக இதரங்கள்யாவைகளுந்துரும்பாவெண்ணிநம்பினவரெங்கள்குருகருணைவாரி நல்லிராமா நுஜனார்சரணம்போற்றஅம்புவியிலெங்கணுமேபுகழுந்தூப்பி லநந்தசூரியர்குமரர்பூர்ணசந்த்ரவிம்பமாம்வேதாந்ததேசிகன்றன் விலாசந்தான்சரஸ்வதிவிலாசந்தானே.
எந்தமுடைக்குலங்களுக்குத் தந்தைதாயா யிசையுவதிதநயர்நிறைசெல்வமெல்லாந்தந்தருளியெங்கள்குலப்பதியாய்நின்று சரணமாய்வகுளமலர்த்தொடையல்வேய்ந்தஅந்தமுதற்குரவனடிவாழ்த்தியிந்த அற்புதவேதாந்தகுருவிலாசந்தன்னைச்செந்தமிழ்கீர்த்தனையாகச்செய்யவெங்கள் தேசிகரே வாக்கமுதந்தந்தாள்வாரே.
வாழ்வானகீர்த்திமிகும்பூதர்பொய்கை வரர்பேயர்பட்டர்பிரான்பத்திசாரர்சூழ்செய்குலசேகரனார்யோகிவாகர் தொண்டரடிப்பொடிகலியனெதிகணாதன்தாழ்வியாதுமிலாதபராங்குசருந்தேனார் தண்டுளவத்தார்முடியனடியரானஆழ்வாராசிரியர் திருவடியேசென்னி யணிகுவோமனுதினமும்பணிகுவோமே.
மங்களம்- தரு- இராகம்- சுருட்டி- தாளம்- ஆதி
பல்லவி
வேதாந்தாசார்யருக்கு ஜயமங்களம் - எங்கள்வேங்கடநாதார்யருக்குச் சுபமங்களம்
அனுபல்லவி
மேதாவிசுசு சீலருக்கு மெய்ப்புகழ்விசாலருக்குத்தோதாரம்மன்பாலருக்குத் தொண்டரனுகூலருக்கு (வேதா)
சரணங்கள்
கவிவாதிசிங்கருக்குப் புங்கவருக்குமங்களம்கண்டாவதாரருக்குத் தீரருக்குமங்களம்திவியமாலைக்கர்த்தருக்கு தரிசனப்பிரவர்த்தகருக்குக்கவலையில்லாச்சித்தருக்கு கண்ணனடிப்பத்தருக்கு (வேதா)சகலஜநபூசிகர்க்குத் தேசிகர்க்குமங்களம்சர்வதந்த்ரம் வல்லவர்க்கு நல்லவர்க்குமங்களம்பகவாநாமவாசகர்க்குப் பாசவினைரேசகர்க்குப்அகிலபாபமோசகர்க்கு அயக்கிரீவோபாசகர்க்கு (வேதா)தூப்பின கராதியர்க்கு வேதியர்க்குமங்களம்சொற்பேரருளாளருக்கு ஆளருக்கு மங்களம்யாப்பினில்விசித்திரர்க்கு அநந்தசூரிபுத்திரர்க்குக்காப்புவேதவத்திரர்க்கு கமலநயனர்பௌத்திரர்க்கு (வேதா) வெண்பா
சீரார் குடந்தைத் திருக்கண் வளர்கின்றஆரா வமுத னடியிணையை --- நேராகிச்சென்றடைந்த வேதாந்த தேசிகன்றன் வைபவத்தைஇன்றெடுத்துச் சொல்லுவேன் யான்.
..........நாளை தொடரும்..
திங்கள், 11 செப்டம்பர், 2006
சனி, 9 செப்டம்பர், 2006
திருப்புல்லாணி மாலை
இல்வாழ்க்கை (10வது குறள்)
மையற்றவையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்
தெய்வத்துள் வைக்கப்படு மென்பர் புல்லைத் திருநகர்வா
ழையற் கடிமைப்பட்டு இல்வாழ்க்கை நீதி அமைந்தவரை
மெய்மைக் கருத்துறச் சொல்வது அன்றோவந்த மேன்மைகளே.
குறிப்பு:-- மை=குற்றம்;ஐயற்கு=தலைவர்க்கு; மெய்மைக்கருத்து= தூய எண்ணத்துடன்;
வாழ்வாங்கு=வாழும் இயல்பினொடு; வான் உறையும் தெய்வம்= நித்திய
சூரிகள்; (திருப்புல்லாணி ஜகன்னாதனை வணங்கும் அடியார்களைத்
தூயமனதால் வழிபட்டால் எல்லா மேன்மைகளும் கிட்டும்
வாழ்க்கைத் துணைநலம் (4வது குறள்)
தருந்தக்க நாண்மடம் அச்சம்பயிர்ப்புத் தரித்த பெண்ணிற்
பெரும்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண்டாக்கப் பெறிற்
பொருந்தச் சொல்லத்தனமை புல்லைப்பிரான் திருவடிப் பூவடியை
வருந்தித் தவம்புரிமாதர் கற்பல்லது மற்றில்லையே
குறிப்பு:-- தரும்தக்க-- கூறத்தக்க; நாண்-- வெட்கம்; பயிர்ப்பு-- மனம் கொள்ளாமை;
திண்மை-- கலங்காநிலைமை (புல்லைப் பிரானையே போற்றிவாழும் கற்பே
கற்பாகும்)
மலேகானில் குண்டு வெடிப்பு
இப்போது மசூதியில் குண்டு வெடித்தது. மும்பையிலோ,கோவையிலோ
மலேகானிலோ எங்கு வெடித்தாலும் சம்பந்தம் இல்லாத அப்பாவிகள்
உயிரிழப்பது பெரிய வேதனைதான். ஆனாலும்கூட இப்போது மசூதியில்
வெடித்த நாளை எல்லாத் தரப்பாரும் சற்று சிந்தித்தால், மதங்களிடையே
பல விஷயங்களில் உள்ள ஒற்றுமை புலனாகும்.
அன்று ஷப்-ஈ-பரத் என்னும் முக்கியமான தினமாம். மறைந்த முன்னோர்கள்
நினைவாக இந்த தினத்தில் அவர்களை நினைத்து தொழுகை செய்வதைக் குரான்
கட்டாயப் படுத்தியுள்ளதாக அனேகமாக எல்லா நாளிதழ்ச் செய்திகளும் தெரிவிக்
கின்றன.
இந்துக்களுக்கோ அது மாளயபக்ஷ ஆரம்ப தினம். அன்று முதல் அமாவாசை வரை
15 தினங்களும் பித்ருக்களுக்காக (மறைந்த மூதாதையர்கள்) திதி அளித்து விரதம்
அனுஷ்டிப்பது இந்துக்கள் கடமை. (தற்போது அந்தணர்கள் மட்டுமே கடைப் பிடிக்கின்
றார்கள் என்பது வேறு விஷயம்)
ஆக அடிப்படையான ஒன்று மூதாதையரை நினைத்து வழிபடுதல் பொது. அதை அனுசரிக்கும்
விதங்கள் மாறலாம். அது தேசாச்சாரம் எனப்படும். இப்படிபல விஷயங்கள் அடிப்படையிலே
ஒன்றுதான். இதை என்று நாம் எண்ணிப் பார்க்கப் போகிறோம்?
30 வருடங்களுக்கு முன்னே ஜாதியோ மதமோ அவரவர்கள் வீட்டுக் கல்யாணங்களிலும்,
துக்க காரியங்களிலும் மட்டுமே ப்ரதானமாக இருந்தன. என்னுடன் பள்ளியில் படித்த நண்பன்
இன்ன ஜாதியென்று போன வருடம் அவரது பெண் கல்யாணப் பத்திரிக்கை பார்த்துத் தான்
35 வருடத்திற்குப்பின் தெரியும். சீறாப்புராணத்தை நாராயணசுந்தரம் ஐயங்கார் அனுபவித்து
எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது போல் யார் சொல்லப் போகிறார்கள்? ஈசான்யத்தைப்
பற்றியும், சைவ,வைணவ இலக்கியங்களைப் பற்றியும் நீதிமன்றங்களில் ஒன்றாகக்
காத்திருக்கும்போது கீழக்கரை SVM காசிம் அவர்கள் சொல்லச் சொல்லத் தானே
எனக்கு அவற்றின் அருமையை உணர்ந்து கொஞ்சமாவது தெரிந்து கொள்ள முடிந்தது
அவரவர் வழி அவரவருக்குச் சிறந்ததுதான். ஆனால் அதுதான் சிறந்தது மற்றவை மட்டம்
எனும் நினைப்புத் தானே கலகங்களுக்குக் காரணம்?
மாச்சரியங்களை உண்டாக்கி சுகம் காணும் சில சுயநலக் காரர்கள் விரிக்கும் பொய்மை
புரட்டுகளில் புத்தியைச் செலுத்தி உண்மை நிலை தெளிந்து வேறுபாடுகள் களையப் படவேண்டும்.
நடக்குமா? நடக்காது. ஏனென்றால் நாட்டில் பல அரசியல்வாதிகளுக்கு நாம் பிரிந்தே இருப்பது
தான் வசதி. இல்லையா?
திருதிரு
வெள்ளி, 8 செப்டம்பர், 2006
திருப்புல்லாணி மாலை
திருப்புல்லாணி மாலை
அறன் வலியுறுத்தல் (5வது குறள்)
பொன்னாட்டு இறையோடு அயிராணி போற்றும் அம்போருகப்பூ
மின்னாட்கு நாயகம் என்னும் புல்லாணியில் வீற்றிருக்கும்
அன்னார்க்கு அடியவர் சொல்வர் அழுக்காறுஅவாவெகுளி
இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் எனவே.
குறிப்பு:-- பொன்னாடு-- தேவலோகம்; அயிராணி-- இந்திராணி;
அம்போருகப்பூ--- தாமரை; மின்னாட்கு--திருமகளுடைய
நாயகம்-- தலைவன்;
(நன்றி: திரு சோ அவர்கள், "துக்ளக்")
கட்டிடக் கலையை வகுத்தவர்கள்:
தேவன், அநிருத்தன், சுக்ரன், ப்ருஹஸ்பதி ஆகியோர்.
ஆடியில் தொடங்குபவனுக்கு நிறைய வேலையாட்கள் கிடைப்பர்.
மார்கழி தானியத்தையும், மாசி செல்வத்தையும், பங்குனி நன்மக்கட்பேற்றையும் அளிக்கும்.
ஆனி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, தை மாதங்கள் கட்டிட வேலை ஆரம்பிக்க உகந்த மாதங்கள் அல்ல.
புதன், 6 செப்டம்பர், 2006
திருப்புல்லாணி மாலை
நீத்தார் பெருமை (2வது குறள்)
குறைத்தாரெனாத் துறந்தார் பெருமைதுணைக் கூறின்வையத்
திறந்தாரை எண்ணிக்கொண்டற்று எனலால் இறவாது உனைச்சேர்
துறந்தார்பெருமை அறிந்தும் என்போலிகள் சொல்லவற்றோ
மறந்தார்கள் நீமறந்தேனுஞ் சொல்லாய்ப்புல்லை வாமனனே.
குறிப்பு:--குறைந்தார் எனா--- குறையுள்ளவர் எனக் கூறத்தகாத; துறந்தார்----அகங்கார மமகாரங்களை விட்டவர், துறவி எனலுமாம்; இறவாது-- தாழ்வு இன்றி; சொல்ல---சொல்வதற்கு; அற்றோ--- தன்மையதோ; (தம்மடியார்கள் சிறப்பை எம்பெருமான் மறக்கமாட்டான்)
தமிழிலேயே கணிணியில் எழுத எல்லாருக்கும் ஆசை. ஆனால் எழுதியதை மெயிலும்போது அடுத்தவர் சரியாகப் படித்தாரா, நாம் அனுப்பிய எழுத்துருக்கள் அவரிடம் இருக்கவேண்டுமே என எத்தனையோ கவலைகளால் தவிப்போருக்கு உதவ சென்னை கணியத்தமிழ் நிறுவனம் முன்வந்துள்ளது. "வரியுருமா" என்ற பெயரில் இது வெளியிட்டுள்ள மென்பொருள் எல்லாப் ப்ரச்சினைகளையும் தீர்க்குமாம். "தமிழ் கம்ப்யூட்டர்" ஆகஸ்ட் 15 தேதிய இதழில் படித்தேன். எந்த வடிவிலிருந்தும் எந்த வடிவுக்கும் மாற்றிக் கொள்ளலாமாம். www.kaniyatamil.com சென்று விவரங்கள் காணலாம். என்ன கொஞ்சம் விலை கூட.
அப்புறம், தேசிகன் என்று ஒரு இளைஞர் வலைப்பூவில் நிறைய எழுதிக்கொண்டிருந்தார். அந்த நாள் "கல்கி" இந்தக் கால "சுஜாதா" இருவரையும் ஒன்றுசேர்த்தாற்போல இயல்பான நகைச் சுவையுடன் பல நல்ல விஷயங்களை அளித்துவந்தார். தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை என்னுள் விதைத்தவர் அவரே. யுனிகோடு என்பதை எனக்கு அறிமுகப் படுத்தியதும் அவரது வலைப் பூக்கள்தான் (http;//desikann.blogspot.com) ஏனோ தெரியவில்லை செப் 2005க்குப் பின் அவர் தளம் புதுப்பிக்கப்படவில்லை. அவரைத் தெரிந்தவர்கள் "தமிழ் மண"த்தில் இருக்கவேண்டும், அவர்கள் மூலம் எனது துரோணாச்சார்யரான திரு தேசிகனைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவேண்டும் என்ற ப்ரார்த்தனையுடன் இன்று விடைபெறும்,
திருதிரு
திங்கள், 4 செப்டம்பர், 2006
thiruppullaani maalai
திருப்புல்லாணி மாலை
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து (1வது குறள்)
மூதுரை வள்ளுவர் அகரமுதல எழுத்தெல்லா
மாதிபகவன் முதற்றே உலகென லாயமைத்த
நீதிஉனை அன்றிநீணிலம் உய்யநெறி மற்று உண்டோ
மாதவ! புல்லைத்தலத்தும் என்நெஞ்சத் தும்வாழ்பவனே.
குறிப்பு:--மூதுரை--- பழம்பெருவாக்கு; நெறி--- வழி, உபாயம் என்றபடி ; நீண்ட+நிலம் =நீணிலம்
வான் சிறப்பு (3வது குறள்)
விண்ணன்று விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
துண்ணின்று டற்றும்பசி யெனலாற்புல்லை யூரின்மழை
வண்ணம்சிறந் தவன்வந்து அருளாவிடில் வாடும் உயிர்த்
தண்ணம் பயிரெனற்கு ஐயமுண்டோ இச்சகதலத்தே.
குறிப்பு;-- விண்--மேகம் என ஆயிற்று; (விண்-வானம், நின்று பொய்ப்பின் --- பெய்யவேண்டிய காலத்துப் பெய்யாமல்) விண்ணின்று--- வானத்திலிருந்து; வியன் உலகத்து--- பரந்த உலகத்து; உடற்றும்-- உயிர்களை வருத்தும்; தண்-- குளிர்ந்த; அம்-- அழகிய ; எனற்கு--என்பதற்கு (ஆதிஜகன்னாதன் என்னும் மேகம் இங்கு எழுந்தருளாவிடில் உயிர்களாகிய பயிர் வாடிவிடும் என்றவாறு.)
தமிழிலே படித்துச் சுவைக்க ஒரு அருமையான தளம் உள்ளது தெரியுமோ? இதைப் போலவே அதையும் எண்ணிவிடவேண்டாம். மரபுக் கவிதைகளும் உண்டு. நிகழ்கால அவலங்களை நையாண்டி செய்யும் புதுக் கவிதைகளும் உண்டு. 10நொடிக் கவிதைகளாய் சிரிக்கவைக்கும் பலவும் அங்கு உண்டு. கண்ணைவிட்டு அகலாத வண்ணச் சித்திரங்களும், மேடை முழக்கங்களுமாய்க் கலந்து கட்டும் நல்ல தளம் அது. ஒருமுறை www.geocities.com/magudadeepan தளத்துக்குள் சென்று பாருங்களேன்.
தினம்தினம் எத்தனையோ படிக்கின்றேன். அதில் சிலவற்றை நாளை முதல்(?) கூடுதலாகப் பகிர்ந்து கொள்வேன்.
"திருதிரு"