திங்கள், 1 ஜனவரி, 2007

தத: ச த்வாதஸே மாஸே சைத்ர நாவமிகே திதௌ



இராமனுக்கு பன்னிரண்டு மாதம் கர்ப்பவாசத்துக்குக் காரணம் சொன்ன ஆசார்யர் க்ருஷ்ணன் பன்னிரண்டு மாதம் கர்ப்பவாசத்தைப் பற்றி மேலே சொல்வது என்ன? பார்ப்போமா?
நேற்றைய தொடர்ச்சி.....

" க்ருஷ்ணாவதாரத்திலேயும் தேவகீ கர்ப்பத்தில பன்னிரண்டு மாசமாம். ஆழ்வார் சொல்றார்.

பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அப்பாங்கினால்
என்னிளங்கொங்கை அமுதமூட்டி எடுத்து யான்
பொன்னடி நோவப் புலரியே கானில் கன்றின் பின்
என்னிளம் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே.
(பெரியாழ்வார் திருமொழி 3-2-8)
யசோதை அழறா. காட்டுக்குப் போகணும்கிறான்.குழந்தையை மாடு மேய்க்கறதுக்காக அனுப்பிச்சாளாம். 'சீக்கிரம் கட்டு சாதத்தை கொடுத்து அனுப்பு. மாடு மேய்க்கப் போகட்டும். இடைச்சாதியில் பிறந்து மாடு மேய்க்காட்டா என்ன ப்ரயோஜனம். அனுப்புன்னு', நந்தகோபர் சொன்னார். "ஐயோ! இந்தக் குழந்தையையா காட்டுக்கு அனுப்பறது!"

குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான்
உடையும் கடியன ஊர்ந்து வெம்பரல்களுடை
கடிய வெங்கானிடை காலடி நோவக் கன்றின் பின்
கொடியேன் என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே
(பெரியாழ்வார் திருமொழி3-2-9)

மாடு மேய்க்கறதுக்கா ஒரு கொடை வாங்கிகொடுக்கக்கூடாதா கொழந்தைக்கு. செருப்பு கொடுக்கக்கூடாதா. "செருப்பு" ன்றது பாதரக்ஷையைச் சொல்றதூன்றது ஆழ்வார் பாசுரத்துலதான் அழகா இருக்கு.வேறே எங்கேயும் இல்லை.

குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான்
உடையும் கடியன ஊர்ந்து வெம்பரல்களுடை

பெரிய காடா இருக்கு. சின்ன சின்ன கல்லுகளா இருக்கு. காலை அறுக்கறது. திருவடி நோகும்படியாக காட்டுக்கு அனுப்பினேனே. "எல்லே பாவம்" என்ன என் பாவம் பாருன்னு ! யசோதை. குடையும் செருப்புமா? அவன் (நந்தகோபன்) சொல்றான். மாடு மேய்க்கறதுக்கு குடையும் செருப்பும்னா என்ன விலையாச்சு? இப்போ எல்லாரும் போட்டுக்க ஆரம்பிச்சுட்டா. ஏக விலையா போச்சு. அறவத்தஞ்சு ரூபாய்க்கு கொறஞ்சு செருப்பு கிடையாதாம். செருப்புக்கு இந்த விலையானா .....
"குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான்"

தோழி கேட்கறா. ஏன் இப்படி அழறே?ன்னா.
யசோதை சொல்றா
"பன்னிருதிங்கள் வயிற்றில் கொண்ட அப்பாங்கினால்" பன்னிரண்டு மாசம் என் வயிற்றில் வைத்து சுமந்தேன். அதனால் கொழந்தையோட கஷ்டம் தெரியறது. புருஷாளுக்கு எங்க தெரியறது. அவாளுக்கு என்ன? வருத்தம் தெரியறதான்னா? பன்னிரண்டு மாசம்...

பன்னிருதிங்கள் வயிற்றில் கொண்ட அப்பாங்கினால்
என்னிளங்கொங்கை அமுதமூட்டி எடுத்து யான்
பொன்னடி நோவப் புலரியே கானில் கன்றின் பின்
என்னிளம் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே

அதாவது "பன்னிரு திங்கள்" கர்ப்பவாசம் பண்ணினார் பெருமாள்னு காட்டறார் பெரியாழ்வார். அந்தப் பத்து பாட்டும் நன்றா இருக்கும்.

"பிழைக்கத்தெரியவேண்டாமா? மாடு மேய்க்கத்தெரிய வேண்டாமா? எப்படி ஜீவிக்கறது?"ன்னா. யசோதை சொல்றாளாம். என் கொழந்தைக்கு ஒண்ணும் ஜீவனம் தெரிய வேண்டாம். ஒரு ஆத்துக்கு ஒரு நாள்னா கூட என் கொழந்தை பொழச்சுப்பான். என் குழந்தை பொழைக்கறதுக்கு என்ன வேணும்? க்யூவிலே நின்று குழந்தையை ஆத்துக்கு அழைச்சுண்டு போறாளாம். ஆத்துலேயே இருக்காது. ராமன்தான் ஆத்துலேயே இருப்பர். ராஜாவா, பட்டாபிஷேகத்துக்கு மூத்தவனா, காவல், கட்டு, போக்குவரத்து. அந்தண்டை, இந்தண்டை போறதில்லை. தசரதர் அனுப்பமாட்டார்.திருவாய்ப்பாடியிலே க்யூல நின்று அழைச்சுண்டு போயிடுவாளாம். ராத்திரிதான் திரும்பி ஆத்துக்கு வரும் குழந்தை. அதைத்தான் அங்க சொல்றா.
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்!

நந்தகோபாலனை கேழ்க்கிறோம். க்ருஷ்ணனை நோன்புக்காக. லோபியின் வாசலில் வந்தேனோ? லோபி காலணா கொடுக்காதவன் வாசலிலா வந்து நிற்கிறேன்? அம்பரமே அறம் செய்யும் தண்ணீரே அறம் செய்யும் சோறே அறம் செய்யும் நந்தகோபாலனின் வாசலிலே நிற்கிறோம். லோபி வாசலிலா நிற்கிறோம். லோபி யாருன்னா? தசரதனாம். அடுத்தாப்பல தெரியப்போறதே. ஒருத்தர் வந்து கேட்கிறார். பன்னிரண்டு வயசுக்கப்பறமா. கொடுக்கமாட்டேங்கறாரே! நந்தகோபன் அப்படியில்லையாம். எல்லாராத்துக்கும் அனுப்புவாராம் பிள்ளையை. ஆகையினால ஒரு ஆத்துக்கா போனா சாப்பிட்டு வந்துடுவான் பிள்ளை. அது எப்படின்னு கேட்டா. "என் பிள்ளை வளர்ந்தது எப்படி?ன்னு" சொல்றா யசோதை.

பற்று மஞ்சள் பூசி பாவைமாரொடு பாடியில்
சிற்றில் சிதைந்து எங்கும் தீமை செய்து திரியாமே
சுற்றுத் தூளியுடை வேடர் கானிடை கன்றின் பின்
எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே!

அந்த நாளில கொழந்தைகளுக்கெல்லாம் மஞ்சள் பூசறது. பொண் கொழந்தைகளுக்கு மாத்திரமல்ல. ஆண்குழந்தைகளுக்கும் ஒரு வயசு, ரெண்டு வயசு வரைக்கும் உடம்பெல்லாம் மஞ்சள் பூசறது.மஞ்சள் பூசினா சொறி, சிறங்கு எல்லாம் வராது."பற்று மஞ்சள் பூசி" பெண்களும் மஞ்சள் பூசிப்பா. எல்லாரும் அந்த நாளில மஞ்சள் வாங்கித் தரதூன்னு, சுமங்கலிகளுக்கு மஞ்சள் வாங்கித் தரது. காவேரில தீர்த்தமாடச்ச அந்த மஞ்சளை கல்லிலே தேச்சுட்டு உடம்பெல்லாம் பூசி தேச்சுப்பா. அதுல பத்தற மஞ்சள், பத்தாத மஞ்சள்னு உண்டு. சில மஞ்சள் பத்தாது. பத்தாத மஞ்சள் வாங்கிக் கொடுத்தா "என்ன இப்படி பத்தாத மஞ்சளை வாங்கிக் கொடுத்து ப்ராணனை வாங்கறேளேன்னு அந்த நாளில வெய்வா.அந்த வெசவு இந்த நாளில கிடையாது. இந்த கோபஸ்த்ரீகளுக்கெல்லாம் மஞ்சள் வாங்கிக் கொடுத்திருப்பாளாம். யமுநா நதிக்கரையில ஸ்நாநத்துக்காக வருவாளாம்.க்ருஷ்ணன் அங்கே நிற்பாராம்."கொடுத்திருக்கற மஞ்சள் பத்தறதா இல்லையா பாரு. கல்லுல தேச்சுப் பாரு"ன்பராம். ஒரு கோபி சொல்லுவாளாம்.கல்லுல தேய்ப்பானேன்? இதோ க்ருஷ்ணன் இருக்கானே முதுகுல தேய்ச்சு பார்ப்போம்'ம்பாளாம்.கல்லுல தேய்ச்சுப் பத்தற மஞ்சளா இருந்தா வேஸ்ட்டாத்தானே போறது. அதுக்காக அது பத்தறதா இல்லையான்னு பார்க்கறதுக்காக கண்ணன் முதுகுல தேய்ப்பாளாம். முதுகுல தேய்ச்சுப் பார்க்கற அந்த மஞ்சள் தேய்ச்சே வளர்ந்து போச்சாம் அந்தக் குழந்தை.பத்தறதா இல்லையான்னு தேய்க்கிற மஞ்சளையே தேய்ச்சு வளர்ந்தாப்போல ஆத்துக்கு ஒரு ஆமா சாப்பிட்டு வளர்ந்தா போறது. பத்தறதா இல்லையான்னு sample பார்க்கிற மஞ்சளிலேயே கண்ணன் வளர்ந்துட்டானாம்.பல்பொடி விலைக்கு வந்தா, sample பல்பொடியிலேயே life தள்ளிடுவான். sample கொடு பார்ப்போம்னு வாங்கியே life தள்ளிடுவான். அது மாதிரி பத்தறதான்னு பார்க்கற மஞ்சள் தேய்ச்சே வளந்துட்ட குழந்தைக்கு வ்ருத்திக்கு மாடு மேய்க்கத் தெரிஞ்சு இருக்கணுமா என்ன?ன்னு ஹோன்னு அழறாளாம். காட்டுக்கு மாடு மேய்க்க அனுப்பினேனேன்னு அழறாளாம். "பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட" பன்னிரண்டு மாசம் வயத்துல சுமந்து கண்ணனைப் பெத்தாளாம்.
ஆகையினால பரமபுருஷன் மனுஷ்யனாப் பொறக்கறதுன்னா பனிரண்டு மாசம் வயத்துல இருந்து பிறக்கறதனால புருஷாள், ஸ்த்ரீன்னு ரெண்டு இடத்துல வசிக்கறதுக்கு பதிலா ஒரு இடத்துல வசிச்சுடறேன்னு "தத: ச த்வாதஸே மாஸே" -ராமன் திருத்தாயார் வயத்துல பன்னிரண்டு மாசம் இருந்தாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக