ஸ்ரீ ராமனும், கண்ணனும் பன்னிரண்டு மாதங்கள் தாய் வயிற்றில் கர்ப்ப வாசம் செய்தார்களாம். நமக்குத் தெரிந்ததெல்லாம்கர்ப்பம் என்றால் ஒன்பது மாதம்தான்(நாள் கணக்கில்). ஆனால் அவர்களுக்கு மட்டும் ஏன் பன்னிரண்டு மாதம்?
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச் ரமத்தின் ஒன்பதாவது பீடாதிபதி ஸ்ரீமத் திருக்குடந்தை ஆண்டவன் அருளிய காரணம் காண்போமா! (ஸ்ரீ ரங்கநாத பாதுகா அவ்யய மார்கழி மாத இதழிலிருந்து)
"தத: ச த்வாதஸே மாஸே" பனிரெண்டு மாஸம் கர்ப்பத்தில இருந்தாராம்.
பனிரெண்டு மாஸம் கழிச்சு கௌஸல்யை திவ்ய லக்ஷணத்தோடு கூடிய பகவானைப் பெற்றெடுத்தான்னார். பனிரெண்டு மாஸம் என்ன தனியா கணக்கு? அப்படீன்னா, அதுல ஒரு ஸாஸ்த்ரார்த்தம் சொல்றா. பத்து மாஸம் இருந்தா போறாதா? ஸாவகாஸமா பொறக்கலாம்னு பனிரெண்டு மாஸம் கழிச்சு அவதரித்தாரா?
ஸ்வேதகேதுன்னு ஒருத்தன். ஸாஸ்த்ரம் எல்லாம் வாசிச்சுட்டு ப்ரவாஹணன்ன்ற பாஞ்சால ராஜாகிட்ட போனானாம்.
அந்த ராஜா அஞ்சு கேள்வி கேட்டான். "எல்லாம் வாசிச்சிருக்கேன்னு சொன்னாயே, இந்த ஜீவன் மரணத்தை அடைஞ்சா அது மேல் போகிற இடம் எதுன்னு தெரியுமா? 'அது தெரியாது'ன்னுட்டான். போறவா திரும்பி வராளே அது எந்த ப்ரகாரத்துலே?அது தெரியுமா? "அது தெரியாது"ன்னுட்டான். போறவாளுக்கு தேவயாநம்னும், பித்ருயாநம்னும் ரெண்டு வழி இருக்காமே -- அது வித்யாஸம் கேள்விப்பட்டிருக்கியா?ன்னான்."அது தெரியாது"ன்னான். மேல் லோகத்துக்குப் போகாதவாளைப் பத்தித் தெரியுமா?ன்னான்.---அது தெரியாது'ன்னான். மேல் லோகத்துக்குப் போய் திரும்பி வரானே திரும்பி வரச்சே அஞ்சு எடத்திலே ஆஹூதி பண்ணப்பட்டு வரானே? அது தெரியுமா? வேத்த யதா பஞ்சம்யாம் ஆஹூதாவாப: புருஷவசஸோ பவந்தீதி (சாந்தோக்யம் 5-3-3) ந்ருஸிம்ஹப்ரியாலவந்ததோல்லியோ நாலுமாஸத்துக்கு முன்னாலே.
இங்கேர்ந்து போறவன் இருக்கானே திரும்பி வரச்சே என்னன்னு தேசிகன் எழுதியிருக்கார். தூமாதி மார்க்கம்னு பேர்.புண்யமும் பாபமும் கலந்து வரான். தூமாதிமார்க்கம்னா தூமத்தை முதலாகக்கொண்ட மார்க்கம்.
தூமம் ராத்ரிம் ச பக்ஷம் திமிர கலுஷிதம் தக்ஷிணாவ்ருத்தி மாஸாந்
பஸ்சாத் லோகம் பித்ரூணாம் ககநமபி ம்ருத: சந்த்ரம் அப்யேதி கர்மீ!
ஜல தரபதிம் தேவாதீஸம் ப்ரஜாபதிம் ஆகத:
தரதி விரஜாம் தூரே வாச: தத: பரம் அத்புதம் !!
(கதிசிந்தநாதிகார: ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸார:)
அர்ச்சிராதி மார்க்கத்தாலே வைகுண்டத்துக்குப் போறதுக்கும் சொல்லியிருக்கார். தமிழ்லையும் அதையே பாசுரம் பண்ணியிருக்கார்.
இது வந்து தூமாதி மார்க்கம் "ப்ரத்யாவ்ருத்தௌது சந்த்ராத்", முதல்ல த்யுலோகமான அக்னியிலே ஹோமம் பண்ணப்பட்டு ஸோமன் ஆகிறான். சந்த்ரன்ல இருக்கான். இரண்டாவது அக்நி பர்ஜன்யம். மேகம். அதிலே ஹோமம் பண்ணப்பட்டு வர்ஷம் ஆறான். மழை ஆறான். மூணாவது அக்நி ப்ருதிவி. இதிலே ஹோமம் செய்யப்பட்டு வ்ரீஹியாகிறான். அதாவது தான்யாதிகள் ஆகிறான். நாலாவது அக்நி புருஷன். புருஷனுடைய வயித்திலேர்ந்து ஸ்த்ரீகளுக்குப் போறான். ஸ்த்ரீ அஞ்சாவது அக்நி. அவளிடமிருந்து பொறக்கறான். நாமெல்லாம் பிறக்கிறது இப்படித்தான். நமக்கு வேணாத் தெரியாதே ஒழிய எல்லாரும் பிறக்கிறது இப்படித்தான்னு சொல்றா. அஞ்சு இடத்திலே கீழே தள்ளப்பட்டு வரான். த்யுலோகம் ஒரு அக்நி.பர்ஜந்யம் ஒரு அக்நி. பர்ஜந்யம்னா மேகம். அங்கிருந்து ஜலதாரையா விழுந்து தான்யத்தில் வரான்.தான்யத்தின் வழியா போய் புருஷனுடைய வயத்துக்குப் போறான். புருஷனுடைய வயத்துலேர்ந்து ஸ்த்ரீ வயத்துக்குப் போறான். இப்படி அஞ்சு அக்நியா நிரூபிச்சு இப்படி அஞ்சு இடத்துல இருக்கான்னு சொன்னா. புரியறதா?
இப்படி ஒவ்வொரு இடத்துலேயும் எத்தனை நாள் இருக்கான்னு கேட்டா "அதோ வை கலு துர்நிஷ்ப்ரபததரம்" (சாந்தோக்யம்5-10-6) இந்த வ்ரீஹி-- தான்யத்திலேர்ந்து போறதுக்குத்தான் கொஞ்ச நாளாறது. மத்ததெல்லாம் சீக்ரம். உடனே உடனே வந்துடுவான். மழையிலே வரான். அது தான்யத்துலே போய்ச் சேரது. வ்ரீஹின்னா நம்ம பக்கத்திலே அரிசி, வடக்கே கோதுமை. இப்படி தான்யத்தைச் சாப்பிடறானோல்லியோ. கேழ்வரகு கஞ்சி சாப்டா கேழ்வரகு. அதிலேர்ந்து புருஷன் வயத்துக்குப் போறான். அதுதான் கஷ்டம். ஏன்னு கேட்டா, அந்த தான்யம், நெல் விளையறதுன்னு வெச்சுக்கோ. அந்த நெல்லுலே வர ஜீவன் இருந்தா நம்மாத்துக்கு வர நெல்லுலே வரணும். வழியில் வண்டிலே சிந்தாத இருக்கற நெல்லுக்கு வரணும். இந்த நெல்லு அரிசியாகச்சே அதிலே போயிடாத நம்மாத்துல பானைக்குள்ள வர அரிசிலே வரணும். இந்த அரிசியைக் களையறச்சே ஜலத்துலே அரிசி போறது பார்க்கா; களையச்சே பாதி போறது பார்க்கா அதிலே போகாத இருக்கணும். அதுவும் தளிகை பண்ணின சாதத்துலே வரணும். அதுவும் இவன் பாகத்துலே வரணும். தளிகை பண்ணின சாதத்தை எடுத்து அதிலேயும் மேல் பருக்கை எடுத்துட்டு அப்புறம் ஸம்பந்திகளுக்குப் போடறா. சில இடத்துலே மேல் பருக்கை எடுக்காம....... ப்ருஷனுடைய வயத்துக்கு அப்புறம் புருஷனுடைய வயத்திலேர்ந்து ஸ்த்ரீவயத்துக்கு. அதுதான் உங்களுக்குத் தெரியும்.இந்த புருஷன் வயத்திலே மூணு மாஸம் இருக்கறதா சொல்லியிருக்கு. ஸ்த்ரீகள் வயத்துலே ஒன்பது மாஸம் இருக்கறதா சொல்லியிருக்கு. ஆகப் பனிரெண்டு மாஸம் வயத்துல இருந்தாத்தான் புருஷனா பொறக்கறான். ஸ்த்ரீகள் வயத்துல ஒன்பது மாசம்னு சொல்லியிருக்கு. இதெல்லாம் புண்ய பாபம் பண்ணின கர்மிகள் நமக்குத்தான். பெருமாள் வந்து அவதரிச்சாரானா அவருக்கு அதெல்லாம் கிடையாது.
ராவணன் கேட்டிருக்கான். மத்தவாளாலே அவனுக்கு சாவு இல்லை. அதனால அவனுக்கு மனுஷ்யனாலத்தான் சாவு. மனுஷ்யன்னா கர்பத்துலேர்ந்து வரணும். இங்க மூணு மாசம், அங்க ஒன்பது மாசம் இருந்து வரணும். வந்தாத்தான் அவனைக் கொல்லலாம். இல்லாமல் போன அவனைக் கொல்ல முடியாது. அதுக்காகப் பார்த்தாராம். புருஷாளா இருந்தா என்ன ஸ்த்ரீயா இருந்தா என்ன ? ஒரேயடியா பனிரெண்டு மாசம் இருந்துடுவோம்னு இருந்துட்டாராம். தத: ச த்வாதஸே மாஸே -- ராவணனைக் கொல்றதுக்காக மநுஷ்யாளா பன்னிரண்டு மாசம் கர்ப்ப வாஸம் பண்ணிப் பொறக்கலன்னா ராவணனைக் கொல்ல முடியாது. அதனால் தத: ச த்வாதஸே மாஸே சைத்ர நாவமிகே திதௌன்னு ராமனுடைய அவதாரத்தைச் சொல்றார்.
க்ருஷ்ணனுக்கு ஏன் பன்னிரண்டு மாதம்? ஆசார்யன் திருவாக்கினை நாளை காண்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக