புதன், 6 செப்டம்பர், 2006

திருப்புல்லாணி மாலை

        நீத்தார் பெருமை (2வது குறள்)

குறைத்தாரெனாத் துறந்தார் பெருமைதுணைக் கூறின்வையத்
திறந்தாரை எண்ணிக்கொண்டற்று எனலால் இறவாது உனைச்சேர்
துறந்தார்பெருமை அறிந்தும் என்போலிகள் சொல்லவற்றோ
மறந்தார்கள் நீமறந்தேனுஞ் சொல்லாய்ப்புல்லை வாமனனே.

குறிப்பு:--குறைந்தார் எனா--- குறையுள்ளவர் எனக் கூறத்தகாத; துறந்தார்----அகங்கார மமகாரங்களை விட்டவர், துறவி எனலுமாம்;  இறவாது-- தாழ்வு இன்றி; சொல்ல---சொல்வதற்கு; அற்றோ--- தன்மையதோ; (தம்மடியார்கள் சிறப்பை எம்பெருமான் மறக்கமாட்டான்)

      தமிழிலேயே கணிணியில் எழுத எல்லாருக்கும் ஆசை. ஆனால் எழுதியதை மெயிலும்போது அடுத்தவர் சரியாகப் படித்தாரா, நாம் அனுப்பிய எழுத்துருக்கள் அவரிடம் இருக்கவேண்டுமே என எத்தனையோ கவலைகளால் தவிப்போருக்கு உதவ சென்னை கணியத்தமிழ் நிறுவனம் முன்வந்துள்ளது. "வரியுருமா" என்ற பெயரில் இது வெளியிட்டுள்ள மென்பொருள் எல்லாப் ப்ரச்சினைகளையும் தீர்க்குமாம். "தமிழ் கம்ப்யூட்டர்" ஆகஸ்ட் 15 தேதிய இதழில் படித்தேன். எந்த வடிவிலிருந்தும் எந்த வடிவுக்கும் மாற்றிக் கொள்ளலாமாம். www.kaniyatamil.com சென்று விவரங்கள் காணலாம். என்ன கொஞ்சம் விலை கூட.

           அப்புறம், தேசிகன் என்று ஒரு இளைஞர் வலைப்பூவில் நிறைய எழுதிக்கொண்டிருந்தார். அந்த நாள் "கல்கி" இந்தக் கால "சுஜாதா" இருவரையும் ஒன்றுசேர்த்தாற்போல இயல்பான நகைச் சுவையுடன் பல நல்ல விஷயங்களை அளித்துவந்தார். தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை என்னுள் விதைத்தவர் அவரே. யுனிகோடு என்பதை எனக்கு அறிமுகப் படுத்தியதும் அவரது வலைப் பூக்கள்தான் (http;//desikann.blogspot.com)  ஏனோ தெரியவில்லை செப் 2005க்குப் பின் அவர் தளம் புதுப்பிக்கப்படவில்லை. அவரைத் தெரிந்தவர்கள் "தமிழ் மண"த்தில் இருக்கவேண்டும், அவர்கள் மூலம் எனது துரோணாச்சார்யரான திரு தேசிகனைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவேண்டும் என்ற ப்ரார்த்தனையுடன் இன்று விடைபெறும்,
திருதிரு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக