திங்கள், 4 செப்டம்பர், 2006

thiruppullaani maalai

நினைத்தபடி தினம் தொடரமுடியவில்லை. இதுவரை யாரும் படித்ததாகவும் தெரியவில்லை. எனவே யாருக்கும் ஏமாற்றமும் இருந்திருக்காது. இந்தக் காலத்தில் யாராவது உன் பழம் பஞ்சாங்கத்தைப் படித்து ரசிப்பார்களா என சில நண்பர்கள் தெரிவிக்கும் கருத்திலும் உண்மை உண்டு. ஆனாலும் ஒரு ஆசை. தமிழ்கூறும் நல்லுலகில் யாராவது ஓரிருவராவது வள்ளுவன்பால் கொண்டபிரியத்துக்காகவாவது இதைத் தொடர்ந்து படிக்கமாட்டார்களா, அப்படிப் படித்து இதில் சரியானபடி பொருள் தெரியாமல் உள்ள பலவற்றுக்கு அர்த்தம் கிடைக்குமா என்ற நினைப்பால் தொடர்கின்றேன்.
திருப்புல்லாணி மாலை
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து (1வது குறள்)
மூதுரை வள்ளுவர் அகரமுதல எழுத்தெல்லா
மாதிபகவன் முதற்றே உலகென லாயமைத்த
நீதிஉனை அன்றிநீணிலம் உய்யநெறி மற்று உண்டோ
மாதவ! புல்லைத்தலத்தும் என்நெஞ்சத் தும்வாழ்பவனே.
குறிப்பு:--மூதுரை--- பழம்பெருவாக்கு; நெறி--- வழி, உபாயம் என்றபடி ; நீண்ட+நிலம் =நீணிலம்

வான் சிறப்பு (3வது குறள்)
விண்ணன்று விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
துண்ணின்று டற்றும்பசி யெனலாற்புல்லை யூரின்மழை
வண்ணம்சிறந் தவன்வந்து அருளாவிடில் வாடும் உயிர்த்
தண்ணம் பயிரெனற்கு ஐயமுண்டோ இச்சகதலத்தே.
குறிப்பு;-- விண்--மேகம் என ஆயிற்று; (விண்-வானம், நின்று பொய்ப்பின் --- பெய்யவேண்டிய காலத்துப் பெய்யாமல்) விண்ணின்று--- வானத்திலிருந்து; வியன் உலகத்து--- பரந்த உலகத்து; உடற்றும்-- உயிர்களை வருத்தும்; தண்-- குளிர்ந்த; அம்-- அழகிய ; எனற்கு--என்பதற்கு (ஆதிஜகன்னாதன் என்னும் மேகம் இங்கு எழுந்தருளாவிடில் உயிர்களாகிய பயிர் வாடிவிடும் என்றவாறு.)
தமிழிலே படித்துச் சுவைக்க ஒரு அருமையான தளம் உள்ளது தெரியுமோ? இதைப் போலவே அதையும் எண்ணிவிடவேண்டாம். மரபுக் கவிதைகளும் உண்டு. நிகழ்கால அவலங்களை நையாண்டி செய்யும் புதுக் கவிதைகளும் உண்டு. 10நொடிக் கவிதைகளாய் சிரிக்கவைக்கும் பலவும் அங்கு உண்டு. கண்ணைவிட்டு அகலாத வண்ணச் சித்திரங்களும், மேடை முழக்கங்களுமாய்க் கலந்து கட்டும் நல்ல தளம் அது. ஒருமுறை www.geocities.com/magudadeepan தளத்துக்குள் சென்று பாருங்களேன்.
தினம்தினம் எத்தனையோ படிக்கின்றேன். அதில் சிலவற்றை நாளை முதல்(?) கூடுதலாகப் பகிர்ந்து கொள்வேன்.
"திருதிரு"


2 கருத்துகள்:

  1. அன்பின் திரு ரகு ஐயாஅவர்களுக்கு,
    அருமையாக எழுதி இருக்கின்றீர்கள், எனக்கு இப்படி திருக்குறளுக்கு ஒரு மாற்றுப்பொழிப்புரை இருப்பதே தெரியாது இவ்வளவு நாட்களாக, மாதவனின் மலரடியால் மலர்ந்தேன், இருப்பினும் ஒரு சிறு suggestion ( தமிழில் என்ன? :( )குரளுக்கோ, இதுபோன்ற பாக்களுக்கோ விளக்கம் கூறும்போது, அருஞ்சொற்பொருள் போல வழங்காமல், முழுப்பாடலுக்கும் விளக்கம் அளித்தால் அனைவரும் படித்து மகிழ்வோமே ஐயா? இனி நாளை முதல் வந்து தங்களின் தளத்தினை ஒருமுறையாவது கண்டு தமிழமுது பருகிச்செல்கின்றேன் என்று கூறிக்கொள்கின்றேன்.
    வணக்கமுடன்,
    ஸ்ரீஷிவ்,...

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள திரு ஸ்ரீஷிவா,

    வலையின் முதல் பகுதி வராததால் ஒரு சிறு குழப்பம். கிடைத்துள்ள நூலுக்கு சரியான விளக்கம் இல்லை. நூலின் பதிப்பாசிரியர் கொடுத்துள்ள சிறு குறிப்புகளையே அடியேனும் அப்படியே கொடுத்து வருகின்றேன். ஏற்கனவே நான் கூறியபடி தமிழ்வல்லார் கண்பட்டு, இந்நூலுக்கு நல்ல விளக்கங்கள் கிடைத்தால் அதுதான் இந்த வலைப்பூவின் வாயிலாக நான் பெறும் பேறு.
    தமிழ்மணம் உறுப்பினர்கள் யாராவது கண்டிப்பாய் உதவுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
    நன்றி
    ரகுவீரதயாள்

    பதிலளிநீக்கு