சனி, 6 ஜூன், 2009

அஹங்காரம் ஸர்வ நாசம்.







இந்த மாத "தாம்ப்ராஸ்" இதழில் வந்துள்ள ஒரு உண்மைக் கதை அஹங்காரம், மமதை ஆகியவை எந்த அளவு ஒருவனைச் சீரழித்து இழிவு படுத்தும் என்பதற்கு ஒரு அருமையான பாடமாக அமைந்துள்ளதை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். அதை தட்டச்சிட முடியவில்லை. எனவே படங்களாகத் தந்துள்ளேன். படிக்க சற்று சிரமமாக இருக்கலாம். மன்னிக்க வேண்டுகிறேன்.

வெள்ளி, 5 ஜூன், 2009

சரணாகதிமாலை

சரணாகதிமாலை முன்னுரை தொடர்ச்சி
ப்ராதிகூல்யவர்ஜநமாவது -- ப்ரதிகூலாசரணம் பண்ணக் கடவேனல்லேன் என்று அபிஸந்தி பண்ணுதல். அதுவும் இருவகைப்படும். ப்ரதிகூலாபிஸந்தி நீக்குகைமாத்திரமும், ப்ராதிகூல்ய வர்ஜநம் செய்யக்கடவேன் என்று ஸங்கல்பிக்கையும். இவ்விரண்டும் முன்பு போலத் தனித்தனி ஸர்வேச்வரன் விஷயத்திலும், ஸர்வபூத விஷயத்திலும் என்று இரண்டு வகை. ஆகையாலே, பகவதநபிமதவர்ஜநம், ஸர்வபூதா நபிமதவர்ஜநம், பகவதநபிமத வர்ஜந ஸங்கல்பம், ஸர்வபூதாநபிமத வர்ஜந ஸங்கல்பம் என்று இவ்வங்கம் நான்கு வகையாகிறது. இதற்குக் காரணம் முன்பு சொன்ன சேஷத்வஜ்ஞானமே, ப்ராதிகூல்ய வர்ஜந ஸங்கல்பம் அங்கமாகும்போது சேஷத்வஜ்ஞானத்தோடு கூடிய மனத்தினால் அநுஷ்டானத்தில் ஸங்கல்பிக்க வேண்டும். ப்ராதிகூல்யவர்ஜநாபிஸந்தி மாத்ரம் அங்கமாகும்போது மனத்தில் சேஷத்வஜ்ஞானமும் நிஷேத சாஸ்த்ர பர்யாலோசனையும் கூடுகையாலே ப்ரதிகூலாபி ஸந்தியை நீக்கிவைக்கும். இதற்கு விரோதியாவது அசாஸ்த்ரீய ஸேவநம். இதற்கு பலமும் இது அங்கமாம் வழியும் முன்பு சொன்னதேயாகும்.
கார்ப்பண்யமாவது -- ஸ்வா பேக்ஷித பலத்தைப் பெறுகைக்கு வேறோர் உபாயமில்லாமையும் வேறொரு ரக்ஷகன் இல்லாமையும். இது இங்கு சொன்ன ஆகிஞ்சந்யம் அநந்ய கதித்வம் இவைகளை அநுஸந்தித்தலும், ஆகிஞ்சந்யாதிகளை அநுஸந்திப்பதால் வரும் கர்வஹாநி (செருக்கு நீங்கல்)யும், ஸர்வேச்வரனுக்குத் தன் விஷயத்தில் க்ருபை அதிகமாகும்படி தழுதழுத்து அழுதல், பற்களைக் காட்டல்களோடு திருவடிகளில் விழுதல் , கைகூப்பி நிற்றல் முதலிய க்ருபண வ்ருத்தியும் என்று மூன்று வகையாயினும், இம்மூன்றும் ஸமநியதமாகையாலே ஒன்றை அநுஷ்டித்தலாலே மற்ற இரண்டும் அநுஷ்டிதமாகுமாகையாலே இம் மூன்று வகையில் ஏதாவது ஒன்றை அநுஷ்டிப்பதே போதும். இதற்குக் காரணம் தான் அல்பசக்தியென்றும், ஈச்வரனுக்கு பரதந்த்ரன் என்றும் தெளிகை. இதற்கு பலம் வேறுபாயங்களில் ப்ரவர்த்தியாமை. இதற்கு விரோதி தான் ஸ்வதந்த்ரன் என்று நினைத்தல். அப்படி இவன் நினைத்தானாகில் தான் ஸமர்த்தன் என்று ப்ரமித்து உபாயாந்தரங்களில் ப்ரவர்த்திக்கவும் கூடும். ஆகையாலே ஸர்வேச்வரன் ஒருவனே உபாயம் என்று அத்யவஸிக்கையாகிற ப்ரபதநம் கைகூடாது ஒழியும். ஆகையாலே இவ்வழியாயிது அங்கமாகிறது. இதன் பிரிவுகள் மூன்றில் என்கையில் உபாயமில்லை என்று அநுஸந்திப்பது என்னும் கார்ப்பண்யம் கீழ்ச்சொன்ன காரணமான அல்பசக்தித்வ பகவதேக பரதந்த்ரத்வஜ்ஞானத்தோடும் அநுபலப்தியோடும் சேர்ந்த ப்ரத்யக்ஷ ப்ரமாணத்தால் உண்டாகின்றது. கர்வஹாநியென்னும் கார்ப்பண்யமானது, ஆகிஞ்சந்யாநுஸந்தாநத்தாலே உண்டாகின்றது. க்ருபண வ்ருத்தியாகிற கார்ப்பண்யமானது, இவன் ஸம்ஸாரத்திற்கு மிகவும் பயந்தவனாகையாலும், அகிஞ்சநனாகையாலும், ரக்ஷிக்க வல்லனாய் பரமதயாளுவான ஸர்வேச்வரன் விஷயத்தில்தானே உண்டாகிறது.
மஹாவிச்வாஸமாவது -- ஸர்வேச்வரன் நாம் செய்யும் வ்யாபாரத்தை எதிர்பாராமலே (நிரபேக்ஷனாய்) ரக்ஷிப்பவன் என்கிற அத்தியவஸாய (திடநிச்சய)மாம். ப்ரபதநாநுஷ்டாநத்திற்குப் பின்பு ப்ருஹஸ்பதி போன்ற மஹான்கள் யுக்திகளாற் கலக்கினாலும் கலங்காமலும் அணுவேனும் ஸம்சயம் உதியாமலும் இருக்கும்படிக் கேதுவாகத்தக்கதாய் ப்ரபதனம் பண்ணும்போது உண்டாகும் விச்வாஸம் என்று நிக்ஷேபரக்ஷை என்னும் கிரந்தத்தில் நிர்ணயித்துள்ளது. இதற்குக் காரணம் மறுக்கவொண்ணாத புருஷகாரயோகமும், ஒழிக்க வொழியாத சேஷ சேஷிபாவ ஸம்பந்தயோகமும், நிருபாதிகமான காருண்ய வாத்ஸல்யாதி குணயோகமும், வேறொரு ஸஹகாரியை எதிர்பாராதிருத்தலும், தண்ணியரான (அகிஞ்சநரான)வர்களுடைய புருஷார்த்தமே தன் புருஷார்த்தமாய் நினைப்பதுமாகிற எம்பெருமானது ஸ்வபாவத்தை அநுஸந்தித்தல். இதற்கு உபயோகம் ஸர்வஜ்ஞனும் ஸர்வசக்தனுமான ஸர்வேச்வரன் அநந்தமான அபராதங்களையுடைய நமக்குக் கிட்ட எளியனாவனோ? அவரவர் கர்மங்களுக்கு ஏற்றபடி பலங்கொடுப்பவன் மோக்ஷ விரோதியான பல தீவினைகளையுடைய நமக்கு அளவில்லாத பலத்தைக் கொடுப்பனோ? இதரர் செய்யும் உபகாரத்தை அபேக்ஷியாதவன் அல்ப வ்யாபாரத்துக்குப் பலம் கொடுப்பானோ? தேவதாந்தரங்கள் போலே சீக்ர பலப்ரத னல்லனானவன் நாம் கோரின காலத்திலே பலங் கொடுப்பனோ? என்று பிறக்கும் சங்கைகள் ஐந்தும் நீங்குகை. இச்சங்கைகள் உண்டானால் ப்ரபதநம் கைகூடாது. இவ்வழியால் இது அங்கமாகிறது. இதற்கு விரோதி ஈச்வரன் உபேக்ஷிப்பவன், கர்மாநு குணமாகப் பலங் கொடுப்பவன் என்பவை போன்றவையும் கீழ்ச்சொன்ன சங்கைகள் உதிக்க ஹேதுக்களுமான ஈச்வரனது ஸ்வபாவங்களை அநுஸந்தித்தல். கீழ்ச்சொன்ன புருஷகார யோகம் முதலியவைகளை அநுஸந்திப்பதனால் இச்சங்கைகள் ஐந்தும் நீங்கி ப்ரபதநம் கைகூடும். சங்கைகள் நீங்கும்படியாவது -- ஈச்வரன் ஸர்வஜ்ஞனாகையாலே, நாம் செய்த அபராதங்களை அறிந்தவனாயும், ஸர்வசக்தனாகையாலே நம்மை தண்டிக்க சக்தனாயு மிருந்தாலும் தனக்கு ப்ரியதமையான பிராட்டியாகிற மறுக்க வொண்ணாத புருஷகாரத்தாலே மனக்கலக்கம் நீங்குகையாலே அந்தப்புர பரிஜனங்கள் பெரிய குற்றம் செய்தாலும், தன் பத்நிக்காக அதை ராஜா மறந்துவிடுவது போலே நம் அபராதங்களையும் மறந்தவன் போல் க்ஷமித்து நிற்பவனாகையாலே நமக்குக்கிட்ட எளிதாவன் என்றும், நற்கருமங்களுக்கு நற்பயனும், தீக்கருமங்களுக்குத் தீயபயனும்,பெரிய கருமங்களுக்குப் பெரிய பலனும், சிறிய கருமங்களுக்குச் சிறிய பலனும் என்று அவர் அவர் கர்மங்களுக்கு ஏற்றபடி பலன் கொடுப்பவனேயானாலும், ஒழிக்க வொண்ணாத சேஷ சேஷிபாவாதி சம்பந்தம் உண்டாகையாலேயும், பலம் நமக்குத் தாயம் போல் கிடைக்கக் கடமைப்பட்டிருப்பதனாலேயும், இப் ப்ரபதனம் என்னும் வ்யாஜ மாத்திரத்தாலே ப்ரஸந்தனாய் அளவில்லாத பலத்தையும் தரும் என்றும், இதரர் செய்யும் உபகாரத்தில் நிரபேக்ஷனானாலும் காருணிகனான ராஜா அல்பவ்யாஜத்தாலே வசமாவது போலே நிருபாதிகமான காருண்யம் வாத்ஸல்யம் முதலிய குணங்களை உடையவனாகையாலே இவன் செய்யும் சிலவான வ்யாபாரங்களைப் பரமோபகாரமாக ஆதரித்து க்ருதஜ்ஞனாய்ப் பலந்தரும் என்றும், தேவதாந்தரங்களைச் சிறிது அதிகாரிகளுக்குச் சில பலங்களை த்வரையில் கொடுக்கும்படி நியமித்து வைத்துத் தான் விளம்பித்துப் பலந்தருமவனேயானாலும், அகிஞ்சனன் செய்யும் சரணாகதி விஷயத்தில் "வேண்டாது சரணநெறி வேறோர் கூட்டு" என்கிறதுபோல ஸஹகாரியை எதிர்பாராத தன் ஸங்கல்பத்தாலே இவன் கோலின காலத்திலே பலங்கொடுக்கும் என்றும், "ஒத்தார் மிக்காரை யிலையாய மாமாயா" என்கிறபடியே ஸமாதிக ரஹிதனேயாகிலும் தான் ஸ்வதந்த்ரனாகையாலும் நம் புருஷார்த்தத்தைத் தன் புருஷார்த்தமாக நினைப்பவனாகையாலும், ராஜாக்கள் தன் பிள்ளைகளுக்கும் கிளி முதலிய பக்ஷிகளுக்கும் துல்யமாகப் பாலூட்டுவது போலவும், "புற்பா முதலாப் புல்லெறும்பாதி யொன்றின்றியே, நற்பால யோத்தியில் வாழுஞ் சராசரம் முற்றவும், நற்பாலுக்குய்த்தனன்" என்கிறபடியே கோசல தேசத்தில் உள்ள புல் பூண்டு முதலாக எல்லாச் சேதனா சேதனங்களுக்கும் மோக்ஷம் கொடுத்தது போலவும், நமக்கும் அளவில்லாப் பெரும் பலந்தரும் என்றும் இம்முறையே கண்டு கொள்வது. இப் புருஷகாராதிகள் ஐந்தும் ஸதாசார்யோபதேசத்தாலே அறிய வேண்டும். இம் மஹா விச்வாஸம் முதலில் சாஸ்த்ரம் ப்ரமாணம் என்னும் நிச்சயத்தால் பிறக்கும் ; மேன்மேல் அந்த ஸம்ஸ்காரத்தாலும் கீழ்ச்சொன்ன சங்காபஞ்சக நிவ்ருத்தி ஹேதுகரமான நிச்சயத்தாலும் ப்ரபதனாநுஷ்டாந காலத்தில் அதுபோலவே மஹா விச்வாஸம் பிறக்கும். ஸர்வேச்வரன் இவனிடத்தில் ஒரு வ்யாஜத்தை வையாமல் ரக்ஷிக்குமானால் வைஷம்யமும் நைர்க்ருண்யமும் வரும் என்பதற்காக ப்ரபத்தி என்று ஒரு வ்யாஜத்தை வைத்து ரக்ஷிக்கிறான். ஆகையாலே நாம் செய்யும் ப்ரபதநம் ஒரு வ்யாஜ மாத்ரம் என்று தெளியவேண்டும். சாஸ்த்ரம் ப்ரமாணம் என்று தெளிந்த போதே ஸம்சயம் நீங்குமாகையாலே அவன் விச்வாஸத்தை உடையவன் ஆகிறான்.அவன் ப்ரபதநம் செய்ய அதிகாரி. ஆகையாலே விச்வாஸம் அங்கமானால் போதுமே, விச்வாஸம் பெரிதாயிருக்க வேண்டும் என்பது என்னவெனில்? தான் மஹாபராதியாய் அபேக்ஷிக்கும் பலம் மஹத்தரமாய் அதற்காகச் செய்யும் உபாயம் லகுவாயிருப்பதனாலே அவ்விஷயமாய் வரும் சங்கைகளை அதற்குத் தக்கபடி நீக்கிக் கொள்ள வேண்டியது கடமையாயிருக்கிறதாகையாலே மஹாவிச்வாஸம் அங்கமாக வேண்டியதாயிற்று என்று ந்யாஸ விம்சதியில் அருளிச்செய்யப் பெற்றுள்ளது. இதற்கு விரோதியாகக் கீழ்ச்சொன்ன ஈச்வரஸ்வபாவஜ்ஞானம் அநுஷ்டான காலத்தில் உண்டாகுமானால் இம் மஹாவிச்வாஸம் அங்கமாகவேண்டும். இல்லையானால் முன் சொன்னபடி விச்வாஸமே அங்கமாகும். அப்போது மஹத்வம் உபயுக்தம் அன்று. ஆனால் பின்காலத்தில் சங்கைகள் பின் நாடாதபடி இவ்விச்வாஸம் திடமாய் நிலை நிற்கும் விஷயத்தில் உபயோகிக்கின்றது, என்பது ஸாராம்சம்.

புதன், 3 ஜூன், 2009

சரணாகதிமாலை

ந்யாஸவித்யையாவது -- ஆநுகூல்ய ஸங்கல்பம், ப்ராதிகூல்ய வர்ஜநம், கார்ப்பண்யம், மஹாவிச்வாசம், கோப்ருத்வ்வரணம் என்னும் இவ்வைந்து அங்கங்களோடே கூடினதாய், சரணாகதி என்றும், நிக்ஷேபம் என்றும், த்யாகம் என்றும், ப்ரபத்தி என்றும் சொல்லப் பெறுகிற ஓர் வித்யையாம். அஷ்டாங்கயோகம் என்றது போல் இவ்வங்கங்கள் ஐந்துடன் கூடின அங்கியான பரந்யாஸத்தை ஷடங்கயோகம் என்று சொல்லுவார்கள். இது ஸர்வாதிகாரம். வர்ணாச்ரம தர்மம் இதற்கு அங்கமன்று. ஸக்ருத்கர்த்தவ்யம். அந்திம ஸ்மிருதி அபேக்ஷிதமன்று. இந்த ஸரீரம் விட்டபோதே பலம்ஸித்தம் உபாஸநத்தில் சக்தி யில்லாமையும், அதற்கேற்ற ஜ்ஞானமில்லாமை யும், சாஸ்த்ராநுமதமான ஜாதி குணாதிகளில்லாமையும், பலத்தைப் பெறக் கால விளம்பம் பொறாமையும் என்னும் இந்நான்கும் தனித்தும் ஒன்றிரண்டுமூன்று களுடன் சேர்ந்தும் ப்ரபத்திக்கு அதிகாரம் ஆகும். அந்த அதிகாரமாவது 15 பிரிவாகிறது. அசக்தி மாத்திரம் 1. அஜ்ஞாந மாத்திரம் 2. சாஸ்த்ரா நநுமதி மாத்திரம். 3. விளம்பம் பொறாமை மாத்திரம் 4. அசக்தியும் அஜ்ஞாநமும் சேர்ந்து 5. அசக்தியும் சாஸ்த்ரா நநுமதியும் சேர்ந்து 6. அசக்தியும் விளம்பம் பொறாமையும் சேர்ந்து 7. அஜ்ஞாநமும் சாஸ்த்ரா நநுமதியும் சேர்ந்து 8. அஜ்ஞாநமும் விளம்பம் பொறாமையும் சேர்ந்து 9. சாஸ்த்ரா நநுமதியும் விளம்பம் பொறாமையும் சேர்ந்து 10. அசக்தியும், அஜ்ஞாநமும், சாஸ்த்ரா நநுமதியும் சேர்ந்து 11. அசக்தியும், அஜ்ஞாநமும் விளம்பம் பொறாமையும் சேர்ந்து 12. அசக்தியும், சாஸ்த்ராநநு மதியும் விளம்பம் பொறாமையும் சேர்ந்து 13. அஜ்ஞாநமும், சாஸ்த்ராநநு மதியும் விளம்பம் பொறாமையும் சேர்ந்து 14. அஜ்ஞாநமும் அசக்தியும் சாஸ்த்ராநநு மதியும் விளம்பம் பொறாமையும் இந்நான்கும் சேர்ந்து 15. இப்படி இந்நான்கும் சேர்ந்தால் ஒன்று; தனித்தனி நான்கு; இரண்டிரண்டு சேர்ந்தால் ஆறு ; மும்மூன்று சேர்ந்தால் நான்கு ; ஆகப் பதினைந்து ஆகிறது. இவைகளில் எந்த விதமான அதிகாரம் உடையவனானா லும் ந்யாஸவித்யையில் அதிகாரிதான்.
ஆழ்வார், ஸ்ரீமந்நாதமுனிகள், ஆளவந்தார், ஸ்ரீபாஷ்யகாரர் முதலிய பூர்வாசார்யர்கள் சக்தி, ஜ்ஞாநம், சாஸ்த்ராநநுமதி இம்மூன்றும் உடையவர்களாயிருந்தும் விளம்பம் பொறாமையாலே ப்ரபத்தியில் இழிய வேண்டி வந்தது. ஸ்ரீமந்நாதமுனிகள் யோகம் செய்தருளினதாகச் சொல்வதுண்டு. அது மோக்ஷோபாயமான பக்தி யோகம் அன்று. பகவதநுபவ ரூபமாகையாலும், ஸ்ரீராமாயணாதி பாராயணம் போலே சித்த ஸந்தோஷஹேதுவானகாலக்ஷேப மாத்ரமாகையாலும், த்வய மர்த்தாநுஸந்தாநேந ஸஹஸதைவம் வக்தா என்கிறபடியே த்வய வசநம் போலே பலரூபம்.
ஆநுகூல்ய ஸங்கல்பமாவது -- இனி நான் அநுகூலனாய் நடந்துகொள்ளக் கடவேன் என்று அபிஸந்தி பண்ணுதல். அது இருவகைப்படும். எம்பெருமான் விஷயத்தில் ஆநுகூல்ய ஸங்கல்பமும், ஸர்வபூதங்கள் விஷயத்தில் ஆநுகூல்ய ஸங்கல்பமும். இதற்குக் காரணம் இவன்தான் ஸர்வேச்வரனுக்கு ஸர்வப்ரகாரத்தாலும், சேஷபூதன் என்று தெரிந்திருக்கை. சேஷபூதன் சேஷிக்கு அநுகூலனாயிருக்க வேண்டியதுபோலே ஸர்வபூதங்களும் தன்னைப்போலே ஸர்வேச்வரனுக்கு சேஷபூதங்களென்றும் அவனுக்கு சரீரபூதங்களென்றும் இவன் அறிந்திருக்கையாலே சேஷியின் சரீரத்துக்கும் இவன் அநுகூலனாயிருக்கவேண்டியது கடமை. இதற்கு பலம்தான் ஈச்வராஜ்ஞை யைக் கடந்தானாகாமை. இதற்கு விரோதி பூதத்ரோஹம். இவன் சேஷியின் ஆஜ்ஞையைக் கடந்தானாகில் "என்னை ஈச்வரன் தண்டிப்பனேயல்லது அங்கீகரியான்" என்று தெரித்து கொள்வன் ; அதனால் ப்ரபத்தியில் ப்ரவர்த்தியான் ; ஆகையால் இவ்வழியாம் இது ப்ரபத்திக்கு அங்கம் ஆகிறது.

இரண்டு நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் தொடர்வேன்.



சரணாகதி மாலை

ஒவ்வொரு முறையும் திருவல்லிக்கேணித் தமிழ்ச் சங்க நூல்களை அறிமுகப் படுத்தும்போதெல்லாம் நூல்களின் சொற்சுவை பொருட்சுவைக்கு ஈடாக அமையும் பந்தல்குடி திருமலைஐயங்காரின் முன்னுரைகளையும் இட நினைப்பதுண்டு. ஆனாலும் நூல்கள் முன்னுரிமை பெற்று அந்த நினைப்பு இதுவரை நினைப்பாகவே இருந்து விட்டது. ஆனால் இன்றுமுதல் தொடங்கும் ந்யாஸதசகத்தின் தமிழ்விரிவுரைக்கு அவர் அளித்துள்ள அற்புதமான முன்னுரை அனைவரும் அனுபவிக்க வேண்டிய ஒன்று என்பதால் முன்னுரையை முதலில் இடுகிறேன். அவ்வப்போது அவர் மேற்கோள் காட்டும் பல நூல்கள் அவர் எப்படிப் பட்ட அறிஞராக விளங்கியிருக்கிறார் என்பதை நாம் அறியச் செய்வன. இனி நூலுக்குள்..

ஸ்ரீ:
சரணாகதி மாலை

முகவுரை

வாழி யருளாளர் வாழியணி யத்திகிரி
வாழி யெதிராசன் வாசகத்தோர் -- வாழி
சரணா கதியென்னுஞ் சார்வுடன் மற்றொன்றை
அரணாகக் கொள்ளாதா ரன்பு.
[ -- தேசிகமாலை, மெய்விரத நன்னிலத்து மேன்மை.1]

உலகில் உள்ள ஒவ்வொரு சேதனனும் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டுவன மூன்று.

அவையாவன, தத்வம், உபாயம், புருஷார்த்தம் என்பன. அவற்றுள் தத்வமாவது -- ப்ராமாணிகமான பதார்த்தம். அது சித்து என்றும், அசித்து என்றும், ஈச்வரன் என்றும் மூன்று பிரிவானது என்று வேதங்கள் சொல்லும். சித்து என்பது ஆத்மா. அசித்து என்பது ஞானம் இல்லாதது. அது பிரகிருதி, காலம், சுத்த ஸத்வம் என்று மூன்று பிரிவு பெற்றது. ஈச்வரன் என்பான் ஸர்வ ஜகத்காரண பூதனான நாராயணன். இவற்றின் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிவதால், ப்ரக்ருதியே ஆத்மா என்றும், ஜீவன் ஸ்வதந்த்ரன் என்றும், ஜீவனும் ஈசுவரனும் ஒன்றே என்றும் உண்டாகும் கலக்கங்கள் நீங்கும்.
புருஷார்த்தமாவது -- புருஷனால் அர்த்திக்கப்படும் பலம். அர்த்தித்தல் -- யாசித்தல், அபேக்ஷித்தலாம். அது த்ரிவர்க்கம் என்றும், அபவர்க்கம் என்றும் இரண்டு வகை. அறமும், பொருளும், இன்பமும் (தர்மார்த்த காமங்கள்) த்ரிவர்க்கம் எனப்படும். அபவர்க்கமாவது -- வீடு, (மோக்ஷம்) எவ்விதத் துக்கமும் இல்லாத அளவு இறந்த ஆநந்தமே மோக்ஷம். அதாவது, பிரகிருதி சம்பந்தம் அற்றதொரு தேச விசேஷத்திலே அர்ச்சிராதி கதியால் சென்று,"அனைத்து உலகும்உடையஅரவிந்தலோசனனை"என்கிறபடியேஸர்வலோகாதீச்வரனாய், "ஒண்டொடியான் திருமகளும் நீயுமே நிலா நிற்பக், கண்டசதிர் கண்டு ஒழிந்தேன் அடைந்தேன் உன்திருவடியே" என்கிறபடியே, லக்ஷ்மீ விசிஷ்டனாய்ப் பரப்ரஹ்ம ரூபியான நாராயணனைக் கிட்டி, எக்காலத் திலும் ஸம்ஸாரகந்தம் அற்றவர்களான நித்யசூரிகளோடு ஒக்க, ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தோசித ஸர்வவித கைங்கர்ய பர்யந்தமான பரிபூர்ண ப்ரஹ்மாநுபவம் செய்கை. இது மீட்சி (புநராவ்ருத்தி) இல்லாத பேரடிமையாம். த்ரிவர்க்கமானது நச்வரமானதும், அளவு உள்ளதும், துக்கம் கலந்ததுமாகையாலும், மோக்ஷம் அநந்த ஸ்திரபலமும், துக்கம் கலக்காத கேவலாநந்தம் ஆகையாலும், அவற்றின் ஸ்வரூபத்தை அறிந்து சேதநன் மோக்ஷத்தையே புருஷார்த்தமாகத் தெளிந்து கொள்வன்.

உபாயமாவது -- தான் கோரிய பலத்தைப் பெறுவதற்காகத்தான் செய்யவேண்டிய கார்யம். பரமபுருஷார்த்தமான மோக்ஷத்தைப் பெற விரும்புகிறவனுக்கு உபாஸநமும், ப்ரபதநமும் உபாயம் என்று சாஸ்திரங்கள் கூறும். உபாஸநமாவது -- இயமம், நியமம், ஆஸநம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணை, த்யாநம் என்னும் ஏழு அங்கங்களுடன் கூடிய பக்தி யோகம். இவ்வங்கம் ஏழுடன் இந்த அங்கியைச் சேர்த்து அஷ்டாங்க யோகம் என்பர். இது ஸத்வித்யை, தஹரவித்யை,வைச்வாநர வித்யை, பஞ்சாக்னிவித்யை முதலாகப் பல பிரிவானது. ஜீவவதை செய்யா(அஹிம்ஸை), மெய்மை(ஸத்தியம்), கள்ளாமை (அஸ்தேயம்), பிறர்பொருள் விரும்பாமை, இவைஇயமம் எனப்படும். தவம், தூய்மை, தத்துவ நூலோர்தல், மனமுவந்திருத்தல், தெய்வம் வழிபடல் இவை நியமம் என்ப. ஸ்வஸ்திகம், பாத்மம், வீரம், கோமுகம், மாயூரம், பத்ரம் முதலிய பிரிவுகள் உள்ள இருப்பு ஆஸனமாம். ப்ராணாயாமமாவது -- முன்னம் வலதுகைக் கடைவிரல் ஆழிவிரல்களால் இடது நாசித்துவாரத்தை மூடி வலது நாசி வழியால் பிங்களை யென்னும் நாடியால் முப்பத்திரண்டு மாத்திரை வாயுவை ரேசகம் செய்து, பெருவிரலால் வலது நாசியை மூடி இடையென்னும் நாடியால் பதினாறு மாத்திரை வாயுவைப் பூரகம் செய்து, அறுபத்தினான்கு மாத்திரை கும்பகம் செய்து முன்பு போல ரேசகம் செய்தலாம். ப்ரத்யாஹாரமாவது --பூதங்கள் ஐந்து, தந்மாத்திரைகள் ஐந்து, கர்மேந்திரியம் ஐந்து, ஞாநேந்திரியம் ஐந்து, மனம், அஹங்காரம், மஹத்தத்வம், பிரகிருதி என்னும் இவ்விருபத்தினாலு தத்வங்களையும் பரம புருஷனிடத்தில் உபஸம்ஹாரம் (லயிப்பித்தல்) செய்வதாக பாவிப்பதாகும். தாரணை என்பது இவ்விருபத்திநான்கு தத்வங்களையும் லயிப்பித்தலால் ப்ரக்ருதி ஸம்பந்த லேசமும் அற்ற ஜீவாத்ம ஸ்வரூப ஜ்ஞாநத்தோடே கூட மனம் ஒன்றாலே அறியத்தக்கவனான பரமபுருஷனது திருமேனியில் விஷயாந்தரங்களிற் செல்லாதபடி மனத்தைத் திருப்பி "அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர்கண்ணே வைத்து" என்கிறபடியே நிலைநிறுத்தலேயாம். த்யாநமாவது -- பரமாத்ம ஸ்வரூபத்தை தைலதாரைபோல் இடைவிடாது சிந்தித் திருத்தலேயாம். ஸமாதியாவது -- ஜீவாத்மா த்யாநம் செய்வதாகவும், பரமாத்மா த்யாநிக்கப்படுவதாகவும், இவ்விரண்டும் தோன்றாமே பரமாத்மா ஒன்றையே விஷயீகரித்து இடைவெளி விடாதே தைலதாரை போல் சிந்தித்திருத்தலாம்.

பகவத்கீதையில் அருளிச் செய்தவாறே கர்மயோகத்தால் ஜ்ஞான யோகசித்தி பெற்று அதனால் பக்தி யோகம் சித்திக்கப் பெற வேண்டுமாகையாலும், இதில் த்ரைவர்ணிகர்க்கு மாத்திரமே அதிகாரமாகையாலும், வர்ணாச்ரம தர்மங்கள் இதற்கு அங்கமாயிருக்கையாலும், பலம் கைகூடும் அளவும் அநுஷ்டிக்கவேண்டுமாகையாலும், இதற்கு அந்திமஸ்மிருதி அபேக்ஷிதமாயிருக்கை யாலும், இதனால் பெறக்கடவதானால் மோக்ஷம் ப்ராரப்தாவஸாநத் திலே யாகையாலும், ப்ராரப்தங்கள் எல்லாம் எந்த ஜன்மத்தில் கழியுமோ அதை அறிய முடியாதாகையாலும், அதற்கு சக்தியும் ஜ்ஞானமும் அதிகமாக வேண்டுமாகையாலும், அதில் அதிகாரம் இல்லாதவர்கள் ந்யாஸவித்யையில் இழிந்து பலத்தைப் பெறுவார்கள்.

ந்யாஸ வித்யையாவது --
.........(தொடரும்)

செவ்வாய், 2 ஜூன், 2009

சரணாகதி

மிக நன்றாகவே தெரிகிறது. ஒர் எழுத்தும் அறியாதானாகிய அடியேன்  வைணவம் வல்லார் நிறைந்திருக்கும்  பேரவையில் அவ்வப்போது ஏதேதோ  எழுதுவது நகைப்புக்கிடமாகும் என்று. ஆனாலும் சிறு குழந்தை உளறுவதை ரசிப்பதைப் போல் அடியேனையும் பொறுப்பார்கள் என்ற நம்பிக்கையும் அவ்வப்போது மனதில் தோன்றி தைரியம் ஊட்டும். தவிர  '”உனக்கு ஏது சுய புத்தி ! கையில் கிடைக்கும் பழைய நூல்களைத் தானே இங்கு இடுகிறாய்! அதனால் உனக்குத் தெரியும் என யாராவது தவறாக நினைத்துவிடப் போகிறார்களே என அச்சம் எதற்கு ? நீ ஒரு அச்சுக் கோப்பவன்தானே ! “ஸ்ரீ ரங்கநாத பாதுகாவை அச்சிடுகிற நாராயணனுக்கு அதில் வருகிற சாஸ்த்ரார்த்தங்கள் எல்லாம் முழுதும் தெரியும் என யாராவது நினைப்பார்களா ! பழையவற்றை மீண்டும் அச்சிடும் உன்னையும் யாரும் நிச்சயம் படித்தவன் என தவறாகவே நினைக்க மாட்டார்கள் “ என மனசு ஊக்கமளிக்கும். அவற்றை ஏற்று பழையவற்றை மின்அச்சிடும் பணி தொடர்கிறேன்.

   

என்ன இவ்வளவு பீடிகை என்கிறீர்களா ? சிலருக்கு இவனுக்கு எல்லாம் தெரியும் என ஒரு மயக்கம் ஏற்பட்டு, அடியேன் ஸம்ஸ்க்ருதமோ, சாஸ்த்ரமோ ஸம்ப்ரதாயமோ அறியாத துர்பாக்யசாலி என்பது தெரியாமல், அடியேனிடம் தங்கள் கைக்காசைச் செலவழித்துக் கொண்டு தொலைபேசி யில் சந்தேகங்கள் கேட்டு நான் “திருதிரு" என விழிக்கும் நிலை அடிக்கடி அனுபவமாதலால்  இது தேவையாகி அடியேன் சரணாக வேண்டியிருந்தது சரணடைந்தோரைக் கண்டிப்பாக நாராயணன் மட்டுமில்லை அவன் அடி போற்றுவோரும் ரக்ஷிப்பீர்கள்தாமே !

திடீரென என்ன சரணாகதி சிந்தனை ? அடியேன் அனுபவித்து இங்கு இடப் போகும் “சரணாகதி மாலை” யின் தாக்கமோ?. “சரணாகதிமாலை” திருவல்லிக்கேணித் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடு. “ந்யாஸதசகத்”தின் விரிவுரை. நாளை முதல் …..