சரணாகதிமாலை முன்னுரை தொடர்ச்சி
ப்ராதிகூல்யவர்ஜநமாவது -- ப்ரதிகூலாசரணம் பண்ணக் கடவேனல்லேன் என்று அபிஸந்தி பண்ணுதல். அதுவும் இருவகைப்படும். ப்ரதிகூலாபிஸந்தி நீக்குகைமாத்திரமும், ப்ராதிகூல்ய வர்ஜநம் செய்யக்கடவேன் என்று ஸங்கல்பிக்கையும். இவ்விரண்டும் முன்பு போலத் தனித்தனி ஸர்வேச்வரன் விஷயத்திலும், ஸர்வபூத விஷயத்திலும் என்று இரண்டு வகை. ஆகையாலே, பகவதநபிமதவர்ஜநம், ஸர்வபூதா நபிமதவர்ஜநம், பகவதநபிமத வர்ஜந ஸங்கல்பம், ஸர்வபூதாநபிமத வர்ஜந ஸங்கல்பம் என்று இவ்வங்கம் நான்கு வகையாகிறது. இதற்குக் காரணம் முன்பு சொன்ன சேஷத்வஜ்ஞானமே, ப்ராதிகூல்ய வர்ஜந ஸங்கல்பம் அங்கமாகும்போது சேஷத்வஜ்ஞானத்தோடு கூடிய மனத்தினால் அநுஷ்டானத்தில் ஸங்கல்பிக்க வேண்டும். ப்ராதிகூல்யவர்ஜநாபிஸந்தி மாத்ரம் அங்கமாகும்போது மனத்தில் சேஷத்வஜ்ஞானமும் நிஷேத சாஸ்த்ர பர்யாலோசனையும் கூடுகையாலே ப்ரதிகூலாபி ஸந்தியை நீக்கிவைக்கும். இதற்கு விரோதியாவது அசாஸ்த்ரீய ஸேவநம். இதற்கு பலமும் இது அங்கமாம் வழியும் முன்பு சொன்னதேயாகும்.
கார்ப்பண்யமாவது -- ஸ்வா பேக்ஷித பலத்தைப் பெறுகைக்கு வேறோர் உபாயமில்லாமையும் வேறொரு ரக்ஷகன் இல்லாமையும். இது இங்கு சொன்ன ஆகிஞ்சந்யம் அநந்ய கதித்வம் இவைகளை அநுஸந்தித்தலும், ஆகிஞ்சந்யாதிகளை அநுஸந்திப்பதால் வரும் கர்வஹாநி (செருக்கு நீங்கல்)யும், ஸர்வேச்வரனுக்குத் தன் விஷயத்தில் க்ருபை அதிகமாகும்படி தழுதழுத்து அழுதல், பற்களைக் காட்டல்களோடு திருவடிகளில் விழுதல் , கைகூப்பி நிற்றல் முதலிய க்ருபண வ்ருத்தியும் என்று மூன்று வகையாயினும், இம்மூன்றும் ஸமநியதமாகையாலே ஒன்றை அநுஷ்டித்தலாலே மற்ற இரண்டும் அநுஷ்டிதமாகுமாகையாலே இம் மூன்று வகையில் ஏதாவது ஒன்றை அநுஷ்டிப்பதே போதும். இதற்குக் காரணம் தான் அல்பசக்தியென்றும், ஈச்வரனுக்கு பரதந்த்ரன் என்றும் தெளிகை. இதற்கு பலம் வேறுபாயங்களில் ப்ரவர்த்தியாமை. இதற்கு விரோதி தான் ஸ்வதந்த்ரன் என்று நினைத்தல். அப்படி இவன் நினைத்தானாகில் தான் ஸமர்த்தன் என்று ப்ரமித்து உபாயாந்தரங்களில் ப்ரவர்த்திக்கவும் கூடும். ஆகையாலே ஸர்வேச்வரன் ஒருவனே உபாயம் என்று அத்யவஸிக்கையாகிற ப்ரபதநம் கைகூடாது ஒழியும். ஆகையாலே இவ்வழியாயிது அங்கமாகிறது. இதன் பிரிவுகள் மூன்றில் என்கையில் உபாயமில்லை என்று அநுஸந்திப்பது என்னும் கார்ப்பண்யம் கீழ்ச்சொன்ன காரணமான அல்பசக்தித்வ பகவதேக பரதந்த்ரத்வஜ்ஞானத்தோடும் அநுபலப்தியோடும் சேர்ந்த ப்ரத்யக்ஷ ப்ரமாணத்தால் உண்டாகின்றது. கர்வஹாநியென்னும் கார்ப்பண்யமானது, ஆகிஞ்சந்யாநுஸந்தாநத்தாலே உண்டாகின்றது. க்ருபண வ்ருத்தியாகிற கார்ப்பண்யமானது, இவன் ஸம்ஸாரத்திற்கு மிகவும் பயந்தவனாகையாலும், அகிஞ்சநனாகையாலும், ரக்ஷிக்க வல்லனாய் பரமதயாளுவான ஸர்வேச்வரன் விஷயத்தில்தானே உண்டாகிறது.
மஹாவிச்வாஸமாவது -- ஸர்வேச்வரன் நாம் செய்யும் வ்யாபாரத்தை எதிர்பாராமலே (நிரபேக்ஷனாய்) ரக்ஷிப்பவன் என்கிற அத்தியவஸாய (திடநிச்சய)மாம். ப்ரபதநாநுஷ்டாநத்திற்குப் பின்பு ப்ருஹஸ்பதி போன்ற மஹான்கள் யுக்திகளாற் கலக்கினாலும் கலங்காமலும் அணுவேனும் ஸம்சயம் உதியாமலும் இருக்கும்படிக் கேதுவாகத்தக்கதாய் ப்ரபதனம் பண்ணும்போது உண்டாகும் விச்வாஸம் என்று நிக்ஷேபரக்ஷை என்னும் கிரந்தத்தில் நிர்ணயித்துள்ளது. இதற்குக் காரணம் மறுக்கவொண்ணாத புருஷகாரயோகமும், ஒழிக்க வொழியாத சேஷ சேஷிபாவ ஸம்பந்தயோகமும், நிருபாதிகமான காருண்ய வாத்ஸல்யாதி குணயோகமும், வேறொரு ஸஹகாரியை எதிர்பாராதிருத்தலும், தண்ணியரான (அகிஞ்சநரான)வர்களுடைய புருஷார்த்தமே தன் புருஷார்த்தமாய் நினைப்பதுமாகிற எம்பெருமானது ஸ்வபாவத்தை அநுஸந்தித்தல். இதற்கு உபயோகம் ஸர்வஜ்ஞனும் ஸர்வசக்தனுமான ஸர்வேச்வரன் அநந்தமான அபராதங்களையுடைய நமக்குக் கிட்ட எளியனாவனோ? அவரவர் கர்மங்களுக்கு ஏற்றபடி பலங்கொடுப்பவன் மோக்ஷ விரோதியான பல தீவினைகளையுடைய நமக்கு அளவில்லாத பலத்தைக் கொடுப்பனோ? இதரர் செய்யும் உபகாரத்தை அபேக்ஷியாதவன் அல்ப வ்யாபாரத்துக்குப் பலம் கொடுப்பானோ? தேவதாந்தரங்கள் போலே சீக்ர பலப்ரத னல்லனானவன் நாம் கோரின காலத்திலே பலங் கொடுப்பனோ? என்று பிறக்கும் சங்கைகள் ஐந்தும் நீங்குகை. இச்சங்கைகள் உண்டானால் ப்ரபதநம் கைகூடாது. இவ்வழியால் இது அங்கமாகிறது. இதற்கு விரோதி ஈச்வரன் உபேக்ஷிப்பவன், கர்மாநு குணமாகப் பலங் கொடுப்பவன் என்பவை போன்றவையும் கீழ்ச்சொன்ன சங்கைகள் உதிக்க ஹேதுக்களுமான ஈச்வரனது ஸ்வபாவங்களை அநுஸந்தித்தல். கீழ்ச்சொன்ன புருஷகார யோகம் முதலியவைகளை அநுஸந்திப்பதனால் இச்சங்கைகள் ஐந்தும் நீங்கி ப்ரபதநம் கைகூடும். சங்கைகள் நீங்கும்படியாவது -- ஈச்வரன் ஸர்வஜ்ஞனாகையாலே, நாம் செய்த அபராதங்களை அறிந்தவனாயும், ஸர்வசக்தனாகையாலே நம்மை தண்டிக்க சக்தனாயு மிருந்தாலும் தனக்கு ப்ரியதமையான பிராட்டியாகிற மறுக்க வொண்ணாத புருஷகாரத்தாலே மனக்கலக்கம் நீங்குகையாலே அந்தப்புர பரிஜனங்கள் பெரிய குற்றம் செய்தாலும், தன் பத்நிக்காக அதை ராஜா மறந்துவிடுவது போலே நம் அபராதங்களையும் மறந்தவன் போல் க்ஷமித்து நிற்பவனாகையாலே நமக்குக்கிட்ட எளிதாவன் என்றும், நற்கருமங்களுக்கு நற்பயனும், தீக்கருமங்களுக்குத் தீயபயனும்,பெரிய கருமங்களுக்குப் பெரிய பலனும், சிறிய கருமங்களுக்குச் சிறிய பலனும் என்று அவர் அவர் கர்மங்களுக்கு ஏற்றபடி பலன் கொடுப்பவனேயானாலும், ஒழிக்க வொண்ணாத சேஷ சேஷிபாவாதி சம்பந்தம் உண்டாகையாலேயும், பலம் நமக்குத் தாயம் போல் கிடைக்கக் கடமைப்பட்டிருப்பதனாலேயும், இப் ப்ரபதனம் என்னும் வ்யாஜ மாத்திரத்தாலே ப்ரஸந்தனாய் அளவில்லாத பலத்தையும் தரும் என்றும், இதரர் செய்யும் உபகாரத்தில் நிரபேக்ஷனானாலும் காருணிகனான ராஜா அல்பவ்யாஜத்தாலே வசமாவது போலே நிருபாதிகமான காருண்யம் வாத்ஸல்யம் முதலிய குணங்களை உடையவனாகையாலே இவன் செய்யும் சிலவான வ்யாபாரங்களைப் பரமோபகாரமாக ஆதரித்து க்ருதஜ்ஞனாய்ப் பலந்தரும் என்றும், தேவதாந்தரங்களைச் சிறிது அதிகாரிகளுக்குச் சில பலங்களை த்வரையில் கொடுக்கும்படி நியமித்து வைத்துத் தான் விளம்பித்துப் பலந்தருமவனேயானாலும், அகிஞ்சனன் செய்யும் சரணாகதி விஷயத்தில் "வேண்டாது சரணநெறி வேறோர் கூட்டு" என்கிறதுபோல ஸஹகாரியை எதிர்பாராத தன் ஸங்கல்பத்தாலே இவன் கோலின காலத்திலே பலங்கொடுக்கும் என்றும், "ஒத்தார் மிக்காரை யிலையாய மாமாயா" என்கிறபடியே ஸமாதிக ரஹிதனேயாகிலும் தான் ஸ்வதந்த்ரனாகையாலும் நம் புருஷார்த்தத்தைத் தன் புருஷார்த்தமாக நினைப்பவனாகையாலும், ராஜாக்கள் தன் பிள்ளைகளுக்கும் கிளி முதலிய பக்ஷிகளுக்கும் துல்யமாகப் பாலூட்டுவது போலவும், "புற்பா முதலாப் புல்லெறும்பாதி யொன்றின்றியே, நற்பால யோத்தியில் வாழுஞ் சராசரம் முற்றவும், நற்பாலுக்குய்த்தனன்" என்கிறபடியே கோசல தேசத்தில் உள்ள புல் பூண்டு முதலாக எல்லாச் சேதனா சேதனங்களுக்கும் மோக்ஷம் கொடுத்தது போலவும், நமக்கும் அளவில்லாப் பெரும் பலந்தரும் என்றும் இம்முறையே கண்டு கொள்வது. இப் புருஷகாராதிகள் ஐந்தும் ஸதாசார்யோபதேசத்தாலே அறிய வேண்டும். இம் மஹா விச்வாஸம் முதலில் சாஸ்த்ரம் ப்ரமாணம் என்னும் நிச்சயத்தால் பிறக்கும் ; மேன்மேல் அந்த ஸம்ஸ்காரத்தாலும் கீழ்ச்சொன்ன சங்காபஞ்சக நிவ்ருத்தி ஹேதுகரமான நிச்சயத்தாலும் ப்ரபதனாநுஷ்டாந காலத்தில் அதுபோலவே மஹா விச்வாஸம் பிறக்கும். ஸர்வேச்வரன் இவனிடத்தில் ஒரு வ்யாஜத்தை வையாமல் ரக்ஷிக்குமானால் வைஷம்யமும் நைர்க்ருண்யமும் வரும் என்பதற்காக ப்ரபத்தி என்று ஒரு வ்யாஜத்தை வைத்து ரக்ஷிக்கிறான். ஆகையாலே நாம் செய்யும் ப்ரபதநம் ஒரு வ்யாஜ மாத்ரம் என்று தெளியவேண்டும். சாஸ்த்ரம் ப்ரமாணம் என்று தெளிந்த போதே ஸம்சயம் நீங்குமாகையாலே அவன் விச்வாஸத்தை உடையவன் ஆகிறான்.அவன் ப்ரபதநம் செய்ய அதிகாரி. ஆகையாலே விச்வாஸம் அங்கமானால் போதுமே, விச்வாஸம் பெரிதாயிருக்க வேண்டும் என்பது என்னவெனில்? தான் மஹாபராதியாய் அபேக்ஷிக்கும் பலம் மஹத்தரமாய் அதற்காகச் செய்யும் உபாயம் லகுவாயிருப்பதனாலே அவ்விஷயமாய் வரும் சங்கைகளை அதற்குத் தக்கபடி நீக்கிக் கொள்ள வேண்டியது கடமையாயிருக்கிறதாகையாலே மஹாவிச்வாஸம் அங்கமாக வேண்டியதாயிற்று என்று ந்யாஸ விம்சதியில் அருளிச்செய்யப் பெற்றுள்ளது. இதற்கு விரோதியாகக் கீழ்ச்சொன்ன ஈச்வரஸ்வபாவஜ்ஞானம் அநுஷ்டான காலத்தில் உண்டாகுமானால் இம் மஹாவிச்வாஸம் அங்கமாகவேண்டும். இல்லையானால் முன் சொன்னபடி விச்வாஸமே அங்கமாகும். அப்போது மஹத்வம் உபயுக்தம் அன்று. ஆனால் பின்காலத்தில் சங்கைகள் பின் நாடாதபடி இவ்விச்வாஸம் திடமாய் நிலை நிற்கும் விஷயத்தில் உபயோகிக்கின்றது, என்பது ஸாராம்சம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக