புதன், 3 ஜூன், 2009

சரணாகதி மாலை

ஒவ்வொரு முறையும் திருவல்லிக்கேணித் தமிழ்ச் சங்க நூல்களை அறிமுகப் படுத்தும்போதெல்லாம் நூல்களின் சொற்சுவை பொருட்சுவைக்கு ஈடாக அமையும் பந்தல்குடி திருமலைஐயங்காரின் முன்னுரைகளையும் இட நினைப்பதுண்டு. ஆனாலும் நூல்கள் முன்னுரிமை பெற்று அந்த நினைப்பு இதுவரை நினைப்பாகவே இருந்து விட்டது. ஆனால் இன்றுமுதல் தொடங்கும் ந்யாஸதசகத்தின் தமிழ்விரிவுரைக்கு அவர் அளித்துள்ள அற்புதமான முன்னுரை அனைவரும் அனுபவிக்க வேண்டிய ஒன்று என்பதால் முன்னுரையை முதலில் இடுகிறேன். அவ்வப்போது அவர் மேற்கோள் காட்டும் பல நூல்கள் அவர் எப்படிப் பட்ட அறிஞராக விளங்கியிருக்கிறார் என்பதை நாம் அறியச் செய்வன. இனி நூலுக்குள்..

ஸ்ரீ:
சரணாகதி மாலை

முகவுரை

வாழி யருளாளர் வாழியணி யத்திகிரி
வாழி யெதிராசன் வாசகத்தோர் -- வாழி
சரணா கதியென்னுஞ் சார்வுடன் மற்றொன்றை
அரணாகக் கொள்ளாதா ரன்பு.
[ -- தேசிகமாலை, மெய்விரத நன்னிலத்து மேன்மை.1]

உலகில் உள்ள ஒவ்வொரு சேதனனும் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டுவன மூன்று.

அவையாவன, தத்வம், உபாயம், புருஷார்த்தம் என்பன. அவற்றுள் தத்வமாவது -- ப்ராமாணிகமான பதார்த்தம். அது சித்து என்றும், அசித்து என்றும், ஈச்வரன் என்றும் மூன்று பிரிவானது என்று வேதங்கள் சொல்லும். சித்து என்பது ஆத்மா. அசித்து என்பது ஞானம் இல்லாதது. அது பிரகிருதி, காலம், சுத்த ஸத்வம் என்று மூன்று பிரிவு பெற்றது. ஈச்வரன் என்பான் ஸர்வ ஜகத்காரண பூதனான நாராயணன். இவற்றின் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிவதால், ப்ரக்ருதியே ஆத்மா என்றும், ஜீவன் ஸ்வதந்த்ரன் என்றும், ஜீவனும் ஈசுவரனும் ஒன்றே என்றும் உண்டாகும் கலக்கங்கள் நீங்கும்.
புருஷார்த்தமாவது -- புருஷனால் அர்த்திக்கப்படும் பலம். அர்த்தித்தல் -- யாசித்தல், அபேக்ஷித்தலாம். அது த்ரிவர்க்கம் என்றும், அபவர்க்கம் என்றும் இரண்டு வகை. அறமும், பொருளும், இன்பமும் (தர்மார்த்த காமங்கள்) த்ரிவர்க்கம் எனப்படும். அபவர்க்கமாவது -- வீடு, (மோக்ஷம்) எவ்விதத் துக்கமும் இல்லாத அளவு இறந்த ஆநந்தமே மோக்ஷம். அதாவது, பிரகிருதி சம்பந்தம் அற்றதொரு தேச விசேஷத்திலே அர்ச்சிராதி கதியால் சென்று,"அனைத்து உலகும்உடையஅரவிந்தலோசனனை"என்கிறபடியேஸர்வலோகாதீச்வரனாய், "ஒண்டொடியான் திருமகளும் நீயுமே நிலா நிற்பக், கண்டசதிர் கண்டு ஒழிந்தேன் அடைந்தேன் உன்திருவடியே" என்கிறபடியே, லக்ஷ்மீ விசிஷ்டனாய்ப் பரப்ரஹ்ம ரூபியான நாராயணனைக் கிட்டி, எக்காலத் திலும் ஸம்ஸாரகந்தம் அற்றவர்களான நித்யசூரிகளோடு ஒக்க, ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தோசித ஸர்வவித கைங்கர்ய பர்யந்தமான பரிபூர்ண ப்ரஹ்மாநுபவம் செய்கை. இது மீட்சி (புநராவ்ருத்தி) இல்லாத பேரடிமையாம். த்ரிவர்க்கமானது நச்வரமானதும், அளவு உள்ளதும், துக்கம் கலந்ததுமாகையாலும், மோக்ஷம் அநந்த ஸ்திரபலமும், துக்கம் கலக்காத கேவலாநந்தம் ஆகையாலும், அவற்றின் ஸ்வரூபத்தை அறிந்து சேதநன் மோக்ஷத்தையே புருஷார்த்தமாகத் தெளிந்து கொள்வன்.

உபாயமாவது -- தான் கோரிய பலத்தைப் பெறுவதற்காகத்தான் செய்யவேண்டிய கார்யம். பரமபுருஷார்த்தமான மோக்ஷத்தைப் பெற விரும்புகிறவனுக்கு உபாஸநமும், ப்ரபதநமும் உபாயம் என்று சாஸ்திரங்கள் கூறும். உபாஸநமாவது -- இயமம், நியமம், ஆஸநம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணை, த்யாநம் என்னும் ஏழு அங்கங்களுடன் கூடிய பக்தி யோகம். இவ்வங்கம் ஏழுடன் இந்த அங்கியைச் சேர்த்து அஷ்டாங்க யோகம் என்பர். இது ஸத்வித்யை, தஹரவித்யை,வைச்வாநர வித்யை, பஞ்சாக்னிவித்யை முதலாகப் பல பிரிவானது. ஜீவவதை செய்யா(அஹிம்ஸை), மெய்மை(ஸத்தியம்), கள்ளாமை (அஸ்தேயம்), பிறர்பொருள் விரும்பாமை, இவைஇயமம் எனப்படும். தவம், தூய்மை, தத்துவ நூலோர்தல், மனமுவந்திருத்தல், தெய்வம் வழிபடல் இவை நியமம் என்ப. ஸ்வஸ்திகம், பாத்மம், வீரம், கோமுகம், மாயூரம், பத்ரம் முதலிய பிரிவுகள் உள்ள இருப்பு ஆஸனமாம். ப்ராணாயாமமாவது -- முன்னம் வலதுகைக் கடைவிரல் ஆழிவிரல்களால் இடது நாசித்துவாரத்தை மூடி வலது நாசி வழியால் பிங்களை யென்னும் நாடியால் முப்பத்திரண்டு மாத்திரை வாயுவை ரேசகம் செய்து, பெருவிரலால் வலது நாசியை மூடி இடையென்னும் நாடியால் பதினாறு மாத்திரை வாயுவைப் பூரகம் செய்து, அறுபத்தினான்கு மாத்திரை கும்பகம் செய்து முன்பு போல ரேசகம் செய்தலாம். ப்ரத்யாஹாரமாவது --பூதங்கள் ஐந்து, தந்மாத்திரைகள் ஐந்து, கர்மேந்திரியம் ஐந்து, ஞாநேந்திரியம் ஐந்து, மனம், அஹங்காரம், மஹத்தத்வம், பிரகிருதி என்னும் இவ்விருபத்தினாலு தத்வங்களையும் பரம புருஷனிடத்தில் உபஸம்ஹாரம் (லயிப்பித்தல்) செய்வதாக பாவிப்பதாகும். தாரணை என்பது இவ்விருபத்திநான்கு தத்வங்களையும் லயிப்பித்தலால் ப்ரக்ருதி ஸம்பந்த லேசமும் அற்ற ஜீவாத்ம ஸ்வரூப ஜ்ஞாநத்தோடே கூட மனம் ஒன்றாலே அறியத்தக்கவனான பரமபுருஷனது திருமேனியில் விஷயாந்தரங்களிற் செல்லாதபடி மனத்தைத் திருப்பி "அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர்கண்ணே வைத்து" என்கிறபடியே நிலைநிறுத்தலேயாம். த்யாநமாவது -- பரமாத்ம ஸ்வரூபத்தை தைலதாரைபோல் இடைவிடாது சிந்தித் திருத்தலேயாம். ஸமாதியாவது -- ஜீவாத்மா த்யாநம் செய்வதாகவும், பரமாத்மா த்யாநிக்கப்படுவதாகவும், இவ்விரண்டும் தோன்றாமே பரமாத்மா ஒன்றையே விஷயீகரித்து இடைவெளி விடாதே தைலதாரை போல் சிந்தித்திருத்தலாம்.

பகவத்கீதையில் அருளிச் செய்தவாறே கர்மயோகத்தால் ஜ்ஞான யோகசித்தி பெற்று அதனால் பக்தி யோகம் சித்திக்கப் பெற வேண்டுமாகையாலும், இதில் த்ரைவர்ணிகர்க்கு மாத்திரமே அதிகாரமாகையாலும், வர்ணாச்ரம தர்மங்கள் இதற்கு அங்கமாயிருக்கையாலும், பலம் கைகூடும் அளவும் அநுஷ்டிக்கவேண்டுமாகையாலும், இதற்கு அந்திமஸ்மிருதி அபேக்ஷிதமாயிருக்கை யாலும், இதனால் பெறக்கடவதானால் மோக்ஷம் ப்ராரப்தாவஸாநத் திலே யாகையாலும், ப்ராரப்தங்கள் எல்லாம் எந்த ஜன்மத்தில் கழியுமோ அதை அறிய முடியாதாகையாலும், அதற்கு சக்தியும் ஜ்ஞானமும் அதிகமாக வேண்டுமாகையாலும், அதில் அதிகாரம் இல்லாதவர்கள் ந்யாஸவித்யையில் இழிந்து பலத்தைப் பெறுவார்கள்.

ந்யாஸ வித்யையாவது --
.........(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக