வெள்ளி, 17 பிப்ரவரி, 2023

ஶ்ரீ வால்மீகி ராமாயணம் -- உத்தர காண்டம் 32

ஐம்பத்தோராவது ஸர்கம்

[ஸீதையும் இராமனும் உத்யான வனம் சென்று மகிழ்வதும், ஸீதை கர்ப்பம் தரித்தலும், அவள் மறுபடி கங்கா தீரம் சென்று ரிஷிகளாச்ரமத்தில் ஒரு நாளேனும் தங்கி வஸிக்க விரும்பியதும்.)

        இப்படியாக ஸ்ரீராமசந்திரன் புஷ்பக விமானத்திற்கு விடை கொடுத்து அனுப்பிய பிறகு, உல்லாஸமாக உலாவிப் பொழுது போக்குமாறு, ஒரு நாள் தனது உத்யான வனத்திற்குச் சென்றான். அந்த உத்யான வனத்தில் அனேக அழகிய மரங்களும், பல விதமான மணங்கமழும் புஷ்பச்செடிகளும், எங்கும் நிறைந்திருந்தன. அங்கு மதுவைக் குடித்து வண்டினங்கள் முரல, மயிலினங்கள் ஆட, குயிலினங்கள் கூவ மிகவும் ரமணீயமாயிருந்தது. தேன் நிறைந்து மணம் வீசுகின்ற தாமரை, கருநெய்தல் முதலான புஷ்பங்கள் மலர்ந்து, வேறு நானாவிதமான மலர்கள் நிறைந்த, பலவிதமான வாவிகள் தெளிந்த நீர் நிறையப் பெற்று அங்கங்கு அதிகமாகத் தோற்றமளித்தன. அவ்வாவிகளெங்கும், மாணிக்கக் கற்களால் படித்துறைகள் கட்டி, ஸ்படிகக் கற்களால் மறை சுவர் எடுத்து நீராடும் துறைகளமைந்து அழகு பெற்றிருந்தன. அந்த வாவிகளில் மலர்ந்த தாமரைக் காட்டிலே, சக்கரவாகம், ஹம்ஸம், ஸாரஸம் முதலான நீர்ப் பறவைகள் சிறகடித்துக் கலவிக்களித்து விளையாடிக் கொண்டிருந்தன. இவ்வித அழகு பெற்று, அங்கங்கே அனேகவிதமான ஆஸனங்களும், சிறு வீடுகளும், கொடிவீடுகளும் அமைந்து, தேவேந்திரனுடைய நந்தவனமெனவும், குபேரனது சைத்ரரதமெனவும் விளங்கும், அந்தப் பூஞ்சோலையில் புகுந்து, ஸ்ரீராமசந்திரன், ஸீதா தேவியுடன் அங்கோரிடத்தில் தனக்கென நிர்மாணித்திருந்த அழகான ஆஸனத்தில் அமர்ந்திருந்தனன். அப்பொழுது ஸ்ரீராமன் தனது காதலியைக் கையிற் பிடித்துக் கொண்டு, 'மைரேயம் என்கிற மதுரமான, ஒருவகைத் தேனை அந்த ஸீதைக்கு உண்பிக்கலாயினன். அக்காலையில், வேலையாட்கள் ஸ்ரீராமனுக்கு, அழுது செய்வதற்காகப் பலவிதமான கனிகளைக் கொண்டு வந்து கொடுத்தனர். ஆடல், பாடல்களில் தேர்ச்சி பெற்றவர்களான அழகிய இளம் மங்கையர்கள் மது பானம் செய்து மதித்தவர்களாகி, ஸ்ரீராமனுக்கு முன்பு வந்து தோன்றி. ஆடிப்பாடிப் புகழ்ந்தனர். அகங் களிக்கச் செய்பவர்களான அவ்வழகிகளைக் கண்டு ஸ்ரீராமன் தனது காதலியோடு கூடி இன்புற்று மகிழ்ந்தான்.

        இப்படித் தினந்தோறும் ஒழிந்த வேளைகளில் அவ்விருவரும் உத்யானவனம் சென்று வினோதமாகப் பொழுதுபோக்கி வந்தனர். ஸகல போகபோக்யங்களையும் பெற்று வாழும் ஜாநகீ ராமர்களுக்கு, இவ்விதமாகவே பதினாயிரம் ஆண்டுகள் பெருமையாகச் சென்றன. அது காலையில் ஸ்ரீராமபிரான் பிரதி தினமும் முற்பகலில் ராஜாங்க ஸம்பந்தமான ஸகல காரியங்களையும், நீதி முறை தவறாது நிறை வேற்றி, அதன் பின்னர் அந்தப்புரம் சென்று பிராட்டியுடன்  அகமகிழ்ந்திருக்கலாயினன்.

        இங்ஙனம் நிகழ்ந்து வருகையில், ஸீதை கர்ப்பவதியாயினள். அப்பொழுது ஒரு நாள், ஸ்ரீராமன் ஸீதா தேவியை நோக்கி, ''வைதேஹி! நீ கர்ப்பமுற்றிருப்பது எனக்கு[T1]  மிகவும் ஆனந்தத்தை உண்டு பண்ணுகிறது. நீ இப்பொழுது விரும்புவது யாது? நீ எதை வேண்டினாலும் அதை நான் நிறைவேற்றுவேன்?' எனக் கூறினான். இது கேட்டு ஜனகராஜன் மகளான ஸீதை புன்னகை கொண்டு, "ஸ்வாமி, ஸகல கல்யாண குணங்களும் வாய்ந்த தேவரீரைக் கணவராகப் பெற்ற அடியாளுக்கு, வேறென்ன விருப்பமுள்ளது? ஆயினும் தேவரீரே இங்ஙனம் கேட்கிறபடியால், ஒன்று வேண்டுகிறேன். முன்பு போல இன்னுமொரு தரம் கங்கைக் கரையிலுள்ள மிகப் பரிசுத்தமான தபோவனங்களிற் சென்று, அங்கே கனி கிழங்குகளையே உணவாகக் கொண்டு, விளங்கும் மஹரிஷிகளுடைய பாத மூலத்தில் பணிவிடை செய்து கொண்டு அவ்விடத்தினழகை அனுபவிக்க விரும்புகிறேன். பலநாள் தங்கியிருக்க இயலாமற் போனாலும் ஒரு நாளாயினும், அவ்விடம் போயிருந்து வரவேண்டுமென விரும்புகிறேன்" எனக் கூறினாள். இது கேட்டு ஸ்ரீராமன், 'ஜானகி] அங்ஙனமேயாகுக. நாளைய தினமே அவ்விடம் சென்று வரலாம்'' என உரைத்து ஸந்தோஷித்திருந்தனன்.

 

ஐம்பத்து இரண்டாம் ஸர்க்கம்

[ஸ்ரீராகவன் சாரன் வாயிலாக, ஸீதாபவாதவார்த்தையை ஜனங்கள் கூறுவதாகக் கேட்டறிதல்.)

        இவ்வாறு ஆனந்தமாயிருக்கும் பொழுது, ஒரு நாள் ஸ்ரீராகவன் மந்திரி முதலானோர் புடைசூழ, ராஜ ஸபையில் எழுந்தருளியிருக்கையில், விஜயன், மதுமத்தன், காச்யபன், மங்களன், கடன், ஸுராஜன், காலியன், பத்ரன், தந்த வக்த்ரன், ஸுமாகதன், முதலானவர்கள் வந்து, பலவிதமான பரிஹாஸக் கதைகளை பேசி, அரசனுக்கு ஸந்தோஷத்தை விளைவித்து வந்தனர், அப்பொழுது ஸ்ரீராகவன் அவர்களைப் பார்த்து, 'நல்லது, இது இவ்வளவோடு நிற்கட்டும். ஹே பத்ர! நகரத்திலாயினும் நாட்டிலாயினும், நகரத்தாரும் நாட்டாரும், என்னைப் பற்றி என்ன கூறுகிறார்கள்? ஸீதையைப் பற்றி என்ன நினைக்கின்றனர்? பரதன் லக்ஷ்மணன் சத்ருக்னன், நம் தாயாரான கைகேயி இவர்களைப் பற்றி என்ன என்ன பேசிக் கொண்டிருக்கின்றனர்? நாட்டிற்குப் புதிதான ஒரு அரசன் ஏற்படுகையில் ஜனங்கள் ஏதாவதொன்றை அவனைப் பற்றிக் கூறுவது உலக வழக்கமன்றோ” என்று கேட்டனன். அது கேட்ட பத்ரன் என்பவன், கை கூப்பிய வண்ணம் மேல் வருமாறு கூறினான்.

        அரசரே! தேவரீர் ராவணனை வதம் செய்து வெற்றி வீரனாக வந்ததை இந்நகரத்தாரனைவரும் புகழ்ந்து கொண்டாடுகின்றனர் என்றான். அதனைக் கேட்ட ஸ்ரீராமன், 'ஹே பத்ர! இது மட்டுமா? இன்னும் ஏதேனுமுள்ளதா? நன்மையோ தீமையோ, நகர வாஸிகள் கூறுமெல்லாவற்றையும் ஒன்று கூட விடாது யாவும் உண்மையாக நீ கூறவேண்டும், நன்மையோ தீமையோ எனக்குத் தெரிந்ததாகில் தீமையை ஒழித்து நன்மையை நான் வளர்த்த முயலலாகுமன்றே. ஆகவே நீ பயமின்றி தைரியத்துடனே, நாட்டிலுள்ளவர்களும் நகரத்திலுள்ளவர்களும், எங்களைப் பற்றிக் கூறிக் கொள்ளுகின்ற அனைத்தையும் விளக்கமாகக் கூறுவாயாக' என்று பணித்தனன்.

                ஸ்ரீராமன் இவ்வாறு கூறக்கேட்டு, பத்ரன், அவரை வணங்கி, “ராஜனே! ஜனங்கள் பலரும் பேசிக்கொள்வது யாவதெனில், ஸ்ரீராமன் ஸமுத்திரத்தில் அணை கட்டி சூரனான ராவணனை வென்று, ஸீதா தேவியை மீட்டு வந்தது மிக்கப் பெருமையாகக் கொண்டாடத் தகுந்ததேயாயினும், அவனுக்கு ரோஷமென்பது சிறிதுமில்லாமற் போனது மாத்திரமே ஒரு பெருங்குற்றமாகும். ராவணன் வலிய எடுத்து, தன் மடி மீது வைத்துக் கொண்டு, இலங்கை சென்று வெகு நாள் சிறை வைத்த ஸீதையை ஸ்ரீராமன் மறுபடி தனது வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தானே! அந்த ஸீதையினிடத்தில் அவனுக்கென்ன அத்தனை மோகமா? இவ்வாறு இராக்கதர் வசத்தில், வெகு நாள் இருந்த மனைவியை இவ்விராமன் ஏன் வெறுக்காது, வைத்துக் குலாவுகின்றானோ? யாமறியோம். இதனைப் பார்க்கையில், நமது பெண்டிர்கள் இங்ஙனம் பிறர் வீட்டிற் போயிருந்து மீண்டு வரினும் நாமும் அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டிய தாகின்றதே, அரசன் செல்லுகின்ற வழியேயன்றோ குடிகளும் செல்லும். "யதாஹி குருதே ராஜா ப்ரஜா தமநுவர்ததே"  यथाहि कुरुते राजा प्रअजा तमनुवर्तते என்று நாடு நகரத்திலுள்ள ஜனங்கள் பலவாறாகப் பேசிக்கொள்ளுகின்றனர், என விண்ணப்பம் செய்தான். இதனைக் கேட்ட ஸ்ரீராகவன் மிகவும் துக்கமடைந்தவனாக, மற்றைய ஸுஹ்ருத்துக்களைப் பார்த்து, இந்த பத்ரன் கூறுவது உண்மை தானா? என்று கேட்டான். அதற்கு அவர்களனைவரும், வணக்கத்துடன், 'இவன் கூறுவது யாவும் உண்மையே' எனக் கூறினர். இதனால் மேலும் துக்கமடைந்த ராகவன், ஸபையைக் கலைத்து, அவர்களை யனுப்பிவைத்தான்.

 [T1]

வியாழன், 16 பிப்ரவரி, 2023

வால்மீகி ராமாயணம்–உத்தர காண்டம் 31

நாற்பத்தொன்பதாவது ஸர்கம்

[ஸ்ரீமானான ராமபிரான் வானரர்களுக்கும் ராக்ஷஸர்களுக்கும் விடையளித்தனுப்புதல்)

                இப்படியாக அயோத்யாதிபதியான ஸ்ரீராமன் அவர்களை விட்டுப் பிரிய மனமின்றி எப்பொழுதும் அவர்களுடனே கூடிக் களித்திருந்தான். இவ்வாறிருக்கையில் ஒரு நாள் ஸ்ரீராமன், ஸுக்ரீவனை நோக்கி 'வானர அரசனே! நீ உனது ராஜ்யமான கிஷ்கிந்தையை விட்டு வந்து வெகுநாட்களாகின்றபடியால், சீக்கிரமே அங்கு சென்று உனது மந்திரிகளுடன் கூடி ஸந்தோஷமாக ராஜ்ய பரிபாலனம் செய்து வரவும்' என்று கூறி; அவனை மார்புறத் தழுவி, பின்னும் மற்ற வானர வீரர்களையும் தனித் தனியே ஆலிங்கனம் செய்து கொண்டனன். பிறகு விபீஷண ஆழ்வானை நோக்கி, 'அரக்கர் கோனே! நீ தர்மங்களனைத்தையும் நன்குணர்ந்தவன் என்பது எனது துணிவு. ஆதலால் நீ உனது ஸாமர்த்யத்தைக் கொண்டு, தர்மமார்க்கம் தவறாமல் இலங்கா ராஜ்யத்தைப் பரிபாலனம் செய்து வரவும்.

                உனது நகரத்திலுள்ளவர்களுக்கும் மற்றுமுள்ள ராக்ஷஸர்களுக்கும் உனது ஸஹோதரனான குபேரனுக்கும், நீ உண்மையான விருப்பத்திற்கு இடமானவனன்றோ? ஆகவே அவர்களின்பால் நீ விரோதமான செய்கை எதனையும் செய்யாமலிருக்கவும். எப்பொழுதும் நீ அதர்மமான காரியத்தில் மனதைச் செலுத்தாமலிருக்க வேண்டும். ஸுக்ரீவனையும் என்னையும் நீ என்றைக்கும் மறவாது உள்ளத்தில் வைத்து அதிகமான அன்பு பாராட்டி வரவேண்டும். இனி நான் உனக்கு விடை கொடுக்கிறேன். நீ உடனே புறப்பட்டு இலங்காபுரி செல்லவும்" எனக் கூறி அனுமதி யளித்தான்.

        அப்படி ஸ்ரீராமன் அனுமான் வேண்டிக் கொண்டபடி, அவனை நோக்கி, 'வானரச்ரேஷ்டனே! இவ்வுலகத்தில் எனது சரித்திரம் என்வளவு காலம் நீடித்திருக்குமோ அவ்வளவு காலம் உனது புகழும் நீடித்து நிலைத்திருக்கக் கடவது. இவ்வுலகம் எத்தனை காலம் நீடித்திருக்குமோ அவ்வளவு காலம் எனது கதையும் இங்கு அழியாதிருக்கும். ஆஞ்சநேய! அவ்வளவு காலம் உனது சரீரத்தில் ஜீவனும் நிலைத்திருக்கும். நீ செய்த ஒவ்வொரு உபகாரத்திற்கும் கைமாறாக நான் எனது பிராணனை அளித்தாலும் போதுமோ? கைம்மாறு செய்வதற்கு ஆபத்துக் காலமே ஏற்ற தருணமாகும். உனக்கு ஆபத்தும் நேர வேண்டாம். நான் கைம்மாறு செய்யவும் வேண்டாம்” எனக்கூறி தான் கழுத்தில் அணிந்து கொண்டிருந்ந சந்திரனுக்குச் சமமானச் சோதி பெற்ற அற்புதமான ஹாரமொன்றைக்கழற்றி அனுமானது கழுத்திலிட்டனன். பிறகு வானரர்களும் ராக்ஷஸர்களும், ஸ்ரீராமச்சந்திரனைத் தலை குனிந்து, அடிபணிந்து விடை கொள்ளலாயினர்.

        ஸுக்ரீவன் ஸ்ரீராமனை மார்புறத் தழுவி அவனை விட்டுப் பிரிய வேண்டுமேயென்கிற துயரத்தினால் மெய்மறந்தவனாகியதும் ராமனால் ஸமாதானம் செய்யப் பெற்று விடை கொண்டான். ஸகலமான வானரர்களும் இராக்கதர்களும் உடலை விட்டுப் பிரியும் உயிரென அடங்காத துயரத்துடன், கண்ணீர் தாரை தாரையாகப் பெருக. ஶ்ரீராமச்சந்திரனை வணங்கி விடை பெற்றுத் தத்தம் இருப்பிடம் போய்ச் சேரலாயினர்.

ஐம்பதாவது ஸர்கம்

[குபேரனால் அனுப்பப்பட்ட புஷ்பக விமானத்தை மீண்டும் அவனிடமே செல்ல விடை கொடுத்தது, பரதன் கூறிய ராஜ்ய வளர்ச்சி)

        இப்படியாக, ஸ்ரீராமபத்ரன் வானரர்களுக்கும். இராக்கதர்களுக்கும், விடை கொடுத்து அனுப்பிய பின், ஒரு நாள். ஸஹோதரர்களுடன் பொழுது போக்கிக் கொண்டிருக்கையில் ஆகாயத்தில் அற்புதமான சப்தத்துடன் ஒரு வாக்குக் கேட்டது. அது என்ன வெளில்?

        ''ஹே ராம! நான் குபேரனிடமிருந்து, அவனாலனுப்பப்பட்டு வந்துள்ளேன். புஷ்பகமெனப் பெயர் பெற்றவன். முன்பு நான் உம்மிடமிருந்து விடைபெற்று குபேரனுக்குப் பணி விடை செய்யும் பொருட்டு அனுப்பப்பட்டேன். அவன் என்னை நோக்கி, 'அயோத்யாதிபதி ராமனால் எவராலும் வெல்ல முடியாத ராவணன் வதம் செய்யப்பட்டு, அவனிடமிருந்து நீ ராமனால் ஸ்வீகரிக்கப்பட்டவன், பரமாத்மாவான ஸ்ரீராமன் அந்த ராவணனை வென்று உன்னை ஸ்வாதீனம் செய்து கொண்டபடியால் நீ அவனுக்கு அதீனமாகின்றனை. ஆகையால் இனி நீ அந்த ராமனுக்கே வாகனமாயிருக்கக் கடவாய். இதுவே எனது விருப்பம். நீ ஸந்தோஷமாக அவனிடம் சென்று, அவ்வுத்தமனுக்கு வேண்டிய இடம் செல்லச் சிறந்த வாகனமாய் ஆவாய்" என்று கட்டளை யிட்டருளினான். ராம! அவ் வண்ணமே நான் உன்னை யடைந்துள்ளேன். ஆக்ஷேபணையின்றி என்னை ஏற்றுக் கொள்ளவும்'' என்று வேண்டிக் கொண்டது. புஷ்பக விமானதேவதை தன்னிடம் திரும்பி வந்து இவ்வாறு கூறியதைக் கேட்டு, ரகுவீரன், அத்தேவதையை நோக்கி, புஷ்பக விமானமே! அந்தக் குபேரன் எனக்கு நண்பனேயனறி வேறில்லை. நீ எங்கிருப்பிலும் வித்யாஸமில்லை. தற்சமயம் நீ அவனிடமே போய்ச் சேரவும். நான் எப்பொழுது மனத்தில் நினைக்கிறேனோ அப்பொழுது எனனிடம் சேர்ந்து, வேண்டிய இடங்களுக்கு ஆகாயமார்க்கமாய் என்னை வஹித்துக் கொண்டு செல்லவும், நீ பத்துத் திக்குகளிலும் உனக்கு இஷ்டமானப்படி செல்லலாம். நீ செல்லுமனவில் உனக்கு எவ்விடத்திலும் தடையுண்டாகாது. என்று கூறி அனுமதியளிக்க அவ்விமானம் ‘அவ்விதமே யாகுக' என்று தனக்கிஷ்டமானபடி சென்றது.

        இப்படியாக அந்தப் புஷ்பக விமானம் சென்றவுடன், பரதன் ஸ்ரீராமனை வணங்கிப் பின்வருமாறு கூறினன் - ஸ்ரீ ரவிகுர! தாங்களாக்ஷி புரியுங் காலத்தில், பிரஜைகள், வியாதியற்றவர்களாகவும், வயோதிகர்களும் மரணமடையாமலும், கர்ப்பிணி ஸ்த்ரீகள் ஸுக ப்ரஸவமுள்ளவர்களாவும், எல்லோரும் ஸந்துஷ்டர்களாகவுமே யுள்ளார்கள். மழையும் உசித காலத்தில் பொழிகிறது. காற்றும் ஸுக கரமாகவே வீசுகிறது. ஜனங்களெல்லோரும், இப்படிப்பட்ட அரசன் சிரஞ்ஜீவியாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றனர்.' என்று. இந்த மதுரமான பரதனுடைய வார்த்தையைக் கேட்டு ஸ்ரீராம பத்ரன் மனம் மகிழ்ந்தான்.

செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

ஶ்ரீ வால்மீகி ராமாயணம் – உத்தர காண்டம் 30

நாற்பத்தேழாவது ஸர்கம்

[ஸ்ரீராமன் தனது பட்டாபிஷேகங் காண வந்த அரசர்களுக்கு விடை கொடுத்தனுப்புவது.)

                பிறகு ஸ்ரீராமபிரான் தனது மாமனாரான ஜனகமஹாராஜரை அழைத்து, அவரை வணங்கி, அஞ்ஜலி ஹஸ்தராய் ‘தேவரீருடைய உயர்ந்த தபோபலத்தினாலேயே, ராவணனை நான் வென்றேன். இவ்வளவு நாள் எனது ஸபையில் எழுந்தருளியிருந்து அடியேனை கெளரவித்தது பற்றி மிக்க மகிழ்ச்சி. தேவரீர் உமது ராஜ்யத்தை விட்டு வெகுகாலம் வெளியே இருப்பது உசிதமல்ல, உடனே வேண்டிய தனங்களை எடுத்துக் கொண்டு உமது நகரத்திற்குச் செல்லவும். தேவரீருக்குத் துணையாக பரதனை உம்முடன் அனுப்பிவைக்கிறேன்'' எனக் கூறி விடை கொடுத்தான். மிதிலாதிபதியான ஜனகர் அது கேட்டு, மனம் மகிழ்ந்து, 'ஸ்ரீராம! வெற்றி வீரனே! நீ எனக்கு அளித்த உயர்ந்த பொருள்கள் எல்லாவற்றையும் எனது குமாரிக்கு நான் அன்பளிப்பாகக் கொடுக்கிறோனாதலால், அவற்றை இங்கேயே வைத்துக் கொள்ளவும்' என்று கூறி விடை பெற்றுச் சென்றார்,

        பிறகு ஸ்ரீராமன் தனது மாதுலனும் கேகய தேசத்தரசனுமான யுதாஜித்தை நோக்கி, கை கூப்பிக் கொண்டு 'மாதுலரே! எங்களுக்கு தேவரீரை விட்டுப் பிரிய மனமில்லையாயினும், அங்கு பாட்டனார் தேவரீரைப் பிரிந்ததனால் மிகவும் தபித்துத் துன்புறுவராதலால் தேவரீர் இப்பொழுதே தேவரீரது நகரத்திற்குச் செல்வது உசிதமென்று தோன்றுகிறது. லக்ஷ்மணன் தேவரீருக்குத் துணையாக வருவான். வேண்டிய ரத்தினங்களையும் பொருள்களையும் எடுத்துக் கொண்டு செல்லவும்”, என்று விடை கொடுத்தான். அது கேட்டு யுதாஜித்து ஸ்ரீராமசந்திரனை நோக்கி “ராமபத்ர! அவ்வண்ணமே நான் சென்று வருகிறேன்” என்றார்.

        “நீ எனக்குக் கொடுத்த ரத்தினங்களும் பொருள்களும், என்னால் உனக்குப் பிரீதியுடன் திரும்பக் கொடுக்கப்படுகிறது. ஆதலால் அவை உன்னிடத்திலேயே அக்ஷயமாக இருக்கட்டும்” என்று கூறி விடை பெற்றான்.

        அதற்குப் பிறகு ஸ்ரீராமன் தனது உயிர் நண்பனான காசி ராஜனை நோக்கி, 'நண்பனே! உனக்கு என்னிடம் உள்ள அன்பு விச்வாஸங்களை நீ நன்கு வெளியிட்டுள்ளாய். நீ ராவணனை வதம் செய்யும் விஷயத்தில் பரதனுடன் கூடி எனக்கு உதவி புரிய முயற்சி செய்தாயன்றோ' உன்னைவிட உயிர்த்தோழன் எனக்கு வேறொருவனிலன். நீ நகரத்தை விட்டு வந்து வெகு நாட்களானமையால், நீ உனது நகரத்திற்குப் புறப்பட்டுச் செல்லவும்' என்று கூறி விடை கொடுத்தான். அது கேட்டு காசிராஜன் மகிழ்ச்சியுற்று வேகமாக வாராணஸிக்குச் சென்றான். இப்படி அவர்களை அனுப்பி விட்டு ரகுநந்தனன் மற்றுமுள்ள முன்னூறு அரசர்களை நோக்கி, களிப்புடன், 'அரசர்களே! உங்களுக்கு என்னிடத்திலுள்ள அன்பு அளவு கடந்தது. அஃது உங்கள் பராக்கிரமத்தினால் நன்கு பரிபாலிக்கப் படுகின்றது. உங்களது ஸத்யமும் தர்மமும் என்றும் ஒரே மாதிரியானவை. உங்களுடைய பிரபாவத்தினாலும், தபோ பலத்தினாலும், துர்புத்தி கொண்ட மஹான்களுடைய ராவணன் கொல்லப் பட்டான். இப்பொழுது நீங்களனைவகும், அவரவர்களுடைய நகரங்களை விட்டு வந்து, வெகுநாட்களாகிறபடியால், இனி அவரவரது நகரங்களுக்குச் செல்லுக' என்று விடை கொடுத்தனன். அவ்வரசர்களனைவரும் மிகவும் ஸந்தோஷத்துடன. “ஸ்ரீராம! வீரவரனே! எங்களது பாக்ய விசேஷத்தால் நீ ராவணனை வதம் செய்தாய். செந்தாமரை போன்ற திருக்கண்களும், அழகிய நாசியும், சிவந்த உதடுகளும் வெண்மையான முத்துப் போன்ற பற்களும், அமைந்து சரத்காலச் சந்திரனென ஒளிபெற்று விளங்குகின்ற உனது முகத்தைத் தரிசித்த நாங்கள் தன்யர்கள் ஆனோம், இதோ நாங்கள் விடை பெற்றுச் செல்லுகின்றோம். நீ எப்பொழுதும் எங்கள் உள்ளத்திலேயே குடிகொண்டிருக்கின்ருய். சக்ரவர்த்தியே! உனது பிரீதி எங்களிடத்தில் என்றும் மாறாதிருத்தல் வேண்டும்' என்று கூறி விடை பெற்றுச் சென்றனர்.

நாற்பத்தெட்டாவது ஸர்கம்

[அனேக தேசத்தரசர்களனுப்பிய பஹுமானங்களை ஸ்ரீராமன், வானர வீரர்களுக்குப் பரிசாக அளித்து அவர்களுடன் ஒரு வருஷம் ஸுகித்திருத்தல்]

            ஸ்ரீராமபிரானிடம் விடைபெற்றுச் சென்ற நாநா தேசத்தரசர்களும், தந்தாம் நகரத்தையடைந்து, ஸ்ரீராமனுக்குப் ப்ரீதி செய்வதன் பொருட்டு, அனேகவிதமான உயர்ந்த பரிசுகள், ரதங்கள யானைகள், குதிரைகன் ரத்தினங்கள், திவ்யமான ஆபரணங்கள், மணிகள், முத்துக்கள், பவழங்கள், பேரழகிகளான தாஸிகள், தோலினால் நிர்மாணிக்கப்பட்ட உயர்ந்த சயனங்கள் ஆகிய பலவும், தம்முடனே வந்த பரதன் முதலானவர்களிடம் உபஹாரமாசுக் கொடுத்தனுப்பினர். பரதன், லக்ஷ்மணன், சத்ருக்னன் முதலானோர், அவைகளனைத்தையும் அன்புடனே பெற்று அயோத்திக்குத் திரும்பினர்.. ஸ்ரீராமன் அப்பரிசுகளை அதிகப்ரீதியுடன் ஏற்றுக் கொண்டு அவற்றையெல்லாம் தமக்குப் பேருதவி புரிந்த, ஸுக்ரீவ மஹாராஜருக்கும், விபீஷணாழ்வானுக்கும், மற்றும் பல வானர ராக்ஷஸர்களுக்கும் அளித்தனன்.

        பிறகு ஸ்ரீராமன் அனுமானையும் அங்கதனையும் அழைத்து, மடிமீது உட்கார வைத்துக் கொண்டு, ஸுக்ரீவனை நோக்கி, இவ்வனுமான் உனக்கு நல்ல மந்திரியுமாக அமைந்தது உனது பாக்ய விசேஷமே யாகும். இவர்கள் உனது நன்மையை எவ்வாறு கருதுகின்றனரோ, அவ்வாறே எனது நன்மையையும் கருதுகின்றனர். ஆகவே! வானர ராஜனே! உன் பொருட்டாக இவர்களுக்கு, எவ்வளவு உபசாரங்கள் செய்யினும் ஏற்கும்' என உரைத்துத் தான் திருமேனியிலணிந்து கொண்டிருந்த விலையுயர்ந்த திருவாபரணங்க ளெல்லாவற்றையும் கழற்றி அங்கதனுக்கும் அனுமானுக்கும் அணிவித்து அழகு பார்த்தான். அதன் பிறகு ராமன், நீலன் நளன் - கேஸரீ - குமுதன் - ஸுஷேணன் -கஜன்- கவாக்ஷன்-ததிமுகன் முதலிய வானர வீரர்களைக் கொண்டாடி, அவரவருக்கு ஏற்றவாறு, அற்புதமான ஆடையாபரணங்களும் அணிவித்து, ஆலிங்கனமும் செய்து கொண்டான். அந்த வானரர்கள் மிகவும் இனிமையான, மது மாமிஸங்களையும், நாநாவிதமான காய் கிழங்குகளையும் யதேஷ்டமாக அருந்தி நல்ல மணமுள்ள விசித்ரமான மலர்களையும் அணிந்து மனம் மகிழ்ந்தவர்களாகி, அயோத்தி நகரிலேயே வஸித்துக் கொண்டிருந்தனர். இப்படியாக அவர்கள் ராமச்சந்திரனுடன் ஒரு வருஷ காலம் இனிது வஸித்து வர மறுபடியும் பங்குனி மாதம் வந்துவிட்டது.

புதன், 8 பிப்ரவரி, 2023

வால்மீகி ராமாயணம்–உத்தர காண்டம் 29

நாற்பத்தாறாவது ஸர்கம்

[அகஸ்திய முனிவர் கூறிய-ராவணனின் ச்வேத த்வீபகமனம், அங்கு அவனடைந்த பரிபவம், மறுபடி அங்கு ஸநத்குமாரரை ஸந்திப்பது முதலியன.)

        மீண்டும் ராவணன், உலகத்தவரை வெற்றி கொள்ள விரும்பியவனாகி, சூரர்களான ராக்ஷஸர்கள் பலர் சூழப்பெற்று இப் பூமண்டலமெங்கும் ஸஞ்சரிக்கும் பொழுது, நாரத முனிவர் அவனெதிரில் வரக்கண்டு, ஸந்தோஷமடைந்தவனாய், அவரை வணங்கிப் பூஜித்து, அவரைப் பார்த்து 'ஸ்வாமின்! நாரதமுனிவரே! தாங்கள் மூவுலகங்களிலும் ஸஞ்சாரம் செய்கிறீரல்லவா? என்னுடன் போர் புரியக் கூடிய பலசாலி இவ்வுலகினில் எவரேனும் உளரா? அப்படியிருப்பின் அவர்களிருப்பிடத்தை எனக்குக் கூறவும்' எனக் கேட்டான்.

                நாரதர் ராவணனை நோக்கி, ஒரு முகூர்த்த காலம் சிந்தனை செய்து, பின்வருமாறு கூறினார்- அரசனான ராவண! பாற்கடலின் மத்தியில், ச்வேத த்வீபமென்கிற திடலொன்றுள்ளது. அங்குள்ள மானவர்கள் பால் போன்ற வெண்மையான நிறம் உள்ளவர்களாகவும், மிகுந்த பலசாலிகளாகவும். மிகப்பெரிய சரீரங்களை உடையவர்களாகவும், மேக கர்ஜனம் போன்ற குரலையுடையவர்களாகவும், மிக்க தைரியசாலிகளாகவும் மிக நீண்ட கைகளையுடையவர் களாகவும் விளங்குகின்றனர். நீ விரும்பியபடி உன்னோடு போர் புரியத் தக்கவர்களாக அவர்களுள்ளார்களென நினைக்கிறேன், என்றார்.

        இதைக் கேட்ட ராவணன் - மறுபடியும் நாரதரைப் பார்த்து - 'மஹர்ஷியே, அந்தத் தீவில், மானிடர்கள் பலசாலிகளாக இருப்பதற்கென்ன காரணம்? அம்மகானுபாவர்களுக்கு அந்த ச்வேத த்வீபம் வாஸ ஸ்தானமாயமைந்ததற்கு காரணம் யாது? இவை யாவையும் உள்ளபடி அடியேனுக்கு அருளிச் செய்ய வேண்டும்', என வேண்டினான். நாரதர் அவனை நோக்கி, “ராவண அம்மனிதர்கள் வேறு சிந்தனையின்றி எப்பொழுதும் நாராயணனையே மனத்திற் கொண்டு அவனே தமக்கு ரக்ஷக னென்றுணர்ந்து எப்பொழுதும் அவனையே தியானம் செய்து கொண்டு வாழ்கின்றனர்.

        அவர்களுடைய ஜன்மாந்தர புண்ணிய விசேஷத்தினால் அத்தீவினில் வஸிக்கும்படியான பாக்கியம் அவர்களுக்குக் கிடைத்துள்ளது. சங்கொடு சக்கரம் ஏந்துந் தடக்கையனான ஸ்ரீமந் நாராயணன் தனது சார்ங்கமென்னும் வில்லை வளைத்துச் சமர்புரிய, அவர் கையால் அடியுண்டவர் எவரோ, அவர்களுக்கே எல்லாவற்றிற்கும் மேலான அவ்வுலகம். தானம், தவம், வேள்வி முதலியவை புரிந்தவர்களுக்கும், துறவறம் பூண்டவர்களுக்கும் எளிதிற் கிடைப்பதரிதாகும். என்றார். இது கேட்டு ராவணன் வியப்புற்றவனாகி, நெடுநேரம் ஆலோசனை செய்து, 'யான் அந்த நாராயணனுடன் எதிர்த்துப் போர் புரிவேன்’ என்று தீர்மானித்து ச்வேத த்வீபத்தை நோக்கிச் செல்லலாயினன்.

        இங்ஙனம் தேவர்களுக்கும் செல்வதற்கரியவிடமான ச்வேத த்வீபத்தை அவன் அணுகியதும், அவன் அமர்ந்து சென்ற புஷ்பக விமானம, அந்தத் தீவினது ஒளியால் எரிக்கப் பட்டதாகி. அங்கு உண்டாகிய காற்றில் வேகத்தினால் மோதப்பட்டு நிலை கொள்ளத் திறமை அற்றதாகியது கண்ணெடுத்துக் காணவும் அரியதாக விளங்கும் அத்தீவினிடஞ் சேர்ந்த அளவில் ராவணனது மந்திரிகள் அஞ்சி நடுங்கியவர்களாகி ராவணனை நோக்கி, “அரசே! நாங்கள் இவ்விடத்தை அணுகிய அளவில், அறிவையும் ஆலோசனையையும் இழந்து மூடர்களாயினோம், நிலைத்து நிற்கவும் சக்தியற்றுத் தவிக்கிறோம். ஆதலால் நாங்கள் எதிர்த்துச் சமர் புரிவது எங்ஙனம்? என்று கூறி யாவரும் ஒன்று கூடி ஓடிப் போயினர். அதற்குள் நாரத முனிவர் அந்தத் தீவை அடைந்து அங்கு நடக்கும் அதிசயத்தைக் காண விரும்பி அங்குச் சென்றனர். ஆனால் ராவணன் கொஞ்சமேனும் பயப்படாமல் விமானத்தைவிட்டு இறங்கி. பயங்கரமான  பத்துத் தலைகளுடன் கூடின உருவத்தைத் தரித்து, அந்த ச்வேத த்விபத்தில் பிரவேசிக்கலாயினான்.. அவன் அத்தீவில் புகுந்த மாத்திரத்தில் பல கட்டழகு வாய்ந்த பெண்மணிகள் அவனைக் கண்டனர். அவர்களிலொருத்தி ராவணனைக் கண்டு நகைத்து. அவனது கையைப் பிடித்துக் கொண்டு, “நீ யார். இங்கு வந்த காரணமென்ன? என வினவினள்,

        அது கேட்ட ராவணன், கோபங் கொண்டு அவளை நோக்கி, “நான் விச்ரவஸ் முனிவரது புதல்வன். ராவணன் எனப் பெயர் பூண்டவன் நான் யுத்தம் செய்வதன் பொருட்டு இங்கு வந்தேன்.” என்று கூறினான். ராவணன் இவ்விதம் கூறியதைக் கேட்ட அங்கிருந்த பெண்கள் குலுங்க நகைத்தனர். அவர்களிலொருத்தி சினங் கொண்டு ராவணனை ஒரு குழந்தையெனக் கையிலெடுத்து வினோதமாய் அவனைச் சுழற்றிக் கீழே வீழ்த்தி, மற்றெரு தோழியை அருகிலழைத்து, 'ஸகி! நீ இப்பூச்சியைப் பார்த்தனையா? பத்து முகமும் இருபது கைகளுமுடையதாய், மைபோலக் கருநிறமாயிருக்கின்றது." என்று கூறி, மீண்டுமவனை எடுத்து, மற்றெருத்தி கையிலெறிந்தனள். அவள் வேறொருத்தி கையிலெறிந்தனள், இங்ஙனமவர்கள், கைக்குக்கைவீசி எறிவதைத் தாங்க முடியாது தசானனன் தவித்து ஆயாசமுற்றனன். அப்பொழுது அவன் கோபங் கொண்டு, ஒரு அழகியைக் கையில் பற்களால் பற்றிக் கடித்தனன். அவ்வேதனையைப் பொறுக்க முடியாது. அந்த மாது அவனைக் கீழே எறிய, மற்றெரு மங்கை அவனைக் கையிலெடுத்துக் கொண்டு வானத்தில் எழுந்தனள். ராவணன் மிக்கச் சினங்கொண்டு அவளை நகங்களால் நன்றாகப் பீறினான். அந்த வலியினால் அவளும் அவனைக் கீழே விட்டுவிட, அவன் அங்கிருந்த ஆழமான கடலினிடையே, வஜ்ராயுதத்தினால் அடியுண்ட மலையென விழுந்து, அக்கடலின் மீதே மிதந்து கொண்டு கிடந்தனன்.

        ஸ்ரீராம! இங்ஙனம் ச்வேத த்வீப வாஸிகளான வனிதையர்களால் ராவணன் வருத்தப் பட்டவனாகி மயங்கித் தவித்தனன். இதை நாரத முனிவர் கண்டு மிக்க மகிழ்ச்சி கொண்டு, நகைத்து நர்த்தனம் செய்தனர். பிறகு ராவணன், அக்கடலின் தென்கரையை அடைந்து, 'ஆ இஃதென்ன ஆச்சரியம்! நான் உலகமெல்லாம் சென்று ஜயம் பெற்றேன். ஸ்வபாவமாகவே ஆற்றலில்லாத வர்களாய், அபலைகள் எனப்பெயர் பெற்ற பெண்களுக்கு இவ்விதமான செய்கை இயல்பிற்கு விரோதமானது அன்றோ! இவ்வுலகத்து மனிதர்கள் நாரதர் கூறியபடி ஸர்வ வல்லமை உள்ளவர்கள் போலும்! அவர்களே இங்ஙனம் அரிவையர்களாக வேடம் பூண்டு, என்னைப் பரிபவப்படுத்தினர் என நினைக்கிறேன்! அத்தகைய பலவான்களுடன் சினேகம் செய்து கொள்வதே சிறப்புடையது' என்று சிந்தித்துத் தேறினன்.

        பின்னர் அவர்களது வரலாற்றை நன்கு உணருமாறு, அவன் அங்குள்ள வனமெங்கும் சுற்றித் திரிந்தனன். அங்குள்ள ஓர் குகையில், ஸனத்குமார முனிவரைக் கண்டு, அவரை நோக்கித் “தபோதனரே! இந்த உலகம் எந்த மகானுபாவனால் உண்டுபண்ணப் பட்டது? இவ்வுலகத்தில் வஸிப்பவர் யார்? தேவரீர் எவரை உள்ளத்தில் கொண்டு தியானம் செய்கின்றீர்? இவை யனைத்தையும் எனக்குக் கூறவும், என்றான். இவ்வாறு ராவணன் வினவியது கேட்டு, அம் மஹா முனிவர், 'குழந்தாய் ராவண! கூறுகிறேன், கேள். ஸகல உலகங்களையும் படைத்துக் காத்தருளும், ஆதி அந்த ரஹிதனான நாராயணனால் தனக்கு வாஸஸ்தானமாக இவ்விடம் கல்பிக்கப் பட்டது. இங்குள்ளவர்கள் அந்த நாராயணனையே தஞ்சமெனக் கொண்டு, அவனைப் பூஜிக்கின்றனர். ராவண! முனிவர்கள் தொழுதேத்தும், அந்த நாராயணனையே நீ நாடக்கடவாய். பிரம்ம தேவனும் அந்த பரப்பிரம்மத்தை அறிந்தவனல்லன். ஸகலலோக நாதனும் ஜகத்துக்குக் காரணபூதனுமான அப்பெருமானை எவன் எப்பொழுதும் பூஜிக்கிறானோ அவன் நிச்சயமாக அந்தமில் பேரின்பமான மோக்ஷ ஸாம்ராஜ்யத்தை அடைவான்' எனக்கூறினர்.

        பிறகு ராவணன் அம்முனிவரிடம் விடைபெற்றுக் கொண்டு இலங்காபுரி போய்ச் சேர்ந்தான். நாரதரும் அத்தீவை விட்டு மேரு மலையிலுள்ள பிரம்ம தேவனுடைய மகாசபையை அடைந்து, தான் கண்ட அதிசயத்தை பிரம்ம தேவனிடம் கூறினர். அப்பொழுது நான்முகன் நாரதரைப் பார்த்து, 'குழந்தாய்! ராக்ஷஸர்களில் தலைவனான ராவணன் முன் ஜன்மத்தில் ஹிரண்யகசிபுவாகப் பிறந்திருந்தனன். அவன் பலவிதமாகத் தவம் செய்து வேண்டிய வரன்கள் பெற்றுச் சிறந்த பலசாலியாய் எவராலும் வெல்லுவதற்கரியனாய் இருந்தனன். அச்சமயம் அவன் நரசிங்க மூர்த்தியினால் இழுக்கப் பட்டு எம்பெருமானது மடியில் கிடந்தவாறே அவரது உகிர்களால் உடல் பிளந்து பரிதபித்துக் கொண்டிருக்கையில், பூர்வ ஜன்ம ஜ்ஞானம் உண்டாகப்பெற்று. அப்பெருமானை நோக்கி, “ஹே தேவ! அடியேனை ரக்ஷித்தருள்க, அடியேனுக்கு இனி நேரிடப் போவதான ராக்ஷஸப் பிறவி தேவரது திருக்கரத்தினால் ஒழிந்து அங்ஙனமே அதன் பிறகு உண்டாகும் மானிடப் பிறவியும் ஒழிந்த பின்னர் அடியேன் தேவரீருடைய ஸாம்யத்தை அடைந்து முக்தி உலகம் பெறுமாறு அருள்புரிய வேண்டுகிறேன். ஹே! ஜகந்நாத! அங்ஙனமே கடாக்ஷித்தருள்க!” என வேண்டிக் கொண்டான். நரஸிங்கமூர்த்தி அது கேட்டு ‘அவ்வாறே ஆகுக' என அருள்புரிந்து அற்புதமான விமானத்திலேறிச் சென்றனர். நாரத! அந்த ஹிரண்ய கசிபு இப்பொழுது ராக்ஷஸ (ராவண) னாகப் பிறந்திருக்கின்றனன். இவன் எப்பொழுதும் அந்த நாராயணனையே, சிந்திப்பவனாகி நாளைக் கழிக்கின்றனன். இனி அவன் மானிடனாகப் பிறந்து உலகங்களைத் துன்புறுத்தத் தலைப்படுவான். அந்த மூன்றாவது பிறவியிலும், விஷ்ணு தேவனால் வதையுண்டு பெறுதற்கரிய விஷ்ணு ஸம்பந்தமான சோதியில் புகுந்து, ச்வேத த்வீபத்தை அடைவான்.

        “நாரத! ஸகல பாபங்களையும் போக்குவதான இந்தப் புண்ணியமான வைஷ்ணவ சரித்திரத்தை எவன் நித்யம் ஆதியோடந்தமாகப் படிக்கின்றானோ அவன் உயர்ந்த கதியை அடைவான்”, என்றார். ஸ்ரீராம! பிறகு நாரத முனிவர், மேரு மலையை வலம் செய்து கொண்டு எனது ஆச்ரமத்திற்கு எழுந்தருளினார். அப்பொழுது நான் அவரை வணங்கி வரவேற்றுப் பூஜித்தேன். அப்பொழுது முனிவர் இக்கதையை எனக்குக்  கூறினர். அதை அப்படியே இப்பொழுது நான் உனக்குச் சொன்னேன்.

        ஹே ராகவ இக்காரணம் பற்றியே துராத்மாவான ராவணன் மரணமடைய விரும்பி மைதிலியை அபஹரித்துக் கொண்டு சென்றனன். ஆதலால் நீ பஞ்சாயுதங்கள் தரித்த அந்த பரஞ்சோதியான நாராயணனேயன்றி வேறல்ல. இதை நீயே உனது சக்தியைக் கொண்டு உணர்வாயாக.. நீ ஸகல உலகங்களையும் ஸ்ருஷ்டித்துக் காத்து அழிப்பவனன்றோ!. நான்கு வேதங்களின் பொருளாய் நிற்பவன் நீயேயன்றோ! நாராயணனான நீ ராவணனை ஸம்ஹரிப்பதற்காக ராமாவதாரம் செய்தருளினை ஹே ராம! உன்னை நீ யாரென்று அறிந்து கொள்ளவில்லையா? எங்களை மோஹிப்பிக்காதே, நியே முன்பு மஹாபலியை வஞ்சித்து மூவடியால் உலகளந்தனை நீ இப்பொழுது வந்து அவதரித்த காரியம் முடிந்தது. ஶ்ரீமகாலக்ஷ்மியே ஸீதையாக வந்து அவதாரம் செய்தனள். அந்த தேவியை ராவணன் பிரயத்தனப்பட்டு இலங்காபுரிக்குக் கொண்டு போய் தாயைப்போல் வைத்து வெகு கருத்துடன் பாதுகாத்தனன், ஹே ராமச்சந்திர! முக்காலமுணர்ந்த முனிவரான நாரதர் எனக்கு உரைத்தவை யாவும் உனக்கு எடுத்துக் கூறினேன.் இவை யாவும் ஸனத் குமாரர் சொற்படி கேட்டு, அதன்படி ராவணன் செய்த காரியமேயன்றி மற்றொன்றுமல்ல. இதன் பெருமையை உணர்ந்து எவன் இந்த சரித்திரத்தை, சிராத்த காலத்தில், பிராம்மணர்களுடைய ஸன்னிதானத்தில் அவர்கள் கேழ்க்குமாறு செய்கிறனோ அவனுடைய பித்ருக்களுக்கு, அநந்தமான அக்ஷ்யம் அளிக்கப்பட்டதாகும்" என்று கூறி முடித்தார்.

        திவ்யமான இக்கதையைக் கேட்டுச் செந்தாமரைக் கண்ணனான ஸ்ரீராமபத்ரன் தனது பிராதாக்களுடனே அளவிலாத ஆநந்தமடைந்தனன். அந்தச் சபையில் கூடியிருந்த, சுக்ரீவன் முதலிய வானரர்களும் விபீஷணன் முதலிய ராக்ஷஸர்களும், மந்திரிகளும், ஏனையோரும் கேட்டுக் கண்கள் மலர்ந்து களிப்புற்றவர்களாகி, ஸ்ரீராமச்சந்திரனையே வைத்த கண் வாங்காமல் கண்டு நின்றனர். அகஸ்திய முனிவரும், ஸ்ரீராமனிடம் விடைபெற்றுத் தமதிருப்பிடம் சென்றனர்.