ஐம்பத்தோராவது ஸர்கம்
[ஸீதையும் இராமனும் உத்யான வனம் சென்று மகிழ்வதும், ஸீதை கர்ப்பம் தரித்தலும், அவள் மறுபடி கங்கா தீரம் சென்று ரிஷிகளாச்ரமத்தில் ஒரு நாளேனும் தங்கி வஸிக்க விரும்பியதும்.)
இப்படியாக ஸ்ரீராமசந்திரன் புஷ்பக விமானத்திற்கு விடை கொடுத்து அனுப்பிய பிறகு, உல்லாஸமாக உலாவிப் பொழுது போக்குமாறு, ஒரு நாள் தனது உத்யான வனத்திற்குச் சென்றான். அந்த உத்யான வனத்தில் அனேக அழகிய மரங்களும், பல விதமான மணங்கமழும் புஷ்பச்செடிகளும், எங்கும் நிறைந்திருந்தன. அங்கு மதுவைக் குடித்து வண்டினங்கள் முரல, மயிலினங்கள் ஆட, குயிலினங்கள் கூவ மிகவும் ரமணீயமாயிருந்தது. தேன் நிறைந்து மணம் வீசுகின்ற தாமரை, கருநெய்தல் முதலான புஷ்பங்கள் மலர்ந்து, வேறு நானாவிதமான மலர்கள் நிறைந்த, பலவிதமான வாவிகள் தெளிந்த நீர் நிறையப் பெற்று அங்கங்கு அதிகமாகத் தோற்றமளித்தன. அவ்வாவிகளெங்கும், மாணிக்கக் கற்களால் படித்துறைகள் கட்டி, ஸ்படிகக் கற்களால் மறை சுவர் எடுத்து நீராடும் துறைகளமைந்து அழகு பெற்றிருந்தன. அந்த வாவிகளில் மலர்ந்த தாமரைக் காட்டிலே, சக்கரவாகம், ஹம்ஸம், ஸாரஸம் முதலான நீர்ப் பறவைகள் சிறகடித்துக் கலவிக்களித்து விளையாடிக் கொண்டிருந்தன. இவ்வித அழகு பெற்று, அங்கங்கே அனேகவிதமான ஆஸனங்களும், சிறு வீடுகளும், கொடிவீடுகளும் அமைந்து, தேவேந்திரனுடைய நந்தவனமெனவும், குபேரனது சைத்ரரதமெனவும் விளங்கும், அந்தப் பூஞ்சோலையில் புகுந்து, ஸ்ரீராமசந்திரன், ஸீதா தேவியுடன் அங்கோரிடத்தில் தனக்கென நிர்மாணித்திருந்த அழகான ஆஸனத்தில் அமர்ந்திருந்தனன். அப்பொழுது ஸ்ரீராமன் தனது காதலியைக் கையிற் பிடித்துக் கொண்டு, 'மைரேயம் என்கிற மதுரமான, ஒருவகைத் தேனை அந்த ஸீதைக்கு உண்பிக்கலாயினன். அக்காலையில், வேலையாட்கள் ஸ்ரீராமனுக்கு, அழுது செய்வதற்காகப் பலவிதமான கனிகளைக் கொண்டு வந்து கொடுத்தனர். ஆடல், பாடல்களில் தேர்ச்சி பெற்றவர்களான அழகிய இளம் மங்கையர்கள் மது பானம் செய்து மதித்தவர்களாகி, ஸ்ரீராமனுக்கு முன்பு வந்து தோன்றி. ஆடிப்பாடிப் புகழ்ந்தனர். அகங் களிக்கச் செய்பவர்களான அவ்வழகிகளைக் கண்டு ஸ்ரீராமன் தனது காதலியோடு கூடி இன்புற்று மகிழ்ந்தான்.
இப்படித் தினந்தோறும் ஒழிந்த வேளைகளில் அவ்விருவரும் உத்யானவனம் சென்று வினோதமாகப் பொழுதுபோக்கி வந்தனர். ஸகல போகபோக்யங்களையும் பெற்று வாழும் ஜாநகீ ராமர்களுக்கு, இவ்விதமாகவே பதினாயிரம் ஆண்டுகள் பெருமையாகச் சென்றன. அது காலையில் ஸ்ரீராமபிரான் பிரதி தினமும் முற்பகலில் ராஜாங்க ஸம்பந்தமான ஸகல காரியங்களையும், நீதி முறை தவறாது நிறை வேற்றி, அதன் பின்னர் அந்தப்புரம் சென்று பிராட்டியுடன் அகமகிழ்ந்திருக்கலாயினன்.
இங்ஙனம் நிகழ்ந்து வருகையில், ஸீதை கர்ப்பவதியாயினள். அப்பொழுது ஒரு நாள், ஸ்ரீராமன் ஸீதா தேவியை நோக்கி, ''வைதேஹி! நீ கர்ப்பமுற்றிருப்பது எனக்கு[T1] மிகவும் ஆனந்தத்தை உண்டு பண்ணுகிறது. நீ இப்பொழுது விரும்புவது யாது? நீ எதை வேண்டினாலும் அதை நான் நிறைவேற்றுவேன்?' எனக் கூறினான். இது கேட்டு ஜனகராஜன் மகளான ஸீதை புன்னகை கொண்டு, "ஸ்வாமி, ஸகல கல்யாண குணங்களும் வாய்ந்த தேவரீரைக் கணவராகப் பெற்ற அடியாளுக்கு, வேறென்ன விருப்பமுள்ளது? ஆயினும் தேவரீரே இங்ஙனம் கேட்கிறபடியால், ஒன்று வேண்டுகிறேன். முன்பு போல இன்னுமொரு தரம் கங்கைக் கரையிலுள்ள மிகப் பரிசுத்தமான தபோவனங்களிற் சென்று, அங்கே கனி கிழங்குகளையே உணவாகக் கொண்டு, விளங்கும் மஹரிஷிகளுடைய பாத மூலத்தில் பணிவிடை செய்து கொண்டு அவ்விடத்தினழகை அனுபவிக்க விரும்புகிறேன். பலநாள் தங்கியிருக்க இயலாமற் போனாலும் ஒரு நாளாயினும், அவ்விடம் போயிருந்து வரவேண்டுமென விரும்புகிறேன்" எனக் கூறினாள். இது கேட்டு ஸ்ரீராமன், 'ஜானகி] அங்ஙனமேயாகுக. நாளைய தினமே அவ்விடம் சென்று வரலாம்'' என உரைத்து ஸந்தோஷித்திருந்தனன்.
ஐம்பத்து இரண்டாம் ஸர்க்கம்
[ஸ்ரீராகவன் சாரன் வாயிலாக, ஸீதாபவாதவார்த்தையை ஜனங்கள் கூறுவதாகக் கேட்டறிதல்.)
இவ்வாறு ஆனந்தமாயிருக்கும் பொழுது, ஒரு நாள் ஸ்ரீராகவன் மந்திரி முதலானோர் புடைசூழ, ராஜ ஸபையில் எழுந்தருளியிருக்கையில், விஜயன், மதுமத்தன், காச்யபன், மங்களன், கடன், ஸுராஜன், காலியன், பத்ரன், தந்த வக்த்ரன், ஸுமாகதன், முதலானவர்கள் வந்து, பலவிதமான பரிஹாஸக் கதைகளை பேசி, அரசனுக்கு ஸந்தோஷத்தை விளைவித்து வந்தனர், அப்பொழுது ஸ்ரீராகவன் அவர்களைப் பார்த்து, 'நல்லது, இது இவ்வளவோடு நிற்கட்டும். ஹே பத்ர! நகரத்திலாயினும் நாட்டிலாயினும், நகரத்தாரும் நாட்டாரும், என்னைப் பற்றி என்ன கூறுகிறார்கள்? ஸீதையைப் பற்றி என்ன நினைக்கின்றனர்? பரதன் லக்ஷ்மணன் சத்ருக்னன், நம் தாயாரான கைகேயி இவர்களைப் பற்றி என்ன என்ன பேசிக் கொண்டிருக்கின்றனர்? நாட்டிற்குப் புதிதான ஒரு அரசன் ஏற்படுகையில் ஜனங்கள் ஏதாவதொன்றை அவனைப் பற்றிக் கூறுவது உலக வழக்கமன்றோ” என்று கேட்டனன். அது கேட்ட பத்ரன் என்பவன், கை கூப்பிய வண்ணம் மேல் வருமாறு கூறினான்.
அரசரே! தேவரீர் ராவணனை வதம் செய்து வெற்றி வீரனாக வந்ததை இந்நகரத்தாரனைவரும் புகழ்ந்து கொண்டாடுகின்றனர் என்றான். அதனைக் கேட்ட ஸ்ரீராமன், 'ஹே பத்ர! இது மட்டுமா? இன்னும் ஏதேனுமுள்ளதா? நன்மையோ தீமையோ, நகர வாஸிகள் கூறுமெல்லாவற்றையும் ஒன்று கூட விடாது யாவும் உண்மையாக நீ கூறவேண்டும், நன்மையோ தீமையோ எனக்குத் தெரிந்ததாகில் தீமையை ஒழித்து நன்மையை நான் வளர்த்த முயலலாகுமன்றே. ஆகவே நீ பயமின்றி தைரியத்துடனே, நாட்டிலுள்ளவர்களும் நகரத்திலுள்ளவர்களும், எங்களைப் பற்றிக் கூறிக் கொள்ளுகின்ற அனைத்தையும் விளக்கமாகக் கூறுவாயாக' என்று பணித்தனன்.
ஸ்ரீராமன் இவ்வாறு கூறக்கேட்டு, பத்ரன், அவரை வணங்கி, “ராஜனே! ஜனங்கள் பலரும் பேசிக்கொள்வது யாவதெனில், ஸ்ரீராமன் ஸமுத்திரத்தில் அணை கட்டி சூரனான ராவணனை வென்று, ஸீதா தேவியை மீட்டு வந்தது மிக்கப் பெருமையாகக் கொண்டாடத் தகுந்ததேயாயினும், அவனுக்கு ரோஷமென்பது சிறிதுமில்லாமற் போனது மாத்திரமே ஒரு பெருங்குற்றமாகும். ராவணன் வலிய எடுத்து, தன் மடி மீது வைத்துக் கொண்டு, இலங்கை சென்று வெகு நாள் சிறை வைத்த ஸீதையை ஸ்ரீராமன் மறுபடி தனது வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தானே! அந்த ஸீதையினிடத்தில் அவனுக்கென்ன அத்தனை மோகமா? இவ்வாறு இராக்கதர் வசத்தில், வெகு நாள் இருந்த மனைவியை இவ்விராமன் ஏன் வெறுக்காது, வைத்துக் குலாவுகின்றானோ? யாமறியோம். இதனைப் பார்க்கையில், நமது பெண்டிர்கள் இங்ஙனம் பிறர் வீட்டிற் போயிருந்து மீண்டு வரினும் நாமும் அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டிய தாகின்றதே, அரசன் செல்லுகின்ற வழியேயன்றோ குடிகளும் செல்லும். "யதாஹி குருதே ராஜா ப்ரஜா தமநுவர்ததே" यथाहि कुरुते राजा प्रअजा तमनुवर्तते என்று நாடு நகரத்திலுள்ள ஜனங்கள் பலவாறாகப் பேசிக்கொள்ளுகின்றனர், என விண்ணப்பம் செய்தான். இதனைக் கேட்ட ஸ்ரீராகவன் மிகவும் துக்கமடைந்தவனாக, மற்றைய ஸுஹ்ருத்துக்களைப் பார்த்து, இந்த பத்ரன் கூறுவது உண்மை தானா? என்று கேட்டான். அதற்கு அவர்களனைவரும், வணக்கத்துடன், 'இவன் கூறுவது யாவும் உண்மையே' எனக் கூறினர். இதனால் மேலும் துக்கமடைந்த ராகவன், ஸபையைக் கலைத்து, அவர்களை யனுப்பிவைத்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக