ஞாயிறு, 30 அக்டோபர், 2022

ஶ்ரீ மஹாபாரதம் வினா விடை 25

வினா 21.- இவ்வாறு கீசகன்‌ இறந்ததும்‌ என்ன நடந்தது?

விடை.- பீமன்‌ திரெளபதியை இவ்வாறு திருப்திப்படுத்தி விட்டு தன்‌ மடைப்‌ பள்ளிக்குச்‌ சென்றான்‌. திரெளபதி அருகிலிருந்த காவலாளர்களை அழைத்துத்‌ தனது கற்பைக்‌ கெடுக்க வந்த கீசகன்‌ தனது பர்த்தாக்களான கந்தர்வர்களால்‌ பட்டபாட்‌டைக்‌ காண்பித்தாள்‌. அவர்களும்‌ ஸைரந்திரி சொல்லுவது உண்மை என்று நம்பினார்கள்‌. இந்த ஸங்கதியை உடனே உபகீசகர்கள்‌ என்ற கீசகன்‌ தம்பிமார்கள்‌ கேள்விப்பட்டு நாடகசாலை வந்து தமது தமயன்‌ நிலையைக்கண்டு பரிதபித்தனர்‌.

வினா 22.- இவர்கள்‌ வந்ததும்‌ அருகே இருந்த திரெளபதிக்கு என்ன கஷ்டம்‌ வந்தது?

விடை.- உபகீசகர்கள்‌, அருகே ஒரு தூணில்‌ சாய்ந்து கொண்டு எல்லாவற்றையும்‌ பார்த்துக்கொண்டிருந்த திரௌபதியைக்‌ கண்ட உடனே அவர்களுக்கு அவளை அவமானப்படுத்த வேண்டுமென்று தோன்றிற்று. விராடராஜன்‌ பலமற்ற அரசனாகையால்‌ அவனிடமிருந்து ஸைரந்திரியையும்‌, கீசகனது தேகத்தோடு கட்டி எரித்துவிட அனுமதியைப்‌ பெற்றுக்கொண்டு வந்து, உபகீசகர்கள்‌ ஸைரந்திரியின்‌ தலைமயிரை இழுத்து கீசகனது பாடைக்‌ கொம்பில்‌ கட்டி அவளையும்‌ மயானத்திற்கு இழுத்துச்‌ சென்றனர்‌.

வினா 23.- இந்தக்‌ கஷ்டம்‌ திரெளபதிக்கு எவ்வாறு நீங்கியது?

விடை... மயானத்திற்குப்போகும்‌ வழியில்‌ திரெளபதி "ஏ ஜயா, ஜயந்தா, விஜயா, ஜயத்ளேனா, ஜயத்பாலா! என்னை இத்தருணத்தில்‌ கைவிட்டுவிடக்கூடாது” என்று கந்தர்வர்களை அழைப்பது போலப்‌ பாண்டவர்களை அவர்களது ஸங்கேதப்‌ பெயர்களைச்‌ சொல்லி அழைத்தாள்‌. இதை மடைப்பள்ளியில்‌ இருக்கும்‌ பீமன்‌ கேட்டதும்‌ அவன்‌ தனது உருவை ஒருவாறு மாற்றிக்கொண்டு தேகந்தெரியாது எழுந்து விரைவில்‌ கோட்டை மதில்‌ முதலிய தடைகளைத்‌ தாண்டிக்‌ குதித்து சீக்கிரத்தில்‌ மயானம்‌ வந்தான்‌. அவன்‌ வரும்பொழுது வழியிலிருந்த ஒரு பனைமரத்தைப்‌ பிடுங்கி எடுத்துக்கொண்டு விரைவாய்‌ வருவதைக்‌ கண்ட உபகீசகர்கள்‌ பயந்து ஸைரங்திரியை விட்டுவிட்டு நாலாபக்கங்களிலும்‌ ஓடத்தலைப்‌ பட்டனர்‌. பீமன்‌, உபகீசகர்கள்‌ 105 பேர்களில்‌ ஒருவரையும்‌ ஊருக்குள்‌ போகவிடாமல்‌ தனது பனைமரத்தால்‌ ஓங்கி அடித்து யமபுரம்‌ அனுப்பி, திரெளபதியைத்‌ தேற்றி அவளை. அந்தப்புரம் போகச்‌ சொல்லிவிட்டுத்‌ தான்‌ மடைப்பள்ளியை அடைந்தான்‌.

வினா 24.- இவ்வாறு ஸகல கஷ்டங்களும்‌ நீங்கித்‌ திரெளபதி அரண்மனைக்கு வந்ததும்‌ அங்கு என்ன நடந்தது?

விடை.- இப்படி கீசகனும்‌, உபகீசகர்களும்‌ மாண்ட ஸங்கதி அரசனுக்குத்‌ தெரியவர, அவனுக்கு ஸைரந்திரியை இனிமேல்‌ இங்குவைத்திருக்கக்‌ கூடாது என்ற எண்ணம்‌ வந்தது. அதை ஸுதேக்ஷணையிடம்‌ தெரிவித்தான்‌. இதற்குள்‌ திரெளபதி அரண்மனையில்‌ புகுந்தாள்‌. அப்பொழுது மடைப்பள்ளி வாயிலில்‌ இருக்கும்‌ பீமனைக்‌ கண்டதும்‌ ஆகாயத்தைப்‌ பார்த்துக்கொண்டு, சற்று நேரம்‌ கந்தர்வர்களை வாயாரத்‌ துதித்தாள்‌. உள்ளே போகும்பொழுது பிரகந்நளையும்‌, இராஜ குமாரிகளும்‌ இவளது க்ஷேமத்தை விசாரித்தார்கள்‌. அந்தப்புரம்‌ சென்றதும்‌ அரசனது எண்ணத்தை ஸைரந்திரியிடம்‌ ஸுதேக்ஷணாதேவி வெளியிட்டாள்‌. இதைக்கேட்டதும்‌ திரெளபதி தான்‌ இன்னும்‌ 13-நாள்‌ தான்‌ அங்கு இருக்கப்போகிறதாகவும்‌, அதன்‌ பின்பு தன்‌ பர்த்தாக்கள்‌ தன்னை அழைத்துப்போவார்கள்‌ என்பதாகவும்‌, அது வரையில்‌ பொறுத்‌திருந்தால்‌ அவர்களுக்குக்‌ கந்தர்வர்கள்‌ நன்மையையே செய்வார்கள்‌ என்பதாகவும்‌ சொல்லி விராடராஜன்‌ அந்தப்புரத்தில்‌ திரெளபதி ஸுகமாய்‌ வாழ்ந்திருந்தாள்‌.

வினா 25.- இப்படிப்‌ பாண்டவர்கள்‌ மறைந்து வாஸம்‌ செய்யுங்கால்‌ அவர்களைத்‌ தூர்யோதனாதியர்‌ எவ்வாறு கண்டு பிடிக்க முயன்றனர்‌? அவரது பிரயத்தனம்‌ என்னமாயிற்று?

விடை... துர்யோதனாதியர்கள்‌ 13-வது வருஷாரம்பமுதல்‌ எவ்வளவோ தூதரையும்‌, வேவுகாரரையும்‌ அனுப்பிப்‌ பாண்டவர்ளைக்கண்டுபிடிக்க முயன்றனர்‌. என்ன செய்தும்‌ பாண்டவர்களையாவது பாண்டவர்கள்‌ மறைந்து வாஸம்‌ செய்யும்‌ இடத்‌தையாவது அவர்களால்‌ கண்டு பிடிக்கமுடியாமல்‌ போய்விட்டது. இவர்களில்‌ விராடபட்டணம்‌ போய்வந்த வேவுகாரர்கள்‌ மாத்திரம்‌ பாண்டவர்கள்‌ இருக்கும்‌ இடத்தை அறியமுடியாத போதிலும்‌, கீசகன்‌ ஒரு ஸதிரீ நிமித்தமாய்‌ தனது தம்பிமார்‌ 105-பேர்களோடுமாண்ட அதிசய ஸமாசாரத்தை மாத்திரம்‌ கொண்டு வந்தார்கள்‌.

வினா 26.- இவ்வாறு வேவுகாரரை அனுப்புவித்த செய்தி முடிந்ததும்‌ துர்யோதன ஸபையில்‌ என்ன விஷயத்தைப்பற்றி யார்‌ யார்‌ என்னென்ன பேசினார்கள்‌? விடை... கர்ணனும்‌ சகுனியும்‌ “இன்னும்‌ அதிக ஸாமர்த்தியமுடைய வேவுகாரர்‌ மூலமாய்‌ பாண்டவர்களைக்‌ கூடிய சீக்கிரத்தில்‌ கண்டுபிடிக்கவேண்டும்‌" என்றனர்‌. “வேவுகாரர்‌ நன்றாய்த்தேடட்டும்‌. ஆனாலும்‌ கஷ்டங்கள்‌ அறியாத பாண்டவர்கள்‌ வனவாஸ அக்ஞாதவாஸ உபாதைகளால்‌ அவசியம்‌ இறந்தே யிருப்பார்கள்‌ என்று எனக்குத்‌ தோன்றுகிறது” என்று துராத்மாவான துச்சாஸனன்‌ சொன்னான்‌. “பாண்டவர்கள்‌ இறந்திருக்கமாட்டார்கள்‌. அவர்கள்‌ இருக்கும்‌ இடத்தை பிராம்மண தூதர்கள்‌ ஸித்தாள்‌ மூலமாய்‌ சீக்கிரம்‌ கண்டுபிடிக்க முயலவேண்டும்‌” என்றார்‌ துரோணர்‌. பீஷ்மர்‌ “பாண்டவர்‌ மஹாத்மாக்களாகையால்‌ அவர்கள்‌ இறந்திருக்கவே மாட்டார்கள்‌. அவர்கள்‌ சூதாட்டத்தில்‌ ஏற்பட்ட நிபந்தனைப்படி நடந்தாய்விட்டது. இனிமேல்‌ அவர்களைக்‌ கண்டுபிடித்துக்‌ காட்டுக்கனுப்புவது ஸரியன்று. அவர்கள்‌ இருக்கும்‌ தேசத்தில்‌ ஸகல சுபக்குறிகளும்‌ காணப்படும்‌, அசுபக்குறியே இருக்க மாட்டாது. அப்பட்டணத்திலுள்ளவர்கள்‌ தமது தர்மத்தைவிட்டு விலகாது, ஸன்மார்க்‌கத்தைப்‌ பின்பற்றுபவராய்‌ சண்டை சச்சரவு, வியாதி, அகாலமிருத்யு முதலியவைகளால்‌ வருந்தாது எப்பொழுதும்‌ ஸுகமாய்‌ வாழ்வார்கள்‌. ஆகையால்‌ அவர்கள்‌ விஷயத்தில்‌ நீ சீக்கிரமாக நியாயமாய்‌ நடந்து கொண்டால்‌ தான்‌ உனக்கு நலம்‌" என்று புத்திமதி கூறினார்‌. கிருபாசாரியர்‌, பீஷ்மர்‌ சொல்லியது யாவும்‌ ஸரி என அங்கீகரித்தார்‌. இவர்கள்‌ இவ்வாறு பாண்டவர்களைப்‌ பற்றிப்‌ பேசிக்கொண்டிருக்க திரிகர்த்த தேசாதிபதியாகிய ஸுசர்மா என்பவன்‌ தான்‌ அதுவரையில்‌ கீசகனால்‌ அனேகம் தரம்‌ தோல்வி யடைந்திருப்பதாகவும்‌ இப்பொழுது கீசகன்‌ இறந்து விட்டதால்‌, தான்‌ மறுபடியும்‌ விராட நகரத்தை நோக்கிப்‌ படையெடுத்துப்போய்‌ அதைப்‌ பிடித்து துர்யோதனது இராஜ்யத்தை விஸதாரப்படுத்துவதாகவும்‌ சொன்னான்‌. இதைக்‌ கேட்டதும்‌ துர்யோதனனுக்கு முன்னமேயே பீஷ்மர்‌ பாண்டவர்‌ களிருக்கும்‌ இராஜ்யத்தை வர்ணித்ததற்கும்‌, விராடநகரத்தின்‌ செழிப்பிற்கும்‌, ஏதோ பொருத்தம்‌ இருக்கிறதாகத்‌ தோன்றினமையால்‌ அங்கு ஒருவேளை படையெடுத்துச்‌ சென்றால்‌ பாண்டவர்களையும்‌ கண்டு பிடிக்கலாம்‌ என்று தோன்ற அவன்‌ ஸுசர்மா சொன்னதை ஒப்புக்கொண்டு, விராடநகரத்தின்மேல்‌ படையெடுத்துச்‌ செல்லுவதாகத்‌ தீர்மானித்தான்‌.

வினா 27.- விராட நகரத்தின்‌ மீது துர்யோதனாதியர்‌ எவ்வாறு படையெடுத்துச்‌ சென்று எவ்வாறு விராடராஜனைப்‌ போருக்கழைத்தனர்‌?

விடை... திரிகர்த்த தேசாதிபதிகள்‌ தமது படைகளோடு முதலில்‌ விராட நகரத்தின்‌ தெற்கே சென்று அங்குள்ள பசுக்கூட்டங்களைக்‌ கவர்ந்து விராட நகரத்தவரை வலுவில்‌ சண்டைக்கு இழுத்தனர்‌. துர்யோதனாதியர்‌, பீஷ்மர்‌ முதலியோர்‌ தாம்‌ செய்து கொண்டு வந்த ஏற்பாட்டின்படி மறுநாள்‌ விராடபட்டணத்தின்‌ வடபக்கத்திலிருந்த பசுக்கூட்டங்களைக்‌ கவர்ந்து சண்டை உண்டாக்கினர்‌.

வினா 28.- தெற்கே வந்த திரிகர்த்த தேசாதிபதிகளை எதிர்த்து யார்‌ போருக்குச்‌ சென்றது? இந்த யுத்தம்‌ எவ்வாறு முடிந்தது? ஏன்‌?

விடை... தெற்குதிக்கை நோக்கி விராடராஜன்‌, கங்கபட்டர்‌, வல்லபன்‌, தாமக்கிரந்தி, தந்திரபாலன்‌ முதலியவர்களது ஸகாயத்தோடு, போருக்குப்‌ புறப்பட்டான்‌. அங்கு சண்டை இரவிலும்‌ அகோரமாய்‌ நடந்தது. அதில்‌ கடைசிக்‌ காலத்தில்‌ திரிகர்த்த தேசாதிபதிகள்‌ விராடராஜனை ஓடிவந்து பிடித்துக்கொண்டு போய்‌ தமது தேர்க்காலோடு கட்டிவிட, விராடராஜன்‌ ஸேனை வெருண்டோடத்‌ தொடங்கியது. இதைக்‌ கண்ட கங்கபட்டர்‌, வல்லபன்‌, தாமக்கிரந்தி, தந்திரபாலன்‌ ஆகிய மூவரையும்‌ அரசனுக்கு ஸகாயமாய்ப்‌ போர்‌ செய்யச்சொல்ல, அவர்கள்‌ வெகு அடக்கமாய்ச்‌ சண்டை செய்து விராடராஜனை விடுவித்து திரிகர்த்த தேசாதிபதியாகிய ஸுசர்மாவைச்‌ சிறைபிடித்து வர, ஸுசர்மாவினது சேனை சின்பின்னமாகி நான்கு பக்கங்களிலும்‌ சிதறி ஓடிப்போயிற்று. கொஞ்ச நாழிகைக்குப்‌ பின்பு கங்கபட்டரது வேண்டுகோளின்படி, வல்லபன்‌ ஸுசர்மாவைக்‌ கட்டவிழ்த்து விட, அவன்‌ வெட்கி ஓடிப்போனான்‌. விராடராஜன்‌ அன்றிரவையும்‌ மறுநாட்காலையையும்‌ அங்கு சோலைகளில்‌ கழித்து விட்டு, மறுநாள்‌ நடுப்பகலில்‌ தன்‌ பட்டணத்திற்குப்‌ போவதாகத்‌ தீர்மானித்தான்‌. மறுநாள்‌ பொழுது விடிந்ததும்‌ பாண்டவர்களது ஒரு வருஷ அக்ஞாதவாஸம்‌ முடிவுபெற்றது.

வியாழன், 27 அக்டோபர், 2022

ஶ்ரீ மஹாபாரதம் வினா விடை 24

விராட பர்வம்

கீசக வதம்

வினா 1.- இவ்வாறு யமதர்மராஜன்‌ சொல்லி மறைந்ததும்‌ தர்மபுத்திரர்‌ எவ்வாறு அக்ஞாதவாஸம்‌ செய்வதாக ஒப்புக்கொண்டார்‌?

விடை. தாம்‌ பிராம்மண வேஷம்‌ பூண்டு கங்கபட்டர்‌ எனப்பெயர்‌ வைத்துக்‌ கொண்டு விராடராஜனிடம்‌ சூதாடி இனிமையான வார்த்தைசொல்லி அவனைச்‌ சந்தோஷப்‌ படுத்துவதாகவும்‌, அவ்வரசன்‌ அதிக சந்தோஷப்பட்டு “நீர்‌ இதற்கு முன்பு எங்கிருந்தீர்‌ என்று கேட்டால்‌ “நான்‌ யுதிஷ்டிரரது ராஜஸபையில்‌ இருந்தேன்‌. அவருக்கும்‌ எனக்கும்‌ அதிக பேதம்‌ இருப்பதாக எண்ணி ஒருவரும்‌ சரிவர அங்கு நடந்து கொள்ளவில்லை. நாங்கள்‌ இருவரும்‌ அவ்வளவு பிராண ஸ்நேகிதராய்‌ இருந்தோம்‌ என்று சொல்லுவேன்‌" என, தர்மபுத்திரர்‌ தமது அபிப்பிராயத்தை வெளியிட்டார்‌.

வினா 2.- பீமன்‌ எவ்வாறு காலங்கழிப்பதாகச்‌ சொன்னான்‌?

விடை... “வல்லபன்‌ என்கிற சமையற்கார வேஷம்‌ பூண்டு, அரசன்‌ பாகசாலையில்‌ வேலைக்கமர்ந்து எனது திறமையை நன்றாய்க்காட்டிப்‌ பாகசாலைக்‌ கதிபதி யாவேன்‌. மேலும்‌ எனது தேக பலத்தால்‌ சமையலுக்கு வேண்டிய விறகு முதலிய வைகளை நான்‌ சுமந்து வருவேன்‌. காட்டிலுள்ள புலி, கரடி, முதலிய கொடிய மிருகங்களோடும்‌ அரசன்‌ முன்பு சண்டையாடி, அவனைச்‌ சந்தோஷப்படுத்துவேன்‌. மல்லகஜட்டிகளோடு மல்ல யுத்தம்‌ செய்து ஜெயம்பெறுவேன்‌. “நீ முன்பு எங்கு இருந்தாய்‌" என்று அரசன்கேட்டால்‌ நான்‌ இத்தொழில்களைச்‌ செய்துகொண்டு யுதிஷ்டிரரிடம்‌ இருந்தேன்‌” என்று சொல்லுவேன்‌. “என்‌ விஷயத்தில்‌ நீங்கள்‌ கவலைப்படவேண்டாம்‌” என்று பீமன்‌ சொன்னான்‌.

வினா 3- அர்ஜுனன்‌ எவ்வேஷம்‌ பூண்டு அக்ஞாதவாஸம்‌ செய்வதாகச்‌ சொன்னான்‌?

விடை.- இந்தச்சமயத்தில்‌ இந்திரலோகத்தில்‌ ஊர்வசி தனக்குக்கொடுத்த சாபம்‌ அர்ஜுனனுக்கு ஞாபகம்‌ வர, "நான்‌ பிரகந்நளை என்கிற பெயரோடு கூடிய ஒரு பேடி உருக்கொண்டு விராடராஜன்‌ அந்தப்புரத்திலுள்ள பெண்களுக்குக்‌ கதை சொல்லுதல்‌, பாட்டுக்கற்பித்தல்‌, நாட்டியங்‌ கற்பித்தல்‌ முதலிய தொழில்களால்‌ அரசனையும்‌, அவன்‌ பெண்சாதி முதலியவர்களையும்‌ திருப்திப்படுத்துவேன்‌. “நீ முன்பு எங்கு இருந்தாய்‌” என்று யாராவது கேட்டால்‌ “திரெளபதியிடம்‌ வேலைக்காரியாய்‌ இருந்தேன்‌ என்று சொல்லி ஒருவரும்‌ அறியாத வண்ணம்‌ நான்‌ மறைந்து வாஸம்‌ பண்ணுவேன்‌" என்று அர்ஜுனன்‌ எடுத்துரைத்தான்‌.

வினா 4.- நகுலன்‌ எப்படி ஒருவரும்‌ அறியாதபடி விராட நகரத்தில்‌ ஒருவருஷம்‌ வாஸம்‌ செய்யப்போகிறதாகச்‌ சொன்னான்‌?
விடை.- "நான்‌ தாமக்கிரந்தி எனப்பெயர்‌ வைத்துக்கொண்டு விராடராஜனது குதிரைகளை நன்றாய்ப்‌ பாதுகாத்துக்‌ கொண்டு ஒருவருஷ காலத்தைத்‌ தள்ளிவருவேன்‌. அப்பொழுது யாராவது என்னைப்பற்றி விசாரித்தால்‌ நான்‌ தர்மபுத்திரரது குதிரைகளை மேற்பார்வை யிட்டுக்கொண்டிருந்தவன்‌ என்று சொல்லி என்னை எவராலும்‌ கண்டு பிடிக்க முடியாதபடி ஜாக்கிரதையாய்‌ ஒருவருஷம்‌ முடிகிறவரையில்‌ இருப்பேன்‌" என்றான்‌.

வினா 5.- ஸகாதேவன்‌ எவ்வாறு காலங்கழிக்கப்‌ போகிறதாகச்‌ சொன்னான்‌?

விடை... "நான்‌ தந்திரபாலன்‌ என்கிற பெயரோடு விராடராஜனது பசுக்கூட்டங்களை ஒழுங்காய்ப்‌ பாதுகாத்து வருவேன்‌. அப்பொழுது என்னைப்பற்றி யாராவது விசாரித்தால்‌, நான்‌ தர்மபுத்திரரது கோதனத்தை ரக்ஷித்து வந்த கோபாலத்‌ தலைவன்‌ என்று மறுமொழி சொல்லி என்னை ஒருவரும்‌ அறியாத வண்ணம்‌ ஒரு வருஷத்தை எளிதில்‌ கழிப்பேன்‌" என்று எடுத்துரைத்தான்‌.

வினா 6.. திரெளபதி எவ்வாறு தனது உண்மை உருவைக்‌ காட்டாது ஒரு வருஷம்‌ காலங்கழிக்கப்‌ போகிறதாகச்‌ சொன்னாள்‌?

விடை... "அந்தப்புரத்தில்‌ பூமுடித்தல்‌, சந்தனம்‌ கரைத்தல்‌, தலைபின்னல்‌ முதலிய தொழிலைச்‌ செய்யும்‌ தாதிப்‌ பெண்ணாக வேஷம்தரித்து, நான்‌ ஸைரந்திரி என்னும்‌ பெயர்‌ பூண்டு விராடராஜன்‌ பெண்சாதியாகிய ஸுதேக்ஷணாதேவி இடம்‌ வேலைக்கு அமருவேன்‌. என்னைப்‌ பற்றி அவள்‌ கேள்விகள்‌ கேட்டால்‌, நான்‌ திரெளபதியின்‌ தாதி என்று சொல்லுவேன்‌. இவ்வொரு வருஷம்‌ என்‌ பாதிவிருத்தி யத்திற்குப்‌ பங்கம்‌ வாராது இருப்பதற்காக நான்‌ இராஜபத்தினியிடம்‌ எனக்கு பர்த்தாக்கள்‌ ஐந்து கந்தர்வர்கள்‌ என்றும்‌, அவர்கள்‌ எங்கும்‌ உலாவிக்‌ கொண்டிருப்பார்கள்‌ என்றும்‌. என்னைத்‌ துராசையோடு பார்த்தவர்களை உடனே தவறாது கொல்லுவார்கள்‌ என்றும்‌ சொல்லி பயப்படுத்துவித்து, ஸுகமாய்‌ ஒரு வருஷம்‌ ஒருவருக்கும்‌ தெரியாது விராட பட்டணத்தில்‌ வாழ்வேன்‌" என்று திரெளபதி கூறினாள்‌.

வினா 7.- இவ்வாறு பாண்டவர்கள்‌ ஒரு வழியாய்த்‌ தீர்மானித்த பிறகு யார்‌ எவ்வாறு இவர்களுக்குப்‌ புத்திமதி கூறினது? பின்பு என்ன நடந்தது?

விடை... பாண்டவர்களது குருவாகிய தெளம்யர்‌ இராஜ ஸேவை செய்யவேண்டிய விதத்தை நன்றாய்‌ எடுத்துச்‌ சொல்லி, "அகலாது அணுகாது தீக்காய்வார்போல, மன்னரைச்‌ சேர்ந்தொழுகுவார்‌" என்ற பொருளை, நன்கு விளக்கிக்‌ காட்டினார்‌. அதன்‌ பின்பு தெளம்யர்‌ பாண்டவர்களை விராட நகரத்திற்கு அனுப்பிவிட்டு அவர்களது அக்னிஹோத்ராக்னியை துருபதராஜனது பட்டணத்திற்கு எடுத்துச்சென்றார்‌.

வினா 8.- இவ்வாறு தெளம்யர்‌ சென்றதும்‌, விராடநகரப்‌ பிரவேசம்‌ செய்யுமுன்‌ பாண்டவர்கள்‌ என்ன செய்தார்கள்‌?

விடை... தெளம்யர்‌ சென்றதும்‌, பாண்டவர்கள்‌ தமது ஆயுதங்கள்‌ எல்லாவற்றையும்‌ விராட பட்டணத்தின்‌ வெளியில்‌ மயானத்திலிருக்கும்‌ வன்னிமரத்தில்‌ வைத்துக்‌ கட்டி அதன்‌ முன்பு ஒரு பிணத்தையும்‌ கட்டிவிட்டார்கள்‌. இதனால்‌ ஒருவரும்‌ ஆயுதங்களைத்‌ தொடமாட்டார்கள்‌ என்கிற தைரியம்‌ அவர்களுக்கு வந்து விட்டது. அதன்‌ பின்பு பிறர்‌ அறியாது தங்களை ஒருவரை ஒருவர்‌ விராட பட்டணத்தில்‌ அழைத்துக்கொள்ள முறையே தமக்கு ஜயன்‌, ஜயந்தன்‌, விஜயன்‌, ஜயத்ஸேனன்‌, ஜயத்பாலன்‌ என்ற ஸங்கேதப்‌ பெயர்களையும்‌ அவர்கள்‌ ஏற்படுத்திக்‌ கொண்டார்கள்‌. இது முடிந்ததும்‌ விராடபட்டணம்‌ புகுமுன்‌ யுதிஷ்டிரர்‌ ஜகத்‌ மாயையாகிய துர்க்கா தேவியைத்‌ துதிக்க அவள்‌ பிரத்யக்ஷமாகிப்‌ பாண்டவர்களுக்கு ஜயம்‌ கூடிய சீக்கிரத்தில்‌ வரும்‌ என்று அனுக்கிரகித்து மறைந்தாள்‌.

வினா 9- பாண்டவர்கள்‌ விராட நகரத்தில்‌ எவ்வாறு பிரவேசித்தனர்‌? அங்கு என்ன நடநடந்தது?

விடை... பாண்டவர்கள்‌, தர்மபுத்திரர்‌ முதல்‌ வரிசையாய்க்‌ கொஞ்ச நாழிகைக்கு ஒவ்வொருவராக விராடநகரத்துள்‌ பிரவேசித்தார்கள்‌. கடைசியாய்த்‌ திரெளபதி விராடநகரத்தில்‌ பிரவேசித்தாள்‌. இவர்களைக்‌ கண்டதும்‌ அரசனும்‌, அவன்‌ மனைவியும்‌ வெகுமரியாதை செய்து அவரவர்கள்‌ மனத்தின்படி அவரவர்களை வேலை செய்து கொண்டு தம்மிடத்தில்‌ இருக்கும்படி உத்தரவு கொடுத்தார்கள்‌. பாண்டவர்கள்‌ தாம்‌ எண்ணியபடி விராடநகரத்தில்‌ ஸுகமாய்‌ வஸிக்கத்‌ தொடங்கினர்‌. ஸைரந்திரியை, அவளுக்குக்‌ கந்தர்வரது காவல்‌ இருக்கிறது என்று உணர்ந்து, அரசன்கூடக்‌ கண்ணெடுத்துப்‌ பார்க்கப்‌ பயந்திருந்தான்‌. திரெளபதி தனது கற்புக்குக்‌ குறைவுவராது அங்கு வாழ்ந்து வந்தாள்‌. பாண்டவர்கள்‌ தத்தமக்குக்‌ கிடைத்தவைகளை மற்றவர்களுக்கும்‌ இரகஸியமாய்க்‌ கொடுத்து ஸுகமாய்‌ வாழ்ந்து வந்தார்கள்‌.

வினா10.- இப்படிப்‌ பாண்டவர்கள்‌ வாழ்ந்து வருகையில்‌ விராட பட்டணத்தில்‌ என்ன விசேஷம்‌ நடந்தது? அதில்‌ யாருடைய சக்தி வெளிவந்தது?

விடை... நான்காவது மாதம்‌ விராடநகரத்துச் சிவன்‌ கோயிலில்‌ உத்ஸவம்‌ வந்தது. அக்காலத்தில்‌ ஜீமூதன்‌ என்கிற மல்லனது அதிகாரத்துக்குட்பட்டு அனேக மல்லர்கள்‌ இராஜஸபைக்கு வந்தார்கள்‌. ஜீமூதனோடு எதிர்த்து மல்ல யுத்தம்‌ பண்ண ஒருவருக்‌ கும்‌ மனம்‌ துணியவில்லை. அப்பொழுது விராடராஜன்‌ வேண்டுகோளின்படி வல்லபன்‌ (பீமன்‌) என்கிற மடைப்பள்ளி அதிகாரி ஜீமூதனை எதிர்த்தான்‌. வல்லபன்‌ வெகு விசித்திரமான யுத்த வரிசைகளை எல்லாம்‌ ஸபையார்‌ மகிழும்படி காட்டிவிட்டு கடைசியில்‌ ஜீமூதனைக்‌ கொன்றான்‌. இதனால்‌ பீமனது பலம்‌ எல்லாருக்கும்‌ தெரிய வந்தது.

வினா 11.- பீமன்‌ அன்று முதல்‌ என்ன செய்ய வேண்டி வந்தது? மற்றையவர்கள்‌ பின்பு என்ன செய்தார்கள்‌?

விடை... இவனுக்குப்‌ பலத்தில்‌ நிகர்‌ ஒருவரும்‌ இல்லை என்று அரசன்‌ இவனைக்‌ காட்டிலிருந்து பிடித்துவந்த யானை, புலி, சிங்கம்‌ முதலியவைகளோடு, சண்டை செய்யும்படி ஏவ, பீமன்‌ அவ்வாறே அவைகளோடு விசித்திர யுத்தம்‌ செய்து, அரசனை ஸந்தோஷப்‌ படுத்தினான்‌. இதுபோலவே தம்மால்‌ கூடியவரையில்‌ மற்றையவர்களும்‌ தம்வேலைகளை ஒழுங்காய்ச்‌ செய்து தமது எஜமானர்களைத்‌ திருப்திப்படுத்தினார்கள்‌. இவைகளைப்‌ பார்த்திருந்த திரெளபதிக்கு மிகுந்த துக்கமுண்டாக அதை அவள்‌ வெளியில்‌ காட்டிக்கொள்ளாது பெருமூச்சு மாத்திரம்‌ விட்டுக்‌ கொண்டிருந்தாள்‌.

வினா 12- இவ்வாறு பாண்டவர்கள்‌ வாழ்ந்து வருங்கால்‌ அவர்களுக்கு எப்படி கஷ்டம்‌ யாரால்‌ வந்தது?

விடை.- இவ்வாறு பாண்டவர்கள்‌ 10 மாஸம்‌ விராட நகரத்தில்‌ கஷ்டமின்றிக்‌ காலங்கழித்து விட்டார்கள்‌. இந்த ஸமயத்தில்‌ ஸுதேக்ஷணாதேவியின்‌ ஸஹோதரனாயும்‌, விராடராஜன்‌ ஸேனாதிபதியாயும்‌ இருந்த கீசகன்‌ என்ற துராத்மா தற்செயலாய்‌ திரெளபதியைக்‌ கண்டுவிட்டான்‌. உடனே அவனுக்கு அவளிடம்‌ ஆசை உண்டாக அவளருகே சென்று தனது ஆசையை வெளியிட்டான்‌.

வினா 13.- திரெளபதிக்கு வந்த இந்தக்‌ கஷ்டத்தை யார்‌ எவ்வாறு ஏன்‌ அதிகப்படுத்தி விட்டார்கள்‌?

விடை.- திரெளபதி தன்னால்‌ இயன்ற மட்டும்‌ நயமாயும்‌, பயமாயும்‌ தன்‌ வார்த்தைகளால்‌ கீசகனைக்‌ தடுக்க, அவன்‌ தனது ஸகோதரியான ஸுதேக்ஷ்ணையிடம்‌ சென்று தன்‌ ஆசையைத்‌ தெரிவித்தான்‌. அவள்‌ ஸைரந்திரியின்‌ புருஷர்களாகிய கந்தர்வர்களின்‌ மஹத்வத்தை எடுத்துச்சொல்லிக்‌ கீசகனைத்‌ தனது ஆசையை அடக்கும்படி சொன்னாள்‌. கீசகன்‌ மாறாதது கண்டு அவனிடம்‌ ஸைரந்திரியைத்‌ தான்‌ தனிமையாய்‌ அனுப்புவதாகச்‌ சொல்லி, ஸகோதர வாஞ்சையால்‌ ஸுதேக்ஷணாதேவி ஸைரந்திரியை அழைத்துக்‌ கீசகன்‌ வீடுசென்று மது வாங்கி வரும்படி ஏவினாள்‌. அவள்‌ எவ்வளவோ காரணங்களோடு மறுத்துச்சொல்லியும்‌ இராஜபத்தினி கேட்காது பிடிவாதமாய்‌ இருக்க, கடவுள்‌ மேல்‌ பாரத்தைப்‌ போட்டு விட்டு மதுவாங்கிவரப்‌ பாத்திரங்களை எடுத்துக்‌ கொண்டு கீசகன்‌ வீட்டை நோக்கித்‌ திரெளபதி புறப்பட்டாள்‌. இவ்வாறு ஸுதேக்ஷணாதேவி ஸகோதர வாஞ்சையால்‌ திரெளபதியின்‌ கஷ்டத்தை அதிகப்படுத்தினாள்‌.

வினா 14- மதுவாங்கி வரப்போன திரெளபதியின்‌ கதி என்னமாயிற்று? அங்கு என்னென்ன நடந்தது?

விடை. கீசகன்‌ விட்டை நோக்கிப்‌ புறப்பட்ட திரெளபதி, போகும்‌ வழியில்‌ எஸூர்யபகவானைத்துதிக்க அவர்‌ ஒரு இராக்ஷஸனைத்‌ திரெளபதியைக்‌ காப்பாற்றும்‌படி ஏவினார்‌. அவன்‌ மறைந்து கொண்டே திரெளபதியின்‌ பின்னே புறப்பட்டான்‌. திரெளபதி கீசகன்‌ வீடுசென்றதும்‌, தான்‌ வந்த காரியத்தைத்‌ தெரிவித்து சீக்கிரம்‌ மதுவைக்‌ கொடுக்கவேண்டும்‌ என்று கேட்டாள்‌. கீசகன்‌ திரெளபதியை நயமாய்‌ முதலில்‌ தன்‌ வசம்‌ செய்யப்பார்த்து முடியாதது கண்டு, அவளது வலதுகையைப்‌ பிடித்தான்‌. அவள்‌ அதைத்‌ தனது கற்பின்‌ பலத்தால்‌ திமிறிக்‌ கொண்டு வெளியே ஓட ஆரம்பிக்கக்‌ கீசகன்‌ அவளது மேல்துணியின்‌ நுனியைப்‌ பிடித்துக்கொண்டான்‌. உடனே தன்‌ கற்பின்‌ மகிமையால்‌ கீசகனைத் திரெளபதி கீழே தள்ளிவிட்டு தனக்கு வந்த ஆபத்தைத்‌ தெரிவித்துக்கொள்ள தர்மபுத்திரர்‌ வீற்றிருக்கும்‌ விராடராஜன்‌ ஸபையை நோக்கி வெகு பதட்டத்தோடு ஓடி வந்தாள்‌. பின்னே வெறி கொண்டு ஓடிவந்த கீசகன்‌ இராஜஸபை வாயிலில்‌ ஸகலரும்‌ பார்த்துக்கொண்டிருக்கையில்‌ திரெளபதியின்‌ கூந்தலைப்‌ பற்றி இழுத்து அவளைக்‌ காலால்‌ உதைக்க, அவள்‌ மூர்ச்சை அடைந்து கீழே விழுந்தாள்‌.

வினா 15.- இப்படிச்செய்த கீசகனுக்கு என்ன ஆபத்து வந்தது?

விடை.- ஸூர்ய பகவானால்‌ அனுப்பப்பட்ட இராக்ஷஸன்‌ கீசகன்‌ திரும்புகையில்‌ அவனைக்‌ காற்றின்‌ பலத்தைப்‌ போன்ற பலத்தை வைத்து இடிக்க ஸபையிலிருந் தோர்‌ ஸகலரும்‌ மகிழ்ச்சி அடையும்படி கீசகன்‌ அடியற்ற மரம்‌ போல்விழுந்து மூர்ச்சை போனான்‌. கொஞ்ச நாழிகையானதும்‌ கீசகன்‌ எழுந்து மிகுந்த வெட்கத்‌ தோடு தனது அரண்மனைக்கு ஓடிப்போனான்‌.

வினா 16.- மூர்ச்சை தெளிந்து எழுந்ததும்‌, திரெளபதி என்ன செய்தாள்‌? ஸபையில்‌ என்ன விசேஷம்‌ நடந்தது?

விடை... இவ்வாறு கீசகன்‌ செய்ததைக்‌ கண்டதும்‌ ஸபையில்‌ அப்பொழுது இருந்த பீமனுக்குக்‌ கோபம்‌ அதிகரிக்க, அவன்‌ அருகிலிருந்த பச்சை மரத்தைப்‌ பார்த்தான்‌. இந்தக்‌ குறிப்பை அறிந்த யுதிஷ்டிரர்‌ பீமனைக்‌ கையமர்த்திவிட்டு 'விறகுக்காக இராஜஸபையிலிருக்கும்‌ பச்சை மரத்தை ஏன்‌ பார்க்கிறாய்‌? உனக்கு வேண்டுமானால்‌ ஊருக்கு வெளியிலிருக்கும்‌ மரங்களைப்‌ பார்த்துக்கொள்‌ என்று இரண்டு பொருள்படும்படி சொன்னார்‌. இதன்‌ இரகஸியத்தை அறிந்துகொண்டு பீமன்‌ கோபத்தை அப்பொழுது அடக்கிக்கொண்டான்‌. உடனே திரெளபதி தனக்கு வந்த கேட்டையும்‌ தனது பர்த்தாக்களது வைபவத்தையும்‌, அவர்கள்‌ அப்பொழுது அசட்டையாய்‌ இருப்பதையும்‌, விராடராஜனது ஆண்மையற்ற குணத்தையும்பற்றி வெகுவாக இராஜஸபையில்‌ விஸ்தரிக்கத்‌ தொடங்கினாள்‌. இவைகளைக்‌ கண்ட யுதிஷ்டிரர்‌, அதிகமாய்ப்‌ பேசுவது பெண்களுக்கு அழகல்ல என்றும்‌ அவளது பர்த்தாக்கள்‌ ஏதாவது செய்யத்தக்க ஸமயம்‌ இன்னும்‌ வரலில்லை என்றும்‌, ஆதலால்‌ அந்தப்புரம்‌ உடனே அவள்‌ செல்லவேண்டும்‌ என்றும்‌ சொல்ல, திரெளபதி தனது பர்த்தாக்களை நொந்துகொண்டு அந்தப்புரம்‌ சென்றனள்‌.

வினா 17.- இதன்‌ பின்பு கீசகன்‌ விஷயத்தில்‌ திரெளபதி என்ன பிரயத்தினம்‌ செய்தாள்‌?

விடை... கீசகனை உயிரோடு வைத்திருந்தால்‌ தனது கற்பிற்குக்‌ கேடுவரும்‌ என்கிற பயம்‌ திரெளபதியின்‌ மனதில்‌ குடிகொண்டது. வெகு நாழிகை யோசனை செய்த பிறகு இக்காரியத்தை முடிக்க வல்லவன்‌ பீமன்‌ என்று அவளுக்குத்‌ தோன்றியது. இரவில்‌ ஸகலரும்‌ தூங்கிக்‌ கொண்டிருக்கையில்‌ திரெளபதி மடைப்பள்ளியில்‌ புகுந்து தூங்கிக்கொண்டிருந்த பீமனை எழுப்பித்‌ தனக்கு வந்த கஷ்டங்களையும்‌, அப்பொழுது வந்திருக்கும்‌ கஷ்டத்தையும்‌ வெகுவாக எடுத்துச்‌ சொன்னாள்‌. பீமன்‌ உடனே கீசகனைக்‌ கூடிய சீக்கிரத்தில்‌ கொல்லுவதாகத்‌ தீர்மானித்தான்‌.

வினா 18.- கீசகனைக்‌ கொல்லும்‌ விஷயத்தில்‌ பீமன்‌ திரெளபதிக்கு என்ன உபாயம்‌ சொன்னான்‌?

விடை... திரெளபதி கீசகனது ஆசையைப்‌ பூர்த்தி செய்து வைப்பதாக ஒப்புக்கொண்டு, அதற்குத்‌ தகுந்த இடம்‌ இராஜகுமாரிகள்‌ நாட்டியம்‌ பழகும்‌ ஊருக்கு வெளியில்‌ இருக்கும்‌ நாடகசாலையே என்று சொல்லி, அங்கு கீசகனை இரவில்‌ வரவழைத்‌தால்‌, அப்பொழுது தான்‌ திரெளபதிக்கு பதிலாக நாடகசாலையில்‌ இருந்து வரும்‌ கீசகனை அன்றிரவே கொல்லுவதாகத்‌ திரெளபதிக்குப்‌ பீமன்‌ தனது எண்ணத்தை வெளியிட்டான்‌. திரெளபதியும்‌ அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டாள்‌.

வினா 19.- திரெளபதி பின்பு என்ன செய்தாள்‌?

விடை... பீமன்‌ சொல்லியவாறே, திரெளபதி கீசகனைத்‌ தன்‌ வசம்‌ செய்ய, அவன்‌ அன்றிரவே ஊருக்கு வெளியிலிருக்கும்‌ நாடகசாலை யண்டை வருவதாகச்‌ சொல்லிப்‌ போனான்‌. நடந்த விஷயங்கள்‌ எல்லாவற்றையும்‌ திரெளபதி பீமனிடம்‌ சொல்ல, அவன்‌ அன்றிரவு திரெளபதியையும்‌ கூட அழைத்துக்கொண்டு நாடக சாலை வந்து திரெளபதியை முன்‌ கதவின்‌ ஓரத்தில்‌ நிறுத்திவிட்டு, தான்‌ அங்கு போட்டிருக்கும்‌ கட்டிலில்‌ படுத்துக்கொண்டு கீசகனது வரவை எதிர்பார்த்திருந்தான்‌.

வினா 20.- கீசகன்‌ அங்கு எவ்வாறு வந்தான்‌? பின்பு என்ன நடந்தது?

விடை.- இரவு எப்பொழுது வரப்போகிறதென்று எதிர்பார்த்திருந்த கீசகன்‌, மிகுந்த ஆவலோடு நாடகசாலை வந்து அங்கு இருட்டாயிருப்பது கண்டு மெதுவாய்‌ கட்டில ருகில்‌ சென்று திரெளபதியை அழைத்தான்‌. உடனே பீமன்‌ திரெளபதியினது குரலை வகித்து பதில்‌ கொடுக்க, கீசகனுக்கு ஆசை அதிகரித்தது. உடனே கீசகன்‌, படுத்திருக்கும்‌ பீமனது கையை மிகுந்த ஆவலோடு பிடிக்க அது மிகக்கடினமாய்‌ இருப்பதைக்கண்டு திகைத்தான்‌. இது தான்‌ ஸமயம்‌ என்று பீமன்‌ கட்டிலை விட்டெழுந்து கீசகனோடு யுத்தம்‌ செய்யத்தொடங்கினான்‌. இருவரும்‌ வெளியில்‌ சப்தம்‌ கேட்காது சண்டையிடக்‌ கடைசியில்‌ பீமன்‌ கீசகனைக்‌ கொன்றான்‌. உடனே அவனது தலையையும்‌ கைகால்களையும்‌, முறித்து அவனது வயிற்றில்‌ அடைத்து அவனது தேகத்தை ஒரு பிண்டமாக்கிச்‌ சாலையிலிருந்த ஒருவிளக்கைக்‌ கொண்டு வந்து பீமன்‌ திரெளபதிக்குக்‌ கீசகனது நிலையைக்‌ காட்டினான்‌.

ஞாயிறு, 23 அக்டோபர், 2022

ஶ்ரீ மஹா பாரதம் வினா விடை 23

வினா 133- இவ்வாறு தர்மபுத்திரர்‌ யக்ஷனது கேள்விகளுக்‌கெல்லாம்‌ பதில்‌ சொன்னதும்‌, யக்ஷன்‌ என்ன செய்தான்‌?

விடை.- தர்மபுத்திரர்‌ சொன்ன விடைகளைக்கேட்டு யக்ஷன்‌ மகிழ்ந்து, இறந்த தம்பிகளுள்‌ யாராவது ஒருவனை எழுப்பிக்கொண்டு போகும்படி தர்மபுத்திரருக்கு உத்தரவு கொடுத்தான்‌.

வினா 134.- தர்மபுத்திரர்‌ யாரை எழுப்பிக்கொள்ள விரும்பினார்‌? என்‌? அவர்‌ எப்படித்‌ தமது உறுதியைக்‌ காட்டினார்‌?

விடை. நகுலனை அவர்‌ எழுப்பிக்கொள்ள விரும்பினார்‌. இப்படி நகுலனைத்தேடி எடுத்ததற்குக்‌ காரணம்‌ என்னவென்று யக்ஷன்‌ கேட்க, தர்மபுத்திரர்‌ “என்‌ தகப்பனாருக்கு இரண்டு பெண்சாதிகள்‌. அவர்களுள்‌ நான்‌ ஒருத்திக்கு மூத்தபிள்ளை, நகுலன்‌ மற்றைப்‌ பெண்‌ சாதிக்கு மூத்தபிள்ளை. ஆகையால்‌ நகுலனை நான்‌ தர்மப்படி எழுப்பிக்கொள்ள வேண்டியது" என, யக்ஷன்‌, "பீமனையாவது அர்ஜுனனை யாவது எழுப்பிக்கொள்ளும்‌, அவர்கள்‌ உமக்கு நேரான தம்பிகள்‌, நகுலன்‌ சிற்றம்மையின்‌ பிள்ளை: என்று எவ்வளவோ சொல்லியும்‌, தர்மபுத்திரர்‌ தர்மத்திலிருந்து விலகாது நகுலனையே எழுப்பி விடவேண்டும்‌ என்று உறுதியாய்‌ இருந்தார்‌.

வினா 135.- இப்படி தர்மபுத்திரர்‌ உறுதியாய்‌ இருக்க என்ன விசேஷம்‌ நடந்தது?

விடை.- இவரது உறுதிக்கு யக்ஷன்‌ மெச்சி, அவர்‌ தம்பிமார்‌ நால்வர்களையும்‌ எழுந்து வரும்படி செய்தான்‌. இதன்‌ பின்பு யக்ஷன்‌ தனது உண்மை ரூபமாகிய யமதர்ம ரூபத்தைக்‌ காட்டிப்‌ பாண்டவர்களை ஆசீர்வதித்து அவர்களது வனவாஸம்‌ 12 வருஷங்களும்‌ முடிந்தன என்று சொல்லி, அவர்களுக்கு அக்ஞாதவாஸம்‌ (மறைந்தவாஸம்‌) செய்யத்‌ தகுந்த இடம்‌ விராடபட்டணம்‌ என்று தெரிவித்து, அவர்கள்‌ எப்படிப்பட்ட வேஷம்‌ தரித்தாலும்‌ ஸரி, அவர்களை (இனி ஒரு வருஷம்‌ வரையில்‌ ஒருவராலும்‌ கண்டுபிடிக்க முடியாமலிருக்கட்டும்‌ என்று அனுக்கிரஹி த்து விட்டு யமதர்மன்‌ மறைந்தான்‌.

ஆரண்ய பர்வம் நிறைவுற்றது.

தொடரப்போவது விராட பர்வம்

வெள்ளி, 21 அக்டோபர், 2022

ஶ்ரீமஹாபாரதம் வினா விடை 22

வினா 132.- யக்ஷன்‌ கேட்ட சில கேள்விகளும்‌ அதற்குத்‌ தர்மபுத்திரர்‌ கொடுத்த விடைகளும்‌ எவை?

யக்ஷன்‌:- எதனால்‌ ஒருவன்‌ படித்தவனாகிறான்‌?

தர்மபுத்திரர்‌:- வேதங்களைப்‌ படித்தலால்‌.

யக்ஷன்‌:- எதனால்‌ ஒருவன்‌ மேன்மையை அடைகிறான்‌?

தர்மபுத்திரர்‌:- ஸந்நியாஸத்தால்‌.

யக்ஷன்‌:- எதனால்‌ ஒருவன்‌ புத்திமானாகிறான்‌?

தர்மபுத்திரர்‌:- பெரியோருக்குப்‌ பணிவிடை செய்தலால்‌.

யக்ஷன்‌:- பிராமணர்களுக்கு என்ன கெட்டகுணம்‌ இருக்கும்‌?

தர்மபுத்திரர்‌:- பரநிந்தை.

யக்ஷன்‌:- வாயுவைவிட வேகமானது எது?

தர்மபுத்திரர்‌:- மனஸ்‌. ‌

யக்ஷன்‌:- இறப்பவர்களுக்குத்‌ தகுந்த ஸ்நேகிதர்‌ யார்‌?

தர்மபுத்திரர்‌:- அவர்கள்‌ செய்த தர்மமே.

யக்ஷன்‌:- மதங்களின்‌ முடிவான பயன்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- மனோ விசாலம்‌.

யக்ஷன்‌:- கீர்த்தியைத்‌ தாங்கி நிற்பவை எவை?

தர்மபுத்திரர்‌:- தானமும்‌ தர்மமும்‌.

யக்ஷன்‌:- ஸுகம்‌ எதனால்‌ உண்டாகும்‌?

தர்மபுத்திரர்‌:- நன்னடக்கையால்‌.

யக்ஷன்‌:- சிரேஷ்டமான தனம்‌ யாது?

தர்மபுத்திரர்‌:- அறிவு.

யக்ஷன்‌:- சிரேஷ்டமான ஸுகம்‌ யாது ?

தர்மபுத்திரர்‌:- கிடைத்தவரையில்‌ திருப்தி அடைவதே.

யக்ஷன்‌:- சிறந்த தர்மம்‌ எது?

தர்மபுத்திரர்‌:- அஹிம்ஸை.

யக்ஷன்‌:- ஸுகம்‌ கொடுக்கும்‌ நிரோதம்‌ யாது?

தர்மபுத்திரர்‌:- மனோ நிரோதம்‌.

யக்ஷன்‌:- ஒருநாளும்‌ நீங்காத ஸங்கம்‌ யாது?

தர்மபுத்திரர்‌:- ஸத்ஸங்கம்‌.

யக்ஷன்‌:- எதை விட்டால்‌ நம்மை எல்லாரும்‌ விரும்புவார்கள்‌?

தர்மபுத்திரர்‌:- கர்வத்தை.

யக்ஷன்‌:- எதை விட்டால்‌ துக்க நிவர்த்தி? ‌

தர்மபுத்திரர்‌:- கோபத்தை.

யக்ஷன்‌:- எதை விட்டால்‌ ஒருவன்‌ தனவானாவான்‌?

தர்மபுத்திரர்‌:- ஆசையை.

யக்ஷன்‌:- எதை விட்டால்‌ ஸுகமுண்டு?

தர்மபுத்திரர்‌:- பணத்தாசையை.

யக்ஷன்‌:- எதனால்‌ ஸ்நேகிதர்கள்‌ விரோதிகளாவார்கள்‌?

தர்மபுத்திரர்‌:- பணத்தாசையால்‌.

யக்ஷன்‌:- ஒருவன்‌ எதன்படி நடக்கவேண்டும்‌?

தர்மபுத்திரர்‌:- சிஷ்டாசாரப்படி.

யக்ஷன்‌:- ஸந்யாஸத்தின்‌ லக்ஷணம்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- ஸ்வதர்மாசரணம்‌.

யக்ஷன்‌:- மனோநிரோதத்தின்‌ லக்ஷணம்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- அகக்கரண புரக்கரணத்‌ தண்டம்‌.

யக்ஷன்‌:- தித்க்ஷையின்‌ லக்ஷணம்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- விரோதிகளிடத்திலும்‌ துவேஷமின்மை.

யக்ஷன்‌:- வெட்கத்தின்‌ லக்ஷணமென்ன?

தர்மபுத்திரர்‌:- கெட்டகாரியத்தை மறுபடியும்‌ செய்யாமை.

யக்ஷன்‌:- அறிவு என்றால்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- பரம்பொருளை அறிதல்‌.

யக்ஷன்‌:- சாந்தம்‌ என்றால்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- சித்த ஸமாதானம்‌.

யக்ஷன்‌:- தயை என்றால்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- பிராணிகளுக்கு நன்மை செய்ய எண்ணுதல்‌.

யக்ஷன்‌:- கபடமற்றதென்றால்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- மனம்‌ சலியாதிருத்தல்‌.

யக்ஷன்‌:- ஜயிக்க முடியாத விரோதி யார்‌?

தர்மபுத்திரர்‌:- கோபம்‌.

யக்ஷன்‌:- ஸ்திரமான வியாதி எது

தர்மபுத்திரர்‌:- பிறர்‌ பொருளை விரும்பல்‌.

யக்ஷன்‌:- யார்‌ நேர்மையானவர்கள்‌? யார்‌ திருடர்கள்‌!

தர்மபுத்திரர்‌:- முறையே, பூத தயை உடையோர்‌; பிராணிகளை வருத்துவோர்‌.

யக்ஷன்‌:- அஞ்ஞானமென்றால்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- சாஸ்திர ஞானமின்மை.

யக்ஷன்‌:- சோம்பல்‌ என்றால்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- சாஸ்திரவிஷயத்தில்‌ மனம்‌ செல்லாமை.

யக்ஷன்‌:- துக்கம்‌ என்றால்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- அஞ்ஞானம்‌.

யக்ஷன்‌:- பொறுமை என்றால்‌ என்ன?

தர்மபுத்திரர்‌:- காமக்ரோதாதிகளை அடக்கல்‌.

யக்ஷன்‌:- உண்மையான கர்மானுஷ்டானம்‌ எது?

தர்மபுத்திரர்‌:- சித்தசுத்தி,

யக்ஷன்‌:- பிறப்பு, படிப்பு, நன்னடக்கை, வேதாத்தியயனம்‌ இவைகளுள்‌ எது பிராம்மணனுக்கு முக்கியமானது? ‌

தர்மபுத்திரர்‌:- நன்னடக்கை.

யக்ஷன்‌:- எது ஆச்சரியகரமானது?

தர்மபுத்திரர்‌:- உலகில்‌ ஒவ்வொருநாளும்‌ ஜனங்கள்‌ இறந்துபோய்க்கொண்டே இருக்கிறார்கள்‌. உயிரோடிருக்கிறவர்‌ இதைப்பார்த்துக்‌ கொண்டிருந்தும்‌ தாம்‌ மாத்திரம்‌ இறவாது இருக்கவேண்டும்‌ என்றும்‌ எண்ணுகிறார்கள்‌. இதுதான்‌ மிகவும்‌ ஆச்சரியமானது.

யக்ஷன்‌:- எது மோக்ஷத்திற்கு வழி?

தர்மபுத்திரர்‌:- வேதங்கள்‌ பலவாறாய்‌ இருக்கின்றன. தர்க்கத்தால்‌ பயனில்லை. ரிஷிகளது அபிப்பிராயங்கள்‌ பேதப்பட்டிருக்கின்றன. மதவிஷய உண்மைகளோ இரகஸியமாக இருக்கின்றன. ஆகையால்‌ சிஷ்டாசாரமே மோக்ஷமார்க்கம்‌.

யக்ஷன்‌:- எது விசேஷமான சங்கதி?

தர்மபுத்திரர்‌:- அக்ஞானாந்தகாரம்‌ நிறைந்த உலகமாகிய கொப்பரையில்‌, ஸூர்யன்‌ என்கிற நெருப்பை இராப்பகலாகிய விறகுகளால்‌ மூட்டி, மாஸங்கள்‌, ருதுக்களாம்‌ கரண்டிகளால்‌, காலன்‌ என்ற சமயற்காரன்‌ பிராணிகளைச்‌ சமைத்துக்கொண்டே இருக்கிறான்‌. இதுதான்‌ விசேஷமான ஸங்கதி.

வினா 133- இவ்வாறு தர்மபுத்திரர்‌ யக்ஷனது கேள்விகளுக்‌.கெல்லாம்‌ பதில்‌ சொன்னதும்‌, யக்ஷன்‌ என்ன செய்தான்‌?

புதன், 19 அக்டோபர், 2022

ஶ்ரீ மஹாபாரதம்–வினா விடை 21

வினா 126.- இவ்வாறு காம்யகவனத்தில்‌ வஸிக்கையில்‌ தர்மபுத்திரர்‌ மனதில்‌ என்ன கஷ்டம்‌ உண்டாயிற்று? இதை யார்‌ எவ்வாறு நிவர்த்தி செய்ய ஒப்புக்கொண்டது?

விடை.- கர்ணன்‌ அர்ஜுனனைக்‌ கொன்றுவிடுவானே என்ற பயம்‌ அடிமுதல் தர்மபுத்திரர்‌ மனதில்‌ இருந்தது. இதை யறிந்து இந்திரன்‌ தனது பிள்ளையாகிய அர்ஜுனனைக்‌ காப்பாற்றுவதற்காக கர்ணனிடம்‌, அவனோடு பிறந்த கவசம்‌, கர்ணகுண்டலம்‌ ஆகிய இவைகளை, யாசித்துப்‌ பெற்றுக்கொள்வதாகத்‌ தீர்மானித்தான்‌.

வினா 127.- இவ்விஷயம்‌ கர்ணனுக்குத்‌ தெரியவந்ததா? எப்படி? கர்ணன்‌ என்ன தீர்மானம்‌ செய்தான்‌?

விடை.- கர்ணன்‌ தகப்பனாராகிய ஸூர்ய பகவான்‌ பிராமண உருக்கொண்டு கர்ணனுக்கு இந்திரனது தீர்மானத்தைத்‌ தெரிவித்து அவன்‌ உடன்பிறந்து அவனுக்குத்‌ தோல்வி வராதிருக்கும்படி செய்யும்‌ கவச கர்ணகுண்டலங்களை இந்திரனுக்குக்‌ கொடுக்கக்கூடாது என்ற புத்திமதி கூறினார்‌. கொடையில்‌ சிறந்த கர்ணன்‌ இதற்கு ஒப்பவில்லை. உடனே ஸூர்யன்‌ நீ இந்திரனிடம்‌ இருந்து சத்ருக்களைக்‌ கொல்லும்படியான ஒரு சக்தி ஆயுதத்தை வாங்கிக்‌ கொண்டு இவைகளைக்கொடு' என்று சொல்லி மறைய, கர்ணன்‌ அவ்வாறு செய்வதாய்த்‌ தீர்மானித்தான்‌.

வினா 128.- இந்திரன்‌ எவ்வாறு வந்து என்ன செய்தான்‌?

விடை.- இந்திரன்‌ ஒருகிழப்பிராமணன்‌ உருக்கொண்டு, கர்ணனிடம்‌ வந்து கவசம்‌, கர்ணகுண்டலம்‌ ஆகிய இவைகளைத்‌ தனக்குத்‌ தரவேண்டுமென்று கேட்டான்‌. உடனே இவைகளால்‌ தனக்கு உள்ள மேன்மைகளையும்‌, இவைகளைக்‌ கொடுத்துவிட்டால்‌ தனக்கு உண்டாகும்‌ தீங்குகளையும்‌ எடுத்துக்‌ கர்ணன்‌ சொல்லி, இந்திரனைத்‌ தனது தானத்திற்குப்‌ பதில்‌ ஒரு பெரிய விரோதியைக்‌ கொல்லத்தக்க ஒரு ஆயுதம்‌ தரவேண்டுமென்று கேட்டுக்‌ கொண்டான்‌. இந்திரன்‌ அவ்வாறே ஒருசிறந்த பகைவனை மாத்திரம்‌ கொல்லத்தக்க இந்திரசக்தியைக்‌ கர்ணனுக்குக்‌ கொடுத்துவிட்டு கர்ணனது கவசத்தையும்‌, குண்டலங்களையும்‌ வாங்கிக்‌ கொண்டான்‌. இந்திரனது அனுக்கிரகத்தால்‌ கர்ணன்‌ இவைகளை இழந்தும்‌ முன்‌ போலவே விளங்கினான்‌.

வினா 129.- முன்‌ சொல்லியபடி திரெளபதிக்கு வந்த கஷ்டம்‌ நிவர்த்தியானதும்‌ பாண்டவர்கள்‌ எங்குச்‌ சென்றார்கள்‌? அங்கு என்ன விசேஷம்‌ நடந்தது?

விடை.- பாண்டவர்கள்‌ காம்யகவனம்‌ விட்டு துவைதவனம்‌ சென்றார்கள்‌. அங்கு ஒரு ரிஷியின்‌ நெருப்புண்டாக்கும்‌ கருவியாகிய அரணீக்கட்டைகள்‌ ஒரு மானின்‌ கொம்புகளில்‌ அகப்பட்டுக்‌ கொள்ள அது அவைகளைக்கொண்டு ஓடிப்போய்விட்டது. ரிஷிவந்து இதைப்‌ பாண்டவர்களிடம்‌ சொல்ல அவர்கள்‌ அந்த மான்‌ போனவழியே வெகுவிரைவாய்ச்‌ சென்றார்கள்‌. மான்‌ சில காலம்‌ கண்ணில்‌ பட்டும்‌ சில காலம்‌ மறைந்தும்‌ இவர்களைக்‌ காட்டில்‌ வெகு தூரம்‌ அலைத்து இழுத்துப்போக, இவர்களுக்குத்‌ தாகம்‌ அதிகரித்துவிட்டது. உடனே நகுலன்‌ ஒரு மரத்தில்‌ ஏறிச்‌ சுற்றுமுற்றும்பார்க்க, தூரத்தில்‌ ஒரு செழிப்பான சோலையைக்‌ கண்டான்‌; அங்கு இருக்கும்‌ தண்ணீரைக்‌ கொண்டுவருவதற்காக நகுலன்‌ புறப்பட்டுச்‌ சென்றான்‌.

வினா 130.- அந்தச்‌ சோலையில்‌ பாண்டவர்களுக்கு என்ன ஆபத்து நேரிட்டது? ஏன்‌?

விடை.- போன நகுலன்‌ அங்குத்‌ தண்ணீர்‌ இருப்பதைக்‌ கண்டு குடிக்க யத்தனிக்க அக்குளத்தைக்‌ காத்துவரும்‌ கொக்குரூபமான யக்ஷன்‌ ஒருவன்‌ அசரீரிபோல்‌ 'நான்‌ கேட்கும்‌ கேள்விகளுக்குத்‌ தகுந்த பதில்‌ சொல்லிய பின்புதான்‌ இந்தக்‌ குளத்து நீரை நீ குடிக்கவாவது வெளியே எடுத்துப்போகவாவது செய்யலாம்‌. அதற்கு முன்‌ நீயதைத்‌ தொடாதே என்று சொன்னான்‌. நகுலன்‌ இதைக்‌ கவனியாது தண்ணீரைக்‌ குடிக்க, உடனே கரையில்வந்து இறந்துவிழுந்தான்‌. நகுலன்‌ வராதது கண்டு தர்மபுத்திரர்‌ ஸஹாதேவனை அனுப்ப அவனும்‌ யக்ஷனது சொல்லைக்கவனியாது தண்ணீர்‌ குடித்தமையால்‌ கரையில்‌ இறந்து விழுந்தான்‌. இதுபோலவே அர்ஜுனனும்‌ பீமனும்‌ முறையே அக்குளக்கரைக்குப்போய்‌ இறந்து விழுந்தார்கள்‌.

வினா 131.- இவ்வாறு போன தம்பிமார்‌ ஒருவரும்‌ திரும்பி வராதது கண்டு யுதிஷ்டிரர்‌ என்ன செய்தார்‌?

விடை.- இவர்‌ மனங்கலங்கிக்‌ குளக்கரைவர, அங்குத்‌ தமது தம்பிகளிருக்கும்‌ நிலையைக்கண்டார்‌. முதலில்‌ துக்கமேலிட்டதால்‌ கொஞ்சம்‌ பிரலாபித்துவிட்டு, இவர்கள்‌ இறக்கக்‌ காரணம்‌ என்ன இருக்கலாம்‌ என்றும்‌ யோசித்தார்‌. தண்ணீர்‌ காரணமாயிருக்கும்‌ என்று அவருக்குத்‌ தோற்றவிலை. அவர்‌ உடனே தாமும்‌ இறப்போம்‌ என்று தண்ணீரில்‌ விழுந்தார்‌. அப்பொழுது வழக்கப்படி அசரீரி வாக்குண்டாகத்‌ தர்மபுத்திரர்‌ கொக்காகிய யக்ஷனைக்‌ கண்டார்‌. அவன்‌ அவரது தம்பிமார்‌ தனது கேள்விக்குப்‌ பதில்‌ சொல்லாது தண்ணீரைக்‌ குடித்ததால்‌ தான்‌ தானே அவர்களைக்‌ கொன்றுவிட்டதாகச்‌ சொன்னான்‌. இதைக்கேட்டதும்‌ தர்மபுத்திரர்‌ யக்ஷனைக்‌ கேள்விகளைக்‌ கேட்கும்படி சொல்ல, அவன்‌ கேட்ட கேள்விகள்‌ எல்லாவற்றிற்கும்‌ மனக்கலக்கமின்றி விடை கொடுத்தார்‌.

வினா 132.- யக்ஷன்‌ கேட்ட சில கேள்விகளும்‌ அதற்குத்‌ தர்மபுத்திரர்‌ கொடுத்த விடைகளும்‌ எவை?