வினா 21.- இவ்வாறு கீசகன் இறந்ததும் என்ன நடந்தது?
விடை.- பீமன் திரெளபதியை இவ்வாறு திருப்திப்படுத்தி விட்டு தன் மடைப் பள்ளிக்குச் சென்றான். திரெளபதி அருகிலிருந்த காவலாளர்களை அழைத்துத் தனது கற்பைக் கெடுக்க வந்த கீசகன் தனது பர்த்தாக்களான கந்தர்வர்களால் பட்டபாட்டைக் காண்பித்தாள். அவர்களும் ஸைரந்திரி சொல்லுவது உண்மை என்று நம்பினார்கள். இந்த ஸங்கதியை உடனே உபகீசகர்கள் என்ற கீசகன் தம்பிமார்கள் கேள்விப்பட்டு நாடகசாலை வந்து தமது தமயன் நிலையைக்கண்டு பரிதபித்தனர்.
வினா 22.- இவர்கள் வந்ததும் அருகே இருந்த திரெளபதிக்கு என்ன கஷ்டம் வந்தது?
விடை.- உபகீசகர்கள், அருகே ஒரு தூணில் சாய்ந்து கொண்டு எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த திரௌபதியைக் கண்ட உடனே அவர்களுக்கு அவளை அவமானப்படுத்த வேண்டுமென்று தோன்றிற்று. விராடராஜன் பலமற்ற அரசனாகையால் அவனிடமிருந்து ஸைரந்திரியையும், கீசகனது தேகத்தோடு கட்டி எரித்துவிட அனுமதியைப் பெற்றுக்கொண்டு வந்து, உபகீசகர்கள் ஸைரந்திரியின் தலைமயிரை இழுத்து கீசகனது பாடைக் கொம்பில் கட்டி அவளையும் மயானத்திற்கு இழுத்துச் சென்றனர்.
வினா 23.- இந்தக் கஷ்டம் திரெளபதிக்கு எவ்வாறு நீங்கியது?
விடை... மயானத்திற்குப்போகும் வழியில் திரெளபதி "ஏ ஜயா, ஜயந்தா, விஜயா, ஜயத்ளேனா, ஜயத்பாலா! என்னை இத்தருணத்தில் கைவிட்டுவிடக்கூடாது” என்று கந்தர்வர்களை அழைப்பது போலப் பாண்டவர்களை அவர்களது ஸங்கேதப் பெயர்களைச் சொல்லி அழைத்தாள். இதை மடைப்பள்ளியில் இருக்கும் பீமன் கேட்டதும் அவன் தனது உருவை ஒருவாறு மாற்றிக்கொண்டு தேகந்தெரியாது எழுந்து விரைவில் கோட்டை மதில் முதலிய தடைகளைத் தாண்டிக் குதித்து சீக்கிரத்தில் மயானம் வந்தான். அவன் வரும்பொழுது வழியிலிருந்த ஒரு பனைமரத்தைப் பிடுங்கி எடுத்துக்கொண்டு விரைவாய் வருவதைக் கண்ட உபகீசகர்கள் பயந்து ஸைரங்திரியை விட்டுவிட்டு நாலாபக்கங்களிலும் ஓடத்தலைப் பட்டனர். பீமன், உபகீசகர்கள் 105 பேர்களில் ஒருவரையும் ஊருக்குள் போகவிடாமல் தனது பனைமரத்தால் ஓங்கி அடித்து யமபுரம் அனுப்பி, திரெளபதியைத் தேற்றி அவளை. அந்தப்புரம் போகச் சொல்லிவிட்டுத் தான் மடைப்பள்ளியை அடைந்தான்.
வினா 24.- இவ்வாறு ஸகல கஷ்டங்களும் நீங்கித் திரெளபதி அரண்மனைக்கு வந்ததும் அங்கு என்ன நடந்தது?
விடை.- இப்படி கீசகனும், உபகீசகர்களும் மாண்ட ஸங்கதி அரசனுக்குத் தெரியவர, அவனுக்கு ஸைரந்திரியை இனிமேல் இங்குவைத்திருக்கக் கூடாது என்ற எண்ணம் வந்தது. அதை ஸுதேக்ஷணையிடம் தெரிவித்தான். இதற்குள் திரெளபதி அரண்மனையில் புகுந்தாள். அப்பொழுது மடைப்பள்ளி வாயிலில் இருக்கும் பீமனைக் கண்டதும் ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டு, சற்று நேரம் கந்தர்வர்களை வாயாரத் துதித்தாள். உள்ளே போகும்பொழுது பிரகந்நளையும், இராஜ குமாரிகளும் இவளது க்ஷேமத்தை விசாரித்தார்கள். அந்தப்புரம் சென்றதும் அரசனது எண்ணத்தை ஸைரந்திரியிடம் ஸுதேக்ஷணாதேவி வெளியிட்டாள். இதைக்கேட்டதும் திரெளபதி தான் இன்னும் 13-நாள் தான் அங்கு இருக்கப்போகிறதாகவும், அதன் பின்பு தன் பர்த்தாக்கள் தன்னை அழைத்துப்போவார்கள் என்பதாகவும், அது வரையில் பொறுத்திருந்தால் அவர்களுக்குக் கந்தர்வர்கள் நன்மையையே செய்வார்கள் என்பதாகவும் சொல்லி விராடராஜன் அந்தப்புரத்தில் திரெளபதி ஸுகமாய் வாழ்ந்திருந்தாள்.
வினா 25.- இப்படிப் பாண்டவர்கள் மறைந்து வாஸம் செய்யுங்கால் அவர்களைத் தூர்யோதனாதியர் எவ்வாறு கண்டு பிடிக்க முயன்றனர்? அவரது பிரயத்தனம் என்னமாயிற்று?
விடை... துர்யோதனாதியர்கள் 13-வது வருஷாரம்பமுதல் எவ்வளவோ தூதரையும், வேவுகாரரையும் அனுப்பிப் பாண்டவர்ளைக்கண்டுபிடிக்க முயன்றனர். என்ன செய்தும் பாண்டவர்களையாவது பாண்டவர்கள் மறைந்து வாஸம் செய்யும் இடத்தையாவது அவர்களால் கண்டு பிடிக்கமுடியாமல் போய்விட்டது. இவர்களில் விராடபட்டணம் போய்வந்த வேவுகாரர்கள் மாத்திரம் பாண்டவர்கள் இருக்கும் இடத்தை அறியமுடியாத போதிலும், கீசகன் ஒரு ஸதிரீ நிமித்தமாய் தனது தம்பிமார் 105-பேர்களோடுமாண்ட அதிசய ஸமாசாரத்தை மாத்திரம் கொண்டு வந்தார்கள்.
வினா 26.- இவ்வாறு வேவுகாரரை அனுப்புவித்த செய்தி முடிந்ததும் துர்யோதன ஸபையில் என்ன விஷயத்தைப்பற்றி யார் யார் என்னென்ன பேசினார்கள்? விடை... கர்ணனும் சகுனியும் “இன்னும் அதிக ஸாமர்த்தியமுடைய வேவுகாரர் மூலமாய் பாண்டவர்களைக் கூடிய சீக்கிரத்தில் கண்டுபிடிக்கவேண்டும்" என்றனர். “வேவுகாரர் நன்றாய்த்தேடட்டும். ஆனாலும் கஷ்டங்கள் அறியாத பாண்டவர்கள் வனவாஸ அக்ஞாதவாஸ உபாதைகளால் அவசியம் இறந்தே யிருப்பார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது” என்று துராத்மாவான துச்சாஸனன் சொன்னான். “பாண்டவர்கள் இறந்திருக்கமாட்டார்கள். அவர்கள் இருக்கும் இடத்தை பிராம்மண தூதர்கள் ஸித்தாள் மூலமாய் சீக்கிரம் கண்டுபிடிக்க முயலவேண்டும்” என்றார் துரோணர். பீஷ்மர் “பாண்டவர் மஹாத்மாக்களாகையால் அவர்கள் இறந்திருக்கவே மாட்டார்கள். அவர்கள் சூதாட்டத்தில் ஏற்பட்ட நிபந்தனைப்படி நடந்தாய்விட்டது. இனிமேல் அவர்களைக் கண்டுபிடித்துக் காட்டுக்கனுப்புவது ஸரியன்று. அவர்கள் இருக்கும் தேசத்தில் ஸகல சுபக்குறிகளும் காணப்படும், அசுபக்குறியே இருக்க மாட்டாது. அப்பட்டணத்திலுள்ளவர்கள் தமது தர்மத்தைவிட்டு விலகாது, ஸன்மார்க்கத்தைப் பின்பற்றுபவராய் சண்டை சச்சரவு, வியாதி, அகாலமிருத்யு முதலியவைகளால் வருந்தாது எப்பொழுதும் ஸுகமாய் வாழ்வார்கள். ஆகையால் அவர்கள் விஷயத்தில் நீ சீக்கிரமாக நியாயமாய் நடந்து கொண்டால் தான் உனக்கு நலம்" என்று புத்திமதி கூறினார். கிருபாசாரியர், பீஷ்மர் சொல்லியது யாவும் ஸரி என அங்கீகரித்தார். இவர்கள் இவ்வாறு பாண்டவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க திரிகர்த்த தேசாதிபதியாகிய ஸுசர்மா என்பவன் தான் அதுவரையில் கீசகனால் அனேகம் தரம் தோல்வி யடைந்திருப்பதாகவும் இப்பொழுது கீசகன் இறந்து விட்டதால், தான் மறுபடியும் விராட நகரத்தை நோக்கிப் படையெடுத்துப்போய் அதைப் பிடித்து துர்யோதனது இராஜ்யத்தை விஸதாரப்படுத்துவதாகவும் சொன்னான். இதைக் கேட்டதும் துர்யோதனனுக்கு முன்னமேயே பீஷ்மர் பாண்டவர் களிருக்கும் இராஜ்யத்தை வர்ணித்ததற்கும், விராடநகரத்தின் செழிப்பிற்கும், ஏதோ பொருத்தம் இருக்கிறதாகத் தோன்றினமையால் அங்கு ஒருவேளை படையெடுத்துச் சென்றால் பாண்டவர்களையும் கண்டு பிடிக்கலாம் என்று தோன்ற அவன் ஸுசர்மா சொன்னதை ஒப்புக்கொண்டு, விராடநகரத்தின்மேல் படையெடுத்துச் செல்லுவதாகத் தீர்மானித்தான்.
வினா 27.- விராட நகரத்தின் மீது துர்யோதனாதியர் எவ்வாறு படையெடுத்துச் சென்று எவ்வாறு விராடராஜனைப் போருக்கழைத்தனர்?
விடை... திரிகர்த்த தேசாதிபதிகள் தமது படைகளோடு முதலில் விராட நகரத்தின் தெற்கே சென்று அங்குள்ள பசுக்கூட்டங்களைக் கவர்ந்து விராட நகரத்தவரை வலுவில் சண்டைக்கு இழுத்தனர். துர்யோதனாதியர், பீஷ்மர் முதலியோர் தாம் செய்து கொண்டு வந்த ஏற்பாட்டின்படி மறுநாள் விராடபட்டணத்தின் வடபக்கத்திலிருந்த பசுக்கூட்டங்களைக் கவர்ந்து சண்டை உண்டாக்கினர்.
வினா 28.- தெற்கே வந்த திரிகர்த்த தேசாதிபதிகளை எதிர்த்து யார் போருக்குச் சென்றது? இந்த யுத்தம் எவ்வாறு முடிந்தது? ஏன்?
விடை... தெற்குதிக்கை நோக்கி விராடராஜன், கங்கபட்டர், வல்லபன், தாமக்கிரந்தி, தந்திரபாலன் முதலியவர்களது ஸகாயத்தோடு, போருக்குப் புறப்பட்டான். அங்கு சண்டை இரவிலும் அகோரமாய் நடந்தது. அதில் கடைசிக் காலத்தில் திரிகர்த்த தேசாதிபதிகள் விராடராஜனை ஓடிவந்து பிடித்துக்கொண்டு போய் தமது தேர்க்காலோடு கட்டிவிட, விராடராஜன் ஸேனை வெருண்டோடத் தொடங்கியது. இதைக் கண்ட கங்கபட்டர், வல்லபன், தாமக்கிரந்தி, தந்திரபாலன் ஆகிய மூவரையும் அரசனுக்கு ஸகாயமாய்ப் போர் செய்யச்சொல்ல, அவர்கள் வெகு அடக்கமாய்ச் சண்டை செய்து விராடராஜனை விடுவித்து திரிகர்த்த தேசாதிபதியாகிய ஸுசர்மாவைச் சிறைபிடித்து வர, ஸுசர்மாவினது சேனை சின்பின்னமாகி நான்கு பக்கங்களிலும் சிதறி ஓடிப்போயிற்று. கொஞ்ச நாழிகைக்குப் பின்பு கங்கபட்டரது வேண்டுகோளின்படி, வல்லபன் ஸுசர்மாவைக் கட்டவிழ்த்து விட, அவன் வெட்கி ஓடிப்போனான். விராடராஜன் அன்றிரவையும் மறுநாட்காலையையும் அங்கு சோலைகளில் கழித்து விட்டு, மறுநாள் நடுப்பகலில் தன் பட்டணத்திற்குப் போவதாகத் தீர்மானித்தான். மறுநாள் பொழுது விடிந்ததும் பாண்டவர்களது ஒரு வருஷ அக்ஞாதவாஸம் முடிவுபெற்றது.
அருமை. நமஸ்காரம். நன்றி
பதிலளிநீக்கு