விராட பர்வம்
கீசக வதம்
வினா 1.- இவ்வாறு யமதர்மராஜன் சொல்லி மறைந்ததும் தர்மபுத்திரர் எவ்வாறு அக்ஞாதவாஸம் செய்வதாக ஒப்புக்கொண்டார்?
விடை. தாம் பிராம்மண வேஷம் பூண்டு கங்கபட்டர் எனப்பெயர் வைத்துக் கொண்டு விராடராஜனிடம் சூதாடி இனிமையான வார்த்தைசொல்லி அவனைச் சந்தோஷப் படுத்துவதாகவும், அவ்வரசன் அதிக சந்தோஷப்பட்டு “நீர் இதற்கு முன்பு எங்கிருந்தீர் என்று கேட்டால் “நான் யுதிஷ்டிரரது ராஜஸபையில் இருந்தேன். அவருக்கும் எனக்கும் அதிக பேதம் இருப்பதாக எண்ணி ஒருவரும் சரிவர அங்கு நடந்து கொள்ளவில்லை. நாங்கள் இருவரும் அவ்வளவு பிராண ஸ்நேகிதராய் இருந்தோம் என்று சொல்லுவேன்" என, தர்மபுத்திரர் தமது அபிப்பிராயத்தை வெளியிட்டார்.
வினா 2.- பீமன் எவ்வாறு காலங்கழிப்பதாகச் சொன்னான்?
விடை... “வல்லபன் என்கிற சமையற்கார வேஷம் பூண்டு, அரசன் பாகசாலையில் வேலைக்கமர்ந்து எனது திறமையை நன்றாய்க்காட்டிப் பாகசாலைக் கதிபதி யாவேன். மேலும் எனது தேக பலத்தால் சமையலுக்கு வேண்டிய விறகு முதலிய வைகளை நான் சுமந்து வருவேன். காட்டிலுள்ள புலி, கரடி, முதலிய கொடிய மிருகங்களோடும் அரசன் முன்பு சண்டையாடி, அவனைச் சந்தோஷப்படுத்துவேன். மல்லகஜட்டிகளோடு மல்ல யுத்தம் செய்து ஜெயம்பெறுவேன். “நீ முன்பு எங்கு இருந்தாய்" என்று அரசன்கேட்டால் நான் இத்தொழில்களைச் செய்துகொண்டு யுதிஷ்டிரரிடம் இருந்தேன்” என்று சொல்லுவேன். “என் விஷயத்தில் நீங்கள் கவலைப்படவேண்டாம்” என்று பீமன் சொன்னான்.
வினா 3- அர்ஜுனன் எவ்வேஷம் பூண்டு அக்ஞாதவாஸம் செய்வதாகச் சொன்னான்?
விடை.- இந்தச்சமயத்தில் இந்திரலோகத்தில் ஊர்வசி தனக்குக்கொடுத்த சாபம் அர்ஜுனனுக்கு ஞாபகம் வர, "நான் பிரகந்நளை என்கிற பெயரோடு கூடிய ஒரு பேடி உருக்கொண்டு விராடராஜன் அந்தப்புரத்திலுள்ள பெண்களுக்குக் கதை சொல்லுதல், பாட்டுக்கற்பித்தல், நாட்டியங் கற்பித்தல் முதலிய தொழில்களால் அரசனையும், அவன் பெண்சாதி முதலியவர்களையும் திருப்திப்படுத்துவேன். “நீ முன்பு எங்கு இருந்தாய்” என்று யாராவது கேட்டால் “திரெளபதியிடம் வேலைக்காரியாய் இருந்தேன் என்று சொல்லி ஒருவரும் அறியாத வண்ணம் நான் மறைந்து வாஸம் பண்ணுவேன்" என்று அர்ஜுனன் எடுத்துரைத்தான்.
வினா 4.- நகுலன் எப்படி ஒருவரும் அறியாதபடி விராட நகரத்தில் ஒருவருஷம் வாஸம் செய்யப்போகிறதாகச் சொன்னான்?
விடை.- "நான் தாமக்கிரந்தி எனப்பெயர் வைத்துக்கொண்டு விராடராஜனது குதிரைகளை நன்றாய்ப் பாதுகாத்துக் கொண்டு ஒருவருஷ காலத்தைத் தள்ளிவருவேன். அப்பொழுது யாராவது என்னைப்பற்றி விசாரித்தால் நான் தர்மபுத்திரரது குதிரைகளை மேற்பார்வை யிட்டுக்கொண்டிருந்தவன் என்று சொல்லி என்னை எவராலும் கண்டு பிடிக்க முடியாதபடி ஜாக்கிரதையாய் ஒருவருஷம் முடிகிறவரையில் இருப்பேன்" என்றான்.
வினா 5.- ஸகாதேவன் எவ்வாறு காலங்கழிக்கப் போகிறதாகச் சொன்னான்?
விடை... "நான் தந்திரபாலன் என்கிற பெயரோடு விராடராஜனது பசுக்கூட்டங்களை ஒழுங்காய்ப் பாதுகாத்து வருவேன். அப்பொழுது என்னைப்பற்றி யாராவது விசாரித்தால், நான் தர்மபுத்திரரது கோதனத்தை ரக்ஷித்து வந்த கோபாலத் தலைவன் என்று மறுமொழி சொல்லி என்னை ஒருவரும் அறியாத வண்ணம் ஒரு வருஷத்தை எளிதில் கழிப்பேன்" என்று எடுத்துரைத்தான்.
வினா 6.. திரெளபதி எவ்வாறு தனது உண்மை உருவைக் காட்டாது ஒரு வருஷம் காலங்கழிக்கப் போகிறதாகச் சொன்னாள்?
விடை... "அந்தப்புரத்தில் பூமுடித்தல், சந்தனம் கரைத்தல், தலைபின்னல் முதலிய தொழிலைச் செய்யும் தாதிப் பெண்ணாக வேஷம்தரித்து, நான் ஸைரந்திரி என்னும் பெயர் பூண்டு விராடராஜன் பெண்சாதியாகிய ஸுதேக்ஷணாதேவி இடம் வேலைக்கு அமருவேன். என்னைப் பற்றி அவள் கேள்விகள் கேட்டால், நான் திரெளபதியின் தாதி என்று சொல்லுவேன். இவ்வொரு வருஷம் என் பாதிவிருத்தி யத்திற்குப் பங்கம் வாராது இருப்பதற்காக நான் இராஜபத்தினியிடம் எனக்கு பர்த்தாக்கள் ஐந்து கந்தர்வர்கள் என்றும், அவர்கள் எங்கும் உலாவிக் கொண்டிருப்பார்கள் என்றும். என்னைத் துராசையோடு பார்த்தவர்களை உடனே தவறாது கொல்லுவார்கள் என்றும் சொல்லி பயப்படுத்துவித்து, ஸுகமாய் ஒரு வருஷம் ஒருவருக்கும் தெரியாது விராட பட்டணத்தில் வாழ்வேன்" என்று திரெளபதி கூறினாள்.
வினா 7.- இவ்வாறு பாண்டவர்கள் ஒரு வழியாய்த் தீர்மானித்த பிறகு யார் எவ்வாறு இவர்களுக்குப் புத்திமதி கூறினது? பின்பு என்ன நடந்தது?
விடை... பாண்டவர்களது குருவாகிய தெளம்யர் இராஜ ஸேவை செய்யவேண்டிய விதத்தை நன்றாய் எடுத்துச் சொல்லி, "அகலாது அணுகாது தீக்காய்வார்போல, மன்னரைச் சேர்ந்தொழுகுவார்" என்ற பொருளை, நன்கு விளக்கிக் காட்டினார். அதன் பின்பு தெளம்யர் பாண்டவர்களை விராட நகரத்திற்கு அனுப்பிவிட்டு அவர்களது அக்னிஹோத்ராக்னியை துருபதராஜனது பட்டணத்திற்கு எடுத்துச்சென்றார்.
வினா 8.- இவ்வாறு தெளம்யர் சென்றதும், விராடநகரப் பிரவேசம் செய்யுமுன் பாண்டவர்கள் என்ன செய்தார்கள்?
விடை... தெளம்யர் சென்றதும், பாண்டவர்கள் தமது ஆயுதங்கள் எல்லாவற்றையும் விராட பட்டணத்தின் வெளியில் மயானத்திலிருக்கும் வன்னிமரத்தில் வைத்துக் கட்டி அதன் முன்பு ஒரு பிணத்தையும் கட்டிவிட்டார்கள். இதனால் ஒருவரும் ஆயுதங்களைத் தொடமாட்டார்கள் என்கிற தைரியம் அவர்களுக்கு வந்து விட்டது. அதன் பின்பு பிறர் அறியாது தங்களை ஒருவரை ஒருவர் விராட பட்டணத்தில் அழைத்துக்கொள்ள முறையே தமக்கு ஜயன், ஜயந்தன், விஜயன், ஜயத்ஸேனன், ஜயத்பாலன் என்ற ஸங்கேதப் பெயர்களையும் அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள். இது முடிந்ததும் விராடபட்டணம் புகுமுன் யுதிஷ்டிரர் ஜகத் மாயையாகிய துர்க்கா தேவியைத் துதிக்க அவள் பிரத்யக்ஷமாகிப் பாண்டவர்களுக்கு ஜயம் கூடிய சீக்கிரத்தில் வரும் என்று அனுக்கிரகித்து மறைந்தாள்.
வினா 9- பாண்டவர்கள் விராட நகரத்தில் எவ்வாறு பிரவேசித்தனர்? அங்கு என்ன நடநடந்தது?
விடை... பாண்டவர்கள், தர்மபுத்திரர் முதல் வரிசையாய்க் கொஞ்ச நாழிகைக்கு ஒவ்வொருவராக விராடநகரத்துள் பிரவேசித்தார்கள். கடைசியாய்த் திரெளபதி விராடநகரத்தில் பிரவேசித்தாள். இவர்களைக் கண்டதும் அரசனும், அவன் மனைவியும் வெகுமரியாதை செய்து அவரவர்கள் மனத்தின்படி அவரவர்களை வேலை செய்து கொண்டு தம்மிடத்தில் இருக்கும்படி உத்தரவு கொடுத்தார்கள். பாண்டவர்கள் தாம் எண்ணியபடி விராடநகரத்தில் ஸுகமாய் வஸிக்கத் தொடங்கினர். ஸைரந்திரியை, அவளுக்குக் கந்தர்வரது காவல் இருக்கிறது என்று உணர்ந்து, அரசன்கூடக் கண்ணெடுத்துப் பார்க்கப் பயந்திருந்தான். திரெளபதி தனது கற்புக்குக் குறைவுவராது அங்கு வாழ்ந்து வந்தாள். பாண்டவர்கள் தத்தமக்குக் கிடைத்தவைகளை மற்றவர்களுக்கும் இரகஸியமாய்க் கொடுத்து ஸுகமாய் வாழ்ந்து வந்தார்கள்.
வினா10.- இப்படிப் பாண்டவர்கள் வாழ்ந்து வருகையில் விராட பட்டணத்தில் என்ன விசேஷம் நடந்தது? அதில் யாருடைய சக்தி வெளிவந்தது?
விடை... நான்காவது மாதம் விராடநகரத்துச் சிவன் கோயிலில் உத்ஸவம் வந்தது. அக்காலத்தில் ஜீமூதன் என்கிற மல்லனது அதிகாரத்துக்குட்பட்டு அனேக மல்லர்கள் இராஜஸபைக்கு வந்தார்கள். ஜீமூதனோடு எதிர்த்து மல்ல யுத்தம் பண்ண ஒருவருக் கும் மனம் துணியவில்லை. அப்பொழுது விராடராஜன் வேண்டுகோளின்படி வல்லபன் (பீமன்) என்கிற மடைப்பள்ளி அதிகாரி ஜீமூதனை எதிர்த்தான். வல்லபன் வெகு விசித்திரமான யுத்த வரிசைகளை எல்லாம் ஸபையார் மகிழும்படி காட்டிவிட்டு கடைசியில் ஜீமூதனைக் கொன்றான். இதனால் பீமனது பலம் எல்லாருக்கும் தெரிய வந்தது.
வினா 11.- பீமன் அன்று முதல் என்ன செய்ய வேண்டி வந்தது? மற்றையவர்கள் பின்பு என்ன செய்தார்கள்?
விடை... இவனுக்குப் பலத்தில் நிகர் ஒருவரும் இல்லை என்று அரசன் இவனைக் காட்டிலிருந்து பிடித்துவந்த யானை, புலி, சிங்கம் முதலியவைகளோடு, சண்டை செய்யும்படி ஏவ, பீமன் அவ்வாறே அவைகளோடு விசித்திர யுத்தம் செய்து, அரசனை ஸந்தோஷப் படுத்தினான். இதுபோலவே தம்மால் கூடியவரையில் மற்றையவர்களும் தம்வேலைகளை ஒழுங்காய்ச் செய்து தமது எஜமானர்களைத் திருப்திப்படுத்தினார்கள். இவைகளைப் பார்த்திருந்த திரெளபதிக்கு மிகுந்த துக்கமுண்டாக அதை அவள் வெளியில் காட்டிக்கொள்ளாது பெருமூச்சு மாத்திரம் விட்டுக் கொண்டிருந்தாள்.
வினா 12- இவ்வாறு பாண்டவர்கள் வாழ்ந்து வருங்கால் அவர்களுக்கு எப்படி கஷ்டம் யாரால் வந்தது?
விடை.- இவ்வாறு பாண்டவர்கள் 10 மாஸம் விராட நகரத்தில் கஷ்டமின்றிக் காலங்கழித்து விட்டார்கள். இந்த ஸமயத்தில் ஸுதேக்ஷணாதேவியின் ஸஹோதரனாயும், விராடராஜன் ஸேனாதிபதியாயும் இருந்த கீசகன் என்ற துராத்மா தற்செயலாய் திரெளபதியைக் கண்டுவிட்டான். உடனே அவனுக்கு அவளிடம் ஆசை உண்டாக அவளருகே சென்று தனது ஆசையை வெளியிட்டான்.
வினா 13.- திரெளபதிக்கு வந்த இந்தக் கஷ்டத்தை யார் எவ்வாறு ஏன் அதிகப்படுத்தி விட்டார்கள்?
விடை.- திரெளபதி தன்னால் இயன்ற மட்டும் நயமாயும், பயமாயும் தன் வார்த்தைகளால் கீசகனைக் தடுக்க, அவன் தனது ஸகோதரியான ஸுதேக்ஷ்ணையிடம் சென்று தன் ஆசையைத் தெரிவித்தான். அவள் ஸைரந்திரியின் புருஷர்களாகிய கந்தர்வர்களின் மஹத்வத்தை எடுத்துச்சொல்லிக் கீசகனைத் தனது ஆசையை அடக்கும்படி சொன்னாள். கீசகன் மாறாதது கண்டு அவனிடம் ஸைரந்திரியைத் தான் தனிமையாய் அனுப்புவதாகச் சொல்லி, ஸகோதர வாஞ்சையால் ஸுதேக்ஷணாதேவி ஸைரந்திரியை அழைத்துக் கீசகன் வீடுசென்று மது வாங்கி வரும்படி ஏவினாள். அவள் எவ்வளவோ காரணங்களோடு மறுத்துச்சொல்லியும் இராஜபத்தினி கேட்காது பிடிவாதமாய் இருக்க, கடவுள் மேல் பாரத்தைப் போட்டு விட்டு மதுவாங்கிவரப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு கீசகன் வீட்டை நோக்கித் திரெளபதி புறப்பட்டாள். இவ்வாறு ஸுதேக்ஷணாதேவி ஸகோதர வாஞ்சையால் திரெளபதியின் கஷ்டத்தை அதிகப்படுத்தினாள்.
வினா 14- மதுவாங்கி வரப்போன திரெளபதியின் கதி என்னமாயிற்று? அங்கு என்னென்ன நடந்தது?
விடை. கீசகன் விட்டை நோக்கிப் புறப்பட்ட திரெளபதி, போகும் வழியில் எஸூர்யபகவானைத்துதிக்க அவர் ஒரு இராக்ஷஸனைத் திரெளபதியைக் காப்பாற்றும்படி ஏவினார். அவன் மறைந்து கொண்டே திரெளபதியின் பின்னே புறப்பட்டான். திரெளபதி கீசகன் வீடுசென்றதும், தான் வந்த காரியத்தைத் தெரிவித்து சீக்கிரம் மதுவைக் கொடுக்கவேண்டும் என்று கேட்டாள். கீசகன் திரெளபதியை நயமாய் முதலில் தன் வசம் செய்யப்பார்த்து முடியாதது கண்டு, அவளது வலதுகையைப் பிடித்தான். அவள் அதைத் தனது கற்பின் பலத்தால் திமிறிக் கொண்டு வெளியே ஓட ஆரம்பிக்கக் கீசகன் அவளது மேல்துணியின் நுனியைப் பிடித்துக்கொண்டான். உடனே தன் கற்பின் மகிமையால் கீசகனைத் திரெளபதி கீழே தள்ளிவிட்டு தனக்கு வந்த ஆபத்தைத் தெரிவித்துக்கொள்ள தர்மபுத்திரர் வீற்றிருக்கும் விராடராஜன் ஸபையை நோக்கி வெகு பதட்டத்தோடு ஓடி வந்தாள். பின்னே வெறி கொண்டு ஓடிவந்த கீசகன் இராஜஸபை வாயிலில் ஸகலரும் பார்த்துக்கொண்டிருக்கையில் திரெளபதியின் கூந்தலைப் பற்றி இழுத்து அவளைக் காலால் உதைக்க, அவள் மூர்ச்சை அடைந்து கீழே விழுந்தாள்.
வினா 15.- இப்படிச்செய்த கீசகனுக்கு என்ன ஆபத்து வந்தது?
விடை.- ஸூர்ய பகவானால் அனுப்பப்பட்ட இராக்ஷஸன் கீசகன் திரும்புகையில் அவனைக் காற்றின் பலத்தைப் போன்ற பலத்தை வைத்து இடிக்க ஸபையிலிருந் தோர் ஸகலரும் மகிழ்ச்சி அடையும்படி கீசகன் அடியற்ற மரம் போல்விழுந்து மூர்ச்சை போனான். கொஞ்ச நாழிகையானதும் கீசகன் எழுந்து மிகுந்த வெட்கத் தோடு தனது அரண்மனைக்கு ஓடிப்போனான்.
வினா 16.- மூர்ச்சை தெளிந்து எழுந்ததும், திரெளபதி என்ன செய்தாள்? ஸபையில் என்ன விசேஷம் நடந்தது?
விடை... இவ்வாறு கீசகன் செய்ததைக் கண்டதும் ஸபையில் அப்பொழுது இருந்த பீமனுக்குக் கோபம் அதிகரிக்க, அவன் அருகிலிருந்த பச்சை மரத்தைப் பார்த்தான். இந்தக் குறிப்பை அறிந்த யுதிஷ்டிரர் பீமனைக் கையமர்த்திவிட்டு 'விறகுக்காக இராஜஸபையிலிருக்கும் பச்சை மரத்தை ஏன் பார்க்கிறாய்? உனக்கு வேண்டுமானால் ஊருக்கு வெளியிலிருக்கும் மரங்களைப் பார்த்துக்கொள் என்று இரண்டு பொருள்படும்படி சொன்னார். இதன் இரகஸியத்தை அறிந்துகொண்டு பீமன் கோபத்தை அப்பொழுது அடக்கிக்கொண்டான். உடனே திரெளபதி தனக்கு வந்த கேட்டையும் தனது பர்த்தாக்களது வைபவத்தையும், அவர்கள் அப்பொழுது அசட்டையாய் இருப்பதையும், விராடராஜனது ஆண்மையற்ற குணத்தையும்பற்றி வெகுவாக இராஜஸபையில் விஸ்தரிக்கத் தொடங்கினாள். இவைகளைக் கண்ட யுதிஷ்டிரர், அதிகமாய்ப் பேசுவது பெண்களுக்கு அழகல்ல என்றும் அவளது பர்த்தாக்கள் ஏதாவது செய்யத்தக்க ஸமயம் இன்னும் வரலில்லை என்றும், ஆதலால் அந்தப்புரம் உடனே அவள் செல்லவேண்டும் என்றும் சொல்ல, திரெளபதி தனது பர்த்தாக்களை நொந்துகொண்டு அந்தப்புரம் சென்றனள்.
வினா 17.- இதன் பின்பு கீசகன் விஷயத்தில் திரெளபதி என்ன பிரயத்தினம் செய்தாள்?
விடை... கீசகனை உயிரோடு வைத்திருந்தால் தனது கற்பிற்குக் கேடுவரும் என்கிற பயம் திரெளபதியின் மனதில் குடிகொண்டது. வெகு நாழிகை யோசனை செய்த பிறகு இக்காரியத்தை முடிக்க வல்லவன் பீமன் என்று அவளுக்குத் தோன்றியது. இரவில் ஸகலரும் தூங்கிக் கொண்டிருக்கையில் திரெளபதி மடைப்பள்ளியில் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த பீமனை எழுப்பித் தனக்கு வந்த கஷ்டங்களையும், அப்பொழுது வந்திருக்கும் கஷ்டத்தையும் வெகுவாக எடுத்துச் சொன்னாள். பீமன் உடனே கீசகனைக் கூடிய சீக்கிரத்தில் கொல்லுவதாகத் தீர்மானித்தான்.
வினா 18.- கீசகனைக் கொல்லும் விஷயத்தில் பீமன் திரெளபதிக்கு என்ன உபாயம் சொன்னான்?
விடை... திரெளபதி கீசகனது ஆசையைப் பூர்த்தி செய்து வைப்பதாக ஒப்புக்கொண்டு, அதற்குத் தகுந்த இடம் இராஜகுமாரிகள் நாட்டியம் பழகும் ஊருக்கு வெளியில் இருக்கும் நாடகசாலையே என்று சொல்லி, அங்கு கீசகனை இரவில் வரவழைத்தால், அப்பொழுது தான் திரெளபதிக்கு பதிலாக நாடகசாலையில் இருந்து வரும் கீசகனை அன்றிரவே கொல்லுவதாகத் திரெளபதிக்குப் பீமன் தனது எண்ணத்தை வெளியிட்டான். திரெளபதியும் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டாள்.
வினா 19.- திரெளபதி பின்பு என்ன செய்தாள்?
விடை... பீமன் சொல்லியவாறே, திரெளபதி கீசகனைத் தன் வசம் செய்ய, அவன் அன்றிரவே ஊருக்கு வெளியிலிருக்கும் நாடகசாலை யண்டை வருவதாகச் சொல்லிப் போனான். நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் திரெளபதி பீமனிடம் சொல்ல, அவன் அன்றிரவு திரெளபதியையும் கூட அழைத்துக்கொண்டு நாடக சாலை வந்து திரெளபதியை முன் கதவின் ஓரத்தில் நிறுத்திவிட்டு, தான் அங்கு போட்டிருக்கும் கட்டிலில் படுத்துக்கொண்டு கீசகனது வரவை எதிர்பார்த்திருந்தான்.
வினா 20.- கீசகன் அங்கு எவ்வாறு வந்தான்? பின்பு என்ன நடந்தது?
விடை.- இரவு எப்பொழுது வரப்போகிறதென்று எதிர்பார்த்திருந்த கீசகன், மிகுந்த ஆவலோடு நாடகசாலை வந்து அங்கு இருட்டாயிருப்பது கண்டு மெதுவாய் கட்டில ருகில் சென்று திரெளபதியை அழைத்தான். உடனே பீமன் திரெளபதியினது குரலை வகித்து பதில் கொடுக்க, கீசகனுக்கு ஆசை அதிகரித்தது. உடனே கீசகன், படுத்திருக்கும் பீமனது கையை மிகுந்த ஆவலோடு பிடிக்க அது மிகக்கடினமாய் இருப்பதைக்கண்டு திகைத்தான். இது தான் ஸமயம் என்று பீமன் கட்டிலை விட்டெழுந்து கீசகனோடு யுத்தம் செய்யத்தொடங்கினான். இருவரும் வெளியில் சப்தம் கேட்காது சண்டையிடக் கடைசியில் பீமன் கீசகனைக் கொன்றான். உடனே அவனது தலையையும் கைகால்களையும், முறித்து அவனது வயிற்றில் அடைத்து அவனது தேகத்தை ஒரு பிண்டமாக்கிச் சாலையிலிருந்த ஒருவிளக்கைக் கொண்டு வந்து பீமன் திரெளபதிக்குக் கீசகனது நிலையைக் காட்டினான்.
🙏🙏
பதிலளிநீக்குஅருமை நன்றி
பதிலளிநீக்கு