ஐம்பத்து மூன்றாம் ஸர்க்கம்
[ஸ்ரீராமன் தான் கேள்விப்பட்ட லோகாபவாதத்தைத் தனது உடன் பிறந்தோருக்குத் தெரிவிக்க அவர்களை அழைத்தல்,)
இப்படியாகத் தனது நண்பர்களை அனுப்பிய ஸ்ரீராமன் சற்று ஆலோசனை செய்து இதனைத் தனது ஸஹோதரர்களுக்குத் தெரிவிக்க விரும்பியவனாய், ஸமீபத்திலிருந்த வாயிற்காப்போனை யழைத்து, 'நீ உடனே சென்று, அங்குள்ளவனான லக்ஷ்மணனையும், மஹாபாக்யசாலியான பரதனையும், மாவீரனான சத்ருக்னனையும், நான் உடனே இங்கு வரச் சொன்னதாகக் கூறியழைத்து வரவும்' என்று கூறினான். அந்த வாயிற் காப்போனும், வணங்கியவனாய், அங்கிருந்து புறப்பட்டு லக்ஷ்மணனுடைய மாளிகைக்குச் சென்றனன்,
ஒருவராலும் தடுக்கப்படாத அவன், லக்ஷ்மணனைப் புகழ்ந்து விட்டு, வணக்கத்துடன், ஸ்ரீராமச்சந்திரன் உன்னை உடனே காண விரும்புகிறார். சீக்கிரமாகச் செல்லவும்' என்று கூறினான். உடனே லக்ஷ்மணன் அங்கிருந்து புறப்பட்டு வேகத்துடன் ரதத்திலேறிக் கொண்டு ஸ்ரீராமமந்திரத்தை நோக்கிச் சென்றான். பிறகு த்வார பாலகன், பரதனையணுகி, விநயத்துடன், ராமனுடைய கட்டளையைத் தெரிவித்தான். அதைக் கேட்ட பரதன் உடனே ஆஸனத்திலிருந்து எழுந்து, வேகத்துடன் கால் நடையாகவே ஸ்ரீராம க்ரஹத்தை நோக்கிச் சென்றான். பிறகு த்வாரபாலகன் சத்ருக்னனையணுகி ஸ்ரீராமனுடைய நியமனத்தைக் கூறி, லக்ஷ்மண பரதர்கள் சென்றுள்ளதையும் கூறினான். சத்ருக்னன் தலை வணங்கியவனாய் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான். இவர்களனைவரும் வந்துள்ளதை த்வாரபாலகன் ஸ்ரீராமனிடம் தெரிவித்தான். ஸ்ரீராமனும் உடனே அவர்களை உள்ளே அனுப்ப ஆஞ்ஞாபித்தான். இந்திரனுக்கு நிகரான தேஜஸ்ஸை உடைய அந்த மூவரும் வணக்கத்துடன் ஸ்ரீராமன் ஸமீபம் சென்றனர். அங்கு அவர்கள் ராகுவினால் பீடிக்கப்பட்ட சந்திரன் போன்று, வாட்டமுற்ற முகத்துடன் கூடின ஸ்ரீராமனைக் கண்டு, திகைத்தனர். அவருடைய முகமானது, ஸந்த்யாகாலத்தில் ஒளிகுன்றிய சூரியன் போன்று காணப்பட்டது. கண்கள் தாரை தாரையாக நீரைப் பெருக்குகின்றன. இதைக் கண்டு மனம் கலங்கிய அவர்கள். ஸ்ரீராமனின் ஸமீபம் சென்று வணங்கி நின்றனர். அவர்களை ஆலிங்கனம் செய்து கொண்ட ஸ்ரீராமன், அவர்களை ஆஸனங்களில் அமரும்படி ஆஜ்ஞாபித்தான். அவர்களைப் பார்த்து ஸ்ரீராமன் “ஸஹோதரர்களே! நீங்களே எனது ஸம்பத்துக்கள். நீங்களே எனது பிராணன்கள். உங்களுடைய ஸஹாயத்தினாலேயே நான் இந்த ராஜ்யத்தைப் பரிபாலனம் செய்கின்றேன். நீங்கள் சாஸ்திரங்களை நன்கு அறிந்தவர்கள். புத்திசாலிகள். அப்படிப்பட்ட நீங்கள் என்விஷயமாகச் சிறிது, யோசிக்க வேண்டியது உள்ளது" என்றார். இப்படி ஸ்ரீராமன் கூறியதும் லக்ஷ்மண பரத சத்ருக்னர் மூவரும், மனக்லேசம் அடைந்தவர்களாய், "ஸ்ரீராமன் என்ன கூறப் போகிறானோ' என்று யோசித்தவண்ணமிருந்தனர்.
ஐம்பத்து நான்காவது ஸர்க்கம்
[ஸ்ரீராகவன்,லக்ஷ்மணன் முதலியோரிடம், அபவாதச் சொல்லைக் கூறி, ஸீதையை வால்மீகி முனிவரின் ஆச்ரம ஸமீபத்தில் விட்டு வரும்படி லக்ஷ்மணனுக்குக் கட்டளையிடுதல்.]
இப்படி இவர்கள் ஆலோசிக்குமளவில், ஸ்ரீராமன் அவர்களை பார்த்து, வாட்டமடைந்த முகத்தை யுடையவராய், "ஸஹோதரர்களே! நான் சொல்லப் போவதைக் கேளுங்கள். மனக்கலக்கமடையாதீர்கள். லோகாபவாதமானது மிகவும் கொடியது. ஸீதையினிடத்தில் அபவாதமும், என்னிடம் அருவருப்பும் ஜனங்களுக்கு உண்டாகியுள்ளனவென்று அறியப்படுகிறது. இது என்னை மிகவும் வாட்டுகிறது. நான் உயர்ந்ததான இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்தவன். ஸீதையும். உயர்ந்த ஜனக குலத்தில் உதித்தவள். லக்ஷ்மண! நீ இதை யறிவாய். முன்பு தண்டகாரண்யத்தில் தனித்திருந்த ஸீதையை ராவணன் அபஹரித்துச் சென்றான். அவனை நான் வதம் செய்தேன். அப்பொழுது அயலார் வீட்டில் வஸித்த இவளை எப்படி நான் மாசற்றவளாகக் கருதி நம் வீட்டிற்கு அழைத்து செல்வது என்று யோசித்தேன். அதன் பொருட்டு இவள் அக்னி பிரவேசம் செய்து தன்னை மாசற்றவளாக நிரூபித்தாள். இது உனது கண் முன்பாகவே நடந்தது. அங்குக் கூடியிருந்த அனைவரின் முன்பும் அக்னி பகவானும் வாயுதேவனும், சூரிய சந்திரர்களும், ஸீதை குற்றமற்றவள், உத்தமபத்னீ என்றெல்லாம் கூறினர். இதையும் நீ நேரில் கண்டறிந்தவன். எனது அந்தராத்மாவும் ஸீதை பதிவ்ரதை என்பதை நன்கறிந்துள்ளது. எனவே நான் இவனை அயோத்யைக்கு அழைத்து வந்தேன். அப்படியிருந்தும் இந்த ஜனங்களால் கூறப்படும் அபவாதம் என்னை மிகவும் சோகத்திலாழ்த்துகிறது. லோகாபாவதம் மிகவும் பெரியதாகி விட்டதே. அபவாதம் ஒருவனுக்கு உலகில் பரப்பப்படுமாகில், அது உலகில் பரவ வழங்குமளவும், அவன் இழிவான உலகங்களை யடைந்து கஷ்டப்படுவான். இவ்வுலகில் உயர்ந்தவர்களான பலரும், பாடுபடுவதெல்லாம் புகழ் பெறுவதற்கேயன்றோ? நான் லோகாபவாதத்திற்கு மிகவும் பயந்தவனாதலால், அதனை விலக்கிக் கொள்ளுவதற்காக, நான் எனது உயிரையும் விட்டுவிடுவேன். புருஷச்ரேஷ்டர்களான உங்களையும் கைவிடுவேன். அங்ஙனமாக உள்ளபோது, ஸீதையை பரித்யாகம் செய்யக் கேட்கவும் வேண்டுமா? ஆகவே சோகஸாகரத்தில் மூழ்கியுள்ள என்னைப் பார்த்து எனது சொல்லுக்குக் கட்டுப்படுக" என்று கூறினான்.
பிறகு லக்ஷ்மணனைப் பார்த்து - “ஹே லக்ஷ்மண! நீ நாளை விடியற்காலையில் ஸுமந்திரரால் செலுத்தப்படவுள்ள ரதத்தில் ஸீதையை ஏற்றிக் கொண்டு, நமது தேசத்தின் எல்லையில், கங்கா நதியின் மறுபக்கத்தில் விளங்கும் வால்மீகி மஹரிஷியினுடைய ஆசிரமத்திற்கு ஸமீபத்தில், ஒருவருமில்லாத ஸமயத்தில், ஒரு இடத்தில் அவளை விட்டு விட்டு வரவும், சீக்கிரமாக வரவேண்டும்.”
இவ்விஷயத்தில் எனக்கு மறுப்பு ஏதும் சொல்லக்கூடாது. மறுத்தால் எனது அப்ரீதிக்கு விஷயமாவாய். நீங்கள் யாவருமே இவ்விஷயமாய் மறுத்துப் பேசுவதை நான் விரும்பவில்லை. எனது உயிரின்மீது ஆணை. எனது கைகளின் மீது ஆணை. எனது வார்த்தைக்கு மறுப்புச் சொல்பவன் எனது பகைவனாவான். இதை நன்கு உணரவும். ஸீதையை நான் சொன்னபடி அரண்யத்தில் விட்டு வரவும். முன்னொரு சமயம் ஸீதை என்னிடம் கங்காதீரத்திலுள்ள முனிவர்களின் ஆச்ரமங்களைக் காண வேண்டும் என்று கூறியுள்ளாள். அதையே வியாஜமாகக்கொண்டு, இப்பொழுது நான் சொல்லுகிறபடி செய்யவேண்டும். நாளை உதயகாலத்தில் நீ ஸீதையைத் தேரிலேற்றிச் சென்று, நமது நாட்டுக்கு அப்பால் சேர்த்து விடவும். கங்காநதியின் அந்தப்பும் தமஸா நதி தீரத்தில் வால்மீகி முனிவரின் ஆச்ரமமுள்ளது. ஜ்ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவும்.” என்று கூறினான்.
இப்படிக்கூறிய ராமன், கண்களில் நீர் தளும்பப்பெற்றவனாய் பெருமூச்சு விட்டுக்கொண்டு மனையுள் புகுந்தான்.
ஐம்பத்தி ஐந்தாம் ஸர்க்கம்
(லக்ஷ்மணன், ஸீதையை. ராமனின் கட்டளைப்படி, ரிஷிகளின் ஆச்ரமங்களைக்
காட்டுவதற்காக அழைத்துச் செல்வதாகக்கூறி அழைத்துச் செல்வது)
பிறகு அன்றிரவு கழிந்ததும் மறுநாள் உதயத்தில். லக்ஷ்மணன் மிகுந்த துக்கமடைந்து, வாடிய முகத்துடன், ஸுமந்திரரைப் பார்த்து ஸீதையமர்ந்து செல்லும்படியான ஆஸனத்தை ஸித்தப்படுத்தி, ரதத்தைக் கொண்டு வரும்படி ஆஜ்ஞாபித்தான் பிறகு ஸீதையிடம் சென்று, 'தேவி! தேவரீர், முனிவர்களின் ஆச்ரமங்களைத் தரிசித்து வரவேண்டுமென்று. ஸ்ரீராமனை வேண்டினீர்களாம். அவரும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தாராம், அதன் பொருட்டு இன்று உத்திரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது தாங்கள் எழுந்தருளினால், கங்கா தீரத்தில் முனிவர்கள் ஆச்ரமங்கள் நிறைந்த அரண்யத்திற்கு அழைத்துக் கொண்டு செல்லுகிறேன்” என்று விண்ணப்பம் செய்தான். லக்ஷ்மணன் இப்படிக் கூறக்கேட்டு, ஸீதை மிகுந்த மன மகிழ்ச்சியுடன், உயர்ந்த ஆடையாபரணங்களை எடுத்துக் கொண்டு, “இவற்றை நான் அவ்வனத்திலுள்ள ரிஷி பத்னிகளுக்கு அளிக்கப் போகிறேன்”. என்று கூறிப் பிரயாணமாயினள்.'
ஸுமந்திரனால் ஸித்தமாகக் கொணரப்பட்ட தேரில், லக்ஷ்மணன் ஸீதாதேவியையேற்றிக் கொண்டு ராமனது கட்டளையை மனதிற் கொண்டு, குதிரைகளைத் தீவிரமாகச் செலுத்தி வேகமாகச் சென்றான். அப்படிச் செல்லுகின்றபொழுது, ஸீதை நடுவழியில், லக்ஷ்மணனைப் பார்த்து, 'லக்ஷ்மண! இதென்ன? நடுவே. அபசகுனங்கள் அனேகம் காணப்படுகின்றனவே! எனது கண் துடிக்கின்றது. உடல் நடுங்குகின்றது. உள்ளமும் நிலை கொள்ளாமல் கலக்கமுறுகின்றது. இப்பூமி முழுவதும் எனக்கு, சூன்யமாகவே காணப்படுகின்றது. அண்ணனிடத்தில் அன்பு மாறாத உத்தமனே! உனது அண்ணனுடைய திருமேனியை நான் எப்பொழுதும் நினைக்கிறேன். அவர் எனதுள்ளத்தினின்றும், ஒரு நிமிஷமேனும் அப்புறம் விலகுவதில்லை, அவருக்கு ஒருவித குறையுமில்லாதிருக்குமோ? மாமிமார்களுக்கும் மற்றுள்ள ஜனங்களுக்கும் துன்பமொன்றுமில்லாதிருக்க வேண்டுமே,’ என்று இப்படியாக, உரைத்து கைகூப்பிக் கொண்டு, தனது இஷ்ட தேவதைகளை வேண்டிக் கொண்டனள். இது கேட்டு லக்ஷ்மணன் உள்ளத்தில் துயரங் கொண்டவனாயிருந்தபோதிலும், அதை வெளியில் காட்டாமல் ஸந்தோஷமே காட்டி 'அனைவருக்கும் மங்களமுண்டாகட்டும்" என்று கூறி, அன்றிரவு கோமதீ நதிக்கரையிலுள்ள ஓர் ஆச்ரமத்தில் வஸித்தான். மறுநாள் உதயமானதும் கங்கா நதிக்கரையை யடைந்தான். அப்பொழுது நடுப்பகலாயிருந்தது. லக்ஷ்மணன் கங்கா நதியைப் பார்த்து. விசனமுள்ளடங்காமல், உரத்த குரலில் கதறலாயினன். இது கேட்டு, ஸீதை லக்ஷ்மணனை நோக்கி, ‘லக்ஷ்மண! நீயேன் இங்ஙனம் வருந்துகிறாய்? நீ எப்பொழுதும் ராமனை விட்டுப் பிரியாதவனாதலால் இவ்விரண்டு நாளாக, அவனது பிரிவாற்றாமை யினால் வருந்துகிறாயா? நானும் ராமனைக் காண ஆவல் கொள்கிறேன். சீக்கிரம் என்னை. இந்த கங்கா நதியின் அக்கரை சேர்ப்பித்து, அங்குள்ள முனிவர்களை எனக்குக் காட்டவும். நான் அவர்களுக்கு வஸ்திர ஆபராணாதிகளைக் கொடுத்து விதிப்படி அவர்களை வணங்கிப் பூஜித்து விட்டுத் திரும்புகிறேன்,’ என்றாள். ஸீதை இவ்வாறு கூறக் கேட்டு, லக்ஷ்மணன் கண்களைத் துடைத்துக் கொண்டு ஓடக்காரனையழைத்து. ஓடம் கொண்டு வரும்படிக் கட்டளையிட்டான். அவன் அவ்வாறே ஓடமொன்றைக் கொண்டு வந்து நிறுத்தினன்.
ஐம்பத்தி ஆறாவது ஸர்க்கம்
[ஸீதையை, கங்கையின் அக்கரையை யடைவித்து, வால்மீகி முனிவருடைய
ஆச்ரம ஸமீபமழைத்துச் சென்று, அங்கு ஸ்ரீராமனின் கட்டளையைக் கூறுவது]
பிறகு லக்ஷ்மணன், தேரை ஸுமந்திரன் வசமிருத்தி, ஸீதையுடன் படகிலேறி கங்கா நதியின் தென் கரையை அடைந்தான். அங்கு, லக்ஷ்மணன் கண்களில் நீர் ததும்பக் கைகளை கூப்பிக் கொண்டு “ஹே ஸீதே! தேவி! இப்பொழுது நான் தங்களுக்கு, ஒரு செய்தியை விண்ணப்பம் செய்யப் போகிறேன். அது நமது மகாராஜாவின் கட்டளையாகும். அந்தோ! இத்தகைய கொடிய காரியம் செய்வதற்கு, உடன்பட்டு நான் உலகத்தாரின் பழிக்கு ஆளானேன். ஐயோ! எனக்கு இச்சமயத்தில் மரணமேனும் ம்ருத்யுவேனும் ஸம்பவிக்குமேயாகில் அதுவே மிகச்சிறப்புடையதாகும். தாங்கள் எனக்கு அருள் புரியவேண்டும். என்னை தவறு செய்பவனாக நினைக்கக் கூடாது" என்று புலம்பிய வண்ணம் கை கூப்பிக் கொண்டுக் கீழே விழுந்தான்.
மைதிலி இதுகண்டு திகைப்படைந்தவளாய் ‘லக்ஷ்மண! இஃதன்ன எனக்கொன்றும் விள்ங்கவில்லையே! நடந்த விருத்தாந்தமென்ன? நீ ஏன் இப்படி வருத்தமடைய வேண்டும்?’ என்றுகேட்டாள். இப்படி மைதிலி வினவியதும் லக்ஷ்மணன், அவளிடம், தழுதழுத்த குரலில், ராஜஸபையில், சாரன் சொன்ன செய்தியையும், அதனால் ஸ்ரீராமன் மனம் நொந்து, தனக்கு அளித்த கட்டளையையும் விரைவாக ஒன்றும் விடாமல் கூறி, மீண்டும் அவளை நோக்கி, ‘வைதேஹி! தாங்கள் சிறிதும் கலக்கமுற வேண்டாம். இதோ கங்கைக் கரையில் மஹரிஷிகளது ஆச்ரமங்கள் காணப் படுகின்றன. நமது தந்தையான தசரத சக்ரவர்த்திக்கு ஆப்த நண்பரான வால்மீகி முனிவர் இங்கு வஸிக்கிறார். அவர் கருணையே வடிவெடுத்து வந்தவர்போன்ற அந்தணர் பெருமான். அவர் திருவடிவாரம் சேர்ந்து, தாங்கள் அங்கு ஸுகமாக வஸிக்கவும். தாங்கள் பதிவ்ரதா சிரோமணியாதலால், கணவனையே என்றும் மனதினில் த்யானித்துக் கொண்டு, விரதத்துடன் உபவாஸமிருந்து இனிது வாழ்க. இப்படி அனுஷ்டித்து வருவீராகில் தங்களுக்கு நன்மையே உண்டாகும்', என்று விஜ்ஞாபித்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக