சனி, 10 டிசம்பர், 2022

ராமாயணம் -- உத்தரகாண்டம் 4

ஒன்பதாவது ஸர்க்கம்

[ராவணாதிகளின் பிறப்பும், அவர்கள் தவமியற்றச் செல்வதும்]

 

        சில காலம் சென்றது. ஒரு ஸமயம் ஸுமாலி என்ற அரக்கன் நீலமேகம் போன்ற உருவமுள்ளவனாவும், நன்கு சுத்தம் செய்யப்பட்ட ஸ்வர்ணமயமான குண்டலங்களை அணிந்தவனாகவும். தாமரைமலரை விட்டு வெளிவந்த மகாலக்ஷ்மி போன்ற தன் பெண்ணான கைகஸீயுடனும் பாதாள லோகத்தை விட்டுப் பூலோகத்தில் ஸஞ்சாரம் செய்தான். அப்படி அவன் ஸஞ்சாரம் செய்யும்போது, குபேரன் ஆச்சர்யமான புஷ்பக விமானத்திலேறி, தனது தந்தையான விச்ரவஸ முனிவரைத் தரிசிக்கச் செல்வதைக் கண்டான். அமார்களுக்கொப்பானவனும், சூர்யன்போல் ப்ரகாசிப்பவனுமான குபேரனைக் கண்டு பொறாமை அடைந்தவனாய்ப் பின்வருமாறு ஆலோசித்தான் - எதை நாம் செய்தால் அரக்கர்களுக்கு நன்மையுண்டாகும், நாம் எப்படி மறுபடி வளர்ச்சி பெறுவோம்? என்று. பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாய், தனது அழகிற் சிறந்த கன்யகையைப் பார்த்து, கைகஸீ! நீ இப்போது மணப் பருவத்தை அடைந்துள்ளாய். உன்னை மணம் செய்துகொள்ள விரும்பும் வரர்கள். நான் மறுத்துவிடுவேனோ என்றே பயத்தால் கிட்டிக் கேட்டார்களில்லை போலும். உனக்குத் தகுந்த பதியைத் தேர்ந்தெடுப்பதில் நாங்கள் மிகுந்த ப்ரயாஸை கொண்டுள்ளோம். ஏனென்றால் நீ ஸகல நற்குணங்களுக்கும் நிலமாயும், ஸாக்ஷாத் மகாலக்ஷ்மியே போன்றும் விளங்குகிறாய். ஹே பெண்ணே! எந்தப் பெண்ணை எந்த மணாளன் அடைவானோ யார் கண்டார்கள்! பொதுவாகவே பெண்ணுக்குத் தந்தையாக இருப்பதென்பது, மானமுள்ள எல்லோருக்குமே அஸஹ்யம்; து:ககரமே .

 

        "கன்யாபித்ருத்வம்!து:கம் ஹி ஸர்வேஷாம் மாநகாங்க்ஷிணாம். தாயின் குலம், தகப்பனின் குலம், அடைந்திடும் பர்த்தாவின் குலம் ஆகிய மூன்று குலங்களையுமே இவள் எப்படிச் செய்திடுவாளோ என்கிற சங்கையில் ஆழ்த்தி விடுகிறாள் பெண்,

'மாது:குலம் பித்ருகுலம் யதிர சைவ ப்ரதீயதே!

குலதரயம் ஸதா கன்யா ஸம்சயே ஸ்தாப்ய திஷ்டதி || '

ஆகையால் நீ ப்ரம்மாவின் குலத்தில் தோன்றிய புலஸ்த்ய முனிவரது குமாரரான விச்ரவஸ முனிவரை நண்ணி அவரை ஸ்வயம்வரமாக வரித்துக்கொள். அவரது அருளால் இந்தக் குபேரனைப்போன்ற பெருமையுடையவர்களும், சூர்யனுக் கொப்பான ஒளி பெற்றவர்களுமான புத்திரர்கள் உனக்குப் பிறப்பார்கள். இதில் சிறிதும் ஸந்தேஹமில்லை என்றான்.

        அவளும் தகப்பனாருடைய வார்த்தையில் கௌரவபுத்தியுள்ளவளாய் எந்த இடத்தில் விச்ரவஸ முனிவர் தவம் செய்கிறாரோ அங்கே சென்று நின்றாள்.

        அந்த ஸமயத்தில் முனிவர் அக்நிஹோத்ரம் செய்துகொண்டிருந்தார். அங்கே சென்ற அவள் முனிவரின் முன்சென்று தலைகுனிந்து கொண்டும் கால் கட்டைவிரல் நுனியால் பூமியில் கிறுக்கிக் கொண்டும் இருந்தாள். இப்படி நிற்கும் கன்யகையைப் பார்த்த முனிவர், 'துடியிடையையும், பூர்ண சந்திரனுக்கொப்பான முகத்தையுமுடைய பெண்ணே! நீ யாருடைய புதல்வி? எங்கிருந்து இங்கு வந்துள்ளாய்? யாது காரணமாக இங்கு வந்துள்ளாய்? உண்மையாகச் சொல்வாயாக' என்றார்.

        இப்படி முனிவரால் கேட்கப்பட்ட கைகஸீ கைகளிரண்டையும் கூப்பிக் கொண்டு பின்வருமாறு கூறினாள்-முனிவரரே! எனது விருப்பத்தைத் தேவரீரே தபோமஹிமையால் அறிந்துகொள்ளும். ஆனால் நான் எனது தந்தையின் ஆஜ்ஞையினால் இங்கு வந்துள்ளேன். எனது பெயர் கைகஸீ என்பதாம். மற்றவற்றைத் தாங்களே அறியக்கடவீர் என்றாள்.

        அவளுடைய வார்த்தையைக் கேட்ட முனிவர் தியானயோகத்தால் அவளது அபிலாஷையை அறிந்தார். பிறகு அவளைப் பார்த்து 'கல்யாணியே! உனது மனோரதத்தை நான் அறிந்தேன் என் மூலமாக நீ புத்ரபாக்யத்தை அடைய விரும்புகிருய். உண்டாகும். ஆனால் நீ வந்த வேளை ஸரியானதல்ல, உக்ரமான ப்ரதோஷகாலம். அதற்கு அநுகுணமாக, கொடியவர்களாயும். பயங்கர ஸ்வரூப முடையவர்களாயும், கொடியவர்களிடத்தில் அன்புடையவர்களாயும், க்ரூரமான செய்கையை உடையவர்களுமான ராக்ஷஸர்கள் பிறப்பார்கள்'என்றார்.

 

        அதைக் கேட்ட கேகஸீ முனிவரைப் பணிந்து, 'மகரிஷியே!] ப்ரம்மவித்தான தேவரீரிடமிருந்து அடியாள் தீய ஒழுக்கமுள்ள புதல்வர்களைப பெற்றுக்கொள்வதா? வேண்டாம் ஸ்வாமி ! அடியாளிடம் அருள்புரிக" என வேண்டினாள்.

        இப்படிக் கைகஸீயால் ப்ரார்த்திக்கப்பட்ட விச்ரவஸர் மறுபடியும் அவளைப் பார்த்து, 'பெண்ணே! கடைசியாக உனக்குப் பிறக்கும் புதல்வன் என் குலத்திற்குத் தக்கவனாகவும் தர்மாத்மாவாகவும் இருப்பான்'' என்று அருள் புரிந்தார்.

        ஹே ராம! சில காலஞ் சென்றபின் அந்த கைகஸீ விகாரமான உருவமுள்ளவனும், அரக்கனாயும், கொடூர ஸ்பாவமுள்ளவனும், பத்துத் தலைகளை உடையவனும், கோரப்பற்களை உடையவனும், கருமையானவனும், சிவந்த உதடுகளை உடையவனும், இருபது கைகளை உடையவனும், பெரிய வாயை உடையவனும், பெரிய முடிளை உடையவனுமான பிள்ளையைப் பெற்றாள். அந்தப் பிள்ளை பிறந்தபோது. குள்ள நரிகள் அனலை கக்கி ஊளையிட்டன. கொடிய பறவைகள் இடமாக வட்டமிட்டுக்கொண்டு எங்கும் ஸஞ்சரித்தன. ஆகாயத்திலிருந்து மேகங்கள் இரத்த மழையைப் பொழிந்தன. சூர்யன் ப்ரகாசிக்கவில்லை. ஆகாசத்திலிருந்து கொள்ளிக்கட்டைகள் சிதறி விழுந்தன மூவுலகமும் நடுங்கியது. பேய்க் காற்று அடித்தது. கலங்காத கடலும் கலக்கமுற்றது.

        பிரம்மதேவருக்கு ஒப்பானவரான அவனது பிதா, அந்தப் பிள்ளைக்கு. 'தசக்ரீவன்' எனப் பெயரிட்டார். ஏனெனில் பத்துத் தலைகளுடன் அவன் பிறந்தானல்லவா அதனாலாம்.

        அவனை அடுத்து. பலசாலியாயும், மிகப் பெரிய உருவத்தை உடையவனுமான கும்பகர்ணன் பிறந்தான். பிறகு விகாரமான உருவத்தையுடைய சூர்ப்பணகை என்கிற பெண் பிறந்தாள். கடைசியாக தர்மாத்மாவான விபீஷணன் பிறந்தான் விபீஷணன் பிறந்த போது பூமாரி பொழிந்தது. ஆகாசத்தில் தேவதுந்துபி வாத்தியங்கள் முழங்கின. மேலும் ஆகாயத்தில் 'நன்று, நன்று’ என்கிற சப்தம் உண்டாயிற்று.

        ராவண கும்பகர்ணர்கள், மஹாபராக்ரமசாலிகளாய் ஜனங்களுக்கு உபத்ரவங்களைச் செய்பவர்களாய் அந்த மஹாரண்யத்தில் வளர்ந்து வந்தனர். அதிலும் கும்பகர்ணன் மிகவும் மதம் கொண்டவனாய், தர்மிஷ்டர்களான ரிஷிகளையும் ஜனங்களையும் பிடித்துப் புசித்துக்கொண்டு எங்கும் திரிந்தனன்,

        தர்மாத்மாவான விபீஷணன் எப்போதும் தர்ம காரியத்திலேயே ஈடுபட்டவனாயும். வேதாத்யயனத்தைச் செய்துகொண்டும், இரண்டு வேளை மட்டுமே உண்பவனாகவும், இந்த்ரிய நிக்ரஹம் செய்தவனாகவும் இருந்து வந்தான்.

        இவ்வாறிருக்க - ஒரு ஸமயம் குபேரன் தனது புஷ்பக விமானத்திலேறித் தந்தையைத் தரிசிக்க அவ்விடம் வந்தான் தேஜோமயமாய் விளங்கும் அந்தக் குபேரனைக் கண்ட கைகஸீ தனது குமாரனான தசக்ரீவனைப் பார்த்து, 'பராக்ரமசாலியான குமாரனே! உனது ஸஹோதரனான இந்தக் குபேரனைப் பார். இவன் எவ்வளவு பெருமை பெற்று விளங்குகிறான்! நீயும் இவனுக்குச் சமானமாக விளங்கும் படிக்கான பிரயத்தனத்தைச் செய்' எனறாள்.

        தாயின் வார்த்தையைக் கேட்ட பராக்கிரமசாலியான அந்த ராவணன் வைராக்யத்துடன், 'அம்மா! அப்படியே ஆகட்டும். பராக்கிரமத்தாலும் தேஜஸ்ஸாலும் குபேரனுக்கு நிகராகவோ அல்லது மேம்பட்டவனாகவோ ஆகிறேன். இது ஸத்தியம். நீ சோகத்தை விட்டுவிடவும்' என்று கூறினான்.

        தவம் புரிந்து வேண்டிய வரங்களைப் பெற மனவுறுதி பூண்டு செயற்கரிய செய்கைகளைச் செய்ய வேண்டும் என்ற ஆசையை யுடையவனாகித் தனது ஸஹோதரா்களுடன் கோகர்ண க்ஷேத்திரம் சென்று பிரம்மாவைக் குறிததுத் தபஸ் செய்யலாயினன்.

        தனக்கு நிகரற்ற பராக்கிரமசாலியான ராவணன் தம்பிமார்களுடன் கடுந் தவமியற்றிச் சதுர்முகனை ஸந்தோஷிப்பித்து வேண்டிய வரங்களைப் பெற்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக