சனி, 10 டிசம்பர், 2022

உத்தரகாண்டம் 2

நேற்றைய ஆறாவது சர்க்கத்தின் தொடர்ச்சி

இப்படித் தேவர்கள் ஸ்ரீமந்நாராயணனிடம் சென்று முறையிட்டதையும், அவர் அரக்கர்களை வதம் செய்கிறேனென்று ப்ரதிஜ்ஞை செய்ததையும் அறிந்த மால்யவான் தனது ஸஹோதரர்களான ஸுமாலி, மாலி இவர்களை அழைத்துப் பின்வருமாறு கூறினான்- ஸஹோதர்களே! தேவர்களும் ரிஷிகளும் ஒன்றுசேர்த்து சங்கரனிடம் சென்று, நம்மை அழிக்க வேண்டினர், அவர் நம்மைத் தம்மால் அழிக்க முடியாது என்றும், திருமாலிடம் சென்று பிரார்த்தியுங்கள். அவர் ஆவன செய்வார் என்றும் சொல்லி அனுப்பிவிட்டார். அவர்களும் அவ்வாறே திருமாலிடம் சென்று முறையிட அவரும் நம்மை வதம்செய்வதாக வாக்களித்துள்ளார். எனவே இவ் விஷயத்தில் இனி நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நிச்சயிக்க வேண்டும். அந்த மஹாவிஷ்ணு. ஹிரண்யகசிபு, நமுசி, காலநேமி, மஹாவீரனான ஸம்ஹ்ராதன், ராதேயன், மாயையில் வல்லவனான லோகபாலன் அவன் தர்மிஷ்டனுங்கூட, யமளார்ஜுனர்கள், ஹார்திக்யன், சும்ப நிசும்பர்கள், முதலான அசுரர்களை அழித்துள்ளார். அவர்களெல்லாரும் மஹாசூரர்கள் அநேக யாகங்களைச் செய்து புஜபலங்களைப் பெற்றவா்கள் மாயாவிகள். அவர்கள் அனைவரும் விஷ்ணுவோடு யுத்தம் செய்து, மடிந்துள்ளார்கள். இவ் விஷயத்தில் நமது நிலையை நாம் நன்கு ஆலோசிக்க வேண்டும் என்று.

ஸுமாலியும் மாலியும் மால்யவானின் வார்த்தையைச் செவியுற்று - 'அண்ணாவே! நாம் வேதங்கள் அனைத்தையும் அத்யயனம் செய்துள்ளோம். உயர்ந்த வரங்களைப் பெற்றுள்ளோம். நீண்ட ஆயுளையும் பெற்றுள்ளோம். சிறந்த தர்மங்களையும் செய்துள்ளோம் யாராலும் வெல்ல முடியாத தேவ ஸைன்யத்தையும் தோற்று ஓடும்படிச் செய்துள்ளோம். அப்படிப்பட்ட நமக்கு மரணபயமேது? இந்த நாராயணனோ பரமசிவனோ தேவேந்திரனோ யமனோ எல்லோரும் நம்மை எதிர்க்கப் பயப்படுவார்களே! ஹே பராக்ரமசாலியான ப்ராதாவே! தலைவனே! நம்மிடம் அந்தத் திருமாலுக்கு விரோதம் ஏற்படக் காரணம் ஏதுமில்லையே? தேவர்களுடைய தூண்டுதலினாலேயே அவருடைய மனத்தில் நம்மீது த்வேஷம் ஏற்பட்டிருக்க வேண்டும். எனவே நாம் ஸைன்யத்துடன் சென்று தேவர்களையே வதைசெய்ய முற்படுவோம். விஷ்ணுவின் கோபத்திற்கு இவர்களேயன்றோ காரணம்' என்று கூறினார்கள்.

இப்படியாக ஆலோசனை செய்து முடித்து மஹாபலிஷ்டர்களான அவ்வரக்கர்கள் போர் செய்யப் பறையறைந்து புறப்பட்டனர். அவர்கள் எல்லோருமே சூரர்கள், ரதங்களிலும், யானைகளிலும், குதிரைகளிலும் கழுதைகளிலும் ஓட்டகங்களிலும் மலைப் பாம்புகளிலும் முதலைகளிலும் ஆமைகளிலும் கருடனுக்கொப்பான பக்ஷிகளிலும் ஸிம்ஹங்களிலும் புலிகளிலும் பன்றிகளிலும், காண்டாமிருகங்களிலும், மான்களிலும் ஆரோஹணித்து லங்கையை விட்டுப் புறப்பட்டுச் சென்றனர். தேவலோகத்தை நோக்கி அவர்கள் புறப்பட்டுச் செல்லும் போது லங்கையிலுள்ள தெய்வங்களெல்லாம் லங்கைக்கு ஏற்பட இருக்கும் அபாயத்தை உணர்ந்து மனமொடிந்து போயின. 'லங்காவிபா்யயம் திருஷ்ட்வா யாநி லங்கா லயாந்யத| . பூதாதி பயதர்சீதி விமநஸ்காநி ஸர்வசா|| மேலும், அரக்கர்கள் சென்ற வழியே அங்குள்ள தெய்வங்களும் சென்றுவிட்டன. ரக்ஷஸா மேவ மார்கேண தைவதாந்யபசக்ரமு:|

அந்த ஸமயத்தில் ராக்ஷஸர்களுக்கு அழிவு உண்டாவதற்கு அறிகுறியாய் அநேக கெட்ட சகுனங்கள் உண்டாகத் தொடங்கி அதாவது - மேகங்கள் எலும்புகளுடன் கூடிய இரத்த மழையை பெய்தன. ஸமுத்திரம் கரை கடந்து பெருக்கெடுக்கலாயிற்று மலைகள் நிலை குலைந்தன. குள்ளநரிகள் கூட்டங் கூட்டமாக அனைவரும் அஞ்சுமாறு ஊளையிட்டன. ஆகாயத்தினின்றும் கொள்ளிக்கட்டைகள் விழுந்தன. ஆகாயத்தில் கழுகுக் கூட்டங்கள் கொள்ளியை வாயினால் உமிழ்ந்துகொண்டு, ராக்ஷஸர்களின் தலைக்கு மேலாக நெருப்புச் சக்கரம் போல் வானத்தில் வட்டமிட்டுப் பறந்தன. காக்கைகள் கொடூரமாகச் சப்தித்தன. பூனைகளும் குறுக்கே ஓடின. இப்படி உண்டான அபசகுனங்களைச் சிறிதும் லக்ஷ்யம் செய்யாமல், மிகுந்த கர்வத்துடன், காலபாசத்தால் கட்டுண்டவர்களாகச் சென்று கொண்டேயிருந்தனர். அந்த அரக்க ஸேனையின் முன்னால், மால்யவான், சுமாலி, மாலி என்கிற மூவரும் சென்றனர். மால்யவான் என்கிற மலைக்கு ஒப்பான மால்யவானை, பிரம்மதேவனை ஆச்ரயித்துள்ள தேவர்போல் பின்தொடர்ந்தனர் அரக்கர்கள்.

இந்தச்செய்தியைத் தேவதூதர்கள் மூலம் அறிந்த ஸ்ரீமந்நாராயணன் அவர்களை (அரக்கர்களை) அழிக்க விரும்பி, கோடிசூர்ய பிரகாசமான திவ்ய கவசமணிந்து அளவற்ற அம்புகள் நிறைந்த அம்பறாத் தூணிகளைத் தரித்து சங்கம் சக்ரம் தண்டம் வாள் வில் முதலிய ஆயுதங்களும் பூண்டு, பொன்மலை போல விளங்கும் கருத்மான் மீதேறி வெகு விரைவாக அரக்கரின் ஸேனையருகே சென்றார். அப்போது அந்த நாராயணன் பொன்மலையின் மீது மின்னலுடன் கூடிய கருமேகம் போல் காட்சியளித்தார். அப்போது கருடனின் சிறகு வீசிய வேகத்தினால் உண்டான காற்றுத் தாக்கி அவ்வஸுரர் படை சிலைகள் சிதறிய மலை போன்று சிறிது சலன முற்றது. ஆயினும் அவர்கள் சிறிதும் பயமடையவில்லை. மிகுந்த உத்ஸாஹத்துடன் பற்பலவிதமான பகழிகளாலும் மிகச் சிறந்த ஆயுதங்களாலும் பகவானைச் சூழ்ந்து கொண்டு பலவாறு துன்புறுத்தலாயினர்.

ஏழாவது ஸர்க்கம்

[ஸ்ரீமந்நாராயணனால் அனேக அரக்கர்கள் அழிக்கப்பட்டதும் மாலியின் வதமும் இந்த ஸர்க்கத்தில் கூறப்படுகிறது.)

மேகங்கள் மிகப் பெரிய மலை மீது மழை பொழிவது போல் ராக்ஷஸர்களரகிய மேகங்கள் மஹாவிஷ்ணுவாகிய நீலமலை மீது பாண வர்ஷம் வர்ஷிக்கலாயின. பரிசுத்தனான ஸ்ரீமந்நாராயணன் நீல உருக் கொண்ட அரக்கர்களால் சூழப்பட்டு மழை பொழியும் மேகங்களால் சூழப்பட்ட அஞ்ஜன (நீல) மலை போல் காட்சியளித்தார். அரக்கர்களால் விடப்பட்ட பாணங்கள், நெற்பயிரையடைந்த வெட்டுக்கிளிகள் போன்றும். மலையை மொய்க்கும் கொசுக்கள் போலவும், தேன் குடத்தைச் சுற்றி நிற்கும் தேனீக்கள் போலவும், ஸமுத்திரத்தில் உள்ள முதலைகள் போலவும் பகவானின் சரீரத்தில் புகுந்து, பிரளய காலத்தில் பிராணிகள் அவர் உடலில் புகுவது போல் காணப்பட்டன தேரின்மீது அமர்ந்தவர்களும், யானைகளின் மீது அமர்ந்தவர்களும், குதிரைகளின் மீது ஏறியவர்களும், காலாட்படையினருமான அனைவரும் ஆகாயத்தில் இருந்து கொண்டு, சக்தி கதை அங்குசம் பாணம் இவைகளால் பகவானை அடித்து, மூச்சு விட முடியாதபடி செய்தனர். இப்படி அரக்கர்களால் மூச்சு விட முடியாதபடி அடிக்கப்பட்ட ஸ்ரீமந் நாராயணன் சார்ங்கமென்னும் தனது வில்லை வளைத்து, வஜ்ராயுதத்திற்கு நிகரான பாணங்களைத் தொடுத்து அவ்வசுரர்களை நூறு நூறாகவும், ஆயிரம் ஆயிரமாகவும் கொன்றும் ஓட விரட்டியும், பாஞ்சஜன்யம் என்கிற சங்கத்தை ஊதிப் பெருங்கோஷம் உண்டாக்கினார். பகவானால் ஊதப்பட்ட அந்தச் சங்கநாதமானது மூவுலகங்களையும் நடுங்க வைத்தது. அந்தச் சங்கத்வனியைக் கேட்ட அரக்கர்கள். காட்டில் சிம்ம கர்ஜனையைக் கேட்ட யானைகளைப் போல் நடுங்கினர். குதிரைகளும் பயந்தோடின, தேரின் மீது வீற்றிருந்த வீரர்களும் மூர்ச்சையடைந்து வீழ்ந்தனர். சார்ங்கமென்னும் வில்லிலிருந்து விடப்பட்ட பாணங்கள் வஜ்ராயுதம் போல் அரக்கர்களின் உடல்களைப் பிளந்துகொண்டு பூமியில் பிரவேசித்தன. நாராயண பாணங்களால் அடியுண்ட அரக்கர்கல் உடல்கள் வஜ்ராயுதத்தால் அடியுண்ட மலைகள் போல் பூமியில் வற்றி விழுந்தன. அவற்றிலிருந்து இரத்த தாரைகள் பெருக்கெடுத்தோடின. சங்கத்தின் நாதமும் சார்ங்கத்தில் நாணொலியும் அசுரர்களின் கூச்சலினாலுண்டான பெரும் சப்தத்தை அடக்கிவிட்டன. அப்போது பகவான் அவ்வரக்கர்களுடைய வில் வாள் ரதங்கள் கொடிகள் முதலியவற்றை அழித்து அவர்களையும் கொன்று குவித்தார். அவருடைய வில்லிலிருந்து வெளிவந்த பாணங்கள் எவ்வாறு இருந்தன எனில் சூர்யனிடமிருந்து கோடை காலத்தில் வெளிப்படும் கிரணங்கள் போன்றும், ஸமுத்திரத்திலிருந்து உண்டாகும் அலைகள் போலவும், மலைகளினின்றும் வெளிக் கிளம்பும் ஸர்ப்பங்கள் போன்றும், நீருண்ட மேகத்திலிருந்து வெளிவரும் மழை தாரைகள் போன்றும், கடுமையாகவும், ஓய்ச்சலொழிவு இன்றியும் ஹிம்ஸிக்குமவையாகவும் இருந்தன. அவ்வரக்கர்கள் ஸ்ரீமந் நாராயணனால் அடிபட்டவர்களாய் சரபம் என்கிற மிருகத்திற்கு பயந்து ஓடும் சிங்கம் போலவும், சிங்கத்திற்குப் பயந்து ஓடும் யானை போலவும், யானைக்குப் பயந்து ஓடும் புலி போலவும், புலிக்குப் பயந்து ஓடும் க்ஷுத்ர மிருகம் போன்றும், க்ஷுத்ர மிருகத்திற்கு பயந்து ஓடும் நாய் போலவும், நாய்க்குப் பயந்து ஓடும் பூனை போலவும், பூனைக்கு பயப்படும் பாம்பு போலவும், பாம்புக்குப் பயப்படும் எலி போலவும் பயந்து ஓடினர். இப்படி அவர்கள் ஓடும்போது மறுபடியும் பகவான் சங்கநாதம் செய்தார். பகவானுடைய பாணவர்ஷத்தாலும், சங்க நாதத்தாலும் பயந்த அரக்கர் ஸைன்யம் லங்காபுரியைக் குறித்து ஓட ஆரம்பித்தது.

இது கண்டு அரக்கர்களின் நடுவனான சுமாலி என்பவன் ஸ்ரீமந் நாராயணனை பாணவர்ஷங்களால் மறைத்தான் அது எப்படி இருந்ததெனில் சூரியனைப் பனிமூட்டம் மறைப்பது போன்றிருந்தது. இதைக் கண்ட ராக்ஷஸ ஸைன்னியம் மறுபடி உத்ஸாஹமடைந்து ஓடுவதினின்றும் திரும்பி வந்து யுத்தத்தில் ஈடுபட்டது. மேலும் உத்ஸாஹம் கொண்ட சுமாலீ ஓடுகின்ற ராக்ஷஸர்களை ஒன்றுசேர்த்தான். தான் அணிந்துகொண்டிருந்த நீண்டு தொங்கும் ஆபரணங்களைத் தூக்கி எறிந்து கொண்டும், யானை துதிக்கையை ஆட்டிக்கொண்டு ஓடி வருவது போல் தனது கையை இப்படியும் அப்படியுமாக அசைத்துக் கொண்டும், சப்தம் செய்து கொண்டு பகவானைக் குறித்து ஓடி வந்தான். இப்படிக் கூச்சலிட்டுக்கொண்டு வரும் சுமாலியின் தேர்ப்பாகனது தலையைப் பகவான் கூரிய பாணத்தால் அறுத்துத் தள்ளினார். குண்டலங்கள் ஜ்வலிக்கும் அந்தத்தலை பூமியில் விழுந்து உருண்டது. தேர்ப் பாகனின்றிக் குதிரைகள் அங்குமிங்குமாகக் கட்டுக்கு அடங்காமல் மிரண்டோடின. தேரிலிருந்த சுமாலி, மனம் முதலிய இந்த்ரியங்களால் அலைக்கழிக்கப்படும் கபிபோல் யுத்தபூமியில் அலைக்கழிக்கப்பட்டுத் தடுமாற்றமடைந்தான்.

இப்படிச் சுமாலி தவிப்பதைக் கண்ட மாலி என்பவன் தேரின் மீதேறிக்கொண்டு மிகப் பெரிய வில்லேந்தியவனாய், பகவானைக் குறித்து அநேக பாணங்களை ப்ரயோகித்தான். ஸ்வர்ணங்களாலிழைக்கப்பட்ட அந்த பாணங்கள் பகவானின் சரீரத்தில் குதித்துக்கொண்டு க்ரௌஞ்ச மலை மீதமர்ந்த பக்ஷிகள் போல் விளங்கின. அந்தப் பாணங்களால் அடிக்கப்பட்டிருந்த போதிலும் மஹாவிஷ்ணு சிறிதும் பீடிக்கப் பட்டவராகக் காணப்படவில்லை. எப்படி இருந்ததெனில் இந்த்ரிய நிக்ரஹம் செய்துள்ளவன் மனோவ்யாதிகளால் எப்படிச் சிறிதும் க்லேசப்படமாட்டானோ அப்படி இருந்தது.

சுக்ஷுபே நரணே விஷ்ணு: ஜிதேந்த்ரிய இவாதிபி.'

பிறகு சத்ருக்களை வெல்ல வல்ல பகவான் மாலியின் மீது ஆயிரக் கணக்கான பாணங்களை ப்ரயோகித்தார். அந்தப் பாணங்கள் மாலியின் சரீரத்தைக் குடித்தன. அதைப் பார்க்கும்போது பாம்புகள் அம்ருதரஸத்தைப் பருகுவது போன்றிருந்தது. இப்படி அவனை அடித்து மயக்கமுறச் செய்த பகவான் அவனது கிரீடத்தையும் த்வஜத்தையும் வில்லையும் தேர்க்குதிரைகளையும் அடித்து வீழ்த்தினார். மயக்கம் தெளிந்த மாலி தேரிலிருந்து குதித்தெழுந்து மிகப் பெரிய கதாயுதத்தைக் கையிலேந்தியவனாய் மலையிலிருந்து பாய்ந்து வரும் சிங்கம் போன்று ஓடி வந்து பக்ஷிராஜனான கருடனின் நெற்றியின் மீது ஓங்கியடித்தான். அது ஒரு காலத்தில் அந்தகன் (யமன்) சிவனின் தலைமீது அடித்தது போன்றும், இந்திரன் வஜ்ராயுதத்தால் மலையை அடித்தது போன்றுமிருந்தது. மாலியினால் இவ்வாறு அடிக்கப்பட்ட கருடன் மிகவும் துன்பப்பட்டு அந்த வேதனையைத் தாங்க மாட்டாமல் பகவானைப் போர்க்களத்தினின்றும் பின்புறம் கொண்டு சென்றான்.

இப்படி ஆனது கண்ட அரக்கர் ஸைன்யம். ஆனந்தக் கூச்சலிட்டது. அரக்கர்களின் ஆனந்தக் கூச்சலைச் செவியுற்ற பகவான் மிகவுங் கோபம் கொண்டு யுத்தகளத்திற்குக் குறுக்காகத் திரும்பி, கருடன் மீதமர்ந்தவாறே மாலியைக் கொல்லக் கருதி தனது சக்ராயுதத்தை ப்ரயோகித்தார். அநேகமாயிரம் சூரியனது ஒளிக்கு ஒப்பான ஒளியையுடைய அந்த சக்ராயுதம் காலசக்ரம் போன்று மாலியினது சிரஸ்ஸை அறுத்துத் தள்ளியது. அந்த மாலியின் சிரஸ்ஸானது மிகப் பயங்கரமாய் ரக்தத்தை வாரியிறைத்துக்கொண்டு பூமியின் கண் விழுந்தது. அது, முன்பு அம்ருத பானஞ் செய்யும் போது தேவர்களின் மத்தியில் அமர்ந்து அம்ருதபானம் செய்ய முயன்ற ராகுவின் தலை மஹாவிஷ்ணுவால் வெட்டப்பட்டு எவ்வாறு பூமியில் விழுந்ததோ அது போன்றிருந்தது. இது கண்ட தேவர்கள் 'பகவானே! நன்று செய்தீர், நன்று செய்தீர்' என்று கொண்டாடினர்

மாலி மடிந்ததைக் கண்ட மால்யவானும் சுமாலியும் மிகவும் வருத்தமடைந்தனர். தங்களது ஸைன்யத்துடன் லங்காபுரியை நோக்கித் திரும்பி ஓடிச் செல்ல ஆரம்பித்தனர்

அதற்குள்ளாக, கருடன் ச்ரமம் தீர்ந்து திரும்பியவனாய், மிகவும் கோபம் கொண்டு முன்பு போலவே தனது இறக்கைகளிலிருந்து உண்டாகும் காற்றின் வேகத்தினால் அடித்தோட்டினார். அந்த யுத்தத்தில் அரக்கர் சிலர் தலையறுப்புண்டும், கதையினால் அடிபட்டு முறிந்த மார்பையுடையவர்களாவும், கலப்பையினால் வாடிய (முறிந்த) கழுத்தையுடையவர்களாகவும், உலக்கையால் மண்டை பிளக்கப்பட்டவர் களாகவும், கத்தியால் இரண்டு துண்டானவர்களாயும், பாணங்களால் பீடிக்கப் பட்டவர்களாயும் ஆகாயத்திலிருந்து ஸமுத்திரத்தில் வீழ்ந்தனர்.

ஸ்ரீமந்நாராயணன் தமது வில்லிலிருந்து வெளிவரும் வஜ்ராயுதத்திற்குக் கொப்பான பாணங்களால் அரக்கர்களை. தலைத் தெறித்து ஓடும்படி விரட்டினார். அப்பொழுது அவ்வரக்கர் ஸேனை குடைகளொடியவும், அஸ்திரங்களொழியவும், பாணங்களால் உரு மாறியும், குடல்கள் வெளிப்பட்டு, பயத்தினால் மருள மருள விழித்துக்கொண்டு பெருங் கூச்சலுடன் பைத்தியம் பிடித்தது போல் ஆயிற்று. ஓடிற்று இப்படி அடிதாங்காமல் கூச்சலிட்டுக் கொண்டு ஓடும் வேகத்தையும் பார்த்தால், சிங்கத்தினால் விரட்டப்படும் யானை போலவும், முன்பொரு ஸமயம் நரஸிம்ஹனால் அடித்து வீழ்த்தப்பட்டுக் கூச்சலிட்டு வேகமாக ஓடிய அரக்கர்கள் போலவும் இருந்தது'  'ராவா: ச வேகா: சசமம் பபூவு : புராணஸிம்ஹேந விமர்திநாம்.'

விஷ்ணு தேவனின் கூர்மையான வாளிகளால் அடியுண்ட இராக்கதர்கள் நசுங்குண்ட சரீரமுடையவர்களாய் மலைகள் போல ஆகாசத்திலிருந்து பூமியில் விழலாயினர். இப்படிப் பகவானால் அடியுண்ட இராக்கதர்கள் ஓயாது தரையில் வந்து விழுவது நீலமலைகள் மடிந்து மண் மீது வீழ்வது எனத் தோன்றியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக