வெள்ளி, 6 மே, 2011

யதிராஜ சந்திரன்

“ஸ்ரீதேசிக ஸ்ரீஸூக்தி ஸம்ரக்ஷணீ” சம்புடம் 2 பிரமாதி வருஷம் சித்திரை மாதம் ஸஞ்சிகை 4ல் தி. ராமஸ்வாமி தாஸன் எழுதிய கட்டுரை

யதிராஜ சந்திரன்

     இன்புற்ற சீலத்தி ராமானுசன் இணையடிகளை இறைஞ்சுவோர்க்கு அவ்வள்ளல் புரிந்துள்ள பேருபகாரங்கள் பலவற்றுள் முக்கியமானது தாம் அர்ச்சாரூபியாய் எழுந்தருளியிருந்து அனைவரையும் வாழ்விப்பது. விபவத்தில் எழுந்தருளியிருக்கும்போதே “மாமலராள் புணர்ந்த பொன்மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும் குணந்திகழ் கொண்டல்” என்று அருகிருந்தார் அனுஸந்திக்கும்படி திருப்பதிகளை அலங்கரித்தாயிற்று. இப்பொழுதும் அர்ச்சாரூபியாய் திருமால் திருக்கோயில்களில் எழுந்தருளியிருக்கிறபடியை அனைவரும் நேரில் கண்டு அனுபவிக்கலாம். பெரிய பிராட்டியாருக்கே தனிக்கோயிலுக் கிடங்கொடாத திருவேங்கடத்திலும் நம்மிராமானுசனுக்கு ஒரு தனிக்கோயி லுள்ளதென்றால் வேறு திருப்பதிகளைத் தனித்துச் சொல்ல வேண்டியதில்லை.

     இப்படியிருக்கும்போது, ஸ்ரீரங்கம், திருநாராயணபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய மூன்று திவ்ய தேசங்களிலும் ஸ்ரீ பாஷ்யகாரருடைய அர்ச்சாமூர்த்தியின் பெருமையே வேறு. இம்மூன்று விக்ரஹங்கள் விஷயமாக ஸ்ரீரங்கத்தில் தாமான திருமேனியென்றும், ஸ்ரீபெரும்புதூரில் தாமுகந்த  திருமேனியென்றும், திருநாராயணபுரத்தில் தமருகந்த திருமேனியென்றும் நடையாடிவரும் ஐதிஹ்யத்திற்கேற்ப, மிகுந்த விலக்ஷணமான தேஜஸ்ஸோடு எழுந்தருளியிருப்பதை அனேகர் அறிவர். அம்மூன்று திருமேனிகளுக்குள்ளும் திருவவதார ஸ்தலமான ஸ்ரீபெரும்புதூரில் ஸேவை ஸாதிக்கும் திருமேனி நேரில் உடையவராலே ஆலிங்கனம் செய்துகொள்ளப் பட்டது என்று பெரியோர் சொல்லுவர். அது உண்மையென்பது ஸேவித்தவர்களுக்குத் தோன்றாது போகாது.

      இந்த மாதத்தில் அதிவைபவத்துடன் உத்ஸவம் நடந்தேறும்போது ஸேவித்து எம்பெருமானார் வைபவம் இத்தன்மைத்து என்று ஒருவாறு உணரலாம். விபவத்தில் பரம விரக்தாக்ரேஸரராய்க் காஷாயமும் கமண்டலுவும் முக்கோலுமன்றிப் பிறிதொரு செல்வத்தை அனுபவியாது எழுந்தருளியிருந்த எம்பெருமானார் இப்பொழுது அர்ச்சையில் அடியார்களை ஆனந்திப்பிக்க அளவற்ற ஐச்வர்யத்திற்கு அதிபதியாயிருப்பதும் அவருக்கு அனுரூபமே. “நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் அச்செல்வம்” செய்த தவத்தின் பயனாய் இன்று அது உடையவரை விரும்பி யடைந்திருக்கின்றது போலும். திருவாபரணங்களை நிறையச் சாற்றிக்கொண்டு பெரிய வாஹனாதிகளில் திருவீதிகளில் எழுந்தருளும் அழகும் வைபவமும் ஒருபுறம் நிற்க, திருமஞ்சனம் கண்டருளும் போதும் திருமஞ்சனமானவுடன் திருமஞ்சன வேதிகையில் எழுந்தருளியிருக்கும்போதும் ஸாதிக்கும் ஸேவையே ரஸிகர்களின் உள்ளத்தைப் பெரிதும் பிச்சேற்றுவது. “பஜதி யதிபதௌ பத்ரவேதீம்” என்று ஸ்வாமி தேசிகன் அனுபவித்திருப்பது இந்த திருமஞ்சன வேதிகை ஸேவைதான் போலும். அந்த ஸமயம் ஸேவித்த பிறகே, உள் அந்தகாரத்தை நிவர்த்திக்கும் ஞானத்தால் பாலஞானஸூர்யனாயும், ஆச்ரயித்தவர்களுக்கு ஆஹ்லாதமளிக்கும் குளிர்ச்சியால் சந்திரனாயும், வைராக்யாதி ஆத்மகுண மேன்மையால் ஜ்வலிக்கும் அக்னியாயும், இப்படி ஒன்றுசேர்ந்த ஒரு தேஜோரூபமாய் விளங்கும் ஸந்நிவேசம் மனத்தையும் கண்ணையும் பற்றி வாங்க ” ஜயதி ஸம்வலித த்ரிதாமா” என்று ஸ்வாமி தேசிகன் மங்களாசாஸனம் செய்தருளியிருக்க வேண்டும். “உபவீதிநம் ஊர்த்வ புண்ட்ரவந்தம்” முதலிய ச்லோகங்களும் அத்யந்தம் பொருத்தமுடையவையாய்க் காணும். இந்த ஸமயத்தில் ஸேவிப்போருக்கு, இப்படி இவ்வாசார்யோத்தமனுடைய அர்ச்சா திருமேனியும் அனைவராலும் அநுபாவ்யமாயிருப்பதால்தான் சிஷ்ய க்ருத்யாதிகாரத்தில் “பகவதனுபவம்போலே விலக்ஷணமான இவ்வனுபவம்” என்று ஆசார்யானுபாவ விஷயமாய் அறுதியிட்டாயிற்று.

           மூன்று தேஜஸ்ஸென்று வர்ணிக்கவல்லோமாகிலும் முக்கியமாக ஆனந்தம் பயக்குமியல்பால் யதிராஜ சந்திரனென்றே விசேஷித்துச் சொல்லலாம். “அநபாய விஷ்ணுபத ஸம்ச்ரயம் பஜே” என்கிற ச்லோகத்தில் நம் தேசிகோத்தமன் யதிராஜனை ஒரு விலக்ஷண சந்திரனாகவே வர்ணிக்கிறார். (அநபாய விஷ்ணுபத ஸம்ச்ரயம்) ஒருக்காலும் அபாயமில்லாத ச்ரிய:பதியின் திருவடிகளை ஆச்ரயித்து அபாயமுடைய (அழியக் கூடிய) விஷ்ணுபதத்தை (ஆகாசத்தை)  அடைந்த ஸாமான்ய சந்திரனைக் காட்டிலும் வேறுபட்டவராய், கலைகள் தேயும் இந்த சந்திரனைப் போலல்லாது (கலயா கயாயி கலயாப்யனுஜ்ஜிதம்) ஒரு கலை (சாஸ்திரத்தின்) லேசமும் விடாது  சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லையில்லா அறநெறி யாவும் தெரிந்தவராய், களங்கமுடைய சந்திரனைப் போலல்லாது (அகளங்கயோகம்) ஒரு தோஷ ஸம்பந்தமுமில்லாதவராய், ஜலாசயத்தில் (சமுத்திரத்தில்) உதிக்காமல், (அஜடாசயோதயம்) ஜடமாயில்லாத ரங்கேச பக்த ஜனங்களின்  மானஸத்தில் உதிக்குமவராய், (உபராகதுரகம்) க்ரஹணம் முதலிய பீடைகளுக்குள்ளாகாதவராயுள்ள இந்த (யதிராஜ சந்த்ரம்) யதிராஜ சந்திரனை பஜிக்கிறேன்” என்கிறார். இந்த சந்திரன் வீசும் நிலவு இவருடைய அருமையான ஸ்ரீபாஷ்யாதி ஸ்ரீஸூக்திகள். இந்த நிலவில் மலருவது முகுந்தாங்ரி ச்ரத்தா குமுதவனங்கள். (எம்பெருமானுடைய திருவடிகளில் ச்ரத்தையாகிய ஆம்பற் காடுகள்) இந்த சந்திரனைக் கண்டு பொங்குவது வேதங்களாகிற ஸமுத்திரங்கள். (நிகம ஜலதிவேலா பூர்ண சந்த்ரோ யதீந்த்ர: ) இவைகள் யதிராஜ ஸப்ததியில் ஸ்ரீதேசிகன் யதிராஜசந்திரனை அனுபவிக்கும் ப்ரகாரங்கள்.

        ஸ்ரீபாஷ்யகாரர் திருமேனியில் மேற்சொன்னபடி அழகான சோபை தோற்றுவதுபோல் அளவற்ற ஔதார்யமும் தோற்றுவது காணலாம். பௌமா: பிபந்து அந்வஹம் – என்ற உதார குணமும் பேரருளாளனுக்கும் அருளூட்டவல்ல பேரருளும் திருக்கண்களில் தோற்றி நம் துயர் துடைத் தனுக்ரஹிப்பன.

                                                               --தி. ராமஸ்வாமி தாஸன்.           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக