வியாழன், 5 மே, 2011

இவர் மட்டும் ஏன் பெரியாழ்வாரானார்?

இது ஸ்ரீ தி.இராஸ்வாமி ஸ்வாமி நோக்கில் எழுந்த ஒரு அற்புதமான கட்டுரை. “ஸ்ரீதேசிக ஸ்ரீஸூக்தி ஸம்ரக்ஷணி” இதழில் அடியேன் படித்து இரஸித்த ஒன்று.

……………இவருக்குப் பெரியாழ்வார் என்று பெயர் ஏற்பட்டது மிகவும் பொருத்தமானதேயன்றோ! எல்லா ஆழ்வார்களும் அவரவர்கள் ஆரம்பித்த விதத்தை நோக்கினால் இப்பெரியாழ்வாரின் பெருமை புலப்படும். அனைவரும் தம்மை மறவாது முதல் பாசுரம் பாடியுள்ளார்கள். “அடியேன் செய்யும் விண்ணப்பமே” என்றார் நம்மாழ்வார். “நான் கண்டு கொண்டேன்” என்றார் கலியன். முதலாழ்வார்களும் “சூட்டினேன் சொன்மாலை” “ஞானத் தமிழ் புரிந்த நான்” “திருக்கண்டேன்” என்று ஒவ்வொருவரும் தமக்கே பாசுரமிட்டுக் கொண்டார்கள். திருமழிசைப் பிரானும் “அறிவித்தேன் ஆழ்பொருளை” எனப் பேசினார். குலசேகரப் பெருமாள் “என் கண்ணிணைகள்என்று கொலோ களிக்கும் நாளே”என்று தமக்காகப் பாடியிருக்கிறார்.தொண்டரடிப்பொடிகள் “நாவலிட்டுழிதருகின்றோம்” என்று தம்முள்ளிட்டாரையும் சேர்த்துப் பெருமையாய்ப் பாசுரம் பாடுகிறார். பாண்பெருமாளும் “என் கண்ணினுள்” என்று பேசி விட்டார். “தேவு மற்றறியேன்” என்ற நிலையில் நின்றவரும் “என் நாவுக்கே” என்றார். எல்லோருக்கும் பிரதம புருஷனனான பிரபுவைப் பாடத் துவக்கியோரெல்லாம் இங்ஙனே ப்ரதம புருஷனில் (தன்மை) அகப்பட்டுக்கொண்டு விட்டார்கள். “உன் சேவடி” யென்று பேசியவர் பெரியாழ்வார் ஒருவரே. இவருடன் பழகிய பூங்கோதைகூட “நமக்கே பறை தருவான்” என்றாள். இத்தலையை மறந்து அத்தலைக்கே  முதற் பாசுரம் பாடியவர் ஆழ்வார்களுக்குள் பெரியாராய் பெரியாழ்வாராயினர். அப்படியே இந்தப் பல்லாண்டுக்கு மேற்றம். வேதத்திற்குப் பிரணவம் போல, திவ்யப்பிரபந்தத்திற்குமுன்பும் பின்பும் திருப்பல்லாண்டு நாளைக்கும் அனுஸந்திக்கப் படுகிறது.

               இந்த மங்களாசாஸன மனோபாவம் பெரியாழ்வார் திருமொழி முற்றிலும் தொடர்ந்து வருவதைக் கவனிக்கவேணும். தாம் பெருமாளுக்குத் தாயாரான யசோதை என்று மனோரதித்து ப்ரபந்தம் பெரும்பாலும் அமைத்திருக்கிறார். “அழகனே காப்பிட வாராய்” என்று அங்கேயும் ரக்ஷகனை ஆசாஸிக்கிறார் அதிகம் பேசி யென்! இவரிருக்கும் நாட்டிலுள்ள குறவர்கூடப் பெருமாளுக்குப் பல்லாண்டு பாடுகிறார்கள் என்று இவர் மனோபாவம். “புனத்திணைக் கிள்ளிப் புதுவவி காட்டி உன் பொன்னடி வாழ்க என்று இனக்குறவர் புதியதுண்”பாராம் இவ்வாழ்வார் அவதரித்த நாட்டில். நாகரிகமறியாத மஹரிஷிகள் சக்கரவர்த்தித் திருமகனுக்கு “மங்களாநி ப்ரயுஞ்ஜாநா:” என்றாற்போல் இக்குறவரும் அழகருடைய அழகுக்குத் தோற்று அவனை வாழ்த்துகிறார்கள் போலும்.

              இவ்வாழ்வாருடைய மனம் வெகு விசாலம். அதனால் எம்பெருமான் தனக்கு ஸ்தானங்களென்று ஏற்பட்ட ‘வடதடமும் வைகுந்தமும் துவராபதியும்’ ஆகிய இடங்களை யிகழ்ந்து இவர்பால் இடங்கொண்டனன்.அதிலும் தனியாக  எழுந்தருளாமல் “அரவத்தமளியினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப் பாவையும் தானும்” இவர் அகம்படி (உள்ளத்தில்) வந்து புகுந்து பரவைத் திரைபல மோதப் பள்ளி கொண்டருளின பெருமையைப் பெரியதாய்க் கொண்டாடுகிறார். உவர்க் கடலை உட்கொண்ட அகஸ்திய முனிவரைக் காட்டிலும் அமுதக் கடலைப் பெண்ணமுது கலந்த ஆராவமுதத்துடன் தம்முள்ளடக்கிய இவ்வாழ்வாரின் ராஸிக்யம் பெரிதே போலும். அத்தனை ரஸமுணர்ந்தவரான படியால்தான்”அடியேன் நான் உண்ணாநாள் பசியாவது ஒன்றில்லை., ஓவாதே நமோ நாரணாவென்று எண்ணா நாளு மிருக்கெசுச் சாமவேத நாண்மலர்க்கொண்டுன பாதம் நண்ணாநாள் அவை தத்துறுமாகில் அன்றெனக்கவை பட்டினி நாளே” என்று அனுஸந்திக்க வல்லவரானார். எவ்வளவு உயர்ந்த மனோபாவம்! இப்படியன்றோ எம்பெருமானுக்குப் பசித்திருத்தல் வேண்டும்!

             இத்தனை மேன்மையோடும்கூட இவ்வாழ்வாருக்கு வேறு ஒரு மேன்மையும் சேர்ந்தது. பூங்கோதைக்குத் தகப்பனாராகவும் அதனால் பெருமாளுக்கு மாமனாராகவும் இவ்வாழ்வார் ஒருவரே யாயிற்று உயர்பதம் பெற்றபடி. ‘தாதஸ்து தே’ என்று இதற்கு வியந்தார் நம் ஸ்வாமி தேசிகன். ‘ச்வசுரமமரவந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்’ என்றிறே இவருக்கு ஸ்ரீமந்நாதமுனிகள் தனியனிட்டபடி. ஆழ்வாருக்கும் ஆண்டாளுக்கும் ஒருவரையிட்டு ஒருவருக்கு ஏற்றமென்று ஸ்வாமி தேசிகன் அனுபவம்.  “ஸ்ரீவிஷ்ணுசித்தகுல நந்தன கல்பவல்லீம்” என்பது அவளுக்கு ஏற்றம். “தாதஸ்து தே” என்பது அவருக்கு ஏற்றம். இதிலும் பெரியதொரு ஏற்றம் ஆழ்வாருக்கு ஏற்பட்டது. என்னவெனில், கோதை சூடிக்கொடுத்த மாலையை எம்பெருமானுக்கு உபஹரித்தது. இதை பேறாப் பேறாகக் கருதியவனாதலின் இந்த உபஹாரம் ஸமர்ப்பித்தமைக்கு ப்ரத்யுபகாரமாய் பெரியாழ்வார் என்ற பிருதை ஆழ்வாருக்களித்தான் ச்ரியபதி. பெரியாழ்வார் திருமொழி என்ற ப்ரபந்தம் பாடியதிலும் கிடைக்காத பெருமை கோதை நல்கிய கோதையை(மாலையை)க் கொடுத்ததால் கிடைத்தது.

              இவ்வாழ்வார் அருளிச் செய்த ப்ரபந்தத்தை “கர்ணாம்ருதை: ச்ருதிசதை:” என்று நம் தேசிகர் கொண்டாடுகிறார். ஸ்ரீமத் பாகவத அனுபவங்களெல்லாம் இதில் பொருந்தியிருக்கிறபடியால் இது ஒரு தமிழ் க்ருஷ்ண கர்ணாம்ருதம் என்பது ஸ்வாமி திருவுள்ளம். இந்த ப்ரபந்தத்தில் பாசுரங்களின் எண்ணிக்கை 473. பெரியாழ்வார் திருமொழியின் கடைசி தசகமான “சென்னியோங்கு” என்ற திருமொழியில் பெருமாளைத் தம்முள்ளத்தே அடைக்கிவிட்டதையே முக்த தசைக்குத் துல்யமாய்ப்பேசி முடிப்பதால் இவருக்கு விஷ்ணுசித்தர் என்னும் பெயர் மிகத் தகுதியே. “வேயர் தங்கள் குலத்துதித்த விஷ்ணுசித்தன் மனத்தே கோயில்கொண்ட கோவலன்” என்பது அவனுக்குப் பெருமையாயிற்று. “உனக்கிடமாயிருக்க என்னை உனக்கு உரித்தாக்கினையே” என்பது இவருக்குப் பெருமையாயிற்று. சேஷியால் சேஷன் பெறும் பேறும் சேஷனால் சேஷி பெறும் பேறும் ஒருங்கே காட்டும். இவ்வாழ்வார் ப்ரபந்தத்திற்கு இணையுமுண்டோ? இவ்வாழ்வாருக்கு இணையுண்டானால் இவர் ப்ரபந்தத்திற்குமுண்டு.    (தி. இராமஸ்வாமி)    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக