ஸ்ரீ தேசிகன் உலகத்திற்குச் செய்திருக்கும் உபகாரங்களைக் கணக்கிட ஸங்கியாவான்கள் (வித்வான்கள்) ஒருவராலும் இயலாது. ஆயினும், க்ருதக்னதை வாராமைக்காக சிறிது கடலைக் கையிட்டுக் காட்டுமாப்போலே குறிப்பிடுவோம். எம்மத த்திலும் ஸம்மதமாயிருப்பது ஜீவராசிகள் உலகவாழ்க்கையில் படும் துன்பங்களின்றி பேரின்பம் பெற்று வாழ்வதே பேறென்னும் புருஷார்த்தமாகும் என்பது.
அதைப் பெறுவதற்கு பக்தி யோகமெனும் உபாயமே ஸாதனமென்றும் இதைச் செய்வதற்கு த்ரைவர்ணிக புருஷரே (பிராமண க்ஷத்திரிய வைச்யர்) அதிகாரிகளென்றும் பெரிதும் வைதிக மதங்கள் பேசுகின்றன. இப்படியாகில் ஸ்திரீகள் சூத்ரர் முதலானவர்களின் கதியென்னவென்பதை அவைகள் கவனிக்கவில்லை. பரம வைதிகமான ஸ்ரீராமாநுஜ ஸித்தாந்தத்திலோ “ச்ரௌதீ ஸர்வசரண்யதா பகவத:ஸ்ம்ருத்யாபி ஸத்யாபிதா ஸத்யாதிஷ்விவ நைகமேஷ்வதிகிருதிஸ் ஸர்வாஸ்பதே ஸத்பதே” எல்லோருக்கும் மோக்ஷோபாயமான தோழன் என்று வேதமோதியது. ‘ஸர்வலோக சரண்யாய’ என்று ஸ்ரீமத் இராமாயணத்தால் உறுதி செய்யப்பட்டதென்றும் யாவருக்கும் உண்மை பேசுவது முதலான வேதத்தில் ஓதப்பட்ட தர்மங்களிற்போல எல்லாருக்கும் இடமளிக்கும் சரணாகதியிலும் அதிகாரமுண்டென்று தேறுகிறதென்றும் பலப் பிரபல பிரமாணங்களைக்கொண்டு ஸம்ஸ்கிருதத்திலும் மணிப்பிரவாளத்திலும் (ஸம்ஸ்கிருதமும் தமிழும்) தமிழிலும் சுருக்கமும் விரிவும், லளிதமும், (இலகு) கடினமும் வாக்கியமும் பத்தியமுமான பல கிரந்தங்களை இயற்றி பின்புள்ளார் பிழைக்கும்படி தார்மிகர்கள் தண்ணீர்பந்தல் வைக்குமாப்போலே ஸ்ரீதேசிகன் வைத்துப் போன இப்பேருதவி ஒன்றுக்கே இவ்வுலகம் என்றும் கடனாளியாகிறது. ஸ்ரீதேசிகனென்னும் கல்பக விருக்ஷத்தின் மலர்களான இக்கிரந்தங்களில் சரணாகதியின் மணம் வீசாத வாக்யம் ஒன்றேனும் காணக்கிடைக்குமோ? “ஸமீஹிதம் யத்ஸதநேஷுதுக்தே, நிக்ஷேபவித்யாநிபகாமதேனு” (இவர் திருமாளிகைகளில் பிரபத்தியெனும் காமதேனு கருதியதெல்லாம் கறக்கின்றது) என்றபடி புதுப்பொருள், இழந்த பொருள், கைவல்யம், மோக்ஷம் என்கிற நான்கும் இவ்வுபாயத்தால் கிடைக்கிறதெனவும், இதற்கு அபாயமொன்றில்லையெனவும், ஒரு க்ஷணத்தில் நிறைவேறிவிடுமென்றும் இப்படிப் பற்பல ஸௌகரியங்களைப் பிரமாணங்களால் காட்டித் தேற்றிய நம் தேசிகனுக்குத் தலையல்லால் கைம்மாறுண்டோ? பக்தியோகத்தில் நம் ஸித்தாந்தத்தில் ஸ்ரீ ஆளவந்தார் காலத்திலேயே உபதேச பரம்பரை நின்றுவிட்டதால் அதற்குரிய மந்த்ராதிகள் கிடைக்க வழியில்லை. அதன் அங்கங்களிலோ முதன்முதலில் யமமென்று கேட்டாலே பயமுண்டாகிறது. நம் பிரபத்திக்கோ ஆனுகூல்யம் அங்கமென்றால் ஆனந்தமுண்டாகிறது. பிராரப்தத்தின் பலமாக பல ஜன்மங்களிலும் தனக்குரிய தர்மங்களை வழுவாது அனுஷ்டிக்கத் தவறினால் பக்தி யோகமும் தளரும். பிரபத்தியோ ஒரு க்ஷணத்திலேயே முடிந்து விடுவதால் இதையழிப்பதற்கு ஒன்றுமே கிடையாது. இத்தகைய “கர்மயோகாதாச்சுத்தாஸ்ஸாங்கிய யோகவிதஸ்ததா| நார்ஹந்தி சரணஸ்தஸ்ய கலாம்கோடிதமீமபி|| (கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம், இவைகளையனுஷ்டிப்பவர்கள், சரணாகதர்களின் கோடியில் ஓரம்சம் பெறமாட்டார்கள்) என்றபடி ஏற்றம் பெற்ற அபாயமில்லாத இவ்வுபாயத்தைப் பற்றியதால் சரண்ய தம்பதிகள் அவதரித்துச் சேர்ந்திருந்தபோது காகஸுரனையும், பிரிந்தபோது விபீஷணனையும் ராக்ஷஸிகளையும் காப்பாற்றி “அபயம் ஸர்வபூதேப்யோ ததாமி” (அனைவர்க்கும் அனைவரிடமிருந்தும் அபயமளிக்கிறேன்) “ பவேயம் சரணம்ஹிவ:” ( உங்களைக் காப்பேன்), “நகச்சிந்நாபராத்யதி” (குற்றமில்லாதவரொருவருமில்லை) என்று பலரறியச் சொல்லியும் அடுத்த அவதாரத்தில் அனைத்தும் வினைகளை அழிக்கிறேன் உன்னை அளிக்கிறேன். என்னைச் சரணாகப் பற்று வருந்தாதே என்று அருளிச்செய்திருக்கச் செய்தேயும் நம்மாழ்வார் முதலான பூர்வர்களும் ஆசார்யர்களும் அனுஷ்டித்துவருமிச்சரணாகதியில் ஸம்சயமுண்டாகில் “விருதைவபவதோயாதா பூயஸீ ஜந்மஸந்ததி: தஸ்யாமன்யதமஞ்ஜன்மஸஞ்சிந்த்ய சரணம் வ்ரஜ:” பல ஜன்ம வரிசை வீணாகிவிட்டது. பிரத்தி செய்து இந்த ஜன்மமும் வீணானால் அதிலொன்றாயிருக்கட்டுமே உனக்கு நஷ்டமொன்றில்லையே, நான் சொல்லியபடி பலித்து விட்டால் பிழைத்துவிடுவாயே என்ற பொருளுள்ள மஹர்ஷிவசநத்தையெடுத்துக் காட்டியவழகை, ஆச்சரியத்தை, பரம தயையை, நம்மிடமுள்ள உள்ளன்பை, ஔதார்யத்தை என்னென்று சொல்வது? இங்ஙனமிருக்க, இவ்வாசாரியசிகாமணியிடமும் அவர் காட்டித்தந்த சரணாகதியிலும் நம்பிக்கையில்லாதவருக்கு எதை நம்பிக் கைகொடுப்பான் சரண்யன்? “லோகவிக்ராந்த சரணௌ சரணம்தே வ்ரஜம் விபோ” (உலகமளந்த உன்னடிகளை உபாயமெனப் பற்றுவேன்) என்று இவன் கால் பிடிக்க, “ஹஸ்தாவலம்ப நோஹ்யேஷாம் பக்திக்ரீதோ ஜனார்த்தன:” அன்பினால் கிரையம் வாங்கப்பட்ட அச்யுதன் இவர்களை அங்கை கொடுத்து அருள்கிறானென்றன்றோ பூர்வர்களின் பாசுரம். இப்படி பிரபத்தியெனும் சிந்தாமணியை வைத்திருக்கும் பெட்டிகளான தஞ்சப் பரகதியைத் தந்தருளிய ஸ்ரீதேசிகன் ஸ்ரீஸூக்திகளை நாம் ரக்ஷிக்க ‘தர்மோ ரக்ஷதி ரக்ஷித:’ (தர்மத்தை நாம் காக்க அது நம்மையளிக்கும்) என்றபடி பரமதர்மமான ப்ரபத்தியைச் சொல்லுமவைகள் நம்மை ரக்ஷிக்கும். இதுதான் ஸ்ரீதேசிகனுக்கு நாம் செய்யும் பணிகளில் தலையணியாய் தலையணியில் நிற்பது. (தலையணி == சிரோபூஷணம், முன்வகுப்பு)
(இது “ஸ்ரீதேசிக ஸ்ரீஸூக்தி ஸம்ரக்ஷணீ” இதழில் படித்தது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக