செவ்வாய், 16 ஜூன், 2009

பசும்பொன்தேவர்


மதுரை ஆடிவீதி திருவள்ளுவர் கழகத்தில் தேவர் ஆற்றிய திருக்குறள் சொற்பொழிவின் இரண்டாம் பகுதி.

" .... அறிஞர் பெருமக்களே! இந்தத் திருவள்ளுவர் கழகத்தில், குறிப்பாக உங்கள்முன் உரையாற்றுவதை அடியேன் பெறற்கரிய பெருமையாக க் கருதுகின்றேன். திருவள்ளுவப் பெருந்தகை அருளிய 1330 அருங்குறளும் ஒரு பெரிய அரிய அறிவுக் கடலாகும். திருக்குறளுக்குப் பல விரிவுரைகள் வந்துள்ளன. இன்னும் பல வந்துகொண்டே உள்ளன. வேறு எந்தக் காவியத்துக்கும் இத்தனை உரைகள் வந்ததில்லை. இரண்டு வரிப் பாவிலே பல புதுமைகளைப் புகுத்தி உரையாசிரியர்களையும், ஏனையோரையும் திக்கு முக்காடச் செய்கிற பெருமை திருக்குறளுக்கு மட்டுமே உண்டு. தமிழ்நாட்டில் ஒரு குறள் பற்றிய கருத்து அடிக்கடி பேசப்பட்டு வருகிறது.

"தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை"
என்ற அக்குறள் வாழ்க்கைத்துணை நலம் என்ற அதிகாரத்தில் 55வது குறளாக வருகிறது.
பிற தெய்வம் தொழாது தன்னுடைய கணவனை மட்டும் தொழுது நின்று துயில் எழுகின்ற பெண் பெய்யென்று சொன்னால் மழை பெய்யும் என்று இதற்குப் பொருள் கொள்கின்றனர்.
இந்த அரிய குறளின் அடிப்படைக் கருத்தைப் புரிந்து கொள்ளாமல் பல்வேறு பொருள் செய்கின்றார்கள். இதனுடைய பொருள் என்ன? அறத்துப் பாலில் தெய்வம் என்ற சொல் அடிக்கடி வருகிறது.
"தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தார் ஓம்பல் தலை"
இந்தக் குறளிலும் தெய்வம் என்ற சொல் வருகிறது. ஐம்புலத்தாறு என்று ஒரு சிலரும், ஐம்புலத்தார் என்று வ.உ.சியும் இச் சொல்லைப் பிரிக்கின்றனர். வல்லின றகரமும் இடையின ரகரமும் பொருள் கூறும்போது இங்கு இவ்வாறு போட்டி போடுகின்றன. ஐம்புலத்தாரைப் பேணுதல் எனச் சிதம்பரனாரும் வலியுறுத்தி ஐம்புலத்தாறைப் பேணுதல் பொருந்தாது என்று பொருள் கூறியுள்ளார். இந்த வாதத்திற்குள் அடியேன் இப்போது புக விரும்பவில்லை. இதனை எழுதிய பண்டிதர்களும் தவறு செய்திருக்கக் கூடும் என்று கருத இடம் இருக்கின்றது. இதனை இப்போது விட்டுவிடுவோம். இந்தக் குறளில் ஐந்து பேரைக் காட்டிய வள்ளுவப் பெருந்தகை தெய்வம் என்ற சொல்லுக்கு தேவர் என்ற பொருளுடன்தான் எழுதியிருக்கக் கூடும் என்று அடியேன் துணிவுடன் கூறுகின்றேன்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
என்ற குறள் ஐம்பதாவது குறளாக 'இல்வாழ்க்கை' என்ற அதிகாரத்தில் வருகிறது. இந்தக் குறளிலும் தெய்வம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. தெய்வத்துள் என்று சொன்னபடியால் இச்சொல் பன்மையைக் குறிக்கும். ஒருமையைக் குறிக்காது. இந்திரன் முதலிய தேவர்கள் என்று பொருள் கொள்ளுமாறு இச்சொல் இங்கு அமைக்கப் பட்டுள்ளது. இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தில் அமைக்கப்பட்ட இக்குறள் மனிதர்களாகிய நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும், அவ்வாறு வாழும்போது நாம் அடையக்கூடிய மறுமைப் பயன்களையும் நன்கு விளக்குகிறது. எனவே தெய்வம் என்ற சொல்லுக்கு தேவர் என்று பொருள் செய்வதை எவரும் மறுக்க இயலாது.
திருக்குறளில் உள்ள முதல் அதிகாரத்தில் கடவுள் வாழ்த்து வருகின்றது. பகவன், வாலறிவன், அறவாழி அந்தணன், இருவினையும் சேரா இறைவன், தனக்குவமை இல்லாதான் போன்ற சொற்களைச் சர்வ வல்லமையுள்ள இறைவனைக் காட்டுவதற்கு வள்ளுவப் பெருந்தகை பெரிதும் பயன்படுத்தியுள்ளார் எனத் துணிந்து கூறலாம். எனவே தெய்வம் என்பதற்கு தேவர் எனப் பொருள் கொள்வதைப் புலவர்களாகிய நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என அடியேன் நம்புகிறேன். ஆகவே தெய்வம் என்ற சொல்லைக் கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தில் தெய்வம் என்று வள்ளுவப் பெருந்தகை உபயோகப் படுத்தவில்லை. கடவுள் என்பவர் இறைவன். அவர் சர்வ வல்லமை உடையவர். அவருக்கு ஈடாக வேறு எவரையும் சொல்ல முடியாது என்ற கருத்தில்தான் வள்ளுவர் பயன்படுத்தி இருக்க வேண்டும் என்பதை முதலிலேயே குறிப்பிட்டேன். ஆன்மீக க் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டால்தான் திருக்குறளுக்குச் சரியான பொருந்தும் உரை காண முடியும். இல்லையெனில் தவறான உரையே சொல்ல வேண்டி இருக்கும்.
தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
என்ற குறளில் உள்ள தெய்வம் தொழாள் என்ற சொல்லுக்கு கடவுளைத் தொழ மாட்டாள் என்று பொருள் காண்பது பெருங் குற்றமாகும். இதனை அறிஞர் பெருமக்கள் குறிப்பாகத் தமிழர்கள் ஒருபோதும் ஓப்புக் கொள்ளமாட்டார்கள். தமிழகத்தில் பிறந்த எந்தப் பெண்ணும் எல்லாம் வல்ல இறைவனைத் தொழ மாட்டாள் என்று பொருள் வருமாறு உரை செய்வது பெரும் பிழையாகும். இது தவறாகும். சிந்தித்துச் சீர் தூக்கிப் பார்க்கையில் அத்தகைய பொருள் பெரும் பிழையாகும். தெய்வம் என்பது தேவர் என்ற பொருளில் வந்தது என்று கூறி என் உரையை முடிக்கின்றேன்.

படித்து விட்டீர்களா? சரி ! உங்களில் சிலருக்காவது நான் ஏன் இதை இங்கு பதிந்தேன் என ஐயம் ஏற்பட்டிருக்கும். -- வேண்டும். ஆஹா! எங்கள் மண்ணில் பிறந்த வீரத்திருமகன் இலக்கிய உலகிலும் தன் தடம் பதித்துச் சென்றிருக்கிறார் எனக் காட்டவா? பலரறியாத அவரது தமிழார்வத்தைத் தெரியப் படுத்த வேண்டும் என்பது எனது ஆசைதான். ஆனால் அதையும் மீறினது ஒன்று உண்டு. அரசியல்வாதி என்றாலே முரண்பாடுகளும் அவருடன் ஒட்டி வரும் என்பதை வெளிப்படுத்த இதைப் பயன்படுத்திக் கொண்டேன். அது என்ன முரண்பாடு எனப் புருவம் நெளிப்போர் தயவு செய்து சிரமம் பாராமல் என்னுடைய முந்தைய பதிவை மீண்டும் ஒரு முறை ஊன்றிப் படிக்க வேண்டுகிறேன். அப்படிப் படித்தாலேயே அது எளிதில் விளங்கிவிடும். அது மட்டுமல்ல ஒரு ஆராய்ச்சி எப்படி அமையக் கூடாது முன்னோர்கள் கருத்து எப்படி அணுகப் படக்கூடாது என்பதற்கும் தேவர் பெருமகனாரின் திருக்குறள் உரை ஒரு நல்ல வழிகாட்டியாக இருப்பதையும் எளிதில் உணரலாம்.

மந்த புத்திக்காரனான அடியேனுக்கே முதல் வாசிப்பிலேயே புலனான அந்த முரண்பாடு உங்களுக்கு -- தமிழிலும், சம்ப்ரதாயத்திலும் அறிஞர்களாக இருக்கும் உங்களுக்கு--- கண்டிப்பாகத் தென்பட்டிருக்கும். இருந்தாலும், அறியாதவனாகிய என் கருத்துக்கள் சரிதானா என்பதை நீங்கள் சான்றளிக்க இங்கு அதைச் சுட்டிக் காட்டுகிறேன்.

தேவர் எடுத்தாண்ட இரண்டு குறள்களிலும் "தெய்வம்" உண்டு. ஆனால், முதல் குறளிலே தெய்வம் என்பதை சர்வ வல்லமையுள்ள கடவுள் என்று கொண்டு அப்படிப்பட்ட தெய்வத்தால் ஆகாத செயலே கிடையாத நிலையில் 'தெய்வத்தால் ஆகாது' என எழுதியது தவறு என வாதிட்டு, அது 'தெய்வத்தால் ஆகும்' என்றுதான் இருக்க வேண்டும் என முழங்கியவர், அடுத்த எடுத்துக் காட்டிலே தெய்வம் தொழாள் என்பதில் வரும் தெய்வம் கடவுளைக் குறிக்காது அது தேவர்களைத்தான் குறிக்கும் என உரைப்பது ஒரு முரண்பாடுதானே ? ஆகாது ஆகும் இரண்டும் நேர் நேர் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? "தெய்வத்துள்" என்பதைப் பன்மையைக் குறிக்கும் எனக் கொண்டு ஆராய்ந்தால் எப்படி உண்மைப் பொருள் தோன்றும்?

அவர் உரை நிகழ்த்திய இடம் மதுரை. நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் பொறுக்காத புலவர் பெருமக்கள் வாழ்ந்த, வாழ்கின்ற ஊர். நிச்சயம் அங்கு கூடியிருந்தோர் அதை கைதட்டி ரசித்திருக்க மாட்டார்கள். தன் அபிமான தலைவர் உரையை மட்டுமே பதிவு செய்திருக்கும் திரு கோவிந்தராஜன் அவையினரின் உணர்வுகளையும், (reactions) சிறிதாவது எழுதி இருந்திருக்கலாம் -- எழுதியிருந்திருக்க வேண்டும். இப்போது அவரைக் கேட்போமென்றால் அவரோ பேச முடியாத நிலையில். எதிர்காலத்தில் இந்த உரையை யாராவது படித்து, "ஆஹா! பாருங்கள் !நம் தலைவர் சொல்லிவிட்டார் ! இனி இப்படித் தான் பொருள் கொள்ள வேண்டும்" என ஓட்டுவங்கி அரசியல்வாதிகள் கிளம்பாமல் இருக்க வேண்டும்.

ஆனாலும் ஒன்றை இன்றைய இளைய தலைமுறை நினைவில் கொள்ள வேண்டும் (ஆமாம் ! உன் வலைக்குள் வரும் மூணே முக்கால் பேர்களில் இரண்டே அரைக்கால் பேர்களுக்கு மூன்று கால்கள் ! இதை எந்த இளைய தலைமுறை படிக்கப் போகிறார்கள் ? அவர்கள் நினைவில் கொள்ள என்று கூடவே இருக்கும் ம.சா. சிரிக்க ஆரம்பித்தாயிற்று) அரசியலிலே நாட்டு விடுதலை இயக்கங்களிலே முழுமையாக அர்ப்பணித்த நிலையிலும் அன்னைத் தமிழுக்கு அவர்கள் பங்கினைச் செய்யத் தவறவில்லை என்பதே அது. இந்த வரியை எழுதும்போது நேற்று அன்பு மருகர் அ.ராஜகோபாலனின் கவிதைத் தொகுப்பில் படித்த இந்த வரிகள் நெஞ்சிலாடுகின்றன.



நாமேதும் செய்ததுண்டா?

செந்தமிழின் சிறப்பைப் பற்றிச்
சிந்தனைப் பட்டி மன்றம்.
சந்தமிகு கம்பன் பாட்டைச்
சான்றாகக் காட்டிச் சென்றார்.
சிந்தையை அள்ளு கின்ற
சிலம்பினைப் பற்றிச் சொன்னார்.
எந்தமிழின் குறளைப் போல
எம்மொழியில் நூலுண் டென்றார்?

வந்தவர்கள் சாலை யோரம்
வாய்பிளந்து கேட்டு நின்றார்.
எந்தப்பிற மொழியும் என்றும்
இனைதமிழ்க் காகா தென்ற
அந்தவுரை முடிந்த போது
ஆறாண்டு நிறைந்தி டாத
எந்தமயன் மகன் கேட்டான்
இவரென்ன செய்தா ரென்று.

அன்றவர்தம் திறமை கொண்டு
அரியபல நூல்கள் யாத்து
நின்றுலகில் தமிழை என்றும்
நிலைத்திருக்கச் செய்தா ரன்றோ?
தின்றுவெறும் பொழுது போக்கித்
தெருவோரம் மேடை போட்டு
நின்றுபழம் பெருமை பேசும்
நாமேதும் செய்த துண்டா?


மதுரைத் தென்றல் வீதியுலா 19 நவம்பர் 2001.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக