வெள்ளி, 13 ஜனவரி, 2023

ராமாயணம் --- உத்தர காண்டம் 22

முப்பத்தாறாவது ஸர்க்கம்

[ராவணனின் விஜய விருத்தாந்தத்தைக் கேட்ட ஸ்ரீராமன், 'அவனை ஐயிக்க அப்பொழுது யாருமே இல்லையா?' என்று அகஸ்தியரைக் கேட்க, ராவணனுடைய தோல்வியை எடுத்துக் கூற ஆரம்பித்தல்)

 

          இவ்வாறான ராவண- இந்திரஜித்தின் விஜயத்தைக் கேட்ட ஸ்ரீராமன் மிகவும் ஆச்சரியத்தை அடைந்து மறுபடியும் அகஸ்தியரைப் பார்த்துப் பின்வருமாறு கேட்டார் - மகரிஷியே! க்ரூரனான ராவணன் வரபலத்தால் கர்வமடைந்து உலகத்தை ஜயிக்க எண்ணம் கொண்டு சுற்றித்திரியும்பொழுது, இவ்வுலகில் ஜனங்களே இல்லையா? இருந்தும் வீரர்கள் தான் இல்லையா? யாருடனும் அந்த ராவணன் போரிட்டுத் தோற்றதே இல்லையா? எல்லா க்ஷத்திரிய அரசர்களுமேயா அவனிடம் தோற்றுப் போயினா்?

          இதைக் கேட்ட அகஸ்த்தியர் புன்முறுவல் செய்து, ராவணன் தோல்வியடைந்ததைக் கூறுகிறார் - ராவணன் இப்படியாக உலகத்தினரை ஹிம்ஸித்துக் கொண்டிருந்தான். அவன் ஒரு ஸமயம் கார்த்தவீர்யார்ஜுனனை ஜயிக்க எண்ணம் கொண்டவனாய், ஸ்வர்க்க லோகம் போலப் பிரகாசிக்கும் மாஹிஷ்மதீ என்ற அவனுடைய பட்டணத்திற்குச் சென்றான். அந்தப் பட்டணத்தை எப்பொழுதும் அக்கினி பகவான் பிராகாசரூபமாக இருந்துகொண்டு ரக்ஷித்து வருகிறான்.

       ராவணன் அங்கே சென்று, கார்ந்த வீர்யார்ஜூனனுடைய மந்திரிகளை நோக்கி, “இலங்காதிபதியான ராவணன் யுத்தத்திற்கு வந்துள்ளான் என்று உங்களரசனிடம் கூ.றுங்கள்" என்றான். அதற்கு அவர்கள், "எங்கள் அரசன் நகரத்தில் இல்லை. எங்கோ வெளியில் சென்றிருக்கிறான்" என்றனர்.

       இதைக் கேட்ட ராவணன் பிறகு பார்த்துக்கொள்ளலாம் 'என்று நினைத்தவனாய், அங்கிருந்து புறப்பட்டு, ஆகாயத்தை அளாவி 'நின்ற 'விந்த்ய' மலையை அடைந்தான். அதன் அழகை ரஸித்துக் கொண்டே, அடுத்து. மேற்குமுகமாகப் பிரவஹிக்கும் நர்மதா நதியை அடைந்தான். பிறகு புஷ்பக விமானத்திலிருந்து இறங்கினான். அந்தப் புண்யநதியில் நீராடினான். தனது அமைச்சர்களை நோக்கி, "இந்த நதி மஹாபரிசுத்தமானது. பாபங்களைப் போக்குவதில் கங்கைக்கு நிகரானது. ஆதலால் நீங்கள் அனைவரும் சிரமத்தைப் போக்கி ஆரோக்யத்தைத் தருவதான இந்த நர்மதா நதியில் நீராடிக் களை தீருக. இதோ சூரியன் ஆயிரம் கிரணங்களுடன் கூடினவனாய் உலகத்தை ஸ்வர்ணம் போலப் பிரகாசிப்பித்துக் கொண்டுள்ளாள். இந்த நடுப்பகலிலும் அவன் நான் இங்கு உள்ளதைக் கண்டு பயந்து சந்திரன் போன்று விளங்குகிறான்" என்று கூறினான். பிறகு அவன் அந்த நதியில் நீராடி, சரத்காலத்திய நிலவு போன்ற வெண்மையான அதன் மணல்மேட்டில் அமரிந்து கொண்டு, புஷ்பங்களால் சிவபூஜை செய்ய ஆரம்பித்தாள். அப்பொழுது அவன் சுத்தமான வெளுப்பு வஸ்திரத்தை உடுத்துக்கொண்டு விளங்கினான். பரிசரர்களால் கொண்டுவரப்பட்ட நாநாவித வாஸனை யுள்ள புஷ்பங்களால் வேதமந்திரங்களை உச்சரித்துக் கொண்டு தன்னுடன் எடுத்து வரப்பட்ட ஸ்வர்ண மயமான லிங்கத்திற்கு அர்ச்சனை செய்தான். பிறகு ஸாமகானம் செய்தான். லிங்கத்தின் முன்பு பாடிக்கொண்டே நர்த்தனமும் செய்தான்.

முப்பத்தேழாவது ஸர்க்கம்

[ராவண பூஜை செய்யும் இடத்திற்கு மேற்கே, சிறிது தூரத்தில் கார்த்தவீர்யார்சுனன். அந்த நதிநீரைத் தனது ஆயிரம் கைகளால் தடுத்து நிறுத்தல், இதை அறிந்த ராவணன் அவனுடன் போரிட்டு அவனிடம் கட்டுப்படுதல்)

 

          ராவணன் சிவபூஜை செய்து கொண்டிருந்த அதே ஸமயத்தில், அந்த நதியில், அவ்விடத்திற்குச் சமீபத்தில் கார்த்தவீர்யாஜுனன் அனேக ஸ்த்ரீகளுடன் மகிழ்ந்து ஜலக்ரீடை செய்துகொண்டிருந்தான். அவன் தன் கைவலிமையைச் சோதிக்க நினைத்தவனாய். தனது ஆயிரம் கைகளாலும் அந்த ஆற்றுநீரை, அணைக்கட்டுவது போல நீட்டித் தடுத்தான். இப்படித் தடுக்கப்பட்ட அந்தப் பிரவாகமானது, மேலே செல்லச் சக்தியற்றதாக தேக்கம்கொண்டு பின் னோக்கிச் செல்லலாயிற்று. அந்தத் திடீர்ப் பிரவாகத்தால் இராவணனுடைய சிவபூஜை உபகரணங்கள் அடித்துச் செல்லப்படலாயின.

       எதிர்பாராத இதைக் கண்ட இராவணன் வேகத்துடன் சுகசாரணா்களை அழைத்து, இப்படி ஜலம் எதிர்த்துப் பிரவகிப்பதற்கான காரணத்தை அறிந்து வருமாறு கட்டளையிட்டான். ஸஹோதரர்.களான அவ்விருவரும் வானில் கிளம்பி மேற்கு நோக்கிச் சென்றனர் அர்த்த யோஜனை தூரம் சென்ற அவர்கள் அங்கு அவ்வாற்றில் ஒரு புருஷன் அனேக ஸ்திரீகளுடன் ஜலக்கிரீடை செய்வதைக் கண்டார்கள். அந்தப் புருஷன், பெரிய ஸாலவ்ருக்ஷம் போன்றும், நீர் முழுவதும் பரந்துள்ள கேசங்களையுடையவனும், மதத்தினால் சிவந்த கண்களை யுடையவனும், தேஹகாந்தியுள்ளவனாகவும், ஒரு மலையானது தனது பாதங்களால் பூமியைத் தடுத்து நிறுத்துவது போலத் தனது ஆயிரம் கைகளானும் ஆற்றுநீரைத் தடுத்து நிறுத்துபவ னாகவும் காணப்பட்டான் இந்த ஆச்சரியத்தைக் கண்ட சுகசாரணர்கள் ஆற்றுநீர் எதிர்த்து வரும் காரணத்தை அறிந்தவர்களாய். வேகமாகத் திரும்பி வந்து ராவணனிடம் விஷயத்தைக் கூறினார்கள்.

       இப்படிக் கூறக் கேட்ட ராவணன், அவன்தாள் கார்த்தவீர்யார்ஜுனனாக இருக்க வேண்டுமென நினைத்தான். உடனே தனது அநுசரர்களுடன் அவ்விடத்தை நோக்கிப் புறப்பட்டான். இப்படி அவன் புறப்பட்டபொழுது, காற்று தீவிரமாக வீசியது. மேகங்கள் அனைத்தும் ஒரே ஸமயத்தில் ஹோ என்று சப்தமிட்டன. மஹோதான், மஹா பார்ச்வன்,,தூம்ராக்ஷன், சுகன், சாரணன் ஆகியவர்களும் உடன் புறப்பட்டனர். அனைவரும் அர்ஜூனன் இருக்குமிடத்தை அடைந்தனர்.

       அங்கே அனேக ஸ்திரீகளுடன் ஜலக்ரீடை செய்யும் அர்ஜுனனைக் கண்ட ராவணன், அவனுடைய மந்திரிகளைப் பார்த்து, கம்பீரமான குரலில் பின்வருமாறு கூறினான்-மந்திரிகளே! நீங்கள் உடனே உங்களுடைய அரசனான ஹைஹயாதிபதியிடம் சென்று, ராக்ஷஸேச்வரனான ராவணன் உன்னிடம் போர் புரிய வந்திருக்கிறான் என்று கூறுங்கள்" என்று.

       இதைக் கேட்ட அர்ஜுனனின் மந்திரிகள் தங்கள் தங்கள் ஆயுதங்களுடன் வேகத்துடன் எழுந்து நின்று கொண்டு, ராவணனிடம், "போர் புரியக் காலத்தை தன்கு அறிந்தாய். மதம் பிடித்தவனை. ஸ்திரீகளின் மத்தியிலுள்ளவனை எதிர்த்துப் போரிட நினைக்கிறாய் மிக மிக நன்று! பெண் யானைகளுடன் கூடிக் களித்திருக்கும் ஆண், யானையைப் பெரிய புலி எதிர்ப்பது போலுள்ளது உனது செய்கை. இந்த இரவுப் பொழுது போகட்டும். பொறுத்துக்கொள். நாளைக் காலை எமது அரசனுடன் போரிடவும். அப்படிக்கீன்றி இப்பொழுதே போரிட விரும்புவாயாகில், எங்களுடன் போரிட்டு வென்று பிறகு அரசனுடன் போரிடவும்" என்று கூறினர்.

       இந்த அவகாசத்தை ஸஹிக்காத ராவண ஸைன்யத்திற்கும் அர்ஜுன மந்திரி ஸைன்யத்திற்கும் யுத்தம் உண்டாயிற்று. அரக்கர் ஸைனிகர்களால் அர்ஜூன ஸைனிகர்கள் பலர் கொல்லப்பட்டு பக்ஷிக்கப்பட்டனர்.

       அர்ஜுன ஸைன்யம் அதிகமாக அழிக்கப்படுவதைக் கண்ட த்வார ரக்ஷகர்கள் அர்ஜுனனிடம் சென்று ராவணனுடைய அதிக்கிரமச் செயலைக் கூறினர். அவள் மிகவும் சினங் கொண்டு, யுகாந்தகால அக்கினி போல ஜலத்திலிருந்து வெளிக்கிளம்பி, ஸுவர்ண மயமான பெரிய கதையைக் கையிலேந்தியவனாக, ராவண ஸைன்யமாகிற இருளை அழிக்கச் சூரியன் போல எதிர்த்துச் சென்றான். இப்படி எதிர்த்து வந்த அர்ஜுனனைப் பிரஹஸ்தன் உலக்கையைக் கையில் கொண்டவனாக எதிர்த்து நின்றான். மேலும் கையிலுள்ள ஆயுதமான உலக்கையை, அர்ஜூனன்மீது பிரயோகித்தான். நெருப்பைக் கக்கிக் கொண்டு வரும் அந்த உலக்கையை அர்ஜுனன் தனது சக்தியினால் அழித்துவிட்டான். ஐந்து முழ நீளமுள்ள தனது கதையால் பிரஹஸ்தவை அடித்தான். அந்த அடியைத் தாங்க மாட்டாமல் பிரஹஸ்தன், வஜ்ராயுதத்தால் அடிக்கப்பட்ட மலை போலக் கீழே விழுந்து மூர்ச்சை அடைந்தான், பிரஹஸ்தன் அடிபட்டு விழுந்ததைக் கண்ட மாரீசன், சுகன், சாரணன் முதலானவர்கள் யுத்தபூமியிலிருந்து பயந்தவர்களாக ஓடிவிட்டனர்.

       தனது வீரர்கள் ஓடினதைக் கண்ட ராவணன் மிகவும் கோபத்துடன் அர்ஜூனனை எதிர்த்தான். ஆயிரம் கையனுக்கும், இருபது கையனுக்கும் மிக்க பயங்கரமான யுத்தம் நடந்தது. இருவரும் கதையினா ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனா். மிகவும் கோபம் கொண்ட அர்ஜுனன் தனது பலம் முழுவதையும் ஒன்றுசேர்த்து, வேகத்துடன் கதையை ராவணனுடைய மார்பைக் குறித்துப் பிரயோகித்தான். சாகா வரம் பெற்ற ராவணனுடைய, மார்பைத் தாக்கிய அந்த கதை இரண்டு துண்டாகக் கீழே விழுந்தது. வேகமாகப் பிரயோகித்து அடிக்கப்பட்ட ராவணனுடைய கைகளிலிருந்த ஆயுதங்கள் நழுவின. ராவணனும் வலி தாங்காதவனாகக் கூக்குரலிட்டுக்கொண்டு கீழே அமர்ந்துவிட்டான்.

       சிந்தைக் கலக்கமடைந்து உட்கார்ந்த ராவணணைக் அர்ஜுனன் வேகமாகச் சென்று, தனது ஆயிரம் கைகளாலும் பிடித்துக் கட்டிக்கொண்டு, கருடன் பாம்பை எடுத்துச் செல்வது போலத் தூக்கிச் சென்றான். அதனைக் கண்ட தேவர்கள் 'நன்று, நன்று' என்று சொல்லிக் கொண்டே பூமாரி பொழிந்தனர். அர்ஜூனன் ராவணனைத் தூக்கிச் செல்வது புலி மானைத் தூக்கி எடுத்துச் செல்வது போலவும், சிங்கம் யானையை அடித்துச் செல்வது போலவும்  இருந்தது.

       மூர்ச்சை தெளிந்தெழுந்த பிரஹஸ்தன், ராவணன் கட்டப்பட்டுப் பிடித்துச் செல்வதைக் கண்டு மிகுந்த கோபத்துடன் ஸைன்யத்துடன் அரிஜூனனைத் தொடர்ந்து சென்று "ராவணனை விட்டுவிடு” என்ற கூச்சலிட்டுக்கொண்டே அனேக ஆயுதங்களால் அர்ஜுனனை தாக்கினான். அர்ஜுனனும், அவற்றையே தான் கையில் வாங்கி கொண்டு அவற்றினாலேயே அவர்களைத் தாக்கி, பெருங்காற்றானது மேகக் கூட்டங்களைச் சிதற அடிப்பது போலச் சிதறியோடும்படி செய்தான்.

       ராவணனைச் சிறை பிடித்து வந்த கார்த்தவீர்யார்ஜூனனை நகர வாசிகள் அனைவரும் புஷ்பங்களையும் அக்ஷதைகளையும் வாரியிறைத்து மங்கள ஹாரத்தி எடுத்து வரவேற்றனர்.

 

முப்பத்தெட்டாவது ஸர்க்கம்

[கார்த்தவீர்யார்ஜுனனால் ராவணன் கட்டப்பட்டதைத் தேவர்கள் மூலமாக அறிந்த புலஸ்தியர் அவனை விடுவித்தல்.)

       வாயுபகவான் கட்டுண்டதைப் போன்று, ராவணன் கட்டுண்டான் என்ற விஷயத்தை ஆகாயத்தில் ஸஞ்சரிக்கின்ற தேவர்களின் வார்த்தைகளின் மூலமாக அறிந்த புலஸ்தியர், தமது பேரனிடமுள்ள அதிக அன்பினால், அதனைப் பொறுக்க முடியாதவராக, வாயுவைப் போன்று அதிக வேகத்துடன், மாஹிஷ்மதி நகரை அடைந்தார். இந்திரலோகமான அமராவதியைப் போலுள்ள அந்த நகரத்தில், ஒளி பொருந்திய சூரியன் நடந்து வருவது போன்று வந்த அவரைக் கண்ட நகரத்திலுள்ளோர் அர்ஜுனனிடம் அந்தச் செய்தியை அறிவித்தனர். அவன் வருபவர் புலஸ்திய மாமுனிவர் என்பதை அறிந்து, கைகளைத் தலைக்கு மேலாகத் தூக்கி அஞ்ஜலி செய்துகொண்டு வரவேற்றான். புரோகிதர் மூலமாக அர்க்யம் முதலானவற்றினால் அவரைப் பூஜித்து உயர்ந்த ஆஸனத்தில் அமரச் செய்து, அவரைப் பார்த்து, "தவசிரேஷ்டரே! தேவரீருடைய வரவினால் இந்த நகரம் தேவலோகம் போலானது. தேவரீருடைய தரிசனத்தால் எனது ஜன்ம ஸபலமானது. இந்த ராஜ்யம் இதிலுள்ள நாங்கள், மற்றுமெல்லாரும் தங்களுக்கு அதீனம். அடியேன் என்ன செய்ய வேண்டும்? ஆஜ்ஞையிடுங்கள், செய்கிறேன்”' என்று விஜ்ஞாபித்தான்.

       இதைக் கேட்டு மகிழ்ந்த புலஸ்தியர், அவனைக் குசலப்ரச்னம் செய்து, பிறகு 'ராஜேந்த்ர! எவனைக் கண்டு ஸமுத்திரமும் காற்றும் அசைவற்றுப் பயத்தினால் நிற்குமோ அப்படிப்பட்ட பலவானான ராவணன் உன்னால் பிடித்துக் கட்டப்பட்டுள்ளான். உனது புகழ் உலகில் பரவியுள்ளது. என் பேரனும் யுத்தத்தில் ஜயிக்க முடியாதவனென்ற கீர்த்தியை யுடையவனுமான ராவணனுடைய கீர்த்தியானது உன்னால் அழிக்கப்பட்டது. நாள் உன்னை வேண்டுகிறேன். இந்த என் பேரனான ராவணனை விட்டுவிடு" என்றார்.

       இதைக் கேட்ட அர்ஜூனன், பதிலேதும் பேசாமல் ராவணனை உடனடியாக விடுவித்தான். அக்கினி ஸாக்ஷியாக அவனுடன் ஸ்நேஹம் செய்துகொண்டு, புலஸ்திய முனிவரை வணங்கி விடை பெற்றுத் தன் இருப்பிடம் சென்றான். ராவணனும் வெட்கித் தலை குனிந்து புலஸ்தியரிடம் விடைபெற்றுச் சென்றனன்.

       இராம! இப்படியாக அர்ஜுனனால் அவமானம் அடைந்த ராவணன் சிறிது காலம் சும்மர இருந்தான் ராகவ! 'பலவான்களைக் காட்டிலும், பலவான்கள் இருப்பார்கள் என்று நினைத்தல் வேண்டும். இதர பலசாலிகள் உலகிலேயே இல்லை என்று, பிறரை அவமதித்தல் கூடாது. இது தனக்கு நல்லதன்று.

एवं बलिभ्यो बलिनः सन्ति राघवनन्दन ।
नावझा हि परे कार्या
यइच्छे त्प्ररिय मात्मनः ॥

ஏவம் பலிப்யோ பலிந: ஸந்தி ராகவநந்தன |
நாவஜ்ஞா ஹி பரே கார்யா ய இச்சேத் ப்ரியரைத்தை://

சில நாட்கள் சென்றபின் இராவணன் மறுபடியும் இதரர்களைப் பீடிக்க ஆரம்பித்தான்.

செவ்வாய், 10 ஜனவரி, 2023

ராமாயணம்–உத்தரகாண்டம் 21

முப்பத்தைந்தாவது ஸர்க்கம்

(கட்டுண்ட இந்திரனை விடுவிக்க தேவர்கள் ப்ரம்மாவை வேண்டுதல்,
பிரம்மா இராவணனிடம் சென்று இந்திரனை விடுவிக்கக் கோருவது,
அதற்காக மேகநாதன் வரம் வேண்டுவது,
இந்திரன் கட்டுண்டதற்கான காரணம்,
விஷ்ணு யாகம் செய்து இந்திரன் பரிசுத்தனாகி
மீண்டும் தேவலோகாதிபதியாதல்)

            மேகநாதனால், தேவேந்திரன் கட்டுண்டு இலங்கைக்கு இழுத்துச் செல்லப்பட்டவுடன் தேவலோகமானது சூன்யமாயிற்று. இதைக் கண்டு துக்கிதர்களான தேவர்கள் பிரமனை அடைந்து, 'பிரம்ம தேவரே! உமது வரபலத்தினால் இராவணன் கொல்லப்படாதவனாக உள்ளான். ஈச்வானுடைய அநுக்ரஹத்தால், அவனுடைய குமாரனான மேகநாதனும் அனேக சக்திகளைப் பெற்றுள்ளான் இப்பொழுது மாயையினால் இந்திரன் ஜயிக்கப்பட்டுக் கட்டுண்டு இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளான். போரிட்டு அவனை மீட்க முடியாது. எனவே ஏதேனும் செய்து இந்திரனை மீட்க வேண்டும்" எண வேண்டிக் கொண்டனர்.

          இதைக் கேட்ட பிரம்மதேவர், தேவர்களுடன் இலங்கைக்குச் சென்றார். தன் இனத்தவர்களுடன் ஸபா மண்டபத்தில் அமர்ந்திருந்த இராவணனைக் கண்டு"ராவணா! உனது குமாரன் இந்திரனை வெற்றிகண்டது கண்டு மிகவும் மகிழ்ந்தேன். உனக்கும் மேற்பட்டவனாக அவன் விளங்குகிறன். இந்திரனை அவன் ஜயித்தபடியால் இனி அவன் 'இந்திரஜித்' என்று புகழப்படுவான். இணையற்ற வீரனாக இவன் விளங்குவான். இம் மூவுலகமும் உனக்கு வசமாகியுள்ளது. இந்திரனும் உனது வசமாயினான். இவ்வளவே போதுமானது. இனியும் நீ இந்திரனைக் கட்டி வைப்பதனால் என்ன பயன்? இவனை விட்டுவிடவும். இவனை விடுவிக்கும் விஷயத்தில் நீ ஏதேனும் பிரதிபலனை விரும்புவாயாகில் சொல், அதைக் கொடுக்கிறோம்.' என்றார்.

          இதைக் கேட்ட மேகநாதன், "பிதாமஹரே! இந்திரனை விடுவிக்க வேண்டுமாயின், நான் என்றும் அமரனாக (மரணமில்லாதவனாக) இருக்க வரம் தரவேண்டும்" என்றான். இதைக் கேட்ட பிரம்மா, "குழந்தாய்! இவ்வுலகினில் ஸ்ருஷ்டிக்கப்பட்ட அனைத்தும் என்றேனும் ஒரு நாள் மடிந்தேயாகவேண்டும், எதுவுமே அமரமாக (அழிவற்றதாக) ஆக முடியாது" என்றார். இப்படிச் சொல்லக் கேட்ட மேகநாதன், மறுபடியும் பிரம்மாவைப் பார்த்து, ''அங்ஙனமாயின் மற்றெரு வரம் வேண்டுகிறேன். அதையாயினும் அளித்திடுக. அஃது யாதெனில்-- நான் சத்ருக்களை வெல்ல வேண்டிப் போரிடுவதற்காக ஒரு யாகம் செய்கிறேன். அதில் மந்திரங்களுடன் ஹோமம் செய்து அக்னி பகவானை ஆராதிக்கப்போகிறேன். அது தடையின்றி முடியுமாகில் அதிலிருந்து (அந்த ஹோமகுண்டத்திலிருந்து) உயர்ந்த குதிரைகள் பூட்டப்பட்ட ரதமொன்று மேலெழுந்து வரக்கடவது. அந்த ரதத்தின் மீது அமர்ந்து நான் போரிடுவேனாயின் அப்பொழுது எனக்கு மரணமில்லாமை வரக்கடவது. அப்படியின்றி அந்த யாகம் இடையூறு உண்டாகப் பெறுமாயின், அப்பொழுதே எனக்கு மரணம் உண்டாகக் கடவது. இதுவே எனது முக்கியமான மனோரதம்" என வேண்டினான்.  அதைக் கேட்ட பிரம்மா 'அப்படியே ஆகுக' என அருளிச்செய்து அமரர்களுடன் தன்னிருப்பிடமேகினார். இந்திரஜித்தும், அகமகிழ்ந்தவனாகி, இந்திரனைச் சிறையிலிருந்து விடுவித்தனன்.

          “ஸ்ரீராமசந்திர! தேவராஜனான இந்திரன் மேகநாதனிடம் தோல்வியுற்று அவன் வசப்பட்டுக் கலங்கியிருந்தபடியால். தன்னொளி இழந்து, முயற்சி குன்றிச் சோகமுற்றுச் சிந்திக்கலானான். இதை அறிந்த பிரஜாபதியான பிரம்மதேவர் இந்திரனைப் பார்த்து,  "தேவேந்திரா! நீ ஏன் சோகிக்கின்றாய், முன்செய்த தீவினையின் பயனையே நீ இப்பொழுது அநுபவித்தாய், அதன் விவரத்தைக் கூறுகிறேன்'' கேள் - முன்பு நான் அனேக மனிதர்களைப் படைத்தேன். அவர்கள் எல்லோரும், ஒரே விதமான உருவம், வர்ணம், பேச்சு இவற்றை உடையவர்களாகவே விளங்கினார்கள். அவர்களுள் ஒரு விதமான வ்யத்யாஸமும் காணப்படவில்லை. பிறகு நான் மிகவும் நன்கு தியானித்து விசேஷமாக ஒரு ஸ்திரீயை ஸ்ருஷ்டித்தேன். அவள் ஒவ்வொரு அவயவங்களிலும் வேறுபாட்டை உடையவளாக ஸ்ருஷ்டிக்கப்பட்டாள். 'ஹலம்' என்றால், உருவத்தில் மாறுபாடுகள். 'ஹல்யம்‘ அதனால் உண்டாவது, அதாவது மற்றவற்றைக் காட்டிலும், அவயன வேறுபாடுகளினால் உண்டுபண்ணப்பட்டது. இதற்கு ஸமமான மற்றொன்றையுடைத்தானதன்று என்பதனால், அதற்கு அந்த ஸ்திரீக்கு 'அஹல்யா' என்ற பெயர் வைக்கப்பட்டது• அந்த அழகிய ஸ்த்ரீயை நீ விரும்பினாய், காரணம் நீ இந்த மூன்று உலகிற்கும் அதிபதி என்கிற கர்வத்தினால். நான், மிக்க தபோ நிஷ்டரான கௌதம மஹரிஷியின் பொருட்டு அவளை அர்ப்பணித்தேன். இதனால் உனக்குக் கோபம் உண்டாயிற்று. அவளிடத்தில் கொண்ட காமத்தினால், ஒரு ஸமயம் கௌதமர் ஆசிரமத்தில் இல்லாதபொழுது, நீ அவளைப் புணர்ந்தாய். அது ஸமயம் அங்கு வந்து சேர்ந்த முனிவர் உன்னையும் உன்னுடைய செய்கையையும் கண்டு கோபம் அடைந்து 'இந்திரா! நீ இப்படிப்பட்ட கெட்ட காரியத்தை செய்தபடியால், உனது ஸ்வய நிலையில் மாற்றத்தை அடையக்கடவாய். மேலும் ஒரு ஸமயத்தில் போரில் சத்ருவின் பிடியில் சிக்குண்டு அவமானப்படுவாய்.’ என்று சபித்தார், அத்துடன். ‘இப்படிப்பட்ட துஷ்ட கார்யத்தைச் செய்பவர் அனைவரும் இதே நிலையை அடையக் கடவர்’என்றும் கூறினார். பிறகு அஹல்யையைப் பார்த்து- “கெட்ட நடத்தையுள்ளவளே! நீ நாசமாகக்கடவாய். (தர்மத்தை இழந்தவளாகக்கடவாய்).. அதன்பின் பல பல ஆண்டுகள் அக்கினி பகவானையும் ஸ்ரீராமசந்திரனையும் பூஜித்து இந்தப் பாவத்திலிருந்து விடுபடுவாய்”என்று சாபமிட்டு மேலும், அவளைப் பார்த்து, “எந்த உன் ஒருத்தியிடமே இருக்கும் அவயவ அழகு இப்படிப்பட்ட துஷ்ட செய்கைக்குக் காரணமாக இருந்ததோ. அந்த வடிவழகு பலரிடத்திலும் பிரிந்து குடிகொள்ளட்டும்” என்றும் கூறிச் சென்றார். அதுமுதல்தான் பலரிடம் பல வகையான உடலழகு காண்கிறது.

          கௌதமரின் சாபத்தைக் கேட்ட அஹல்யை தானறியாமல் செய்ததை க்ஷமித்து அநுக்ரஹிக்குமாறு பிரார்த்தித்தாள். கௌதமரும். அவனிடம் கருணை கொண்டு "மஹாவிஷ்ணு, இக்ஷ்வாகு வம்சத்தில் ஸ்ரீராமனாக அவதரிக்கப் போகிறார். அவர் இங்கு வரும் பொழுது அவரை தரிசித்தவுடன் உனது பாவம் நீங்கும். அவரைப் பூஜித்து என்னை வந்தடைவாய்; என்று கூறிச் சென்றார்.

          “தேவேந்திர ! அதனாலேயே உனக்கு இந்த அவமானம் நேர்ந்தது. தசாவிபர்யயம் மேஷ விருஷணனாகவும் ஆனாய். இப்பொழுது நீ வைஷ்ணவமான யாகமொன்று செய்வாயாகில், அதனால் இந்தப் பாவம் நீங்கிப் பரிசுத்தனாகிப் பிறகு தேவலோகம் சேர்வாய்”என்று கூறினார்.

          அதன்படியே இந்திரன் விஷ்ணுயாகம் செய்து பரிசுத்தனாகிப் பொன்னுலகம் போய்ச் சேர்ந்தனன். அங்கே சென்றதும், தனது குமாரன் அரக்கர்களுடன் நேர்ந்த போரில் மரணமடையவில்லை என்பதையும், காப்பாற்றப்பட்டு ஸமுத்திரத்தில் மறைந்து இருந்தான் என்பதையும் அறிந்து மேலும் ஸந்தோஷமடைந்தாள்.

அகஸ்தியர் - "ஹே ஸ்ரீராமசந்திர! நீ கேட்டபடியே - என்னால் இந்திரஜித்தின் பெருமையும் பலமும் கூறப்பட்டன. அதே போல் அவன் இந்திரனை ஜயித்தப் பிரகாரமும் கூறப்பட்டது'' என்றார்.

          இதைக் கேட்ட ஸ்ரீராமன், லக்ஷ்மணன், மற்றும் அங்குள்ள ராக்ஷஸர்களும், வானரர்களும் ஆச்சரியம் ஆச்சரியமென்று கூறினர்.

          விபீஷணனும் பல வருஷங்களுக்கு முன்பு நடந்த கதையை மீண்டும் கேட்டு ஸந்தோஷமடைந்தான்.

சனி, 7 ஜனவரி, 2023

ராமாயணம்–உத்தரகாண்டம் 20

முப்பத்து மூன்றாவது சர்க்கம்.

[ ராவண குமாரனான மேகநாதனுக்கும், இந்திரகுமாரனான ஜயந்தனுக்கும் யுத்தம், தோல்வியைத் தழுவிய ஜயந்தனை, அவனது மாதாமஹன் எடுத்துக்கொண்டுபோய் ஸமுத்திரத்தில் மறைதல், ராவணனுக்கும் தேவேந்திரனுக்கும் நடைபெற்ற யுத்தம்.]

          ஸுமாலி கொல்லப்பட்டதும், ராவண ஸைன்யம் நான்கு பக்கங்களிலும் ஓடி ஒளிந்தது. அதைக்கண்ட ராவண குமாரனான மேக நாதன் மிகுந்த கோபத்துடன் தனது பெரும்படையைக் கொண்டு தேவஸேனையை எதிர்த்தான். அக்கினியைப் போல் ஜ்வலிப்பதாயும். இஷ்டப்படி ஸஞ்சரிக்கும் தன்மையை உடையதுமான உயர்ந்த ரதத்தில் அமர்ந்த மேகநாதன், தேவர்களின் படையில் புகுந்து, உயர்ந்த மரக்காட்டை அக்கினியானது அழிப்பது போல் தேவர்களை நாசஞ்செய்ய ஆரம்பித்தான். அனேக விதங்களான அஸ்த்ர சஸ்த்திரங்களைப் பிரயோகிக்கின்ற அவனை எதிர்க்கச் சக்தியற்றவர்களாகத் தேவர்கள் பயந்து ஒடினர். இப்படி ஓடுபவர்களைக் கண்ட தேவேந்திரன். "வீரர்களே! ஓடாதீர்கள், பயப்படாதீர்கள், திரும்பி வாருங்கள். இதோ எனது குமாரனான ஜயந்தன் போர்முனைக்கு வருகிறான். அவன் பிறரால் ஜயிக்க முடியாதவன் என்பதை அறிந்திடுங்கள்" என்று கூறினாள்.

          உடனே ஜயந்தனுடன் கூடின தேவஸேனையானது. திரும்பி வந்து மேகநாதனை எதிர்த்தது.  இரு படைகளுக்கும் பயங்கரமான போர் நடந்தது. மேகநாதன் மாயாயுத்தம் செய்ய ஆரம்பித்தான். அவன் விடுத்த மாயையினால் மயங்கியப் படையினர் தம்மைச் சேர்ந்தவர் - பிறரைச் சேர்ந்தவர் என அறிய முடியாதவர்களாக ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டனர். மாயையால் மோகத்தை அடைந்த இந்திரகுமாரனான ஜயந்தனை அவனது மாதாமஹனான புலோமா என்பவன் தூக்கிக்கொண்டு சென்று, ஸமுத்திரத்தில் பிரவேசித்து விட்டான். இவன் இப்படி எடுத்துச் செல்லப்பட்டதை அறியாத தேவர்கள், ஜயந்தன் காணப்படாததால் அவன் நாசத்தை அடைந்தான் என்று நினைத்தவர்களாய், மனக்லேசமடைந்தவர்களாக யுத்த களத்தை விட்டுச் சென்றனர். இப்படி ஓடுகின்ற தேவர்களை, மேன் மேலும் பாண வர்ஷங்களால் துன்புறுத்திக்கொண்டே பின்தொடர்ந்தான் மேகநாதன்.

          தனது குமாரன் காணப்படாததையும், மேகநாதனின் செய்கையையும் கண்ட தேவேந்திரன், வேகத்துடன் மாதலியை அழைத்து ரதத்தை ஸித்தப்படுத்தச் சொல்லி அதன்மீது அமர்ந்து யுத்தத்திற்குப் புறப்பட்டான். அப்போது மின்னலுடன் கூடிய மேகங்கள் இடி முழக்கம் செய்தன. தேவதுந்துபிகள் முழங்கின. கந்தர்வர்களும் அப்ஸர ஸ்த்ரீகளும், நர்த்தனம் செய்தனர். ருத்ரர்களும், ஆதித்யர்களும், வசுக்களும், ஸாத்யர்களும், மருத்துக்களும் அவனைப் பின் தொடர்ந்து சென்றனர். அனேக ஆயுதம் தரித்து வீரர்களும் உடன் சென்றனர்.

          அதே சமயம் கடுங்காற்று உண்டாயிற்று.  சூரியன் ஒளியிழந்து காணப்பட்டான்.. ஆங்காங்கே கொள்ளிக் கட்டைகளும் விழுந்தன.

          ராவணன் தனது மகனான மேகநாதனைத் தடுத்துவிட்டுத் தானே இந்திரனை எதிர்க்கச் சென்றான். விச்வகர்மாவால் நிர்மாணம் செய்யப் பட்டதும், உத்தமமானதும், பயங்கரமான பக்ஷிகளாலும், பெரிய பாம்புகளாலும் சூழப்பட்டதுமான தேரில் ஏறியவனாய் அனேக வீர ராக்ஷஸர்களுடன் கூடி ஸமரபூமியை அடைந்தான். இரு ஸைன்யங்களும் ஒன்றையொன்று எதிர்த்தன. கும்பகர்ணன் யுத்த வெறி கொண்டவனாகி நம்மவர் பிறர் என்று அறிந்திடாமல் எதிர்ப்பட்ட அரைவரையும் கால்களால் நசுக்கியும், கைகளால் கிழித்தும், பற்களால் கடித்தும் வதைத்தான்; கொன்றும் குவித்தான். மஹாகோரமாக ஹிம்ஸிப்பவனான கும்பகர்ணனை ருத்ரர்கள் எதிர்த்து வந்து யுத்தம் செய்தார்கள். அவர்களுடைய ஆயுதங்களால் அடிக்கப்பட்ட கும்ப கர்ணன், உடலில் பதிந்து காணப்படும் அஸ்திரங்களுடனும், இரத்தம் பெருக்குடனும், கர்ஜிப்பவனுமாக, பெரிய மழைத் தாரையைப் பொழிந்துகொண்டு கர்ஜிக்கும் நீலமேகம் போன்று காணப்பட்டான்.

          மருத்துக்களால் நானாவித சஸ்திரங்களால் தாக்கப்பட்ட அஸுரர்கள் கலக்கமடைந்தனர். சிலர் வெட்டுண்டவர்களாகக் கீழே விழுந்து துடித்தனர். வாகனத்தின் மீது அமர்ந்தவர்களாகவே சிலர் மாண்டனர். சிலர் கைகளால் தேரைப் பிடித்தவர்களாகவும், யானையைப் பற்றியவர்களாகவும், சிலர் குதிரைகளைக் கட்டி யணைத்தவராகவும் பட்டார்கள். தேவர்களுடைய தாக்குதலை ஸஹிக்கமாட்டாத சிலர் சுற்றிச் சுற்றி ஓடினர். அரக்கர்களுடைய இந்தச் செய்கை காண்பதற்கு வேடிக்கையாக இருந்தது. இரத்த நதியானது அங்கே பிரவகித்தது.

          யுத்தத்தில் தனது ஸைன்யம் நாசமடைவதைக் கண்ட தசானன் மிக்க கோபங் கொண்டவனாகத் தேவர்களை எதிர்த்து அதிவேகமாக இந்திரன் முன்னே வந்தான். ராவணனைக் கண்ட தேவேசன் தனது பெரிய வில்லில் பரணங்களை பூட்டி, அக்கினிக்கு நிகரான அவைகளால் ராவணனுடைய தலைமீதுப் பிரயோகித்தான். ராவணனும் அனேக பாணங்களால் தேவேந்திரனை அடித்தான். இப்படி ஒருவருக் கொருவர் செய்த பாணப்ரயோகங்களால் திக்குகள் மறைக்கப்பட்டு இருள் சூழ்ந்தது.

முப்பத்து நான்காவது ஸர்க்கம்

(யுத்தத்தில் தேவேந்திரன் ராவணனைக் கட்டுதல், அது கண்டு கோபமடைந்த மேகநாதன் இந்திரனைக் கட்டி இலங்காபுரிக்குக் கொண்டு செல்வது.]

          இருள்சூழ்ந்த அந்தச் சமரபூமியில், ராவணன், தேவேந்திரன், மேகநாதன், ஆகிய மூவர் மட்டுமே மற்றவர்களைக் கண்டனர். மற்றவர்கள் ஒருவரை ஒருவர் கண்டு கொள்ள முடியவில்லை. அந்த யுத்தத்தில் ராக்ஷஸ ஸைவ்யத்தில் பத்தில் ஒரு பாகமே மிகுந்தது. மற்றவை அழிக்கப்பட்டு விட்டன. அது கண்ட ராவணன் மிகுந்த கோபம் உடையவனாகி, ஸாரதியைப் பார்த்து, " ஸாரதியே ! நீ இப்பொழுது எனது ரதத்தை இந்தத் தேவ ஸைன்யத்தின் முடிவு பாகத்தைக் குறித்துச் செலுத்து. இந்த ஸேனையின் ஆரம்ப ஸ்தலம் இதுவாகும். முடிவு ஸ்தலமாவது 'உதயகிரி'யாகும். அவ்விடம்செல், சீக்கிரம் செல'' என்றான். இந்திரனின் கண்களிற்படாமல் நின்று கொண்டு தேவஸேனையைத் தாக்கி அழிக்கலாம் என்பது அவனுடைய எண்ணம்.  இதைக் கேட்ட ஸரதியும் அவ்வாறே செய்தான்.

          ராவணனுடைய இந்தத் தீர்மானத்தை அறிந்து தேவேந்திரன் தேரின் மீது அமர்ந்தவாறே தேவர்களைப் பார்த்துப் பின்வருமாறு கூறினான்.

          "தேவர்களே! நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். இந்த வாரணள் கொல்லப்படத்தகாதவன். இவனை உயிருடனேயே பிடிக்கவேண்டும். இவன் அதிவேகத்துடன் தேரில் செல்கிறான். நீங்கள் ஸாவதானர்களாக இருங்கள். பலி சக்ரவர்த்தி அடக்கப்பட்ட பிறகு நான் எவ்வாறு திரைலோக்யாதிபதியாகக் கவலையற்று இருக்கிறேனோ அவ்வாறே ராவணணையும் பிடித்துக் கட்டிக் கவலையற்று வாழ்ந்திருப்பேன். இது எனது எண்ணம்" என்று.

          பிறகு இந்திரன் ராவணனைப் பின் தொடராமல் ராக்ஷஸ ஸைன்யத்தை எதிர்த்து யுத்தம் செய்தான். ராவணன் வடப்புறமாக சென்று ஸேனையின் கடைசிப் பாகத்தை அடைந்தான். இந்திரன் தென்புறமாகச் சென்று செருச் செய்தான். ராவணன் நூறு யோஜனை  தூரம் சென்று திரும்பியவனாய் தேவஸேனையை ஹதம் செய்தான். இதைக் கேட்ட இந்திரன், அப்படியே தென்புறமாகவே உதய பர்வதத்தை அடைந்து ராவணனை எதித்துப் போரிட்டு அவனைப் பிடித்துக் கட்டிவிட்டான். தேரின்மீது ஏற்றி வைத்துக்கொண்டான்.

தொடர்ந்து படித்துக் கொண்டு வருபவர்களுக்காக!

இந்தப் பகுதியின் கடைசிப் பத்தியில் கடைசி வரிகளில் “ராவணனை எதிர்த்துப் போரிட்டு அவனைப் பிடித்துக் கட்டிவிட்டான்” என்றிருப்பதில் ஏதோ சில வரிகள் விடுபட்டிருக்கின்றன. மூலத்தில் அச்சுப் பிழை. அடுத்த அத்யாயம் இந்திரனை மேகநாதன் கட்டிவைத்தான் என்று வருகிறது.  கவனித்துக் கொள்ளவும்.

வியாழன், 5 ஜனவரி, 2023

ராமாயணம்–உத்தர காண்டம் 19

முப்பத்தோராவது ஸர்க்கம்

[ராவணன் ரம்பையை பலாத்காரம் செய்ததும்,
அதனால் கோபமடைந்த தளகூபரன் அவனை சபிப்பதும்]

          அன்றைய ராத்திரியை அந்த உபவனத்தில் ராவணன் கழிக்க நினைத்தான் நடுநிசி சந்திரன் தனது பூர்ண கிரணங்களையும் வெளிப்படுத்தி அனைவரையும் ஸந்தோஷிப்பித்துக்கொண்டிருந்தான் அந்த ரம்யமான வேளையில் அவ்வழியாக அப்ரஸ்ஸுக்களுள் உயர்ந்த அழகியாகக் கருதப்படும் 'ரம்பை உயர்ந்த ஆபரணங்களை அணிந்தவளாகவும், திவ்யகந்தபுஷ்பங்களை தரித்தவளாகவும் தோழிகளுடன் சென்று கொண்டிருந்தாள் அவளைக் கண்ட ராவணன் அவளுடைய அழகில் மயங்கியவனாய் அவனை வழிமறித்து, ''அழகியே! நீ யார்? எங்கே செல்கிறாய்? உன்னுடைய இந்த அழகிய மேனியின் சுகத்தை அநுபவிக்கும் பாக்யவான் யார்? என்னைக்காட்டினும் உயர்ந்த புருஷன் இவ்வுலகினில் இல்லை என்பதை நீ அறிவாயா? என்னை அதிக்ரமித்து. நீ வேறொருவனை நாடிச் செல்வது நல்லதல்ல, வா, இப்படி உட்கார். எனது காமத்தைப் பூர்த்தி செய்யவும்" என்றான்

          இப்படி வேண்டுகிற ராவணனைப் பார்த்து ரம்பையானவள் நடுங்கியவளாய், கைகளிரண்டையும் கூப்பிக்கொண்டு "தாங்கள் இப்படிக் கூறுவது உசிதமல்ல. தாங்கள் எனது குரு, என்னை இதரர் கெடுக்க நினைத்தால் தங்களால் ரக்ஷிக்கப்படத் தகுந்தவள் நான் தங்களது மருமகள் உண்மையைக் கூறினேன் " என்று சொன்னாள்

          இதைக் கேட்ட ராவணன், "நீ எனது மருமகளானால் நீ சொல்வது ஏற்கத்தக்கதே" என்றான் அதற்கு ரம்பை, "நான் கூறியது உண்மையே ராக்ஷஸ ச்ரேஷ்டரே! உமது ஸஹோதரர் குபேரன் அவரது தர்மபுத்திரர் நளகூபரன் அவர் உமது குமாரர் அல்லவா? அவரால் வரிக்கப்பட்டு அவருடைய இச்சையைப் பூர்த்தி செய்விக்கவே இப்பொழுது சென்று கொண்டிருக்கிறேன் அந்த நளகூபரர் தர்மத்தினால் பிராம்மணராகவும். பலத்தினால் க்ஷத்ரியராகவும், கோபத்தில் அக்கினியாகவும், பொறுமையில் பூமிக்குச் சமமானவர் என்றும் பிரஸித்தி பெற்றவர் என அறியவும்" என்றாள்

          ரம்பையினால் இவ்வாறு பதில் அளிக்கப்பட்ட ராவணன் மறுபடியும் அவளைப் பார்த்து, "நீ சொல்லும் மருமகள் முறை பதிவ்ரதைகளுக்கு ஏற்றது இரு உலகங்களிலும் ஏற்புடையதே ஆனால் அப்ஸரஸ் ஸ்த்ரீகளுக்குப் பதிவ்ரதத்வம் ஏது? அவர்கள் ஒரே பர்த்தாவைக் கொண்டவர்களல்லவே இதை நான் அறிவேன் எனவே உனது வாதம் ஸரியாணதல்ல” என்று கூறி அவளை பலாத்காரமாக அநுபவித்துத் தனது இச்சையைப் பூர்த்தி செய்துகொண்டான்

          இப்படி ராவணனால் பலாத்கரிக்கப்பட்ட ரம்பையானவள் துக்கமடைந்தவளாய் கலைக்கப்பட்ட அலங்காரத்தை உடையவளாய் நளகூபரிடம் சென்று நடந்தவற்றைக் கூறினாள் இதைக் கேட்ட நளகூபரன் மிகவும் கோபமடைந்து, கையில் ஜலத்தை எடுத்துக் கொண்டு அதை முறைப்படி அபிமந்த்ரணம் செய்து, "தன்னை விரும்பாத எந்த ஸ்திரீயையாவது இவன் பலாத்காரம் செய்தால் இவனது தலை ஏழு சுக்கல்களாக வெடித்தும் போகக்கடவது'' என்று சாபமிட்டான்

          ஜ்வலிக்கும் அக்கினி போன்று விளங்கிய நளகூபரன் இப்படிச் சாபமிட்டதும் ஆகாயத்திலிருந்து பூமாரி பொழிந்தது பிரம்மா முதலிய தேவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள் ரிஷிகளும் பித்ருக்களுங் கூட அகமகிழ்ச்சி கொண்டனர் இதைச் செவியுற்ற  ராவணனும் தன் செய்கையில் வெறுப்புற்றான் பயந்தான் அவனால் பலாத்காரமாக அபஹரித்து வரப்பட்ட ஸ்த்ரீகளும் இதை அறிந்து பயமற்றவர்களாக ஆனார்கள் நளகூபரனையும் மனமாற வாழ்த்தினர்

முப்பத்திராண்டாவது ஸர்க்கம்

[ராவணன் தனது பெரும் படையுடன் கைலாசமலையில் இருந்து புறப்பட்டு தேவலோகம் செல்லுதல், தேவாஸுரயுத்தம், அதில் வசுக்களில் எட்டாமவனான ஸாவித்ரனால் கதையால் அடிக்கப்பட்டு ஸுமாலியின் வதம்)

          கைலாஸமலையிலிருந்து தனது பெரும்படையுடன் ராவணன் தேவ லோகத்தை நோக்கிப் புறப்பட்டான் அந்தப் படையினர் இட்ட கோஷமானது கடையப்படும் பெருங்கடலின் கோஷம் போன்று மேலே கிளம்பித் தேவலோகத்தை அடைந்தது இதை அறிந்த தேவேந்திரன் சிந்தை கலங்கினான் ஆஸனத்தினின்றும் எழுந்து அங்குக் கூடியுள்ள ஆதித்யர்கள், வசுக்கள், ருத்ரர்கள், விச்வேதேவர்கள் மருத்துக்கள் முதலிய தேவர்களைப் போருக்கு ஆயத்தமாகும்படிக் கட்டளையிட்டான் அவனது உத்திரவுப்படி அவர்களும் யுத்த ஸந்நத்தரானார்கள் அப்படி இருந்தும் ராவணனிடத்திலுண்டான பயத்தினால் இந்திரன் ஶ்ரீமன் நாராயணனைச் சரணம் அடைந்து, "பிரபோ! பலவானான ராவணன் யுத்தத்திற்கு வந்துவிட்டான் அவனோ பிதாமஹனுடைய வரதானத்தால் கர்வம் கொண்டவன் அவனுடன் நான் எவ்வாறு போரிட முடியும்? எனவே தேவரீரே. நமுசி, விருத்ராஸுரன், பலி, நரகாஸுரன், சம்பராஸுரன் முதலியவர்களை அடக்க உபாயம் செய்தது போல ஏதேனும் செய்து அவனை அழிக்கவும்” என்று பிரார்த்தித்தான்

          இப்படி இந்திரனால் வேண்டப்பட்ட நாராயணன். “நீ பயத்தை விட்டொழிக்கவும், நான் சொல்வதைக் கேட்கவும் துஷ்டாத்மாவான ராவணன் தேவர்களாலோ அஸுரர்களாலோ கொல்லப்படத் தகாகதவன் மிகுந்த பலசாலியாகவும் உள்ளான் மேலும் அவன் தனது புத்திரனான மேகநாதனுடன் கூடியவனாக வந்துள்ளான் உன்னை வைத்துக்கொண்டு இப்பொழுது அவனுடன் போரிட முடியாதவனாக உள்ளேன் ஏனெனில் அவன் நம்மால் கொல்லப்படத் தகாதவன் என்பதை நீயும் அறிவாய் “நாராயணன் போரிட்டு எதிரியைக் கொல்லாமல் திரும்பினான்" என்ற சொல் ஏற்படக் கூடாது எனவே உனக்கு ஒரு வார்த்தை சொல்லுகிறேன், கேள் "ஒரு காலத்தில் இ வனுடைய வதத்திற்கு நானே காரணமாவேன் இதை உறுதியாக நம்பவும் இப்பொழுது நீயே உனது பரிவாரங்களுடன் சென்று போர் செய்" என்று கூறினார்

          அதைக் கேட்ட தேவேந்திரன் தனது சேனைகளுடன் சென்று ராவணனை எதிர்த்தான் அப்போது ராவணனுடைய மந்திரிகளான மாரீசன், பிரஹஸ்தன். மஹாபார்ச்வன். மஹோதரன், அகம்பனன் ஜம்புமாலி விரூபாக்ஷன், நிகும்பன், சுகன், ஸுப்தக்னன், யஜ்ஞ கோபன், துர்முகன், கரன் தூஷணன். த்ரிசிரஸ், மஹாகாயன், அதிகாயன், தேவாந்தகன். நராந்தகன் ஆகிய மஹாவீரர்கள் கூடி ராவணனது பாட்டனான "ஸுமாலி" என்பவனைத் தலைவனாகக் கொண்டு தேவர்களை எதிர்த்தனர் அந்த அரக்கர் படையானது, அனேகவித ஆயுதங்களால் தேவர்களின் படைகளைத் தாக்கிப் பெருங் காற்றானது மேகக் கூட்டங்களைச் சிதற அடிப்பது போல, நான்கு பக்கங்களிலும் சிதறியோடும்படிச் செய்தது

          இப்படி அடிபட்டு ஓடும் ஸேனையைக் கண்டு வசுக்களில் எட்டாமதானவனும்,மிக்க பராக்கிரமசாலியுமான ஸாவித்ரன் என்பவன் மிக்கச் சினம் கொண்டவனாகிச் சேனைகள் புடை சூழச் சென்று, அந்த ஸுமாலியை எதிர்த்துப் போர் செய்தான் அவன் பெரிய- கோபங் கொண்ட ஸிம்ஹமானது சிறிய மிருகங்களைத் தாக்கியடிப்பது போல அரக்கர் படையைத் தாக்கி அழித்தான்

          அதே ஸமயத்தில் ஆதித்யர்களில் ஒருவரரன த்வஷ்டா பூஷா என்பவர்களும் யுத்தபூமியில் பிரவேசித்து அசுரப் படைகளைத் தாக்கினர் அப்போது இரு தரத்துப் படைகளுக்கும் மிக்க பயங்கரமான யுத்தம் உண்டாயிற்று அந்த யுத்தத்தில் ஸுமாலியின் தலைமையிலான அரக்கர் படையினால் தேவர்களின் படையானது நன்கு அடிக்கப்பட்டு நிலைநிற்க முடியாமல் நாலு பக்கங்களிலும் ஓடியது

இப்படியான நிலைமையைக் கண்ட எட்டாவது வஸூவானவன் ஓடும் தன் படைவீரர்களைக் கஷ்டப்பட்டுத் தடுத்து நிறுத்தி, மூர்க்கத்தன்மையுடன் போரிடும் ஸுமாலியை எதிர்த்துப் போரிட்டான் ஸுமாலிக்கும் வஸு விற்கும் மிகக் கடுமையான சண்டை நடந்தது அப்போது வஸுவானவன் கொடூரமான பாணத்தால் ஸுமரலியினுடைய ரதத்தை நாசம் செய்தான் உடனே ஒரு மிகப் பெரிய கதையைக் கையில் எடுத்துக்கொண்டான் ஜ்வலிக்கும் நுனியை உடையதும், மற்றொரு காலதண்டம் போன்றதுமான அந்தக் கதையால் ஸுமாலியின் தலையில் ஓங்கி அடித்தான் அந்தக் கதையானது கொழுந்து விட்டு எரியும் பெரிய கொள்ளிக்கட்டை போல் அவண் தலைமீது விழுந்தது அந்த க்ஷணமே அவனது தலையோ கால்களோ கைகளோ ஏதுமே காணப்படாமல் சூர்ணமாகிவிட்டது அவன் மடிந்ததைக் கண்ட அஸுரப்படை பயத்துடன் திரும்பி ஓடி விட்டது,

செவ்வாய், 3 ஜனவரி, 2023

ராமாயணம்–உத்தர காண்டம் 18

இருபத்தி ஒன்பதாம் ஸர்க்கம்

[ராவணனால் அபஹரித்து வரப்பட்ட ஸ்திரீகளின் ப்ரலாபம், அவர்கள் இட்ட சாபம், சூர்ப்பணகையைச் சமாதானப்படுத்தல் ] 

          மிகுந்த குதூகலத்துடன் தன் இருப்பிடமான இலங்கைக்குத் திரும்பும் வழியில் ராவணன், தன் முன் காணப்பட்ட அழகிய பெண்கள் அனைவரையும் பிடித்து வந்தான். எதிர்த்த அந்தப் பெண்களின் பந்து ஜனங்கள் அனைவரையும் கொன்று குவித்தான். நாக- ராக்ஷஸ-கந்தர்வ - மானுஷ - ரிஷி - தேவ - கிந்நர - மாதர்களால் அந்த விமானம் நிரப்பப்பெற்றது. அந்த ஸ்திரீகளின் அழுகையினால் விமானமே அழுவது போன்று இருந்தது. சில பெண்கள், நீண்ட கூந்தல்களை உடையவர்களாயும், சிலர் பொன்னிற மேனியராகவும் சிலர் முழுமதி போன்ற முகத்தினராகவும், சிலர் பெருமுலைகளை உடையவர்களாயும், நுண்ணிடையுடைய சிலரும், எல்லோருமே சோகமும் பயமு முடையவர்களாகக் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஸிம்ஹத்தினிடம் சிக்கிக்கொண்ட மான்களைப் போல் பயந்து நடுங்கினர்.

          ஒருத்தி, இவன் நம்மைச் சாப்பிட்டுவிடுவானோ? என்றும் வேறெருத்தி என்னைக் கொன்றுவிடுவானோ? என்றும், மற்றொருப் பெண் இவன் என்னை என்ன செய்ய நினைத்துக்கொண்டு வந்துள்ளானோ என்றும் எண்ணி அழுதனர். ஒரு ஸ்திரீ, ஐயோ! இப்போது என் குழந்தை என்னைக் காணாமல் எப்படி அழுகிறதோ என்றும் எனது தாய் தந்தையர் என்னைக் காணாமல் எப்படித் துடிக்கின்றனரோ என்றும், ஐயோ! எனது கணவனை விட்டு நான் எப்படி உயிர் வாழ்வேன் என்றும் புலம்பினார்கள்

          இப்படியாகப் பல ஸ்திரீகளும் மனம் வருந்தி, 'ஸ்திரீயினாலேயே இவன் மரணமடைய வேண்டும் என்று சபித்தனர். அப்பொழுது ஆகாயத்தில் தேவதுந்துபிகள் முழங்கின. பூமாரி பொழிந்தது. இப்படியாக ராவணன் அந்த ஸ்த்ரீகளுடனும் புஷ்பக விமானத்துடனும் இலங்கையை அடைந்தான்.

          ராவணன் தனது அரண்மனையினுள் நுழைந்ததும் ஸஹோதரியான சூர்ப்பணகை ஓடிவந்து அவன்முன் விழுந்து புலம்பி அழ ஆரம்பித்தாள். ராவணன் மிகுந்த வாஞ்சையுடன் அவளைத் தூக்கியணைத்து அவளது அழுகைக்கான காரணத்தைக் கேட்டான். அதற்கு அவள், 'ராஜனே, உன்னால் நான் விதவையாக்கப்பட்டேன்.  நீ காலகேயர் என்ற அஸுரர்களை வதம் செய்தாயே. அவர்களில் ஒருவரல்லவா என் கணவர்? வித்யுஜ்ஜிஹ்வர் என்ற எனது பர்த்தா என் உயிருக்கும் மேற்பட்டவர். அவரை நீ உனது பலத்திமிரால் கொன்றுவிட்டாயே, இனி நான் என்ன செய்வேன்? எனக்கு யார் கதி? உன்னாலேயே எனக்கு வைதவ்யம் ஏற்பட்டதே. இது நியாயமா?” என்று பலவாறு புலம்பினாள்.

          இப்படிச் சத்தமிட்டுப் புலம்பும் தங்கையைச் சமாதானப்படுத்திய ராவணன், ' நீ இதற்காக வருந்த வேண்டாம். நடந்தது நடந்து போயிற்று - யுத்தமென்று வந்து விட்டால் ஜயமென்ற ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ளேன். நம்மவர், பிறர் என்று கண்டு கொள்ளவே மாட்டேன். எனது ஸ்வபாவம் இது. உன்னைப் பலவிதத்திலும் ஸந்தோஷப் படுத்துவது எனது கடமை. எனவே நீ நமது சிறிய தாயாரின் பிள்ளையான 'கரன்' என்பவனோடு வஸிப்பாயாக. அவனுடன் பதினாலாயிரம் ராக்ஷஸர்களை அனுப்பி வைக்கிறேன். அவர்களுக்குச் சேனாதிபதியாகத் தூஷணன் என்பவன் இருப்பான். நீங்கள் எல்லோருமாக உடனே புறப்பட்டு தண்டகாரண்யத்திற்குச் சென்று, அங்கு உங்களது ராஜ்யத்தை நடத்துங்கள்" என்று உத்தரவு இட்டான்.

          உடனே, அதன்படியே கரன் அரக்கர்  பதினாலாயிரவருடன் சூர்ப்பணகையை அழைத்துக்கொண்டு தண்டகாரண்யத்தை அடைந்து அங்கே தங்களுக்கு அனுகுணமாக நகரை அமைத்துக் கொண்டு வளித்து வந்தான்.




முப்பதாவது ஸர்க்கம்

          பிறகு ஒரு ஸமயம் ராவணன் தன் மந்திரிகள் புடை சூழ, லங்காபுரியின் மேற்குப் பக்கத்திலுள்ள நிகும்பிலை என்ற வனத்திற்குச் சென்றான். அங்கு அவன் அனேக யூபஸ்தம்பங்களுடனும் கோயிலுடனும் வேதிகைகளுடனும் கூடிய யாக சாலையைக் கண்டான். தனது குமாரனான மேகநாதன் மான்தோலைத் தரித்துக், கமண்டலம் தண்டம் சிகை இவற்றையுடையவனாய் விளங்குவதையும் கண்டான். அவனருகிற் சென்று, இருகைகளாலும் கட்டி அணைத்துக்கொண்டு, "குழந்தாய், நீ என்ன கார்யம் செய்துகொண்டிருக்கிறாய்?'' என்று வினவினாள். யாகதீக்ஷை பெற்றுள்ள அவன் பேசக் கூடாததை உணர்ந்த, புரோஹித சீரேஷ்டரான சுக்ராசாரியர் ராவணனைப் பார்த்து, "அரசே! நான் சொல்லுகிறேன், கேட்கவும்" என்று பின்வருமாறு கூறினார்--

          "உமது குமாரனான இவனால் அக்னிஷ்டோமம், அச்வமேதம், பஹு ஸுவர்ணகம், ராஜஸூயம், கோமேதம், வைஷ்ணவம், என்ற யாகங்கள் செய்து முடிக்கப்பட்டன. ஒருவராலும் செய்ய முடியாத ஏழாவதான மாஹேச்வர யாகத்தையும் செய்து பசுபதியில் அருளால் உயர்ந்ததாயும், நினைத்தபடி செல்லக் கூடியதாயும், ஆகாய மார்க்கத்திலும் செல்லக்கூடிய சக்தியையுடையதுமான தேரையும், எடுக்க எடுக்கக் குறையாத அம்புப் பெட்டிகளையும், பிறரால் துண்டிக்கப்பட முடியாததான தநுஸ்ஸையும், யுத்தத்தில் சத்ருக்களை அழிக்கக்கூடியவைகளான உயர்ந்த அஸ்திரங்களையும் பெற்றுள்ளான். மேலும் 'தாமஸீ' என்கிற மாயையையும் பெற்றுள்ளான். யுத்தபூமியில் இந்த மாயையைப் பிரயோகித்த அளவில் நெருக்கமான இருள் சூழ்ந்து, இவனிருக்கும் இடம், சத்ருக்களுக்குப் புலப்படாதபடிச் செய்துவிடும். இப்படியான யாகம் முடியப் போகிறது. முடிந்ததும் நாங்கள் இருவருமே உன்னிடம் வருவதாக இருந்தோம்'' என்றார்.

          இதைக் கேட்ட ராவணன், “ஆசார்யரே! இதற்காக யாகம் செய்திருக்க வேண்டாம். நம்மால் ஜயிக்கப்படத்தக்க இந்திரன் முதலியவர்களுக்குப் பூஜை ஏன் செய்ய வேண்டும்? தவமியற்றி இவற்றைப் பெற்றிருக்கலாமே, ஸரி, நடந்தது நடந்து விட்டது. இனி இதைப்பற்றிப் பேசிப் பயனில்லை" என்று கூறி, மந்திரிகளுடன் தனது அரண்மனையை அடைந்தான்.

          அப்பொழுது, ராவணனால் கவர்ந்து வரப்பட்ட ஸ்த்ரீகளைக் கண்டு தர்மாத்மாவான விபீஷணன். "அண்ணா தாங்கள் செய்தது தர்மமல்ல. இதைக் கண்ட பெரியோர்கள் நகைக்கின்றனர். இந்த அதர்மத்திற்குப் பலன் இப்பொழுதே நமக்குக் கிடைத்துவிட்டது. அதாவது நம்முடைய ஜ்யேஷ்ட மாதாமஹன் மால்யவான் எனப் படுபவர்.  அவருடைய பெண் அனலை என்பவள். அவளுடைய பெண் கும்பீநஸி எனப்பெயர் கொண்டவள். அவள் நமது ஒன்றுவிட்ட ஸஹோதரி அவள் இங்கு நம் அரண்மனையில் வஸித்து வந்தவள். . அவளை கர்வம் கொண்டவனான 'மது' என்ற அரக்கன் கவர்ந்து சென்று விட்டான். அது ஸமயம் உமது குமாரன் யாகத்தில் ஈடுபட்டிருந்துவிட்டான்.  நான் தவத்தில் ஈடுபட்டு ஜலத்தின் மத்தியில் இருந்துவிட்டேன். கும்பகர்ணனோ தூங்கிக் கொண்டிருந்தான். இதுவே தருணம் என்று கண்ட அவன் இங்குள்ளவர்களை நாசம் செய்துவிட்டு அந்தத் துஷ்ட கார்யத்தைச் செய்து சென்றான் என்று சொன்னான்.

          இதைக் கேட்ட ராவணன் கோபத்தினால் சிவந்தவனாய். "எனது ரதத்தை ஸித்தப்படுத்துங்கள். வீரர்கள் கிளர்ந்தெழுங்கள். எல்லோருமாகச் சென்று மதம் பிடித்த மதுவைக் கொன்றுவிட்டுத் தேவலோகத்திற்குச் செல்வோம். அதை நம் வசம் செய்துகொள்வோம். பிறகு பயமற்றவர்களாக எங்கும் ஸஞ்சரிப்போம்' என்றான்.

          அதன்படியே நாலாயிரம் அக்ஷெளஹிணீ ஸைன்யமானது ஆயுதங்களுடன் புறப்பட்டது. அந்த ஸேனையின் முகப்பில் இந்திரஜித்தும், மத்தியில் ராவணனும், கடைசியில் கும்பகர்ணனும் ரஷகர்களாகச் சென்றனர். தர்மாத்மாவான விபீஷணன் இலங்காபுரியின் ரக்ஷகனாக இருந்தான்.

          மதுபுரியை அடைந்த ராவணன் அரண்மனையின் உள்ளே சென்று மது அரக்கனைத் தேடினான்.  அங்கு அவன் காணப்படவில்லை. அவனது மனைவி இவனது ஸஹோதரி - கும்பீநஸியையே கண்டான்.  ராவணனிடத்தில் பயந்த அவள் கைகளைக் கூப்பிக்கொண்டும். அவனது கால்களைப் பிடித்துக் கொண்டும் நடுங்கியவளாக நின்றாள். அவனைக் கண்டு ராவணன், "தங்கையே! பயப்பட வேண்டாம். உனக்கு என்ன வேண்டும்? தைரியமாகக் கேட்கவும" என்றான். இதைக் கேட்ட அவள், "உமக்கு என்மீது அன்பு இருக்குமேயாகில் எனது பர்த்தாவைக் கொல்லாமல் விட்டு எனக்கு மாங்கல்ய பிக்ஷை கொடுங்கள்; பயப்பட வேண்டாம்! என்று சொன்ன சொல்லை மெய்ப்பித்துக் காட்டுங்கள்; உண்மையுரைத்தவராக ஆகுங்கள்'' என்றாள்.

          இதைக் கேட்டு ஸந்தோஷமடைந்து ராவணன், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி அவனை அழைத்து வரும்படிச் சொன்னாள் கேகஸியும் உடனே உள்ளே சென்று நித்ரையிலாழ்ந்திருந்த மதுவை எழுப்பி அழைத்து வந்தாள். ராவணன் அவனுடன் நட்புக் கொண்டு அவனையும் கூட அழைத்துக்கொண்டு கைலாஸ மலையிலுள்ள குபேரப் பட்டணத்தை அடைந்து அதன் உபவநத்தில் தனது ஸைன்யத்தை அடைவித்து அமரச் செய்தான்.